கானல் நீரான ஓய்வூதியம்

சுருக்கம்:
1990-களில், இந்தியா-வில் சிட் ஃபண்ட்களில் முதலீடுச் செய்தப் பணத்தைப் பலர் இழந்தனர். அன்றையக் காலக்கட்டத்தில், சிட் ஃபண்ட்களில் பண முதலீடுச் செய்வதுப் புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை. இன்று, சிட் ஃபண்ட்களில் பண முதலீடுச் செய்பவர்களின் குறிக்கோளைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. இந்தியா-வின் பொருளாதார வீக்கத்தின் விளைவால் தான் மக்கள் சிட் ஃபண்ட்களில் பண முதலீடுச் செய்தக் காரணத்தை அரசியல் தலைவர்கள் ஒருப் பொருட்டாகக் கருதவில்லை. அமெரிக்கா-வில் முதலில் வந்து இறங்கியப் பொழுது, அங்கும் தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு முறைகளைக் கவனிக்க முடிந்தது. அமெரிக்கா-வில் உள்ளக் கடைகளில் மற்ற இந்தியர்களைச் சந்தித்தப் பொழுது, அவர்களில் சிலர் ஆம்வே நிறுவனத்திற்குள் சேர்க்க முயன்றனர். ஆம்வே கருத்தரங்கில் பங்குக் கொண்டப் பொழுது அது பயனற்றதாக இருந்ததால் நன்றாக உறங்கி விட்டேன்.ஆம்வே நிறுவனம் தனி மனிதர்களின் வர்த்தக முயற்சிகள் மூலம் அவர்கள் பணக்காரர்கள் ஆகலாம் என்று வாக்குறுதி அளித்தாலும், அந்த நிறுவனத்தின் மேல்தட்டு அதிகாரிகள் பெரும்பாலும் அந்தச் செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.
அமெரிக்கா-வில் வளர்ந்து வரும் ஊதிய வேறுபாடுகளினால்,  கீழ் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் ஊதிய வளர்ச்சியும் சமூக நலத் திட்டங்களும் குறைந்திருக்கின்றன. கீழ் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், வேலையில் இருந்து ஓய்வு எடுக்கும் நேரம் வரும் பொழுது, தங்களுடைய வருங்காலத்திற்கு வேண்டியப் பணம் இல்லாததால், அதனை மேம்படுத்த நிதித் திரட்டும் முயற்சிகளில் இறங்குகின்றனர். அதற்காக, பல நிதி நிறுவனங்கள் நிதிக் கருவிகளை விற்கிறார்கள். ஆனால், அவர்கள் அளிக்கும் முதலீட்டுக் கருவிகள் மக்களின் செல்வச் செழிப்பை வளர்ப்பதற்குப் பதில் அவற்றை அழிக்கின்றன. இந்தப் புத்தகம், அமெரிக்க மக்களின் குறைந்த நிதி நிலைக்கு ஒட்டு மொத்தக் காரணமும் அவர்கள் மேல் இல்லை என்று விளக்குகிறது. ஊதிய வளர்ச்சிக் குறைவாகவும், ஊதிய வேறுபாடுகள் அதிகமாகவும், சமூக நலத் திட்டங்கள் மலிந்தும் இருக்கும் சூழ்நிலையில், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் செல்வச் செழிப்பு வளர்வதற்குரியச் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைந்து இருக்கின்றன. அமெரிக்கா-வில் மக்களின் தனிப்பட்ட முயற்சியால் தான் நிதி நிலைமையை மேம்படுத்த முடியும் என்றத் திடமான நம்பிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டணங்கள் மற்றும் கமிஷன்கள் மூலம் வருவாயை அதிகரிக்கின்றன. அதனால், அமெரிக்கா-வில் உள்ள மக்களின் நிதி நிலைமையை மேம்படுத்த எடுக்க வேண்டியக் கூட்டு முயற்சிகளுக்கு உதவி அளிக்காமல் அங்குள்ளச் சமூகம் ஒதுங்கி நிற்கிறது. நிதி நிறுவனங்கள், காப்பீடு, பங்குச் சந்தை மற்றும் மனை வர்த்தகங்களில் முதலீடுச் செய்வதன் மூலம் மக்களின் நிதி நிலைமை மேம்படும் என்று வாக்களிப்பதை இந்தப் புத்தகம் அலசி ஆராய்கிறது.

அலசல்:
அமெரிக்கா-வில் தனி மனித நிதிய நிலைமையை மேம்படுத்தும் நிறுவனங்கள் வருடா வருடம் வெகுவாக வளர்ந்துக் கொண்டு வருகின்றன. டேவ் ராம்ஸி, ஸூஸி ஓர்மன் போன்றவர்கள் அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அளிக்கும் பரிந்துரைகளில், தனி மனிதப் பொறுப்புணர்ச்சியால் தான் அது முடியும்  என்றச் செய்தியைப் பரப்புவதன் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கின்றனர்.
அமெரிக்கா-வில் வருமான வேறுபாடுகள் வளர்ந்து வரும் அதே நேரத்தில், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும் பரிந்துரைகளை வழங்கும் குருமார்களும் இணைய தளங்களும் பிரபலமாகத் தொடங்கின. ஊதிய வேறுபாடுகளின் வளர்ச்சி, அமெரிக்கா-வில் உள்ள அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலைமையை முன்னேற்றும் வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவரவர் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு தனிப்பட்ட நபர்களேப் பொறுப்பு என்று அணுகுவதால், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது - தங்களது ஊதியம் குறைவாக இருப்பதால், அத்தியாவசியச் செலவுகளுக்குப் பிறகுப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்வதுக் கடினமாக உள்ளது. ரானல்ட் ரேகன் ஜனாதிபதியானவுடன், அமெரிக்க சமூகத்தில் கூட்டுறவு நோக்கங்கள் சிதையத் தொடங்கின. அதே நேரத்தில், தனி மனித முயற்சிகள் வாழ்க்கையின் வெற்றிக்குப் பிரதானமாகக் கருதப்பட ஆரம்பித்தன. தனி மனித முயற்சியால் தான் நிதி நிலைமையை முன்னேற்ற முடியும் என்ற அணுகுமுறை, வீடு, மருத்துவம் மற்றும் கல்விக்கானச் செலவுகள் வெகு வேகமாக அதிகரிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஊதிய உயர்வு குறைந்ததையும் ஒருப் பொருட்டாகக் கருதவில்லை. சமூகத்தில் அனைவரும் ஒன்றுக் கூடிச் சரிச் செய்ய வேண்டிய நிதி நிலைமை வேறுபாடுகளைத் தனி மனித முயற்சியால் தான் அகற்ற முடியும் என்றக் கருத்து மேலோங்கியது. இதனால், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வறுமை நிலைக்கு அவர்களேக் காரணம் என்ற நம்பிக்கையும் பரவ ஆரம்பித்தது. 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் விளைவாக, அமெரிக்கா-வில் உள்ள அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், தங்களின் சுய முயற்சியால் எவ்வளவுக் கடினமாக முயன்றாலும், எதிர்பாராத வேலை இழப்பாலோ தீவிரமான உடல் நலக் கோளாறினாலோ நிகழும் பொருளாதாரப் பின்னடைவில் இருந்துத் தப்ப முடியாது என்ற முடிவிற்கு வந்தனர். 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குப் பின், நிதி நிலைமையை மேம்படுத்தும் நிதிக் கருவிகளை விற்றக் குருமார்கள், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்குத் தாங்கள் அளித்த அறிவுரைகள் தவறானது என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. பங்குச் சந்தையும் மனை வாங்கி விற்கும் சந்தையிலும் மக்களை முதலீடுச் செய்யத் தூண்டிய இந்தக் குருமார்கள், அந்தச் சந்தைகள் வளர்ச்சிக் குன்ற ஆரம்பித்தவுடன், அதன் விளைவுகளைச் சிறுமைப்படுத்தினர். அவர்களின் போதனைகளைக் கடைப்பிடித்துத் தங்களது வாழ்க்கைச் சேமிப்புகளை இழந்த மக்களுக்கு அவர்கள் ஆறுதல் அளிக்கவில்லை. இன்று, தனி மனித நிதி நிலையை மேம்படுத்தும் தொழிலில் உள்ள குருமார்களும் ஒட்டு மொத்த நிதித் துறையும், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு நிதி மற்றும் முதலீடுகளைப் பற்றியப் பாடத் திட்டங்களை ஊக்குவிக்கின்றனர். தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் தொழிலில் உள்ள குருமார்களும் நிதி நிறுவனங்களும் அளிக்கும் பரிந்துரைகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது - அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அவர்கள் அளிக்கும் போதனைகள் சரியானதாக இருந்தால், அவற்றைக் கடைப்பிடிக்கும் மக்கள் பண இழப்பைச் சந்திக்காமல் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக இருப்பதை நிறுத்தி விடுவார்கள். தங்களுடையத் தொழிலின் அடித்தளம் பலவீனமாக இருப்பதை மக்கள் கவனிக்கக் கூடாது என்பதற்காக, நிதி நிறுவனங்களும் குருமார்களும் அதிகாரத் தோரணையோடுப் போதிக்கின்றனர். அதை நம்பி, அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தங்களுடைய ஓய்வுக் காலத்திற்குத் தேவையானப் பணத்தை அவர்களிடம் கொடுக்கின்றனர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்,
அமெரிக்க மக்களின் வருங்கால நிதி நிலைமை மோசமானதற்கு, அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் பணப் பழக்க வழக்கங்களைக் குறைக் கூறாமல், ஒட்டு மொத்தச் சமூகத்தின் மேல் பழிச் சுமத்துகிறார். குறைந்து வரும் ஊதிய உயர்வு, கூடி வரும் வருமான வேறுபாடுகள் மற்றும் சமூக நலத் திட்டங்களின் பலவீனமாக இருக்கும் சூழ்நிலையில், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலைமை வளரும் என்று நினைப்பதுப் பகல் கனவுக் காண்பதற்கு ஒத்தானது என்று ஆசிரியர் கூறுகிறார். அமெரிக்கா-வின் அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தனி மனித முயற்சியால் நிதி நிலைமையை மேம்படுத்துவதை நிதி நிறுவனங்களும் குருமார்களும் ஏக மனதாக ஊக்குவிக்கின்றனர் - பங்குச் சந்தை, மனைச் சந்தை மற்றும் காப்பீட்டுச் சந்தையில் முதலீடுச் செய்வதற்கு, இந்தக் குருமார்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அந்த வருவாயைக் குறைக்காமல் இருக்கும் பொருட்டு, சமூகத்தைச் சார்ந்தக் காரணிகளைப் புறக்கணிக்கின்றனர். இந்தக் குருமார்களும் நிதி நிறுவனங்களும் அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடம் பணத்தை அதிகமாகச் செலவுச் செய்யக் கூடாது என்றுக் கூறினாலும், தங்களுடைய நிதிக் கருவிகளையும் சேவைகளையும் வாங்குவதற்குப் பணச் செலவுத் தடைகள் எதுவும் விதிப்பதில்லை.
பங்குச் சந்தையில் பண முதலீடுச் செய்தால், இரட்டிப்பாக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கைப் பரவலாக இருக்கிறது - 1927-ஆம் ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரை எஸ் ஆண்ட் பி 500 பங்குச் சந்தை வருடத்திற்குச் சராசரி 9.75% வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அதேப் பங்குச் சந்தையில் 1999-ஆம் ஆண்டில் இருந்து 2009-ஆம் ஆண்டிற்குள் பண முதலீடுச் செய்தவர்களுக்கு, வருடத்திற்கு சராசரி 0.5% பின்னடைவு நிகழ்ந்தது. இதனால், தனிமனித நிதி நிலையை மேம்படுத்தும் தொழில் நிபுணர்களிடையேப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்வதன் பலனைப் பற்றிக் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. 1981-ஆம் ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரை, நிதிப் பத்திரங்கள் பங்குகளை விட 1% கூடுதல் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், பங்குச் சந்தையை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருப்பதனால், அமெரிக்க மக்கள் பெரும்பாலும் தங்களதுச் செல்வத்தைப் பங்குகளில் முதலீடுச் செய்கின்றனர். 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குப் பின், அமெரிக்க மக்களிடையேப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்யப்படும் பணம், பாதுகாப்பாக இருக்காது என்ற ஞானோதயம் மலர்ந்துள்ளது. கடந்தச் சிலக் காலமாக, ஓய்வுக் காலத்தில் சேமிக்க வேண்டியப் பணத்தை ஓய்வூதியத்திற்குப் பதில் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடுச் செய்யும் போக்கு, ஓய்வுக் காலத்தில் ஏற்படும் நிதி நிபந்தனைகளை நிறுவனங்களிடம் இருந்து தொழிலாளிகளின் தலையில் தள்ளி இருக்கிறது. 1980-களில், அமெரிக்க மக்களின் சேமிப்பு அளவை அதிகரிக்க அமெரிக்கா-வின் காங்கிரஸ் முயன்றப் பொழுது, 401 (கே) மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற நிதிக் கருவிகளை பலப்படுத்துவதற்குப் பதிலாக காலங்காலமாக நன்றாகச் செயல்பட்டு வரும் ஓய்வூதியங்களின் மேல் செலுத்துமாறு தெரெசா கிலார்டூச்சி போன்ற
விமர்சனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தெரெசா கிலார்டூச்சி அன்று 401 (கெ) மற்றும் ஐ.ஆர்.ஏ பற்றி விடுத்த எச்சரிக்கை இன்று மெய்யாக்கப்பட்டு விட்டது - வேலை ஓய்வுக்காலத்தை நெருங்கும் சமயத்தில், சராசரி அமெரிக்கர்களின் பண இருப்பு மிகக் குறைவாக இருக்கிறது. 401 (கெ) மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வூதியக் கருவிகள், பங்குச் சந்தையின் வேகமான வளர்ச்சியின் காரணமாக அதிக லாபத்தை அளித்தாலும், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் ஊதிய உயர்வுத் தேக்கமும் வேலை வாய்ப்பின் குறைபாடும் அந்தக் கருவிகளில் அதிக அளவில் பணத்தை முதலீடுச் செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. 1880-களில், ஜெர்மனியின் தலைவரான ஆட்டோ வான் பிஸ்மார்க், தொழில் புரட்சியின் விளைவாகத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்வுகளைச் சமாளிக்க,  ஓய்வு ஊதியத் திட்டத்தை அந்த நாட்டில் உருவாக்கினார். அதனை அடுத்து, அமெரிக்கா-வின் ஜனாதிபதியான எஃப்.டி.ஆர், 1930-களில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்கா-வில் உருவாக்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா-வின் பொருளாதாரம் அதிவேகமான வளர்ச்சிப் பாதையில் சென்றதனால், அனைத்து மக்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டமும் ஓய்வு ஊதியமும் தாராளமாக வழங்கப்பட்டன. இன்று பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகளான ஐ.ஆர்.ஏ மற்றும் 401 (கெ), ஆரம்பக் காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும் ஓய்வு ஊதியத்தையும் தாண்டி, கூடுதலாக ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு உருவாக்கப்பட்டன. ஐ.ஆர்.ஏ, ஓய்வு ஊதியம் அல்லாத தனியார் நிறுவனங்களில், அங்குள்ளத் தொழிலாளிகளுக்கு உதவியளிக்கும் நிதிக் கருவியாக உருவாக்கப்பட்டது. 401(கெ), 1981-ஆம் ஆண்டில், சில நிறுவனங்களில் வேலைச் செய்த உயர் மட்ட அதிகாரிகளுக்குள் லாபத்தைப் பங்குப் போட்டுக் கொள்ளும் திட்டமாக உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தையைச் சார்ந்த இந்த இருக் கருவிகளையும் பயன்படுத்தி காலங்காலமாக இருந்து வந்த ஓய்வு ஊதியத்தை ஒட்டு மொத்தமாக அகற்றலாம் என்பதை அறிய வந்தவுடன், பெரும்பாலான நிறுவனங்கள் அந்தப் பாதையில் செல்ல ஆரம்பித்தன. அப்பொழுது, அமெரிக்கா-வின் பங்குச் சந்தை, நீண்டக் கால வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்ல ஆரம்பித்ததனால், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பங்குச் சந்தையைச் சார்ந்த தங்களது ஓய்வு ஊதியக் கருவிகளின் மதிப்பு வேகமாக அதிகரிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பங்குச் சந்தை மேலும் மேலும் வேகமாக வளர, அமெரிக்க மக்கள், பங்குகளின் மதிப்பு எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேப் போகும் என்றப் பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் மகிழ்ச்சியில் திளைத்தனர். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் காரணமாக அமெரிக்க மக்களின் ஓய்வு ஊதிய நிதியில் இருந்து 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பு காற்றில் கரைந்தது. பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகளை நிர்வகிக்க விதிக்கப்படும் கட்டணத்தின் மூலம் நிதி நிறுவனங்கள் அதிக அளவு லாபம் சம்பாதித்துள்ளன. அவர்கள் வசூலிக்கும் கட்டணத்தின் உள்கட்டமைப்பை முதலீட்டாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயம் இல்லாததால், தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் அந்தக் கட்டணத்தை விதிக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸ்-இல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு பணம் அளித்ததன் விளைவால், சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, நிதி நிறுவனங்கள் அமெரிக்க மக்களின் ஓய்வு ஊதியத்தைச் சரமாரியாகக் கொள்ளையடிக்கின்றன. இன்றையக் காலத்தில், மக்களுக்கு பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகளைச் சுலபமாக்கும் பொருட்டு, புதிய வகை நிதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள், நிதி நிறுவனங்கள் கொக்கரிப்பதுப் போல், அதிக அளவில் லாபம் சம்பாதிக்காமல், நிதி நிறுவனங்களுக்கானக் கட்டணங்களை அதிகமாக்குகின்றன. பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகளைப் பயன்படுத்துமாறு மக்களை ஊக்குவிக்க, பலத் தனியார் நிறுவனங்களில் உள்ளத் தொழிலாளர்களை அந்தக் கருவிகளில் அவர்களைக் கேட்காமலேச் சேர்த்து விடும் பழக்கமும் பரவலாகி வருகிறது. பொதுவாகத், தொழிலாளிகளின் ஊதியத்தில் இருந்து 3% ஆக, பங்குச் சந்தைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகளில் முதலீடுச் செய்யும் அளவை தனியார் நிறுவனங்களில் உள்ள மனித வளத் துறை நிபுணர்கள் நிர்ணயிக்கின்றனர். ஆனால், மக்களின் ஓய்வுக் காலத்தில் நிதிச் சங்கடம் இல்லாமல் இருப்பதற்கு, ஊதியத்தில் இருந்து 15% அளவுத் தேவைப்படுகிறது. பங்குச் சந்தையைச் சார்ந்த ஓய்வு ஊதியக் கருவிகள் செம்மையாக வேலைச் செய்வதற்கு, மக்கள், மிகச் சிறந்தக் கட்டுப்பாட்டுடன் முதலீடுச் செய்ய வேண்டும். மேலும், அவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ச்சியளிக்கும் சோக நிகழ்ச்சிகள் (வேலை பறி போவது, உடல் நலம் குன்றுவது, விவாகரத்து) எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். தங்களுடைய ஊதியத்தில் இருந்து அதிக அளவுப் பணமும், சமயோசிதமாகப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்யக் கூடிய ஞானமும் இருக்க வேண்டும்.
நாளிதழ்களில், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் கட்டுரைகளை முதலில் எஸ்.எஃப்.போர்ட்டர் ஆகஸ்ட் 1935-ஆம் ஆண்டில் நியூ யார்க் போஸ்ட்-இல் எழுதினார். அவரது அசல் பெயர் ஸரியான்னி "ஸில்வியா" ஃபெல்ட்மென்.  அவர் இந்தக் கட்டுரைகளை எழுதுவதற்கு முன்னர், நாளிதழ்களில் அளிக்கப்படும் நிதி நிலைமையை மேம்படுத்தும் பரிந்துரைகள், பெரும்பாலும் செல்வந்தர்களுக்காக எழுதப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா-வின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ந்ததனால் அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்குப் பொருளாதாரப் பரிந்துரைகளை அளிக்க ஆரம்பித்தார். அவருடையப் பரிந்துரைகளை அமெரிக்கா-வில் அந்தந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த யோசனைகளுக்கு ஏற்பத் தனதுப் பரிந்துரைகளை மாற்றி அளித்தார் - இதனால், 1930-களில் அமெரிக்கா-வின் கருவூலத் துறை மக்களின் பணத்தைப் பறிக்கும் முயற்சிகளை எதிர்த்தார், 1950-களில் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பரிந்துரைகளை அளித்தார், 1960-களில் வாடிக்கையாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவளித்தார், 1970-களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கத்திற்கு ஆதரவளித்தார். இதனால், 1970-களில், பெரியப் பணக்காரராக ஆனார். ஆனால், செல்வச் செழிப்பு பொது மக்களின் குறைகளைப் புரிந்துக் கொள்ளும் அவரது உணர்வுகளை மழுங்கச் செய்தது. சில சமயங்களில், நிதி நிறுவனங்களின் பத்திரிகை வெளியீட்டுகளைத் தனதுப் பரிந்துரைகளில் வெளியிட்டார். 1991-ஆம் ஆண்டு மூச்சுத் திணறலால் இறந்தார். எஸ்.எஃப்.போர்ட்டரின் இறப்பிற்குப் பின், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் பரிந்துரைகளை அளிப்பதில், ஜேன் ப்ரையண்ட் க்வின் பிரதானமான நிபுணர் ஆனார். அதே நேரத்தில், அமெரிக்க மக்கள் நாளிதழ்களுக்குப் பதிலாகத், தொலைக்காட்சியில் இருந்து அறிவுரைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் பல விதமான நிதிக் கருவிகள் புதிதாகப் புழக்கத்திற்கு வந்தன - உதாரணத்திற்கு, வீட்டு அடமானங்கள், வீட்டு மதிப்பை வைத்து கடன்கள், 401 (கெ), ஐ.ஆர்.ஏ. 1980-களில் 770-ஆக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையின் மதிப்பு, 2000-ஆம் ஆண்டில் 14,000 ஆக உயர்ந்தது. அதன் பின் நிகழ்ந்தச் சரிவினால், அந்த மதிப்புக் குன்றியது. அந்தச் சரிவில் இருந்து மீண்டு, 2007-ஆம் ஆண்டில் 14,000 ஆக உயர்ந்தது. 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் பின், மீண்டும் அதன் மதிப்புச் சரிந்தது. அதில் இருந்து மீண்டு, இன்று 25,000 தாண்டி, தினமும் புதியச் சிகரங்களை எட்டுகின்றது. பங்குச் சந்தையின் வளர்ச்சியை நம்பி பொது மக்கள் தங்களுடையப்  பணத்தை பங்குச் சந்தையில் போட வேண்டும் என்றுக் கூறிய நிபுணர்களை ஜேன் ப்ரையண்ட் க்வின் கடினமாக விமர்சித்தார். பங்குச் சந்தைக் கீழ் இறங்கும் பொழுது, அதே நிபுணர்கள் பொது மக்களின் மேல் பழிச் சுமத்துவார்கள் என்று எச்சரித்தார். பங்குச் சந்தையின் அதிவேக வளர்ச்சி, அமெரிக்க மக்களிடையேச் தங்களுடையச் சேமிப்புப் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்வதன் மூலம் தாங்களும் பெரும் பணக்காரர்களாக முடியும் என்ற நம்பிக்கை வேரூன்றக் காரணம் ஆகியது. அதேப் போல், மனையை வாங்கி விற்கும் சந்தையிலும் அதே நம்பிக்கைக் குடிக் கொண்டது. நிஜ வாழ்க்கையில், பங்குச் சந்தை மற்றும் மனைகளின் சந்தையில் இருந்த வளர்ச்சிப் பெரும்பாலும் ஏற்கனவேப் பணம் கொழித்திருந்தச் செல்வந்தர்களை மேலும் செழிப்பாக்கியது. அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் ஊதிய வளர்ச்சி மிகக் குறைவாக இருந்ததனால், பங்குச் சந்தையில் உள்ள வளர்ச்சியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை. தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்த உதவிச் செய்யும் நிறுவனங்கள், அமெரிக்க மக்கள் தங்கள் பணத்தை வீசி எரிவதால் அவர்களின் நிதி நிலைமை மோசமாகியது என்றுக் கருதினர். தனி மனிதச் சாகசத்தினால் உலகில் எந்த ஒருப் பிரச்சினையும் எதிர்கொள்ள முடியும் என்ற அமெரிக்க மக்களின் நம்பிக்கையையும் நிதி நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. பங்குச் சந்தையும் மனைகளை வாங்கி விற்கும் சந்தையும் புதிய உயரங்களுக்குச் சென்றதால், அமெரிக்க மக்கள் தங்களுக்குள் இருந்த ஓற்றுமை உணர்ச்சியைத் தளர்த்தி சுயநல உணர்ச்சியில் திளைத்தனர். தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்த அறிவரை அளிக்கும் நிபுணர்களின் கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்க, விளம்பரதாரர்களின் உதவித் தேவைப்பட்டது. கார், மனை மற்றும் மக்களுக்கு நிதிப் பரிந்துரைகள் செய்யும் நிறுவனங்களிடம் இருந்து அந்த விளம்பரங்களை அதிகமாகப் பெற்றுக் கொண்டன. இந்த நிறுவனங்கள், விளம்பரங்களின் மூலம் மக்கள் தங்களதுப் பணத்தைச் செலவழிக்கத் தூண்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றுக் கருதின. நாளிதழ்களும் பத்திரிகைகளும் வருவாய் குறைந்துக் கொண்டே வருகின்றச் சமயத்தில், இந்த நிறுவனங்களின் விளம்பர முதலீட்டால் உயிர் பெற்றன. நாளைடைவில், பத்திரிகைகளும் நாளிதழ்களும் நிதி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அந்த நிதி நிறுவனங்கள் விற்கும் நிதிக் கருவிகளைப் பரிந்துரைச் செய்ய ஆரம்பித்தன.
தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிதி நிறுவனங்கள் புத்தகங்களில் இருந்துப் பணம் சம்பாதிப்பதை விட நாளிதழ்களில் இருந்து அதிகமாகச் சம்பாதிக்கின்றன. 1996-ஆம் ஆண்டில் தி மில்லியனேய்ர் நெக்ஸ்ட் டோர் புத்தகத்தை தாமஸ் ஜே ஸ்டான்லி மற்றும் வில்லியம் டி டான்கோ வெளியிட்டப் பின், கோடீஸ்வரர் ஆவதுப் பற்றியப் புத்தகங்கள் பிரபலமாயின. அமெரிக்கா-வில் வருமான வேறுபாடு அதிகரித்த அதே நேரத்தில், கோடீஸ்வரர் ஆவதுப் பற்றியப் புத்தகங்கள் அதிக அளவில் வெளியிடப்பட ஆரம்பித்தன. ஐரோப்பா-வை "ஸோஷியலிஸ" நாடுகள் என்றுக் கேலியாகச் சித்தரித்தாலும், அங்கு அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மேல்தட்டை அடைவது அமெரிக்கா-வைக் காட்டிலும் அதிக அளவுச் சாத்தியமாக இருக்கிறது. அமெரிக்கா-வில், சிறிய வணிகர்களையும் வர்த்தகர்களையும் தலை மேல் வைத்துக் கொண்டாடினாலும், நிஜ வாழ்க்கையில் அவர்கள் பெரும்பாலும் வர்த்தக முயற்சிகளில் தோல்வியடைகின்றனர். கோடீஸ்வரர் ஆவதுப் பற்றியப் புத்தகங்கள், செல்வந்தர் ஆவதற்குத் தேவையற்றச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றுக் கூறுகின்றன. ஆனால், நிஜ வாழ்க்கையில் புதிதாகக் கோடீஸ்வரர்களானவர்கள், நிறையச் செலவுச் செய்துத் தேர்ந்தப் பயிற்சியாளர்களின் உதவியோடுத் தங்களதுச் செல்வத்தை அதிகரிக்கின்றனர். தாராளமாகச் செலவுச் செய்பவர்கள், அச்சமயத்தில் நிதி நிலைமை மோசமாவதோடு அல்லாமல், கஷ்டங்கள் வரும் பொழுதுச் சங்கடமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். கண்ணும் கருத்துமாகச் சேமிப்பவர்களும், அதேச் சங்கடமான நிலைமைக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அவர்களுக்கும் எதிர்பாராத வேலை இழப்பு மற்றும் தீவிர உடல் நலக் கெடுதல்களின் மூலம் நிதி நிலைமை மோசமாகிறது. தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிறுவனங்களும் சுதந்திரச் சந்தை வல்லுநர்களும் நிதித் துறையில் உள்ளச் சட்டங்களைத் தளர்த்துவதன் மூலம் அமெரிக்க மக்களின் தினப்படிச் செலவுகள் மிகவும் குறைந்து இருக்கின்றன என்று வாதாடுகிறார்கள். ஆனால், அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, வீடு மற்றும் சுகாதாரத்தில் செலவழிக்கப்படும் பணத்தின் அளவு மிகவும் அதிகமாக உயர்ந்ததை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1973-ஆம் ஆண்டில் இந்த மூன்று வகைகள் ஒரு சராசரிக் குடும்பத்தின் மொத்தச் செலவுகளில் 50% பங்கு வகித்திருந்தன. 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அந்தப் பங்கு 75% ஆக உயர்ந்தது. ஊதிய உயர்வுக் குறைவின் காரணமாக, 99%-இல் உள்ள சராசரி மக்களை இதுக் கிடுக்கிப் பிடியில் மாட்டுகிறது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்க மக்கள் முன்பு நன்றாகச் சேமிக்கும் போக்கில் இருந்து கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவழிப்பவர்களாக உருமாறியதன் காரணம் புரிகிறது. அத்தியாவசியத் தேவைகளின் செலவும் ஊதிய உயர்வின் குறைவும் இரண்டுப் பக்கம் இடிக்கும் பொழுது பணத்தைச் சேமிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிபுணர்களில் பிரபலமானவர்களில்  ஸூஸி ஆர்மன் முதன்மையானவர். தனி மனித நிதி நிலைமைப் பற்றிய அவரதுப் போதனைகளை அமெரிக்கா-வில் உள்ளப் பல தொலைக்காட்சி நிலையங்கள்  ஒளிபரப்புகின்றன. அவரதுப் பிரபலம், அவரது நிதி அறிவுரைகளின் துல்லியத்தை மூழ்கடிக்கிறது. நிதி நிலைமை மேம்படுத்துவதற்குரிய அறிவுரைகளைச் (சேமிப்பிற்கும் கடனிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள், அவசரச் செலவிற்கு கையில் இருக்க வேண்டியப் பண அளவு) சீராக அளிக்காமல், அந்தந்தக் காலத்திற்கேற்ப தனதுப் பரிந்துரைகளை  மாற்றி அளிக்கிறார். ஒவ்வொரு மேடைப் பேச்சிற்கும் அவர் 84,000 டாலருக்கு மேல் கட்டணம் விதிக்கிறார். கலிஃபோர்னியா மாநிலத்தின் பெர்க்லி நகரத்தில் உள்ள பட்டர்கப் பேக்கரி மற்றும் காஃபி கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தப் பொழுது, அவரது வாடிக்கையாளர்கள் சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்க அவருக்காக 50,000 டாலர் திரட்டினர். அவருடையப் பங்குச் சந்தைத் தரகர் அந்தப் பணத்தை மோசமான நிதிக் கருவிகளில் முதலீடுச் செய்து இழந்தார். அந்தத் தரகர் வேலைச் செய்துக் கொண்டிருந்த மெர்ரில் லிஞ்ச் நிதி நிறுவனத்திற்குச் சென்றுத் தனக்கு வேலைக் கொடுக்குமாறு ஸுஸி ஆர்மன் கோரிக்கை விடுத்தார். மெர்ரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தின் பெருவாரியான வாடிக்கையாளர்களாக அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இல்லாமல் இருந்தாலும்,  தனது நிதி நிலைமையை மேம்படுத்தும் பரிந்துரைகளை அவர்களுக்கு அளித்தார். மெர்ரில் லிஞ்சில் வெற்றிகரமாகச் செல்வத்தைக் குவித்தப் பிறகு, அங்கிருந்து வெளியேறித் தனதுச் சொந்த நிதி நிறுவனமான ஸுஸி ஆர்மன் ஃபைநான்ஷியல் க்ருப்பை ஆரம்பித்தார். செல்வந்தராகும் அவரதுப் பயணத்தில், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுக் கொண்டார் - பிள்ளையார் மற்றும் ஸித்த யோகாவில் மிகுந்த ஆர்வம் காட்டினார். கையில் வரும் பணத்தை உடனடியாகச் செலவுச் செய்ததனால், நிதிக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டார். தனது நிதிக் கஷ்டங்களில் இருந்து வெளிவந்தவுடன், அந்த முயற்சியை அடையாளமாகக் காட்டி அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைக் கஷ்டங்களை தன்னால் நிவர்த்திச் செய்ய முடியும் என்றுக் கூறினார். நிதி நிலைமையில் வெற்றிப் பெற்றவர்கள் சொந்த வாழ்விலும் வெற்றியாளர்கள் என்றும் நிதி நிலைமையில் தோல்வியடைந்தவர்கள் சொந்த வாழ்வில் தோல்வியாளர்கள் என்றும் கருதினார். அவரதுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செலவுச் செய்ய அனுமதிக் கேட்கும் பார்வையாளர்களின் கோரிக்கைகளை மிகுந்தக் காட்டத்துடன் மறுத்தார். 2000-ஆம் ஆண்டில் நிகழ்ந்தப் பங்குச் சந்தை வளர்ச்சியின் பொழுது, மக்கள் வெற்றிப் பெற வேண்டும் என்று நம்பினால் அவர்கள் வாழ்க்கையிலும் நிதி நிலைமையிலும் வெற்றிப் பெறுவார்கள் என்றக் கொள்கையை தனது வாடிக்கையாளர்களுக்குப் போதித்தார். ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட் இயக்கம் மக்களிடையேப் பரவும் பொழுது, ஊதிய வேறுப்பாட்டின் கொடுமைகளைப் பறைசாற்றினார். காலத்திற்கேற்பத் தனதுப் பரிந்துரைகளை மாற்றி அளிப்பதால் தனதுத் துறையில் பிரபலமானார். ஜேன் ப்ரையன் க்வின், தனது வாசகர்களின் நன்மையைக் கருதி ஒரே மாதிரி நிதிப் போதனையை அளித்ததால், மக்களிடம் அந்த அளவுப் பிரபலமாகாமல் இருந்தார். ஸுஸி ஆர்மன், அமெரிக்க மக்கள் தங்களது நிதி வாழ்க்கையில் நவீன நிதிக் கருவிகளின் மேல் பற்று அதிகமானதால், அந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது முதல் புத்தகமான 'யூ ஹாவ் ஈர்ன்ட் இட், டோன்ட் லூஸ் இட்'-இன் விற்பனைகளின் மூலம் செல்வந்தரானார். அந்த வெற்றியை அடிப்படையாக வைத்துக் கொண்டுப் பலவகை நிதிக் கருவிகளைத் தனதுப் பெயரில் விற்க ஆரம்பித்தார். வேலையில் இருந்து ஓய்வடைந்த மக்களைக் குறி வைத்து நிதி முதலீட்டு நாளிதழை வெளியிட ஆரம்பித்தார். விமர்சினையாளர்கள், அந்த நாளிதழ்களில் பரிந்துரைச் செய்யப்படும் பங்குகள், மிகவும் குறுகியக் காலத்தில் அதிக வளர்ச்சி அளிப்பவையாக இருப்பதால், வேலையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களுக்கு (நீண்டக் கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டப் பங்குகளே அவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில்) அவற்றைப் பரிந்துரைச் செய்யக் கூடாது என்றுக் கருதினர்.
தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்துவதற்குப் பரிந்துரை அளிப்பவர்களில் டெவிட் பாக் என்பவரும் பிரபலமானவர். அமெரிக்க மக்கள் ஊதாரித்தனமாகச் செலவுச் செய்வதைக் கண்டிக்கிறார். அதற்கு உதாரணமாக ஸ்டார்பக்ஸ் கடையில் கிடைக்கும் காப்பியின் விலையைச் சுட்டிக் காட்டுகிறார். மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் நிதி மேலாளராக இருக்கும் பொழுது தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் பேச்சுகளை அளித்ததன் மூலம் பிரபலமானார். அமெரிக்க மக்கள் தானியங்கிச் சேமிப்பு அணுகுமுறைகளைப் பயன்படுத்தினால் கோடீஸ்வரர்களாக முடியும் என்றுக் கூறுகிறார். தானியங்கிச் சேமிப்புத் திட்டங்கள், மக்கள் கைக்கு ஊதியம் வருவதற்கு முன்னரே சேமிப்பிற்கு ஒருப் பங்கு ஒதுக்கப்படும். தானியங்கிச் சேமிப்பிற்குப் பணம் இல்லாதப் பட்சத்தில், மக்கள் தினசரி அத்தியாவசியம் அல்லாதப் பொருட்களில்
செலவு செய்வதை அறவே நிறுத்த வேண்டும் என்றுக் கூறுகிறார். அவருடையக் கணிப்பின் படி, ஒரு நாளைக்கு ஸ்டார்பக்ஸ் காப்பியில் செலவுச் செய்யாமல் 5 டாலரை சேமிப்பதன் மூலம் ஒரு வாரத்திற்கு 150 டாலரும், ஒரு வருடத்திற்கு 2000 டாலரும் சேமிக்க முடியும். அந்தச் சேமிப்பைப் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்தால், வருடத்திற்கு 11 % வளர்வதன் மூலம், வேலையில் இருந்து ஓய்வுப் பெறும் பொழுது, 20 லட்சம் டாலர்களைச் சேகரிக்க முடியும். அவர் எழுதியப் புத்தகமான 'தி ஆட்டோமாட்டிக் மில்லியனெய்ர்' , தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரமான ஓப்ரா வின்ஃப்ரியின் பரிந்துரையால் மிகப் பிரபலமானது. விமர்சிப்பாளர்கள், ஒரு நாளைக்கு ஸ்டார்பக்ஸ் காப்பியில் 5 டாலர் செலவிடுவது சராசரி மக்களுக்கு மிக அதிகம் என்றுக் குற்றம் சாட்டினர். 20 லட்சம் டாலர் எண்ணிக்கை வருவதற்கு, அவர் பண வீக்கம் மற்றும் வரிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 20 லட்சம் டாலர், 1.73 லட்சம் டாலராக குறைந்தது. மேலும் சராசரி மக்கள் ஸ்டார்பக்ஸ் காப்பியில் தினசரி 3 டாலர் மட்டுமேச் செலவிடுவதாக வைத்துக் கொண்டால், அது 0.5 லட்சம் டாலராகக் குறைந்தது. அந்த எண்ணிக்கை கணிசமான அளவாக இருந்தாலும், டெவிட் பாக் கூறியதுப் போல் அந்த அளவுப் பணத்தினால் கோடீஸ்வரராவதுச் சாத்தியமில்லை.
கடன் தொல்லையில் மூழ்காமலும் பைபிளின் சொல் கேட்டு நிதித் திறனை வளர்ப்பதும் மற்றொரு தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் பரிந்துரை அளிப்பவரான டேவ் ராம்ஸியின் அணுகுமுறையாகும். அவரதுப் பரிந்துரைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் இருக்கின்றக் கடனை ஒரேயடியாக அழிக்கக் கூறும் அதே நேரத்தில், திவால் ஆவதை ஒருத் தீர்வாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். அவரது சொந்த வாழ்க்கையில், செல்வந்தர் ஆவதற்கு முன், தனதுக் கடன்களை அறவே அழிக்க, திவால் ஆவதை ஒரு நிதிக் கருவியாகப் பயன்படுத்தியுள்ளார். அவரதுத் தந்தை, மனைகளை வாங்கி விற்கும் தொழிலில் வெற்றியடைந்தவர். டெவ் ராம்ஸியும் கல்லூரியில் இருக்கும் பொழுது, மனைகளை வாங்கி விற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அப்பொழுதுக் கிடைத்தச் செல்வத்தை மிக விரைவில் ஆடம்பரத்தில் செலவழித்தார். அவருக்குக் கடன் அளித்து வந்த வங்கி, அந்தக் கடன் சலுகையை நிறுத்தியதனால், 1990-ஆம் ஆண்டு திவால் ஆக வேண்டிய நிலைமை வந்தது. அந்தச் சங்கடமானச் சூழலில், பைபிளில் கடனாளி ஆகாதே என்றுக் கூறியச் செய்திக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது முதல் புத்தகமான ஃபைனான்ஷியல் பீஸ்-ஐ சொந்தச் செலவில் பிரசுரித்து அதனை மாபெரும் வெற்றியாக்கினார். அதன் பின், வானொலியில் பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார். ஏழ்மையில் இருப்பவர்கள், அவர்களுடைய நிதி நிலைமைக்கு அவர்களேக் காரணம் (அந்த நிதி நிலைமை திடீரென வேலை இழப்பாலும் எதிர்பாராத உடல் நலக் கோளாறினால் ஏற்பட்டிருந்தாலும்) என்றுக் கருதுகிறார். நிதி ஆராய்ச்சியில், சராசரி மக்கள் மிகப் பெரியக் கடன்களை முதலில் அடைத்தப் பின்னர், சிறியக் கடன்களை அடைக்க வேண்டும் என்றுக் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெவ் ராம்ஸி தனது நிகழ்ச்சிகளைக் கேட்பவர்களிடம் அதற்கு எதிர்மறையாகப் பரிந்துரைச் செய்கிறார் - சிறியக் கடன் தொகையை முதலில் அடைத்தப் பின்னர், மிகப் பெரியக் கடன் தொகையை அடைக்க வேண்டும் என்றுக் கூறுகிறார். முதலில், சிறியக் கடன் தொகையை வெற்றிகரமாக அடைப்பதன் மூலம், மக்களுக்கு தங்களுடைய நிதிக் கட்டுப்பாட்டில் நம்பிக்கைப் பிறந்து அதற்குப் பின் வரும் மிகப் பெரியக் கடனடைப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார். திவால் ஆகப் போகும் நபர்கள், அவருடைய நிதித் திட்டங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா-வில் உள்ள நீதிமன்றங்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார். இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு, மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
வயதானவர்கள், தங்களிடம் இருக்கும் பணம் விரைவில் கரைந்து விடும் என்றப் பயத்தில் எப்போதும் இருக்கின்றனர். 53 வயதில் நிதி திறன் ஒருவருக்கு அதிகப்பட்ச அளவை அடைந்து அதன் பின் சரிய ஆரம்பிக்கிறது. ஆனால், வயதானவர்கள், தங்களுடைய நிதித் திறனின் சரிவை ஒருக் குறையாகக் கருதுவதில்லை. வேலையில் இருந்து ஓய்வுப் பெறும் நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் அதிகப் பணம் உடையவர்களாக இருப்பதால், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிதி நிறுவனங்கள் அவர்களின் செல்வத்தின் மேல் குறி வைக்கின்றன. வயதானவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வெவ்வேறு யுக்திகளை நிதி நிறுவனங்கள் கையாள்கின்றனர் - இலவச உணவளித்து, நிதிக் கருவிகளை விற்கும் பல்வேறுத் தரகர்களை அவர்கள் முன் நிறுத்துகின்றனர். வயதானவர்களின் ஓய்வூதியம் அழியும் நிலையில் இருக்கிறது என்றுப் பயம் காட்டி, தங்களது நிதி கருவிகளை அவர்களுக்கு விற்கின்றனர். தரகர்கள் (பங்குச் சந்தை, காப்பீடு) அளிக்கும் நிதிப் பரிந்துரைகள் குறைந்த அளவுத் தரநிலையில் எடைப் போடப்படுகிறது. அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள், வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த அளவு நன்மை அளித்தால் போதும் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. நிதி நிலைமையைப் பற்றிப் பரிந்துரை அளிக்கும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் நிதி நலனை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றுச் சட்டப்படி வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தரகர்களும் நிதி நிலைமையை மேம்படுத்தும் பிரபலமானப் பரிந்துரையாளர்களும், பல்வேறு முதலீட்டுக் கருவிகளை வயதானவர்கள் முன் வைக்கின்றனர். பராக் ஓபாமா ஜனாதிபதியாக இருந்தப் பொழுது, தரகர்களும் சட்டப்படித் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நிதி நலனை முதன்மையாகக் கொண்டுப் பரிந்துரைகள் அளிக்க வேண்டும் என்றச் சட்டம் அமல்படுத்தும் நோக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது ஆட்சியில் இருக்கும் டானல்ட் ட்ரம்பின் கீழ், அந்தச் சட்டம் முடக்கப்பட்டு உள்ளது. தரகர்களும் தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் பிரபலமானப் பரிந்துரையாளர்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குப் போடும் ஒப்பந்தத்தில், தங்களுடையப் பரிந்துரைகளைக் கடைப்பிடித்தால் நிகழும் தவறான விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களேக் காரணம் என்றுக் கையெழுத்திட வைக்கின்றனர். வாடிக்கையாளர்கள், தரகர்களும் தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் பிரபலமானப் பரிந்துரையாளர்களும் அளிக்கும் அறிவுரைகள், சட்டப்படித் தங்களுடைய நிதி நலனுக்காக அளிக்கப்படுகின்றன என்றத் தவறான நம்பிக்கையில் இருக்கின்றனர். தரகர்களுக்குக் கிடைக்கும் கமிஷன்கள், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பரிந்துரைச் செய்யும்  பங்குகளின் செயல்திறனை ஒத்து இல்லாததால், பலவீனமானப் பங்குகளிலும் நிதிக் கருவிகளிலும் வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிதி நிறுவனங்கள் உயர்ந்தத் தரநிலையைக் கடைப்பிடிக்கும் முயற்சிகளுக்கு வளைந்துக் கொடுக்காமல் இருப்பது நிதித் துறையின் கீழ்த்தரமான நிலைக்கு உதாரணமாக விளங்குகிறது. வயதானவர்களின் பணத்தை அவர்களிடம் இருந்துப் பிரிப்பதற்குப் பலவிதமான நடத்தை உளவியல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் - உதாரணத்திற்கு, பங்குகளில் முதலீடுச் செய்ய வேண்டியப் பணத்தை மாதாந்திர அளவில் வாடிக்கையாளர்களிடம் அளிக்கின்றனர். வாடிக்கையாளர்கள், சொந்தப் பட்ஜெட்டை மாதக்கணக்கில் போடுவதால், பங்குகளில் முதலீடுச் செய்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது.
வயதானவர்கள் தவிர மற்ற வாடிக்கையாளர்கள் அதிக அளவில் செல்வம் குவிப்பதற்குப் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. அங்கு, பல் வேறு நிதிக் கருவிகளைப் பித்தலாட்டக்காரர்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கின்றனர். இவற்றில், வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் ஒரு விதப் பங்குச் சந்தைக் கருவியான ஆப்ஷன்ஸும் அடங்கும். வாடிக்கையாளர்கள், இந்த மாநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்றால், தொலைக்காட்சியில் பணம் குவிப்பதற்கானப் பல நிகழ்ச்சிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்த நிகழ்ச்சிகளில் பேரும் புகழும் பெற்றவர் ஜிம் க்ரேமர். ஸி.என்.பி.ஸி சேனலில் அவருடைய நிகழ்ச்சி வாடிக்கையாளர்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. அவரதுப் பங்குச் சந்தைப் பரிந்துரைகள் பல முறைத் தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அவர் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர். 
பெண்கள் பங்குச் சந்தையில் முதலீடுச் செய்வதை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுகின்றனர் என்றுத் தனி மனித நிதி நிலைமை மேம்பாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. அமெரிக்கா-வில், ஒரு வேலைக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் குறைந்த அளவே ஊதியம் அளிக்கப்படுவதால், பெண்கள் பங்குச் சந்தையில் அதிக அளவு முதலீடுச் செய்ய முடியாமல் இருக்கின்றனர். பங்குச் சந்தையில் பெண்கள் முதலீடுச் செய்யும் பொழுது, ஆண்களைக் காட்டிலும் அதிக அளவு லாபம் பார்க்கின்றனர். ஆண்களைக் காட்டிலும், பெண்கள் அதிக நாள் வாழ்வதால், அவர்களது ஓய்வு ஊதியத்தை அதிகக் காலத்திற்கு நீட்டிப்பதற்கு முயல்கின்றனர். அதற்காக, மிகவும் பாதுகாப்பான நிதிக் கருவிகளில் பெரும்பாலும் முதலீடுச் செய்கின்றனர். இதனால், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிறுவனங்கள், ஆண்களைக் காட்டிலும் பெண் வாடிக்கையாளர்களிடம் இருந்துக் குறைந்த லாபமேச் சம்பாதிக்கின்றனர். ஆண்கள் பெண்களைக் காட்டிலும் மோசமானப் பங்குகளில் தங்களதுப் பணத்தை முதலீடுச் செய்வதால், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து அதிக லாபத்தைச் சம்பாதிக்கின்றன. பங்குச் சந்தையில் நிகழும் முதலீடு இழப்புகளை தங்களது ஊதிய வளர்ச்சியின் மூலம் ஈடுக் கட்டி விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை ஆண்களிடம் இருப்பதால், மோசமானப் பங்குகளில் முதலீடுச் செய்கின்றனர்.
பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல், மனைகளை வாங்கி விற்பதையும் தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தப் பரிந்துரைச் செய்யும் நிறுவனங்கள் நிதிக் கருவியாக விற்கின்றன. அமெரிக்கா-வில் சொந்த வீட்டை வாங்குவது நடுத்தர வர்க்கத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. வீடுகளை வாங்கி விற்கும் பொழுது அதில் வரும் லாபத்தை வரி, பண வீக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கணக்கில் கொள்ளாமல்  மக்கள் தவறாக எடைப் போடுகின்றனர். காலங்காலமாக, வீடுகளை வாங்கி குறைந்தது ஏழு வருடங்களுக்கு வைத்திருந்து விட்டு விற்பது நடைமுறையில் உள்ளது. ஆனால், நிதிச் சட்டங்களைத் தளர்த்தியதாலும், பல வித அடமானங்களை நிதி நிறுவனங்கள் விற்பதாலும், சொந்த வீட்டில் இருந்து அதிக லாபம் செய்வது அமெரிக்க மக்களின் வாழ்க்கைக் குறிக்கோளாக மாறியுள்ளது. பங்குச் சந்தையில் பணம் செய்வதுப் பற்றியப் புத்தகங்களின் எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு மனைகளை வாங்கி விற்று லாபம் சம்பாதிப்பதுப் பற்றியப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராபர்ட் கியோஸாக்கி எழுதிய  ரிச் டாட் பூர் டாட் புத்தகம் இவற்றில் மிகவும் பிரபலமானது. அதில், தனதுத் தந்தை நிலையான ஊதியத்தை நம்பியதால், பலவித வர்த்தக முயற்சிகளை நம்பிப் பணம் சேர்த்த அவரது அண்டை வீட்டுக்காரரை விடக் குறைந்தச் செல்வத்தைத் தான் சேர்க்க முடிந்தது என்று வாதாடுகிறார். கியோஸாக்கியின் புத்தகத்தில், கடன் வாங்குவதுத் தவறானது அல்ல என்றும் தவறான வகைக் கடனை வாங்குவது தவறு என்றும் விளக்கப்படுகிறது. அவர் நடத்தும் சொற்பொழிவுகளில், வருங்காலச் சொற்பொழிவுகளுக்கு ஆள் சேர்ப்பதில் தான் அதிகக் குறிக்கோள் இருக்கிறது. மனைகளை வாங்கி விற்றுப் பணத்தைக் குவித்துச் செல்வந்தர் ஆகும் முறைகளில் வெகுக் குறைவான நேரம் செலவழிக்கப்படுகிறது. விமர்சனையாளர்கள், கியோஸாக்கியின் பரிந்துரைகளைத் தவறானவை என்று மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தாலும், வாடிக்கையாளர்கள் அவரது மாநாடுகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் அலை மோதுகின்றனர்.
தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்த நிறுவனங்கள் நிதி நிர்வகிப்புப் பற்றியப் பாடங்களால் அமெரிக்க மக்கள் தங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றுக் கருதுகின்றனர். இந்தப் பாடத் திட்டங்கள் மூலமும் பணம் குவிப்பதை நிதி நிறுவனங்கள் கற்றுக் கொண்டு விட்டன. இந்தப் பாடத் திட்டங்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைச் சேர்ப்பதன் மூலம், சிறு வயதில் இருந்தே அமெரிக்க மக்களிடம் நிதி நிறுவனங்களின் நிதிக் கருவிகளைப் பயன்படுத்தும் போக்கை நிலைநாட்டி உள்ளனர். இந்தப் பாடத்திட்டங்களை உதாரணமாகக் காட்டி, அரசியல் தலைவர்களிடம் வாடிக்கையாளர்களின் நிதி நலனுக்குக் கடும் முயற்சிகள் செய்வதாகச் சத்தியம் செய்கின்றனர். அமெரிக்கா-வில் உள்ள நிதிச் சட்டங்களும் கோட்பாடுகளும், சராசரி மனிதர்கள் மிகுந்தக் கட்டுப்பாடுடன் சேமிப்பு மற்றும் முதலீடுகளை நிர்வகிக்கும் திறன் உடையவர்கள் என்ற அனுமானத்தில் செயல்படுகின்றன. தனி மனித முயற்சியால் எந்த ஒரு சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்க முடியும் என்ற ஆணித்தனமான நம்பிக்கையினால், கூட்டு முயற்சியால் நிதி நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவுக் குறைவாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டுச் சேமித்தப் பணம் திடீர் வேலை இழப்பு மற்றும் எதிர்பாராத உடல் நலக் குறைகள் மூலம் கரைந்து விடுகிறது. அமெரிக்கா-வில் வெகு வேகமாக அதிகரித்து வரும் அத்தியாவசியத் தேவைகளின் விலை (வீடு, கல்வி, உடல் நலம்), கூட்டு முயற்சியின் மூலம் குறைக்கப்படலாம். ஆனால், அவ்வாறுச் செய்தால், தனி மனித நிதி நிலைமையை மேம்படுத்தும் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைந்து விடும். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், அமெரிக்கா-வில் உடல் கனத்தினால் நிகழும் உபாதைகளுக்கும் நிதி நிலைமையால் நிகழும் ஏழ்மைக்கும் முடிச்சுப் போடுகிறார். அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், அமெரிக்கா-வில் தேங்கிக் கிடக்கும் ஊதிய உயர்வினாலும் அதிகரித்து வரும் அத்தியாவசியச் செலவுகளினாலும் (வீடு, உடல் நலம், கல்வி) தங்களதுக் குடும்ப உணவிற்கு மலிவானப் பொருட்களை வாங்குகின்றனர். மலிவான உணவுப் பொருட்கள் பெரும்பாலும் செயற்கை முறைகளால் தயாரிக்கப்படுவதால், உடல் நலத்திற்குக் கெடுவாக அமைகிறது. அதுப் போல், சேமிப்புச் செய்வதற்குக் கஷ்டப்படுவதால், ஓய்வுக் காலத்தில் வேண்டியப் பணத்திற்கு மலிவு விலையில் பித்தலாட்டக்காரர்கள் விற்கும் நிதிக் கருவிகளில் முதலீடுச் செய்கின்றனர். அதற்கு எதிர்மாறாக, அதிக ஊதியம் சம்பாதிப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் உடல் நலனைக் கருதி, கூடிய விலை உணவுப் பொருட்களில் செலவிடுகின்றனர். அந்த உணவுப் பொருட்கள், பெரும்பாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், பணம் கொழித்தவர்களின் உடல் நலம் அதிகரிக்கிறது. தங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்த, பங்குச் சந்தையில் மிகவும் பொறுமையாகப் பலக் காலம் முதலீடுச் செய்கின்றனர். இதனால், வேலையில் இருந்து ஓய்வுப் பெறும் பொழுது, நிறைந்தச் செல்வச் செழிப்பை அடைகின்றனர்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ஷாம்: ஹவ் தி செல்ஃப்-ஹெல்ப் மூவ்மென்ட் மேட் அமெரிக்கா ஹெல்ப்லெஸ் - ஸ்டீவ் சலார்னோ
ப்ரோக்: ஹவ் டெப்ட் பாங்க்ரப்ட்ஸ் தி மிட்டில் க்ளாஸ் - கேதரின் போர்ட்டர்
தி டூ இங்கம் ட்ராப்: வை மிட்டில் க்ளாஸ் மதர்ஸ் ஆண்ட் ஃபாதர்ஸ் ஆர் கோயிங்க் ப்ரோக் - எலிஸபெத் வாரென் ஆண்ட் அமீலியா வாரென்

No comments: