Sunday, May 23, 2010

Movie of the week

படம் : ஆயிரத்தில் ஒருவன்
இயக்கியவர் : செல்வராகவன்
வருடம் : 2010  
கதைச் சுருக்கம் :
1279 -இல் சோழ நாட்டு மன்னன் பாண்டியர்களின் கையில் தோல்வியுற்று நாட்டை இழந்து ஓடுகையில் தனது வம்சம் வருங்காலத்தில் தழைக்க சில மக்களையும் சோழ இளவரசனையும் ஒரு ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கிறான். காலங்காலமாக சோழ மக்களும் இளவரசனும் அந்த இடத்தில் வளர்ந்து வருகின்றனர் . அந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளைத் (கடல், நரமாமிசம், வீரம், பாம்பு, பசி, புதை மணல், கிராமம் )  தாண்ட வேண்டும். பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை அடைய முயன்று தோல்வி அடைந்தனர். சந்திரமௌலி (பிரதாப் போத்தன்) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இவ்வாறு மறைந்தவுடன் அவரை மீட்டு வர இந்திய அரசு அனிதா பாண்டியன் (ரீமா சென் ) தலைமையில் ஒரு குழுவை அனுப்புகிறது. இந்த குழுவிற்கு மத்திய அமைச்சர் வீரபாண்டியனின்  முழு ஆதரவு அளிக்கப்படுகிறது. அவருக்குத் துணையாக சந்திரமௌலி -இன் மகளான லாவண்யாவும் (மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் - ஆண்ட்ரியா  ), ரவிசேகரனும் (குழுவின் பாதுகாப்பிற்கான காவல் படைத் தலைவன் - அழகம் பெருமாள் ), முத்துவும் ( குழுவின் கூலிப் பட்டாளத்தின் தலைவன் - கார்த்தி ) செல்கிறார்கள். அனைத்துத் தடைகளையும் கடந்து அனிதா, லாவண்யா மற்றும் முத்து சோழ மன்னன் (பார்த்திபன்)  இருக்கின்ற இடத்தை அடைகிறார்கள். முதலில் மூவரையும் நரபலிக்காக சிறைப்படுத்தினாலும், அனிதா சோழ மன்னனிடம் முறையிட்டு அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறாள். அவளை நம்பி சோழ மன்னன் தனது வம்சத்திற்கு விடிவுகாலம் வந்து விட்டது என்று நம்பி சோழ அரசின் தலைநகரமான தஞ்சாவூருக்குச் செல்லத் தயாராகிறான். சோழ நாட்டு வரலாற்றில் விடிவுகாலத்தின் அறிகுறிகள் சொல்லப் பட்டிருந்தாலும் அவை எதுவும் நடக்காத பட்சத்தில் சோழ மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், தங்களது அரசன் விடிவுகாலம் வந்து விட்டது என்று கூறுவதனால் அவனை நம்புகின்றனர். இறுதியில், அனிதா-வால் ஏமாற்றப்பட்டு சோழ மன்னனும் லாவண்யாவும், முத்துவும், சோழ மக்களும்  சின்னாப்பின்னப்படுத்தப்பட்டு,  எஞ்சிய மக்கள் இந்திய அரசால் சிறைப்படுத்தப் படுகின்றனர். தனது மக்களின் நிலைமையை பொறுத்துக்குள்ள  முடியாமல் சோழ மன்னன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த அமளியில் சோழ இளவரசனுடன் முத்து காட்டிற்குள் தப்பிச் சென்று விடுகிறான்.

அலசல் :
இந்த படத்தை இரு படங்களாகப் பார்க்கலாம். முதல் பாதியில் அனிதா தலைமையில் தொல் பொருள் ஆராய்ச்சிக் குழு பல தடைகளைத் தாண்டி சோழ மன்னன் இருக்கும் இடத்தை அடைகின்றது. இரண்டாவது பாதியில், சோழ மன்னனிடமும் அந்நாட்டு மக்களிடமும் அனிதா, லாவண்யா மற்றும் முத்து மாட்டிக் கொண்டதன் விளைவுகளை விவரிக்கின்றது.
முதல் பகுதி பல ஹாலிவுட் படங்களின் நகல் போல் இருக்கிறது. க்ளடியாடோர் (Gladiator ), இன்டியானா ஜோன்ஸ் (Indiana  Jones ) மற்றும் பல படங்களில் இருந்து தாராளமாக கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ஸ்பெஷல் எபக்ட்ஸ் (special  effects ) மீது நிறைய கவனம் செலுத்தாதனால் அவை நன்றாக இல்லை. பார்த்தவுடன் ஸ்பெஷல் எபக்ட்ஸ் தான் என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. முதல் பாதியில் அனிதா, லாவண்யா மற்றும் முத்து ஆகியவர்களின் பாத்திரங்களை நன்றாக செதுக்கி இருக்கிறார்கள். முதல் பாதியின் இறுதியில் இந்த படத்தை ஏண்டா எடுத்தோம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. மற்ற செல்வராகவனின் படங்கள் போல இந்த படத்திலும் கதை நாயகன் மற்றும் நாயகிகள் பாத்திரங்கள் அவற்றின் இலக்கணத்தை தகர்த்து எறிகின்றன. மூன்று பாத்திரங்களும் படத்தில் முத்து சொல்வது போல் 'பேசினா கூவ நாத்தம் நாறுது' போல் நடந்து கொள்கின்றனர். இந்தப் பகுதியில் ஒளிப்பதிவும் இந்த காலப் படம் போல் இருக்கிறது.
இரண்டாம் பகுதியில் கதை பெரும்பாலும் இருட்டிலும் மிக வேகமாக நகரும்  கேமரா மூலமாகவும் எடுக்கப்படிருக்கிறது. செல்வராகவன் இந்தப் பாதியை படமாக எடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் வெளிச்சம் காட்டும் போது, சோழ மன்னனின் மலைக்குகையும் சரி, அவனைச் சுற்றியிருக்கும் மக்களின் உடையும் நடையும் நன்றாக இருக்கிறது. இந்தப் பகுதியில் படத்தின் உள்ள முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்க்காரணமும் கதையின் போக்கும் தெளிவடைகின்றது.
செல்வராகவன் படத்தின் இரண்டாம் பாதியை கல்கியின் பொன்னியின் செல்வன் கதையின் பாத்திரங்களைப் பயன்படுத்தி சொல்லி இருக்கிறார். பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களும் இந்த கதையில் வரும் பாத்திரங்களுக்கும் என்னுடைய ஓப்பீடு :
அனிதா - நந்தினி
ரவிசேகரன் - ரவிதாசன்
முத்து - வந்தியத்தேவன்
சோழ மன்னன் - ஆதித்த கரிகாலன்
லாவண்யா - குந்தவை
அமைச்சர் வீரபாண்டியன் - வீரபாண்டியன்
சோழ மன்னரின் அமைச்சர் - பெரிய பழுவேட்டரையர்
தொல் பொருள் குழுவின் வழிகாட்டி - பூங்குழலி (??? )
கல்கியின் கதையில் சோழர்கள் நல்லவர்களாகவும் பாண்டியர்கள் கெட்டவர்களாகவும் வருகின்றனர். அந்த கதை எழுதிய காலத்திற்கேற்ப (1940 - 1960 ) நல்லவர்கள் (சோழர்கள்) கெட்டவர்களை (பாண்டியர்கள்) வென்றார்கள். அந்த காலக் கட்டத்தில் தமிழ் கலாச்சாரத்தில் நன்மையே வெல்லும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக பொன்னியின் செல்வன் அமைந்தது. சுதந்திரம் அடைந்த இந்திய நாட்டில் பொன்னியின் செல்வன் கதை தமிழ் கலாச்சாரத்தின் நன்மையைப் போற்றியது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிய நிலைமையில், தமிழ் கலாச்சாரத்தின் நிரந்தர நன்மை இந்த படத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. அவ்வாறு பார்த்தால், சோழ மன்னன் தனது மக்களிடம் நடந்து கொள்ளும் விதமும் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களின் நடத்தையும் இன்றைய தமிழ் கலாச்சாரத்தைக் காட்டுகின்றன. மேலும், தமிழ் இலக்கியத்தில் பொன்னியின் செல்வனின் மூலம் உருவாக்கப்பட்ட சோழர்கள் நல்லவர்கள், பாண்டியர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இந்த படத்தில் அடக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மன்னர்கள் நடை உடை பாவனையும் இந்த படத்தின் மூலம் யதார்த்தப்படுத்தபட்டிருக்கின்றன. தமிழ் மன்னர்கள் என்றால் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி போல் நடை உடையிலும் எஸ் எஸ் ஆர் போல் பேச்சிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படத்தில் கடைப்பிடிக்கவில்லை. காலங்காலமாக தமிழ் படங்களில் வரும் தமிழ் மன்னர்கள் திராவிட கலாச்சாரத்தைப் பின்பற்றி அதன் அரசியல் எண்ணங்களுக்கு ஒரு வாகனமாக இருந்திருக்கிறார்கள். இந்த படத்தில், அதே திராவிட இனத்தில் வரும் முத்து பாத்திரம் சாதாரணமான தமிழனுடைய நற்குணங்களும் கெட்ட குணங்களும் உடையவனாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் சோழ இளவரசனின் காப்பாளனாக ஆகிறான். இதற்குப் பிறகு, சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் போன்றோர்கள் தமிழ் மன்னர்கள் போல் வேடம் போடுவதன் மூலம் தமிழ் நாட்டு அரசியலில் நுழையலாம் என்ற நிலைமை மாறலாம்.
முத்து அனிதா மற்றும் லாவண்யாவிடம் இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் நடந்து கொள்ளும் முறை பொன்னின் செல்வனில் வந்தியத்தேவன் நந்தினி இடமும் குந்தவை இடமும் 1940  - 1960 இன் தமிழ் கலாச்சாரதிர்கேற்ப நடந்து கொள்வது போல் இருக்கிறது.
படத்தில், கார்த்தி, ரீமா சென் மற்றும் பார்த்திபன் நன்றாக செய்திருக்கிறார்கள். இந்த மூவரும் இரண்டாம் பாதியில் பொன்னியின் செல்வனில் வரும் கதாப்பாத்திரங்கள் போல் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா சொதப்பியிருக்கிறார். நவீன தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பெண்ணின் பாத்திரத்திலிருந்து அவரால் வெளியில் வர முடியவில்லை.

Tuesday, February 23, 2010

Book of the week

புத்தகம் : பேட் சமரிடன்ஸ்
வருடம் : 2009
ஆசிரியர் : ஹா-ஜூன் சங்
தொடர்வெளியீடு : எழுத்துப் பிழைகளைச் சரி செய்தல்


சுருக்கம்  :
உலகப் பொருளாதாரத்தில், நாடுகள் அவரவர் நிலைமையை முன்னேற்றுவதற்காக வெவ்வேறு யுக்திகளை கையாள்கின்றன. இப்பொழுது, பல நாடுகளில், வெவ்வேறு அளவிற்கு சுதந்திர வர்த்தகம் (Free trade ) மற்றும் உலகமயமாக்குதல் (Globalization ) என்ற கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு தூண்களைக் கொண்ட புதிய தாராளவாதித்துவம் (Neo Liberalism )  என்ற கொள்கையை உலகத்தின் வளர்ந்த (பொருளாதார ரீதியில்) நாடுகள் மிகவும் உற்சாகமாக, ஒரு வளர்ச்சிப் பாதையாக, எஞ்சிய நாடுகளுக்கு போதிக்கின்றன (காண்க : தாமஸ் பிரீட்மான் (See : Thomas Friedman )). சுதந்திர வர்த்தகத்தின் மூலம் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் செழுமை அளவை அடைய முடியும் என்றும் அதற்கேற்ப வளரும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வளர்ந்த நாடுகளின் பொருளியலாளர்கள் தங்களிடையே நிலவும் உடன்பாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தப் புத்தகத்தில், சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்குதல் கோட்பாடுகள், வளர்ந்த நாடுகள் கூறுவது போல் இல்லை என்றும் அதனை வளர்ந்த நாடுகள் சொற்கேற்ப கடைபிடிப்பதன் மூலம் வளரும் நாடுகள் தங்களது வளர்ச்சியை முடக்கி விடும் என்றும் காட்டுகிறார்.
பைபிள்-இல் வரும் குட் சமரிடன் (Good Samaritan ) நடத்தைப் போல், வளர்ந்த நாடுகள் போதிக்கும் வர்த்தகக் கொள்கைகள் பின் உள்ள நோக்கம் வளரும் நாடுகளுக்கு உதவுவதாக இருந்தாலும், நடைமுறையில் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை இந்த புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அலசல் :

ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்தது போக எஞ்சி இருக்கும் பணத்தை வரிக்கும் சேமிப்பிற்கும் செலவிற்கும் முதலீட்டிற்கும் பயன்படுத்துகின்றனர்.
பணம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் பணம் வெவ்வேறு வழிகளின் மூலம் அந்த நாட்டு அரசிற்குக் கிடைக்கிறது.

வரி (Tax) :
நாட்டு மக்கள் தாங்கள்  சம்பாதித்த பணத்தை அல்லது மரபு வழியாக வந்த சொத்தை, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு பங்கை அரசிற்கு வரியாகக் கொடுக்கலாம். இந்த பணம் அரசிற்கு நிரந்தரமான வருவாயாக இருக்கும். இவ்வாறு கொடுப்பதற்கு முன், மக்கள் அரசிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதை அலசுகின்றனர். ஜனநாயக நாடுகளில், மக்கள் தங்கள் அரசை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதின் மூலம், அந்த அரசின் வளர்ச்சிக் கொள்கைகளையும் பணம் கையாளும் முறையையும் பற்றிய தங்கள் கருத்தைத்  தெரிவிக்கின்றனர். அரசு, ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும் சர்வாதிகாரம் உடைய நாடுகளிலும், மக்களின் சம்மதம் இல்லாமல் அவர்களுடைய பணத்தின் ஒரு பங்கை வரியாக நாட்டு வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்கிறது. பொதுவுடமை உடைய நாடுகளில் அந்த நாட்டின் பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழு (Politburo ) அந்தப் பங்கை நிர்ணயிக்கிறது. மக்களிடம் இருந்து வரும் வரிப்பணம் போரவில்லை என்றால், அரசு மற்ற வழிகளைக் கையாளலாம்.
கடன் (Debt ) :
சில திட்டங்களுக்கு, அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பான்ட் (Bond ) வெளியிடலாம். இந்த முறையில், மக்கள் அரசின் பான்ட்-ஐ வாங்கிக் கொண்டு அந்த பான்ட்-இன் மூலம் வரும் வட்டியை தங்கள் வரவாக ஏற்றுக் கொள்வார்கள். அரசு பான்ட்-ஐ வெளியிடும் போது, அந்த திட்டத்தின் வரவு செலவுக் கணக்கை விளக்குவதோடு, அந்த திட்டத்தினால் வரும் லாபத்தையும் அந்த லாபம் கைக்கு வரும் அட்டவணையையும் சுட்டிக் காட்டும். இதன் மூலம், அந்த பான்ட்-ஐ வாங்கியவர்கள் தங்களுடைய முடிவு  மேலும் வரவை அளிக்கிறதா என்றும் வரவு அளிக்கும் வழிகளில் எந்த வழி சிறந்தது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக செலவிடும் அரசு வளத்தை (Public expenses ), அந்த திட்டத்தில் லாபம் அடைந்த மக்களிடம் இருந்து வரியாக எடுத்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டுக் கடன் (Foreign Debt ) :
இவ்வழிகள் மூலம் பணம் சேரவில்லை என்றால், அரசு மற்ற நாடுகளில் உள்ள மக்களையையோ நிறுவனங்களையையோ குறி வைக்கலாம். வேற்று நாட்டு மக்களோ நிறுவனங்களோ தங்களுடைய முதலீட்டிற்கு ஏற்ற வரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தங்கள் பணத்தை முதலீடு செய்வார்கள். இதன் வீக்கம் என்னவென்றால், வேற்று நாட்டு மக்களோ நிறுவனங்களோ எந்த காரணத்தை கொண்டு அதிருப்தி அடைந்தால், தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுவிடுவார்கள். அந்த நாட்டு மக்கள் தங்களுடைய அரசு பணத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதை வரவு செலவுத்திட்டத்தின் (Budget ) மூலமும் நடைமுறையில் எவ்வாறு அது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பதையையும் அறிந்து கொள்ளலாம். வேற்று நாட்டு மக்கள் வரவு செலவுத்திட்டத்தைப் படித்து ஒரு நாட்டின் அரசு தன்னுடைய கையில் உள்ள பணத்தை எந்த திட்டங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நடைமுறையில் அவ்வாறு நடந்திருக்கிறதா என்பதை அறிவது கடினம். அந்த நாட்டில் உள்ள தகவல் நிறுவனங்கள் மூலம் அந்த விவரத்தை அறிய முடிந்தால் வேற்று நாட்டு மக்களுக்கு முடிவெடுக்க சுலபமாக இருக்கும். அந்தத் தகவல் கிடைக்கவில்லை என்றால் (அந்த நாட்டில் தகவல் நிறுவனங்கள் இல்லை என்பதனாலோ, அந்த தகவல் வேறு மொழியில் இருப்பதனாலோ, அந்த நாட்டின் அரசு தவறான தகவலை பரப்புவதாலோ) வேற்று நாட்டு மக்களுக்கு அந்த முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். வேற்று நாட்டு நிதி நிறுவனங்கள் இதில் கொஞ்சம் அதிக அனுபவம் இருந்தாலும், அவர்களுடைய நிலைமையும் கடினமானது தான்.
வெளிநாட்டு முதலீடு (Foreign Investment ) : 
சில நாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ள பண முதலீட்டோடு தொழில் நுட்ப அறிவையும் ஒரு பரிசாகக் கருதி, அந்த நிறுவனங்களைக் கவரக் கூடிய வகையில் பல விதிகளை இயற்றி அந்த நிறுவனங்களை தங்கள் நாட்டில் முதலீடு செய்ய முற்படுவர். இவ்வாறு செய்வதன் காரணம், அரசாங்கம்  தொழில் நுட்ப அறிவின் பயன் தங்கள் மக்களை சென்று சேரும் என்பது தான். காலப் போக்கில், அந்த தொழில் நுட்பத்தில் அந்த நாட்டு மக்கள் மிகவும் தேர்ந்தவர்களாக ஆகி, அதன் மூலம் நாட்டிற்கு பணம் சம்பாதித்து கொடுப்பார் (இது இரு விதத்தில் நடக்கும் - ஒன்று, அந்த தொழில் நுட்ப அறிவை அறிவதற்கும் செயல்படுத்துவதற்கும் தங்கள் நாட்டில் இருந்து பணத்தை வேறு நாட்டிற்கு அனுப்ப வேண்டாம், இரண்டு - அந்த தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு விற்று தங்கள் நாட்டு அந்நியச் செலாவணியையும் மக்களின் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம்). இது, பெரும்பாலும் கூட்டு முயற்சியாக (Joint Venture ) செயல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனம், மற்ற நாட்டின் மக்களிடையே தன்னுடைய பொருட்களுக்கு ஒரு சந்தையை உருவாக்குவதற்காக இதைச் செய்யலாம். மேலும், ஒரு நாட்டின் தொழிலாளர் செலவை (Labour cost ) தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த முறையை பின்பற்றும்.
இவற்றிற்கு அப்பாற்பட்டு, ஒரு அரசின் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாட்டு நிறுவனங்களும் ஒப்பந்தங்களும் உள்ளன. இவற்றில் முக்கியமானவை, பொருளாதார உலகின் மூன்று தெய்வங்கள் எனக் கருதப்படும் இன்டர்நேஷனல் மானிடரி பண்ட் (IMF - International Monetary Fund ), வோர்ல்ட் பேங்க் (World Bank ) மற்றும் காட் (GATT  - General Agreement on Tariffs and Trade ) ஆவோர். இந்த மூன்று தூண்களும் புதிய தாராளவாதித்துவம் (Neo Liberalism) எனும் எண்ணத்தைச் சார்ந்தவை.  
புதிய தாராளவாதிகள் (Neo Liberalists ) :
ஒரு நாட்டின் பொருளாதார சுகாதாரத்தின் நற்சான்றிதழை அளிப்பதற்கு IMF காரணமாக இருக்கிறது. ஒரு நாட்டிற்கு கடன் கொடுப்பதற்கு வோர்ல்ட் பேங்க் காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள், நிதித் தட்டுபாடுள்ள வளரும் நாடுகளுக்கும் பொருளாதார அனுபவமும் சொந்த நிறுவனங்களும் இல்லாத நாடுகளுக்கும்  நிதி உதவியும் பொருளாதார செயர்பாட்டுதவியும் அளிக்கின்றன.
சுதந்திர வர்த்தகம் என்பது உலகின் உள்ள நாட்டு எல்லைகளைப் பாராமல் வர்த்தகம் எங்கும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு நாட்டின் அரசிற்கு அதன் எல்லைக்குள் நடக்கும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதர்க்குரிய உரிமையை அந்த நாட்டு மக்கள் அளிக்கிறார்கள் (ஜனநாயகத்தில் அது தேர்தலின் மூலம் அளிக்கப் படுகிறது. சர்வாதிகாரத்தில் அந்த நாட்டின் தலைவர் (கள்) அந்த உரிமையை மக்கள் சார்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஜனநாயகம் அல்லாத பொதுவுடமை அரசமைப்பு உள்ள நாடுகளில் பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழு அந்த உரிமையை மக்கள் சார்பாக எடுத்துக் கொள்கிறது.). இதன் அடிப்படை ஒரு நாட்டின் அரசிற்கு தன்னுடைய ஆட்சிக்குள் உள்ள மக்களின் நலன் எதுவென்று தெரியும் என்பது தான். தன் ஆட்சிக்குட்பட்ட மக்கள் விருப்பப்பட்டால் பரிமாற்றம் செய்யப்படும் பொருட்களின் மீது நிறைய வரி செலுத்தி அரசாங்கம் தனது கஜானாவை பலப்படுத்தலாம். வெளி நாட்டு பொருட்களின் மீதுள்ள ஆர்வத்தினால் பணம் நாட்டை விட்டு வெளியே போகிறது என்றால் அதற்கேற்ப சுதந்திர வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தலாம். அதே நேரம், அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் மற்றும் சட்டவிரோதமான செயல்கள் மூலம் கஜானாவை காலி செய்தால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு அரசை அகற்றி விடலாம். நிறைய வரி கட்டினால் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலை முன்னேறவில்லை என்றால் அந்த வரி அளவை குறைக்க அரசாங்கத்தைக் கேட்டு கொள்ளலாம். அரசாங்கம் செவி சாய்த்து மக்களுக்கு தங்கள் நிலைமை மீது திருப்தி இருந்தால் அரசு நீண்ட நாள் ஆளும். மக்களுக்கு தங்கள் நிலைமை மீது திருப்தி இல்லை என்றால் அரசு அடுத்த தேர்தலில் வீழ்ந்து விடும். அரசின் கஜானாவில் பணம் குறைந்து விட்டால் மக்களுக்கு தேவையான பொதுச் சேவைகள் முடங்கி விடும். இதனால், மக்களின் அதிருப்தி அதிகமானால் அரசிடம் வரியைக் கூட்டச் சொல்லி முறையிடலாம். வரிக் கட்டுவதில் இஷ்டம் இல்லை என்றால் பொதுச் சேவைகளின் நிலையில் இறக்கத்தைக் காண வேண்டி வரும்.
அரசுக்கும் மக்களுக்கும் உள்ள இந்த பரிமாற்றத்தை மாற்றும் வண்ணம் சுதந்திர வர்த்தகத்தின் கொள்கை அமைந்துள்ளது. நாடுகளின் எல்லையைப் பாராமல் பொருட்களும் பணமும் கடந்து புழங்க வேண்டும் என்ற நம்பிக்கைக்கேற்ப ஒரு நாட்டின் முதலீட்டுக் கட்டுப்பாடுகளும் (Capital Controls ) வரி நிலவும் (Tax rate) எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும். இது ஒரு சில பொருளியலாளர்களிடையே பரவி இருக்கும் பகுத்தறிவுச் சந்தை தோராயக்கருத்தின் வெளிப்பாடாகும். IMF - உம் வோர்ல்ட் பேங்க்-உம் இதனைப் பின்பற்றி தாங்கள் உதவி செய்யும் நாடுகளின் முதலீட்டுக் கட்டுபாடும் வரி நிலவும் குறைந்தே இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதற்கு சம்மதித்தால், உதவிக் கேட்ட அரசிற்கு குறைய வட்டியில் தாராளமாகக் கடன் அளிக்கின்றனர். மேலும், இந்த இரு நிறுவனங்களும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் சுகாதாரத்தை அளவிட்டு அதனை வெளியிடுவதன் மூலம் வேற்று நாட்டு நிதி நிறுவனங்களும் மக்களும் மற்ற அரசுகளும் தங்கள் சொந்தப் பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வருகின்றனர்.
IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் நிர்பந்தங்களுக்கு இணங்க வரி நிலவைக் குறைக்கின்ற அரசு, தன்னுடைய வரி வருவாய் குறைந்த நிலைமையில், இந்த நிறுவனங்களின்  மீதும் வெளி நாட்டு மக்களின் மீதும் மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் மீதும் வெளி நாட்டு அரசுகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறது. இவ்வாறு, மக்களின் தீர்ப்பு, பணத் தட்டுப்பாட்டினால் IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் -இன் தீர்ப்பினால் மாற்றி எழுதப்படுகிறது. மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காக அரசுக்குக் கொடுத்த பணம் நேர்த்தியான முறையில் செலவுச் செய்யப்பட்டால் அதன் பலனை அனுபவித்து வாழ்வார்கள். மேலும், அரசின் செலவு தவறான முறையில் சென்றால் அதனை கண்டிக்கும் முறையில் நடவடிக்கை எடுப்பர். IMF  மற்றும் வோர்ல்ட் பேங்க் காட்டும் வழியைப் பின்பற்றுவதன் மூலம் தங்களுடைய வருங்கால விதியை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் வெளிநாட்டவரின் கட்டுப்பாட்டில் விட்டு விடுகின்றனர். 
புதிய தாராளவாதிகளின் கோட்ப்பாட்டில் பணமும் பொருட்களும் சேவைகளும் நாடுகளின் எல்லைகளைப் பாராமல் எல்லா நாடுகளுக்கும் பரவுவதன் மூலம் அவற்றின் உண்மையான விலைமதிப்பை அறிய முடிகிறது என்று நம்புகின்றனர். இந்தப் பார்வை, பகுத்தறிவுச் சந்தை தோராயக்கருத்தின் விளைவாக சில பொருளியலாளர்கள்இடம் ஒரு மதக்கருத்தின் உண்மை போல் ஒட்டிக்கொண்டுவிட்டது.  அந்த நாட்டு மக்களின் துயரத்தை அகற்றுவதற்காக அல்லது நாட்டு நலனுக்காக அரசு இந்த பரிமாற்றத்தில் தலையிட்டால் (பணப்புழக்கத்தை முடக்கியோ பொருள் அல்லது சேவை மீது வரியை கூட்டியோ)  அது சந்தையின் குறியீட்டைக் கலப்படமாக்கி விடுகிறது என்று இந்த பொருளியலாளர்கள் நம்புகின்றனர். 

 டேவிட் ரிக்கார்டோ (David Ricardo ) :

ஒரு நாட்டின் தொழில்நுட்பம் எளிமையான அளவில் கைக்கருவிகளை செய்யக் கூடிய அளவில் இருந்தால் அந்த செயல்திறனை அது மேலும் மேலும் மேம்படுத்துவதன் மூலம் அதன் உண்மையான மதிப்பை பெற முடிகிறது. அதே நாடு, அதிநவீன தொழில்நுட்ப அளவில் ஆற்றல் இருந்தாலும் மற்ற (எளிமையான) தொழில்நுட்ப அளவிற்கு இல்லை என்றால் அது அந்த அதிநவீன தொழில்நுட்பத்தைக் காட்டிலும் எளிமையான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையான ஒப்பீட்டுச் சாதகக் கோட்பாடு  (Comparative Advantage Theory )  என்பதாகும். புதிய தாராளவாதிகளின் குருவாகக் கருதப்படும் டேவிட் ரிக்கார்டோ (David Ricardo ) என்ற ஆங்கிலேயப் பொருளியலாளர் கூறியது. இந்த கோட்பாட்டைக் கடைப்பிடித்திருந்தால் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் 1940 மற்றும் 1950 களில் வேளாண்மைச் சமுதாயமாக இருந்து இருக்கும். ஒரு நாடு ஒரே தொழில்நுட்ப அளவில் தங்கி இருந்தால் இந்தக் கோட்பாடு பல நாடுகளுக்கு நடுவே நடக்கும் வர்த்தகத்தை நன்றாக விவரிக்கும். ஆனால், பல நாடுகள் எளிமையான தொழில்நுட்பத்தில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை அடைகின்றன. புதிய தாராளவாதிகள் இதை மறந்து வளரும் நாடுகளுக்கு, இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, சுதந்திர வர்த்தகத்தையும் உலகமயமாக்குதலையும் போதனையாகக் கூறுகின்றனர்.
 காட் (GATT ) :
புதிய தாராளவாதிகளின் எண்ணங்களில் மூன்றாவது காலாக இருக்கும் GATT என்ற ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் ,உலகமயமாக்குதலின் பயன்களை அனுபவிக்க , கையெழுத்து இட வேண்டிய அங்கமாக வகிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு பொருள் மற்றும் சேவையின் அறிவியர்தனமான சொத்தின் (Intellectual Property ) விதிகளை எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஒரு பொருள் மற்றும் சேவையின் வடிவமைப்பை ( Patent ) அந்தந்த பொருள் மற்றும் சேவையின் கண்டுபிடிப்பாளர் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவு அங்கீஹரிக்கப்பட்டப் பிறகு அவருக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு உரிமை அளிக்கப்படும். இந்த நேரத்தில் யாரேனும் அந்த பொருளையோ சேவையையோ பயன்படுத்தினால் கண்டுபிடிப்பாளருக்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வருடங்கள் கழிந்த பிறகு, யாவரும் அந்த பொருளையோ சேவையையோ பணம் கொடுக்காமல் பயன்படுத்தலாம். இதன் மூலம் கண்டுபிடிப்பாளர்களின் உரிமை காக்கப்படும். ஆனால், வளரும் நாடுகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயன்படுத்துவதற்குரிய பணமும் ஆற்றலும் சிறிய அளவில் தான் இருக்கும். மேலும், ஒப்பீட்டுச் சாதகக் கோட்பாட்டிற்கேற்ப ஒவ்வொரு நாடும்  அதன் ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிலைமையைப் பொறுத்து பொருள் மற்றும் செயலைப் படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயன்படுத்த எண்ணினால் அதற்குரிய பணத்தை கடனாகக் கொடுப்பதற்கு IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் தயங்கும்.  இன்று வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் பெரும்பான்மையான நாடுகள் தங்களது வளர்ச்சியின் போது மற்ற நாடுகளின் அறிவியர்தனமான சொத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி பணம் சம்பாதித்தன.
காட் இல் சில தொழில்கள் சில நாடுகளுக்கு விதிவிலக்காகக் கருதப்படுகின்றன. இவற்றிலும் வளரும் நாடுகளுக்கு எதிராக விதிமுறைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு அரச உதவி (State Subsidy  ) கிடைப்பதன் மூலம் அவர்களது உற்பத்தித்திறன் வளரும் நாடுகளை விட பன்மடங்கு அதிகமாய் இருக்கிறது. வளரும் நாடுகள் தொழில்நுட்ப எளிமை, அந்நாடுகளுக்கு தேவையான அந்நியச் செலாவணியை கொண்டு வருவதில்லை என்பதால், விவசாயம் மற்றும் சரக்கு (commodity ) வர்த்தகத் தொழில்களின் மூலம் அதைச் சேர்க்கின்றன. வளரும் நாடுகளிடம் அரசு உதவி ஏற்கனவே உள்ள தொழில்களுக்கு, அதனை குறைக்குமாறு IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் வலியுறுத்துகின்றன. அதே சமயம், வளரும் நாடுகளுடைய அந்நியச் செலாவணியை அதிகரிக்க விவசாயம் மற்றும் சரக்கு வர்த்தகத் தொழில்களில் மூலம் முயன்றால், வளர்ந்த நாடுகள், தங்கள் விவசாயிகளுக்கு அந்த தொழில்களில் அரச உதவி மூலம், வளரும் நாடுகளின் பலத்தைக் குறைத்து விடுகின்றன. மேலும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த அறிவியர்தனமான சொத்தை பயன்படுத்த பல தடைகளை GATT விதிக்கிறது. இதனால், வளரும் நாடுகளின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
சுதந்திர வர்த்தகம் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார விருப்பத் தேர்வைக் குறைத்து விடும். சில தொழில்களில் வெளிநாட்டு நிறுவனங்களை  வர விடாமல் தன்நாட்டு நிறுவனங்களை பாவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அரசு நிர்வாகத்தில் உள்ள சில நிறுவனங்கள் நன்றாக வளர்கின்றன. வெளிநாட்டவரிடம் இருந்து எண்ணங்களை 'திருடுவது' ஒரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சுதந்திர வர்த்தகமும் ஜனநாயகமும் இயற்கையில் பங்காளிகள் இல்லை(புதிய தாராளவாதிகள் சொல்வதற்கு மாறாக). சில நாடுகள் ஏழையாக இருப்பது அவர்கள் சோம்பேறியாக இருப்பதனால் அல்ல; அவர்கள் சோம்பேறியாக இருப்பது ஏழையாக இருப்பதனால் தான். குறைய அளவில் இருந்தால் பணவீக்கமும் அரசுப் பங்களிப்பும்  பொருளாதார வளர்ச்சியை முடக்கி விடும். சில நேரங்களில், நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடினாலும், நாளடைவில் அவை லாபத்தில் ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் மூலம், சுதந்திர வர்த்தகத்தையும் உலகமயமாக்குதலையும் ஒரு நாட்டின் தலையாய வளர்ச்சி பாதையாகக் கொண்டிருந்தால் அந்த நாட்டின் வளர்ச்சி குறைந்து விடும் என்று பல புள்ளி விவரங்கள் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

Thursday, February 04, 2010

Book of the week

புத்தகம் : ஹொவ் மார்க்கெட்ஸ் பெயில்
வருடம் : 2009
ஆசிரியர் : ஜான் காஸ்சிடி
தொடர்வெளியீடு : கூடுதல் புத்தகங்கள், எழுத்துப் பிழைகளைச் சரி செய்தல் 


புத்தகச் சுருக்கம்:
2008 - 2009 வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட விபரீத நடப்புகளை, பொருளாதார வரலாற்றின் வெவ்வேறு கோட்பாடுகளின் மூலம் விவரித்திருக்கிறார். அமெரிக்காவில் கடைசி 80 வருடங்களில் காணாத பொருளாதார விளைவுகளுக்கு, சிலப் பொருளியலாளர்கள் நடைமுறை உண்மையை பொருட்படுத்தாது தங்களது சித்தாந்தத்திர்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்தது தான் காரணம் என்பதை நல்ல விளக்கங்களோடு எழுதியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க பொருளாதாரத்தின் அவல நிலைமைப் பற்றி சில பொருளியலாளர்கள் முன்னமே எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது எச்சரிக்கைகள் உயர் பதவியில் உள்ள பொருளியலாளர்களிடையே எடுபடவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாகச் சென்று கொண்டிருந்ததால், தாங்கள் செல்லும் பாதை தான் சரியானது என்ற முழு நம்பிக்கையுடன் அமெரிக்க பொருளாதாரத்தை வழி காட்டிச் சென்றனர். அமெரிக்கப் பொருளாதாரம் (தற்காலிகமாகத்) தடம் புரண்டப் பிறகு, அந்த நிலைமையை நேர்படுத்த முயன்ற, நடைமுறை உண்மையை எடுத்துரைக்கும் பொருளியலாளர்களின் யோசனைகளை, அதிகாரிகள் புறக்கணித்து நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டார்கள்.

அலசல் :

இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப் பிறகு எஞ்சிய நாடுகளில் அமெரிக்கா செழிப்புள்ள நாடாக வலம் வந்தது. அதன் போட்டி நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை இரண்டாம் உலகப் போரினால் சீர்குலைந்தும் பொருளாதாரம் அழிந்தும் இருந்தன.  1950 முதல் 1970 வரை அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. 1970 பிறகு  அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முன்னைப் போல் இல்லாமல் மெதுவடைந்தது. அதனை சரி செய்வதற்கு எடுக்கப்பட்ட எந்த  செயல்பாடும் வளர்ச்சியை முடுக்கி விடாததால் அன்றையப் பொருளியலாளர்களின் செயற்திறன் மீதுள்ள நம்பிக்கை குறைந்தது. 1980 பிறகு 2006 வரை அமெரிக்கப் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் சென்றது. மக்களின் நலம் ஒவ்வொரு வருடமும் முன்னேறியதைக் கண்டு சிலப் பொருளியலாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் வருங்காலத்தில் நெடு நாள் வளர்ந்து கொண்டே போகும் என்று முன்கணிப்பு செய்தனர். இவர்களில் ஏற்படைவுச் சந்தை (efficient market ) என்று அழைக்கப்படும் தோராயக்கருத்தை தங்கள் வேதவாக்காகக் கொண்டச் சிலப் பொருளியலாளர்கள், அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குக் காரணம் அந்தத் தோராயக்கருத்து தான் என்று முடிவெடுத்தனர். அந்த தோராயக்கருத்தின் வடிவமைப்பு எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒத்து வரும் என்று அடித்துக் கூறினர்.
ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்து என்பது 1940 இலும் 1950 இலும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரெட்ரிக்  ஹயெக் (Frederick Hayek ) என்னும் பொருளியலாளர்ஆல்  பிரபலமாக்கப் பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு வர்த்தகமும் அது நடக்கும் சந்தையும் மிக முக்கியம் என்றும் அரசாங்கம் வர்த்தகத்தையும் சந்தையையும் ஒழுங்குபடுத்த முயல்வதன் மூலம் வர்த்தகம் முடங்கி விடும் என்றும் அது நாட்டின் பொருளாதரத்திற்கு நல்லதல்ல என்றும் எடுத்துரைத்தார். ஒரு சந்தை, அங்கு விற்கப்படும் பொருட்களும் அவற்றின் விலைகளின் மூலம், வர்த்தகர்களும் நாட்டு மக்களும், எந்த பொருட்கள் தேவையானவை என்றும் எந்த பொருட்கள் வேண்டப்படாதவை என்ற குறியீட்டினை அறிய முடியும் என்றும் கூறினார். அரசாங்கம் சந்தையிலும் வர்த்தகத்திலும் குறுக்கிடுவதன் மூலம், ஒரு சந்தையிலிருந்து வர்த்தகர்கள் அறியும் குறியீடு குழப்பத்தை விளைவிக்கும் என்றார். அவருடைய தோராயக்கருத்தில் அன்றைய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெரும்பான்மை பொருளியலாளர்களுக்கும் உடன்பாடில்லை.
ஜான் மய்னர்ட் கெய்ன்ஸ் (John Maynard Keynes )  என்ற ஆங்கிலேயப் பொருளியலாளர் எடுத்துரைத்த கோட்பாடை பெரும்பாலானோர் கடைப்பிடித்தனர். வர்த்தகமும் சந்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம் என்றாலும் ஒரு சில நேரங்களில் அவற்றின் செயற்பாடு மக்களுக்குச் சாதகமாக இல்லாதப் பட்சத்தில் அரசாங்கம் தனது (பணம் அச்சடிக்கும்) சக்தியை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொருளாதாரம் நிலைப்பட்டப் பின் அரசாங்கம் தனது பங்கைக் குறைத்துக் கொள்ளலாம்  என்று கூறினார். 1914 இலிருந்து 1918 வரை நடந்த முதலாம் உலகப் போரின் இறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் தோற்ற நாடான ஜெர்மனி மீது  வெர்சாய் (Versailles ) ஒப்பந்தத்தின் மூலம் மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அந்த விதிகள் நியாயத்திற்கு மாறானவை என்று விவாதித்த கெய்ன்ஸ், அதன் விளைவுகள் ஜெர்மனியின் மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் அதனால் மற்றொரு போரில் ஜெர்மனி பங்கு கொண்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கூறினார். அவர் கூறியது போல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க ஜெர்மனி ஒரு காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின் கெய்ன்ஸ்இன் பெருமை எங்கும் பரவி அவரது பொருளாதார எண்ணங்கள் மிகப் பிரபலமாயின.
இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தின் ஆதரவாளர்களில்  முக்கியமான பொருளியலாளரான  மில்டன் பிரீட்மான் (Milton Friedman ) என்பவர் அதனை மக்களிடையே பரப்ப மிக்க முயற்சி செய்தார். அதே சமயத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அய்ன் ரண்ட் தனது அப்ஜெக்டிவிசம் (objectivism ) சித்தாந்தத்தை மக்களிடையேப் பரப்பிக் கொண்டிருந்தார். இந்த இருவர் முயர்ச்சியினால் ஏற்படைவுச் சந்தைத் தொராயக்கருத்தும் அப்ஜெக்டிவிசமும் கலந்து ஒரு புதிய சித்தாந்தமாக உருவானது. பொருளாதாரத்தில் அதற்கு சிகாகோ பள்ளியின் பொருளாதாரம் (Chicago School of Economics ) என்று அழைக்கப்பட்டது. அது பொருளாதாரம் மட்டுமல்லாமல், ஒரு அரசியல் சித்தாந்தமாக உருவெடுத்ததிற்கு அய்ன் ரண்டின் பங்கு மிக முக்கியமானது. இந்த அரசியல் சித்தாந்தத்தின் சீடர்களில் ஒருவராக இருந்தவர் அலன் க்ரீன்ச்பன் (Alan Greenspan ). தனது சொந்த வாழ்க்கையில் அய்ன் ரண்டின் சீடராகவும் பொருளாதார எண்ணங்களில் மில்டன் பிரீட்மான்இன் தொண்டராகவும் இருந்தார்.
1970 இல் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வேகக்குறைவைச் சரி செய்ய கெய்ன்ஸ் வரைப்படுத்திய கோட்பாடுகள் உடனடிப் பயனில்லாமல் போகவே மற்ற பொருளாதாரக் கோட்பாடுகள் அதற்கு பதிலாக பயன்படுத்தப் பட்டன. 1982 க்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரீசெர்வ் (Federal Reserve ) தலைவரான பால் வோல்க்கர் (Paul Volcker )செயல்படுத்திய வட்டிக் கொள்கைகளினால் அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ரோனல்ட் ரீகன் (Ronald Reagan ) ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தை வேத வாக்காகக் கொண்ட பொருளியலாளர்களை தனது ஆலோசகர்களாகக் கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், வர்த்தகத்திலும் சந்தையிலும் மக்களின் வாழ்விலும், அரசாங்கத்தின் பங்கு நிறையக் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதற்கேற்ப, பால் வோல்க்கர் பெடரல் ரீசெர்வ் இல் இருந்து ராஜினாமா செய்தவுடன், ரோனல்ட் ரீகன் , அலன் க்ரீன்ச்பன் ஐ தலைவராக நியமனம் செய்தார். அலன் க்ரீன்ச்பன் தலைவராக இருந்த போதும் அமெரிக்கப் பொருளியலாளர்களில் பெரும்பாலானோர் கெய்ன்ஸ் இன் பொருளாதார எண்ணங்களை மதித்து வந்தனர். 1970 க்கு முன் கெய்ன்ஸ் இன் எண்ணங்களை எதிர்க்க மிகவும் சிறிய கூட்டம் இருந்தது. 1980 களில் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கண்டும், 1987 இல் அமெரிக்கப் பங்குச் சந்தையான வால் ஸ்ட்ரீட் (Wall Street ) இல் பங்குகளின் சரிவை க்ரீன்ச்பன் நன்றாகக் கையாண்டதைக் கண்டும், க்ரீன்ச்பன் மீதுள்ள மதிப்பு கூடியது. நாள் போக்கில் க்ரீன்ச்பன் தனது தலைமைப் பதவி மூலம் அவர் முழுதாக நம்பிக்கை கொண்ட ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் கை ஓங்கியது. நடு நடுவில் ஒரு சில நெருக்கடிகள் நேர்ந்தாலும், பெரும்பாலும் க்ரீன்ச்பன் தலைமையில் பொருளாதாரம் 20 வருடங்களுக்கு மேல் நன்றாகச் சென்றது. இதனால், ரீகனுக்குப் பின் வந்த ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யு புஷ் ஆகியோர் க்ரீன்ச்பன் சொல்படி நடந்தனர்.
அமெரிக்காவில் ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்து பிரபலமாகுவதர்க்கு முன்னால் மில்டன் பிரீட்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் அண்டை நாடுகளில் தங்கள் சித்தாந்தத்தின் நடைமுறை வேலைப்பாடு பற்றி அறிய ஆவலாக இருந்தனர். அதன் விளைவாக, 1970 களில் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலே (Chile ) நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரிக் கட்சிகளின் அரசு அந்த நாட்டின் ராணுவத்தால் தூக்கி எறியப்பட்டவுடன்  தங்களது பொருளாதார எண்ணங்களை அந்த நாட்டு புதியத் தலைவரான ஆகுஸ்டோ பினோஷே  (Augusto Pinochet ) இன் முன்வைத்தனர். அவரும் தனது புதிய அரசின் முக்கிய பங்காக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்தார். அதில் முக்கிய பங்கு விதித்த பொருளியலாளர்கள் சிகாகோ பள்ளியைச் சார்ந்தவர்கள் தான். அதன் விளைவாக, சிலேஇன் பொருளாதாரம் சின்னாபின்னம் ஆகி மக்கள் அவதிப்பட்டனர். தங்கள் எண்ணங்கள் நன்றாகச் செயல்படுத்தப் படவில்லை என்று சொல்லி மில்டன் பிரீட்மான் மற்றும் சக பொருளியலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, ராணுவத்தின் பிடி தளர்த்தப்பட்டு, பினோசெட்இன் அரசு தூக்கி அறியப்பட்டவுடன் வந்த புதிய அரசு மக்களுக்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டு வந்தது. இன்று, சிலே mixed economy என்று சொல்லப்படும் கலப்பு பொருளாதாரம் என்ற பாதையை பின்பற்றுகிறது. அதன் மூலம், சில கொள்கைகள் கெய்ன்ஸ் இடம் இருந்தும் சில கொள்கைகள் மில்டன் பிரீட்மான் இடம் இருந்தும் கடன் வாங்கப்பட்டு, அந்த நாட்டுக்கு எது தேவையோ அதற்கேற்ப செயல்படுத்தப்படுகிறது.
2006 இல் முக்கியத்துவம் குறைந்த அடகுகள்  (subprime mortgages ) உள்ள மக்கள் மாசத் தவணைகளை செலுத்த முடியாததால் பல நிதி வங்கிகள் தங்கள் கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் நஷ்டம் அடைந்தன. வீட்டின் விலை எப்பொழுதும் கூடிக் கொண்டே போகும் என்றும் தங்கள் வீட்டின் அடகை ஒவ்வொரு மாதமும் எல்லா அடகுதாரர்களும் கட்டுவார்கள் என்ற (மூட) நம்பிக்கையின் பேரில் வங்கிகள் நிறைய அடகுகளை கடன்பெறத்தகாத மக்களுக்கும் விற்றனர். சில வங்கிகள், இதனால் இக்கட்டான நிலைமையை வந்தால் அதன் விளைவுகளைக் குறைக்க புதிய விதமான நிதிக் கருவிகளை உருவாக்கினர். சாதாரணமாக, புதிய நிதிக் கருவிகளை ஒழுங்குபடுத்த வெவ்வேறு நிறுவனங்களை அமெரிக்க அரசியல் அமைப்பு அமைத்துள்ளது. இந்த நேரத்தில், சில அரசியல்வாதிகள், ஏழைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே வீட்டுரிமையை கூட்ட முற்பட்டனர். வீட்டுரிமையின் மூலம் ஏழைக்கோட்டின் கீழ் உள்ள மக்களும் சிறுபான்மை மக்களும் தங்களது சுற்று வட்டாரத்தின் வர்த்தகத்தையும் தங்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவர் என்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தின் அனுமானம் அமெரிக்காவில் வீட்டின் விலை எப்பொழுதும் ஏறிக் கொண்டே இருக்கும் என்பது தான். புதிதாக வீடு வாங்கும் பொழுது சாதாரணமான அடகுக் கருவிகள் ஒருவருக்கு சரி வராமல் இருந்தால், புதிய நிதிக் கருவிகள் மூலம் அவர்களுக்கு அடகு கொடுப்பது வழக்காகியது. இதனைக் கண்டு கவலைப்பட்டச் சில பொருளியலாளர்கள் புதிய நிதிக் கருவிகளையும் புதிய அடகுக் கருவிகளையும் ஒழுங்குபடுத்துவதற்கு க்ரீன்ச்பன் இடம் முறையிட்டனர். தனது பொருளாதாரச் சித்தானந்தத்தில் மிக்க நம்பிக்கைக் கொண்டிருந்த க்ரீன்ச்பன், புதிய நிதிக் கருவிகளை வர்த்தகர்களும் சந்தையும் ஒழுங்குபடுத்தும் என்றும் அரசாங்கம் அதில் தலையிட்டால் புதிய நிதிக் கருவிகளை வர்த்தகர்கள் உருவாக்க மாட்டார்கள் என்றும் அதன் பயனாக சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் மற்றும் அடகுக் கருவிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடும் என்றும் கூறினார். அய்ன் ரண்ட் மற்றும் மில்டன் பிரீட்மான் இன் பாதிப்பு க்ரீன்ச்பன் ஐ அதிதீவிரமாகவே தாக்கியிருந்தது . கெய்ன்ஸ் முன்னாளில் சொன்னது போல் "பொருளியலாளர்களின் எண்ணங்களும் அரசியல் தத்துவவாதிகளின் எண்ணங்களும், சரியாயிருந்தாலும் தவறாயிருந்தாலும், பொதுவாக அறியப்படுவதை விட மிகச் சக்தி வாய்ந்தது. நிஜத்தில், உலகம் அதைத் தவிர வேறு மிகச் சிறியவற்றினால் விதிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் மனிதர்கள், தாங்கள் எந்த வித அறிவியற்தனமான பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்று கருதினாலும், ஏதாவது மறந்து (அல்லது மறைந்து) போன பொருளியலாளர்இன் அடிமைகளாக இருப்பார்கள்"("The ideas of economists and political philosophers, both when they are right and when they are wrong, are more powerful than is commonly understood. Indeed the world is ruled by little else. Practical men, who believe themselves to be quite exempt from any intellectual influence, are usually the slaves of some defunct economist"). இது க்ரீன்ச்பன் அல்லாமல் கெய்ன்ஸ்க்கும் உண்மையாகப் படும்.
க்ரீன்ச்பன் இன் கொள்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்றுக் கூறிய கூட்டம் நாளடைவில் ரொம்பச் சிரியதானது. இவர்களில் நூரியல் ரூபினி, ராபர்ட் ஷில்லேர், நச்சிம் நிக்கோலஸ் தலேப், ரோஜர் லோவேன்ச்டீன் போன்றோர் அடங்குவர். ஆங்கிலத்தில் சொல்லப்படும் பழமொழியான 'வெற்றியை போல் வெற்றி பெறுவது ஒன்றுமில்லை' ('Nothing succeeds like success ') க்ரீன்ச்பன்இன் கொள்கைகள் மீதுள்ள எதிர்ப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனை எதிர்த்தவர்களின் தத்துவத் தந்தைகள் என்று கருதப்படுவவர்களில் முக்கியமானவர்கள்  ஹைமன் மின்ச்கி (Hyman Minsky ) மற்றும் பெநொஇத் மண்டேல்ப்ரோட் (Benoit Mandelbrot) என்ற பொருளியலாளர்கள்.
 மண்டேல்ப்ரோட், நிதிச் சந்தைகளில் நிதிக் கருவிகள் மற்றும் பொருட்களின் மாற்றம், ஏற்படைவுச் சந்தையின் அனுமானமான காஸ்சியன்(Gaussian ) பகிர்மானம் (distribution ) இல்லை என்று சுட்டிக் காட்டினார். ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தை வேத வாக்காகக் கொண்டவர்கள் காஸ்சியன் பகிர்மானத்தை அனுமானமாகக் கொண்டதனால் நிதிக் கருவிகளுக்கும் அடகுப் பொருட்களுக்கும் கணிப்பதற்கு சுலபமாக இருந்தது. நிதிக் கருவிகள் மற்றும் அடகுப் பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டிருந்த வரை இந்த அனுமானம் நிதி நிறுவங்களுக்கு நல்ல லாபத்தைக் கொண்டு வந்தது. வீடுகளின் விலை சரிய ஆரம்பித்தவுடன், இந்த அனுமானம் மூலம் சம்பாதித்த நிதி நிறுவனங்களின் லாபம், நஷ்டம் ஆகக் காரணமாகி விட்டது. மண்டேல்ப்ரோட்டின் எண்ணங்களை அறிந்தவர்கள் நிதி நிறுவனங்களின் பங்கு விலை இறங்க ஆரம்பிக்கும் என்று யூகித்து அந்த தகவலை பயன்படுத்தி அந்தப் பங்குகளை ஷார்ட் (short ) செய்தனர். இவ்வாறு, அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிகளில் மிகவும் பணம் செய்தவர்களில் நசீம் நிக்கோலஸ் தலேபும், ஜார்ஜ் சொரோசும் அடங்குவர்.
மின்ச்கியின் திடமில்லாத நிதித் திட்ட தோராயக்கருத்து (Financial Instability Hypothesis ) அமெரிக்கப் பொருளாதாரத்தின் இப்போதைய நிலைமையை விளக்க உதவியாக உள்ளது. அதன் முக்கியக் கருத்து, ஒரு நிதித் திட்டத்தின் திடமும் வெற்றியும் அதன் அழிவுக்கும் சரிவுக்கும் உள்ள விதையை விதைக்கும் என்பது தான். ஒரு நிதித் திட்டம் திடமாக இருக்கும் பொது வர்த்தகர்களும் சாதாரண மக்களும் அந்த நிதி திட்டத்தினால் பயன் பெறுவதுடன் அதனால் செல்வமும் பெறுவர். நாளடைவில், அந்த நிதித் திட்டத்தின் பலவீனங்களை மறந்து தங்களது திறமையினாலும் புத்திக் கூர்மையினாலும் தான் தங்கள் வெற்றி பெற்றதாகக் கருதுவர். அதே சமயத்தில், நிதித் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகளும் நிதித் திட்டம் நன்றாக வேலை செய்வதைக்கண்டு தங்களது கண்காணிப்பைக் குறைத்து விடுவர். இதனைக் கண்டு  வர்த்தகர்களும் மக்களும் புதிய நிதித் திட்டம் என்றும் கவிழ்ந்து விடாது என்ற (மூட) நம்பிக்கையில் மேலும் மேலும் அபாயகரமான (நிதிச்) செயல்களில் ஈடுபடுவர். எல்லாம் நன்றாக செல்லும் பொழுது எல்லோரும் அவரவர் செல்வத்தை பெருக்கிச் சந்தோஷமாக வாழ்வார். சில அபாயகரமான செயல்களினால் ஏற்படும் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி கடைசியில் நிதித் திட்டத்தை அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். பொருளியலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் அபாயத்தைக் கண்டு அதற்கேற்ற மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிதித் திட்டம் மோசமான நிலைமைக்குச் சென்று விடும். 1980 இலிருந்து 2006 வரைக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாகச் செயல்பட்டதைத் தங்களின் செயல்திறன் என்று நம்பிய பொருளியலாளர்களும் அதிகாரிகளும், அபாயம் தெரிந்த பின்னும் முன் போல் சிறியதாக இருந்து விடும் என்று அசட்டாக இருந்து விட்டார்கள். நிலைமையின் தீவிரம் தெரிய வரும் பொழுது பொருளாதாரத்தின் செயல்பாடு தீவிரமாகப் பாதிக்கப்பட்டு விட்டது.

யாம் படித்த (அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையைப் பற்றிய)  புத்தகங்களில் இது போன்ற புத்தகத்தை இனிதாவதெங்கும் காணோம்.

அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையைப் பற்றிய மற்றப் புத்தகங்கள் :
1 . டூ பிக் டு பெயில் (Too big to fail)
 ஆண்ட்ரு ராஸ் சார்க்கின் எழுதிய இந்த புத்தகத்தில் 2007 முதல் 2009 வரை அமெரிக்காவின் பொருளியலாளர்களும் வர்த்தக தலைவர்களும் அரசியல் புள்ளிகளும் பொருளாதாரத்தின் சரிவை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றிப் படிக்கலாம். பொருளாதாரத் தத்துவம் அல்லாது அந்த இரண்டு வருடங்களில் நடந்த வெவ்வேறு நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
ஷாக் டாக்டரின் (Shock Doctrine )
நோமி க்ளீன் எழுதிய இந்த புத்தகத்தில் ஏற்படைவுச் சந்தை தொராயக்கருத்தைப் பின்பற்றிய பொருளியலாளர்கள் தங்களது எண்ணங்களை பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளில் செயல்படுத்தியதன் விளைவுகளை விரிவாகச் சித்தரித்திருக்கிறார். 
3 . தி மித் ஆப் தி ராஷனல் மார்க்கெட்(The Myth of  the rational  market )
ஜஸ்டின் பாக்ஸ் எழுதிய இந்த புத்தகத்தில் ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் அடிப்படையான பகுத்தரிவுடையச் சந்தை (rational market ) என்பதன் குறைகளையும் அதனை உண்மையென நம்பி செயல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்பைப் பற்றி கூறியிருக்கிறார்.
4 . இன் பெட் வி டிரஸ்ட் (In Fed We Trust )
டேவிட் வெசெல் எழுதிய இந்த புத்தகத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசெர்வின் பங்குப் பற்றி விவரித்திருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட பிரச்சனையைத் தீர்க்க அதன் தலைவராக அப்போது இருந்த பென் பெர்னான்கே (Ben Bernanke ) எடுத்த முடிவுகளையும் தான் தீவிரமாக நம்பிய ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தின் உதவியில்லாமையையும் இந்தப் புத்தகத்தில் நன்றாக விவரித்திருக்கிறார். 
5 . பூல்'ஸ் கோல்ட் (Fool 's Gold )
ஜில்லியன் டேட் எழுதிய இந்த புத்தகத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட (தற்காலிகச்) சரிவுக்குக் காரணமாக இருந்த நவீன நிதிக் கருவிகள் உருவானக் கதையை நன்றாக சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் பேர்போன முதலீடு வங்கியான ஜே பி மோர்கனில் ஆரம்பித்த அந்தக் கருவிகள் விரைவில் எல்லா நிதி நிறுவனங்களிடமும் சாதாரண மக்களிடையேயும் பிரபலமானதை விவரித்திருக்கிறார்.
6 . ஹவுஸ் ஆப் கார்ட்ஸ்(House of  cards )
வில்லியம் கோகன் எழுதிய இந்த புத்தகத்தில் முதலீடு வங்கியான பியர் ஸ்டேர்ன்ஸ் (Bear  Stearns ) புதிய நிதிக் கருவிகளை பயன்படுத்தி மிகுந்த லாபம் அடைந்ததையும் அதே நிதிக் கருவிகள் அதன் அழிவுக்குக் காரணமாக இருந்ததையும் மிகவும் பரபரப்பாக விவரித்திருக்கிறார்.
7 . தி ட்ரில்லியன் டாலர் மேல்ட்டோவ்ன் (The Trillion Dollar Meltdown )
சார்லஸ் மோர்ரிஸ் எழுதிய இந்த புத்தகத்தில் புதிய நிதிக் கருவிகள் எப்படி வேலை செய்யும் என்றும் அவை அமெரிக்கப் பொருளாதாரத்தை எப்படி கீழே கொண்டு வந்தன என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார். வெவ்வேறு நிதிக் கருவிகள் எவ்வாறு சில நிறுவனங்களுக்கு லாபம் வாங்கித் தந்தன என்பதையும் அதே நிதிக் கருவிகள் சில நிறுவனங்களை எப்படி அழித்தன என்றும் நன்றாகக் கூறியிருக்கிறார்.
8 . ப்றேடிக்டப்லி இர்ராஷனால் (Predictably Irrational )
டேன் அறிஎலி எழுதிய இந்த புத்தகத்தில் பகுத்தரிவுடையச் சந்தை என்ற அனுமானம் நடைமுறையில் ஏற்காது என்பதை நடத்தை உளவியல் (Behavioural Psychology ) மூலம் விவரித்திருக்கிறார். ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் முக்கிய அனுமானமான பொருட்களின் குறியீட்டின் தவறை இந்த புத்தகத்தில் உள்ள வெவ்வேறு பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
9 . இர்ராஷனால் எக்சுபெரன்ஸ் (Irrational exuberance )
ராபர்ட் ஷில்லேர் எழுதிய இந்த புத்தகத்தில் 2000 ஆண்டில் அமெரிக்காவில் இணையத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பல லாபம் பார்க்காமல் அழிந்து போன கதையையும் அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் தற்காலிகச் சரிவு அடைந்ததையும் நன்றாக விவரித்திருக்கிறார். இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் அமெரிக்காவின் வீடு மற்றும் நில விலைகளின் சரிவுப் பற்றி எழுதியிருக்கிறார்.
10 . வென் ஜீனியஸ் பெயில்ட் (When Genius Failed : The Rise and Fall of Long Term Capital Management )
ரோஜர் லோவன்ஸ்டீன் எழுதிய இந்த புத்தகம் அமெரிக்காவில் 2006 இலிருந்து 2009 வரை முதலீடு வங்கிகளின் அழிவை, 10 வருடங்களுக்கு முன் லாங் டெர்ம் காபிடல் மானேஜ்மென்ட் (LTCM ) என்ற நிதி நிறுவனத்தின் வளர்ச்சியிலும் அழிவிலும் சொல்லியிருக்கிறது. LTCM நிறுவனம் அழிந்தால் அதற்கு கடன் அளித்த மற்ற நிதி நிறுவனங்கள் (ஜே பி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மன் சாக்ஸ், சிடிக்ரூப், பியர் ஸ்டேர்ன்ஸ்) மிகுந்த நஷ்டம் அடைந்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் உயிர் நாடியான கடன் சுத்தமாக ஸ்தம்பித்து விடும் என்பதாலும் அந்த நிதி நிறுவனங்கள் அமெரிக்க மத்திய வங்கியின் உதவியோடு LTCM நிறுவனத்தை உயிர்ப்பிக்க முயற்சி செய்தன. அதில் அவை வெற்றியும் பெற்றன. ஆனால் LTCM நிறுவனம் அதற்குப் பின் மூடப்பட்டது. அதனைக் காப்பாற்ற முயன்ற நிதி நிறுவனங்களில் பியர் ஸ்டேர்ன்ஸ் ஒன்று மட்டும் தன் பங்குக்குரிய பணத்தைக் கொடுக்கவில்லை. அதனுடைய விளைவு 10 வருடங்களுக்குப் பின் 2008 இல் பியர் ஸ்டேர்ன்ஸ் தனது உயிருக்குப் போராடுகையில் மற்ற நிதி நிறுவனங்கள் அதற்கு உதவிச் செய்ய மிகவும் தயங்கின.
11 .  தி ப்ளாக் ஸ்வான் (The Black Swan )
நசீம் நிக்கோலஸ் தலேப் எழுதிய இந்தப் புத்தகத்தில் பெரும்பாலான நிதி நிறுவனங்களின் பங்குத் தரகர்கள் சாத்தியமாகக் கூடிய நடப்புகளின் மூலம் லாபம் பார்ப்பதால் சாத்தியமில்லாத நிகழ்வுகள் வரும் பொழுது அவர்களுடைய பணயங்கள் மிகுந்த நஷ்டத்தை கொண்டு வரும் என்பதை விளக்கியிருக்கிறார். அந்த எண்ணத்தின் மூலம் 1987 இல் அமெரிக்கப் பங்குச் சந்தையின் சரிவில் நிறைய லாபம் செய்ததையும் தெரிவித்திருக்கிறார்.
12 . ஸ்மார்டேஸ்ட் கைஸ் இன் தி ரூம் (Smartest Guys In The Room )
பெதானி மக்லீன் எழுதிய இந்தப் புத்தகம் அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி முழுதாக இல்லை என்றாலும் அதில் புகழுள்ள மணியாகத் திகழ்ந்த என்றான் (Enron ) நிறுவனத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது. என்றான் இன் தலைமையில் உள்ளவர்களில் முக்கியமானவரான ஜெப்ப்ரி ச்கில்லிங் (Jeffrey Skilling ) என்றான்-ஐ நடத்திய விதம் அய்ன் ரண்ட்இன் அட்லஸ் ஷ்ரக்ட் கதையில் வரும் ஹான்க் ரியர்டேன் பாத்திரம் நிஜ வாழ்வில் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் தலைமையில் வந்தால் அதன் அழிவு எப்படி ஏற்படும் என்பதை நினைவூட்டுகிறது. சமீபத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் முதலீடு வங்கிகளின் நடத்தை புகழ் பெறுவதற்கு முன் என்றான்இன் நிதி உக்திகள் 10 வருடங்களுக்கு முன் வலம் வந்தன என்பதை நினைவூட்டுகிறது. என்றான் அழிந்த பின் அதனுடைய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சன் புகழின் உச்சியிலிருந்து சுவடு தெரியாமல் அழிந்து போனது போல் சமீப சம்பவங்களில் புகழ் பெற்ற முதலீடு வங்கிகளான லேஹ்மான் பிரதேர்ஸ் (Lehman Brothers ), பியர் ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns ), மெர்ரில் லின்ச் (Merrill Lynch ) புகழ் உச்சியிலிருந்து சுவடு தெரியாமல் அழிந்தன.

கெய்ன்ஸ்-உம் ஹயெக்-உம் தங்களது தோராயக்கருத்தை விவரிக்க ஒரு கானா நிகழ்படம் 


Copyright © 2010 Kunthavaiyin Kaathalan

Friday, January 29, 2010

Book of the Week

புத்தகம் : அட்லஸ் ஷ்ரக்ட்
வருடம் : 1957
ஆசிரியர் : அய்ன் ரண்ட்

கதைச் சுருக்கம் :
ஒரு காலத்தில் அமெரிக்காவில் முதலாளித்துவமும் பொதுவுடமையும் (capitalism and communism ) இரண்டு பொருளாதாரத் திட்டங்களாக எதிருக்கு எதிர் இருந்த பொழுது சொல்லபடுகின்ற கதை. முயற்சியும் திறமையும் கொண்ட தொழிலதிபர்கள் பலர் அரசாங்கத்தால் முடக்கப்பட்டு தங்களது வியாபாரத்தை விட்டு விட்டு மறைகின்றனர். இதைக் கண்டு அச்சுருகின்ற சில தொழிலதிபர்கள் அரசாங்கம்பால் சாய்கின்றனர். இவர்களில் ஜேம்ஸ் தாக்கர்ட், ஹொரேஸ் புச்பி மொவேன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மீதிய தொழிலதிபர்கள் (சிறிய கூட்டம்) அரசாங்கத்தை எதிர்த்து தங்களது திறமையையும் புத்தி கூர்மையையும்  மட்டும் நம்பி தங்கள் வியாபாரத்தை நடத்திச் செல்கின்றனர். இவர்களில் தக்னி தாக்கர்ட் (ஜேம்ஸ் தாக்கர்டின் தங்கை), ஹான்க் ரியர்டேன், பிரான்சிஸ்கோ அன்கோனியா குறிப்பிடத்தக்கவர்கள். அரசாங்கம் பொதுவுடமை  கொள்கைகளை பின்பற்றி மக்களின் தனிவுடமை உரிமைகளைப் பறித்து விடுகின்ற நேரத்தில் நாட்டின் நிலைமை மோசமாகிறது. அரசாங்கம் பக்கம் உள்ளவர்கள் செய்வதறியாது இருக்கையில் தொழிலதிபர்களின் தலைவனான ஜான் கல்ட் தனிவுடமையின் பெருமையையும் அதனால் மக்களுக்கு வரும் நன்மையையும் எடுத்துரைக்கிறான். தங்களைச் சுற்றி நடக்கின்ற அநியாயங்களை கண்டுக் கொதிப்படைகின்ற மக்கள் அரசாங்கத்தை வெறுத்து ஜான் கல்ட் தலைமையில் உள்ள தொழிலதிபர்களிடம் அதிகாரத்தை அளிக்கின்றனர்.

அலசல் :
அய்ன் ரண்ட் தனிவுடமைச் சிந்தனையின் தீவிர செயல்பாடான லிபர்டர்யநிசம் (libertarianism ) கடைபிடித்தவர். லிபர்டர்யநிசம் என்பது ஒரு பொருளாதாரத்தின் வெற்றிக்கு தனி மனிதப் பங்கே முழுதும் அவசியமானது என்றும் அரசாங்கத்தின் பங்கு அறவே இருக்கக் கூடாது என்பதும் ஆகும். அரசாங்கம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் சமுதாயத்தில் சட்ட ஒழுங்கு  நிலை நாட்டுவதற்கும் மட்டுமே வேண்டியது என்பதும் அதனுள் அடங்கும். தனி மனிதரின் புத்தியும் திறமையும் கடின உழைப்பும் பொருளாதாரத்தை வெற்றிப் பெறச் செய்யும் என்ற நம்பிக்கையும் அதனுள் அடங்கும்.
அய்ன் ரண்ட் அப்ஜெக்டிவிசம் (objectivism ) என்ற தத்துவத்தை உருவாக்கி அதனை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். அதன் பாதிப்பு இந்த கதை முழுதும் பரவி இருக்கிறது. அமெரிக்கப் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் டபிள்யு புஷ் 'நீங்கள் எங்களுக்குச் சகிதமாக இல்லையென்றால்  எங்களை எதிர்த்து நிற்கின்றீர்கள் (If you are not with us , you are against us )'  என்று சொன்னது அய்ன் ரண்டுக்குப் பிறகு 50 வருடம் கழித்து பின்பற்றுவதாக உள்ளது. 
இந்த கதையை கற்பனைச் சித்திரம் என்று சொல்வதற்குப் பதிலாக தனது சித்தாந்தத்தை   கதைப் பாத்திரங்களின் செயல்பாடுகளில் விவரித்திருகின்றார் என்று சொல்லலாம். இதனால் கதாப் பாத்திரங்கள் வாழ்க்கைப பற்றி படிப்பவர்களுக்கு நிறைய விவரம் அறியாமல் போகிறது. ஆனால், ஒவ்வொரு பாத்திரத்தின் பொருளாதார, தார்மீக, அறிவியல், பகுத்தறிவு மற்றும் மத நோக்கம் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியவருகிறது. அய்ன் ரண்டின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை இந்தக் கதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
'ஜான் கல்ட் என்பவன் யார்  ? (Who is John Galt ?)' என்ற கேள்வியின் மூலம் கதையின் பாத்திரங்கள் தங்களது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அப்ஜெக்டிவிசத்தின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரம் : தனிவுடமையையும் தனி மனித உரிமையும் போற்றினால் தான் மக்கள் வாழ்வு பயனுள்ளதாகவும் வாழத்தக்கதாகவும் இருக்கும். அரசாங்கமும் அதன் கொள்கைகளும் அதன் ஊழியர்களும் அதன்பாற் சாய்ந்த தொழிலதிபர்களும் விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் பதிப்பாசிரியர்களும் நீதிபதிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் மக்களின் பயனுள்ள பொருளாதார வாழ்கையை வீணடித்து நாசமாக்குகின்றனர். தனிவுடமையின் மூலம் ஒவ்வொரு குடிமகனு(ளு)ம் தனது மதிப்பை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வெளி உலகோடு பொருளாதாரம் செய்வார்கள். வியாபாரி தனது வியாபாரத்தில் புழங்கும் பொருட்களின் மதிப்பை அறிந்தவனா(ளா)ததால் அவனே (ளே) நாட்டு மக்களின் லட்சியம் ஆவான்(ள்).
தார்மீகம் : அவரவர் திறமைக்கும் புத்திகூர்மைக்கும் ஏற்ப அவர்களது வாழ்க்கை அமையும். திறமை குறைந்து உள்ளவன்(ள்) வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அவன்(ள்) சிறிய நேரத்தில் மேலும் திறமையும் புத்திகூர்மையும் உள்ளவனி (ளி)டம் தோற்றுப் போவான்(ள்). அரசாங்கம் திறமை அதிகம் இல்லாத மக்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவியும் பாதுகாப்பும் கொடுப்பதினால் அவர்கள் தங்கள் மதிப்பை அறியாமல் வாழ்கிறார்கள். தனது மதிப்பு அறிந்தும் அதனை மற்றவர் உதவியின்றியும் தயவு தாட்சிண்யம் இன்றியும் அடைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தனிவுடமைக் கொள்கைகளைத் தங்களது திறமையும் புத்திகூர்மையும் உழைப்பும் படைப்பாற்றலும் புதுமை படைக்கும் ஆற்றலும் மூலம் தார்மீக ரீதியில் நம்பி வாழ்கையை வாழ்கிறார்கள். அதனைக்  கடைபிடிக்காத மற்றவர்கள், வெற்றி பெற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் அட்டைகளாக கருதப்படுகிறார்கள்.
அறிவியல்/பகுத்தறிவு : கதையில் உள்ள பாத்திரங்கள் அறிவியலையும் பகுத்தறிவையும் வெவ்வேறு விதமாக அணுகுகிறார்கள். அரசாங்கம்பால் சார்ந்த விஞ்ஞானிகள் அறிவியலின்/பகுத்தறிவின் பயன் பொது மக்களைச் சாரும் என்றும் அவை இரண்டும் பொது மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர். தனிவுடமைப் போற்றும் விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் அறிவியலும் பகுத்தறிவும் தனி மனித உரிமைகள் என்றும் அவற்றின் மதிப்பு வியாபாரச் சந்தையில் என்ன விலை மெச்சுகிறதோ அதுவே உண்மையான விலை என்றும்  நம்புகின்றனர். இந்த கதையில் அப்ஜெக்டிவிசம் பின்பற்றுபவர்கள் அவை தான் தங்களது வாழ்கையின் வெற்றிக்குக் காரணம் என்று திடமாக நம்புகின்றனர். ஒரு பொருளோ எண்ணமோ திட்டமோ மக்களிடையே எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதன் மதிப்பு அறிவியலின் மூலமும் பகுத்தறிவின் மூலமும் அறிய முடியவில்லை என்றால் அது மதிப்பில்லாதது என்று நம்புகின்றனர். அறிவியலும் பகுத்தறிவும் மேல் உள்ள அதீத நம்பிக்கையினால் மதத்தை ஒரு தடைக்கல்லாகவும் மக்களின் வாழ்வை வீணடிக்கும் செயலாகவும் கருதுகின்றனர்.
மதம் : மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் மதம், மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாகக் கருதுகின்றனர். கதையின் பாத்திரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருப்பதால் கிருத்துவ மதத்தின் பலவீனங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான மதப் பிரிவுகள் பாலியல் உறவை, மகப்பேறு பெறுவதற்கன்றி, பாவமாகக் கருதுவதால் இந்தக் கதையில் அப்ஜெக்டிவிசம் கடைப்பிடிப்போர் மதத்தை வீணாகக் கருதுகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் உடம்பின் சக்தியையும் அழகையும் முழுமையாக அனுபவிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று நம்புகின்றனர். மேலும், அறிவியலையும் பகுத்தறிவையும் முடக்கும் சக்தியாகவும் பாலினப் பாரபட்சத்தை பரப்பும் சக்தியாகவும்  மதங்கள் செயல்படுவதால் அப்ஜெக்டிவிசம் பின்பற்றுவோர் அதனை தீய சக்தியாக பார்க்கின்றனர்.
அப்ஜெக்டிவிசத்தை கடைப்பிடிக்காதவர்கள் இந்த கதையில் வாழ்க்கையில் நோக்கமில்லாமல் வெற்றி பெறத் தெரியாமல் அரசியல் தலைவர்களுக்கும் தொழிர்ச் சங்கத் தலைவர்களுக்கும் கைக்கூலிகளாக வலம் வருகின்றனர்.
கதை, நேர்க்கோடு போல் சென்றாலும் அப்ஜெக்டிவிசம், அறிவியல், தனி மனித உரிமை மற்றும் பகுத்தறிவைப் போற்றியும் அரசாங்கம், ஊடகம், மதம் மற்றும் பொதுவுடமையை இழிவுபடுத்தியும் சொற்பொழிவுகள் நிறைய இருக்கின்றன. அதனால் படித்து முடிக்கும் பொது கதையின் முதலில் நிடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன.அமெரிக்காவில் நடக்கும் கதை என்றாலும் அதன் அரசியல் சாசனத்தைப் பற்றி அறியாமல் எழுதியது போல் தோன்றுகிறது. கதையில் வரும் நல்ல கதாபாத்திரங்கள் எல்லாம் சிரிக்காமல் வாழ்கையை மிகக் கறாறாக வாழ்கிறார்கள். மேலும், நல்லவர்கள் நிறைய பேர் தங்க நிற முடியும் நீல நிற கண்களும் (blond and blue eyed ) உடையவர்களாக இருக்கிறார்கள். கதை எழுதிய நேரத்தில் அமெரிக்காவின் குடிமக்கள் பெரும்பாலானோர் அவ்வாறு இருந்ததன் காரணமாக இருக்கலாம். ஆனால், கெட்டவர்களில் இவ்வாறு சொல்ல கூடியவர் எவரும் இல்லை.
பத்து வருடம் முன்னால் படித்து இருந்தால் இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கும். வியாபாரத்தையும் அறிவியலையும் பகுத்தறிவையும் போற்றி மதத்தையும் அரசாங்கத்தையும் சாடி எழுதப்பட்ட கதையை மிக்க ஆர்வத்துடன் படித்து அதனால் என் (அப்போதைய) நடத்தையை மாற்றி இருப்பேன். இப்போது படிக்கும் பொழுது கதையில் உள்ள பாத்திரங்கள் யதார்த்தத்துக்கு மாறாக நடப்பது போல் இருக்கின்றன. அதை உணர்ந்து அய்ன் ரண்ட் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மூலம் அந்த எண்ணத்தை விளக்கியிருக்கிறார். ஆனாலும் நல்லவர்கள் எல்லாம் எப்போதும் நல்லவர்களாகவும் கெட்டவர்கள் எல்லாம் எப்போதும் கெட்டவர்களாகவும் வருவது 1950 இலும் 1960 இலும் வந்த கருப்பு வெள்ளை தமிழ் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் போல இருக்கிறது. நேரம் இருந்தால் அட்லஸ் ஷ்ரக்ட் தமிழில் எடுக்கப்பட்டால் நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பது பற்றி எழுதலாம். அவரது பூர்விகமான ரஷ்யாவின் பொதுவுடைமை கொள்கைகளின் மேல் உள்ள வெறுப்பு இந்த கதையில் நன்றாகத் தெரிகிறது. நல்லவர்களின் நடுவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லாதது விசித்திரமாக இருக்கிறது. ஒரு நாட்டு மக்களின் தரத்தை அவர்களது அரசியல்வாதிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த காலத்தில் அமெரிக்காவில் அப்ஜெக்டிவிசத்தை ஒரு மதத்தின் முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் வலம் வரும் அரசியல்வாதிகளுக்கு அது ஏமாற்றமாக இருக்கும்.
அய்ன் ரண்ட் இந்தக் கதையில் அமெரிக்க மக்களின் பண்பையும் திறமையும் மிக மெலிவாக எடை போடுகிறார். அதுவும், கதை எழுதிய பொழுது அமெரிக்க உலகப் போரில் வெற்றிப் பெற்று உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நாட்டின் வெற்றிக்கு மக்களின் திறமையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை இந்த கதையில் இருந்து தெரிந்து கொள்ள இயலாது. பெரும்பாலான அமெரிக்க மக்களை முட்டாள்களாக பாவிக்கிறார். ஒரு சிறிய அமெரிக்கக் கூட்டம் திறமையும் புத்தி கூர்மையும் இருந்தாலும் எஞ்சிய குடிமக்களின் கையில் அவதிப்படுவதாகக் காண்பிப்பது கதையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்ஜெக்டிவிசத்திற்கு நல்ல விளம்பரமாக இல்லை.

Monday, January 25, 2010

Movie of the week

படம் : அவதார்
வருடம் : 2010
இயக்குனர் : ஜேம்ஸ் கேமரன்

கதைச் சுருக்கம் :
எதிர்காலத்தில் ஒரு வர்த்தக நிறுவனம் (RDA) அனப்டேனியம் (unobtanium) எனும் விலை மதிப்புள்ள உலோகத்திற்காக ஆல்பா சென்டுரி (Alpha Centauri) நட்சத்திர அமைப்பைச் சார்ந்த பண்டோரா (Pandora ) எனும் உலகைக் குறி வைக்கிறார்கள். பண்டோராவில் வசிக்கும் ந'வி (Navi) மக்கள் வாழும் பூமிக்கடியில் அனப்டேனியம் குவிந்து கிடப்பதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு RDA திட்டமிடுகிறார்கள். ந'வி மக்களை அறிவதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் RDA  நிறுவனம் தனது ஊழியர்களை பயன்படுத்துகிறது. விஞ்ஞானம் முலம் ஊழியர்கள் ந'வி மக்கள் போல் வேடம் கொண்டு அவர்களுடன்  பழகுகிறார்கள்.  ஊழியன் ஒருவன் இறந்து போகவே அவனது தம்பி, ஜேக் சல்லியை மாற்றாக அனுப்புகிறார்கள். ஜேக் சல்லியின் திறமையும் ஆர்வத்தையும் கண்டு அவனை ந'வியிடம் வேவு போகச் சொல்கிறார்கள். ஜேக் சல்லியின் மேல் முதலில் சந்தேகம் இருந்தாலும் ந-'வி மக்களில் ஒரு இனத்தின் இளவரசியான நெய்திரி சொல்லுக்கு இணங்க அவனை தங்களுக்குள் ஒருவனாக ஏற்கின்றனர். ஜேக் சல்லி தன் மேல் ந'-வி மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி அந்த உலகின் ரகசியங்களை RDA  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பகிர்ந்து கொள்கிறான். காலப்போக்கில் நெய்திரிக்கும் ஜேக் சல்லிக்கும் வளரும் காதலினால் அவன் ந'வி மக்கள் பக்கத்தைப் புரிந்து கொள்ள வருகிறான். RDA நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி இதை அறிந்து பண்டோராவை அழிக்க திட்டமிடுகிறான். இந்த சண்டையின் எந்த பக்கம் வெற்றி பெறுகிறது என்பதை மீதிக் கதை சொல்கிறது.

அலசல் :
படம் நிறைய நேரம் (2 மணி நேரம் 45 நிமிடம்) ஓடுகிறது. படம் நன்றாக இருந்தால் இரண்டே முக்கால் மணி நேரம் ஒரு பொருட்டாகத் தெரியாது. தமிழ் படத்தில் உள்ளது போல் பாட்டு டான்ஸ் இல்லை என்பதால் தியேட்டரில் கொஞ்சம் தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
படத்தில் கதையை விட ஸ்பெஷல் எபக்ட்ஸ் பிரம்மாண்டமாக இருக்கிறது. 3D இல் பார்த்ததால் நன்றாகவே இருந்தது. வேறு எங்கோப் படித்தது போல் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும்.
ஜேம்ஸ் கேமரன் படம் என்றால் புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அவருடைய இயக்கம் ஒரு விதத்தில் கமலஹாசனின் நடிப்பைப் போல் ஆகி விட்டது.  புதுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் கொண்டு கதையை கோட்டை விட்டு விட்டார்கள்.
படத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் என்றால் RDA நிறுவனத்தின் மேல்நிலை அதிகாரியான பார்கர் செல்ப்றிச் (ஜியோவன்னி ரிபிசி) தான். இந்த உலகத்தின் மோசமான நிலைமைக்கு காரணமாகச் சுட்டிக் காட்டப்படும் பணப் பேராசை கொண்ட வியாபாரியின் உருவத்தை நன்றாகக் கண் முன் நிறுத்தி இருக்கிறார். கடைசியில் அந்த பாத்திரத்தையும் ஜேம்ஸ் கேமரன் சொதப்புவது இந்த படத்தின் இறுதிச் சித்திரவதையாக அமைகிறது.
 படத்தில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காதது ந'வி மக்களின் சித்திரம் தான். இயற்கையோடு ஒன்றி வாழும் குழந்தைகள் போல் காட்டப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஜுரம் வரும். சளி வரும். ந'வி மக்களிடையே வாழும் பொது யாருக்கும் எவருக்கும் எப்போதும் உடம்புக்கு வருவதில்லை. பூமியிலிருந்து சென்ற படை அவர்களது ஆரோக்கியத்தின் ரகசியத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு மருந்தாக தங்கள் மக்களிடம் விற்றிருந்தால் அனப்டேனியத்தை விட நிறைய பணம் பண்ணியிருக்கலாம். அந்த   பாத்திரப் படைப்பின் ஒரு தீவிர செயல்பாடாக ந'வி மக்கள் மரத்தின் இலைக்குள் தூங்குகிறார்கள். பூமியில் மரத்தின் இலையில் தூங்கினால் கொசு கடிக்கும். ந'வி மக்களிடையே கொசு என்பதே இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். ந'வி மக்களின் பிணி எல்லாம் பூமியிலிருந்து சென்ற படை செலுத்தும் நவீன ஆயுதங்களால் வருகிறது. இயற்கையை மதித்து வாழ்பவர்களாக சொல்லப்பட்ட அவர்களுடைய கதை நவீன விஞ்ஞானத்தின் முகத்தில் கரி பூசுவது போல் இருக்கிறது. பூமியிலிருந்து சென்ற ஊழியர்கள் எந்த விஞ்ஞானத்தின் உதவி கொண்டு ந'வி மக்களிடையே உலவுகிறார்களோ அதன் பயனை மறந்து ந'வி மக்களின் கடவுளான எய்வாவிற்கு புகழாரம் சூட்டுகிறார்கள். கடவுளுக்கு புகழாரம் சூட்டுவதற்கு பதில் அறிவியலின் பயனை  ந'வி மக்களிடையே போதித்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். நவீன ஆயுதங்கள் ந'வி மக்களை சின்னாபின்னபடுத்தும்போது அடிபட்டவர்களை குணப்படுத்த விஞ்ஞானம் பயன்படும். மேலும் அந்த நவீன ஆயுதங்களை எதிர்கொள்ள பண்டோராவுக்கு ஏற்ற நவீன ஆயுதங்களை தயார் செய்யப் பயன்படும்.  கடைசி யுத்தத்திற்கு ஜேக் சல்லியின் தலைமையை ஏற்பதாகக் காண்பிப்பதன் மூலம் ந'வியின் விஞ்ஞான அறிவின்மையின் முடிவைக் காட்டியிருக்கிறார்கள்.

 இந்த படத்தின் மூலம் பணத்தாசையும் நவீன ஆயுதங்களின் மோகமும் இயற்கையை எப்படி அழிக்க முடியும் என்பதை காட்ட முயன்றிருக்கிறார்கள். கடைசியில், அதே பணத்தாசையும் நவீன ஆயுதங்களும் சில சமயம் இயற்கையை காக்கவும் பயன்படும் என்பதை சொல்ல மறந்து விட்டார்கள். ஒரு படத்திற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் எவ்வளவு முக்கியமோ கதையும் அந்த அளவு முக்கியம் என்பதை மறந்து விட்டார்கள்.

மாற்றுக் கதை :
RDA  நிறுவனம் தனது ஊழியர்களை ந'வி மக்களின் வேடத்தில் அலைய விடுவது போல் மற்றொரு நாட்டில் உள்ள நிறுவனம் தனது ஊழியர்களை ந'வி மக்களின் வேடத்தில் ஏவி விடுகிறது. படத்தின் இறுதியில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல்கள் மெய்நிகர் நிதர்சனத்தில் (virtual reality ) நடக்கிறது. ஒரு சிறிய தவறினால் இந்த தாக்குதல்கள் இரு நாடுகளுக்கு இடையே போராக உருவெடுக்கிறது.

Thursday, January 14, 2010

Movie of the week

படம் : யோஜிம்போ
வருடம் : 1961
இயக்குனர் : அகிரோ குரோசவா

கதை சுருக்கம் :
ஜப்பானில் ஒரு சிறிய கிராமம் இரண்டு ரவுடி கும்பலின்(ஒன்று - உஷிடோரா, மற்றொன்று - செய்பெய்) பிடியில் சிக்கியிருக்கிறது. அந்த ஊரில் உள்ள குடும்பங்களும் வியாபாரிகளும் இரண்டு கும்பல்களுக்கு பயந்து வெளியில் வர மறுக்கின்றனர். இரு கும்பல்களும் அந்த ஊரின் அரசு ஊழியர்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஒரு சமுராய் அந்த கிராமத்திற்கு வருகிறான். இந்த இரு கும்பல்களின் அட்டகாசத்தைப் பற்றிக் கேட்டு அதற்கு ஒரு முடிவு கட்ட திட்டமிடுகிறான். அவன் நினைத்ததை அடைகின்றானா இல்லையா என்பதை படம் காட்டுகிறது.

அலசல் :
படத்தின் ஆரம்பத்தில் சமுராயின் அணுகுமுறையும் அந்த கிராமத்தின் அவல நிலைமையும் நன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவனுடைய நடை அவன் எதிரே எந்த தடங்கல் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை காண்பிக்கிறது. படத்தின் இறுதிக் கட்டங்களில் அந்த தைரியத்தின் மூலகாரணம் தெரிய வருகிறது. வழியில் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் சண்டையும் ஊருக்குள் சமுரைக்குத் தண்ணீர் தரும் கணவன் மனைவியின் நடப்பும் மூலம் அந்த ஊரில் உள்ளவர்களின் நிலை நன்றாகத் தெரிகிறது. அந்த ஊரின் உள்ள உணவகத்தின் உரிமையாளரின் வறுமையும் அவனுடைய அண்டை வீட்டில் உள்ள சவப்பெட்டி உரிமையாளரின் செழுமையும் ரவுடி கும்பல்களின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. வெவ்வேறு நடப்புகள் மூலம் அந்த ஊரின் மோசமான நிலைமை நமக்குத் தெரிய வருகிறது.
இரண்டு ரவுடி கும்பலிடம் நேரே மோதாமல், புத்திசாலித்தனமாக அவர்களிடம் மோதுவது நன்றாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களை விடச் சமுராய் வாள் வீச்சில் திறமைசாலி ஆனதால் தன்னுடைய வீரத்தை அவர்களுக்கு பேரம் பேசுகிறான். இதன் மூலம் அவனால் இரண்டு கும்பல்களின் பலத்தை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், இரண்டு கும்பல்களுக்கும் காசின் மேல் உள்ள ஆசை அவனுக்கு தெரிகிறது. (ஆங்கிலத்தில்) காதலிலும் போரிலும் எதுவும் நியாயம் என்பதைக் கொள்கையாகக் கொள்கிறான். 
அவனுடைய திட்டத்தின் வெற்றிக்கு அவனுடைய வாள் வீச்சுத் திறமை அடித்தளமாக அமைகிறது. அந்த திட்டத்தில் மண் போடுவது போல் ஒரு கும்பலின் தலைவனின் தம்பி (மற்றொரு சமுராய்)ஒரு துப்பாக்கியை ஊருக்குள் கொண்டு வருகிறான். (ஆங்கிலத்தில்) குருடர்கள் நாட்டில் ஒற்றைக் கண்ணன் அரசன் போல், துப்பாக்கி உள்ள கும்பலின் கை ஓங்குகிறது. துப்பாக்கிக்கு எதிராக வாள் வீச்சு எடுபடாததால் வாள் வீசும் சமுராயின் திட்டம் தடம் புரள்கிறது. வாள் தன்னிடம் இருந்து போன பின் தன்னுடைய தீரத்தைப் பயன்படுத்துகிறான்.துப்பாக்கி உள்ள சமுராய் தன் அண்ணனுக்காக, அவன் செய்யும் அந்நியாயத்தைப் பொறுத்துக் கொள்கிறான். வாள் வீசும் சமுராய் நியாத்திற்காக தன்னை பணயமாக வைக்கிறான்.இரண்டு சமுரைக்கிடையே உள்ள வித்தியாசத்தை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லியிருக்கிறார்கள்.  சமுராய் குறியீட்டின் பெருமையை இந்த படத்தின் மூலம் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.