திருநெல்வேலி

சுருக்கம்:
பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் இந்தியா-வைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்ததுப் பற்றி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும், இந்தியா-வில் உள்ள குறிப்பிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் கட்டுக்குள் வந்ததுப் பற்றிய புத்தகங்கள் குறைவாகவே உள்ளன. இந்தப் புத்தகம், திருநெல்வேலி-யின் வரலாற்றை விளக்குகிறது - இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், திருநெல்வேலி-யின் பண்டையக் கால வரலாற்றைப் பற்றி எழுதுவதாகக் கூறினாலும், கல்வெட்டுகள் குறைவாக இருப்பதால், குறைந்த அளவிலேயே எழுதியிருக்கிறார். பொதுப்படையில் தெற்கு இந்தியா-வின் வரலாற்றையும், குறிப்பாக திருநெல்வேலி-யின் வரலாற்றையும் பரந்த நோக்கோடு எழுதியிருக்கிறார். இந்த வரலாறு, பிரிட்டிஷ்-இற்குச் சாதகமாகவும் ஹிந்துக்களை இழிவு செய்வதாகவும் இருக்கிறது - மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சுற்றி இருந்த நிலங்களில் சிதைந்திருந்தச் சட்ட ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டியது பிரிட்டிஷ் நாட்டினர் தான் என்று மார்தட்டினாலும், அந்த சட்ட ஒழுங்குச் சிதைவு திடீரெனப் பிரிட்டிஷ் நாட்டினர் வந்தவுடன் எதனால் நிகழ்ந்தது என்பதை விளக்கவில்லை.
பண்டையக் காலத்தில், தமிழ் புலவர்கள் எழுப்பியப் பலக் கூற்றுகளின் சாத்தியத்தை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள்  இல்லாத்ததை எண்ணி, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் புலம்பும் பொழுது அவரது ஏமாற்றத்தை உணர முடிகிறது. தேவையான ஆதாரங்கள் (கோவில்கள் மற்றும் நாணயங்கள்) இல்லாததால், சிங்கள, கிரேக்க, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பியக் கிறித்துவர்களின் கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்துகிறார். இந்தப் புத்தகம் முழுவதும், ஹிந்துக்களைப் பற்றி தரக் குறைவாகப் பல இடங்களில் எழுதியிருப்பதைப் புறக்கணிக்க வேண்டியிருக்கிறது. திருநெல்வேலியைப் பற்றி மகாபாரதம்அலெக்ஸான்டர் காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள் மற்றும் அசோகர் காலத்தில் வாழ்ந்த புத்த மக்கள் என்று பல்வேறுக் காலங்களில் உள்ள வரலாற்றுக் கூற்றுகளை முன்நிறுத்துகிறார்.
திருநெல்வேலி, பண்டையக் காலப் பாண்டிய நாட்டின் (மதுரையை மையமாகக் கொண்டு) தெற்குக் கோடியில் இருந்ததால், சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் இடையே இருந்தத் தொடர்புகளையும் (பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு) நன்றாக விளக்கியிருக்கிறார். வடக்கிலிருந்துக் கிளம்பிய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளினால் மதுரை அழிக்கப்பட்டதையும், அதன் பின் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் கீழ் தெற்கு இந்தியா அடங்கியதையும் அலசுகிறார். பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி, திருநெல்வேலியும் அதனைச் சுற்றி இருந்த நிலங்களிலும் எழுந்தக் கிளர்ச்சிகளை முடக்கப்பட்டக் கஷ்டங்களையும், அதில் பங்கேற்றவர்கள் தங்கள் நிலைமையை முன்னேற்றிக் கொள்வதற்குச் செய்த அரசியல் தந்திரங்களையும் விவரிக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் பின் தான் திருநெல்வேலியும் தூத்துக்குடியும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக உருவெடுத்தன. பண்டையத் தமிழ் சங்கங்களின் மையமாக இருந்த மதுரை பாண்டிய ராஜ்யத்தின் கிரீடமாகத் திகழ்ந்தது. இஸ்லாமியர்களின் தாக்குதல்களினால், மதுரையின் முக்கியத்துவம் குறைந்து, தமிழ் நாட்டின் மற்ற நகரங்களான் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருச்சியின் முக்கியத்துவம் கூடியது. பிரிட்டிஷ், இந்தியா-வை விட்டு விலகியப் பின்னர், மதுரை மீண்டும் வரலாற்றில் முன்பு இருந்தது போல், தமிழ் கலாச்சாரத்தின் பிரதான இடத்திற்கு வந்துள்ளது.
தாமிரபரணி மற்றும் கட்டபொம்மனின் வரலாற்றைப் பற்றி நிறையத்  தகவல்களை இந்தப் புத்தகம் அளிக்கிறது. பிரிட்டிஷ் இந்தியா-வை ஆள ஆரம்பித்தப் பின் நடந்த பஞ்சங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை. அதற்கு மாறாக, பிரிட்டிஷ் இந்தியா-விற்கு வருமுன் இந்தியா-வில் நிகழ்ந்த பஞ்சங்களை விலாவாரியாக அலசுகிறது.  - இதில், மக்களின் கதைகளை ஆதாரமாக ஆசிரியர் பயன்படுத்துகிறார். அதே மக்கள் தங்களுடைய வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் பொழுது, அவற்றை நம்பிக்கையற்றவை என்றுத் தள்ளி ஒதுக்குகிறார். கட்டபொம்மன் படத்தில், சிவாஜி கணேசன், இறுதிக் காட்சிகளில், தூக்கிலிடப்படுவதற்கு முன் நிகழும் காட்சிகளின் மூலத்தை இந்தப் புத்தகத்தில் காணலாம். இன்று வரலாற்றில் மறக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்துப் போராடியப் பல வீரர்களை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
அலசல்:
தமிழ் திரைப்படங்களின் இயக்குநர்கள், கதைக்குப் பின்னணி அளிக்க, தமிழ் நாட்டின் வெவ்வேறுப் பகுதிகளில் உள்ளப் பேச்சு வழக்குகளைப் பயன்படுத்துகின்றனர் (தேவர் மகன் படத்தில், நடிகர் நாஸரின் கதாப்பாத்திரம் போல). தமிழ் நாட்டின் திராவிடக் கட்சிகள் செந்தமிழை பெருமளவிற்குத் தூக்கிக் கொண்டாடுவதால், பேச்சுத் தமிழ், தமிழ் மொழியின் அறிவுஜீவிகளால் குறைவாக எடைப்போடப்படுகிறது. வரலாற்றில் வெவ்வேறுக் காலங்களில் மேலோங்கி இருந்த வம்சங்களின் பாதிப்பினால், தமிழ் பேச்சு வழக்குகள் வெவ்வேறு விதமாக உள்ளன. 1800-களின் ஆரம்ப வருடங்களில், திருநெல்வேலியில் பேசப்பட்டத் தமிழ், கடுந்தமிழ் என்றுக் குறைவாகக் கருதப்பட்டது. பொதுவாகப்  பாண்டிய ராஜ்யத்திலும் குறிப்பாகத் திருநெல்வேலியிலும் நிகழ்ந்த தொடர் ஆக்கிரமிப்புகள் இதற்கு ஒருக் காரணம்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், தமிழ் பேசும் பகுதிகளில் கிடைத்த ஆதாரங்கள் நம்பத்தகாதவை என்றுக் கருதுவதால், கிரேக்கக் கல்சுவடிகளையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் மூலமாகக் கொண்டே 11-ஆம் நூற்றாண்டு வரைத் திருநெல்வேலியின் வரலாற்றை எழுதியிருக்கிறார். தமிழகத்தில், கல்வெட்டுகளின் மூலம் ஆதாரங்கள் கிடைத்தாலும், அவை நம்பகத்தன்மைக் கொண்டதாக இல்லை என்றுக் கருதுகிறார். இந்தியா-வின் வரலாற்றைப் பொறுத்தவரைக் கிடைக்கும் ஆதாரங்களின் நம்பகத்தன்மைக் குறைவு என்ற ஆங்கிலேயர்களின் கருத்தை  'ஹிஸ்டாரிக்கல் ஸ்கெட்ச் ஆஃப் தி கிங்க்டம் ஆஃப் பாண்டியா' புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஹோரேஸ் வில்ஸனின் கூற்றின் மூலம்  பெருமையுடன் விளக்குகிறார்: 'ஞானம் பொருந்திய வல்லமை வாய்ந்தக் (ஆங்கிலேயரின்) கோட்பாடுகள் காவேரியின் தெற்கில் அமைந்திருக்கும் மாவட்டங்களின் சமூக வாழ்வில் குறுக்கிடாமலிருந்தால், கிறிஸ்துவ மதம் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பாரம்பரியமாகத் திகழ்ந்த ராவணனின் அரக்கர்கள் மற்றும் ஹனுமானின் குரங்குகள் போல் மக்கள் இன்றும் இருப்பார்கள்'.
மகாபாரத்ததில், தாமிரபரணியில், தெய்வங்கள், சொர்க்கத்திற்குப் போவதற்காக, யாகங்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அர்ஜுனன், தன்னுடைய வனவாசத்தின் பொழுது, சித்ராங்கதா என்ற பாண்டிய இளவரசியை மணந்துக் கொண்டதாகவும், அவளைக் கண்டு செல்ல சகாதேவன் வந்துச் சென்றதாகவும் சபா பருவத்தில் கூறப்பட்டிருக்கிறது (இவை, வடக்கு இந்திய மகாபாரதத்தில் இல்லை). அலெக்ஸாண்டர் காலத்தில், கிரேக்க மக்கள், தாமிரபரணியை டப்ரோபேன் என்றும், டாலெமி காலத்தில் இருந்தக் கிரேக்க மக்கள் தாமிரபரணியை ஸோலென் (இவர்கள், தாமிரபரணித் தொடங்கும் மலையான பொதிகையை பெட்டிகோ என்றும் அழைத்தனர்) என்றும் அழைத்தனர். கிர்னார் என்ற இடத்தில் இருந்தக் கல்வெட்டுகளின் மூலம், அசோகர் காலத்தில், தாமிரபரணிக்கு, தம்பப்பன்னி என்றப் பெயர் இருந்தததை அறியலாம். சந்திர குப்த மௌர்யாவின் ஆட்சிக்காலத்தில், கிரேக்கத் தூதரான ஸெலெக்கஸ் நிக்கேட்டர், பாண்டிய ராஜ்யத்தில் நடக்கும் முத்து வர்த்தகத்தை விவரித்திருந்தார். பாண்டிய நாட்டின் முத்து வர்த்தகத்தை, 14-ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவும் போற்றி எழுதினார். கிரேக்க நாகரிகத்தின் பண்டைய எழுத்தாளர்களான ஸ்டராபோ மற்றும் ப்ளைனி தி எல்டர் போன்றோர், கிரேக்க நாட்டிற்கு, பாண்டிய நாட்டிலிருந்து (20 ஏ.டி.க்கு முன்) ஒருக் குழு விஜயம் செய்தது என்று எழுதியிருக்கின்றனர். அரிசி என்றத் தமிழ்ச் சொல், கிரேக்க மொழியில் ஒரிஸா என்று மருவியது. தமிழ் மொழியிலிருந்து, முதல் முதலாக வெளிநாட்டு மொழிகளில் தோன்றிய வார்த்தைகளில், மயிலின் தோகையும் ஒன்று - இது யூதர்களின் ஹீப்ரூ மொழியில் துகி என்று மருவியது. தாமிரபரணியின் மூலத்தில் இருந்தக் கொற்கைத் துறைமுகத்தில் இருந்து, பாண்டிய நாட்டினர், விமரிசையாக வர்த்தகம் கொண்டாடினர்.
பண்டையத் தமிழ்நாட்டில் ஆட்சிச் செய்த மூவேந்தர்கள், ஆரம்பக் காலத்தில் கொற்கையில் சேரன், சோழன் மற்றும் பாண்டியன் என்ற சகோதரர்களாக வாழ்ந்து வந்தனர். பாண்டியன், கொற்கையில் தங்கி இருக்க, சேரனும் சோழனும் தத்தம் நாடுகளை உருவாக்க மற்ற நிலங்களை நோக்கிச் சென்றனர். 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சாளுக்யர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, சோழர்கள் வலிமையானச் சக்தியாக உருவெடுத்தனர். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில், பாண்டிய நாட்டு அரசன் வீரப் பாண்டியனை, சோழ அரசன் ராஜ ராஜ சோழன் தோற்கடிக்கும் முயற்சிகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன(கல்கியின் எழுத்துகளிலிருந்து, அவர் சோழர்களுக்கு ஆதரவாகவும், பாண்டியர்களுக்கு எதிராகவும் இருந்தார் என்றுத் தெரிகிறது) . பாண்டிய நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, தெற்கு இந்தியாவின் தலையாயச் சக்தியாக சோழர்கள் தங்களை நிலை நாட்டினர்.  இந்தப் புத்தகத்தின்படி அவர்களின் வம்சாவழியில் வந்த முக்கிய மன்னர்கள்:
1. ராஜ ராஜ சோழன்
2. ராஜேந்திர சோழன் - இறப்பு - 1064 ஏ.டி
3. குலோத்துங்க சோழன் - இறப்பு - 1112 ஏ.டி
4. கரிகால சோழன் - 1117 ஏ.டி.யில், வைஷ்ணவர்களின் தலைவரான ராமானுஜரை மத ரீதியில் கொடுமைப்படுத்தியதால், உயிருக்கு அஞ்சி, ராமானுஜர், துவார சமுத்திரத்தின் பல்லாலா வம்சத்தின் அரசனான பிட்டி தேவரின் சபைக்குச் சென்று அவரிடம் சரணடைந்தார். அதன்பின், பிட்டி தேவரை ஜைன மதத்தில் இருந்து வைஷ்ணவராக மாற்றினார்.
5. வீர சோழன்
6. விக்ரம சோழன்
7. சுந்தர பாண்டிய சோழன் - ஞான சம்பந்தரின் போதனையால் (சுந்தர பாண்டிய சோழனின் மனைவி, ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்திருந்தாள்), ஜைன மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறி அப்பொழுது 8,000 ஜைனர்களைக் கொன்றுக் குவித்தார். அவரது ஆட்சிக் காலத்தின் இறுதியில், இந்தியா-வின் உள்பகுதிகளில், டில்லியில் ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் தாக்குதல்கள் அதிகரித்தன. பண்டைய இஸ்லாமிய வரலாற்று எழுத்தாளர்களான வஸ்ஸாஃப், ரஷிதுத்தின், அமீர் குஸ்ரோ போன்றோர்களின் எழுத்துகளில் இருந்து, சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் அண்ணன் தம்பியாக இருந்தனர். அவர்களதுத் தந்தை, குலசேகரத் தேவர், தான் இறக்கும் முன், வீர பாண்டியனை (அவன் வீரமும் விவேகமும் மிக்கவன் என்பதால்) தனக்குப் பின் ஆள வேண்டிய அரசனாகப் பிரகடனம் செய்தார். அதனால் கோபம் கொண்ட சுந்தர பாண்டியன், குலசேகரத் தேவரைக் கொன்று (இதை, சாகித்ய அகாடெமியின் விருதுப் பெற்ற காவல் கோட்டம் புத்தகத்தை எழுதிய சு. வெங்கடேசன், சந்திரஹாசம் என்றப் புத்தகத்தில் கதையாக எழுதியிருக்கிறார்), ராஜ்யத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். தன்னை எதிர்த்த வீர பாண்டியனை, சுந்தர பாண்டியன் தோற்கடித்தார். தனக்கு ராஜ்யம் கிடைக்க வேண்டும் என்று, டில்லியில் ஆண்டு வந்த அலா-வுத்-தின் கில்ஜியிடம் வீர பாண்டியன் முறையிட்டார். அதன் பலனாக, வலிமை நிறைந்த டில்லி படையின் உதவியுடன் வீர பாண்டியன், சுந்தர பாண்டியனை தோற்கடித்தார். சுந்தர பாண்டியன், டில்லிக்குச் சென்று, தனது ராஜ்யம் தனக்குக் உதவிச் செய்ய அலா-உத்-தின் கில்ஜியிடம் கோரினார். அலா-வுத்-தின் கில்ஜியின் தளபதியான மலிக் காஃபுர் (ஹஸார் தினாரி), டில்லியில் இருந்துப் பெரியப் படையுடன் சென்று துவார சமுத்ராவையும் மதுரையையும் தரை மட்டமாக அழித்தார். ஆட்சியில் இருந்தப் பொழுது, த்வார சமுத்ரா, சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள், தங்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்காக, போர்க் குதிரைகளை மத்தியக் கிழக்கில் இருந்து இறக்குமதி செய்தன. போர்க்குதிரைகளைச் சரியாகப் பராமரிக்கத் தெரியாதலால், மீண்டும் மீண்டும் குதிரைகளை இறக்குமதிச் செய்ய வேண்டி வந்தது. அதனால், மத்தியக் கிழக்கில் உள்ள ஹோமுஸ் போன்ற வர்த்தக நகரங்கள் பெருஞ்செழிப்பு அடைந்தன. அந்தச் செழிப்புக்குக் காரணமானக் குதிரை வர்த்தகத்தை, 16-ஆம் நூற்றண்டில் மத்திய கிழக்கிலிருந்துப் போர்த்துகீசியர் கைப்பற்றினர். த்வார சமுத்ரா நாடு, ஹொய்ஸாலா மன்னர்களால் உருவாக்கப்பட்டு, மைசூரை மையமாகக் கொண்டு ஆட்சிச் செலுத்தியது. 13-ஆம் நூற்றண்டின் இறுதியிலும், 14-ஆம் நூற்றண்டின் ஆரம்பத்திலும் உச்சத்தில் இருந்த இந்த ராஜ்யம், இன்றையக் காலத்தில் உள்ள கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டு மாநிலங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. துக்ளக் வம்சத்தின் முகமது II மன்னரின் ஆக்கிரமிப்பினால், த்வார சமுத்ரா அடியோடு அழிந்தது. இறுதியாக ஆட்சி செய்த பல்லால மன்னர், அந்த அழிவிலிருந்துத் தப்பி, தொன்னூர் என்னும் இடத்தில் மிகக் குறைந்த நிலப்பரப்பில்  1387 வரை ஆட்சி செய்தார்.
த்வார சமுத்ராவின் சரிவிற்குப் பிறகு, விஜய நகர ராஜ்யம் 1336-இல் எழுந்தது. ஹக்கா (ஹரிஹரா) மற்றும் புக்கா என்ற இருச் சகோதரர்கள் உருவாக்கிய அந்த ராஜ்யம், முதலில், வித்யா நகர ராஜ்யம் என்று அழைக்கப்பட்டிருந்தது. பின்னாளில், விஜய நகரம் என்று மாற்றப்பட்டது. இந்த வம்சத்தின் பெயர் பெற்ற அரசர்களில், கிருஷ்ண தேவ ராயர் (1508 - 1530) முதல் இடம் வகிக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில், போர்த்துகீசியர்களின் சக்தி கூடிக் கொண்டே போனது. விஜய நகர அரசும் அதன் அருகில் இருந்த பிஜாப்பூர் அரசும் தொடர்ந்து சண்டைகளில் ஈடுப்பட்டதினால், அந்தச் சண்டைக்குத் தேவையான குதிரைகளை அதிக அளவில் வாங்கி, போர்த்துகீசியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டனர். 14-ஆம் நூற்றான்டின் இறுதியில், தெற்கு இந்தியாவின் ஏனையப் பகுதிகளை விஜய நகர ராஜ்யம் கைப்பற்றியது. வலிமை குறைந்து ஆட்சிப் புரிந்து வந்த பாண்டிய வம்சம், விஜய நகர ராஜ்யத்தின் பாதுகாப்பில் இருந்தது. பாண்டிய மன்னன், ஆட்சியிலிருந்து ஒரு முறை விலக்கப்பட்டப்பின், அவரை மீண்டும் ஆட்சியில் நிலை நாட்ட விஜய நகர ராஜ்யம், நாகம நாயக்கர் என்றத் தளபதியை அனுப்பியது. ஆனால், நாகம நாயக்கர், தன்னை அரசராக முடிச் சூட்டிக் கொண்டார். அவரது மகனான, விஸ்வநாத நாயக்கர், விஜய நகர ராஜ்யத்தில் இருந்து அனுப்பப்பட்டப்பின், தனதுத் தந்தையைத் தோற்கடித்தார். அதற்குப் பரிசாக, பண்டைய சோழ மற்றும் பாண்டிய ராஜ்யங்களின் மையமாக இருந்த மதுரையும் தஞ்சாவூரும், விஸ்வநாத நாயக்கரின் ஆளுமைக்குக் கீழ் வந்தன. திருநெல்வேலியில் கிளம்பியக் கிளர்ச்சிகளையும் விஸ்வநாத நாயக்கர் முறியடித்தார். தனது நிர்வாகத்தைச் சீர்ப்படுத்த, விஸ்வநாத நாயக்கர், மதுரைக் கோட்டையை 72 பாகங்களாகப் பிரித்து, அவற்றின் பாதுகாப்பையும், வருவாய் நிர்வாகத்தையும் பாளையக்காரர்களிடம் அளித்தார். விஜய நகர ராஜ்யத்திற்கு வருடந்தோரம் கப்பம் கட்டுவதோடு மட்டுமல்லாமல், ராஜ்யத்தின் படைப்பலத்திற்கு ஒருக் குறிப்பிட்ட அளவு வீரர்களை அனுப்பவும் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிரதிபலனாக, பாளையக்காரர் என்ற பட்டமும், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் சிலக் கிராமங்களும் கிடைத்தன. துவார சமுத்ரா நாடு கொடிக்கட்டிப் பறந்த பொழுது, கன்னட மொழி தெற்கு இந்தியா எங்கும் பரவியது. விஜய நகர ராஜ்யம் கொடிக்கட்டிப் பறந்த பொழுது, தெலுங்கு மொழி தெற்கு இந்தியா எங்கும் பரவியது. ஜனவர் 25, 1565 தேதியில், தலிக்கோட்டை என்ற இடத்தில், இஸ்லாமிய ராஜ்யங்கள் ஒன்றுக் கூடி, விஜய நகர ராஜ்யத்தைத் தோற்கடித்தன. விஜய நகர ராஜ்யத்தின் அழிவிற்குப் பின், தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழகமெங்கும் பரவினர். 17-ஆம் நூற்றாண்டில், நாயக்கர்கள் தங்களது விடுதலையை பிரகடனப்படுத்தினர். எனினும், தங்களை அரசர்கள் என்று எண்ணாமல், எஞ்சி இருந்த விஜய நகர ராஜ்யத்தின் (இன்றைய காலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா) தளபதிகளாகத் தங்களைக் கருதினர்.
நாயக்கர்கள் தங்கள் விடுதலையைப் பிரகடனப்படுத்தியப் பிறகு, மைசூர் மற்றும் சந்திரகிரியில் ராஜ்யங்கள் உருவாயின (மார்ச் 1, 1640-இல் சந்திரகிரி ராஜாவிடம் இருந்து வாங்கிய நிலப் பாட்டாவில் தான், ஆங்கிலேயர் சென்னைக்கு (சந்திரகிரி ராஜாவின் தளபதி சென்னப்பாவிடம் இருந்து வாங்கியதால், சென்னை என்று அழைக்கப்படுகிறது) அடிக்கல் நாட்டினர்) . நாயக்கர்களில், பெரும் புகழ் பெற்றவர்களில், திருமலை நாயக்கரும் (1623 - 1659) ராணி மங்கம்மாளும் (1689 - 1704) அடங்குவர். விஜய ரங்க சொக்க நாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்ததனால், ராணி மீனாக்ஷி ஒரு சிறுவனைத் தத்தெடுத்து, அவனுடையப் பெயரில் ஆட்சி நடத்தினார். அந்தச் சிறுவனின் தந்தையான வங்காரு திருமலை, ராணியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார். அதற்கு ஆற்காட்டு நவாப்பிடம் உதவி கேட்டார். ஆற்காட்டு நவாப், தனது தளபதியான சந்தா சாஹிப் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சந்தா சாஹிப் ராணி மீனாக்ஷியைச் சிறையில் அடைத்து விட்டு, மதுரையைத் தனது நாடாக அறிவித்தார். அவமானம் தாங்க முடியாமல், ராணி மீனாட்சி, தற்கொலை செய்துக் கொண்டார். இதை எதிர்த்த வங்காரு திருமலை, மராத்தாக்களின் உதவியை நாடினார். அருகில் இருந்த ஏனைய ஹிந்து ராஜ்யங்களின் உதவியுடன், மராத்தாக்களின் படை, சந்தா சாஹிப்பின் படையைத் தோற்கடித்தது. மராத்தாக்களைத் தோற்கடிக்க, ஹைதராபாத் அரசரான நிஸாம், தனதுப் படையை அனுப்பினார். அந்தப் படை, மராத்தாக்களைத் தோற்கடித்து, முகம்மது அலி வாலாஜாவை ஆற்காட்டு நவாப்பின் அரசப் பீடத்தில் அமர்த்தியது. இதனை விரும்பாத சந்தா சாஹிப், ஃப்ரென்ச் உதவியை நாடினார். ஹைதராபாத் நிஸாம், பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் உதவியை நாடினார்.
1754-இல், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் இந்தியச் சிப்பாய்களின் தளபதியான முகமது யூசுஃப் கான் (மருதநாயகம் பிள்ளை என்று ஹிந்துவாகப் பிறந்து பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர்), ஆங்கிலேயர்கள் ஆற்காட்டு நவாப்பிற்கு துணைப் போவதாக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுரை மற்றும் திருநெல்வேலி நிலங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். வெவ்வேறுக் கட்சிகள் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்ற முயன்றுக் கொண்டிருந்ததால், பாளையக்காரர்கள் முகமது யூசுஃப் கானுடன்  போரிட்டனர். 1760-இல் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் தளபதி கர்னல் ஹெரான் தலைமையில், முகமது யூசுஃப் கான், பாஞ்சாலம்குறிச்சியில் ஆண்டு வந்தக் கட்டபொம்ம நாயக்கரை அடக்கப் போர் தொடுத்தனர். பாளையக்காரர்களைப் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்திற்கும், ஆற்காட்டு நவாப்பிற்கும் அடிபணிய வைக்க, முகமது யூசுஃப் கான் மிகக் கொடியச் செயல்களைக் கையாண்டார் - கைது செய்யப்பட்ட மக்களைப் பீரங்கியின் வாயிலிருந்து சுட்டுத் தள்ளினார். ட்ராவங்கோர் ராஜ்யத்தின் அரசருடன் இணைந்துக் கொண்டு, ஆவுடையார்புரத்தின் பாளையக்காரரான புலித் தேவர், களக்காடு அருகில் ஆற்காட்டு நவாப்பின் படைகளைத் தோற்கடித்தார். கட்டபொம்ம நாயக்கரின் தலைமையில் இருந்த ஏனையப் பாளையக்காரர்களுடன் அணி வகுத்து பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தையும் ஆற்காட்டு நவாப்பையும் எதிர்க்க இறங்கிய முயற்சி, கட்டபொம்ம நாயக்கரின் மறுப்பால் வீண் போனது. மஹ்ஃபூஸ் கான் தலைமையில் பதிலுக்குப் போர் செய்த ஆற்காட்டு நவாப்பின் பக்கம் கட்டபொம்ம நாயக்கர் சாய்ந்து, புலித் தேவரைத் தோற்கடித்துக் காட்டிற்குள் துரத்தினர். மதுரை திருநெல்வேலி நிலங்களில் இருந்தப் பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுப்படுவதைக் குறைக்க, திருச்சியில் இருந்து, முகமது யூசுஃப் கான் தலைமையில் ஒரு படைக் கிளம்பியது. ட்ராவங்கோர் ராஜ்யத்தின் அரசர் மற்றும் ஆற்காட்டு நவாப்புடன் இணைந்து புலித் தேவர் மற்றும் இதரப் பாளையக்காரர்களை ஒடுக்க முற்பட்டனர். புலித் தேவரும் ஏனையப் பாளையக்காரர்களும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்துக் கொண்டிருந்த ஹைதர் அலியை (ஃப்ரென்ச்சு உதவியுடன்)  நம்பி இருந்தனர். 1761-இல் இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட முகமது யூசுஃப் கான், ஆற்காட்டு நவாப்பிடம் தன் கட்டுக்குள் இருந்த மதுரை மற்றும் பாளையங்கோட்டை கோட்டைகளின் பாதுகாப்பிற்குத் தனக்கு வாடகை அளிக்குமாறு ஆற்காட்டு நவாப்பிடம் கோரினார். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி முகமது யூசுஃப் கானின் நிபந்தனையை முதலில் ஆதரித்தாலும், தங்கள் நிலையை மாற்றி, ஜெனரெல் லாரன்ஸ் தலைமையில் ஒரு படையை முகமது யூசுஃப் கானை அடக்க அனுப்பினர். இதை அடுத்து, முகமது யூசுஃப் கான், ஹைதர் அலி மற்றும் ஃப்ரென்ச் அணியின் பக்கம் சாய்ந்தார். 1763-இல் ஐரோப்பாவில் நடந்த ஏழு வருட போர் முடிவுக்கு வந்தவுடன், ஆங்கிலேயரும் ஃப்ரென்ச்சும் சமாதானம் பேசித் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டனர். அதனை அடுத்து, முகமது யூசுஃப் கானை ஆதரித்து வந்த ஃப்ரென்ச் தளபதியான மார்சாண்ட், தனதுப் படையைக் கலைத்து, முகமது யூசுஃப் கானை, ஆங்கிலேயத் தளபதியான மேஜர் டானல்ட் கேம்ப்பெலிடம் ஒப்படைத்தார். அதன் பின், முஹமது யூசுஃப் கான் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். முகமது யூசுஃப் கானை இவ்வாறு ஐரோப்பியர்கள் கையாண்ட விதம் ஆசிரியரை இக்கட்டான நிலையில் ஆழ்த்துவதால், முகமது யூசுஃப் கானின் மரணத்தை ஆற்காட்டு நவாப்பின் தலையில் கட்டுகிறார்.
முகமது யூசுஃப் கானின் இறப்பிற்குப் பின், பாளையக்காரர்களின் எதிர்ப்பை, இங்கிலிஷ் கிழக்கு இந்திய கம்பெனி அசராது அடக்க முயன்றாலும், அதற்கு வெற்றிகள் ஆங்காங்கேத் தான் கிட்டின. 1767-இல் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் தளபதியான மேஜர் ஃப்ளின்ட், பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டையைத் தாக்க முயன்ற முயற்சி, தோல்வியைத் தழுவியது. மதுரை மற்றும் திருநெல்வேலி பிராந்தியங்களை ஆற்காட்டு நவாப்பிடம் இருந்து பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி ஏழு வருடக் காலத்திற்கு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தையும் வருவாயையும் கண்காணிக்கும் என்றுப் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியும் ஆற்காட்டு நவாப்பும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில், பாளையக்காரர்களைத் தன் பக்கம் இழுக்க ஹைதர் அலி முயன்றுக் கொண்டிருந்தார். பாளையக்காரர்களிடம் இருந்துத் தங்களுக்கு வர வேண்டிய வருவாயைக் கொடுக்குமாறுப் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி வற்புறுத்தியது. சிவகிரி பாளையக்காரர் தலைமையில் பாளையக்காரர்கள், அந்த ஆணைக்கு அடிபணிய மறுத்தனர். அதனால், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிப் படைகளால், கட்டபொம்ம நாயக்கரும் இதர பாளையக்காரர்களும் பதவி இழந்தனர். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள், பாஞ்சாலங்குறிச்சியை விட்டு விலகிய மறுக்கணமே, கட்டபொம்ம நாயக்கர், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட்டு நவாப் 1771-இல் நியமித்திருந்த பாளையக்காரரைப் பதவி நீக்கம் செய்தார். இதனால், 1776-இல் கட்டபொம்ம நாயக்கர் மீண்டும் பாஞ்சாலம்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார். 1780-இல் பாளையக்காரர்களை ஹைதர் அலித் தன் பக்கம் இழுக்க முயன்றுக் கொண்டிருந்தச் சமயத்தில், டட்ச் கிழக்கு இந்திய கம்பெனி, கட்டபொம்ம நாயக்கருடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால், பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டையில், டட்ச் கொடி, 1781-இல் பறந்தது. பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியும் டட்ச் கிழக்கு இந்திய கம்பெனியும், திருநெல்வேலியை டட்ச் கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தச் சமயத்தில், நாலாம் ஆங்க்லோ டட்ச் போர் வெடித்து அந்தப் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1783-இல், கர்னல் ஃபுல்லார்டன் தலைமையில், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. முதலில் கொஞ்சம் எதிர்த்தாலும்,அதைக் கைவிட்டு,  கட்டபொம்ம நாயக்கர், சிவகிரிக்குச் சென்று, சிவகிரிப் பாளையக்காரரிடம் தஞ்சம் புகுந்தார். கடுமையானப் போருக்குப் பின், இருப் பாளையக்காரர்களும் சரணடைந்தனர். அதன் விளைவாக, இருப் பாளையக்காரர்களும், வருடத்திற்கு 6,000 பவுண்ட் அபராதம் கட்டி, தங்களதுக் கோட்டையில் இருந்த பாதுகாப்பு அரண்கள், துப்பாக்கிகள், பொருட்கள், துப்பாக்கிக் குண்டுகள் போன்றவற்றை அழித்து, அவர்களின் கோட்டைக் கதவை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். ஆற்காட்டு நவாப்பிற்கும் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கும் இடையே உள்ள 7 வருட ஒப்பந்தம் முடிந்தவுடன், திருச்சியும் மதுரையும் திருநெல்வேலியும் மீண்டும் ஆற்காட்டு நவாப்பின் நிர்வாகத்திற்குள் வந்தன. 1790-இல் ஆற்காட்டு நவாப்பின் சோர்ந்த நிலைமையைக் கண்டு, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி, மதுரை மற்றும் திருநெல்வேலியின் வருவாய் நிர்வாகத்தைத் தனக்கென்றுப் பறித்து வைத்துக் கொண்டது. இதன் காரணமாக, சிவகிரி மற்றும் பாஞ்சாலம்குறிச்சி பாளையக்காரர்களின் தலைமையில் எதிர்ப்பு மீண்டும் எழுந்தது. கட்டபொம்ம நாயக்கரை சிலக் கிராமங்களை எட்டையப்புரம் பாளையக்காரரிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி வற்புறுத்தியும், அவர் கேட்காததால், எட்டையபுரம் பாளையக்காரர், பிரிட்டிஷ் பக்கம் சாய்ந்தார். சிவகிரிப் பாளையக்காரரும் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் பக்கம் சாய்ந்தார். சிவகிரிப் பாளையக்காரரின் மகன், மாப்பிள்ளை வன்னியன் மற்றும் சங்கரலிங்கம் பிள்ளை ஆகியோரின் பேச்சைக் கேட்டு, பிரிட்டிஷ்-இற்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பினார்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி, மைசூரை ஆண்டு வந்த ஹைதர் அலி மற்றும் திப்பு ஸுல்தானின் கொட்டத்தை அடக்க முயன்றுக் கொண்டிருந்ததால், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்க்கும் பாளையக்காரர்களுக்கு அது ஆதரவாக அமைந்தது. அதனைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டுத் தங்களதுப் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த முற்பட்டனர். 1792-இல், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியும் ஆற்காட்டு நவாப்பும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், ஆற்காட்டு நவாப்பின் ராஜ்யம், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் பாதுக்காக்கப்படும் என்றும் அந்தப் பாதுகாப்பிற்கானச் செலவை ஆற்காட்டு நவாப் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முடிவானது. இதனால், மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்த பாளையக்காரர்களின் கொட்டத்தை நேரடியாக அடக்க பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி முடிவு செய்தது.
பாஞ்சாலம்குறிச்சியில் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து 4 கட்டபொம்ம நாயக்கர்கள் (சிவகிரி மற்றும் ஆவுடையார்புரம் பாளையக்காரர்களுடன் அணி சேர்ந்துக் கொண்டு) போராடினர். கட்டபொம்ம நாயக்கர் என்பது பதவியின் பட்டமாக இருந்தது.
1. 1709 - முகமது யூசுஃப் கான் மற்றும் கர்னல் ஹெரனுடன் போரிட்டவர்
2. 1760
3. 1791 - கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் நடித்தப் பாத்திரம்
4. 1799 - மருது சகோதரர்களுடன் இணைந்து பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்தவர் - சிவகங்கைச் சீமை படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்
கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசனால் சித்தரிக்கப்பட்ட கட்டபொம்ம நாயக்கர் அசல் பெயர் கருத்தையா. 3 சகோதரர்களில் மூத்தவர். அவரது இளைய சகோதரர், குமாரசுவாமி நாயக்கர், காது கேட்காததாலும் வாய் பேச முடியாததாலும், ஊமைத் துரை என்று அழைக்கப்பட்டார். கடைசிச் சகோதரரான சுப்ப நாயக்கரின் அசல் பெயர் செவத்தையா. ஜாக்ஸன் திருநெல்வேலியின் கலெக்டராக இருந்த பொழுது, கட்டபொம்ம நாயக்கர், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் ஒரு போர் வீரரைக் கொன்றதாக அவர் மீதுக் குற்றச்சாட்டுக் கொண்டு வரப்பட்டது. ஆதாரங்களை ஆராய்ந்தப் பிறகு, அவர் மேல் இருந்தக் குற்றச்சாட்டு அகற்றப்பட்டது(எட்டையபுரம் ஆவணங்களில் கட்டபொம்ம நாயக்கர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று இன்று வரை இருக்கிறது). கோபக்காரரும் வீண் பழிச் சுமத்துவதில் தேர்ந்தவருமான ஜாக்ஸனை அகற்றி, அவர் பதவியில் லுஷிங்க்டனை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி நியமித்தது. கட்டபொம்ம நாயக்கர் தன் முன் வந்து கிஸ்துக் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு வரும் பொழுது, ஆயுதம் எதுவும் இன்றி வர வேண்டும் என்று லுஷிங்க்டன் இட்டக் கட்டளையை ஏற்காமல், கட்டபொம்ம நாயக்கர், தனக்குச் சாதகமாக இருந்தப் பாளையக்காரர்களுடன் (நாகலாபுரம், கொல்லர்பட்டி, ஏழாயிரம்பண்ணை, கடல்குடி, குளத்தூர், ஆவுடையார்புரம் (சில நாட்களில் புலித் தேவர் பிரிட்டிஷ் பக்கம் சாய்ந்தார்), சிவகிரி) இணைந்து பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்துக் கிளர்ச்சிகளை ஆரம்பித்தார். பாஞ்சாலம்குறிச்சியை அடக்க மேஜர் பானர்மென் அனுப்பப்பட்டார். தன்னுடைய அனைத்துப் படைகளும் வந்துச் சேருவதற்கு முன்னரே, பாஞ்சாலம்குறிச்சியின் மீது ஆச்சரியத் தாக்குதல் நிகழ்த்தினார். அதுத் தோற்றுப் போகவே, தன்னுடைய படைகள் அனைத்தும் வரும் வரை நிதானித்து, பலத்தைக் கூட்டிக் கொண்டப் பின்னர், மீண்டும் பாஞ்சலம்குறிச்சியைத் தாக்கினார். இந்த முறை, மேஜர் பானர்மெனின் தாக்குதல் வெற்றிப் பெற்றது. அதன் காரணமாக, கட்டபொம்ம நாயக்கர், பாஞ்சாலம்குறிச்சியிலிருந்துத் தப்பி, முதலில் சிவகங்கைக்குச் (எட்டையபுரம் பாளையக்காரர் கொல்லர்பட்டியில் அவரைத் தடுக்க முயன்றதையும் மீறி) சென்றுப் பிறகு புதுக்கோட்டை ராஜ்யத்திற்குத் தப்பிச் சென்றார். பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டையைக் கைப்பற்றியப் பின்பு, மேஜர் பானர்மென், கோட்டைக்குள் இருந்த வீரர்களைக் கொன்றுக் குவித்தார். பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்தால் ஏற்படும் கதியை மக்களுக்குத் தெளிவாகக் காட்ட, பாஞ்சாலம்குறிச்சியின் நிர்வாக மேலாளரான சுப்ரமணியப் பிள்ளையின் கொய்தத் தலையை அந்த ஊரின் எல்லையில் எச்சரிக்கையாக ஒரு ஈட்டியில் நிறுத்தி வைத்தார். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக் கேட்டுக் கொண்டதன் பேரில், புதுக்கோட்டையின் அரசர், விஜய ரகுநாத தொண்டைமான், தனதுப் படை வீரர்களைக் கட்டபொம்ம நாயக்கர் மீது ஏவி, அவரைச் சிறைப்பிடித்தார். இந்த வஞ்சகத்தின் பரிசாக, புதுகோட்டை தனி ஒரு ராஜ்யமாக அறிவிக்கப்பட்டது (17 பீரங்கி மரியாதைக்கு ஏற்ற ராஜ்யம்). மதுரை, திருநெல்வேலியைச் சுற்றி இருந்த ஏனையப் பாளையக்காரர்களின் நிலங்கள், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டன. தான் செய்த வஞ்சகத்திற்கு உடனடிப் பரிசாக, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் சென்னை ஆளுநர் லார்ட் க்ளைவ் (ராபர்ட் க்ளைவின் புதல்வர்), தொண்டைமானுக்கு, ஒருச் சால்வையும் ஒரு குதிரையும் அளித்தார் (பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியுடன் புதுக்கோட்டை ராஜ்யம் மேற்கொண்ட எழுத்துத் தொடர்புகளிலிருந்து இதுத் தெரிய வருகிறது - கீழே உள்ள இணைப்பில், 27-ஆம் பக்கம்). கட்டபொம்மன் படத்தின் திரைக்கதையை எழுதிய மா.போ. சிவஞானம், புதுக்கோட்டை ராஜ்யத்தின் கருப்புப்பட்டியலில் (கட்டபொம்மன் படத்தில் தொண்டைமானைப் பற்றி எழுதப்பட்ட விதத்தினால்) இருந்தார் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. வரலாற்றுக் கூறுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, தொண்டைமான் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் பக்கம் தான் இருந்தார் என்பதுத் தெளிவாகத் தெரிகிறது.
கயத்தார் அருகில், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால், 1799-ஆன் வருடம் அக்டோபர் 16-ஆம் தேதி, தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மன் படத்தில், கட்டபொம்ம நாயக்கரின் இறுதித் தருணங்களை, பானர்மென் கொடுத்த விவரிப்பிலிருந்து எடுத்திருக்கிறார்கள் - 'இங்கு, பாளையக்காரரின் நடத்தையும் முறையும், வீரனைப் போலவும் அகந்தை மிகுந்ததாகவும் இருந்தது. தன்னைக் கைப்பற்றத் தீவிர முயற்சி செய்த எட்டையபுரம் பாளையக்காரரை மீண்டும் மீண்டும் வெறித்துப் பார்த்தார். சிவகிரி பாளையக்காரரைக் கோபமாகவும் வெறுப்புடனும் பார்த்தார். மரணத்தை நோக்கிச் செல்லும் பொழுது, தைரியமாகவும் நிதானத்தோடும் நடந்தார். தன்னுடைய இருப் பக்கங்களிலும் இருந்தப் பாளையக்காரர்களை, பச்சாதாபத்தோடும் அவமானத்தோடும் பார்த்தார். தன்னுடையத் ஊமைத் தம்பியைப் பற்றிக் கவலைப்பட்டார். தூக்குமேடையில் நின்றுக் கொண்டிருக்கும் பொழுது, தனதுக் கோட்டையை விட்டுப் புறமுதுகிட்டு ஓடாமல், அங்கேயே நின்றுச் சண்டையில் மடிந்திருந்தால் மேலாக இருந்திருக்கும் என்றுக் கூறினார்'.

பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்தக் குற்றத்திற்காக, பாளையக்காரர்களின் கோட்டைகளைத் தரை மட்டமாக்கவும், அந்த வேலையைச் செய்தக் கூலியாட்களுக்கானச் சம்பளத்தை, பாளையக்காரர்களுடைய கருவூலத்தில் இருந்துக் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி ஆணைப் பிறப்பித்தது. அவ்வாறு, அழிக்கப்பட்ட பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டை, 2 நாட்களில், மீண்டும் மண்ணால் கட்டப்பட்டது. 1799-இல் நடந்தப் பாளையக்காரர் போரில், ஊமைத்துரையும் செவத்தையாவும் பாளையம்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். பாளையம்கோட்டையில், பெரியம்மைப் பரவியதால், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி, சிறையில் அடைத்திருந்தவர்களின் விலங்குகளைக் கழட்டி வைத்தது. அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஊமைத் துரையும், செவத்தையாவும் பெண் வேடம் தரித்துச் சிறையிலிருந்துத் தப்பினர். பாஞ்சாலம்குறிச்சியை அடைந்தவுடன் அந்தக் கோட்டையின் பாதுகாப்பினை வலுப்படுத்தினர். மேலும் அருகில் இருந்த கடல்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் மீது பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி வீரர்களின் தாகுதல்களை முறியடித்தனர். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி தனதுப் படைகளை ஒன்றுச் சேர்த்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் பாஞ்சாலம்குறிச்சியைத் தாக்கி அதில் இருந்த படைகளைத் தோற்கடித்தனர். பாஞ்சாலம்குறிச்சியின் போர் உத்திகளை வடிவு செய்த ஊமை துரை (வாய் பேச முடியாததாலும் காதுக் கேட்காததாலும் தீக்குச்சிகளை வைத்துத் தனதுப் போர்வீரர்களுக்கு உத்திகளைத் தெளிவு செய்தார்) , இந்தச் சண்டையில் காயமடைந்தார். செவத்தையா, சிவகங்கையில் ஆண்டு வந்த மருதுச் சகோதரர்களிடம் தஞ்சம் புகுந்தார். ஊமை துரையைச் சிறைப்பிடிக்க எட்டையபுர வீரர்கள் வலை வீசித் தேடிக் கொண்டிருந்தப் பொழுது, அவர் தங்கியிருந்தக் குடிசையில் இருந்தப் பெண்மணி, எட்டையபுரம் வீரர்களிடம், அந்த வீட்டில் பெரியம்மையால் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகச் சொல்லி, தேடி வந்த வீரர்களை விலகச் செய்தார். தனதுக் காயங்களிலிருந்து மீண்டவுடன், ஊமைத்துரை சிவகங்கைச் சென்று செவத்தையாவுடன் இணைந்தார்.
சிவகங்கையில், மூத்த மருதுச் சகோதரர், விளையாட்டிலும், பலத்தை வெளிக்காட்டும் செயல்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கு, காளையார் கோவில் (மருது சகோதரர்களின் கோட்டை) அருகே காடுகளில், மிருகங்களை விளையாட்டிற்கு வேட்டையாடுவதற்கு உதவி செய்திருந்தார். சிவகங்கையின் நிர்வாகத்தைச் சின்ன மருதுக் கவனித்துக் கொண்டிருந்தார். செவத்தையாவிற்கும் ஊமைத் துரைக்கும் தஞ்சம் கொடுத்ததற்காக, மருதுச் சகோதரர்களை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி தாக்கியது. மருது சகோதரர்களின் கட்டுக்குள் இருந்த சிறுவயலைப் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனித் தாக்க வருகிறது என்றுத் தெரிந்தவுடன், அங்குள்ள மக்களை காளையர் கோவிலுக்கு அப்புறப்படுத்தி, சிறுவயலை எரித்தனர். நீண்டப் போருக்குப் பிறகு, 1801-ஆம் வருடம் அக்டோபர் 1-ஆம் தேதி, மருது சகோதரர்களும், ஊமைத்துரையும் செவத்தையாவும் கைதுச் செய்யப்பட்டனர். மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரை பாஞ்சாலம்குறிச்சிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். செவத்தையா, பாளையம்கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். பாஞ்சாலம்குறிச்சி மீண்டும் எழாமல் இருக்க, அந்தக் கோட்டை அழிக்கப்பட்டு, அந்த நிலம் உழப்பட்டு அதன் மேல் பயிரிடப்பட்டது. பாளையக்காரர்களின் அழிவோடு, தெற்கு இந்தியாவை, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி தனதுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி, தெற்கு இந்தியாவை அடக்கத் தொடங்கியப் பாளையக்காரர் போர்களில் ஐரோப்பியர்களின் உயிர்ச் சேதம் (600 - 700) நிறைய இருந்தது. தொண்டைமான் மற்றும் ஆற்காட்டு நவாப் போன்ற மன்னர்களின் நிதி உதவி மற்றும் படை உதவியினால், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் நிதி நிலை முன்னேறியது. இந்தப் புத்தகத்தின் மூலம், பாளையக்காரர்கள், வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்தி எதிர்க்க எத்தனித்தனர். ஆனால், ஐரோப்பியக் கண்டத்தில், அதே நாடுகள் தங்களுக்குள் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களின் மூலம், தெற்கு இந்தியாவின் ஆட்சி, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் கைக்குள் வந்தது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
தி ஹாலோ க்ரவுண்: எத்னோஹிஸ்டர் ஆஃப் ஆன் ஹிந்து கிங்க்டம் - நிக்கோலஸ் பி டிர்க்ஸ்
யூசுஃப் கான், தி ரிபெல் க்மான்டெண்ட் - சாமுவேல் சார்ல்ஸ் ஹில்
ட்ரான்ஸலேஷன்ஸ் ஆண்ட் காப்பிஸ் ஆஃப் தி லெட்டெர்ஸ் இன் விச் தி ஸெர்விஸஸ் ஆஃப் தி ஆன்ஸெஸ்டர்ஸ் ஆஃப் தி ராஜா ரகுநாத் டொன்டிமன் பெஹாடெர் ஆர் பார்டிக்குலர்லி அக்னாலெட்ஜ்ட் ... பை தி கவர்னர்ஸ் ... ஆஃப் தி ஹானரபள் ஈ.ஐ. கம்பெனி
காவல் கோட்டம்

No comments: