மதவெறியின் பலன்

சுருக்கம்:
வெளிநாட்டுச் சக்திகளில், இந்தியா-வை நீண்ட நாட்கள்  ஆண்டப் பெருமை, பிரிட்டன் மற்றும் முகலாயர்களை விடப் போர்த்துகீசியரையேச் சாறும். அவர்கள், 1510-ஆம் ஆண்டில் கோவா-வைக் கைப்பற்றியப் பின், 1961-இல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் அவர்களை அகற்றியதற்குப் பின் முடிவுக்கு வந்தது. இன்று அவர்களது நாட்டின் அடையாளம் செருக்குமிக்கக் கால்பந்து வீரராக இருந்தாலும், முன்றையக் காலத்தில், ஐரோப்பா-வில் மற்ற நாடுகளைக் காட்டிலும், காட்டுமிராண்டித்தனம், வெறிக்குணம் மற்றும் இரக்கமற்றப் போக்கில் எவருக்கும் சளைத்தவர்களில்லை. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்,
ஐரோப்பிய ஏகாதிப்பத்தியத்திற்கு (அதனை முன்காலத்தில் நடந்த உலகமயமாக்கல் என்றுக் கருதினாலும்) அடிக்கல் நாட்டியப் பெருமை முதலில் போர்ச்சுகல்-ஐயேச் சாரும் என்று அவர்களது காட்டுமிராண்டித்தனத்திற்கும் சாமர்த்தியத்திற்கும் நற்சான்றிதழ் அளித்திருக்கிறார். அவரது மற்றப் புத்தகங்கள் போல், இந்தப் புத்தகத்தின் எழுத்து நடையும் கதைப் போக்கும் படிப்பவர்களை வெகுவாகக் கவரும் வண்ணம் இருக்கிறது.
இந்தியா-வை, தங்கள் செழிப்படைவதற்கான வழி என்று பிரிட்டிஷ் மற்றும் டச் கிழக்கு இந்திய கம்பெனிகள் தீர்மானித்ததற்கு முன்னால், இந்தியா-வின் மலபார் கடலோரத்தை அழித்து, இந்தியா-வின் மேற்குக் கடலோரத்தையும், ஆஃப்ரிக்கா-வின் கிழக்குக் கடலோரத்தையும் தாங்கிக் கொண்டிருந்த வணிக வலைப்பின்னல்களைச் சின்னாப்பின்னப்படுத்தியப் பெருமைப் போர்த்துகீசியர்-ஐயேச் சாரும். அவர்களது இடையூற்றினால், எகிப்து நாட்டின் மாம்லுக் வம்சம் அழிந்து, இத்தாலி நாட்டின் பேர்போன வணிக நகரங்களான வெனிஸ் மற்றும் ஜெனோவா-வின் பணவலிமைத் தோய்ந்தது. கிறிஸ்துவ மதத்திற்காக, புனித நகரமான ஜெருஸெலம்-ஐக் கைப்பற்றும் மதவெறியின் வெளிப்பாடாக, அப்பாவி ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் கொன்றுக் குவித்தனர். வாஸ்கோ டா காமா, 1497-இல் இந்தியா-விற்குக் கடல் மூலம் பயணம் செய்தப் பின்பு, தங்களதுத் தலைமையில், ஐரோப்பா-வின் அறியாமையையும் ஆசியா-வின் செல்வச் செழிப்பையும் இடமாற்ற முடியும் என்று நம்பினர். இந்தியப் பெருங்கடலைச் சுற்றி வாழ்ந்த தலைவர்கள், புதிதாக வணிகம் செய்ய வருபவர்களுக்கு சமாதானத்தையும் வணிக வாய்ப்புகளையும் அளித்தாலும், அதற்குப் பதிலாக, போர்த்துகீசியர்கள் மத வெறியையும் பீரங்கிக் குண்டுகளையும் அளித்தனர். அவர்களதுக் கோரத் தாண்டவம், 1520-இல் தளர்ந்தாலும், அதற்குள் தங்களது வணிகத்திற்குச் சாதகமாக கிழக்கு ஆஃப்ரிக்கக் கடலோரத்திலும் மலபார் கடலோரத்திலும் நிரந்தரமாகக் கோட்டைகள் எழுப்பி இருந்தனர். அவர்கள் விரிவாக்கத்தை, பலப் போர்த்துகீசியப் பாத்திரங்கள் மூலம், அவர்களுக்குப் புகழாரம் சூட்டியும் அவர்களது நடத்தையை பெருமளவு விமர்சிக்காமலும் சித்தரித்திருக்கிறார். ஆசிரியரின் கணிப்பில், ஐரோப்பா-வின் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறியதாக இருந்தாலும், போர்ச்சுகல், அரசு ஊக்கத்துடன் நடத்திய மதம் சார்ந்தப் பயங்கரவாதத்தின் முதன்மை வல்லுநராகத் திகழ்ந்து, அளவிற்கு அதிகமாக சாகசங்களை நிகழ்த்தியதுப், பெரிதாகத் தோன்றுகிறது. போர்ச்சுகல் காட்டிய வழியில், மற்ற ஐரோப்பிய நாடுகளும், தங்களிடம் இருந்த உயர்ந்த ரக துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும், கண்பட்ட இடத்தையெல்லாம் ஆக்கிரமித்தனர். 
அலசல்:
வெடிமருந்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் சீன மக்கள். அதனை, பட்டாசுகளுக்குப் பயன்படுத்தினர். உலகத்தைச் சுற்றிப் புதிய நிலங்களைக் கண்டறியும் போக்கும் அவர்களால் முதன்மையாகச் செய்யப்பட்டது. 1400-இல் இருந்து 1433 வரை, 7 கடல் சார்ந்த பயணங்களை மேற்கொண்டு, (உலகின்) மத்திய ராஜ்யம் என்றுக் கருதியத் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டினர். அவர்களது சக்தியில் பாதுகாப்பாக இருந்ததால், இந்தப் பயணங்களில் தங்களது செல்வாக்கையும் சக்தியையும் வெளிப்படுத்தினர். அந்தப் பயணங்களில் மற்ற மக்களை அடிமைப்படுத்தியும் கொன்றும் தங்கள் வீரத்தை வெளிக்காட்டவில்லை. ஸ்ரீலங்கா-வின் கல்லே நகரில் உள்ளப் பதிப்பில் அவர்களதுப் பயணங்களின் சமாதானப் போக்கு அரபிக், சீன மற்றும் தமிழ் மொழிகளில் செதுக்கப்பட்டிருக்கிறது. 1415-இல், போர்த்துகீசிய மன்னரான ஜோஒ I, மதப் போரான க்ருஸேட்ஸ் மூலம் தனது அண்டை நாடான வடக்கு ஆஃப்ரிக்கா-வில் உள்ள இஸ்லாமிய ராஜ்யமான மொராக்கோ-வுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார். ஐரோப்பா-வின் உலக நிலவியலைப் பற்றிய அறிவு, பண்டை காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த டாலெமி-யின் கணிப்புகளைச் சார்ந்து இருந்ததால், மிகக் குறிய அளவில் இருந்தது. டாலெமி-யைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல், மூடப்பட்டக் கடலாகக் கருதினார். ஜோஒ I-இன் வம்சத்தின் பூர்வீகம், தாய் வழியில், இங்கிலாந்தைச் சார்ந்து இருந்தது. தங்களை, ஃபிடால்கோ ('மற்றவரின் மகன்கள்') என்றுப் பெயரிட்டுக் கொண்டு, உயிரைப் பொருட்படுத்தாத விவேகமற்ற வீரமும் அசைக்க முடியாத மத வெறியும் உடையவர்களாக வலம் வந்தனர். ஜோஒ I-இன் புதல்வர்களில் ஒருவரான இளவரசன் ஹென்றிக் தலைமையில், தங்கள் தலைநகரான லிஸ்பன்-இல் இருந்து தெற்குத் திசையில், அரபு நாட்டினரின் உதவியுடன் செய்யப்பட்ட படகுகளில், ஆஃப்ரிக்கா-வின் மேற்குக் கடலோரத்தை ஒட்டிப் பயணித்தனர். அன்றையக் காலக்கட்டத்தில், அரபு வணிகர்களின் கிடுக்கிப் பிடியினால் ஏற்பட்ட ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியில், ஐரோப்பா-வின் செழிப்பு வாய்ந்த நகரங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் இருந்தன.  இஸ்லாமிய நாடுகளுக்கு அப்பால், ப்ரெஸ்டர் ஜான் எனும் கிறிஸ்துவ ராஜா இருப்பதாகக் கருதி, அவருடன் இணைந்து, அரபு மக்களைச் சுற்றி வளைத்து அவர்களின் வணிகத்தின் பிடியைத் தளர்த்தலாம் என்று நம்பினர். ஜோஒ I மன்னர் இறந்தப் பின், சில வருடங்களில், ஜோஒ II மன்னர் பதவியேறினார். அவரது தலைமையில், போர்த்துகீசியர்களின் கடல் பயணங்கள் எட்டுக்கால் பாய்ச்சலில் முன்னேறியது. கிறிஸ்தோஃபர் கொலம்பஸ், இந்தியா-வைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில், நிதி உதவிக்காக ஜோஒ II மன்னரை அணுகினார். கொலம்பஸ் தனதுத் திறனை மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று நினைத்த மன்னர், நிதி உதவியை மறுத்தார். அதன் பின்னர், கொலம்பஸ் ஸ்பெய்ன் நாட்டின் ராணியான இஸபெல்லா-வைச் சந்தித்து, தனதுப் பயணத்திற்கான நிதி உதவியைத் திரட்டிக் கொண்டார். ஜோஒ II மன்னர், டியெகோ சாவ்-இடம் இந்தியா-விற்கு கடல் மூலம் செல்லும் வழியைக் (இந்தியா-விற்குச் செல்லும் நிலவழி அரபு நாட்டினர் கையில் இருந்ததால்) கண்டுபிடித்து, ப்ரெஸ்டர் ஜான்-இன் உதவியை நாடும் பொறுப்பைக் கொடுத்தார். மே அல்லது ஜுன் 1485-இல், லிஸ்பன்-இல் இருந்துக் கிளம்பி, மேற்கு ஆஃப்ரிக்கக் கடலோரம் வழியாக, தெற்குத் திசையில் சென்று, இன்றைய கால நமிபிய நாட்டை அடைந்து, தான் அங்கு வந்ததன் அடையாளமாக ஒரு நினைவுச்சின்னத்தை நட்டார்.
திரும்பும் வழியில் இறந்ததனால், ஜோஒ II மன்னர், அக்டோபர் 1486-இல் பார்தெலோமியோ டியாஸ்-இடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அதே நேரத்தில், பெரோ டெ கோவிலா-விடம் இந்தியா-விற்கு நிலவழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். நீண்ட நாள் தயாரிப்பிற்குப் பிறகு, மேற்கு ஆஃப்ரிக்கக் கடலோரத்தை நோக்கி ஆகஸ்ட் 1487-இல் டியாஸ் தன் பயணத்தைத் தொடங்கினார். மேற்கு ஆஃப்ரிக்கக் கடலோரத்தை ஒட்டித் தெற்கேச் செல்லும் முயற்சி மிகவும் கடினமாக அமைந்தது.  ஒரு உத்வேகத்தில், கப்பல்களை ஆஃப்ரிக்கக் கடலோரத்தை ஒட்டிச் செலுத்துவதற்குப் பதிலாக, அதற்கு எதிரான திசையில் மேற்கு நோக்கிச் சென்று, தெற்கு அட்லாண்டடிக் பெருங்கடலின் நீரோட்டங்களையும் பலத்தக் காற்றையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறுச் செய்ததன் விளைவாக, ஆஃப்ரிக்கக் கண்டத்தின் தெற்குக் கோடியில் உள்ள கேப் ஆஃப் குட் ஹோப்-ஐ (இதனை டியாஸ் முதலில் 'புயலடித்த கேப்' என்றுப் பெயரிட்டாலும், ஜோஒ II மன்னர், அதனைக் கண்டதன் மூலம் போர்த்துகீசியர்களுக்கு நன்மை உண்டாகும் என்றுக் கருதியதனால், அதனை கேப் ஆஃப் குட் ஹோப் என்றுப் பெயரிட்டார்) கடந்தனர். டியாஸ் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துத் திரும்பியதன் காரணமாக, டாலெமியின் உலக நிலவியல் பற்றியக் கருத்துக்கள், போர்ச்சுகல்-இல் மதிப்பை இழந்தன.   கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெய்ன்-இற்குத் திருப்பி வந்து, இந்தியா-வை கண்டுப்பிடித்து விட்டேன் (இன்றையக் கால பகாமாஸ், க்யூபா, ஹெய்டி மற்றும் டாமினிக்கன் ரிபப்ளிக் நாடுகளை இந்தியா என்றுத் தவறாக எண்ணினாலும்) என்று மார்த்தட்டியச் செய்திக் கேட்டு, ஜோஒ II மன்னரும் போர்த்துகீசியரும் அதிர்ச்சி அடைந்தனர்.  அந்த இடங்களை ஆளும் உரிமை, ஸ்பெயின்-இற்குக் கிடையாது என்று போர்ச்சுகல் வாதாடியது. அந்தச் சண்டைக்குத் தீர்வுக் காண, டார்டெஸியாஸ் என்ற இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உலகைத் தங்களுக்குள் பங்குப் பிரித்துக் கொள்ள முடிவுச் செய்தனர். ஆர்டிக் கண்டத்தில் இருந்து அண்டார்டிக் கண்டம் வரை செல்லும் நேர்க்கோட்டிற்குத் மேற்கே உள்ளப் பகுதிகள் ஸ்பெய்ன் நாட்டிற்கும், கிழக்கே உள்ளப் பகுதிகள் போர்ச்சுகல்-இற்கும் கிட்டும் என்று முடிவுச் செய்யப்பட்டது. உலகம் உருண்டையாக இருந்ததால், பின் காலத்தில், போர்ச்சுகல், கிழக்கே தொலைதூரத்தில் உள்ளப் பகுதிகளைக் கைப்பற்றியதால், ஸ்பெய்ன் உடனான ஒப்பந்தத்தில் விரிசல்கள் ஏற்பட்டன. 1495-இல் ஜோஒ மன்னர் இறந்தவுடன், டாம் மானுவேல் மன்னரானார். கடல் வழி மூலம் இஸ்லாமிய மதத்தை முடக்கி, மேற்கத்திய உலகின் ஆடம்பரப் பொருட்களின் சந்தை என்றுப் பெயர் பெற்றிருந்த வெனிஸ் நகரை, கீழிறக்கும் முயற்சியில் இறங்கினார். அதனைச் செயல்படுத்தும் பொருட்டு, வாஸ்கோ டா காமாத் தலைமையில் கப்பற்படையை அனுப்பினார். வாஸ்கோ டா காமா, மோராக்கோ நாட்டின் கடலோரத்தில், கடற்கொள்ளை நடத்தித் தனது கப்பல் திறனை மேம்படுத்திக் கொண்டவர். மோராக்கோ நாட்டின் கடலோரத்தில் நடத்திய பயணங்கள் விளைவாக, போர்த்துகீசியரின் துப்பாக்கி மற்றும் படகுக் கட்டுமானத் தொழிற்நுட்பம் விரைவாக முன்னேறியது. ஆஃப்ரிக்கக் கண்டத்தைக் கடல் மூலம் சுற்றியதனால், டியாஸ், வாஸ்கோ டா காமாவின் கப்பல்களைக் கட்டும் பணிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தக் கப்பல் படையில் நான்குக் கப்பல்கள் இருந்தன - வாஸ்கோ டா காமாத் தலைமையில் ஸாவ் கேப்ரியல், ஸாவ் ரஃபெயல், பெர்ரியோ மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கானக் கப்பல். இந்தக் கப்பற்படைக்கு வேண்டிய நிதி, டாம் மானுவேல், ஸ்பெய்ன் நாட்டு இளவரசி இஸபெல்லாவுடனானத் தனது திருமணத்திற்குக் கிடைத்த வரதட்சணை மூலம் கிட்டியது.
வாஸ்கோ டா காமா-வின் கப்பல் பயணத்தின் காலத்தில், இந்தியப் பெருங்கடலில் கடல் வழியான வணிகம் மிக சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. இந்தியா-வின் மேற்குக் கடலோரத்தில் அமைந்திருந்த குஜராத் மற்றும் மலபார் பகுதிகளில் இருந்து தயாரிக்கப்பட்டப் பொருட்கள், ஆஃப்ரிக்கா-வின் கிழக்குக் கடலோரத்திற்கும், சிவப்புக் கடல் மூலமாக இஸ்லமியர்கள் வாழும் தென்கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. அதற்குப் பதிலாக, பெர்சியா மற்றும் அரபு நாட்டுக் குதிரைகள் மலபார் கடலோரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இந்தியா-வின் டெக்கான் பீடபூமியில் இருந்த ராஜ்யங்களான பிஜாப்பூர் (இஸ்லாமிய மன்னர்களால் ஆண்டு வரப்பட்டது) மற்றும் விஜயநகரம் (ஹிந்து மன்னர்களால் ஆண்டு வரப்பட்டது) இடையே நடந்தக் கடும் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. வணிகத்தைப் பிரதானமாகக் கொண்டுச் செயல்பட்டதால், பல மதங்களைச் (கிறிஸ்துவர், இஸ்லாமியர், ஹிந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் யூதர்கள்) சார்ந்து இருந்தாலும், மலபார் கடலோரத்தின் ராஜாக்களின் தலைமையில் அனைவரும் செல்வச் செழிப்பில் திளைத்தனர்.
போர்ச்சுகல்-ஐ விட்டுக் கிளம்பியவுடன், டியாஸ் செய்தது போல், வாஸ்கோ டா காமா, மேற்துத் திசையை நோக்கி அரை வட்டமாகத் தனதுக் கப்பற்படையைச் செலுத்தி, தெற்கு அட்லாண்டிக் நீரோட்டங்களின் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார். கேப் ஆஃப் குட் ஹோப்-இற்கு வடமேற்குத் திசையில், 125 மைல்களுக்கு அப்பால், ஒரு விரிகுடாவில் தனதுக் கப்பற்படையை நிறுத்தினார். அங்கு வாழ்ந்த ஆஃப்ரிக்கக் கண்டத்தின் ஆயர்குடியரான கொய்கொய் மக்களிடையே முதலில் சுமூகமாகப் பழகினாலும், சில நாட்களில் ஏற்பட்டக் குழப்பத்தில், வாஸ்கோ டா காமா ஈட்டியால் குத்தப்பட்டுக் காயமடைந்தார். அதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, முதலில் சுட்டு விட்டு பிறகுக் கேள்விக் கேட்பது தான் உசிதம் என்று முடிவெடுத்தார். ஆஃப்ரிக்கா-வின் கிழக்குக் கடலோரத்தில் இருந்த ராஜ்யங்கள், போர்த்துகீசியரை, வித்தியாசமான இஸ்லாமியர்கள் என்று நினைத்து, ஆர்வத்துடன் பரிசுப் பரிமாற்றத்தில் இறங்கின. போர்த்துகீசியப் பரிசுகள் மிகவும் மலிவு விலைப் பொருட்களாக இருந்ததால், அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு, அந்தக் கடலோரத்தின் ராஜ்யங்கள் போர்த்துகீசியரிடம் பரிசுப் பரிமாற்றம் செய்வதற்குத் தயங்கினாலும், போர்த்துகீசியர் தங்களது துப்பாக்கிக் குண்டுகளின் சக்தியைப் பயன்படுத்தி, அந்த ராஜ்யங்களை அடிபணிய வைத்து, அவர்களிடம் இருந்துத் தங்களுக்கு வேண்டிய குடிநீர்த் தேவையைப் பூர்த்திச் செய்துக் கொண்டனர். இந்தியப் பெருங்கடலின் நீரோட்டத்தைப் பற்றிய ஞானம் குறைந்து இருந்ததால், ஆஃப்ரிக்கா-வின் கிழக்குக் கடலோரத்தில் பயணம் செய்வது, போர்த்துகீசியருக்குக் கடினமாக இருந்தது. அதனால் விரக்தியடைந்து, கிழக்கு ஆஃப்ரிக்கக் கடலோரத்தில் உள்ளச் சிலத் துறைமுகங்களில் பிணைக்கைதியாகச் சிலரைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்கள் இஸ்லாமியர்கள் என்றுத் தெரிய வந்தவுடன். அந்தப் பிணைக் கைதிகள் மேல் எரியும் எண்ணையை ஊற்றிக் கொடுமைப் படுத்தினர். அந்த வேதனையில் இருந்துத் தப்பிக்கும் முயற்சியில், பிணைக்கைதிகள் கப்பல்களிலிருந்துக் கடலுக்குள் குதித்து இறந்தனர். மலின்டி என்ற ராஜ்யத்தில் உள்ள ஹிந்துக்களை கிறிஸ்துவர்கள் என்று தவறாக எண்ணி, போர்த்துகீசியர்கள் அவர்களுடன் நல்ல முறையில்  பழகினர். மலின்டி-யின் சுல்தான், போர்த்துகீசியர்களை அங்கிருந்துக் கிளப்ப வேண்டும் என்ற நோக்குடன், குஜராத் மாநிலத்தில் பிறந்த இஸ்லாமியர் ஒருவரை, அவர்களுக்கு இந்தியா-விற்கு வழிக் காட்டுமாறுப் பணித்தார். மே 1498-இல் போர்த்துகீசியர், கோழிக்கோட்டை அடைந்தனர். போர்ச்சுகல்-இலிருந்து இந்தியா வருவதற்கு அவர்களுக்கு 309 நாட்கள் எடுத்தது.
அந்தக் காலக்கட்டத்தில், கோழிக்கோட்டின் ராஜாவிற்கு சமுத்திரி ராஜா என்றப் பெயர் இருந்தது. போர்த்துகீசியர்களை வணிகர்கள் என்றுப் பாவித்து, அவர்கள் கட்டும் சுங்க வரி தனது கருவூலத்தின் செல்வத்தைக் கூட்டும் என்பதால், சமுத்திரி ராஜா வரவேற்பு அளித்தார். நல்ல ஆட்சியும் வணிகர்களுடன் நியாயமானப் பரிமாற்றம் செய்வார்கள் என்றப் பெயர் பெற்றிருந்ததால், கோழிக்கோட்டின் துறைமுகம் மலபார் கடலோரத்தின் பிரதான வணிகத் துறைமுகமாக விளங்கியது. அரபு நாட்டினரும், மலபார் கடலோரத்தில் வாழும் கீழ் சாதி ஹிந்துக்களை மணந்துக் குடிபெயர்ந்த இஸ்லாமிய மாலுமிகளும் (மாப்பிள்ளாக்கள்), அந்த வணிகத்தில் கொடிக்கட்டிப் பறந்தனர்.   அரசியல் சக்தி உயர் சாதி ஹிந்துக்களிடம் இருந்தது. இதனை, முன்காலத்தில் அங்கு பயணித்தச் சீன பயண எழுத்தாளர் ஒருவர் - 'இங்குள்ள ஒரு ராஜா, தனது ராஜ்யத்தில் உள்ள இஸ்லாமிய மக்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தார் - நீங்கள் மாட்டிறைச்சி உண்ணாமலும், நாங்கள் பன்னியிறைச்சி உண்ணாமலும், இருவர் சார்பிலும் மற்றவரின் மதக் கொள்கையை மதிக்கலாம்; இது இன்றைய நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது' (இன்று இந்தியாவில் உருவாகியிருக்கும் மாட்டுப் பாதுகாப்புச் சேனைகளின் தலைவர்கள் இதனைக் கேட்டால் என்னச் சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்).
வாஸ்கோ டா காமாவும் இதரப் போர்த்துகீசியரும் மற்றவர்களை அறவே  நம்பவில்லை என்பதால், பெரும்பாலான வீரர்களைக் கப்பல்களில் விட்டுவிட்டு, சில பரிசுப் பொருட்களுடன் ஒரு சிறியப் படையுடன் கரை இறங்கினார். அவரை வரவேற்கும் நோக்கோடு, சமுத்திரி ராஜா, வாஸ்கோ டா காமா மற்றும் அவரது சிறியப் படையைத் தனது அரண்மனைக்கு அழைத்து வர, பல்லக்கு மற்றும் சிறியப் படகுகளை அனுப்பினார்.
போர்த்துகீசியர் கொண்டு வந்திருந்த மலிவானப் பரிசுப் பொருட்களைக் கண்டு, சமுத்திரி ராஜா ஏமாற்றம் அடைந்தாலும், அவர்களின் பொருட்களை அங்குள்ளச் சந்தையில் விற்க அனுமதி அளித்தார். போர்த்துகீசியர்கள் அவற்றை விற்க முயற்படும் பொழுது, அவைக் குறைவான விலைக்கு விற்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
அரபு நாட்டுப் படகுகள் கோழிக்கோடு மற்றும் சிலோன் துறைமுகங்களில் இருந்து மசாலாப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சிகப்புக் கடல் மூலமாக ஆடென் மற்றும் இதரத் துறைமுகங்களில் இறக்கினர். நிலவழியாக அப்பொருட்களை எகிப்து நாட்டில் உள்ள கேய்ரோ மற்றும் அலெக்ஸான்ட்ரியா நகரங்களுக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு, வெனிஸ் மற்றும் ஜெனோவா நகரங்களின் வணிகப் படகுகளில் ஏற்றப்பட்டன. சிகப்புக் கடல் துறைமுகங்களிலிருந்துக் கெய்ரோவிற்கு செல்லும் நிலவழிப் பாதையில் கொள்ளையர்கள் அதிகம் இருந்ததாலும் எகிப்தை ஆண்ட மாம்லுக் வம்சத்தின் அளவுக்கதிகமான வரிச் சுமையாலும், வெனிஸ் மற்றும் ஜெனோவா நகரங்களில் கிடைக்கும் மசாலாப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. வாஸ்கோ டா காமா, சமுத்திரி ராஜாவை கிறிஸ்துவர் என்று நினைத்து, சகக் கிறிஸ்துவரான போர்த்துகீசியருக்கு ஏற்ற வரிச் சலுகையை அளிப்பார் என்று நம்பினார். சமுத்திரி ராஜா, போர்த்துகீசியர்களை, மற்ற வணிகர்களைப் போல் பாவித்து, சுங்க வரியைச் செலுத்தி, தங்களதுப் பொருட்களை, கோழிக்கோடுத் துறைமுகத்திலிருந்துக் கிளம்புவதற்கு முன், விற்று முடித்து விட்டுச் செல்வார்கள் என்று எதிப்பார்த்தார். சமுத்திரி ராஜா, இஸ்லாமிய வணிகர்களின் கையில் சிக்கிக் கொண்டுத் தவிக்கிறார் என்றுத் தவறாகக் கணித்து, போர்த்துகீசியக் கப்பல்களைப் பார்க்க வந்திருந்தச் சில உயர்ச்சாதி ஹிந்துக்களை பிணைக்கைதிகளாக வாஸ்கோ டா காமாச் சிறையெடுத்தார். அவர்களை மீட்கும் முயற்சியில், சமுத்திரி ராஜா, போர்த்துகீசியர்கள் கோழிக்கோடுத் துறைமுகத்தில் நினைவுச் சின்னம் எழுப்பலாம் என்றுக் கூறினார். அதன் பின் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை, வாஸ்கோ டா காமா முறித்து, தனது பொருட்களையும் பிணைக்கைதிகளையும்  தன்னுடன் எடுத்துக் கொண்டு போர்ச்சுகல்-இற்குத் திரும்பினார். அவரைத் தொடர்ந்து, சமுத்திரி ராஜா தனதுப் படகுகளை அனுப்பினாலும், போர்த்துகீசியரின் துப்பாக்கிகள், சமுத்திரி ராஜாவின் படகுகளைப் பின்வாங்க வைத்து, கிழக்கு ஆஃப்ரிக்கக் கடற்கரைக்கு விரைய முடிந்தது. போர்த்துகீசியர்களின் பிணைக்கைதிகள், கடலில் சாப்பிடக் கூடாது என்ற மதக் கட்டுப்பாட்டினால் பட்டினியில் இறந்தனர். அவர்களின்  சடலங்களைப் போர்த்துகீசியர் கடலுக்குள் தள்ளிவிட்டு, ஜுலை 1499-இல் லிஸ்பன்-இற்குத் திரும்பினர். டாம் மானுவெல், போப்-இடம் இந்தியா-விற்குக் கடல் வழிக் கண்டுபிடித்து விட்டதாகச் செய்தி அனுப்பிய அதே நேரத்தில் ஸ்பெய்ன், தவறானக் கண்டத்தில் இறங்கியதைக் கேலிச் செய்தார். இந்தியா-விலிருந்து போர்த்துகீசியரின் கப்பல்கள் மசாலாப் பொருட்களுடன் வந்திறங்கியச் செய்தி அறிந்து வெனிஸ் மற்றும் ஜெனோவா-வில் இருந்த வணிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். வாஸ்கோ டா காமாவின் இந்தியக் கப்பல் பயணம் வெற்றியடைந்ததை அடுத்து, டாம் மானுவெல் இந்தியா-வை நோக்கி 1500-இல் இருந்து 1505-இற்குள், 81 கப்பல்கள் உட்படக் கூடுதல் எண்ணிக்கையில் அனுப்பினார்.  டாம் மானுவெல், வாஸ்கோ டா காமா தனது இந்தியப் பயணத்தில் சேகரித்திருந்த விவரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்வதைத் தடை செய்தார்.
வாஸ்கோ டா காமாவை அடுத்து, பெற்றோ அல்வாரெஸ் காப்ரால் என்பவரின் தலைமையில் கப்பல் படை அனுப்பப்பட்டது. அவர், வாஸ்கோ டா காமாவைக் காட்டிலும் மேற்குத் திசையில் பெரிய வட்டமாகத் தனதுக் கப்பல்களைச் செலுத்தியதில், ப்ரெஸில் நாட்டைக் கண்டுப்பிடித்தார்.  போர்த்துக்கீசியர்கள், கோழிக்கோட்டின் சமுத்திரி ராஜாவிற்கு விலை மதிப்பு வாய்ந்தப் பொருட்களைக் கொண்டு வந்ததோடு, திரும்பும் பொழுது தன்னுடன் மலையாளிகளை போர்ச்சுகல்-இற்குக் கொணர்ந்து அவர்களுக்கு போர்த்துகீசிய மொழிப் படிப்பித்து, அவர்களை அரபுத் தரகர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தத் திட்டம் தீட்டினார். மேலும், ஹிந்துக்கள் வேறு விதமானக் கிறிஸ்தவர்கள் என்றுப் போர்த்துகீசியர்கள் கருதியதனால், அவர்கள் கடைப்பிடிக்கும் மதத்தின் தவறுகளைத் திருத்தித் தூய்மையான மத வழியில் செல்ல உதவுவதற்கு, தங்களுடன் கிறிஸ்துவப் பாதிரியார்களைக் கூட்டி வந்தனர். டாம் மானுவெல், காப்ராலிடம், சமுத்திரி ராஜாவிடம் சுமூக உறவை வளர்த்து, அவரது ஆட்சிக்கு அப்பாற்ப்பட்ட கடல் பகுதிகளில் இஸ்லாமியர்களையும் அரபு வணிகர்களையும் அழிக்குமாறுக் கட்டளையிட்டார். கோழிக்கோட்டில் முந்தையச் சமுத்திரி ராஜா இறந்து, அவரது மருமகன் அரசப் பீடத்தில் அமர்ந்திருந்தார். புதியச் சமுத்திரி ராஜாவுடன் கிடைத்த அறிமுகத்தின் பொழுது, காப்ரால், வாஸ்கோ டா காமா விட்டுச் சென்றப் பொருட்களுக்கு நஷ்ட ஈடுக் கொடுக்க வேண்டும் (ஒப்பந்தத்தை உடைத்து விட்டு ஓடியது வாஸ்கோ டா காமா தான் என்றாலும்) என்றும்,  தங்களுக்குச் சாதகமான வரிச் சலுகைகளும், மசாலாப் பொருட்களுக்கு மலிவு விலையும், இறந்த வணிகர்களின் பொருட்கள் ராஜாவிற்கேச் சொந்தம் என்றப் பொதுச் சட்டத்திலிருந்து விலக்கும், பாதுகாப்பான வணிகக் கூடாரமும் கோழிக்கோட்டில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களையும் வெளியேற்றவும் கோரினார்.  இஸ்லாமியர்களைக் கொல்வதுத் தங்களதுப் புனிதப் பணி என்றுக் கருதியதால் இவ்வாறுக் கோரினார்.  போர்த்துக்கீசியரிடம் உள்ள உயர்த்தர துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மலபார்க் கடலோரத்தில் உள்ளவர்களை மிரள வைத்தன. இஸ்லாமியர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே இருந்த அச்சமும் பதற்றமும் முற்றி, போர்த்துக்கீசிய மாலுமிகள் போர்ச்சுகல்-இற்குத் திரும்பும் பயணத்திற்கு ஆயத்தம் செய்யத், தங்கள் கப்பல்களில் பொருட்களை ஏற்றும் பொழுது, இஸ்லாமியர்கள், மாலுமிகளில் 50 பேரைக் கொன்றனர். எஞ்சி இருந்த 20 மாலுமிகள், கடலில் கொஞ்ச தூரம்  தள்ளி நங்கூரம் பாய்ச்சி இருந்த கப்பல்களில் ஏறித் தப்பித்தனர். காப்ரால், இதனை அறிந்து, சமுத்திரி ராஜாக் கொலையாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று எதிர்ப்பார்த்தார். சமுத்திரி ராஜா, போர்த்துக்கீசியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மாட்டிக் கொண்டதால், கொஞ்சம் தயங்கினார். கோபமுற்ற காப்ரால், கடலில் சென்றுக் கொண்டிருந்த 10 அரபுப் படகுகளிலிருந்து 500 - 600 ஆட்களை கோழிக்கோட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுக் கொன்றுக் குவித்தார். கோழிக்கோட்டில் வாழ்ந்த மக்களையும் கட்டப்பட்டிருந்த மாளிகைகளையும், தனது பீரங்கிகளால் சிதற அடித்தார். ஆத்திரம் தீர்ந்தப் பிறகு, கொச்சித் துறைமுகத்திற்குச் சென்றார். அங்குள்ள ராஜா, சமுத்திரி ராஜா மீதுக் கொண்டப் போட்டியால், போர்த்துகீசியர்களுக்கு நிரந்தர வணிகக் கூடாரம் அளித்தார். அதன் அருகில் இருந்த கண்ணூர் மற்றும் கொல்லம் துறைமுகங்களும் போர்த்துகீசியர்களுக்கு ஆதரவு அளித்தன. இந்த மூன்றுத் துறைமுகங்களிலும், மசாலாப் பொருட்களைக் கப்பலில் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. இந்திய வரலாற்றில், அண்ணிய ராணுவச் சக்திகள் சூறையாட வந்தப் பொழுது உதவிய நயவஞ்சகர்களின் பட்டியலில், மிர் ஜாஃபர், புதுக்கோட்டை ராஜாவுடன், கொச்சி ராஜாவும் சேர்ந்துக் கொண்டார்.
கொச்சி ராஜாவின் இந்த உதவிக்குக் கைமாறாகக் காப்ரால், கொச்சியில் இருந்துக் கிட்டிய பணயக் கைதிகளைத் தன்னுடன் கடத்திச் சென்று விட்டார். வாஸ்கோ டா காமாவின் கப்பல்களில் நடந்தது போல், காப்ராலின் கப்பல்களிலும், மதக் கட்டுப்பாட்டால், கடலில் உணவு உட்கொள்ளாமல், பணயக் கைதிகள் இறந்தனர். காப்ரால், லிஸ்பனிற்கு 1501-இல் திரும்பினார். ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதும் தங்களது பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சக்தியை எதிர்க்க இந்தியப் பெருங்கடலில் எவரும் இல்லை என்பதும் போர்த்துக்கீசியர்களுக்குத் தெள்ளத் தெளிவாகியது. இதனால், வருங்காலக் கப்பல் பயணங்களில், போர்த்துக்கீசியர்கள் ஆயுதப்படகின் பக்கபலத்தின் ஆதரவோடு ராஜதந்திரங்களில் ஈடுப்பட்டனர்.
டாம் மானுவெல் வாஸ்கோ டா காமாவை இந்தியா-வின் கடற்படைத் தளபதியாக நியமித்து, அவரை, பிப்ரவரி 1502-இல் இரண்டாம் முறை இந்தியா-விற்கு அனுப்பினார். டாம் மானுவெல், வாஸ்கோ டா காமாவிடம், காப்ராலின் கடற்பயணத்தின் பொழுது ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு, இஸ்லாமியர்களை மலபார் கடலோரத்திலிருந்து வெளியேற்றுவது, மற்றும் கொச்சி, கண்ணூர் துறைமுகங்களுடன் நிரந்தரமானக் கூட்டணி அமைப்பது என்றக் கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அதேப் பயணத்தில், வாஸ்கோ டா காமாவின் மாமா, விஸென்டெ சோட்ரே தலைமையில் சிகப்புக் கடலின் போக்குவரத்தை முடக்கி, மாம்லுக் வம்சத்தின் வருவாயை அறவே அழிக்கக் கட்டளை இட்டிருந்தார். தனது இரண்டாம் பயணத்தில், வாஸ்கோ டா காமா, தனதுக் கப்பல்கள் நின்றத் துறைமுகங்களில் எல்லாம், பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வெகுவாகப் பயன்படுத்தி, பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டார். மலபார் கடலோரத்தை அடைந்தவுடன், இந்த முறை அங்கிருந்த மவுண்ட் டெலி என்ற இயற்கைத் துறைமுகத்தில் தனதுக் கப்பற்படையை நிறுத்தி, அந்தப் பகுதியில் செல்லும் அரபுப் படகுகளைக் கண்காணித்து வந்தார். 240 ஆண், பெண் மற்றும் குழந்தைகளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த மிரி என்னும் அரபுக் கப்பலைப் பிடித்தார். பயணிகள், இந்தியப் பெருங்கடலில் காலங்காலமாக் இருந்த பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தங்களது விடுதலைக்குத் தேவையான விலையை பேரம் பேச ஆரம்பித்தனர். அவர்களது அனைத்து முயற்சிகளையும் மறுத்தப் பின்,  அவர்களது உடைமைகளைப் பரித்துக் கொண்டு, கப்பலோடு அனைவரையும் உயிரோடு எரிக்க ஆணைப் பிறப்பித்தார். அதனை அறிந்த, மிரியின் பயணிகள் விரக்தியில் வெறியுடன் சண்டைப் போட ஆரம்பித்தனர். அந்தச் செயல், வாஸ்கோ டா காமாவின் உறுதியை மேலும் வலுப்படுத்தியது. சமுத்திரி ராஜா, வாஸ்கோ டா காமாவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக அவமானப்படுத்தப்பட்டார். சாமர்த்தியமாக, கொச்சி ராஜாவிடம் நட்புக்கரம் நீட்டி, போர்த்துக்கீசியர்களைச் சேர்ந்து எதிர்க்கலாம் என்று சமுத்திரி ராஜா எழுதியச் செய்தித் தாளை, கொச்சி ராஜா, வாஸ்கோ டா காமாவிடம் காண்பித்ததால், சமுத்திரி ராஜாவின் முயற்சிகள் வீண் போயின. இதனால், போர்த்துக்கீசியர்கள் சமுத்திரி ராஜாவை ஜென்மப் பகையாகக் கருத ஆரம்பித்தனர். தனதுக் கோபத்தின் வெளிப்பாட்டாக, வாஸ்கோ டா காமா, தனதுக் கப்பல் படையை அணிவகுத்து, கரைக்கருகில் தனதுக் கப்பல்களைக் கொண்டு நிறுத்தினார். இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியிருந்த இஸ்லாமிய மற்றும் ஹிந்து மீனவர்களை(சமுத்திரி ராஜாவிற்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் இடையே நிலைமை சுமூகமாக இருந்தது என்று நம்பிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்), கப்பலின் கொடிமரத்தில் தொங்க விட்டார்.   அதைக் காண, கரையில் ஒன்றுத் திரண்ட மக்கள் மீதுச் சரமாரியாகக் குண்டு மழையை தனதுக் கப்பல் பீரங்கிகள் மூலம் பொழிந்தார். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், இறந்த மீனவர்களின் உடல்களை முண்டங்களாக்கி, அவற்றை ஒருப் படகில் வைத்து, கோழிக்கோடு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அடிப்பணிய வேண்டும் என்று மலையாளத்தில் செய்தி அனுப்பினார். சமுத்திரி ராஜா, அதற்குப் பதிலாக, நிதானமாக, வாஸ்கோ டா காமா, கொச்சி ராஜாவின் துறைமுகத்தில் இளைப்பாற்றிக் கொண்டிருந்த பொழுது, இரவில் தாக்கினார். அதிர்ஷ்ட வசமாக, சிகப்புக் கடலில் இருந்து மலபார் கடலோரத்திற்கு வந்த விஸென்டெ சோட்ரேயின் கப்பற்படை, உதவிக்கு வந்ததால், வாஸ்கோ டா காமாவின் கப்பற்படைத் தப்பியது. வாஸ்கோ டா காமாவின் ரத்த வெறி நிறைந்தச் செயல்களினால், மலபார் கடலோரத்தில் எங்கும் பீதிப் பரவியது. அதன் காரணமாக, இந்தியப் பெருங்கடலைச் சுற்றி இருந்த சுதந்திர வணிகப் பகுதி, போர்த்துக்கீசியர்களின் சொத்துரிமையாக மாறியது. அதனால், இந்தியப் பெருங்கடலில் செல்லும் கப்பல்களும் படகுகளும் பாதுகாப்பாகச் செல்ல, போர்த்துக்கீசியர்கள் சுங்க வரியை விதித்தனர். மிகக் கணிசமான அளவில் இறக்குமதி ஏற்றுமதி வரிகளைக் கட்டி, கார்டாஸெஸ் எனப்படும் அடையாளச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள வழி வகுத்தனர். இஸ்லாமிய வணிகர்கள் எவ்வளவு முறைக் கோரியும், மாம்லுக் வம்சத்தின் அரசர்கள் செவி சாய்க்கவில்லை. மரியாமா மரக்கார் எனும் இஸ்லாமிய வணிகரின் கப்பலை வாஸ்கோ டா காமா, கண்ணூர் ராஜா விதித்திருந்த வரியைக் கட்டாதக் காரணத்தினால், நிறுத்தி, அந்த வணிகரை கப்பலில் இருந்து அம்மணமாகத் தொங்க விட்டு, அவரது வாயில் கழிவையும் பன்னி இறைச்சியையும் அடைத்தார். அவரை விடுவித்தவுடன், அந்த வணிகர், மாம்லுக் வம்சத்தின் அரசர்களிடம் சென்றுத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போர்த்துக்கீசியர்களுக்குப் பதிலடிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
வாஸ்கோ டா காமா லிஸ்பனிற்குத் திரும்பியவுடன், அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பருவ மழைக் காலம் வருவதற்கு முன்னால் , சமுத்திரி ராஜா, கொச்சி ராஜாவின் துறைமுகத்தைத் தாக்கினார். கொச்சி ராஜாவின் நிலை, பருவ மழைக் காலம் முடிந்து மசாலாப் பொருட்களை ஏற்றிக் கொண்டுப் போக வந்திருந்த போர்த்துக்கீசியக் கப்பல் படையின் வரவினால் காப்பாற்றப்பட்டது. ஃப்ரான்ஸிஸ்கோ டெ அல்புகெர்க் மற்றும் அஃபொன்ஸோ டெ அல்புகெர்க்  தலைமையில் இந்தக் கப்பல் படை இந்தியா-விற்கு வந்தது. ஃப்ரான்ஸிஸ்கோ லிஸ்பனிற்குத் திரும்பும் வழியில் இறந்தாலும் அஃபொன்ஸோ பத்திரமாகத் திரும்பினார். கொச்சியைத் தாக்கும் இந்த முயற்சியும் தோல்வி அடைந்தவுடன் சமுத்திரி ராஜா, தவ வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மருமகன் அவருக்குப் பின் சமுத்திரி ராஜாவாகப் பதவி ஏற்றார். 1505-இற்குப் பிறகு, கோழிக்கோடுத் துறைமுகம் மசாலாப் பொருட்கள் வணிகத்தில் கீழிறங்கியது, அதன் விளைவாக, இஸ்லாமிய வணிகர்கள் எகிப்து நாட்டிற்குத் திரும்பினர். அதனைப் பயன்படுத்தி, போர்த்துக்கீசியர்கள், இஸ்லாமியர்களில் 2000 பேர்களைக் குடும்பத்தோடுச் சேர்த்து கடலில் உயிரோடு எரித்தனர். இந்தியப் பெருங்கடலின் வர்த்தகத்தின் முழுமையானக் கட்டுப்பாட்டின் மூலம், போர்ச்சுகல் நாட்டின் கருவூலத்திற்கு வருடத்திற்கு 10 லட்சம் க்ருஸாடோஸ் லாபம் கிட்டியது. இதன் விளைவாக, லிஸ்பனின் போட்டியாளர்களாக இருந்த வெனிஸும் ஜெனோவாவும் செல்வச் செழிப்பை இழந்தன. வர்த்தக ரகசியங்களைத் திருடியும் மாம்லுக் வம்சத்தை ஊக்குவித்தும் போர்த்துக்கீசியரின் கொட்டத்தை அடக்க முற்பட்டாலும், வெனிஸ் நகர வணிகர்களின் முயற்சிகள் வீண் போயின.
டாம் மானுவெல் இந்தியா-விற்கு வைஸ்ராயாக ஃப்ராஸிஸ்கோ டெ அலமெய்டாவை அனுப்பி, கிழக்கு ஆஃப்ரிக்கக் கடலோரத்திலும் மலபார் கடலோரத்திலும் நிரந்திர வணிகக் கூடாரம் அமைக்க ஆணையிட்டார். இந்தியா-வைப் பற்றிய நோக்கமும் போர்த்துக்கீசியர்களிடையே மாற்றம் கண்டது - முதலில் இந்தியா-வை ஒரு இலக்காக வைத்துச் செயல்பட்டாலும்,  பிறகு இந்தியப் பெருங்கடல் சுற்றிய நாடுகளில் தனது சக்தியைப் பறைச்சாற்றி, மாம்லுக் வம்சத்தின் வருவாயை அழித்து, கிறிஸ்துவ மதத்திற்காக மீண்டும் ஜெருஸெலத்தைக் கைப்பற்றும் முயற்சியின் தடமாக அமைந்தது. தனது வம்சம் பிழைக்க வேண்டும் என்றப் பயத்தில், மாம்லுக் வம்சத்தின் ஸுல்தான், ஒருப் பெரியக் கப்பற்படையை உருவாக்கினார். ஆனால், அதன் பிரதான நோக்காக, ஜெருஸெலத்தைக் காக்கும் பொருட்டு, அதன் வழியில் இருந்தக் கோட்டைகளைப் பலப்படுத்தக் கட்டளையிட்டார். இந்தியப் பெருங்கடலின் வர்த்தகத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதை இரண்டாம் பட்சமாகக் கொண்டார். அதே நேரத்தில், மலபார் கடலோரத்தில்,  அலமெய்டா, அஞ்சத்தீவு, ஹொனாவர் மற்றும் கொச்சியில் கோட்டைகளைக் கட்டினார்.
இந்தியா-வில் போர்த்துக்கீசியர்களின் சக்தியை வலுப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், டாம் மானுவெல், பிப்ரவர் 1506-இல் அலமெய்டாவிற்குப் பதிலாக அஃபொன்ஸோ டெ அல்புகெர்கை அனுப்பினார். ஆனால், அந்தச் செய்தியை அலமெய்டாவிடம் சொல்லவில்லை. ப்ளேக் வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததால், மாலுமிகளைச் சேர்ப்பதுக் கடினமாக இருந்த நிலையில், அல்புகெர்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரக் கைதிகளை தனதுக் கப்பல் படையில் சேர்த்துக் கொண்டார்.டாம் மானுவெல், இந்தியா-வில் போர்த்துக்கீசியர்களின் நிலைமையை மேம்படுத்தி, சிகப்புக் கடலைத் தனதுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மாம்லுக் வம்சத்தின் அழிப்பிற்கு வழி வகுக்குமாறு அல்புகெர்கிற்கு ஆணைப் பிறப்பித்தார். இந்தியா-விற்குச் செல்லும் வழியில், இஸ்லாமிய வணிகக் கூடாரங்கள் மற்றும் மசூதிகளைத் தாக்கி, அவற்றைச் சூறையாடியப் பின்னர், எரித்துச் சாம்பலாக்கினார். சிகப்புக் கடலில் இருந்த ஒர்முஸ் துறைமுகத்தைக் கைப்பற்றி, இந்தியாவிற்கு உயர்தரக் குதிரைகளை அனுப்பும் வர்த்தகத்தையும் போர்த்துக்கீசியர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்தியா-விற்குள், இஸ்லாமிய ராஜ்யமான பிஜாப்பூருக்கும், ஹிந்து ராஜ்யமான விஜயநகரத்திற்கும் நடந்த தொடர்ச் சண்டைகளுக்காக, குதிரைகள் தேவைப்பட்டன. இந்த வர்த்தகம் மிகவும் லாபத்தை அளித்தது. ஒர்முஸ்-இல் தன் கீழ் இருந்தத் தளபதிகள், அந்த இடத்தில் கோட்டைக் கட்டுவது மடத்தனம் என்றுக் கூறியதைக் கேட்காமல், கோட்டைக் கட்டும் பணியில் இறங்கியதனால், அந்தத் தளபதிகள், ஒர்முஸ்-இன் மதத் தலைவரான ஹ்வாகா ஆடாவிடம் சரணடைந்து, இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டனர். இதனை அறிந்துக் கோபம் கொண்ட அல்புகெர்க், ஒர்முஸ் நகரத்தை தரைமட்டமாக்கி அங்குள்ளப் பலரைக் கொன்றார். அதனால், மாம்லுக் வம்சத்தின் கப்பற்படையை நழுவ விட்டார். அந்தப் படை, தியு துறைமுகத்தைச் சென்று அடைந்தது. அங்கிருந்து, கோழிக்கோட்டிற்கு உதவவும், கண்ணூர் மற்றும் கொச்சித் துறைமுகங்களைத் தாக்கவும் திட்டமிட்டது. அவர்களதுத் திட்டத்தின் வெற்றிக்கு, தியு துறைமுகத்தின் ஆளுநராக இருந்த மாலிக் அயாஸின் உதவி தேவைப்பட்டது. ஆனால், மாலிக் அயாஸ், இரண்டுப் பக்கம் சாயாமலும் தனது ஆதரவை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால், மாம்லுக் வம்சத்தின் கப்பற்படையை போர்த்துக்கீசியர் கப்பற்படைச் சின்னாப்பின்னப்படுத்தியது. அலேமெய்டாவின் மகன் லாரெங்கோவின் விவேகமற்றத் தாக்குதலால், அது மாலுக் வம்சத்தின் கப்பற்படையின் வெற்றியாக மாறியது. அதே நேரத்தில், குஜராத்தில் உள்ள டாபுல் துறைமுகத்தை முற்றுகையிட்ட அலமெய்டா, அங்கிருந்த இஸ்லாமிய மக்களைக் கொன்றுக் குவித்தார். மிகக் கோரமான முறையில், அங்குள்ள குழந்தைகளைக் கையால் பிடித்து, சுவற்றில் எரிந்துக் கொன்றனர். அதை முடித்து விட்டு, மாம்லுக் வம்சத்தின் கப்பற்படையின் மேல் தனதுக் கவனத்தைத் திருப்பினார். மாலிக் அயாஸ் இரண்டுப் பக்கமும் சாயாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் செயல்களில் ஈடுப்பட்டதால், மாம்லுக் வம்சத்தின் கப்பற்படை தோல்வியைச் சந்தித்தது. போர்த்துக்கீசிய ராஜ்யத்திற்கு செய்தச் சேவைக்குக் கைமாறாக, அலமெய்டா தனதுப் பதவியை அல்புகெர்க்கிடம் இழந்தார். முதலில் அதனை எதிர்த்தாலும், டாம் மானுவெல் கேட்டுக் கொண்டதில், அலமெய்டா, அல்புகெர்க்கிடம் தலைமையை ஒப்படைத்து விட்டு, போர்ச்சுகல்-இற்குக் கிளம்பினார். திரும்பும் வழியில், மேற்கு ஆஃப்ரிக்கக் கடலொரத்தில் உள்ள கொய்கொய் மக்களிடைய திருட்டுப் போனக் கால்நடைகளின் விவகாரத்தில் தனது உயிரை இழந்தார்.
அஃபோன்ஸோ டெ அல்புகெர்க் கோழிக்கோட்டை மீண்டும் தாக்கி, அந்த நகரைச் சூறையாடினார். சிறிதளவு எதிர்ப்பு இருந்தாலும், போர்த்துக்கீசியர்கள் அந்த நகரில் இருந்த விலை மதிப்புள்ள பொருட்களைக் (தங்க வேலைப்பாட்டுடன் இருந்த வீட்டுக் கதவுகளை அவர்கள் விடவில்லை) கையோடு எடுத்துச் சென்றனர். அதன் பிறகு, கோவாவை நோக்கிப் பயணித்து, அங்கு ஒருக் கோட்டையை நிறுவினார். அந்தக் காலக்கட்டத்தில், கோவாவை பிஜாப்பூர் ராஜ்யம் ஆண்டு வந்தது. டிமோஜி எனும் கடல் கொள்ளையனின் உதவியுடன், பிஜாப்பூரின் மன்னர் ஆதில் ஷா (அப்பொழுது தான் பதவிக்கு வந்திருந்தார்) தனது ராஜ்யத்தில்
அமைதி நிலைநாட்டச் சென்றிருந்த பொழுது, அல்புகெர்க், கோவாவைக் கைப்பற்றினார். போர்ச்சுகல் ஏகாதிப்பத்தியத்தின் முதல் அன்னியக் காலனியாக உருவாக்கினார். அங்குக் க்ருஸாடோ என்னும் நாணயத்தைக் கொண்டு வந்து, ஹிந்துக்களின் நடுவே பரவியிருந்த உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக அநீதிகளையும் தடை செய்தார். போர்த்துக்கீசிய வீரர்களை, ஹிந்துக்களில் உள்ள கீழ் சாதிப் பெண்களை மணம் செய்துக் கொள்ள ஊக்குவித்தார். பிஜாப்பூரை அடக்கியப் பிறகு, கோவாவின் பக்கம் தனதுக் கவனத்தைத் திருப்பிய ஆதில் ஷா அதனை முற்றுகையிட்டார். அல்புகெர்க் மிக்க வீரத்துடன் போரிட்டாலும், கோவாவில் தோல்வி அடைந்துப் பின் வாங்க வேண்டிய நிலை வந்தது. விஜயநகருக்கும் பிஜாப்பூருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்த பொழுது, ஆதில் ஷா மீண்டும் கோவாவை விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அல்புகெர்க், கோவாவை மீண்டும் கைப்பற்றினார். முதல் வேலையாக, கோவாவில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கொன்றுக் குவித்தார். அதற்குக், கோவாவில் வாழ்ந்துக் கொண்டிருந்த ஹிந்துக்களும் உதவினர். 1511-இல் தென்மேற்கு ஆசியாவில் மலாக்கா தீவினைக் கைப்பற்றினார். மீண்டும் மீண்டும் போரினால் அடங்காதக் கோழிக்கோடுத் துறைமுகம், நயவஞ்சகத்தால், போர்த்துக்கீசியர் கைக்கு வந்தது. போர்த்துக்கீசியரை எதிர்த்த சமுத்திரி ராஜாவை விஷத்தால் கொன்று விட்டு, போர்த்துக்கீசியருக்குச் சாதகமான அவரது சகோதரரை சமுத்திரி ராஜாவாக முடிசூட்டினர். சிகப்புக் கடலில் இருந்த ஆடென் துறைமுகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அல்புகெர்க் தோல்வி தழுவினார். அந்த முயற்சியில், மாம்லுக் வம்சம் வீக்கமடைந்ததைக் கண்டார். அதனைப் பயன்படுத்தி, போர்த்துக்கீசியர்கள் மீண்டும் ஒரு முறை முயன்றால், இஸ்லாமிய புனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெடினாவைக் கைப்பற்றலாம் என்றுத் திட்டமிட்டார். அவரதுத் திட்டத்தைச் செயலாற்றுவதற்குள், இந்தியப் பெருங்கடலின் பருவ மழைக் காலம் பலம் பிடித்தது. அதனால், இந்தியா-விற்குத் திரும்ப வேண்டி வந்தது. டிசம்பர் 15, 1515-இல் வயிற்றுப் போக்கினால் கோவாவில் காலமானார். டாம் மானுவெல் பொர்ச்சுகல்-இல் 1521-இல் மரணமடைந்தார். இந்த இருவரின் மறைவிற்குப்  பிறகு, போர்த்துக்கீசிய அரசு ஆதரவால் செய்யப்பட்டப் பயங்கரவாதம் குறைந்தது. அல்புகெர்க்கின் மறைவிற்குப் பிறகு, அருகில் இருந்த மோராக்கோ நாட்டில் தோல்வி அடைந்தனர். 1517-இல் ஆட்டோமான் வம்சம் எகிப்து-இன் மாம்லுக் வம்சத்தைத் தூக்கி எறிந்தது.
இன்றையக் காலத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்தும் பயங்கரவாதம், போர்த்துக்கீசியர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும், மதச் சண்டைகளானக் க்ருஸேட்ஸ்-ஐ ஒரேக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தியக் கொடுமைகளையும் ஒத்ததாக இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் முதலில் பயங்கரவாத அமைப்பாக ஆரம்பித்து பிறகுத் தனக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொண்டது போல், போர்த்துக்கீசியர் தங்களது நாட்டைப் பயன்படுத்தி மதம் சார்ந்த பயங்கரவாதத்தை இந்தியப் பெருங்கடலில் செயலாற்றினர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், உலகமயமாக்குதலைப் பரப்பியதற்கு (அது போர்த்துக்கீசிய ஏகாதிப்பத்தியம் என்றாலும்) போர்த்துக்கீசியர்களுக்கு நன்றிச் சொல்ல வேண்டும் என்றுக் கூறுகிறார். திட்டமிட்ட நோக்கோடு துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி, கொன்றுக் குவித்த போர்த்துக்கீசியர்கள், ஆஃப்ரிக்க மற்றும் இந்தியக் கடலோரத்தில் உள்ள நாடுகளின் அதிர்ப்பைச் சுலபமாக முறியடித்தனர். மேற்கத்திய நாடுகளின் முதன்மை நிலைக்குச் சில ஆசிரியர்கள், நிலவியல் மற்றும் என்லைடென்மென்ட் போன்றவற்றைக் காரணமாகக் கருதினாலும், அரசு ஆதரவுடன் நடத்திய மதப் பயங்கரவாதம் ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்ந்திருக்கிறது. போர்த்துக்கீசிய ஆவிஸ் வம்சத்தின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல், இந்தியப் பெருங்கடலின் வர்த்தகம், மக்களைப் பிரிக்கும் மதங்களை, வணிகத்திற்காக பயன்படுத்தி, அனைவருக்கும் செல்வச் செழிப்புக் கிடைக்கும் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கும். ஹிந்துக்களின் உதவி இல்லாமல், மலபார் கடலோரத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வரப் போர்த்துக்கீசியருக்குக் கஷ்டப்பட்டிருக்கும். ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உள்ள வெறுப்பும் சண்டையும், இந்திய வரலாற்றில், அன்னியச் சக்தி இந்தியா-வை ஆக்கிரமிக்க முற்படுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இதனை முதலில் உணர்ந்தவர்கள்  போர்த்துக்கீசியர்கள். அவர்களுக்குப் பின் மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வலம் வந்தன. அதற்கு மாறாக, மலபார் கடலோரத்தில் ஆண்டவர்களின் குறுகிய நோக்கு, அவர்களது அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
கெரியர் ஆண்ட் லெஜென்ட் ஆஃப் வாஸ்கோ டா காமா - சஞ்சய் சுப்ரமணியம்
எ ஜெர்னல் ஆஃப் தெ ஃபர்ஸ்ட் வாயெஜ் ஆஃப் வாஸ்கோ டா காமா 1497 - 1499 - இ.ஜி.ரெவெஸ்டீன்

No comments: