காவியத் தலைவி

சுருக்கம்:
1971 போரின் பொழுது அன்றைய ஜனாதிபதியான யாஹ்யா கான் மற்றும் பாகிஸ்தான்-இன் இதர ஸ்தாபனங்கள், இந்திரா காந்தியை அணுகிய நோக்கை பிரதிபலிக்கிறது. அமெரிக்கா-வின் தலைவர்களான ரிச்சர்ட் நிக்ஸனும், ஹென்றி கிஸ்ஸிஞ்சரும், இந்திரா காந்தியை அதை விடத் தரக்குறைவாக விவரித்தனர். பாகிஸ்தான்-இன் தலைவர்கள், பிரிட்டிஷ் காலத்தில் செய்லபடுத்தப்பட்டுப் பின்காலத்தில் பொய்யாக்கப்பட்ட இனம் சார்ந்த போர்த்திறன் கோட்பாடுகளைப் பின்பற்றினர். அதன்படி, ஒரு இஸ்லாமியப் போர்வீரர், 10 ஹிந்துப் போர்வீரர்களுக்குச் சமம் என்று மெத்தனமாகக் கருதினர். அவற்றின் விளைவால், 1971 நடந்தப் போரில், பெருமளவில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் கிழக்குப் பாகம் ஒரு புதிய நாடாக (பங்க்ளாதேஷ்) உருவாவதைத் தடுக்க முடியவில்லை. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், இந்திரா காந்தி, கிழக்குப் பாகிஸ்தானில் நெருக்கடி உருவானத் துவக்க நாட்களில் (1968-ஆம் வருடத்தின் இறுதி மாதங்களில்)  இந்திய இராணுவத்தைப்
பயன்படுத்தியிருந்தால், அதிக அளவு உயிர்ச் சேதம் இல்லாமல் கிடைத்திருக்கும் என்று வாதாடியிருக்கிறார். இந்திரா காந்திக்கு ஆதரவாக, உலகின் மூன்று வலிமையான நாடுகளில், 2 (அமெரிக்கா மற்றும் சீனா) இந்தியா-விற்கு எதிராக அணிவகுத்து நின்றன. இந்தியா-விற்கு ஸோவியத் யூனியன் அளித்த ஆதரவு, மெலிதாகவே இருந்தது(பங்க்ளாதேஷ்-இன் தலைநகரமான டாக்காவைக் கைப்பற்ற இந்திய இராணுவம்
வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், ஐ.நா. சபையில் ஸோவியத் யூனியன்-இன் நடப்பில் இருந்து இதைத் தெரிந்துக் கொள்ளலாம்). பங்க்ளாதேஷ்-இன் விடுதலைப் போராட்டத்தை, அன்றையச் சர்வதேசச் சூழலைப் பின்னணியாக வைத்து ஆசிரியர் ஆராய்ந்திருக்கிறார் - மார்க்ஸிசத்தில் ஸோவியத் யூனியன்-இற்கும், சீனா-விற்கும் ஏற்பட்ட விரிசல், சீனா-வைத் தன் பக்கம் இழுக்க பாகிஸ்தானைத் தரகர் வேலையில் அழுத்திய அமெரிக்கா-வின்  முயற்சிகள், பாகிஸ்தானைத் தன் பக்கம் இழுக்க இராணுவத் தளவாடங்களை விற்க விரும்பிய ஸோவியத் யூனியன் ஆகியவை அடங்கும். 1971-இல் நடந்த போர் குறுகியக் காலத்தில் இந்தியா வெற்றிப் பெற்றதால் போரைப் பற்றிய இராணுவத் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் குறைவாகத் தான் உள்ளன.
பங்க்ளாதேஷ்-இன் விடுதலை, பாகிஸ்தான் மக்களின் பார்வையில் தெற்கு ஆசியாவின் இஸ்லாமியர்களுக்கு 1947-இல் மதச் சார்பாகக் கிடைத்தத் தாயகத்தை, வங்காள மக்கள் சிதைத்ததாகக் கருதினர். பங்க்ளாதெஷ் நாட்டினருக்கு, அவர்களது விடுதலை போராட்டமாக அமைந்தது.  இந்தியர்களுக்கு, அது மூன்றாம் இந்தியா பாகிஸ்தான் போராக அமைந்து, பாகிஸ்தான்-இன் தோல்வியின் மூலம், அதன் நிறுவல் கொள்கையின் (பாகிஸ்தான், தெற்கு ஆசியாவின் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் மதத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாடு - இரு நாடுகள் கோட்பாடு)  அழிவாகக் கொண்டாடினர். சர்வதேச அளவில் வெவ்வேறு குழுக்களின் (நாடுகள், ஐ.நா., ஊடகங்கள், கலாச்சார உயரடுக்கு மக்கள்) பாதிப்பை, அகந்த நோக்கோடு அலசியிருக்கிறார். இந்தப் போரில் கிடைத்த இந்தியாவின் வெற்றிக்கு, இராணுவத் தலைவர்களுக்கு (ஜெனரெல் எஸ்.ஹ்.எஃப்.ஜெ "ஸாம்" மனெக்க்ஷா, லெஃப்டினன்ட் ஜெனரெல் ஜெ.எஸ்.அரோரா மற்றும் மேஜர் ஜெனரெல் ஜெக்கப்) அதிகமானப் பங்களித்து, அது அரசியல் தலைவர்களின் முயற்சியை மிஞ்சிக் கிடைத்தது என்றக் கருத்துப் பரவலாக நிலவுகிறது. உண்மையில், பங்க்ளாதேஷ்-இன் விடுதலையில் இருந்தச் சிக்கலுக்குத் தீர்வுக் காண அரசியல் ரீதியாகத் தான் முடிந்தது. இந்தியா-வின் அரசியல் ஸ்தாபனங்கள், இந்திய இராணுவத்தைச் சண்டைக்குத் தயார்ப்படுத்தியப் பின்னரே அதனைப் பயன்படுத்தினர். மேலும், இந்திய இராணுவத்திற்கு, வெற்றி பெறுவதற்கு வசதியாக, குறுகலான நோக்கத்தினை அளித்தனர். பாகிஸ்தான்-இன் இராணுவமோ, அரசியல் ரீதியில் தீர்ப்புக் காண வேண்டியச் சிக்கலிற்குப் பிரதானத் தீர்ப்பாகப் பயன்படுத்தப்பட்டதினால், தோல்வியைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. பங்க்ளாதேஷ்-இன் விடுதலைக்குப் பின்னர், ஷெய்க் முஜிபுர் ரஹ்மானும், அவரதுக் குடும்பத்தினரும் அவரதுக் கட்சியான அவாமி லீக்-இன் மூத்தத் தலைமையும் கொல்லப்பட்டதால், பாகிஸ்தான்-ஐப் போல் பங்க்ளாதேஷ்-உம் தோல்வி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்கா-விற்கு, 1971-இல் நடந்தப் போர், கிஸ்ஸிஞ்சர் தனது மகத்தான மூலோபாயம் வெற்றி அடவதற்காக, எந்த அளவுச் செல்வார் என்பதுத் தெரிய வந்தது. சீனா-விற்கு முதன்முறையாகச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி என்றப் பெருமையின் பிரகாசம், நிக்ஸன் மற்றும் கிஸ்ஸிஞ்சர், பாகிஸ்தானிற்குச் சீனா-வின் ஆதரவைத் தப்பாகக் கணித்த மூலோபாயத் தோல்வியையும், கிழக்குப் பாகிஸ்தான் ஹிந்துக்களின்
இனப்படுகொலையைத் தடுக்காமல் இருந்தத் தார்மீகத் தோல்வியையும் மறைத்தது. நிக்ஸனின் அரசியல் வாழ்க்கை, அவர் நயவஞ்சகமும் தார்மீகமின்மையும் நிறைந்த அரசியல் தலைவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால், இன்று வரை, கிஸ்ஸிஞ்சர் செய்தத் தவறுகளுக்குத் தண்டனைக் கிடைப்பதற்குப் பதில், அமெரிக்க ஜனாதிபதிகளும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களும் அவரது மூலோபாயத் திறனைப் போற்றுவதுத் துயரத்தை அளிக்கிறது (இதில், அவர் அன்னைத் தெரெஸா போன்றவர் - ஒரு மாயையின் சேவைக்காக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிகைப்படுத்தாமல், அவர்களின் இன்னல்களை அதிகரித்தப் பின்னர் வெளி உலகிற்கு பெரிய மனிதர்களாக வலம் வருகின்றனர்).
அலசல்:
இந்தியா-வில் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தப் பொழுது, கல்கி இதழில் 1970-களில் வந்த, இந்திய மக்களிடையே ஆதரவைத் திரட்ட எழுதப்பட்ட ஒருக் காமிக் தொடரைப் படிக்க நேர்ந்தது. போர்க்காலம் என்பதால், அந்தத் தொடரில் வந்தக் கதாப்பாத்திரங்கள் அனைத்தும்  தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது (இந்தியர்களும் பங்க்ளாதேஷ் மக்களும் நல்லவர்கள், பாகிஸ்தான் மக்கள் கெட்டவர்கள்). பாகிஸ்தான்-இன் இராணுவத் தலைவரான ஜெனரெல் டிக்கா கானை ஒழுக்கமற்ற வெறியன் என்றும் பாகிஸ்தான்-இன் அன்றைய ஜனாதிபதியான யாஹ்யா கானைக் குடிகாரன் என்றும் காட்டியிருந்தனர். இந்தப் புத்தகத்தைப் படித்தப் பிறகு, யாஹ்யா கானின் பாத்திரப் படைப்பு பெரும்பாலும் உண்மையை ஒத்து உள்ளது. டிக்கா கானின் பாத்திரப் படைப்பு கிழக்குப் பாகிஸ்தான்-இல் அட்டுழியங்கள் செய்தப் பாகிஸ்தானிப் போர் வீரர்களின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. மேலும், 1971-இல் நடந்தப் போரை இந்தியா எவ்வளவு ஒருங்கிணைப்போடுச் செயல்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது - இந்திரா காந்தி, இந்தியா-வின் கிழக்கு எல்லையில் நிகழும் நெருக்கடியைத் தற்காப்புக் கருதி அணுகுவதாகக் கூறிய அதேச் சமயத்தில் ஊடகங்கள், இந்திய அரசு எந்தப் போர்க்கால நடவடிக்கை எடுத்தாலும் மக்களிடையே அதற்கு ஆதரவுத் திரட்டும் வகையில் நிகழ்வுகளைக் கவர்ந்தன.
1947-இல் விடுதலைக்குப் பிறகு, மேற்குப் பாகிஸ்தான்-இல் இருந்த பாகிஸ்தான்-இன் ஸ்தாபனங்கள், கிழக்குப் பாகிஸ்தானைத் தங்களுக்குச் சமமாகக் கருதவில்லை. பாகிஸ்தான்-இன் தேசிய மொழி உருதுவாக இருந்ததால், கிழக்கு பாகிஸ்தானியர்கள், தங்களது மொழியான வங்காளத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று விடுத்தக் கோரிக்கையை பாகிஸ்தான்-இன் அரசியல் தலைவர்கள் (ஜின்னா உட்பட) மறுத்தனர் .விடுதலைக் கிடைத்த 50 வருடங்களில், மொழிப் பிரச்சினையின் அணுகுமுறையில் இந்தியா-விற்கும் பாகிஸ்தான்-இற்கும் இடையே மிகுந்த வேறுபாடு உள்ளது. இன்றையக் காலத்தில், ஹிந்துத்வாத் தேசியவாதிகள் இந்தியா முழுவதும் ஒரே மொழியைத் (ஹிந்தி) திணிப்பதன் மூலம், பாகிஸ்தான் செய்தத் தவறுகளை தாங்களும் செய்யத் தயாராக இருக்கின்றனர். பாகிஸ்தான் விடுதலை அடைந்தச் சில மாதங்களிலேயே ஜின்னாக் காலமானதால், அந்த நாட்டின் அடித்தளமாக இஸ்லாம் வேரூன்றியது. ஜின்னா உயிருடன் இருந்திருந்தாலும், அவரால், பாகிஸ்தான்-ஐ மதச் சார்ப்பற்ற நாடாகக் கொண்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுச் சந்தேகம் தான்(தெற்கு ஆசியாவின் இஸ்லாமியர்களின் ஒரேப் பேச்சாளர் என்றுத் தன்னைக் கருதியதால், மதச் சார்ப்பற்றக் கொள்கையைப் பரப்புவதற்குக் கஷ்டப்பட்டிருப்பார்). பொருளாதாரத்தில், கிழக்குப் பாகிஸ்தான்-இல் இருந்து சணல் ஏற்றுமதியினால் கிடைத்த வருவாய், மேற்குப் பாகிஸ்தான்-இன் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டது. 1956-இல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், பாகிஸ்தான்-இன் ஆட்சியாளர்கள், மேற்குப் பாகிஸ்தான்-ஐ அசல் பாகிஸ்தான் என்றுக் கருதி, கிழக்குப் பாகிஸ்தானை முடக்குவதற்கு முற்பட்டனர்(கிழக்குப் பாகிஸ்தான்-இன் மக்கள் தொகைப் பெருக்கத்தால், தேர்தல் பெரும்பான்மைக் கிட்டுவதற்கு அது முக்கியப் பங்கு வகித்ததும் ஒரு காரணம்). இராணுவ ஆட்சிக்குப் பதிலாக மக்கள் ஆட்சி இருந்திருந்தால், வங்காளத் தலைவர்களுக்கு அரசில் இடம் கொடுப்பதன் மூலம் அவர்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டிருந்திருக்க முடியும்.
1960-களின் இறுதியிலும், 1970-களின் ஆரம்பத்திலும் உலகெங்கும் பரவிய மூன்றுச் செயல்முறைகள், பங்க்ளாதேஷ்-இன் விடுதலைக்குச் சாதகமாக அமைந்தன - விடுதலை அடைந்ததனால், ஐரோப்பிய ஏகாதிப்பத்தியத்தின் கீழ் இருந்தப் பிராந்தியங்களில் புதிய நாடுகள் தோன்றின, அமெரிக்கா-விற்கும் ஸோவியத் யூனியன்-இற்கும் இடையே நடந்தப் பனிப் போரின் உக்ரம் மற்றும் உலகமயமாக்குதலின் வளர்ச்சி. எல்லா நாடுகளிலும் வெடித்த மாணவர் கலவரங்கள், பாகிஸ்தானிலும் வெடித்தன. ஆனால், அங்கு அதுப் பங்க்ளாதேஷ் என்னும் புதிய நாடு உருவாகக் காரணமாக இருந்தது. சர்வாதிகாரியான அயுப் கானின் தலைமையில், பாகிஸ்தான் தனதுப் பொருளாதாரத்தை வளர்ப்பதில் (குறைந்தப் பட்சம் மேற்குப் பாகிஸ்தானிலாவது) குறியாக இருந்தது - அயுப் கானின் ஆட்சியில் முதல் 10 வருடங்களில், பாகிஸ்தான்-இன் பொருளாதாரம் சராசரியாக 5.5 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டது. பாகிஸ்தான்-இன் கல்வித் துறைப் பிரகடனப்படுத்திய மாற்றங்களை(இளங்கலையின் படிப்புக் காலத்தை 2-இல் இருந்து 3 வருடங்களாக மாற்றியது, மதிப்பெண் அளிக்கும் அமைப்பைக் சீர்ப்படுத்தியது, பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வெற்றி பெற மீண்டும் ஒரு அவகாசம் மட்டுமே அளித்தது, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையைக் கூட்டியது ) எதிர்த்து, மாணவர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். வளர்ந்து வரும் தனியார் துறை, பாகிஸ்தான்-இல் சிறிதளவு மட்டுமே மக்களுக்குச் சாதகமாக் இருந்தது. 1963-இல் 86.5 லட்சமாக இருந்த ஏழை மக்களின் எண்ணிக்கை 1968-இல் 93 லட்சமாகக் கூடியது. மேலும், பாகிஸ்தான் நாட்டை உருவாக்கியத் தலைமுறையின் ஏற்றத்தக்க அணுகுமுறை,  மாணவர்களின் தலைமுறையில் குறைவாகவே இருந்தது. வியட்நாம் போரில் அமெரிக்கா-வின் நடவடிக்கைகளும், உலகெங்கும் பரவிய ராக் அண்ட் ரோல் இசையும் மாணவர்களின் போராட்டங்கள் பரவுவதற்கு ஆதரவாக அமைந்தன. மேற்குப் பாகிஸ்தானில் போராடிய மாணவர்கள், பாகிஸ்தான்-இன் வருங்காலத்தில் தங்களது பங்கைக் கூட்டுவதற்குப் போராடினார்களேத் தவிர, பாகிஸ்தான் அரசைக் கவிழ்க்கப் போராடவில்லை(கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மாணவர்களை விடத் தங்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைத்ததால், அரசைத் தங்கள் பக்கம் இருப்பதாகக் கருதினர்). கிழக்கு பாகிஸ்தான்-இல் போராடிய மாணவர்கள், பாகிஸ்தான் அரசைக் கவிழ்ப்பதில் தீவிரமாக இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் அரசியல் ஸ்தாபனங்களோ ஜனநாயகக் கட்டமைப்புகளோ இல்லாத்தால் அங்குள்ள மாணவர்களின் போராட்டத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. 
1968 நவம்பர் மாதம், மக்கள் இயக்கமாக உருவெடுத்தப் பின், கிழக்குப் பாகிஸ்தானில் நடந்தப் போராட்டங்கள் ஸ்டூடெண்ட் ஆக்ஷன் கமிட்டி என்றப் பெயரில் மூன்று அமைப்புகளை இணைத்துச் செயல்பட்டது - இ.பி.எஸ்.எல் எனப்படும் ஈஸ்ட் பாகிஸ்தான் ஸ்டுடெண்ட்ஸ் லீக் (அவாமி லீக் கட்சியின் மாணவர் அணி), ஈ.பி.எஸ்.யூ எனப்படும் ஈஸ்ட் பாகிஸ்தான் ஸ்டுடெண்ட்ஸ் யூனியன் (இதில், ஒரு அணி ஸோவியத் யூனியனை ஆதரித்தும், மற்றொரு அணி சீனா-வை ஆதரித்தும் செயல்பட்டன). அவாமி லீக்-இன் தலைவரான முஜிப், தனது அரசியல் வாழ்க்கையை, முன்னாள் பாகிஸ்தான் பிரதமராகிய ஹெ.எஸ்.ஸுஹ்ரவர்டியின் தலைமையில் மாணவர் போராட்டத்தில் ஆரம்பித்தவர்.  பாகிஸ்தான்-இன் அரசியல் கோட்பாடுகளுக்குள் தனது அரசியல் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தினால், ஸுஹ்ரவர்டி , பாகிஸ்தான்-இன் 1956 அரசியல் சாசனம்,  கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு 98 சதவிகிதம் தன்னாட்சி அளிக்கும் (அது உண்மை இல்லை என்று அறிந்தும்) என்றுக் கூறியதை முஜிப்பும் ஆதரித்தார்.
கிழக்கு பாகிஸ்தான்-இன் மக்கள் பலத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான்-இல் நடக்கும் தேர்தலில் பெரும்பான்மைப் பெறுவதற்குத் திட்டமிட்டார். அகர்தலா கான்ஸ்பிரஸி எனப்படும் குற்றச்சாட்டில் அவரைக் குற்றவாளிக் கூண்டில் பாகிஸ்தான் அரசு நிறுத்தி இருந்தது. மேற்குப் பாகிஸ்தான்-இல் முஜிபிற்கு எதிராக ஸுல்ஃபிக்கர் அலி புட்டோ (பெனசிர் புட்டோவின் தந்தை) நின்றார். அவரது அரசியல் செல்வாக்கு மேற்கு பாகிஸ்தான்-இன் சிந்த் மாநிலத்தில் இருந்தது. பெர்க்ளி மற்றும் ஆக்ஸ்ஃபொர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்துப் பாகிஸ்தான் திரும்பியவுடன், அயூப் கான் அவரைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். புட்டோவின் தூண்டுதலால், அயூப் கான், பாகிஸ்தான்-ஐச் சீனா பக்கம் சாய்த்தது மட்டுமல்லாமல், 1965-இல் இந்தியாவுடன் போரும் தொடுத்தார். 1965 போரை முடிக்க டாஷ்கெண்ட் ஒப்பந்தத்தில் அயூப் கான் கையெழுத்திட்டவுடன், அவரை எதிர்த்துப் புட்டோ எதிர்க்கட்சிக்குப் பாய்ந்தார். அதன் விளைவாக, மேற்கு பாகிஸ்தான்-இல் உள்ள மாணவர்களிடையே மிகுந்த ஆதரவுப் புட்டோவிற்குக் கிட்டியது.
மாணவப் போராட்டங்களினால், புட்டோவும் முஜிபும் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டங்களின் தீவிரம் குறையாமல் இருப்பதைக் கண்டு, அயூப் கான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்தார். பிப்ரவரி 1969-இற்குள், அயூப் கானைப் பதவி விலகுமாறுப் பாகிஸ்தான்-இன் இராணுவமும் அதன் தலைவர் ஜெனரெல் அகா முகமது யாஹ்யா கானும் அழுத்தினர். அதன் விளைவாக, யாஹ்யா கான் பாகிஸ்தான்-இன் ஜனாதிபதி மற்றும் பிரதான தற்காப்புச் சட்டத்தின் நிர்வாக அதிகாரியாகத் தன்னை நியமித்துக் கொண்டார். 1970-இல் அக்டோபர் 5-ஆம் தேதி தேசிய அளவில் தேர்தலில் நடக்கும் என்று அறிவித்தார். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியச் சட்டசபை, அடுத்த 120 நாட்களில் அரசியல் சாசனத்தை வரையறுத்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். அந்தக் கெடுவை மீறினால், தேசியச் சட்டசபைக் கலைக்கப்பட்டு, தேர்தல் மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்(இவ்வாறு, குறுகியக் காலத்தில் கெடுவை அமைத்து, அதனை அடையும் பொருட்டு ஏற்படும் அழுத்ததைப் பயன்படுத்தித் தீர்வுக் காண்பதின் முட்டாள்தனம், அமெரிக்கக் காங்கிரஸ் வருடாவருடம் கடன் உச்சவரம்புப் பற்றியப் பேச்சுவார்த்தையை ஒத்து இருக்கிறது).
புட்டோ,இஸ்லாமிய ஸோஷியலிஸம் என்றக் கொள்கையை (மக்களின் மத உணர்வுகளைத் தூண்டியும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வாக்கு அளித்தும்) முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரத்தைப் பெரும்பாலும் மேற்குப் பாகிஸ்தான்-இல் மேற்கொண்டார். ஒரு நல்ல அரசியல்வாதி போல் இரட்டை வேடமும் ஆடினார் - போராடும் மாணவர்களிடம் மேற்கத்திய நாடுகளிடம் உள்ள கூட்டணியிலிருந்து பாகிஸ்தான்-ஐ வெளியில் கொண்டு வருவேன் என்று உத்திரவாதம் கொடுத்த அதே மூச்சில் மேற்கத்திய நாடுகளிடம் அவர்களுடனானக் கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்தார்.கிழக்கு பாகிஸ்தான்-இல் முஜிப் தலைமையில் உள்ள அவாமி லீக்கைத் தவிர, கம்யூனிஸக் கொள்கையைப் பினபற்றும் நேஷனல் அவாமி பார்ட்டித் (ஸோவியத் யூனியன் மற்றும் சீனா இடையே கம்யூனிஸத்தைப் பற்றிய வேறுபாட்டினால், இந்தக் கட்சியும் இரண்டாகப் பிரிந்தது) தேர்தலில் போட்டியிட்டது. பாகிஸ்தான்-இன் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டு கிழக்கு பாகிஸ்தான்-இற்கு தன்னாட்சிக் கிடைக்கச் செய்வதாக உறுதி அளித்து, பாகிஸ்தான்-இன் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாப்பதாகவும்  உறுதி அளித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, ஜூலை 1970-இல் கிழக்கு பாகிஸ்தான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக, யாஹ்யா கான், தேர்தலை டிசம்பர் 1970-க்கு ஒத்தி வைத்தார். வெள்ளத்தினால் ஆன சேதத்தைக் கண்காணிக்கும் பொழுது அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததால், நிலைமையின் கடுமையைக் குறைவாக எடைப்போட்டு கிழக்கு பாகிஸ்தான்-இற்கு வெள்ள நிவாரணத்தை மெதுவாக யாஹ்யா கான் அறிவித்தார். அதனால், முஜிப் கிழக்கு பாகிஸ்தான்-இன் விடுதலைக் கோரிக்கையை நோக்கி அடி எடுத்து வைத்தார்.  தேர்தலில் வெற்றிப் பெற்று பாகிஸ்தான்-இன் பிரதமராக இருக்கும் ஆசை இருந்ததால், பாகிஸ்தான்-இல் இருந்து கிழக்கு பாகிஸ்தான்-ஐப் பிரிக்க வேண்டும் என்று முஜிப் நிபந்தனை இடவில்லை. தேர்தல் முடிவுகள், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் முஜிப்பிற்கும் அதிர்ச்சி அளித்தது. கிழக்கு பாகிஸ்தான்-இல், முஜிப்பின் அவாமி லீக் கட்சி 162 இடங்களில் 160 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றிருந்தது. புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, மேற்கு பாகிஸ்தான்-இல் 138 இடங்களில், 81 இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தது. நேஷனல் அஸெம்ப்ளியில், பெரும்பான்மை அடைந்ததால், யாஹ்யா கான், தங்களை ஆட்சி அமைப்பதற்கு அழைப்பார் என்று அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பார்த்தனர். தேர்தலில், அவாமி லீக் கட்சி மோசமாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சி அமோகமாகவும் வெற்றிப் பெறும் என்றுக் க ணித்து, பாகிஸ்தான் இராணுவம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் மோதல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தங்கள் ஆட்சியை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. பாகிஸ்தான் இராணுவத்திற்கு வீரர்களை அதிகமாக அனுப்பும் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களைப் பாகிஸ்தான் மக்கள் கட்சிக் கைப்பற்றியிருந்தது. ஆட்சியைப் பற்றிக் கலந்தாலோசிக்க யாஹ்யா கான், முஜிப்புடனும் புட்டோவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதியான யாஹ்யா கானை நாட்டின் அடையாளச் சின்னமாக வைத்து மக்கள் ஆட்சியை நடத்த முஜிப் திட்டமிட்டிருந்தார். யாஹ்யா கானின் எண்ணத்தில், நாட்டின் முக்கியத் துறைகளான பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, வணிக வளத் துறை, உள்நாட்டுத் துறை, தகவல் தொடர்புத் துறை போன்றவைத் தன் கையில் இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். யாஹ்யா கான், முஜிப் மற்றும் புட்டோவிற்கும் இடையே சமரசம் ஏற்படாததால், யாஹ்யா கான், நேஷனல் அஸெம்ப்ளிக் கூடுவதை மார்ச் 3, 1971 -இற்கு ஒத்தி வைத்தார். மார்ச் 1 அன்று யாஹ்யா முஜிப்பிடம் நேஷனல் அஸெம்ப்ளி மீண்டும் ஒத்தி வைக்கப்படும் என்று கூறினார். அதன் விளைவாக, கிழக்கு பாகிஸ்தான்-இல் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மார்ச் 7-ஆம் தேதி, முஜிப் கூட்டம் ஒன்றில் முக்கிய அறிக்கைச் செய்யப் போவதாக அறிவித்தார். மார்ச் 6-ஆம் தேதி, யாஹ்யா கான், நேஷனல் அஸெம்ப்ளிப் பற்றியப் பேச்சுவார்த்தை முறிந்தது என்றுக் கூறி அது மார்ச் 25-ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைத்தார். அதே நேரத்தில், பாகிஸ்தான் இராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார். புட்டோ, தனதுப் பங்கிற்கு, மேற்கு பாகிஸ்தான்-இல் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கிழக்கு பாகிஸ்தான்-இல் அவாமி லீக் கட்சியும் ஆள வேண்டும் என்றக் கோரிக்கையை (மக்கள் தேர்வின் பயனை முற்றிலும் புறக்கணிப்பதாக இது அமைந்தது) முன்வைத்தார். கிழக்கு பாகிஸ்தான்-இன் மாணவர் அமைப்புகள், முஜிப்பிடம், கிழக்கு பாகிஸ்தான்-இற்கு விடுதலை அளிக்க வேண்டும் என்றக் கோரிக்கையை முன் வைக்குமாறு வற்புறுத்தினர். யாஹ்யா கான், மார்ச் 23-ஆம் தேதி, பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தான்-இற்குள் நுழைந்து சட்டம் ஒழுங்கை நிலைக்காக்கும் என்று முடிவெடுத்தார். அதற்கான ஆணையில் கையெழுத்திட்டவுடன், மார்ச் 25-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு ஆபரேஷன் சேர்ச்லைட் ஆரம்பானது. வெகுவிரைவாக பாகிஸ்தான் இராணுவம், முஜிப்பை கைது செய்தது. ஆனால், மாணவர் அமைப்புகளும் அவாமி லீக் கட்சியின் மூத்தத் தலைவர்களும் காடுகளுக்குள்ளும் இந்தியாவிற்குள் சென்றும் தப்பித்துக் கொண்டனர். பாகிஸ்தான் இராணுவம் தனது முக்கியக் குறிக்கோளான டாக்கா  நகரைத் தன் வசம் கொண்டு வந்தது. அதனை அடைய பல ஹிந்துக்களையும் பழைய டாக்காவில் இருந்த பல வணிகர்களையும் மாணவர்களையும் கொன்றுக் குவித்தது. இதுப் பற்றி அறிய வந்த அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள், நிக்ஸன் மற்றும் கிஸ்ஸிஞ்சருக்குப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை (ப்ளட் டெலெக்ராம் என்றப் புத்தகத்திலும் ஜார்ஜ் வாஷிங்கடன் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் நேஷனல் ஸெக்யூரிட்டிக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களிலும் இருக்கிறது)  அனுப்பினார்கள். கிழக்கு பாகிஸ்தான் ரெஜிமென்ட்டும் கிழக்கு பாகிஸ்தான் ரைஃபில்ஸும் பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருந்துத் தப்பித்து, அவர்களை எதிர்த்தன. இதனால், பாகிஸ்தான் இராணுவம் டாக்கவைத் தன் வசம் கொண்டு வருவதற்குச் சில நாட்கள் ஆகியது. மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருந்துத் தப்பிய வீரர்கள் இந்திய எல்லையைத் தாண்டி அங்குள்ள இந்திய வீரர்களிடம் உதவிக் கேட்டனர். அதே நேரத்தில், அவாமி லீக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருந்துத் தப்பி, இந்திய எல்லையைத் தாண்டினர்.
இந்தியா-வில், 1969-இல், காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் (ஒ) (காமராஜர் தலைமையில்) மற்றும் காங்கிரஸ் (ஆர்) (தனது தலைமையில்) என்று இரண்டாக இந்திரா காந்தி பிரித்தார். தேசிய அளவில் தேர்தலையும் நடத்த உத்தரவிட்டார். அவரது காங்கிரஸ் (ஐ)-விற்கு எதிராக காங்கிரஸ் (ஒ), ஜன சங்க், ஸ்வதந்திராக் கட்சி, சோஷியலிஸ்டுகள் மற்றும் பிராந்தியக் கட்சிகள் கூட்டணி வகுத்து நின்றன. 'இந்திராவை வெளியே விரட்டுங்கள்' என்ற  கோஷத்தை எதிர்த்து, இந்திரா காந்தி 'வறுமையை வெளியே விரட்டுங்கள்' என்ற கோஷத்தை எழுப்பினார். அந்தத் தேர்தலில், காங்கிரஸ் (ஐ), மொத்தம் இருந்த 518 இடங்களில் 352 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன், இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியைச் சந்தித்தார். அவாமி லீக் கட்சி மதச்சார்ப்பற்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், அதன் அமோக வெற்றியினால், இந்தியா பாகிஸ்தான் உடன் சமாதானமாகப் போக முடியும் என்ற நம்பிக்கைத் துளிர் விட்டது. இன்றையக் காலத்தில், பங்க்ளாதேஷ் நாடு விடுதலை அடைந்ததற்குத் தன்னுடையப் பங்கைப் பற்றிப் பெருமைக் கொண்டாலும், கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடி நிகழும் பொழுது, இந்திரா காந்தியும் அவரது ஆலோசகர்களும் எச்சரிக்கையாகச் செயல்ப்பட்டனர். தவறாக எடுக்கும் முடிவுகளால் பாகிஸ்தான் உடன் போருக்குப் போவதை அவர்கள் விரும்பவில்லை. சில வருடங்களுக்கு முன் நைஜீரியா நாட்டில் பையாஃப்ரா மாநிலத்தில் நடந்தப் புரட்சித் தோல்வி அடைந்ததன் காரணமாக, பங்க்ளாதேஷ்-இன் விடுதலை, கிழக்கு பாகிஸ்தான் புரட்சியாளர்கள் வெற்றிப் பெற்றால் தான் நிகழும் என்று உறுதியாக நம்பினர். ஆனால், அது நடப்பதற்கு ஏதுவாக கிழக்கு பாகிஸ்தான்-இன் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் உதவி அளிக்கத் தயங்கினர். அவாமி லீக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் தங்களால் முடிந்த மட்டும், இந்தியர்களிடம் உதவிக் கேட்டு மன்றாடினர்(முதலில் இந்தியர்களிடம் உதவிக் கேட்டு வந்தப் பொழுது, தங்களை பங்க்ளாதேஷ் நாட்டின் பிரதிநிதிகள் என்று விவரித்துக் கொண்டனர். அந்த நேரத்தில், எந்த ஒரு நாடும் பங்க்ளாதேஷை அங்கீகரிக்கவில்லை). ஸயத் நஸ்ருல் இஸ்லாம் தலைமையில் தற்காலிக அரசை நிறிவித்து, வெளிநாட்டு மற்றும் இந்திய ஊடகங்களின் முன்னே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியில், இந்திரா காந்தி பங்க்ளாதேஷ்-இன் விடுதலைக்காகவும் பாகிஸ்தான் உடன் போர் புரிய ஆர்வத்தோடு இருந்ததாகவும், அதனைத் தடுத்தது இந்திய இராணுவத்தின் தலைமைத் தான் என்றுப் பல வதந்திகள் பரவியிருக்கின்றன.   அவ்வாறுப் பரவிய ஒரு வதந்தியில், ஜெனரெல் ஸாம் மனெக்ஷா, இந்திரா காந்தித் தன்னிடம் கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடிக்கு இராணுவத் தீர்வுக் காண்பதைப் பற்றி அழுத்தியதற்குப் பதிலாக, 'இந்தப் போரைச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆசை இன்னும் இருந்தால், அந்தப் போரில் இந்தியாவிற்கு 100 சதவிகிதம் தோல்விக் கிடைக்கும் என்று உத்திரவாதம் தருகிறேன். இப்பொழுது நாங்கள் என்னச் செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள்' என்றுக் கூறியதாக வலம் வருகிறது. இந்திரா காந்தியின் நோக்கத்தில், 1965-இல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில், இந்திய இராணுவத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டப் பலவீனங்கள், சரிச் செய்யப்படாமல், பாகிஸ்தான் உடன் மேற்கு பாகிஸ்தான்-இல் சண்டையில் ஈடுப்பட்டால், இந்திய இராணுவத்தின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்று நம்பினார். மேலும், பாகிஸ்தான்-இற்கு உதவியாக சீனாப் போருக்குள் நுழைவதையும் நினைத்துக் கவலைக் கொண்டார். முஜிப் சிறையில் இருக்கும் சமயத்தில், அவாமி லீக் கட்சியின் மூத்தத் தலைவர்களிடத்தில், ஒரு புதிய நாட்டை உருவாக்கும் அளவிற்குத் தேவையான அரசியல் சமயோசிதம் இருக்கும் என்று இந்திரா காந்தி நம்பவில்லை. கிழக்கு பாகிஸ்தான் போராளிகளின் எதிர்ப்பை ஊக்குவித்து அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் வலுவான அழுத்தத்தில் துவண்டு விடாமல் இருக்கக் குறைந்தப் பட்சம் தேவையான அளவு உதவி செய்யத் தயாராக  இருந்தார்.  நவம்பர் வரைப் பொறுத்திருந்தால், ஹிமாலய மலை முழுதும் பனிமூட்டமாகி, சீனாப் பாகிஸ்தான்-இற்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செயல்படுத்த முடியாமல் போகும் என்றுக் கணித்தார். பாகிஸ்தான் இராணுவத்தின் அட்டுழியங்களினால், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில், அகதிகள் பெருங்கடலாக வந்துக் குவிந்த வண்ணம் இருந்ததன் காரணமாகத் (1971 மே மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்குச் சராசரி 102,000 அகதிகள் வந்தனர்) தனது எச்சரிக்கையான அணுகுமுறையிலிருந்து மாற வேண்டி வந்தது.  1947-இல் இருந்து கிழக்கு பாகிஸ்தான்-இல் இருந்து வரும் அகதிகளில்,அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, 80 விகிதம் இஸ்லாமியர்கள் என்றும் 20 விகிதம் ஹிந்துக்கள் என்றும் இருந்து வந்தது. 1971-இல் பாகிஸ்தான் இராணுவத்தின் இனப்படுகொலை கொடுமைகளால், அகதிகளில் 80 விகிதம் ஹிந்துக்கள் 20 விகிதம் இஸ்லாமியர்கள் என்று மாறியது. அகதிகளின் பெருவாரியான வருகையைக் காரணமாக வைத்து, இந்திரா காந்தி, பாகிஸ்தான்-இன் உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடி, இந்தியா-வின் உள்நாட்டுப் பிரச்சினையாக மாறி விட்டது என்றுக் குற்றம் சாட்டினார். அகதிகளுக்கு மருத்துவ, உணவு மற்றும் தங்கும் வசதிகளைக் கட்டி மேம்படுத்தச் செலவாகிய நிதி, காங்கிரஸ் கட்சியின் ஸோஷியலிஸ வாக்குறுதிகளில் இந்திய மக்களுக்காக ஒதுக்கப்பட்டதிலிருந்து வந்தது. உலக நாடுகளிடம் கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடிக்கு ஒரு அரசியல் தீர்வுக் காண இந்திரா காந்தி வற்புறுத்தினார்.
இந்தக் காலத்தில், அமெரிக்கா-வின் ஜனாதிபதியாக ரிச்சர்ட் நிக்ஸனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹென்றி கிஸ்ஸிஞ்சரும் இருந்தனர். சீனா-உக்கும் ஸோவியத் யூனியன்-உக்கும் 1969 உஸ்ஸுரி நதிக்கு அருகில் நடந்தச் சண்டையில், மார்க்ஸிஸ கம்யூனிஸக் கொள்கையின் ஒற்றுமை முகமூடிக் கிழிந்தது. அதனைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, அமெரிக்கா, சீனா-வைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சித்தது. பிற்காலத்தில், பிரபலமான, நிக்ஸனின் சீன விஜயம், இவ்வாறு ஆரம்பித்த அமெரிக்க மூலோபாயத்தினால் நிகழ்ந்தது. சீனா உடன் பேச்சுவார்த்தை நடத்த, நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும், யாஹ்யா கானைத் தூதுவராகப் பயன்படுத்தினர். சீனத் தலைவர்கள், அமெரிக்கப் பிரஸ்தாபங்களுக்கு எச்சரிக்கையாகப் பதிலளித்தவுடன், நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் அவசரக் கதியில் சீனா-வின் நட்பைக் கோரினர். இதன் விளைவாக, யாஹ்யா கான், அமெரிக்கா-வின் வெளியுறவு நடப்புகளில் மிகுந்தச் செல்வாக்கோடு வலம் வந்தார். பாகிஸ்தான் இராணுவம், கிழக்கு பாகிஸ்தான்-இல் நடத்திய இனப்படுகொலையை அமெரிக்காக் கண்டுக்கொள்ளாமல் இருக்க, இது வெகுவாக உதவியது. அமெரிக்கா-வின் வெளியுறவுத் துறை இதற்கு எதிராக இருந்தாலும், அவர்களைப் புறக்கணித்து, நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் யாஹ்யா கானிற்கு உறுதுணையாக நின்றனர். அணி சேரா அமைப்பின் தலைமையை இந்தியா எடுத்துக் கொண்டிருந்ததால், நிக்ஸன் மற்றும் கிஸ்ஸிஞ்சருக்கு பொதுவாக இந்தியா மீதும் குறிப்பாக இந்திரா காந்தி மீதும் கடுப்பிருந்தது. அதற்கு மாறாக, யாஹ்யா கானைக் கஷ்டமான நிலையில் தள்ளப்பட்ட நல்லத் தலைவர் என்று நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் நம்பினர். அமெரிக்கா-வின் கூட்டணியில் இருந்த மற்ற நாடுகள், பாகிஸ்தான் இராணுவத்தின் செயல்களைக் கண்டு எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொண்டாலும், பாகிஸ்தான்-இன் இராணுவப் பலத்தின் மூலம் கிழக்கு பாகிஸ்தான்-ஐ கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்தால், கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடி மறைந்து விடும் என்று நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் தீவிரமாக நம்பினர். அதனால், அமெரிக்கா-வின் வெளியுறவுத் துறையின் எதிர்ப்பையும் (டாக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெள்ளத் தெளிவாக பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை இனப்படுகொலைச் செய்கிறது என்றுப் பல அறிக்கைகள் அனுப்பியும்)  மீறி, 1965 இந்தியா பாகிஸ்தான் போரின் பின் பாகிஸ்தான் மீதுப் போடப்பட்டிருந்த ஆயுதத் தடையை விலக்கினர்.
கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியினால், பாகிஸ்தான்-இன் பொருளாதாரம் மிகப் பெரியச் சரிவைக் கண்டது. ஏப்ரல் 1971-இல் பாகிஸ்தான்-இன் அந்நியச் செலாவணி இருப்புகள், $137.4 மில்லியன் டாலராக இருந்தன. பாகிஸ்தான்-இற்குக் கடன் அளித்திருந்த நாடுகள், புதிதாக நிதி உதவி அளிப்பதற்கு முன் (ஏற்கனவே அளித்திருந்த நிதி உதவியில் அவர்கள் கைவைக்கவில்லை), கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக் காண வற்புறுத்தினர். பாகிஸ்தான், மற்ற நாடுகளிடமிருந்து வாங்கியக் கடனைத் திருப்பி அடைப்பதை நிறுத்துவதாக் அறிவித்தவுடன், கடன் அளித்த நாடுகள், புதிதாக நிதி உதவி செய்வதுக் கடினமானது. பாகிஸ்தான்-இன் பரிதாபமானப் பொருளாதார நிலையை மேம்படுத்த, நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் வோர்ல்ட் பேங்க் மற்றும் ஐ.எம்.எஃப் அமைப்புகளிடம் தங்களதுச் செல்வாக்கைப் பயன்படுத்தி, நிதி உதவி செய்யுமாறு வற்புறுத்தினர். அமெரிக்கா, பாகிஸ்தான்-ஐ ஆதரித்ததால், இந்தியாவிற்கும், பாகிஸ்தான்-இற்கும் இடையே நடக்கும் போரில் சீனா பாகிஸ்தான் பக்கம் நுழைந்தால், சீனா-வைத் தடுக்க அமெரிக்கா ஒன்றும் செய்யாது என்று இந்திய வெளியுறவுத் துறையிடம் எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் சீனா-வின் ஆதரவின் பாதிப்பைக் குறைக்கும் நோக்கோடு, இந்தியா ஸோவியத் யூனியன்-ஐ தன் பக்கம் இழுக்க முற்பட்டது. ஆகஸ்ட் 1971-இல் இந்தியா-வும் ஸோவியத் யூனியன்-உம் நட்பு மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் - இதன்படி, இந்தியா அல்லது ஸோவியத் யூனியன்-ஐ மூன்றாவது நாடு போருக்கு இழுத்தால், இருவரும் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும். 1965 போருக்குப் பின் ஸோவியத் யூனியன் பாகிஸ்தானுடன் தனது இராணுவத் தொடர்புகளை மேம்படுத்தத் துவங்கியது. இந்தியா-விற்கு ஸோவியத் யூனியன் அளித்த ஆதரவு மிதமாகத் தான் இருந்தது - சோவியத் யூனியன் பாகிஸ்தான்-ஐ கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக் காண வேண்டும் என்று வற்புறுத்தினாலும், இந்தியா நிலைமையை மோசமாக்கக் கூடாது என்று எச்சரித்தது. இந்தியா-விற்கு ஸோவியத் யூனியன் அளித்த ஆதரவு, இந்தியா பாகிஸ்தான் போரினால் சீனா-வின் கை ஓங்காமல் இருக்க வேண்டும் என்றக் கணிப்போடு அளிக்கப்பட்டது. 1971-இல் நடந்த போரில், இதனால், சீனா, போருக்குள் நுழையாமல், சமாதானப் பேச்சுவார்த்தைப் பற்றிய அறிக்கைகளோடுத் தனது வேலையை நிறுத்திக் கொண்டது. ஸோவியத் யூனியன், இந்தியா பாகிஸ்தான் போரில் சீனா பாகிஸ்தான் பக்கம் நுழையும் என்று அச்சுறுத்தினால், சீனா உடனானத் தனது எல்லையில் தனது வீரர்களை நிறுத்திச் சீனா-வை அச்சுறுத்துவோம் என்று இந்தியா-விற்கு உறுதி அளித்தது. சீனா-வின் பைத்தியக்காரத் தலைவரான மா ஸே துங்க், தனது பாதுகாப்பு அமைச்சரை 1971-இன் கடைசி மாதங்களில் விரட்டி அடித்ததால், சீனா-வின் இராணுவம் பலவீனமாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தான்-இல் நடந்த இனப்படுகொலைகள், உலகிற்குத் தெரியப்படுத்தியதற்கு, ஊடகங்கள், கலாச்சார மேற்தட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் வங்காளச் சமூகம் தான் பெரும்பாலான காரணம். வங்காளியான பிரபல இசையாளரான பண்டிட் ரவி ஷங்கர், சர்வதேச அளவில் பிரபலமான பீட்டில்ஸ் மற்றும் இதர இசை உலக ஜாம்பவான்களை வைத்து கிழக்கு பாகிஸ்தான் நிவாரண நிதிக்கு மிகப் பெரிய அளவில் இசை விழா ஏற்பாடு செய்தார். ஊடகங்களில் கிழக்கு பாகிஸ்தான் இனப்படுகொலைப் பற்றியச் செய்திகளைப் படித்து விட்டு, வெளிநாடுகளில் வாழும் வங்காள மக்கள், பாகிஸ்தான் நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் பண அளவைக் குறைத்துக் கொண்டனர். இது, பாகிஸ்தான்-இன் பொருளாதாரத்தை அதிக அளவில் பாதித்தது. இந்திய அரசு, கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியைச் சமாளிக்கத் தான் எடுத்த நடவடிக்கைகளுக்கு உதவும் என்று நம்பியிருந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் அதனைக் கைவிட்டன. அவற்றில், இரான் நாடு, பாகிஸ்தான் உடன் மேற்கொண்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையே விமானச் சண்டை வெடித்தால், கராச்சி நகரை பாதுகாக்கத் தனது விமானப் படையை பாகிஸ்தான் பக்கம் பயன்படுத்துவதாக உறுதி அளித்திருந்தது. மேற்கத்திய நாடுகளின் அரசு சாரா அமைப்புகள், கிழக்கு பாகிஸ்தான் அகதிகளின் நிஜமான நிலைமையை தத்தம் நாடுகளில், அங்குள்ள அரசுகளைக் காட்டிலும் விரிவாக, விவரித்தனர். ஊடகங்கள், கலாச்சார மேற்தட்டு மக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் முயற்சிகளால், ஐரோப்பா-வில் பொது மக்களின் கருத்து கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மற்றும் இந்தியா பக்கம் வெகுவாகச் சாய்ந்தது. ஐ.நா. சபையில், கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடி, தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று பாகிஸ்தான் மிக நேர்த்தியாக வாதாடியது. இந்தியா, அகதிகளின் நிலைமையைப் பற்றி வாதாட மேற்கொண்ட முயற்சிகள் வீண்போயின. கனடா, தனது க்யூபெக் மாநிலத்தில் நிகழும் தன்னாட்சிப் போராட்டம் காரணமாக, பாகிஸ்தான்-ஐ அழுத்துவதற்கு மறுத்தது. இஸ்ரேல் நாட்டின் பிரதமர், கோல்டா மேயிர், தனது நாட்டை இந்தியா அங்கீகரித்தால், இந்தியாவிற்கு ஆதரவுக் கட்டாயம் அளிப்போம் என்றுக் கூறியதை இந்தியாப் புறக்கணித்தது.
கிழக்கு பாகிஸ்தான்-இல் வெடித்த அகதிகளின் அவலம், இந்திரா காந்தி, இந்தியா-வில் புதிதாக மக்கள் மேம்பாட்டிற்குச் செயல்படுத்த ஆசைப்பட்டத் திட்டங்களின் நிதியை எடுத்துக் கொண்டது. மேலும், அகதிகளின் வரவினால், இந்தியா-வின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பு சமநிலை குலைந்தது. அதன் காரணமாக, இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் புரட்சியாளர்களுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிச் செய்ய முடிவெடுத்தார். இந்தியா, கிழக்கு பாகிஸ்தான்-இல் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்க்கும் முக்தி பாஹினி அமைப்பிற்கு, ஆயுத மற்றும் நிதி உதவி பெருமளவில் செய்ய ஆரம்பித்தது. அதற்குச் சாதகமாக, பாகிஸ்தான், முஜிப்பின் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை விதித்தது. கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியின் தீர்வுக் காணும் கடைசி முயற்சியாக, இந்திரா காந்தி மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று அங்குள்ளத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுடைய பதில்கள் இந்தியாவிற்குத் திருப்தி அளிக்காமல் போகவே, இந்திரா காந்தி, இந்திய இராணுவத்தை, கிழக்கு பாகிஸ்தான்-இன் எல்லைக்குள் 10 மைல் தூரத்தில் இருந்தப் பாகிஸ்தான்-இன் எல்லைக் காவல்களை ஆக்கிரமிக்குமாறு ஆணைப் பிறப்பித்தார். 1971 நவம்பர் மாதக் கடைசியில், இந்திய இராணுவம், கிழக்கு பாகிஸ்தான்-இற்குள், முக்தி பாஹினி வீரர்களை உதவும் பொருட்டு, தன்னை நிலை நாட்டியிருந்தது. இந்தியா-வின் மேற்கு எல்லையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் 1971 டிசெம்பர் 3-ஆம் தேதி, ஆக்கிரமிக்க முயற்சித்தது. இந்தியா-வில் உள்ள ஆய்வாளர்கள், இந்தச் செயலை வைத்து, பாகிஸ்தான் தான் 1971-இல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரை ஆரம்பித்தது என்று வாதடுகின்றனர். ஆனால், அதற்கு முன்னரே, கிழக்கு பாகிஸ்தான்-இல் இந்தியா முக்தி பாஹினி வீரர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பாகிஸ்தான் இராணுவத்தை அழுத்திக் கொண்டிருந்தது. அதனால், 1971-இல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போர், இந்தியா-வின் தரப்பிலிருந்துத் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்றுக் கொள்ளலாம். ஜெனரெல் மனெக்ஷா-வின் மூலோபாயத்தில், இந்தியா இராணுவம், கிழக்கு பாகிஸ்தான்-இன் பெரியத் துறைமுகங்களான சிட்டகாங்க் மற்றும் குல்னாவைக் கைப்பற்றி, பாகிஸ்தான் இராணுவத்தைச் சிறுக் கூட்டங்களாகச் சிதற அடித்து, பிறகு அவற்றைக் கைது செய்யுமாறுத் திட்டமிட்டிருந்தார் . டாக்கா நகரை முற்றுகையிடுவது மிகவும் கடினம் என்று முடிவு செய்திருந்தார். இந்தியக் கிழக்கு இராணுவத்தின் தலைவர், ஜெ.எஸ்.ஆரோராவின் தலைமைப் பணியாளர், மேஜர் ஜெனரெல் ஜேக்கப் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டாக்காவைக் கைப்பற்றும் திட்டத்தை இயற்றினார். போர் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில், அமெரிக்காச், சண்டையை நிறுத்தி, இந்தியா-வும் பாகிஸ்தான்-உம் அவரவர் நாடுகளுக்குத் திரும்புமாறுக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதனை, ஸோவியத் யூனியன் தனதுத் தடுப்பதிகாரத்தின் மூலம் தடை செய்தது. அதற்குப் பிறகு, ஐ.நா. பொதுச் சபையில் சண்டையை நிறுத்தி, இந்தியா-வும் பாகிஸ்தான்-உம் தத்தம் நாடுகளுக்குத் தங்கள் இராணுவத்தைப் பின் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிக்ஸன் மற்றும் கிஸ்ஸிஞ்சர், ஸி.ஐ.ஏ-வின் தவறானத் தகவலின் பேரில், இந்தியா, பங்க்ளாதேஷ் விடுதலைக்கானப் போரின் மூலம், பங்க்ளாதேஷ்-இன் விடுதலையை மட்டுமின்றி, பாகிஸ்தான்-இன் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் தென் பகுதியை ஆக்கிரமித்து, பாகிஸ்தான்-இன் இராணுவத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்றுக் குற்றம் சாட்டினர். பின் காலத்தில், இந்திரா காந்தி பங்கெடுத்துக் கொண்ட அமைச்சரவைக் கூட்டங்களின் நடவடிக்கைகளில் இருந்து, அமெரிக்கா-வின் இந்தக் கருத்துத் தவறானது என்றுத் தெரிய வருகிறது. யாஹ்யா கானைத் தனதுத் தவறுகளில் இருந்துக் காப்பாற்றவும், சீனா-விற்கு, அமெரிக்கா-வின் நம்பகத்தன்மையை உறுதியாக வெளிப்படுத்தவும், நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும் மத்தியக் கிழக்கு நாடுகளிடம், அமெரிக்கா பாகிஸ்தான்-இற்கு அனுப்பும் ஆயுதங்களுக்கு வழி நிலையமாக இருக்கக் கோரினர். மேலும், சீனா-விடம், பாகிஸ்தான் மீதான அழுத்ததைக் குறைக்க, சீன இராணுவம் இந்தியாவுடன் சண்டையிடுமாறுக்  கேட்டுக் கொண்டனர். சீனா அதனை மறுத்தவுடன், நிக்ஸனும் கிஸ்ஸிஞ்சரும், அமெரிக்கா-வின் கடற்படை நடவடிக்கைகளின் தளபதியை அழைத்து, பணிக்குழு 74 என்றப் பெயரில், அமெரிக்கக் கடற்படையின் மிகப் பெரிய நவீன விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் எண்டர்ப்ரைஸை உடன், தெற்கு வியட்நாம் கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடாவிற்கு, இந்தியா-வை மிரட்டும் செயலாகச் செல்ல உத்தரவிட்டனர். அமெரிக்கா-வின் இந்தச் செயலை அறிந்தவுடன், ஸோவியத் யூனியன், அரண்டுப் போய் இந்தியா-வை பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த வற்புறுத்தியது. இந்தியா, டாக்கா நகரை வெற்றிகரமாகக் கைப்பற்றினால் தான் பங்க்ளாதேஷ்-இற்கு விடுதலைக் கிடைக்கும் என்று முடிவுக்கு வந்தது. அதனை அடுத்து, இந்திய இராணுவத்தின் ஒரேக் குறிக்கோள், டாக்காவின் மீது விழுந்தது. ஜெனரெல் மனெக்ஷா, பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதி ஏ.கே.நியாஸியிடம், பாகிஸ்தான் இராணுவம், டிசம்பர் 16-ஆம் தேதி சாயங்காலம் இந்திய நிலை நேரமான 4 மணிக்கு, சரணடைய வேண்டும் என்று ஆணையிட்டார். நியாஸி, காலம் தள்ளிக் கொண்டேப் போனால், ஐ.நா. குறுக்கிட்டு, பாகிஸ்தான்-இன் சரணாகதியைத் தடை செய்து, கிழக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் அழிவைத் தடுக்கும் என்று நம்பினார். டிசம்பர் 16-ஆம் தேதி சாயங்காலம் 4:55 மணிக்கு லெஃப்டினன்ட் ஜெ.எஸ்.ஆரோராவும், ஏ.கே.நியாஸியும் பாகிஸ்தான் சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திட்டனர். உடனடியாக, இந்தியா, தனது மேற்கு எல்லையில், போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அவமானப்படுத்தும் இந்தத் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவமும் யாஹ்யா கானும் தங்களதுப் பதவிகளை இராஜினாமாச் செய்தனர். பாகிஸ்தான்-இன் ஜனாதிபதியாக புட்டோப் பதவியெடுத்தார். 1972 வருடம், ஜனவரி 7-ஆம் தேதி, முஜிப் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு லண்டனிற்குப் பறந்தார். அதன் பிறகு, இந்தியாவிற்குச் சென்று, புது டில்லி விமான நிலையத்தில் இந்திரா காந்தியைச் சந்தித்தார். போரின் பின் நடந்த சிம்லா மாநாட்டில், இந்தியா-வும் பாகிஸ்தான்-உம் தங்களுக்குள் நிகழும் நெருக்கடிகளை வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல், இருவருக்குமிடையேப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். மேலும், காஷ்மீரில் இருந்த சண்டை நிறுத்தக் கோட்டை இருவரும் மதிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டாக மாற்றி, வருங்காலத்தில் அதை சர்வதேச எல்லைக் கோட்டாக மாற்றுவதற்கு ஏற்றுக் கொண்டனர். 1972-ஆம் வருடம் ஜனவரி மாதத்தில், பங்க்ளாதேஷ்-இன் அரசு இனப்படுகொலை விசாரணைக் கமிஷன் அமைத்து, 37,000 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 1973-ஆம் வருடம், நவம்பர் மாதத்தில், முஜிப் தீவிரக் குற்றங்களைச் (கற்பழிப்பு, கொலை, கலவரம்) செய்தவர்களைத் தவிர மற்றவர்களை விடுதலைச் செய்யுமாறு ஆணையிட்டார். 1975-ஆம் வருடம், ஆகஸ்ட் 15-ஆம் தேதி, முஜிப் மற்றும் அவரதுப் பல உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரம் கழித்து, அவாமி லீக் கட்சியின் மூத்தத் தலைவர்களை துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, பங்க்ளாதேஷ்-இன் தற்காலிக அரசு, அந்தக் கொலையாளிகளை மன்னித்து விடுதலை செய்தது. அதனை அடுத்து, மேஜர் ஜெனரெல் ஸியா உர் ரஹ்மான், ஆட்சியைக் கைப்பற்றினார். 2013-இல் முஜிபின் புதல்வி, ஷெய்க் ஹஸினா, 1971-இல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விசாரணையை மீண்டும் முடுக்கி விட்டார். இன்று, ஷெய்க் ஹஸினாவின் எதிர்க்கட்சித் தலைவராக மேஜர் ஸியா உர் ரஹ்மானின் மனைவி கலேதா ஸியா இருக்கிறார்.
1971 நடந்த இந்தியா பாகிஸ்தான் போரினால், இந்திரா காந்தி உலகத் தலைவர்களிடையே மதிப்புப் பெற்றார். இந்திய உள்நாட்டு அரசியலில், அவரை லேசுப்பட்டவர் என்றுக் கருதியக் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களைத் தூக்கி எறிந்தார். உலகளவில், பாகிஸ்தான்-உம் அமெரிக்கா-வும் அவரை ஒரு பெண் தானே என்று எளிதாக எடைப் போட்டனர். இந்திய இராணுவத்தில் இருந்த ஜெனரெல்களும் (ஜெனரெல் மனெக்ஷா, மேஜர் ஜெனரெல் ஜேக்கப்), அவரதுப் பாகத்தைச் சிறிதாக்கி, வெற்றியில் தங்களதுப் பாகத்தைப் பெரிதுப்படுத்திப் பேசினர். இக்கட்டான நேரத்தில், இந்தியா-வை இந்திரா காந்தி, நேர்த்தியானப் பாதையில் செலுத்திச் சென்றார். அதற்கு, யாஹ்யா கானும், புட்டோவும் உறுதுணையாக இருந்தனர். அனைவரும் சூட்டியப் புகழாரம், இந்திரா காந்தியின் தலைக்கேறி, 5 வருடத்தில் எமர்ஜென்ஸியை இந்தியா முழுவதும் பிரகடனப்படுத்தினார். எந்த அரசியல் தலைவர் மூலம் கிழக்கு பாகிஸ்தான்-இன் வங்காள மக்களின் கஷ்டங்களைத் தெரிந்துக் கொண்டாரோ (ஜெயப்பிரகாஷ் நாராயண்), அவரையே கைது செய்துச் சிறையில் அடைத்தார்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
தி ப்ளட் டெலெக்ராம் - நிக்ஸன், கிஸ்ஸிஞ்சர் ஆண்ட் ஏ ஃபர்காட்டன் ஜெனோஸைட் - கேரி ஜெ பாஸ்
தி ட்ரையல் ஆஃப் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் - க்றிஸ்டோஃபர் ஹிச்சன்ஸ்
தி ட்ரையல்ஸ் ஆஃப் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் - யூஜீன் ஜரெக்கி
தி டில்ட்: தி யூ.எஸ் ஆண்ட் தி ஸவுத் ஏஷியன் க்ரைஸிஸ் ஆஃப் 1971 - எடிட்டட் பை ஸஜிட் காந்தி - நேஷனல் ஸெக்யூரிட்டி ஆர்கைவ்ஸ், ஜார்ஜ் வாஷிங்க்டன் யூனிவர்ஸிடி

No comments: