Thursday, January 14, 2010

Movie of the week

படம் : யோஜிம்போ
வருடம் : 1961
இயக்குனர் : அகிரோ குரோசவா

கதை சுருக்கம் :
ஜப்பானில் ஒரு சிறிய கிராமம் இரண்டு ரவுடி கும்பலின்(ஒன்று - உஷிடோரா, மற்றொன்று - செய்பெய்) பிடியில் சிக்கியிருக்கிறது. அந்த ஊரில் உள்ள குடும்பங்களும் வியாபாரிகளும் இரண்டு கும்பல்களுக்கு பயந்து வெளியில் வர மறுக்கின்றனர். இரு கும்பல்களும் அந்த ஊரின் அரசு ஊழியர்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஒரு சமுராய் அந்த கிராமத்திற்கு வருகிறான். இந்த இரு கும்பல்களின் அட்டகாசத்தைப் பற்றிக் கேட்டு அதற்கு ஒரு முடிவு கட்ட திட்டமிடுகிறான். அவன் நினைத்ததை அடைகின்றானா இல்லையா என்பதை படம் காட்டுகிறது.

அலசல் :
படத்தின் ஆரம்பத்தில் சமுராயின் அணுகுமுறையும் அந்த கிராமத்தின் அவல நிலைமையும் நன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவனுடைய நடை அவன் எதிரே எந்த தடங்கல் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை காண்பிக்கிறது. படத்தின் இறுதிக் கட்டங்களில் அந்த தைரியத்தின் மூலகாரணம் தெரிய வருகிறது. வழியில் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் சண்டையும் ஊருக்குள் சமுரைக்குத் தண்ணீர் தரும் கணவன் மனைவியின் நடப்பும் மூலம் அந்த ஊரில் உள்ளவர்களின் நிலை நன்றாகத் தெரிகிறது. அந்த ஊரின் உள்ள உணவகத்தின் உரிமையாளரின் வறுமையும் அவனுடைய அண்டை வீட்டில் உள்ள சவப்பெட்டி உரிமையாளரின் செழுமையும் ரவுடி கும்பல்களின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. வெவ்வேறு நடப்புகள் மூலம் அந்த ஊரின் மோசமான நிலைமை நமக்குத் தெரிய வருகிறது.
இரண்டு ரவுடி கும்பலிடம் நேரே மோதாமல், புத்திசாலித்தனமாக அவர்களிடம் மோதுவது நன்றாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களை விடச் சமுராய் வாள் வீச்சில் திறமைசாலி ஆனதால் தன்னுடைய வீரத்தை அவர்களுக்கு பேரம் பேசுகிறான். இதன் மூலம் அவனால் இரண்டு கும்பல்களின் பலத்தை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், இரண்டு கும்பல்களுக்கும் காசின் மேல் உள்ள ஆசை அவனுக்கு தெரிகிறது. (ஆங்கிலத்தில்) காதலிலும் போரிலும் எதுவும் நியாயம் என்பதைக் கொள்கையாகக் கொள்கிறான். 
அவனுடைய திட்டத்தின் வெற்றிக்கு அவனுடைய வாள் வீச்சுத் திறமை அடித்தளமாக அமைகிறது. அந்த திட்டத்தில் மண் போடுவது போல் ஒரு கும்பலின் தலைவனின் தம்பி (மற்றொரு சமுராய்)ஒரு துப்பாக்கியை ஊருக்குள் கொண்டு வருகிறான். (ஆங்கிலத்தில்) குருடர்கள் நாட்டில் ஒற்றைக் கண்ணன் அரசன் போல், துப்பாக்கி உள்ள கும்பலின் கை ஓங்குகிறது. துப்பாக்கிக்கு எதிராக வாள் வீச்சு எடுபடாததால் வாள் வீசும் சமுராயின் திட்டம் தடம் புரள்கிறது. வாள் தன்னிடம் இருந்து போன பின் தன்னுடைய தீரத்தைப் பயன்படுத்துகிறான்.துப்பாக்கி உள்ள சமுராய் தன் அண்ணனுக்காக, அவன் செய்யும் அந்நியாயத்தைப் பொறுத்துக் கொள்கிறான். வாள் வீசும் சமுராய் நியாத்திற்காக தன்னை பணயமாக வைக்கிறான்.இரண்டு சமுரைக்கிடையே உள்ள வித்தியாசத்தை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லியிருக்கிறார்கள்.  சமுராய் குறியீட்டின் பெருமையை இந்த படத்தின் மூலம் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.