படம் : ஆயிரத்தில் ஒருவன்
இயக்கியவர் : செல்வராகவன்
வருடம் : 2010
கதைச் சுருக்கம் :
1279 -இல் சோழ நாட்டு மன்னன் பாண்டியர்களின் கையில் தோல்வியுற்று நாட்டை இழந்து ஓடுகையில் தனது வம்சம் வருங்காலத்தில் தழைக்க சில மக்களையும் சோழ இளவரசனையும் ஒரு ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கிறான். காலங்காலமாக சோழ மக்களும் இளவரசனும் அந்த இடத்தில் வளர்ந்து வருகின்றனர் . அந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளைத் (கடல், நரமாமிசம், வீரம், பாம்பு, பசி, புதை மணல், கிராமம் ) தாண்ட வேண்டும். பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை அடைய முயன்று தோல்வி அடைந்தனர். சந்திரமௌலி (பிரதாப் போத்தன்) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இவ்வாறு மறைந்தவுடன் அவரை மீட்டு வர இந்திய அரசு அனிதா பாண்டியன் (ரீமா சென் ) தலைமையில் ஒரு குழுவை அனுப்புகிறது. இந்த குழுவிற்கு மத்திய அமைச்சர் வீரபாண்டியனின் முழு ஆதரவு அளிக்கப்படுகிறது. அவருக்குத் துணையாக சந்திரமௌலி -இன் மகளான லாவண்யாவும் (மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் - ஆண்ட்ரியா ), ரவிசேகரனும் (குழுவின் பாதுகாப்பிற்கான காவல் படைத் தலைவன் - அழகம் பெருமாள் ), முத்துவும் ( குழுவின் கூலிப் பட்டாளத்தின் தலைவன் - கார்த்தி ) செல்கிறார்கள். அனைத்துத் தடைகளையும் கடந்து அனிதா, லாவண்யா மற்றும் முத்து சோழ மன்னன் (பார்த்திபன்) இருக்கின்ற இடத்தை அடைகிறார்கள். முதலில் மூவரையும் நரபலிக்காக சிறைப்படுத்தினாலும், அனிதா சோழ மன்னனிடம் முறையிட்டு அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறாள். அவளை நம்பி சோழ மன்னன் தனது வம்சத்திற்கு விடிவுகாலம் வந்து விட்டது என்று நம்பி சோழ அரசின் தலைநகரமான தஞ்சாவூருக்குச் செல்லத் தயாராகிறான். சோழ நாட்டு வரலாற்றில் விடிவுகாலத்தின் அறிகுறிகள் சொல்லப் பட்டிருந்தாலும் அவை எதுவும் நடக்காத பட்சத்தில் சோழ மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், தங்களது அரசன் விடிவுகாலம் வந்து விட்டது என்று கூறுவதனால் அவனை நம்புகின்றனர். இறுதியில், அனிதா-வால் ஏமாற்றப்பட்டு சோழ மன்னனும் லாவண்யாவும், முத்துவும், சோழ மக்களும் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டு, எஞ்சிய மக்கள் இந்திய அரசால் சிறைப்படுத்தப் படுகின்றனர். தனது மக்களின் நிலைமையை பொறுத்துக்குள்ள முடியாமல் சோழ மன்னன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த அமளியில் சோழ இளவரசனுடன் முத்து காட்டிற்குள் தப்பிச் சென்று விடுகிறான்.
அலசல் :
இந்த படத்தை இரு படங்களாகப் பார்க்கலாம். முதல் பாதியில் அனிதா தலைமையில் தொல் பொருள் ஆராய்ச்சிக் குழு பல தடைகளைத் தாண்டி சோழ மன்னன் இருக்கும் இடத்தை அடைகின்றது. இரண்டாவது பாதியில், சோழ மன்னனிடமும் அந்நாட்டு மக்களிடமும் அனிதா, லாவண்யா மற்றும் முத்து மாட்டிக் கொண்டதன் விளைவுகளை விவரிக்கின்றது.
முதல் பகுதி பல ஹாலிவுட் படங்களின் நகல் போல் இருக்கிறது. க்ளடியாடோர் (Gladiator ), இன்டியானா ஜோன்ஸ் (Indiana Jones ) மற்றும் பல படங்களில் இருந்து தாராளமாக கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ஸ்பெஷல் எபக்ட்ஸ் (special effects ) மீது நிறைய கவனம் செலுத்தாதனால் அவை நன்றாக இல்லை. பார்த்தவுடன் ஸ்பெஷல் எபக்ட்ஸ் தான் என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. முதல் பாதியில் அனிதா, லாவண்யா மற்றும் முத்து ஆகியவர்களின் பாத்திரங்களை நன்றாக செதுக்கி இருக்கிறார்கள். முதல் பாதியின் இறுதியில் இந்த படத்தை ஏண்டா எடுத்தோம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. மற்ற செல்வராகவனின் படங்கள் போல இந்த படத்திலும் கதை நாயகன் மற்றும் நாயகிகள் பாத்திரங்கள் அவற்றின் இலக்கணத்தை தகர்த்து எறிகின்றன. மூன்று பாத்திரங்களும் படத்தில் முத்து சொல்வது போல் 'பேசினா கூவ நாத்தம் நாறுது' போல் நடந்து கொள்கின்றனர். இந்தப் பகுதியில் ஒளிப்பதிவும் இந்த காலப் படம் போல் இருக்கிறது.
இரண்டாம் பகுதியில் கதை பெரும்பாலும் இருட்டிலும் மிக வேகமாக நகரும் கேமரா மூலமாகவும் எடுக்கப்படிருக்கிறது. செல்வராகவன் இந்தப் பாதியை படமாக எடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் வெளிச்சம் காட்டும் போது, சோழ மன்னனின் மலைக்குகையும் சரி, அவனைச் சுற்றியிருக்கும் மக்களின் உடையும் நடையும் நன்றாக இருக்கிறது. இந்தப் பகுதியில் படத்தின் உள்ள முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்க்காரணமும் கதையின் போக்கும் தெளிவடைகின்றது.
செல்வராகவன் படத்தின் இரண்டாம் பாதியை கல்கியின் பொன்னியின் செல்வன் கதையின் பாத்திரங்களைப் பயன்படுத்தி சொல்லி இருக்கிறார். பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களும் இந்த கதையில் வரும் பாத்திரங்களுக்கும் என்னுடைய ஓப்பீடு :
அனிதா - நந்தினி
ரவிசேகரன் - ரவிதாசன்
முத்து - வந்தியத்தேவன்
சோழ மன்னன் - ஆதித்த கரிகாலன்
லாவண்யா - குந்தவை
அமைச்சர் வீரபாண்டியன் - வீரபாண்டியன்
சோழ மன்னரின் அமைச்சர் - பெரிய பழுவேட்டரையர்
தொல் பொருள் குழுவின் வழிகாட்டி - பூங்குழலி (??? )
கல்கியின் கதையில் சோழர்கள் நல்லவர்களாகவும் பாண்டியர்கள் கெட்டவர்களாகவும் வருகின்றனர். அந்த கதை எழுதிய காலத்திற்கேற்ப (1940 - 1960 ) நல்லவர்கள் (சோழர்கள்) கெட்டவர்களை (பாண்டியர்கள்) வென்றார்கள். அந்த காலக் கட்டத்தில் தமிழ் கலாச்சாரத்தில் நன்மையே வெல்லும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக பொன்னியின் செல்வன் அமைந்தது. சுதந்திரம் அடைந்த இந்திய நாட்டில் பொன்னியின் செல்வன் கதை தமிழ் கலாச்சாரத்தின் நன்மையைப் போற்றியது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிய நிலைமையில், தமிழ் கலாச்சாரத்தின் நிரந்தர நன்மை இந்த படத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. அவ்வாறு பார்த்தால், சோழ மன்னன் தனது மக்களிடம் நடந்து கொள்ளும் விதமும் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களின் நடத்தையும் இன்றைய தமிழ் கலாச்சாரத்தைக் காட்டுகின்றன. மேலும், தமிழ் இலக்கியத்தில் பொன்னியின் செல்வனின் மூலம் உருவாக்கப்பட்ட சோழர்கள் நல்லவர்கள், பாண்டியர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இந்த படத்தில் அடக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மன்னர்கள் நடை உடை பாவனையும் இந்த படத்தின் மூலம் யதார்த்தப்படுத்தபட்டிருக்கின்றன. தமிழ் மன்னர்கள் என்றால் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி போல் நடை உடையிலும் எஸ் எஸ் ஆர் போல் பேச்சிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படத்தில் கடைப்பிடிக்கவில்லை. காலங்காலமாக தமிழ் படங்களில் வரும் தமிழ் மன்னர்கள் திராவிட கலாச்சாரத்தைப் பின்பற்றி அதன் அரசியல் எண்ணங்களுக்கு ஒரு வாகனமாக இருந்திருக்கிறார்கள். இந்த படத்தில், அதே திராவிட இனத்தில் வரும் முத்து பாத்திரம் சாதாரணமான தமிழனுடைய நற்குணங்களும் கெட்ட குணங்களும் உடையவனாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் சோழ இளவரசனின் காப்பாளனாக ஆகிறான். இதற்குப் பிறகு, சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் போன்றோர்கள் தமிழ் மன்னர்கள் போல் வேடம் போடுவதன் மூலம் தமிழ் நாட்டு அரசியலில் நுழையலாம் என்ற நிலைமை மாறலாம்.
முத்து அனிதா மற்றும் லாவண்யாவிடம் இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் நடந்து கொள்ளும் முறை பொன்னின் செல்வனில் வந்தியத்தேவன் நந்தினி இடமும் குந்தவை இடமும் 1940 - 1960 இன் தமிழ் கலாச்சாரதிர்கேற்ப நடந்து கொள்வது போல் இருக்கிறது.
படத்தில், கார்த்தி, ரீமா சென் மற்றும் பார்த்திபன் நன்றாக செய்திருக்கிறார்கள். இந்த மூவரும் இரண்டாம் பாதியில் பொன்னியின் செல்வனில் வரும் கதாப்பாத்திரங்கள் போல் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா சொதப்பியிருக்கிறார். நவீன தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பெண்ணின் பாத்திரத்திலிருந்து அவரால் வெளியில் வர முடியவில்லை.