பணம் என்னடா பணம் பணம்...

சுருக்கம்:
இந்தியா போன்ற சோஷியலிஸ்ட் நாடுகளில் செல்வச் செழிப்புச் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. 1991-ஆம் வருடத்திற்குப் பின் தாராளமயமாக்கலின் விளைவாக, செல்வம் குவிப்பது பிரபலம் அடைந்துள்ளது. கம்யூனிஸத்தின் அழிவும் சோஷியலிஸத்தின் தோல்வியும், உலகில் பொருளாதார முன்னேற்றதிற்கான ஒரேப் பாதை காபிடலிஸம் தான் என்ற முடிவைத் தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது (க்யூபா போன்ற நாடுகள் விடாமுயற்சியாகக் கம்யூனிஸத்தைக் கடைப்பிடித்தாலும் அந்தக் கொள்கை வெற்றிப் பெறுவதுச் சாத்தியமில்லை). காபிடலிஸத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முன்னணி நாடாக விளங்கும் அமெரிக்கா, அதற்கும் ஸோவியத் யூனியனிற்கும் இடையே நடந்தப் பனிப் போரில் கிடைத்த வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடியது - ஃப்ரான்ஸிஸ் ஃபுகயாமா போன்றப் பொருளாதார நிபுணர்கள், வரலாற்றின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது என்றுக் கொக்கரித்தார்கள். காபிடலிஸத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் பயன்கள் பெரும்பாலாகச் செல்வந்தர்களுக்குப் போய் சேரும் வகையில் அமைந்துள்ளது. தன்னை எதிர்த்து நின்றக் கொள்கைகளின் தோல்வியால், காபிடலிஸத்தின் முரட்டுத்தனமான விளைவுகளை மிதப்படுத்தும் காரணிகள் (தொழிலாளர் உரிமை, வணிகக் கட்டுப்பாடுகள், வருமான மறுப் பகிர்வுகள்) சிறிதுச் சிறிதாக அகற்றப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தில், பல நாடுகளில், காபிடலிஸத்திற்கு மாறியதால் உருவான லட்சாதிபதிகளையும் கோடீஸ்வரர்களையும் ஆசிரியர் அலசியிருக்கிறார். காபிடலிஸத்தின் வளர்ச்சியால், ஏற்கனவே விரிதடைந்திருந்த வருமான வேறுபாடுகள் நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் மேலும் அதிகமடைந்துள்ளன.  அமெரிக்க மக்கள், தங்களுடையப் பிறப்பு நிலையைப் பொருட்படுத்தாது, எவர் வேண்டுமானாலும் செல்வந்தர் ஆகலாம் என்றக் கனவில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால், அவ்வாறு நிஜ வாழ்க்கையில் நடக்கக் கூடியச் சாத்தியக் கூறுகள் மிகவும் மலிவாக உள்ளன என்ற உண்மையை மறக்கின்றனர். 2008-ஆம் வருடத்திற்குப் பிறகு அரசியல் பூகம்பங்களாக வெடித்த ப்ரெக்ஸிட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டானல்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மக்களிடையே, தங்களதுப் பொருளாதார எதிர்க்காலம், அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளித்ததுப் போல், ஒளி மயமாக இல்லை, என்ற ஞானோதயம் வந்தது ஒருக் காரணமாகும். 2008-ஆம் வருடப் பொருளாதாரச் சரிவிற்கு முன்பு அரசியல் தலைவர்களிடையே மக்களுக்கு இருந்த நம்பிக்கை அறவே அழிந்து, அதற்குப் பதிலாக, பயமும், தங்களுடையச் சந்ததியினரின் வருங்காலம் கேள்விக்குறியாகி விட்டதே என்ற ஆத்திரமும் ஆட்கொண்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், 2008-ஆம் வருடத்தில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குப் பின், அமெரிக்கா-வில் வாழும் 99% மக்களுக்கு அவர்களது வருமானம் 0.2% மட்டுமே அதிகரித்தது. அதற்கு மாறாக, அதேக் காலக்கட்டத்தில், செல்வச் செழிப்பில் திளைக்கும் 1% மக்களுக்கு 11.6% வருமான அதிகரிப்புக் கிடைத்தது. அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்தியா(உதாரணத்திற்கு, கேலிக்கூத்தான "இந்தியா ஷைனிங்க்" போன்ற அரசியல் யுக்திகள்), சீனா மற்றும் ரஷ்யா-விலும் இந்தப் போக்குக் காணப்படுகிறது.  2008-ஆம் வருடத்தில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு, செல்வச் செழிப்பின் உச்சத்தில் உள்ள 1% மக்களுக்கும், அவர்களைக் காட்டிலும் குறைவாகச் செழிப்படைந்த 99% மக்களுக்கும், பங்குச் சந்தையின் போக்கு ஒரு உதாரணமாக அமைகிறது - பங்குச் சந்தையின் விலை அதிகரித்துக் கொண்டேப் போனாலும்(செல்வச் செழிப்பின் உச்சத்தில் உள்ள 1% மக்கள் பெரும்பாலும் தங்களதுப் பணத்தைப் பங்குச் சந்தையில் வைக்கின்றனர்), சாதாரண மக்களின் அடிப்படைப் பொருளாதார நலம் கேள்விக்குறியாக இருந்தது.
அலசல்:
பொருளாதார நிபுணர்களிடையே வருமான வேறுபாடுகள், தொழில் புரட்சி வெடிப்பதற்கு முந்தையக் காலக்கட்டத்தில், குறைவாகவும், தொழில் புரட்சியினால் அதிகமாகி, அது முடிந்தவுடன் மீண்டும் குறைந்த நிலைக்கு வந்து விடும் என்றக் கருத்துப் பரவலாக இருக்கிறது. இதனை, ஸைமன் குஸ்னெட்ஸ் என்றப் பொருளாதார நிபுணர் வரையறுத்த குஸ்னெட்ஸ் வளைவு என்பதன் மூலம் விளக்குகிறார்கள்.இதனால், காபிடலிஸம் நோக்கிச் செல்லும் பல நாடுகளில் இன்றையக் காலத்தில் அவர்கள் படும் அவதிக்கு, காபிடலிஸத்தில் முழுக்கத் தேர்ச்சிப் பெற்றப் பின்,  வருமான வேறுபாடுகள் குறைந்து விடிவுக் காலம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், இந்தக் கோட்பாட்டிற்கு மாறாக, நிஜ வாழ்க்கையில் அநேக நாடுகளில் உள்ளச் செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருக்கும் 1% மக்கள், எஞ்சிய 99% மக்களைக் காட்டிலும் மிகுந்த வேகத்துடன் செல்வச் செழிப்பை அடைந்துள்ளனர். இந்த வருமான வேறுபாடு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேப் போகிறது.
வரலாற்றில் பின்நோக்கிப் பார்க்கும் பொழுது, மேற்கு ஐரோப்பா-வில் இருந்த நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) மதிப்பு, கி.பி 1 - 1000 காலத்தில், ஆண்டுக்குச் சராசரி 0.1 % குறைந்தது. மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் கிளை நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து மற்றும் கானடா-வில், அது, ஆண்டுக்குச் சராசரி 0.05%  வளர்ந்தது. கி.பி 1000 - 1820 காலத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஜி.டி.பி, ஆண்டுக்குச் சராசரி 0.34% ஆக வளர்ந்தது. அதேக் காலத்தில், மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் கிளை நாடுகளின் ஜி.டி.பி, ஆண்டுக்குச் சராசரி 0.35% ஆக வளர்ந்தது. கி.பி 1820 - 1998 காலத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சி, ஆண்டுக்குச் சராசரி 2.13% ஆக வளர்ந்தது. அதேக் காலத்தில், மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் கிளை நாடுகளில், ஜி.டி.பி 3.65% ஆக வளர்ந்தது - இது, ஏகாதிப்பத்தியம் மற்றும் கொத்தடிமைத்தனத்தினால் சூறையாடப்பட்டச் செல்வத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. ஆசிரியர், இந்த வளர்ச்சிக்கு, மேற்கு ஐரோப்பா-வின் தொழில் புரட்சியால் இந்த வளர்ச்சி நிகழ்ந்தது என்றுக் கூறுகிறார். அமெரிக்கா-விற்குச் சுதந்திரம் கிடைத்தப் பொழுது, அன்றைய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத் தலைமைச் சக்தியான இங்கிலாந்தைக் காட்டிலும் செல்வத்தில் சமத்துவம் நிறைந்த நாடாகத் திகழ்ந்தது. தொழில் புரட்சியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சி அபாரமான அளவில் இருந்தாலும், அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டச் சிலருக்கு மட்டுமே அதிக அளவில் செல்வச் செழிப்புக் கிடைத்தது. மற்றவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கைப் பிழைப்பை அழித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், வருமான வேறுபாடுகளின் அளவு வெகு அதிகமாக இருந்தது - இந்த வேறுபாடுகள், இரண்டு உலகப் போர்களின் வீரியத்தினால் குறைந்தது. தொழில் புரட்சியினால் வெகுவாய் அதிகரித்த வருமான வேறுபாடுளைக் குறைப்பதற்கு, வணிகக் கோட்பாடுகளுக்கும், வருமான வரி போன்ற மறுப்பகிர்வு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா-வில் உள்ள மக்களின் ஆதரவுக் கூடியது. 1944-ஆம் வருடம், அமெரிக்கா-வில் அதிகப்பட்சமாக 94% வருமான வரி விதிக்கப்பட்டது. வருமான வேறுபாடுகளின் அதிகரிப்பினால், கம்யூனிஸக் கொள்கைகளின் ஈர்ப்பு(தவறானக் கொள்கையாக இருந்தாலும்), மேற்கு ஐரோப்பா-விலும்  அமெரிக்கா-விலும் வளர்ந்தது. கம்யூனிஸக் கொள்கை ஆட்சிக்கு வந்த ரஷ்யா, சீனா மற்றும் இதர நாடுகளின் வாழ்க்கைத் தரம் குறைந்தே இருந்தது. கம்யூனிஸக் கொள்கைகளின் பரவலைத் தடுக்க, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா-வில் உள்ளச் செல்வந்தர்கள், மறுப்பகிர்வுக் கொள்கைகளை சிறிதளவில் ஆதரிக்கத் தொடங்கினர். இதனால், அங்குள்ள நாடுகளில், உச்சியில் உள்ள 1% செல்வந்தர்களின் வருமானப் பங்கு, 1940-ஆம் வருடத்தில் 16%-இல் இருந்து, 1970-ஆம் வருடம் 7% ஆகக் குறைந்தது. 1970-களில், தொழில்நுட்பப் புரட்சியும் உலகமயமாக்குதலும் பரவ ஆரம்பித்ததால், மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா-வில் உச்சியில் இருந்தவர்களுக்கும் கீழ்தட்டில் இருந்தவர்களுக்கும் இருந்தச் சமரசம் நிலைகுலைய ஆரம்பித்தது. தொழில்நுட்பப் புரட்சியும் உலகமயமாக்குதலும், உலகின் மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு ஊக்குதலாக அமைந்தது. ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ப்ரேஸில் போன்ற நாடுகள், இந்த இருக் காரணிகளால், வளர்ந்த நாடுகளின் வரலாற்றில், அதே வளர்ச்சிப் படியில் இருந்ததை விட, கூடுதல் வளர்ச்சியை சிறியக் காலத்தில் எட்டினர். அமெரிக்கா-வில் இந்த இருக் காரணிகளால், சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை வெகுவாக மாறியது. 1970-களுக்கு முன்பு, அமெரிக்கா-வின் கார் நிறுவனங்களின் தலைமையில், வலிமையானத் தொழிற்சங்கங்கள், அதிக அளவில் வருமான வரி, அதிக அளவில் குறைந்தப்பட்சக் கூலி (ட்ரீடி ஆஃப் டிட்ராய்ட்) என்பதிலிருந்து நலிந்தத் தொழிற்சங்கங்கள், குறைந்த அளவு வருமான வரி மற்றும் குறைந்த அளவுக் குறைந்தப்பட்சக் கூலிக்கு (வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸ்) மாறியது. கம்யூனிஸக் கொள்கைத் தோல்வி அடைந்ததால், தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்க மாட்டார்கள் என்றத் திடமான நம்பிக்கையில், வணிகத் தலைவர்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்கத் தொடங்கினர்.
இன்றுப் போல், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் வருமான வேறுபாடுகள் அதிகமாக இருந்தன. இருக் காலக்கட்டத்திலும், செல்வச் செழிப்புள்ளவர்கள் தங்களுக்குக் கீழ் இருந்த மக்களை விட, அதிகத் தகுதி இருப்பதாக நம்பினர். அமெரிக்கா-வில் வாழ்க்கையில் எந்த நிலையில் இருப்பவர்களும் செல்வச் செழிப்பை அடையலாம் என்று மத்தியத் தர மற்றும் ஏழை மக்கள் தவறாக எண்ணுகிறார்கள். அதற்கு மாறாக, ஆன்ட்ரூ கார்னெகி போன்றச் செல்வச் செழிப்பு மிகுந்தவர்கள், வருமான வேறுபாடுகள், மக்களுக்கு இடையேப் பிரிவினையை ஏற்படுத்தும் என்று நம்பினர் - இந்தப் பிரிவினை, இந்தியா-வில் பரவலாக இருக்கும் சாதிப் பிரிவினைப் போல், பிறப்பில் ஆரம்பித்து, வாழ்க்கை முழுவதும் சில மக்களுக்கு அதிக அளவு நன்மை அளிக்கின்றது. செல்வச் செழிப்புள்ளவர்களிடம், முதலீடுச் செய்வதற்கு ஏற்ற அளவுச் செல்வம் இருப்பதால், தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல், வெளி நாடுகளிலும் லாபம் தேடுகின்றனர். அவர்களதுச் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் அதே  நேரத்தில், வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸ் மூலம் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியும் குறைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா-வில் உள்ள மத்தியத் தர மற்றும் ஏழை மக்கள், தங்களிடம் அதிக அளவில் முதலீடுச் செய்யக் கூடிய அளவுச் செல்வம் இல்லை என்பதால், வெளிநாடுகளில் நிகழும் வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொள்ள முடியாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில், தொழில்நுட்பப் புரட்சி, உலகமயமாக்கல் போன்றவற்றினால், அவர்களது வேலை வாய்ப்புகளும் குறைந்த வண்ணம் இருக்கின்றன. தொழில் புரட்சியினால், சில மக்களுக்குப் பிரம்மாண்டமான அளவுச் செல்வம் கிடைக்கும் வாய்ப்பு உருவானது. இன்றையக் காலக்கட்டத்தில், செல்வச் செழிப்பின் அதிகரிப்பு ஒரேச் சமயத்தில் இரு வேறுப் பிராந்தியங்களில் நிகழ்கிறது - தொழில்நுட்பப் புரட்சி, உலகமயமாக்குதல் மற்றும் வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸ் மூலம் வளர்ந்த நாடுகளிலும் சில வளர்ந்து வரும் நாடுகளிலும் (உதாரணத்திற்கு, இந்தியா, சீனா, ரஷ்யா, ப்ரெஸில்) செல்வச் செழிப்பு அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் நிகழும் செல்வச் செழிப்பு, வளர்ந்த நாடுகளில் முடிவுற்றத் தொழில் புரட்சியின் பாடங்களை உட்கொண்டு, முன்னை விட அதிவேகமாகப் பரவுகின்றது. காலங்காலமாக, வளர்ந்து வரும் நாடுகளின்  தொழிலாளர் ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், இதனைப் பயன்படுத்தி தங்களது லாபத்தை அதிகரிக்கத் தடுமாறினர் - அமெரிக்கா-விற்கும், சோவியத் யூனியன்-இற்கும் இடையே நடந்தப் பனிப் போர் மற்றும் ட்ரெடி ஆஃப் டிட்ராய்ட்-இன் விளைவாக வளர்ந்த நாடுகளில் உள்ளத் தொழிலாளர்கள், வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தங்களது வேலை அனுப்புவதை எதிர்த்ததுப் போன்றவைச் சிலக் காரணங்களாகும். வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸ் விரைவாகப் பரவியதனால், வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில்துறைச் செல்வந்தர்கள், வளரும் நாடுகளில் உள்ளக் குறைந்த விலைத் தொழிலாளிகளைப் பயன்படுத்தித் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். அதே ரீதியில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளத் தொழிலாளர்களுக்கு, அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாயின. மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள், இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம், வளர்ந்த நாடுகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றியத் தெள்ளத் தெளிவான உண்மையை அறிகின்றனர். தொழில் புரட்சியின் பொழுதுச் செல்வச் செழிப்பு அடைவதற்கு, அந்தப் புரட்சி நிகழ்ந்த வளர்ந்த நாடுகளில் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இன்றையக் காலக்கட்டத்தில் செல்வச் செழிப்பு அடைவதற்கு, எங்கு வேண்டுமானாலும் இருந்துக் கொண்டு, வெளிநாடுகளில் செல்வம் சேர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது.  அதனால், நிதித்துறையிலும் பொறியியலிலும், வளர்ந்த நாடுகளில் பலர் வீட்டில் இருந்துக் கொண்டேச் செல்வம் சேர்க்கின்றனர். வளர்ந்த நாடுகளில் உள்ள மத்தியத் தர மற்றும் ஏழை மக்கள், இருப் பிராந்தியங்களிலும் நிகழும் செல்வச் செழிப்பில் கலந்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். அதே நேரத்தில், நிறுவனங்கள், தங்களுடைய நடவடிக்கைகளைத் தங்களது லாபத்திற்கு ஏற்ற நாடுகளுக்கு மாற்றி, இந்த இருப் பிராந்தியங்களிலும் நிகழும் செல்வச் செழிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். தங்களதுத் தொழிலாளர் ஊதியத்தைக் குறைக்க வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியும், சட்டம் மற்றும் வணிகக் கோட்பாடுகள் நன்றாகச் செயல்படும் வளர்ந்த நாடுகளில் தங்களுடையத் தலைமைக் கிளையையும் வைத்து, இருப் பிராந்தியங்களின் செல்வ வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நிறுவனங்களைப் போல், தங்களுக்குத் தேவையானப் பொழுது வெவ்வேறு நாடுகளுக்குத் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது, மத்தியத் தர மற்றும் ஏழை மக்களுக்குக் கடினமாக இருக்கிறது.
பொருளாதார நிபுணர்கள், நீண்டக் காலம், பொதுவாக உலகமயமாக்கலையும் குறிப்பாக உலக வணிக அமைப்பில்(டபுள்யூ.டி.ஓ) சீனா-வின் பங்கேற்பையும், அமெரிக்கா-வில் உள்ளத் தொழிலாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி வரவேற்றனர். சமீபக் காலமாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், இந்த நம்பிக்கைத் தவறானது என்றுத் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா-வின் வேலையின்மைச் சதவிகிதத்தில் ஒருப் பெரியப் பங்குச் சீனா உடனான வணிகத்தினால் உண்டானது என்றுக் கணித்திருக்கின்றனர். அமெரிக்க மக்களுக்கு அதிக அளவில்,
உலகமயமாக்கலினால் வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த வாய்ப்புகள் வருவாய் (நிகழ்காலம் மற்றும் வருங்காலம்) குறைந்து இருக்கும் துறைகளில் இருக்கிறது. உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபாட் கருவி, அமெரிக்கா-விலும் வெளிநாடுகளிலும் அதிக அளவில் வேலை வாய்ப்பைக் கூட்டியது. அமெரிக்கா-வில் உருவாக்கிய அந்த வேலை வாய்ப்புகள், பெரும்பாலும் குறைந்தச் சம்பளம் கிடைக்கும் துறைகளில் இருந்தன. அந்த வேலை வாய்ப்புகளில் ஒருச் சிறிய அளவு, பொறியியல் வல்லுநர்கள் போன்றத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வருமானத்தை அளித்தது. உலகமயமாக்கல் எல்லோருடைய வேலை நிலைமையையும் தூக்கி விடும் என்ற நம்பிக்கைப் பொய்யாக்கப்பட்டிருக்கிறது - மூளைக்கு அதிக வேலைக் கொடுக்கும் தொழிலாளிகள் உலகமயமாக்கலில் உச்ச நிலையை அடைந்துள்ளனர். இயந்திரம், கைத் தொழில் மற்றும் இதரத் தொழில்கள், மிகக் குறைவான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. அந்தத் துறைகளில் உள்ளச் சிலத் தொழிலாளிகள், தங்கள் வேலையையும் இழந்துள்ளனர். உலகமயமாக்கல் மற்றும் தொழில்துறைப் புரட்சியினால், பொருளாதாரத்தின் பயன்கள் அதிகரிக்கும் என்றுப் பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், அந்தப் பயன்கள் அனைவருக்கும் சீராகக் கிடைப்பதில்லை. நிறுவனங்களுக்கு, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழும் செல்வச் செழிப்பினால் அதிக அளவுப் பயன் கிட்டுகிறது - சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளில் குறைந்த ஊதியத்தில் உற்பத்திச் செய்யப்படும் ஐபாட் கருவிகள், மீண்டும் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, அதிக விலையில் சீனா-வில் விற்கப்படுகின்றன. ஒட்டுமொத்த நாட்டு நலனை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா-விற்குத் தொழில்நுட்பப் புரட்சியும் உலகமயமாக்கலும் வாழிங்க்டன் கன்ஸென்ஸஸ்-உம் பலப் பயன்களை அளித்துள்ளன - சீமேரிக்கா என்று விவரிக்கப்படும் அணுகுமுறையில், சீன நாடு குறைந்த ஊதியத்தில் பொருட்களை உற்பத்திச் செய்தும், அமெரிக்க நாட்டின் கடன்களைக் கொள்முதல் செய்தும், அமெரிக்க மக்கள் தலை மேல் கடன் வாங்கும் நிலையை ஊக்குவித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த செல்வச் செழிப்பின் பொழுதும் சில மக்களின் வாழ்க்கை நிலைக்குலைந்தது. ஆனால், ஏகாதிப்பத்தியம் மற்றும் கொத்தடிமைத்தனம் மூலம் அந்த இடப்பெயர்வின் தீவிரமான விளைவுகளைத் தணிக்க முடிந்தது. இன்றையக் காலத்தில், செல்வச் செழிப்பினால் நிகழும் இடப்பெயர்வுகளின் காட்டத்தைத் தணிக்கும் கருவிகள் இதுவரைக் கிட்டவில்லை.
வருமான உச்சநிலையின் 1%-இல் இருப்பவர்களை ஒரேக் கூட்டமாகக் கருதினாலும், அந்தக் கூட்டத்திற்குள் வருமான ரீதியில் பல வேறுபாடுகள் உள்ளன. 2002-ஆம் வருடத்தில் இருந்து 2006-ஆம் வருடத்திற்குள், வருமான உச்சநிலையின் 1%-இற்குள் இருப்பவர்கள், அமெரிக்கா-வின் ஒட்டுமொத்த வருமான வளர்ச்சியில் 75% வகித்தனர். இந்த 1% செல்வச் செழிப்பு மிகுந்தவர்களுக்குள், வருமான உச்சநிலையில் இருக்கும் 1% மக்கள், மீதம் உள்ள 99% மக்களைக் காட்டிலும் மிகுந்தச் செல்வம் உடையவர்களாக உள்ளனர். இதனால், வருமான உச்சநிலையின் 0.01%-இல் இருப்பவர்களைக் காட்டிலும், அவர்களுக்குக் கீழ் இருக்கும் 0.99% மக்கள் தங்களை ஏழையாகக் கருதுகின்றனர். அமெரிக்கா-வின் ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட் அரசியல் இயக்கம், வருமான உச்சநிலையின் 1% மக்களை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, வருமான உச்சநிலையின் 0.01%-இல் உள்ளச் செல்வந்தர்களை எதிர்த்தால், வருமான உச்சநிலையின் 1%-இல் மீதம் உள்ள 0.99% செல்வந்தர்களும், அந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருப்பார்கள். இதற்கு உதாரணமாக, நிதித் துறையில் உள்ள லட்சாதிபதிகள், அதேத் துறையில் இருக்கும் கோடீஸ்வரர்களைக் கண்டுப் பொறாமைப்படுகிறார்கள் - கோல்ட்மான் ஸாக்ஸ் முதலீட்டு வங்கியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரஜத் குப்தா, அந்த வங்கியின் இயக்குநர் குழுவில் இருந்தாலும், தனியார் பங்குச் சந்தை நிறுவனமான கெ.கெ.ஆர்-இன் இயக்குநர் குழுவிலும் இடம் பெறுவதற்கு, பெரு முயற்சிச் செய்தார். கோல்ட்மென் ஸாக்ஸ் நிறுவனத்தில் அவர் லட்சாதிபதியாக இருந்தார். கெ.கெ.ஆர் வங்கியில் அவர் கோடீஸ்வரராகியிருப்பார்.
வருமான உச்சநிலையின் 1%-இல் இருப்பவர்களின் பணப் பலத்தைக் கணித்து, அவர்களை மிதமிஞ்சிய மதிப்பு வாய்ந்தவர்கள் (யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ) என்றப் பெயரில் வகைப்படுத்தியுள்ளனர். ஐரோப்பா-வில் இவர்கள் அதிகப்பட்சமாக இருந்தாலும் (37.2%), இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா-விலும் கணிசமான எண்ணிக்கையில்(37%) இவர்கள் இருக்கிறார்கள். தொழில் புரட்சி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா-வில் முதலில் மலர்ந்ததனால், அங்குள்ள யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் உலகளவில் கிட்டத்தட்ட 75% இருக்கின்றனர். தொழில் புரட்சியில் வெற்றிப் பெற்றவர்கள், மொத்தச் செல்வத்தையும் தங்கள் பால் வைத்துக் கொள்ள முடிந்தது. மீதம் இருந்தச் செல்வத்தை அவர்களுக்குக் கீழே இருந்த நடுத்தர மக்களும் ஏழை மக்களும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும், இன்றையக் காலத்தில் உள்ளச் செல்வந்தர்கள், தொடர்ந்து வேலைச் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செல்வச் செழிப்படைந்தவர்கள், முதலீடு மூலம் செல்வத்தைக் குவித்தனர். இன்றையக் காலத்தில் செல்வத்தைக் குவிப்பவர்கள், ஊதியத்தின் மூலம் செல்வத்தைக் குவிக்கின்றனர். தங்களுடைய வேலைத் திறனால் தங்களதுச் செல்வச் செழிப்பு மிகுதியாகி இருக்கிறது என்ற நினைப்பினால், அவர்களுக்குக் கீழ் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனை மேம்படுத்த உதவும் வருமான மறுப்பகிர்வுக் கொள்கைகளை எதிர்க்கின்றனர்.
தொழில் புரட்சிக்குப் பின், படிப்பறிவு தொழில்நுட்பறிவைக் காட்டிலும் பின்னடைந்தது. இதன் விளைவாக, பள்ளிக்குச் சென்றுக் கற்றக் கல்வியினால் தான் முன்னேற முடியும் என்ற நிலைக்குப் பதிலாக, தொழில் நுட்பத்தை சமயோசிதமாகக் கையாளத் தெரிந்தால், செல்வச் செழிப்பு உள்ளவர் ஆகி விடலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்கா உலகின் வல்லரசாகியப் பிறகு, உள்நாட்டுக் கல்விக்காக, அதிக அளவில் முதலீடுச் செய்தது.  இதனால், கல்விக்கும் தொழிநுட்பத்திற்கும் இடையே இருந்த இடைவெளிக் குறுகியது. 1970-களில், அரசுக் கோட்பாடுகளைத் தளர்த்தும் முயற்சி வெற்றிப் பெற ஆரம்பித்தப் பிறகு, கல்வித்துறையில் செய்யப்பட்ட முதலீடுக் குறைய ஆரம்பித்தது. அது வரையில், கல்வித் துறையில் செய்திருந்த முதலீடுகள், அமெரிக்கா-வின் வளர்ச்சிக்கு ஊன்றுக்கோல்களாக இருந்தன. 1973-ஆம் வருடத்தில் இருந்து 2005-ஆம் வருடத்திற்குள் வருமான வேறுபாட்டின் காரணம் பெரும்பாலும் கல்வியைச் சார்ந்து இருந்தது - இளநிலை மற்றும் முதுநிலைக் கல்வியை முடித்தவர்களுக்கு, அக்கல்வியைக் கற்காதவர்களைக் காட்டிலும் அதிக அளவு ஊதிய உயர்வுக் கிடைத்தது. இதனை உணர்ந்த அமெரிக்க மக்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்களதுக் குழந்தைகளைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா மற்றும் சீனா-வில் இருப்பது போல், பேர் பெற்றக் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைப்பதற்காக பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இதனால், கலை மற்றும் விளையாட்டின் மீது இருந்த ஈர்ப்புக் குறைந்து, படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலை அமெரிக்கா-வில் உள்ளக் குழந்தைகளுக்கு உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளக் குழந்தைகளுக்கு இதுச் சகஜமாக இருந்தாலும், அமெரிக்கா-வில் இருக்கும் குழந்தைகளுக்கு இதுப் புது அனுபவமாக உள்ளது. சமீபக் காலமாக நிகழும் பொருளாதார மாற்றங்களின் வேகத்தினால், வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களுக்கு மறு வாய்ப்புகள் குறைவாகக் கிடைக்கின்றன. வாழ்க்கையில் சிறு வயதிலேயே வெற்றிப் பெறுபவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள் கிட்டுகின்றன.
அமெரிக்கா-வில் உள்ள ஸிலிக்கான் வேலி போன்ற இடங்களில், தகுதியை ஒரே அளவுக்கோலாக வைத்து வாழ்க்கையை அணுகுவதால், உச்சநிலையின் 1%-இல் உள்ள செல்வந்தர்களுக்கும் மீதம் 99%-இல் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கும் இடையே உள்ள வருமான வேறுபாடுகள் அதிகரிக்கின்றன. அதன் விளைவாக, ஸிலிக்கான் வேலி போன்ற இடங்களில் உள்ள வணிகத் தலைவர்கள், தங்களுக்கு வேலைச் செய்யும் தொழிலாளர்களுடன் தோள் கொடுத்து நிற்பதுப் போன்று நல்லெண்ணச் செயல்களை செய்தாலும், அந்த இருக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் ஊதிய வித்தியாசம் அந்தச் செயல்களைப் பயனற்றதாக ஆக்குகிறது.
யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் பணம் செலவழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தங்களது முன்னேற்றத்திற்குப் பிறரிடம் இருந்துக் கிடைத்த உதவிகளை மறந்து, நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் தங்களதுப் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுப்பதில்லை என்றுக் குற்றம் சாட்டுகின்றனர். ஆராய்ச்சிகளில், செல்வச் செழிப்பு அதிகமாகும் பொழுது, (சில விதிவிலக்குகளுக்கு அப்பால்)அந்தச் செல்வந்தர்களின் நெறிமுறைத் தவறுகிறது. தங்களதுச் செல்வக் குவிப்புத் தங்களதுச் சொந்த முயற்சியினால் நடந்தது என்ற எண்ணத்தின் காரணமாக, அமெரிக்கா-வின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கா-வின் வங்கி மற்றும் தனியார் நிதித் துறைத் தலைவர்களை, 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குக் காரணமாகச் சுட்டிக் காட்டியப் பொழுது, அந்தக் குற்றச்சாற்றை மிகுந்தக் காட்டத்துடன் மறுத்தனர். பராக் ஒபாமா, வார்த்தையோடுத் தனது எச்சரிக்கைகளை நிறுத்திக் கொண்டு, அவர்களைத் தண்டிக்கும் வகையில் ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார். அமெரிக்கா-வின் 99%-இல் உள்ள நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் பெரும்பாலும், அய்ன் ராண்ட் வரையறுத்த லிபெர்ட்டேரியன் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள், தங்களதுச் சொந்த வாழ்க்கையில் பல விதமான தியாகங்களைச் செய்கின்றனர் - உலகின் பல நாடுகளில் உள்ள வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பதால் எந்தக் கண நேரத்திலும் அவர்களதுக் குடும்பங்களைப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டியிருக்கிறது. அதிவேகமாக தொழில் நுட்ப மாறுதல்கள் நிகழ்வதனால், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் தங்களுக்குக் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளர்களைப் போலவே நிலையற்றச் சூழலில்  வாழ்கின்றனர் - தொழில்நுட்ப மாறுதல்களில் பின் தங்கி விட்டால், வருமான உச்சநிலையின் 1%-இல் இருந்துப் பின் தங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. 99%-இல் இருப்பவர்கள் போல், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களும் அதிக வேலைப்பளுவும் நிச்சயமற்ற நிலை உடைய வாழ்வும் வாழ்கின்றனர். அவர்கள், பல நாடுகளில் உள்ள வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டாலும், எந்த ஒரு நாட்டையும் தங்களுடையச் சொந்த நாடு என்றுக் கருதாமல் இருக்கின்றனர். இதற்கு மாறாக, நிறுவனங்கள், தங்களது வணிக லாபத்திற்கு ஏற்றக் கோட்பாடுகளும் நிலையானச் சட்டத் திட்டங்களும் இருக்கும் நாடுகளில் தங்களதுத் தலைமைச் செயலகத்தை அமைத்து, இதர நாடுகளில் தங்களது வணிக லாபத்திற்கேற்றவாறு செயல்படுகின்றனர். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள், தங்களதுப் பிறந்த நாட்டில் உள்ள மக்களைக் காட்டிலும் தங்களதுச் செல்வச் செழிப்பு நிலையில் உள்ள மற்றவர்களுடன் அதிகம் சொந்தம் கொண்டாடுகின்றனர். தங்களதுச் செல்வச் செழிப்பு, தங்களதுச் சந்ததியினருக்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில், அவர்களை மற்றச் செல்வந்தர்கள் அனுப்பும் பள்ளிகளுக்குத் அனுப்புகின்றனர். தங்களதுக் குழந்தைகளின் பள்ளிகளில் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்ற ஆசையில், தங்களது நன் கொடைகளை அந்தப் பள்ளிகளுக்குக் கொடுக்கின்றனர். இதனால், அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், வீட்டில் தங்களதுப் பெற்றோர்களை விட்டு விட்டுப் பள்ளிக்கு வந்தப் பின்னரும், தங்களதுப் பெற்றோர்களின் செல்வாக்கின் தாக்கத்தின் நடுவில் வாழ்கின்றனர். இதனால், குறிப்பிட்டச் சிலப் பள்ளிகளும், கல்லூரிகளும் அதிக அளவில் செழிப்படைந்துள்ளன - உதாரணத்திற்கு, ஐவி லீக். ஸ்டான்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பள்ளிகள். இந்தக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போல், சில நகரங்களும் நாடுகளும் வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களின் செல்வத்தைத் தாங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள முற்படுகின்றனர். முன்காலத்தில், ஸ்விட்ஸர்லாந்து மற்றும் மானகோ போன்ற இடங்கள் செல்வந்தர்களின் செல்வத்தைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டிருந்தன. இன்று, லண்டன், ஸிங்கப்பூர், ஹாங்காங்க், துபாய் போன்ற நகரங்கள் அதைப் போட்டியில் இறங்கியுள்ளன. முன் காலத்தில், செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள், தங்களது ஓய்வு நேரத்தைப் பல சொகுசு இடங்களில் தங்கிச் செலவழித்தனர். இன்றையக் காலத்தில், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள், வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருப்பதால், தங்களது வேலைக்குப் பயனளிக்கும் சர்வதேச மாநாடுகளில் தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடுகின்றனர். இன்று வெகுப் பிரபலமாக இருக்கும் டெட் (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு) மாநாடுகளில், பல்வேறுத் துறைகளில் உள்ள நிபுணர்கள் வியக்கத்தக்க முறையில் தகவல்களை அளிக்கின்றனர். இந்த மாநாடுகளில், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் அதிக அளவில் பங்கேற்பதால், பலத் துறைகளில் உள்ள நிபுணர்கள், தங்களது யோசனைகள் மற்றும் பரிசோதனைகளுக்கு செல்வச் செழிப்பு நிறைந்தவர்களிடன் இருந்து நிதி ஆதரவுத் திரட்டும் ஒரு மேடையாகவும் பயன்படுத்துகின்றனர். தங்களது வேலைத் திறனால், சமூகத்தின் உச்சநிலைக்கு வந்ததாக எண்ணுவதால், தங்களதுச் செல்வத்தைக் கொடையாக அளிக்கும் பொழுது, தொழில் நுட்பம் மற்றும் தீவிரப் போட்டி அணுகுமுறைகள் மூலம் முன் காலத்தில் கொடைச் செய்தவர்களைக் காட்டிலும் மிக நேர்த்தியாக இலக்குகளை அடைய முடியும் என்றுத் திடமாக நம்புகின்றனர். அமெரிக்கா-வின் கல்வி அமைப்பு, முயற்சி மற்றும் பிழை அணுகுமுறையின் மூலம் அனைவரையும் வரவேற்கும் நிலையில் இருந்து, தேர்வுகள் மூலம் தகுதி உள்ள ஒருச் சில மாணவர்களுக்கு மட்டுமேப் பயன்படும் நிலைக்கு மாறியதற்கு, செல்வந்தரான பில் கேட்ஸ் தனது அரசு சாரா கொடை அமைப்பின் மூலம் செய்த நிதிப் பட்டுவாடாவின் விளைவாகும். அதே நேரத்தில், அமெரிக்கா-வின் அரசியல் தலைவர்கள் (டெமோக்ராட்ஸ் மற்றும் ரீபப்ளிகன்ஸ்), பொதுக் கல்விக்கு வேண்டிய அரசு நிதி உதவியை அதிக அளவில் குறைத்ததனால், செல்வந்தர்களின் பாதிப்பு அமெரிக்கக் கல்வி அமைப்புகளில் அதிகமாக இருக்கிறது. தங்களதுச் செல்வச் செழிப்பைக் கூட்டும் வண்ணம், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் அரசியல் தலைவர்களுக்கு நிதி உதவி செய்து, காபிடலிஸம் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஆதரவாகப் பலக் கோட்பாடுகளை இயற்றிக் கொண்டுள்ளனர். உதாரணமாக, பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்தின் மேல் விதிக்கப்படும் வரி(15%), ஊதியத்தின் மேல் உள்ள வரியைக்(30%) காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது. சமீபத்தில், அமெரிக்கா-வின் அரசியல் தலைவர்கள் இயற்றிய புதிய வருமான வரிச் சட்டத்தின் மூலம், ஊதியத்தின் மேல் விதிக்கப்படும் வரிக் குறைக்கப்படுவதால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சிறிய அளவில் நிதி உதவிக் கிடைக்கும். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில், கல்லூரிப் படிப்பில் பொருளாதாரம் மற்றும் பொறியியல் கிளைகளில் இருப்பவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். கலையைச் சார்ந்தக் கிளைகளில் உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில், பெண்களின் விகிதம் மிகக் குறைவாகவே இருக்கிறது - ஃபோர்ப்ஸ் பத்திரிகை வருடா வருடம் வெளியிடும் பட்டியலில், 1226 கோடீஸ்வரர்களில், 104 பேர் மட்டுமேப் பெண்களாக உள்ளனர். இவற்றில், மரபுரிமை மூலம் செல்வச் செழிப்பு அடைந்தச் செல்வந்தர்களைப் பட்டியலில் இருந்து நீக்கினால், பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் குறையும். செல்வச் செழிப்பிற்கு ஆதரவாக இருக்கும் கல்லூரிப் படிப்புகளில், பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் இருக்கின்றனர். ஆனால், தொழில்நுட்பப் புரட்சி, உலகமயமாக்கல் மற்றும் வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸினால் இயற்றப்பட்டச் செல்வம், பெரும்பாலும் பொருளாதாரம் மற்றும் பொறியியல் கிளைகளில்  இருக்கிறது. ஆண்கள் இதனை உணர்ந்து, அந்தக் கிளைகளில் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். பெண்கள் கலைச் சார்ந்தக் கிளைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தியதால், அதிக அளவுச் செல்வச் செழிப்பு அடைய முடியாமல் போயிற்று.
நிலப்பிரபுத்துவம் இருந்தக் காலத்தில், மரபுரிமையும் இராணுவமும் ஒரு சமூகத்தின் வல்லவர்களைத் தீர்மானித்தது. காபிடலிஸம் பரவலாக இருக்கும் இக்காலத்தில், பணமும் வணிகத் திறனும் (அதனால் கிடைக்கக் கூடிய அரசியல் பலமும்) சமூகத்தின் வல்லவர்களைத் தீர்மானிக்கிறது. கம்யூனிஸக் கொள்கை, தொழிலாளர்கள் சமூகத்தில் வல்லவர்களாக ஆவதற்கு ஒருப் பாதையைக் காட்டியது. 'ரோட் ஆஃப் தி இன்டெலெக்சுவல்ஸ் டு க்ளாஸ் பவர்' என்றப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டப்படி, தொழில் நுட்பத்தில் தேர்ந்த நிபுணர்கள், தொழிலாளர்களிடம் இருந்து அரசியல் சக்தியை பறித்து, அவர்களைத் தங்களுக்குக் கீழ் வேலை அமர்த்தினர். காபிடலிஸம் இருந்த நாடுகளில், கம்யூனிஸ நாடுகள்,
தொழிலாளர்களை இவ்வாறு ஏமாற்றியதன் போலித்தனத்தைக் கேலிச் செய்த அதே நேரத்தில், வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்ப நிபுணர்கள் சமூகத்தின் உச்சநிலையை அடைந்துள்ளனர். உதாரணமாக, அமெரிக்கா-வில் பராக் ஒபாமாவும் மிட் ராம்னியும் அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும், சமூக அணுகுமுறையில் தங்கள் அனுபவத்தில் தீர்வுக் கிடைக்கும் தேர்வுகளைப் பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். காபிடலிஸத்தில், செல்வம் அதிகம் உள்ளவர்கள், தங்களுடையப் பணத்தை முதலீடுச் செய்து அதில் லாபம் காண்கின்றனர். அந்த முதலீட்டைச் செயல்படுத்த மேலாளர்களை வேலைக்கு வைக்கின்றனர். முதலீடுச் செய்யப்பட்டப் பணத்தில் உள்ளச் செல்வந்தர்களின் எதிர்ப்பார்ப்பு (சொந்தப் பணம் என்பதால்), மேலாளர்களின் எதிர்ப்பார்ப்பில் (முதலாளிகளின் பணம் என்பதால்) இருந்து வேறுபடுகிறது. இது 'ஏஜன்ஸி ப்ராப்ளம்' என்று அழைக்கப்படுகிறது. இது, நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், பல லட்சக்கணக்கில் ஊதியம் சம்பாதிப்பதில் வெளிப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் இயக்குனர்களின் குழு, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது அணியில் உள்ளவர்களின் ஊதியம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாதகமாக அமையக் கூடாது என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.  தலைமை நிர்வாக அதிகாரியும், இயக்குனர்கள் குழுவும் வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களாக இருப்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம், நிறுவனத்தின் நிதி நிலைமைக் கவலைக்கிடமாகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்கா-வின் அரசாங்கம், இவ்வாறு நடக்கக் கூடாது என்பதற்காகச் சிலக் கோட்பாடுகளை விதித்தது. அந்தக் கோட்பாடுகள், மிக நேர்த்தியாகச் செயல்பட்டதினால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள், நாட்டின் பொது நலம் கருதும் குடிமக்களாகத் தங்களைக் கருதித் வேலையைச் செய்தனர். அவ்வாறுச் செய்ததால், ஒரு நிறுவனத்தின் எல்லாச் சொத்துகளையும் பயன்படுத்தி, அந்த நிறுவனத்தின் லாபத்தை அதிகப்பட்சமாக்குவதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை. 1970-களில், அமெரிக்கா-வின் பொருளாதார வளர்ச்சித் தட்டுத் தடுமாறியப் பொழுது, 'செயல்திறனுக்கு உரிய ஊதியம்' என்ற அணுகுமுறை நிறுவனங்களை ஆட்கொண்டது. தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது அணியின் வணிகத் திறன் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து ஊதியம் கொடுக்கப்படும் என்று வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், இன்றையக் காலக்கட்டத்தில், தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் அவர்களது அணிக்கும் பல லட்சங்கள் ஊதியம் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது - இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டத் தலைமை நிர்வாக அதிகாரிகள், தங்களுக்கும் தங்களுடைய அணிக்கும் மிதமிஞ்சிய அளவில் ஊதிய உயர்வை அளித்து விட்டு, நிறுவனத்தின் கடன் அளவை அதிகரித்தப் பின், அந்த நிறுவனத்திலி இருந்து இராஜினாமா செய்து, மற்றோரு நிறுவனத்திற்குச் சென்று மீண்டும் அதேச் செயல்களைச் செய்கின்றனர். 1970-களில், தலைமை நிர்வாக அதிகாரி சராசரியாக தன் நிறுவனத்தின் தொழிலாளர்களை விட 30  மடங்கு ஊதியம் சம்பாதித்தார். 2005-ஆம் வருடத்தில், அது 110 மடங்காக உயர்ந்தது. தொழில் நுட்பப் புரட்சி, உலகமயமாக்கல் மற்றும் வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸினால் தலைமை நிர்வாக அதிகாரிகள் இன்றையக் காலத்தில் பொதுப்படைத் திறனில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 1970-களுக்கு முன் இருந்தத் தலைமை நிர்வாக அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் குறிப்பிட்டக் கலாச்சாரத்தில் தேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால், இன்றையக் காலக்கட்டத்தில், நிறுவனங்கள் வெளியில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பணியமர்த்துகின்றனர். அதே நிறுவனத்தில் காலங்காலமாக உழைத்துப் படிப்படியாக முன்னேறுபவர்களுக்கு அந்த நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. பிரிட்டன் போன்றச் சில நாடுகள் அரசியல் கோட்பாடுகள் மூலம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியத்தைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றன. அமெரிக்கா-வில், நடுத்தர மற்றும் ஏழை மக்கள், வருங்காலத்தில் தாங்களும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகலாம் என்று (பகல்) கனவுக் காண்பதால், பிரிட்டன் போன்றக் கோட்பாடுகளை அமெரிக்கா-வில் இயற்றுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
தொழில் புரட்சியின் பொருளாதாரப் பரிசுகள், அவரவர் தொழில்களில் சிறந்தத் திறன் வாய்ந்தவர்கள் இருக்கக் கூடிய ஒருச் சிறியக் கூட்டத்திற்கு மட்டும் கிடைத்திருக்கின்றன. அவர்களதுத் திறனை வெளிக்காட்ட சிறு வயதிலேயேக் கிடைத்த வாய்ப்புகள் மிக முக்கியக் காரணமாக உள்ளன. இவர்களை, இந்தப் புத்தகத்தில், 'ஸூபர்ஸ்டார்ஸ்' என்று ஆசிரியர் அழைக்கிறார். அவரவர் தொழில்களில், அதிக அளவில் உற்பத்திச் செய்யும் திறனைப் பயன்படுத்தி அவர்களதுச் செல்வச் செழிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இன்டர்நெட் முதலில் பரவலாகிய பொழுது, க்ரிஸ் ஆன்டெர்ஸன் என்பவர் 'லாங்க் டெய்ல்' என்றக் கோட்பாட்டை விவரித்தார் - கூகிள், அமேஸான் போன்றப் பெரிய நிறுவனங்கள் இன்டர்நெட்டின் மூலம் அதிக லாபம் சம்பாதித்தாலும், சிறுத் தொழில் முதலாளிகளும் கலைஞர்களும் தங்களதுத் திறனைப் பயன்படுத்தி அதிக அளவில்
செல்வம் சேர்க்க முடியும் என்றுக் கூறினார். காலாக்காலத்தில், இந்தக் கோட்பாடு மிகக் குறைந்தத் தாக்கம் உடையதாகவேத் தோன்றுகிறது. தொழில் நுட்பப் புரட்சி, உலகமயமாக்கல் மற்றும் வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸின் தாக்கத்தினால், பலத் தொழில்களில், முதல் இடத்தில் இருப்பவர்களுக்கே பெரும்பாலான லாபமும் செல்லும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. எஞ்சி உள்ள லாபத்தை வைத்துச் சிறுத் தொழில் முதலாளிகளும் கலைஞர்களும் அதிகச் செல்வம் சேர்க்க முடிவதில்லை.
வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களைச் சார்ந்து இருக்கும் மற்றத் தொழில்களும் செல்வச் செழிப்படைந்துள்ளன. கட்டட வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர், செல்வச் செழிப்பு உள்ளவர்களுக்கு இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில் ஒருவரைக் கவர்ந்தால், அவர் மூலம் இதரச் செல்வந்தர்களையும் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் தங்களைச் சுற்றியுள்ளச் சமூகத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அதிகமாக இதரச் செல்வந்தர்களை நம்புவதனால், ஒட்டு மொத்தச் செல்வந்தர்களின் கூட்டத்தையும் தனது வாடிக்கையாளர்களாக மாற்ற முடிகிறது. இவ்வாறுச் செய்யும் வழக்கறிஞர்களும் கட்டட வடிவமைப்பாளர்களும் தத்தம் தொழில்களில் பல லட்சம் சம்பாதிக்கும்  ஸூபர்ஸ்டார்ஸ் ஆக வலம் வருகிறார்கள். தங்களதுத் தொழிலில் இருக்கும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிகப் பேரும் புகழும் செல்வமும் கிடைப்பதால், அவர்களதுப் போட்டியாளர்கள் அந்தத் தொழில்களில் பின் தங்குகின்றனர். இந்தத் தொழில்களில் உள்ள ஸூபர்ஸ்டார்ஸ், அதிக அளவில் தங்களது வேலைகளுக்கு கட்டணம் விதிப்பதை, மார்ஷல் எஃபெக்ட் (ஆல்ஃப்ரெட் மார்ஷல் என்பவர் இதனைக் கண்டுப்பிடித்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறது) மூலம்  விவரிக்கலாம். மேலும், தொழில் நுட்பம் மூலம் தங்களதுத் திறமையைப் பன்மடங்கில் மக்களுக்கு விற்பதை ரோஸன் எஃபெக்ட் (ஷெர்வின் ரோஸன் என்பவர் கண்டுப்பிடித்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறது) மூலம் விவரிக்கலாம்.ரோஸன் எஃபெக்ட்டிற்கு உதாரணமாக, பழங்கால நடிகர்கள் மேடை நாடகத்தில் நடிக்கும் பொழுது, அவர்களதுக் குரல் கம்பீரத்தை வைத்து எவ்வளவு மக்களைக் கவர முடியுமோ அதுவே அவர்களது அதிகப்பட்ச வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையாக இருந்தது. திரைப்படங்கள் வெளிவந்தப் பிறகு, தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மூலம், உலகமெங்கும் உள்ள மக்கள் அந்த நடிகரின் கலைத் திறனை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. சிலத் தொழில்களில் சிறந்தத் திறன் படைத்தவர்கள், முதலில் வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களின் பணியில் நன்றாக வேலைச் செய்துத் தங்களை நிலைநாட்டிக் கொண்டப் பின், நடுத்தர மற்றும்  ஏழை மக்கள் அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பையும் மலிவு விலையில் அளிக்கின்றனர் - உதாரணத்திற்கு, உணவுத் தயார் செய்யும் சமையல் கலை நிபுணர்கள், முதலில் செல்வந்தர்களிடம் பிரத்தியேகமாக வேலைச் செய்தப் பின்னர், தங்கள் சொந்தப் பெயரில் உணவகங்கள் ஆரம்பிக்கின்றனர்.  வேறுப் பலர், வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களின் பணச் செலவைப் பயன்படுத்திச் செல்வந்தர்கள் ஆகிறார்கள். யேசு கிறிஸ்துவின் சீடரான மேத்யூ கூறியதுப் போல், செல்வம் அதிகமாக இருப்பவர்களுக்கு அதனை மேலும் அதிகரிக்குமாறுச் செல்வம் கூடும். இதனை, மேத்யூ எஃபெக்ட் என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, அமெரிக்கத் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் கார்டெஷியன்ஸ் குடும்பம், எந்த ஒருத் திறனும் இல்லாமல், பிரபலமாக இருப்பதையே ஒரு யுக்தியாகப் பயன்படுத்திச் செல்வத்தைச் சம்பாதிக்கிறார்கள். அதேப் போல், நோபல் பரிசுக் கிடைக்கும் விஞ்ஞானிகள், பரிசுக் கிடைத்தப் பணியை மற்ற விஞ்ஞானிகளுடன் இணைந்துச் செம்மையாகச் செய்திருந்தாலும், அந்தப் பரிசு அவர்களில் ஒருவருக்கே அளிக்கப்படும். அந்தப் பரிசுக் கிடைக்கும் விஞ்ஞானியின் ஊதியம் பெருமளவு உயர்கிறது. அதேப் பணியைச் செய்த மற்ற விஞ்ஞானிகள் நோபல் பரிசுக் கிடைக்காததினால், அவர்களின் ஊதியம் அதே நிலையில் தேங்கி நிற்கிறது.
ரோஜர் மார்ட்டின் என்பவர், அண்மையில் நிதியும் அதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் திறனும் வெவ்வேறுப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன என்றுக் கூறுகிறார். தொழில் புரட்சிக்குப் பிறகு, தொழிலாளிகளும் அவர்களுக்கு ஊதியம் அளிக்கும் நிதியும் வெவ்வேறுப் பாதையில் சென்றன. அவை இரண்டிற்கும் இடையே நிகழ்ந்தப் போராட்டத்தின் விளைவுகள் அரசாங்கம் மற்றும் சமூகத்தில் மிகுந்தத் தாக்கத்தை உண்டாக்கின. தொழில் புரட்சியின் பொழுது, நிதியின் கை ஓங்கியிருந்தது. அதிகமாக நிதியை வைத்திருப்பவர்கள், தொழில் புரட்சிக்குத் தேவையான இயந்திரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். தொழிலாளர்கள் அந்த இயந்திரங்களின் மூலம் தங்களது ஊதியத்தைச் சம்பாதித்தனர். இன்றையக் காலக்கட்டத்தில், நிதிக்கும் செயல்திறனுக்கும் இடையே நடக்கும் போரில், இயந்திரங்களின் உதவி, செயல்திறனுக்குத் தேவையற்றதாக இருப்பதால், தொழிலாளிகள் தங்களுடைய அறிவின் மதிப்பைப் பயன்படுத்தி, அதிக ஊதியம் சம்பாதிக்கின்றனர். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில் பெரும்பாலானோர், நிதித் துறையில் வேலைச் செய்கின்றனர். வங்கிகள், பங்குச் சந்தையில் முதலீடுச் செய்யும் நிர்வாகிகள் மற்றும் நிறுவனங்களைக் குறைய விலையில் வாங்கி அதிக விலையில் விற்கும் வணிகப் பெருமக்கள் போன்றோர் வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். நிதி மற்றும் செயல்திறன் இரண்டையும் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதால், மற்றவர்களின் உதவி இல்லாமல், தங்களுடையச் செயல் திறனிற்கு அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். வாஷிங்க்டன் கன்ஸன்ஸஸின் மூலம் அமெரிக்கா-வின் வருமான வரி, நிதித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.
வணிகத் தலைவர்கள், தங்கள் நிறுவனங்களை அமைதியானக் காலங்களில் சாமர்த்தியமாக வழிநடத்திச் சென்றாலும், புரட்சிகரமானச் சமயங்களில் இக்கட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அதிக அளவில் மாற்றங்கள் நிகழும் புரட்சிகரமானச் சமயங்களில், அந்தத் தலைவர்களுக்கு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று மனதளவில் தெரிந்திருந்தாலும், தங்களுடையச் செயல்பாடுகளில் அதிக நம்பிக்கை வைத்துக் கொண்டு அமைதியான நேரங்களில் செய்தச் செயல்களையே அதிகச் சிரத்தையுடன் புரட்சிகரமான நேரங்களிலும் செய்கின்றனர். இதனால், அவர்களைச் சுற்றியிருக்கும் வணிகச் சூழ்நிலை ஒரேயடியாக மாறுவதைக் கவனிக்கத் தவறுகின்றனர். அதன் விளைவால், வணிகத் தோல்விகளைச் சந்தித்து, வணிகப் பாடக் கல்விப் புத்தகங்களில் அபாய எச்சரிக்கைகளாகின்றனர். சிலச் சமூகங்களில் சட்டம் ஒழுங்கு சமநிலையில் இருப்பதால், அங்கு வளர்ந்தவர்கள், தங்களுடைய வணிகச் சூழ்நிலையிலும், அந்தச் சமநிலையை எதிர்ப்பார்க்கின்றனர். புரட்சிகரமானச் சமயங்களில் அந்தச் சமநிலைக் குறைந்து இருப்பதனால், தங்களது நிறுவனங்களை முன்னோக்கிச் செலுத்துவதில் திணறுகின்றனர். அதற்கு மாறாக, சட்டம் ஒழுங்குச் சம நிலையில் இல்லாத நாடுகளில் வளர்ந்த வணிகத் தலைவர்கள், சட்ட ஒழுங்குச் சம நிலையில் இருக்கும் நாடுகளில் தங்களது நிறுவனங்களைச் செம்மையாகச் செலுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு இல்லாதச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறன் சிறுவயதில் இருந்தே வேரூன்றுவதால், புரட்சிகரமானச் சமயங்களில் ஏற்படும் மாற்றங்களை அவர்களால் சமாளிக்க முடிகிறது. வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்களில் சிலர், தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளில், அங்குள்ளச் பெரும்பான்மைச் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதனால், புரட்சிகரமானக் காலங்களில் வெகுச் சாமர்த்தியமாகச் செல்வம் சேர்க்கின்றனர். - உதாரணத்திற்கு, ரஷ்யா-வில் இருக்கும் சிலச் செல்வந்தர்கள், தங்களது யூத மதத்தின் காரணத்தால் ரஷிய மக்கள் புறக்கணித்தாலும், தங்களதுச் சாமர்த்தியத்தால், அதிக அளவுச் செல்வச் செழிப்பை அடைந்துள்ளனர். சில மக்கள் தங்கள் கண்களுக்கு எதிரே செல்வம் கொழிக்கும் வாய்ப்புகள் தோன்றினாலும், சில சமயங்களில் அவற்றைக் கைவிட்டுவிடுகின்றனர் - உதாரணத்திற்கு, யூரி மில்னர் என்ற ரஷ்யச் செல்வந்தர், ரஷ்ய நாடு கம்யூனிஸத்தில் இருந்து காபிடலிஸத்திற்கு மாறியப் பொழுது, வொர்ல்ட் பேங்கில் வாஷிங்க்டன்-இல் நல்ல வேலையில் இருந்தார். அந்த வேலையைக் கைவிட்டு ரஷ்யாவிற்குச் செல்வதற்குள், அந்த நாட்டில் வெடித்தப் பொருளாதார வளர்ச்சிக் குன்றியது. அதிர்ஷ்ட வசமாக, இன்டர்நெட்டின் சமூக வலைத்தளங்கள் பரவ ஆரம்பித்த பொழுது, அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மிகப் பெரியச் செல்வந்தர் ஆனார்.
அரசியல் தலைவர்கள் பணம் எங்கிருக்கிறதோ அங்குச் செல்கின்றார்கள். வருமான உச்சநிலையின் 1%-இல் இருக்கும் யூ.என்.ஹெச்.டபுள்யூ.ஐ செல்வந்தர்கள் இதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். இதனால், அதிகரிக்கும் வருமான வேறுபாடுகளை வளர்ந்து வரும் நாடுகள் வெவ்வேறு முறைகளில் கையாள்கின்றனர். ரஷ்யா-வும் சீனா-வும் தங்கள் நாடுகளில் உள்ளச் செல்வந்தர்களின் கொட்டம் அதிகமானால், அரசுக் கோட்பாடுகளையும் சட்டங்களையும் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்குகின்றனர். மெக்ஸிகோ, இந்தியா போன்ற நாடுகள் செல்வந்தர்களின் கொட்டத்தை அடக்க முடியாமல் அதன் பின் விளைவுகளால் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றன - இந்தியா-வில் சமீபக் காலமாக வெளி வந்துக் கொண்டிருக்கும் பல ஊழல்கள் இதற்கு உதாரணமாக இருக்கிறது. அமெரிக்கா, மற்றுமொரு விதமான ஊழலில் மிதந்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ஊழலைச் சுட்டிக் காட்டும் பட்டியல், சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்ட ஊழல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா-வில், அவ்வாறு வரையறுக்கப்படும் ஊழல் நடவடிக்கைகள் குறைந்த அளவில் உள்ளன. அதனால், உலகளாவிய ஊழல் பட்டியலில் வளர்ந்த நாடுகள் முதலிடத்தில் வருகின்றன. வளர்ந்த நாடுகளில், வணிகத் தலைவர்கள், மனதளவிலும் கோட்பாடுகளின் அளவிலும், அரசியல் தலைவர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு உசிதமானக் கோட்பாடுகளை இயற்ற முற்படுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில், பெரும்பாலும், சட்ட ஒழுங்கிற்கு அதிக மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பதால், இவ்வாறுக் கோட்பாடுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் அணுகுமுறைக் குறைந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்கா-வில் 2008-ஆம் வருடம் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்குக் காரணமாக இருந்தப் பெரிய வங்கிகள், தங்களதுப் பணப் பலத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்றக் கோட்பாடுகளை, அமெரிக்க அரசியல் தலைவர்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டனர். அதற்கு எதிர்மாறாக, வளர்ந்த நாடுகளில் ஒன்றான கானடா-வில், அரசியல் தலைவர்கள், நிதித் துறையையும் வங்கிகளையும் கட்டாயமானக் கோட்பாடுகளின் மூலம் கண்காணித்ததால், 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் தீவிர விளைவுகளில் இருந்துத் தப்பினர். வணிக நிறுவனங்களில் கிடைக்கும் ஊதியம், அரசாங்கத்தில் சட்டக் கோட்பாடுகளை வரையறுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கிடைக்கும் ஊதியத்தை விட மிக அதிகமாக இருக்கிறது. இதனால், அரசு ஊழியர்களும் அரசியல் தலைவர்களும், தங்களது ஓய்விற்குப் (அல்லது இராஜினாமா) பின், தாங்கள் கண்காணித்த நிறுவனங்களுக்குச் சென்று வேலைப் பார்க்கின்றனர். பொதுப் பணியைச் சுற்றி இருக்கும் விதிமுறைகளும் கோட்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துக் கொண்டிருப்பதால், வளர்ந்த நாடுகளில் இருக்கும் பல அரசியல் தலைவர்கள் தங்களின் செல்வச் செழிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர். சமீபக் காலம் வரையில், அமெரிக்கா-வின் அரசியல் பிரதிநிதிகள், தங்களது வேலை மூலம், நிறுவனங்களின் தகவல்களை பொது மக்கள் அறியும் முன்னரேத் தெரிந்துக் கொண்டு, அந்தத் தகவலை வைத்துப் பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பதுச் சகஜமாக இருந்தது. அதே நேரத்தில், அரசு ஊழியர்கள், நிறுவனங்களைப் பற்றித் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி, பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது சட்டத்திற்கு எதிராக இருந்தது. உச்சநிலையில் இருப்பவர்களுக்கும் அந்த நிலையில் இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை இதுத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
வை நேஷன்ஸ் ஃபெய்ல்: தி ஆரிஜின்ஸ் ஆஃப் பவர், ப்ராஸ்பெரிட்டி ஆண்ட் பாவெர்ட்டி - டாரென் அஸெமொக்ளூ ஆண்ட் ஜேம்ஸ் ராபின்ஸன்
ரோட் ஆஃப் தி இன்டெலெக்சுவல்ஸ் டு க்ளாஸ் பவர்: சோஷியலாஜிக்கல் ஸ்டடி ஆஃப் தி ரோல் ஆஃப் தி இன்டெல்லிஜென்ட்ஸியா இன் சோஷியலிஸம் - ஜார்ஜ் கான்ராட் ஆண்ட் இவண் ஷெலெநி
மோர் மணி தேன் காட் : ஹெட்ஜ் ஃபன்ட்ஸ் ஆண்ட் தி மேக்கிங்க் ஆஃப் அ நியூ எலீட் - ஸெபாஸ்டியன் மால்லபி
தி ஹாவ்ஸ் ஆண்ட் ஹாவ்-நாட்ஸ்: ஏ ப்ரீஃப் ஆண்ட் இடியோஸிங்க்ரேடிக் ஹிஸ்டரி ஆஃப் க்ளோபல் இனிக்வால்லிட்டி - ப்ராங்கோ மிலனோவிச்
ரெட் காபிடலிஸம்: தி ஃப்ராகைல் ஃபைனான்ஷியல் ஃபவுன்டேஷன் ஆஃப் சீனாஸ் எக்ஸ்ற்றாடினேரி ரைஸ் - ஃப்ரேஸர் ஜெ.டி. ஹோவி ஆண்ட் கார்ல் இ வால்டர்

No comments: