மண்ணின் மைந்தர்கள்

சுருக்கம்:
இன்றைய காலகட்டத்தில், உலகமயமாக்கலின் கதைப்போக்கு, நாடுகளையும் அவற்றின் எல்லைகளையும் பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளது. எழுத்தாளர் தாமஸ் எல் ஃப்ரீட்மென் எழுதிய 'தி வெர்ல்ட் இஸ் ஃப்ளாட்' புத்தகத்தின் சாராம்சம் அது தான். மேலும்,  ஃப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா எழுதிய 'எண்ட் ஆஃப் ஹிஸ்டரி'  சோவியத் யூனியன் சிதறிய பின் மேற்கில் உருவான தாராளவாத ஜனநாயகம் மற்ற அரசியல் அமைப்புகளை வென்று விட்டது என்று குரல் கொடுத்தார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலகமயமாக்கலும் மக்கள் எல்லைகளை கடந்து இடம்  பெயர்வதும் நன்மைகளைக் கொணர்ந்தாலும், உலகமெங்கும் ஸ்திரமின்மை கூடிக் கொண்டுப் போகிறது. உலகத்தை நிதர்சனமாகப் பார்ப்பதன் மூலம் உலகத்தில் உள்ள பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாள முடியும் என்று இந்தப் புத்தகத்தில் ராபர்ட் கப்ளன் வாதாடியிருக்கிறார்.  அந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, நிலவியலைச் சார்ந்த அரசியல் விவகாரங்களிலும், அதனால் நாடுகள் தங்களை அண்டிய மற்ற நாடுகளைப் பற்றிய நோக்கமும் , நிலவியலுக்கு மிகுந்த பங்கு உண்டு. புத்தகத்தின் இறுதியில் அமெரிக்கக் கொள்கையாளர்களுக்கு, சீனா மற்றும் இதர நாடுகளின் வளர்ச்சியைக் கையாள சில பரிந்துரைகள் அளித்துள்ளார்.
ராபர்ட் காப்ளனின் மற்றைய புத்தகங்கள் பிடிக்கும் என்பதால் இந்தப் புத்தகத்தை படித்தேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. இந்தியாவை பற்றி மேலும் எழுதியிருக்கலாம் என்பதைத் தவிர வேறு குறை ஒன்றும் இல்லை.

அலசல்:
1990-களில் சோவியத் யூனியனின் அழிவுக்குப் பிறகு அமெரிக்கா உலகின் எந்த பகுதிக்கும் தனது சக்தியைச் செலுத்தக் கூடிய ஒரே வல்லரசாகக் கோலோச்சியது. தனது விமானப் படையின் வல்லமை மூலம், 1990-களில் தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன்ஸ் தீபகற்பத்தில் வெற்றிகரமாக தலையிட்டது. இந்தத் தலையீட்டை ஆமோதித்த அமெரிக்கக் கொள்கையாளர்கள் (தாராளவாத மற்றும் பழமைவாத பக்கங்களிலும்) பலர் 2003-இல் இராக் மீது போர் தொடுப்பதற்கும் தங்களது இணக்கத்தைத் தெரிவித்தனர். இராக் மீதான போர் தவறான திசையில் செல்ல ஆரம்பித்தவுடன், அமெரிக்க மக்கள் அந்தப் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.போரும் சமாதானமும் மீண்டும் மீண்டும் சுழலும் சக்கரம் போல அமெரிக்காவில் நிகழ்கின்றன. போருக்குப் பின் வரும் சமாதானத்தை நீட்ட அமெரிக்கா அடுத்து வரும் போரின் ஆரம்ப காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது, 1938-இல் நாட்ஸி ஜெர்மனியை அடக்க பிரிட்டிஷ் பிரதமர்    நெவில் சேம்பெர்லேன் ம்யூனிக்-இல் ஹிட்லர்-உடன் நடத்தியப் பேச்சுவார்த்தைக்கு சமம் என்ற குற்றச்சாற்று எழக் காரணமாகிறது. அந்தக் குற்றச்சாற்றை மறுத்து அமெரிக்கக் கொள்கையாளர்கள்  போரில் தலையிடுகின்றனர்.  அது அவர்கள் எதிர்பார்த்ததை விட பெரிய போராக மாறுகிறது. அந்தப் போர் வெற்றி அல்லது தோல்வியில் முற்றியவுடன்,  அதன் விளைவுகளால் அமெரிக்கா உலகின் நடப்புகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. அமெரிக்காவின் நிலவியல் இந்த நிலைக்குத் துணையாக விளங்குகிறது. அதன் இரு எல்லைகளிலும் கடல் இருப்பதால், அமெரிக்க நாட்டைத் தாக்கும் வெளிநாட்டுச் சக்தி மிகுந்த அளவில் வளங்களை செலவிட வேண்டியிருக்கிறது. இதனை, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அமெரிக்கா, வரம்புக்குள் அடங்கி இருப்பதற்கு வியட்நாமையும் வரம்பு மீறி செயல்படுவதற்கு ம்யூனிக்-ஐயும் அடையாளம் காட்டுகிறார். அமெரிக்காவின் சக்தி குறைந்து வரும்  நேரத்தில் (மக்கள்தொகை மற்றும் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் தேர்வுகள் மூலமாகவும்), அதன் எஞ்சிய சக்தியை (மற்ற நாடுகளை மிஞ்சிய அளவு இருந்தாலும்) ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களில் சமநிலைப்படுத்தும் சக்தியாகவும் (ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களின் உள்ள போட்டிகளுக்கு சமாதானம் கொண்டு வரும் அமைப்புகளை ஊக்குவிக்க)  அமெரிக்கக் கண்டத்தில் ஒற்றுமையாக்கும் சக்தியாகவும் (மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் மக்கள்தொகையால் அமெரிக்காவின் உள்நாட்டு நிலை மாறும் - இதனை நிறுத்தும் முயற்சியாக டிரம்ப் கோரும் அமெரிக்க மெக்சிகோ எல்லையில் கட்டும் சுவர் எனக் கொள்ளலாம்)  நடக்க வேண்டும்.
நிலவியல் எல்லா நாடுகளுக்கும் அவரவரது சூழலில் நிரந்திரமானது. அமெரிக்காவைப் போல்  மற்ற நாடுகளின் நிலவியல் சாதகமாக இல்லை.  அரப் வசந்தம் அங்குள்ள நாடுகளை இரண்டு விதத்தில் பாதித்தது - சில நாடுகள் தங்களது சமநிலையை மீண்டும் அடைந்தன, சில நாடுகள் அதனை அடையவில்லை.  சமநிலையை அடைந்த நாடுகளில் டுனிஸியாவும் எகிப்தும் அடங்கும். டுனிஸியாவின் இன்றைய தலைநகரமான டுனிஸ்,  பண்டைய காலத்தில் கார்தேஜ் ராஜ்யம் ஆண்ட இடத்தில் இருக்கிறது.  எகிப்து, உலகின் பழமையான மற்றும் சிறந்த நாகரிகங்களில் ஒன்றாகும். சமநிலையை அடையாத நாடுகளின் எண்ணிக்கையில் யெமன், ஸிரியா மற்றும் லிப்யா அடங்கும். அவற்றில் தீவிர உள்நாட்டுப் போரும் நலிந்த நிர்வாகமும் பரவியுள்ளன( அந்த நாடுகளின் எல்லைகள், அங்குள்ள நிலவியலை கருத்தில் கொள்ளாமல் ( பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-இனால்) வரையப்பட்டதும் இந்த நிலைக்கு ஒரு காரணம் ஆகும்).
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பான போக்கினால் நடந்த  இரண்டு   உலகப் போர்களுக்கு அதன் நோக்குநிலை மேற்கிலிருந்து கிழக்கு ( மேற்கில் பிரான்ஸ்-உம் கிழக்கில் ருஷியா-உம்) நோக்கி இருப்பதாகக் கொள்ளலாம். இரு தரப்பில் இருந்தும் படையெடுப்பு வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். பிரிட்டன் ஐரோப்பாவிற்கு அப்பாற்பட்ட தீவாக இருந்ததினால், வலிமை பொருந்திய சக்தியாக வளர முடிந்தது. ஜெர்மனி, நிலம் சார்ந்த படையெடுப்பை எதிர்கொள்ள, தன்னை நிலம் சார்ந்த சக்தியாக உருவாக்கிக் கொண்டது. பிரிட்டன் தன்னுடைய தீவு நிலவியலைக் காத்துக் கொள்ள, தன்னை கடல் சார்ந்த சக்தியாக உருவாக்கிக் கொண்டது.
இந்தியா மிகவும் ஆபத்து நிறைந்த நிலவியல் தெற்கு ஆசியச் சூழலில் இருக்கிறது. அதனை சுற்றி இருக்கும் நாடுகளின் நிலவியல் செயற்கைத் தன்மையுடனும் பண்டைய காலத்து நிலவியலுக்கும் வேறுபட்டு இருக்கிறது. ஆஃப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் ஹிந்து குஷ் மலைச்சாரலை ( பஷ்டூன்களின் நிலம்) தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால் இரு நாடுகளும் சமநிலையில் இல்லை. பண்டைக் காலத்தில் இருந்து, தெற்கு ஆசியாவில் மேலோங்கி இருந்த சக்திகள் இண்டஸ் மற்றும் மேற்கு கங்கை ஆறுகளைத் தங்கள் எல்லைக்குள் கொண்டு ஆண்டனர். இன்று, இண்டஸ் நதியை பாகிஸ்தானும் கங்கையின் மேற்கு பாகத்தை இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன. ஹிந்து தேசியவாதிகளிடையே காய்ச்சல் தரக் கூடிய அளவு தீவிர விருப்பமாக அகண்ட் பாரத் இருக்கும் போதிலும் , சில விதிவிலக்குகளுக்கு அப்பால் (மௌர்ய ராஜ்யம்), ஒற்றுமையான இந்தியத் துணை கண்டம் என்பது வரலாற்றில் கானல் நீராக இருந்திருக்கிறது. பெரும்பாலும், இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்றாக்கும் முயற்சிகள், டெக்கான் பீடபூமியில் தோல்வி அடைந்தன. அதே நேரத்தில், சீன வரலாற்றில் அதன் எல்லைகளுக்குள் ஒருமித்தக் கட்டுப்பாட்டை செயல்படுத்தியிருக்கிறது. அதனால், சீனா இந்தியாவை விட, அண்டை நாடுகளின் மேல் சக்தியை பாய்ச்சுவதில் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் நிலவியல், அதன் எல்லைகளுக்குள் சக்தியைச் செலுத்துவதற்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவில், அண்டை காலத்தில் இருந்து நிலவியல் காரணமாக, ஒரு ராஜ்யத்தின் சக்தி அதன் கூட்டணி ஆதரவின் மூலம் பகிரங்கப்படுத்தபட்டது (இன்றைய கூட்டணி அரசியலுக்கும் இது பொருந்தும்).  மத்திய இந்தியாவின் சிதறிய துளிகள் போன்ற மாநிலங்கள் (பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், சட்டிஸ்கர்ஹ்)  இருப்பதற்கு அந்த பகுதியின் மண்வளம் மக்கள் தழைப்பதற்கு உதவியாக இருந்தாலும், கடலின் அருகில் இல்லாததால் பொருளாதார வளர்ச்சி குன்றியதும் ஒரு காரணமாகும்.  தெற்கு இந்தியாவின் மாநிலங்கள், கடலின் அருகில் இருந்ததால், அண்டைய நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இஸ்லாம், வட இந்தியாவில் போர் மூலம் நுழைந்தாலும், தெற்கு இந்தியாவில் வணிகம் மூலம் நுழைந்தது. இந்திய பாகிஸ்தானின் எல்லைப் பகிர்வுக்கு பிரிட்டனின் தகுதியற்ற, பொறுப்பற்ற, இறுமாப்பு நிறைந்த சக்தியே காரணமாகும்.
உலகமெங்கும் உள்ள மெகா நகரங்களில்( மக்கள் தொகை 10 மில்லியனுக்கு மேல்), மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. அதைக் காட்டிலும், 10 மில்லியன் கீழ் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வளர்ச்சி அதையும் மிஞ்சி உள்ளது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பினால், நகரங்களில் இருக்கும் வெற்றிடங்கள் குறைந்து வருகிறது.
இதனால், நகரங்களின் சமநிலைமை குறைவது மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தினாலும் கூட்ட உளவியலினாலும் மக்களின் தனிமை அதிகரித்துக்கொண்டே போகிறது.
நிலவியல் சார்ந்த அரசியல் வல்லுநர்கள், வெவ்வேறு  நாடுகளும் பகுதிகளும் உலகத்தை தங்களைச் சூழ்ந்த நிலவியல் மூலம்  காணும் நோக்கினை ஆராய பல கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். இந்த வல்லுநர்கள் அனைவரும் மேற்கத்திய நாகரிகத்தில் வளர்ந்தவர்கள் ஆனதால், ஐரோப்பா அல்லது அமெரிக்கா-வின் நோக்கத்தை நடுநாயகமாக வைத்து அலசியிருக்கிறார்கள்.
வில்லியம் ஹார்டி மெக்னீல் - மெக்னீல்-ஐப் பொறுத்த வரை, நாகரிகங்களும் கலாச்சாரங்களும் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. அந்த தொடர்பின் விளைவு உலக வரலாறாக உருவெடுக்கிறது. முந்தைய காலத்தில், வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் நாகரிகங்களுக்கும் இடையே நிறைய வெற்றிடம் இருந்தன. இன்றைய காலகட்டத்தில்,   இந்த வெற்றிடத்தை கலாச்சாரங்களும் நாகரிகங்களும் நிரப்பி விட்டன. அதனால், தொடர்புகளின் அதிர்வெண் கூடிக் கொண்டுப்போவதோடு, அவற்றின் விளைவுகள் மேலும் மேலும்  நிச்சயமற்றதாக உருவெடுக்கின்றன. இந்த கோட்பாட்டில், இந்திய துணைக்கண்டம், வடக்கே மலைகளால்   காக்கப்பட்டாலும், அதே மலைகளிலிருந்து கிளம்பிய  காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களால், அதன் நாகரிகமும் கலாச்சாரமும் வெகுவாக மாறின.
ஆஸ்வால்ட் ஸ்பெங்க்ளர் - இவர் 'காஸ்மோபாலிடனிஸம் வேரற்றத்தன்மையின் சாரமாகும்' என்று கூறியவர். ஸ்பெங்க்ளரின் கோட்பாட்டில் ஒரு நாட்டின் கலாச்சாரமும் நாகரிகமும் அந்த மண்ணையும் அங்குள்ள மக்களின் இரத்தையும் சார்ந்தவை. மெக்னீல்-உக்கு மாறாக, மற்ற கலச்சாரங்களுடனும் நாகரிகங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, அசல் கலாச்சாரமும் நாகரிகமும் வீரியம் இழைந்து கலப்படப்பட்டு விடுகின்றன. ஒரு இடத்தின் கலாச்சாரமும் நாகரிகமும் மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் பொழுது, அவை வேரற்று போய் வீக்கமடைகின்றன.
ஹல்ஃபொர்ட் மாக்கிண்டர் - மாக்கிண்டரின் கோட்பாடுகள் இருபதாம் நூற்றாண்டின் முன்னோடியில் (1904) பிரிட்டன் ஏகாதிபத்திய பேருருவம் கொண்டு இருந்த போது வரையுறுத்தப்பட்டது. அதனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஓரவஞ்சனை உள்ளதாகக் காணப்படுகிறது. அவரது கோட்பாட்டில் உலக ராஜ்யங்களின் தலைவிதி மத்திய ஆசியாவைச் சார்ந்து இருக்கிறது. வரலாற்றில் கண்டுபிடிப்பு சகாப்தம் என கூறப்படும் கொலம்பியன் சகாப்தத்தில், ஐரோப்பா-வின் நாடுகள் கடல் வழியாக தங்கள் சக்தியை உலகமெங்கும் பரவின. அதற்கு மிகக்குறைய எதிர்ப்பு இருந்தது. ஐரோப்பா-வின் சக்திகள், மேலும் பரவ இடமின்றி, இரண்டு உலகப் போர்களை நடத்தின. மத்திய ஆசியா உலகின் இதயநிலம் என்றும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஃப்ரிக்கா உலகத் தீவு என்றும், முக்கிய மதங்கள் பரவலாக இருக்கின்ற பகுதிகள் (தூரத்து கிழக்கு - பஸிஃபிக் பெருங்கடல் - புத்த மதம், இந்திய துணைக்கண்டம் - இந்தியப் பெருங்கடல் - ஹிந்து மதம், ஐரோப்பா - அட்லான்டிக் பெருங்கடல் - கிறிஸ்துவ மதம், மத்திய கிழக்கு - கிறிஸ்துவ, இஸ்லாமிய, யூத மதங்கள்) பருவமழை நிலங்கள் என்றும் அலசலுக்காகக் கருதுகிறார்க. பருவ நிலங்கள் அங்குள்ள மதங்களை பாதித்தாலும், அந்த மதங்கள் அந்த நிலங்களின் பலனையும் பாதிக்கின்றன. மாக்கிண்டரின் புகழ் பெற்ற தீர்ப்பு:
யார் கிழக்கு ஐரோப்பா-வை ஆள்கிறார்களோ அவர்கள் இதயநிலத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்:
யார் இதய நிலத்தை ஆள்கிறார்களோ அவர்கள் உலகத் தீவை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்:
யார் உலகத் தீவை ஆள்கிறார்களோ அவர்கள் உலகை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்:
அவரது அலசலில், மங்கோலிய அரசனான ஜெங்கிஸ் கான்-இன் வெறியினால், இந்தியா, சீனா, துருக்கி, மத்திய கிழக்கு கலாச்சாரமும் நாகரிகமும் அழிந்தன. ஐரோப்பா அவனது வெறியில் இருந்து பிழைத்ததனால், பின்காலத்தில் தழைத்து உலகை ஆண்டது. மாக்கிண்டரின்  கோட்பாடுகளை கார்ல் ஹௌஸ்ஹஃபர்  மூலம் அறிந்த ஜெர்மனியின் ஹிட்லர், யூதர்களின் பேரழிவுக்குக் காரணமாக இருந்த நாட்ஸி படையெடுப்புகளுக்குப் பின் இருந்த 'லெபென்ஸ்ரௌம்' (வாழும் இடம்)  என்ற கொள்கையை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மாக்கிண்டர்-இன் கோட்பாடுகளின் மதிப்பை ராபர்ட் ஸ்ட்ரௌஸ் ஹுப் என்பவர், நாட்ஸிகள் தனிமனித மற்றும் தார்மீகப் பொறுப்பு இல்லாமல்  பயன்படுத்தியதால், அந்தப் பழியை மாக்கிண்டர் மேல் போட முடியாது என்று வாதாடினார்.
மார்ஷல் ஜி எஸ் ஹாஜ்ஸன் - இவரது கோட்பாட்டில், இஸ்லாம் எப்படி வளர்ந்தது என்பதைக் காணலாம். இஸ்லாம் மதம், உலகமெங்கும் பரவியிருப்பதால், அதன் வளர்ச்சியில் நிலவியலின் பங்கு பற்றி எழுதியுள்ளார். மேலும், நிலவியல் அலசலில் ஐரோப்பா-வை மையமாக வைப்பதனால் ஏற்பட்ட சிதைவையும், உலகத்தைக் காட்டும் வரைபடங்களில் (மெர்கேடர் ப்ரோஜெக்ஷன்), வெவ்வேறு கண்டங்கள் அசலான அளவுகோலிலிருந்து மாறுபட்டு இருப்பதையும்  சுற்றிக் காட்டியுள்ளார் (நிலபரப்பு தகவல் அமைப்புகளில் உள்ள வரைபடங்களை பயன்படுத்துபவர்களுக்கு இது பழக்கமான பிரச்சினை).
நிக்கொலஸ் ஜெ ஸ்பைக்மன் - அமெரிக்கா மேலாதிக்கச் சக்தியாக உருவானது, 1898-இல் முடிந்த ஸ்பெனிஷ் அமெரிக்கன் போர்-இல் வெற்றி பெற்றதனால் என்று இவர் கூறுகிறார், பெரும் கரிபியன் கடலை தன் கட்டுக்குள் கொண்டு வந்ததனால், அமெரிக்கக் கண்டத்தை (தெற்கு மற்றும் வடக்கு) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. வரைபடத்தில் உள்ளது போல் இரண்டு அமெரிக்கக் கண்டங்களாகப் பார்க்காமல், அமேஸான் நதிக்கு சுற்றி உள்ள காட்டின் வடக்குக்கு உள்ள மக்களை ஒரு பகுதியாகவும், அந்த காட்டின் தெற்கே உள்ள மக்களை மறு பகுதியாகவும் பார்க்கிறார். ருஷியா (அன்றைய சோவியத் யூனியன்) தனது நில சக்தியை மேம்படுத்த, கடலை அடையக் கூடிய பாதை ஒன்றை என்றும் விரும்பும் என்பது இவரின் கணிப்பு (சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானை முற்றுகையிட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் - பாகிஸ்தானை நிலைகுலையவைத்து, இந்தியப் பெருங்கடலுக்கு முன்னேறுவது). இந்த நோக்கில், அமெரிக்கா-விற்கும் சோவியத் யூனியன்-க்கும் நடந்த குளிர்ப் போர் ஆரம்ப காலத்தில் பிரபலமான ஜார்ஜ் கென்னன்-இன் நீண்ட தந்தியின்  கொள்கையான கட்டுப்படுத்தல்-ஐ விளக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த ஐரோப்பா (வெளியுறவுக் கொள்கை, ஐரோப்பியப் படை), அமெரிக்கா-வின் கூட்டாளியாக இல்லாமல் போட்டியாளராக உருவெடுக்கும்.
ஆல்ஃப்ரெட் தெயர் மஹன் - இவரது ஆய்வறிக்கைகளினால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், அமெரிக்கா மேலாதிக்கச் சக்தியாக எழுவதற்கு, கடல் படையில் வெகுவாக முதலீடு செய்தது. இன்றைய காலகட்டத்தில், இந்தியா மற்றும் சீனா-வின் வளர்ச்சியின் பின் அந்த நாடுகளின் கடல் படை அதிகாரிகள், மஹன்-இன் அலசல்களை ஆராய்ந்து வருகின்றனர். நிலத்தில் செல்வதை விட நீரில் பயணிப்பது எளிது மற்றும் மலிவு என்றும் அதனால் உலக அரசியல் போராட்டங்களின் முடிவு கடல் படை வலிமையால் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினார். இதனை பயன்படுத்தி, பிரிட்டன்-உம் அமெரிக்கா-வும் உலகின் பெரிய சக்திகளாக உருவெடுத்தன.
பால் ப்ராக்கன் - ஆசியாவின் மக்கள் தொகை பெருக்கத்தாலும், பொருளாதார வளர்ச்சியாலும், அங்குள்ள நாடுகள் ராணுவ வன்பொருள் மற்றும் மென்பொருள் முதலீட்டை பெருக்கியிருக்கின்றன. அதே சமயத்தில், அவர்களுக்கு நடுவில் இருந்த வெற்றிடங்கள் குறைந்து விட்டன. மேலும், இடையூற்று தொழில்நுட்பங்களாகிய கணினி, வைரஸ் மற்றும் நிறைந்த அழிவு ஆயுதங்கள் (வெபென்ஸ் ஆஃப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்) மூலம், ஆசியாவில் உள்ள நாடுகளின் இடையே உள்ள தொடர்புகளின் முடிவு நிச்சயமற்றதாக இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்ற குறிப்புகள்:

எ ஹண்ட்ரட் ஹொறைஸான்ஸ்: தி இந்தியன் ஓஷன் இன் தெ ஏஜ் ஆஃப் க்ளோபல் எம்பையர் - சுகாதா போஸ்
அனதர் ப்ளடி செண்சரி: ஃப்யூசர் வார்ஃபேர் - காலின் எஸ் க்ரேய்
லெவியாதான் - தாமஸ் ஹாப்ஸ்
தி பிலோபொனெசியன் வார் - தூஸிடிடெஸ்
ஃபையர் இன் தி ஈஸ்ட்: தி ரைஸ் ஒஃப் ஏஷியன் மிலிட்டரி பவர் அண்ட் தி செகண்ட் ந்யூக்ளியர் ஏஜ் - பால் ப்ராக்கன்
ஜியோக்ராஃபிகல் ஃபாக்டர்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி - கெ எம் பனிக்கர்
மான்சூன்: தி இந்தியன் ஓஷன் அண்ட் தி ஃப்யூசர் ஆஃப் அமெரிக்கன் பவர் - ராபர்ட் டி காப்ளன்

Copyright © 2017 Kunthavaiyin Kaathalan

No comments: