கொலையாளி வர்க்கம்

சுருக்கம்:
இன்று, ஐ.எஸ்.ஐ.எல் தனது ஆட்சியின் கீழ் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்து, தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைமையில் உள்ளது. இந்தப் புத்தகத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதம், அல்-கெய்டா-வில் இருந்து ஐ.எஸ்.ஐ.எல் வரை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எல்-இன் வெவ்வேறு உருவங்களின் வளர்ச்சியினை காலவரிசையில் காட்டியிருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கைகளையும் அடிப்படை விதிமுறைகளையும் ஒருவாறுப் புரிந்து கொண்டு, அதனை அலசி ஆராய்கின்றனர். இஸ்லாம் மதம், அதன் அரசியல் அம்சங்கள் மற்றும் அதனைக் கடைப்பிடிப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்தப் புத்தகத்தின் இணைப்புப் பகுதி வெகுவாக உதவுகிறது. போர்க்களத்திலும் ஊடகங்களிலும் ஐ.எஸ்.ஐ.எல்-இன் செயல்பாட்டை விவரிப்பதுடன் அது போன்ற அமைப்புகளை எதிர்கொள்வதற்கு சிலப் பரிந்துரைகளையும் அளித்திருக்கிறார்கள்.  மேற்கத்தியப் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டதினால், ஐ.எஸ்.ஐ.எல்-இன் வன்முறைச் செயல்களின் விளைவு எவ்வாறு மேற்கத்திய நாடுகளைப் பாதிக்கும் என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது.
சுய நீதிமான்களாக தங்களைக் கருதும் மேற்கத்தியர்களின் செயல்பாடுகள், எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும் போக்கை இந்தப் புத்தகத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  மேற்கத்திய அரசுகள் மற்றும் அமைப்புகள், ஸதாம் ஹுஸெய்ன்-ஐ தங்களது சித்தாந்தத்தின் காரணமாக, ஆட்சியிலிருந்து, மிகுந்த அளவு ராணுவ ஆதிக்கம் செலுத்தி விலக்கினர்.   அந்த மாபெரும் மூலோபாயத் தவறின் பலனாக ஐ.எஸ்.ஐ.எல்-உம் அதன் மிருகத்தனமான மூர்க்கத்தனமும் வெடித்தன. இன்றைய காலத்தில், ஐ.எஸ்.ஐ.எல்-இன் நிலைமை மிக மோசமாக இருந்தாலும், அதற்கு உருக் கொடுத்த அரசியல் மற்றும் மத விடுதலையை ஒத்த அடிப்படைக் காரணங்கள் மத்திய கிழக்குப் பகுதியில் அழியாமல் பன்மடங்கு வளர்ந்திருக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் அரசியல் அமைப்புகளைச் சீர்திருத்த முயற்சி எடுத்தாலும் (ஜார்டன், ஸவுதி அரேபியா), இஸ்லாமிய அடிப்படைவாதம் மீண்டும் பரிணாம வளர்ச்சி காணும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
அலசல்:
இஸ்லாம் மதத்தின் முக்கியக் கோட்பாடுகளாகக் கீழ்கண்டவைக் கருதப்படுகின்றன:
கூரான் - முகமதுக்குத் தோன்றிய தெய்வீகம் பொருந்திய கனவுகளின்  முழுமையான பதிப்பு
ஸுன்னா - முகமதின் பழக்க வழக்கங்கள் மற்றும் சொற்பொழிவுகள்
ஹடித் - முகமது மற்றும் அவரது கூட்டத்தாரின் பழக்க வழக்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு
5 தூண்கள் - இஸ்லாமிய மதத்ததினர் அனைவரும் ஆற்ற வேண்டியவை - மதச் செயல்பாடு, தினசரி பிரார்த்தனை, தானம் அளித்தல், ரம்ஜான் பொழுது உண்ணாவிரதம் இருத்தல், மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளுதல்

சில வரையறைகள்:
உருவாக்கம் - 40 வயதில், முகமதிற்குத் தொடர்ச்சியாக தெய்வீகம் பொருந்திய கனவுகள் தோன்றின. மெக்காவில், அவரைச் சுற்றி இருந்த சமூகத்தில் தனக்குக் கிடைத்த நற்செய்தியை பரப்ப  முயலும் பொழுது ஏற்பட்ட பதற்றத்தினால், தனது சீடர்களுடன் மெடினா-வை நோக்கி இடம் பெயர்ந்தார். (இது ஹிஜ்ரா என்று அழைக்கப்படுகிறது). மெடினா-வில் தனது சீடர்களை அரசியல் மற்றும் மதச் சமூகமாக உருவாக்கினார். ஏ.டி 632-இல் இறக்கும் பொழுது தனக்குப் பின் தலைமைக்கான வாரிசை அவர் நியமிக்கவில்லை.
ஷியா இஸ்லாம் - முகமதிற்குப் பின் வந்த தலைவர்களில், மூன்றாமவர் இறந்தப் பின், அவருக்குப் பின் வரும் தலைவர், முகமதின் நேரடி ஆண் வாரிசாக இருக்க வேண்டும் என்று ஷியா இஸ்லாம் கூட்டத்தினர் நம்பினர். அவர்களது தரப்பில் இருந்து, முகமதின் உறவினரான அலி-யை நியமித்தனர். ஆனால், அவர் படுகொலை செய்யப்பட்டார். அதனை அடுத்து, அலி-யின் புதல்வரான ஹுஸெய்ன், அலி-யின் சாவை வஞ்சிக்க, இராக்-இல் கர்பலா என்ற இடத்தில் நடத்திய போரில் கொல்லப்பட்டார். அவரது இறப்பை ஷியா, அஷூரா என்ற பெயரில் அஞ்சலி செலுத்துகின்றனர். மெக்கா, மெடினா மற்றும் ஜெருஸெலம் போன்ற புனிதத் தலங்களோடு, கர்பலா மற்றும் நஜஃப் (அலி-யைப் புதைத்த இடம்) -ஐயும் புனிதமாகக் கருதுகின்றனர்.
ஸுன்னி இஸ்லாம் - முகமதின் மறைவிற்குப் பின், அவருடைய க்யுரைஷ் பழங்குடி இனத்தில் பிறந்த எந்த ஆணையும் இஸ்லாமியச் சமூகம் தேர்ந்தெடுத்தால் அவர் தலைவராகலாம் என்றுக் கருதினர். ஸுன்னி இஸ்லாம்-இல் உள்ளவர்களுக்கு, முகமது மெடினா-வில் வந்து அடைந்தது அஷூரா-வாகக் கொண்டாடப்படுகிறது. இஸ்லாம் மதத்தின் தலைமையைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டதனால், இவர்கள் அரசியல் ரீதியில் இஸ்லாம்-இன் ஸ்தாபனக் கட்சியாகக் கருதப்படுகின்றனர்.
ஸலாஃபிஸம் - ஸுன்னி இஸ்லாமில், பண்டைய காலத்தின் பழக்க வழக்கங்களை இன்றைய காலத்தில் பின்பற்ற வலியுறுத்தும் சித்தாந்தம். இவர்கள் மூன்று வகையாகக் கருதப்படுகிறார்கள் - அரசியல், அமைதித்துவம் மற்றும் ஜிஹாதித்துவம்.
வஹாபிஸம் - ஸலாஃபிஸத்தில் அடங்கியுள்ள மிகப் பழமைவாதச் சித்தாந்தம் - முஹமது இபன் அப்த் அல் வஹாப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதில், இஸ்லாம் மதத்திற்குள் உருவச் சிலைகளைக் கும்பிடுபவர்கள் (ஷியா, ஸுஃபி போன்றோர்) இஸ்லாமியர்கள் அல்ல என்றுக் கருதப்படுகிறது. வஹாப் தன் வாழ்காலத்தில், ஸவுதி அரேபியா-வை இன்று ஆளும் ஸவுத் வம்சத்தை நிறுவியவரான முகமது பின் சவுத் உடன் கூட்டணி சேர்ந்ததால், வஹாபிஸம், ஸவுதி அரேபியா-வின் அதிகார மதத்திற்குரிய நிலையை அடைந்தது.
தக்ஃபீர் - மத நம்பிக்கையைக் காரணமாகக் கொண்டு, நம்பிக்கை இல்லாதவர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சித்தாந்தம். அரசியல் மற்றும் அமைதித்துவ ஸலாஃபிஸத்தில் இதனைச் செய்வது கடினமாகும். ஜிஹாதித்துவ ஸலாஃபிஸத்தில் இதனைச் செய்வது சுலபமாகும்.  ஜிஹாதித்துவ ஸலாஃபிஸத்தில் தக்ஃபீரைப் பற்றி ஸயித் அபுல் அலா மவுதுதி என்பவர் (பிரிட்டிஷ் இந்தியாவில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை நிறுவியவர்) எழுதினார். அதனை அடித்தளமாக வைத்து, எகிப்து நாட்டின் ஸயித் குட்ப் என்பவர் வன்முறை நிறைந்த ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நம்பிக்கை அற்ற இஸ்லாமியத் தலைவர்களைப் பதவியிலிருந்து நீக்கலாம் என்று வாதிட்டார்.
ஜிஹாத் - கூரான்-இல் இறைவனின் நோக்கத்தை செயல்படுத்த அவரவர் உள்மனதிற்குள் எடுக்கும் முயற்சி என்றுக் கூறப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதனை இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்காகவும் அவர்கள் கணிப்பில் இஸ்லாமியர் அல்லாதவர்களை தண்டிக்கச் செய்யும் முயற்சிகளாகவும் மாற்றியுள்ளனர்.

எல்லா மதத்தில் உள்ள அடிப்படைவாதிகள் போல், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் வெளி உலகை முற்றிலும் அழிவு காலம் நெருங்கி விட்டது என்ற நோக்கில் காண்கின்றனர். அவர்கள், உலகின் அழிவு இது வரைக்கும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து, தங்களது அனுமானங்களை சரிசெய்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அவர்களது முதலில் இருந்த நம்பிக்கையை இரட்டிப்பாக வலுப்படுத்திக் கொள்கின்றனர்.  இந்த நோக்கம், இன்றைய காலத்தில்  ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் அல்-கெய்டா அமைப்புகளின் வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. பண்டைய கால ஓட்டோமன் பேரரசின் அழிவாலும், அதன் பின் ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரென்ச் சக்திகளின் களவாணிச் செயல்களாலும், மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் நிலவியல் ஏற்றத்தக்கதாக இருப்பதை விட, சக்தி அரசியலின் பிரதிபலிப்பாக  அமைந்திருக்கிறது. அதனோடு இஸ்லாமின் கண்டிப்பும், மத்திய கிழக்கில் நிரம்பி வழியும் செல்வாக்கும் சேர்ந்ததனால், அடிப்படைவாதத்தின் நட்சத்திரங்கள் இந்த பூமியில் இருந்து உருவாகி உள்ளனர்.
1980-களில், ஆஃப்கானிஸ்தான்-இல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அடங்கிய முஜாஹித்தீன் சோவியத் யூனியன்-ஐத் தோற்கடித்து தங்கள் நாட்டை விட்டு விரட்டினர். முஜாஹித்தீன்-இன் முயற்சிகளுக்கான நிதி உதவியை அமெரிக்காவும், மற்றைய மேற்கத்திய நாடுகளும் சவுதி அரேபியா மூலம் செய்தனர். அதன் விளைவாக, ஆஃப்கானிஸ்தான்-இலும் பாகிஸ்தான்-இலும்  வஹாபிஸம் பரவியது. முஜாஹித்தீன்-இன் முயற்சிகள் ஏற்றத்தக்க முறையில் சித்தரிக்கப்பட்டதினால், உலக நாடுகள் பலவற்றில் இருந்து இஸ்லாமியப் போராளிகள் சண்டையில் பங்கு கொண்டு, போர்த் திறனில் தேர்ச்சிப் பெற்றனர். சோவியத் யூனியன், ஆஃப்கானிஸ்தான்-இல் இருந்து புறமுதுகிட்டு ஓடியவுடன், முஜாஹித்தீன் அவர்களுக்குள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு,  அங்குள்ள அமைதியான நிலைமையைக் குலைத்தனர். இன்றைய காலத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகப் பெயர் பெற்ற உஸாமா பின் லெடன் மற்றும் அபு முஸப் அல்-ஸர்காவி போன்றவர்கள் ஆஃப்கானிஸ்தான்-இல்  போர்த் திறனில் தேர்ச்சிப் பெற்று, விரிவான பயங்கரவாத  வலைப்பின்னல்களை வளர்த்தப் பின்னர் தத்தம் நாடுகளுக்கு வீடு திரும்பினர்.
1990-களில், உஸாமா பின் லெடன் பரம்பரைச் சொத்தில் தனது பாகத்தை  முதலாகப் பயன்படுத்தி அடிப்படைவாத அமைப்பான அல்-கெய்டாவை உருவாக்கினான்.முதலாம் வளைகுடாப் போரின் காரணமாக மத்திய கிழக்கில் நிலைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தை அங்கிருந்து அகற்றும் பொருட்டு, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களைக் கொல்வதை அதன் குறிக்கோளாக மேற்கொண்டான். அடிப்படைவாத ஜிஹாதிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசையாக நிதி மற்றும் அறிவு சார்ந்த உதவியை பின்னணியில் இருந்து அளிப்பதை அல்-கெய்டாவின்  கொள்கையாகக் கொண்டான். அல்-கெய்டா, தன்னை உலகளாவிய இஸ்லாமிய புரட்சியின் முன்னணியாகப் பாவித்து, இஸ்லாமிய மதத்தினர் அவரவர் நாடுகளின் அரசுகளை வீழ்த்தும் முயற்சிகளுக்கு வித்திடும் பணியில் ஈடுபட்டது. அதை மனதில் வைத்து, உஸாமா பின் லெடன் சம்பளப் பட்டுவாடா மற்றும் ஊழியர் நலன் துறைகள் உட்பட அல்-கெய்டாவின் உள்கட்டமைப்பை நிறுவினான். ஆரம்ப காலத்தில், தனதுப் பிரச்சாரத்தை பத்திரிகைகள் மற்றும் டி.வி.டி-க்களை சாதாரண அஞ்சல் அல்லது மசூதி வாயிலில் நேரடி விற்பனை மூலமாகச் செயல்படுத்தினான். இணைய தளம் உலகெங்கும் பரவ, அல்-கெய்டா, ஆதரவாளர்களை தனது கண்காணிப்பில் உள்ள தகவல் பலகைகளிலும் மன்றங்களிலும் ஊக்குவித்து, செல்வாக்கை வளர்த்தது. அல்-கெய்டாவின் உள்கட்டமைப்பை செம்மையாக நிறுவி இஸ்லாமிய பயங்கரவாததைப் பரவச் செய்ய முற்பட்டதால், உஸாமா பின் லெடன்-இன் பரம்பரைச் சொத்து அழிய ஆரம்பித்தது. நீண்ட காலமாக அல்-கெய்டாவும் அதன் தலைவர்களும் முன்னறிவித்தது போல் இஸ்லாமியப் புரட்சி வெடிக்காததால், அந்த நிலைமையை சமாளிக்கத் தடுமாறினர். அதே சமயத்தில், பயங்கரவாதம் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லும் முயற்சியில் தனது ஆதரவாளர்களை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது.
செப்டம்பர் 11 2001 பிறகு, அமெரிக்கா-வின் பதிலடிக்கு அல்-கெய்டா தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. பின்னணியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த அல்-கெய்டா, 9/11 பிறகு, உலகப் பார்வையின் மையமாக அமைந்தது. 9/11-இன் வெற்றியால் கிடைத்த செய்தித் தொடர்பு வாய்ப்புகளை விரயம் செய்தது. அமெரிக்கா-வின் பதிலடியின் வீரியத்தால், 9/11 பிறகு ரகசியமாகச் செயல்படுவதை அல்-கெய்டா தனது தாரக மந்திரமாகக் கொண்டது. அதனால், தனது ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்வதில் நிறையத் தாமதம் ஏற்பட்டது. 9/11 பிறகு ஆஃப்கானிஸ்தான்-இலும், பாகிஸ்தான்-இலும் அமைந்திருந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை அமெரிக்கா நொறுக்கியது. அதன் விளைவாக அல்-கெய்டாவும் அதன் ஆதரவாளர்களும் அவரவர் சொந்த நாடுகளுக்குச் சிதறி ஓடினர். அதில், அபு முஸப் அல்-ஸர்காவி-உம் அடங்குவான். அவன், சோவியத் யூனியன்-உடன் முஜாஹித்தீன் நடத்திய போரின் இறுதியில் பணி புரிந்தான். அதன் பிறகு, ஆஃப்கானிஸ்தான்-இல் நடந்த உள்நாட்டுச் சண்டையில் பங்கெடுத்தான். பின்னர், தனது சொந்த நாடான ஜார்டன்-இற்கு சென்று சாதாரண வாழ்க்கையில் ஈடுபட எத்தனித்தான். ஆனால், பயங்கரவாத ஜிஹாதின் ஈர்ப்பில் 1990-களின் இறுதியில் மீண்டும் சிக்கினான். உஸாமா பின் லெடன் மற்றும் அல்-கெய்டாவிடம் தனது தலைமையில் ஒரு துணை அணியை உருவாக்க அனுமதி கேட்டான். ஆனால், பின் லெடன்-உம் அல்-கெய்டாவும் அதற்கு இணங்கவில்லை. அதே நேரத்தில், ஆஃப்கானிஸ்தான்-இன் ஹெராத் மாநிலத்தில் தனக்கென்று ஒரு அணியை உருவாக்கக் கிடைத்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். 9/11 பிறகு, ஹெராத்-லிருந்து இரான் நாட்டு எல்லையைக் கடந்து, இராக் நாட்டின் குர்டிஷ் இனப் பிரதேசத்தில் அன்ஸர் அல்-இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான்.
2000-களில், இராக் நாட்டை ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டமிட ஆரம்பித்தது. 2003-இல் அபு முஸப் அல்-ஸர்காவி-ஐ விமானத் தாக்குதல் மூலம் கொல்ல வாய்ப்புக் கிட்டிய போதும், ஜெனரல் காலின் பவல் தலைமையில் இருந்த வெளியுறவுத் துறை அமைச்சகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஏனெனில், ஜெனரல் காலின் பவல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில், இராக்-இன் தலைவர் ஸதாம் ஹுஸெய்ன் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, அபு முஸப் அல்-ஸர்காவி  அங்கு இருப்பதை பயன்படுத்துவதற்கு திட்டம் தீட்டியிருந்ததே அதற்குக் காரணம். ஸதாம் ஹுஸெய்ன் இராக் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதத்தை கொடூரமாக அடக்கினார் என்ற நிதர்சனமான உண்மையைப் புறக்கணித்து, அபு முஸப் அல்-ஸர்காவி அந்த நாட்டில் இருந்தத் தடயத்தைக் காரணமாகக் கொண்டு, ஜெனரல் காலின் பவல், ஸ்தாம் ஹுஸெய்ன் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என்றுக் குற்றம் சாட்டினார். மார்ச் 2003-இல் அமெரிக்கா இராக் நாட்டை ஆக்கிரமித்தது. மிக எளிதாக, ஸதாம் ஹுஸெய்ன்-இன் படைகளைத் தோற்கடித்து, அவரை பதவியில் இருந்து நீக்கியது. இராக் நாட்டில் அதற்குப் பிறகு சிறிய அளவில் தோன்றியக் கிளர்ச்சி,  அமெரிக்காவின் தற்காலிகக் கூட்டணி அதிகாரத்தின் (கொவலிஷன் ப்ரோவிஷனல் அத்தாரிட்டி) தலைவர் பால் எஸ் ப்ரெமர் இராக்-இன் ராணுவத்தைக் கலைத்து அந்த நாட்டின் அரசியல் கட்சியான பாத் கட்சியில் உள்ளவர்கள் அதிகாரப் பதவிகளில் இருக்கக் கூடாது என்ற ஆணைகளைப் பிறப்பித்தவுடன், பூதாகரமாக வெடித்தது. ஸதாம்-இன் ஆட்சியில், பாத் கட்சியில் இருந்தால் அரசு வேலைக் கிடைக்க உதவும் என்பதனால் இராக் மக்கள் அந்த கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.  அதன் மூலம், ஸதாம்-இன் அரசு, இராக் மக்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. அமெரிக்காப் பிறப்பித்த ஆணைகள் மூலமாக, பல ஆயிரம் இராக் ராணுவ வீரர்கள் வேலையில்லாமல், அவர்கள் குடும்பங்களின் நிலைமை மோசமாக்கப்பட்டு,  நடுத்தெருவில் தள்ளப்பட்டனர்.
அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய அபு முஸப் அல்-ஸர்காவி, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இராக்-இன் அல்-கெய்டா (ஏ.க்யூ.ஐ)  அமைப்பை உருவாக்கினான். ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-இல் அமெரிக்கா-வின் அழுத்ததினால், அல்-கெய்டா, தனது நடவடிக்கைகளை தனது ஆணைக்குக் கட்டுப்பட்ட வெளிநாட்டுக் கிளைகள் மூலம் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதற்காக, இராக்-இன் அல்-கெய்டா(ஏ.க்யூ.ஐ), அரேபிய தீபகற்பத்தின் அல்-கெய்டா(ஏ.க்யூ.ஏ.பி), இந்தியத் துணைகண்டத்தின் அல்-கெய்டா மற்றும் இஸ்லாமிய மாக்ரெப்-இன் அல்-கெய்டா (ஏ.க்யூ.ஐ.எம்) ஆகிய கிளைகளை நிறுவியது. இராக்-இன் ஆக்கிரமிப்பிற்கு முன் அமெரிக்கா-வின் விட்டேத்தியானப் போக்கிற்கு,  ஆக்கிரமிப்பிற்குப் பின், உலகிற்கு பயங்கரவாதத்தின் பொது முகமாக அறிமுகப்படுத்திய அபு முஸப் அல்-ஸர்காவி-இன் கொடூரமான செயல்கள்,  முத்தாய்ப்பாக அமைந்தன. அல்- கெய்டாவின் தலைமை, தனதுப் பாதுகாப்பிற்காக ரகசிய வழிகளைப் பின்பற்றியதால், துணைக் கிளைகளுக்கு அனுமதி அளிக்க நிறைய காலம் எடுத்தது. அதனால், துணைக் கிளைகள் தாந்தோணியான நடவடிக்கைகளில் இறங்கினர். இதை அறிந்த அல்-கெய்டா தலைமை, தனது மறுப்பைத் தெரிவித்தது. சில நேரங்களில் தலைமையின் நிலைக்கு மதிப்பு கொடுத்து தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டாலும், சில சமயங்களில், துணைக் கிளைகள் தலைமையின் நிலைக்கு மாறாகத் தங்களது நடவடிக்கைகளை தொடர்ந்தன. இதற்கு நடுவில், அபு முஸப் அல்-ஸர்காவி, தனது சொந்த அமைப்பாக ஒற்றுமை மற்றும் ஜிஹாத் என்ற அமைப்பை ஆரம்பித்தான். சில நாட்களில், அமெரிக்க விமானத் தாக்குதலால், அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணத்திற்குப் பிறகு, இராக்-இன் அல்-கெய்டா தலைவராக அபு ஒமார் அல்-பக்தாதி தலைவன் ஆனான். அப்பொழுது,  அமெரிக்கா, இராக்-இல் தனது ராணுவச் சக்தியைக் கூட்டி, அந்த நாட்டின் ஸுன்னி முக்கோணம் என்று கூறப்படும் பிராந்தியத்தில் அங்குள்ள  பழங்குடி இனத்தலைவர்களுக்கு லஞ்சம் அளித்து அவர்களது ஆதரவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இதனால், வன்முறையின் அளவு குறைந்தது மட்டுமில்லாமல் இராக்-இன் அல்-கெய்டாவின் நிலைமையும் மிக மோசமானது. அமெரிக்கா-வின் இந்த நடவடிக்கைகள், இராக்-இன் அப்போதைய பிரதமர், நூரி அல்-மாலிக்கி, அரசியல் செயல்முறைகளில் சுன்னி இஸ்லாமியர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பார் என்ற எதிர்பார்ப்போடு நடத்தப்பட்டன. ஆனால், மாலிக்கி, உதவிக்குக் கை நீட்டிய சுன்னி இஸ்லாமிய இனத் தலைவர்களைக் கொல்லவும் சிறையில் அடைக்கவும் ஆரம்பித்தார். அதன் விளைவாக, இராக் ராணுவத்தில் இருந்த பாத் கட்சியைச் சார்ந்த சுன்னி இஸ்லாமிய வீரர்கள், இராக்-இன் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ, இராக்-இன் அல்-கெய்டா தன் பெயரை இவ்வாறு மாற்றிக் கொண்டது) அமைப்பில் ஐக்கியமானார்கள்.
அபு பாக்கர் அல்-பாக்தாதி என்பவன் இஸ்லாமிய மதகுரு ஆவதற்கான படிப்பில் ஆர்வம் காட்டினான். ஆனால், அவனை அமெரிக்க ராணுவம் கைது செய்து கேம்ப் புக்கா என்ற சிறையில் அடைத்தது. அமெரிக்க ராணுவம் கேம்ப் புக்கா மூலம் வன்முறை நிறைந்த இராக்-இன் ஜிஹாதிகளை வன்முறை அல்லாத தவறு செய்தவர்களுடன் இணைத்து வைத்தது. அல்-பாக்தாதி அவனது சிறைக்காலத்தில், சகக் கைதிகளுக்கு இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் போதித்ததுடன், அவர்களிடம் இருந்து நிர்வாகத் திறனையும் நிர்வாகக் கட்டமைப்பு பற்றிய யோசனைகளையும் கற்றுக் கொண்டான். கேம்ப் புக்கா 2009 வருடத்தில் மூடப்பட்டவுடன், அல்-பக்தாதி விடுதலைச் செய்யப்பட்டான். அதன் பின், அவனது இஸ்லாமிய மதம் பற்றிய அறிவாற்றலால், ஐ.எஸ்.ஐ-இல் சேருமாறு அழைப்புக் கிடைத்தது. அதை ஏற்ற சில நாட்களில், ஐ.எஸ்.ஐ-இன் தலைவர்களான அபு ஒமார் அல்-பாக்தாதி (முதல் தலைவன்) மற்றும் அபு அய்யுப் அல்-மாஸ்ரி (இரண்டாம் தலைவன்) அமெரிக்க விமானத் தாக்குதலில் இறந்தனர். அதனால், ஐ.எஸ்.ஐ-இன் தலைவனாக அபு பாக்கர் அல்-பாக்தாதி ஆனான்.
2011-இல், டுனிஷியா நாட்டில் தொடங்கிய அரப் வசந்தம் ஸிரியா நாட்டிற்குப் பரவியது. ஸிரியா-வின் ஜனாதிபதியான பஷார் அல்-அஸ்ஸாத், தனது ராணுவத்தின் ஒட்டுமொத்த ஆதரவு இல்லாததினால், அரசியல் ரீதியில் பலவீனமான நிலையில் தோன்றினார். அதனால், அஸ்ஸாத் கலவரத்தை அடக்க கலவரக்காரர்களைக் கடுமையாகத் தண்டித்தாலும், அமெரிக்கா அவரது அரசியல் பலவீனத்தைக் கருதி ஒன்றும் செய்யாமல் இருந்தது. அமெரிக்கா-வின் ஜனாதிபதி பராக் ஒபாமா வெளிநாட்டு அர்ப்பணிப்புகளைக் குறைத்துக் கொண்டு செயல்படுவோம் என்று வாக்குக் கொடுத்திருந்ததால், அஸ்ஸாத்-ஐ விலக்க அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்தத் தயங்கினார். அதே நேரத்தில், பயங்கரவாதத்தைக் குறைக்க அமெரிக்காவின் எதிர்க் கிளர்ச்சி நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இராக்-இல் நடந்துக் கொண்டிருந்ததனால், அல்-பாக்தாதி தனது நண்பன் அபு முஹமது அல்-ஜுலானி-ஐ ஸிரியா நாட்டிற்கு அனுப்பி, அங்கு ஜபத் அல்-நுஸ்ரா என்ற ஐ.எஸ்.ஐ-இன் துணைக் கிளை ஒன்றைத் துவக்க உத்தரவிட்டான்.  அஸ்ஸாத்-இன் அரசிற்கெதிரானப் போராட்டத்தில் அல்-நுஸ்ரா, அமெரிக்கா ஆதரித்த சுதந்திர ஸிரியா ராணுவம் (ஃப்ரீ ஸிரியன் ஆர்மி) போன்ற இதர கட்சிகளுடன் மிகப் பெரிய அளவில் செயல்பட ஆரம்பித்தது. அஸ்ஸாத், தனது நாட்டு மக்கள் மீது ரசாயன விஷ வாயு கலந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்ற குற்றாச்சாட்டு எழுந்த பொழுது,  ஒபாமா (ரசாயன விஷ வாயு அடங்கிய ஆயுதங்களை பயன்படுத்தினால் அது அமெரிக்கா விதித்தக் கோட்டை மீறியச் செயலாகும் என்று முன்னர் அறிவித்திருந்தார்) ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார். இதன் விளைவாக, அஸ்ஸாத் அரசை எதிர்க்கும் படைகள் விரக்தியடைந்தன. ரஷியா-வின் உதவியோடு, அஸ்ஸாத், தனது ராணுவம் இழந்திருந்த பிரதேசத்தை மீட்டு தனது நிலைமையை மேம்படுத்திக் கொண்டார். ஸிரியா-வின் சில பிராந்தியங்கள் அஸ்ஸாத்-இன் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், மற்றவை அவரை எதிர்கொண்ட அணியின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அபு பக்கர் அல்-பாக்தாதி, தனது ஐ.எஸ்.ஐ அமைப்பை அல்-நுஸ்ரா-வுடன் இணைத்து, இராக் மற்றும் லெவான்ட்-இன் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எல்) என்ற அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்தப் பின், அவனது நண்பன் ஜுலானி அதை மறுத்து, அல்-கெய்டாவிடம் முறையிட்டான். அப்போதைய சூழ்நிலையில், அல்-பக்தாதியின் கை ஓங்கி இருந்ததால், அல்-கெய்டாவின் தலைவனான அய்மன் அல்-ஸவஹிரி பயங்கரவாத ஜிஹாத் கூட்டத்தைப் பிரிக்க வேண்டாம் என்று விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்தான்.  அதன் பிறகு, ஐ.எஸ்.ஐ.எல் ஸிரியா மற்றும் இராக் நாடுகளில் ராக்கா என்ற ஊரில் ஆரம்பித்து, மற்றப்பல ஊர்களை ஆக்கிரமித்தது. சிறையில் தான் உருவாக்கிய யோசனைகளையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும்  மிகக் கொடூரமான முறையில் நடைமுறைப்படுத்தினான் அபு பக்கர் அல்-பாக்தாதி.  அதைக் கண்டு பல வெளி நாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எல் அணியில் சேர்ந்தனர். 2014-இல் இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி, ஐ.எஸ்.ஐ.எல், தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை இஸ்லாமியக் காலிஃபெட் என்று அறிவித்தது. அதன் பிறகு, ரஷியா-வின் உதவியுடன் அஸ்ஸாத்-உம், இராக்-இன் புதிய பிரதமர் ஹைதர் அல்-அபாதி-உம்  ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, அதன் ஆட்சியை மிகச் சிறியதாக ஆக்கினர்.
இராக்-இன் அல்-கெய்டா என்ற பெயரோடு அல்-கெய்டாவின் துணைக் கிளையாக ஆரம்பித்திருந்தாலும், ஐ.எஸ்.ஐ.எல், தனது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் வரம்புகளை மீண்டும் மீண்டும் மீறியதனால், பயங்கரவாத ஜிஹாதின் பரிணாம வளர்ச்சி-யின் அடுத்தக் கட்டமாகத் திகழ்ந்தனர்.
அல்-கெய்டா, தனது நடவடிக்கைகளில், தற்காப்பை முதன்மையாக வைத்துச் செயல்பட்டதால், அதன் மூலோபாய தேர்வுகள் அந்த அனுமானத்திலிருந்து வெளிப்பட்டன. மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அரசுகளை ஊக்குவிக்கும் மேற்கத்திய மற்றும் இஸ்ரேல் அரசுகளை பயங்கரவாதத்தால் அச்சுறுத்தி, அவர்களது உதவியை பின்வாங்க வைத்து  மத்திய கிழக்கு அரசுகளைத் தனிமைப்படுத்த முயன்றது. அதே சமயத்தில், மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமியர்கள் வெகுண்டெழுந்து தத்தம் அரசுகளை வீழ்த்துவதற்கும் ஊக்குவித்தது. அதனால், 'தூரத்து எதிரி' என்று மேற்கத்திய மற்றும் அமெரிக்க சக்திகளின் சின்னங்கள் மற்றும் நிறுவல்களை குறிப் பார்த்து, இஸ்லாமியர்களை பெரும்பாலும் காயப்படுத்தாத வண்ணம் நடந்து கொண்டது. ஐ.எஸ்.ஐ.எல், தனது அசாத்திய வன்முறைப் போக்கினால் எண்ணிலடங்கா இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் அல்லாத அப்பாவி மக்களைக் கொன்று குவித்தாலும்,  தனக்கென்று ஒரு நாட்டைக் கைப்பற்றி அதில், இதர நாடுகள் போல் வரி விதிப்பு, நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றைச் செயல்படுத்தியது.  இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு, சொந்த  முயற்சியால், நாட்டைக் கட்டிப் பாதுகாப்பதற்காக, ஒரு இஸ்லாமியக் காலிஃபெட்டை உருவாக்கியது. தனதுக் கட்டுப்பட்டிற்குள் இருந்த பிராந்தியங்களில் இருந்து, தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சுங்கம் மற்றும் இதர வரிகள் மூலம், நிதித் திரட்டிக் கொண்டது. அதற்கு மாறாக, அல்-கெய்டாவின் நிதித் திரட்டல், உஸாமா பின் லெடன்-இன் பரம்பரைச் சொத்தைச் சார்ந்து இருந்தது. தங்களது நிதி மூலங்களை விரிவுப்படுத்தாததால், தங்களுக்கு ஆதரவு அளிக்கும் இஸ்லாமியர்களின் கொடையை நம்பி இருக்க வேண்டி வந்தது. சில சமயங்களில், அய்மன் அல்-ஸவஹிரி தனதுச் சொந்த செலவிற்காக ஐ.எஸ்.ஐ.எல்-இடம் இருந்து நிதிப் பிச்சை கேட்டதும் உண்டு. மேலும், அல்-கெய்டா இஸ்லாமியர்களின் அறிவாற்றல் மற்றும் கட்டமைப்புத் திறனைக் குறி வைத்து செயல்பட்டது.  ஐ.எஸ்.ஐ.எல் இஸ்லாமியர்களின் காலிஃபெட்டைக் கட்டிப் பாதுகாக்கும் உள்ளுறுப்பு உணர்வுகளைக் குறித்து முறையிட்டது.
இந்த இரு அமைப்புகளின் செய்தித்தொடர்பு அணுகுமுறைகளும் வேறுபட்டன. அல்-கெய்டா, அய்மன் அல்-ஸவாஹிரி தொய்ந்து போன பின்னணியில் நீண்ட நேரம் ஆற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய வீடியோக்கள் மூலம் தனது சித்தாந்தத்தைப் பரப்பியது. ஐ.எஸ்.ஐ.எல் சமூக ஊடகங்களான இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் கவர்ச்சி மிகுந்த தொகுப்பாகத் தனது சித்தாந்தங்களை வெளியிட்டது. அல்-கெய்டாவின் தலைமை, அரசுகளின் பிடியிலிருந்து தப்பி ஓடிய வண்ணமே இருந்ததால், அவர்களது வீடியோக்களில் வருங்காலத்தில் உருவாகும் இஸ்லாமியக் காலிஃபெட்டைச் சித்தரித்தனர். ஐ.எஸ்.ஐ.எல் தரப்பில், இன்றைய காலத்திலேயே இஸ்லாமியக் காலிஃபெட்டை நிறுவியதால்,  அங்கு நடக்கும் யதார்த்த வாழ்க்கையைக் காட்டினர். ஐ.எஸ்.ஐ.எல் வீடியோக்களில் முதலில், அல்-கெய்டாவைப் போல் இஸ்லாமிய மக்கள் வெளி உலகால் பாதிக்கப்பட்டக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிறகு வரும் வீடியோக்களில் வெற்றி நடை போடும் கண்ணோட்டத்திற்கு மாறினர். அபு பாக்கர் அல்-பாக்தாதி இஸ்லாமிய மத குருவுக்கான படிப்பை முடித்திருந்ததால், இஸ்லாமியக் காலிஃபெட் நிறுவும் கோட்பாடுகளை, கூரானிலிருந்து எடுத்து ஐ.எஸ்.ஐ.எல் நடவடிக்கைகளில்  அதை நடைமுறைப்படுத்தினான். ஏனைய மதகுருக்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்த போது, அவர்களைப் புறக்கணித்தான். ஐ.எஸ்.ஐ.எல்-இன் பெரும்பாலான வீரர்கள் வெளிநாட்டில் பிறந்த 18 வயதிலிருந்து 29 வயது வரை ஆன ஆண்கள் என்பதாலும் அவர்களது ஒருமித்தக் கருத்தில் ஐ.எஸ்.ஐ.எல் செய்வது சரி என்பதாலும் அவனால் இவ்வாறு மற்ற மதக்குருக்களைப் புறக்கணிக்க முடிந்தது. ஜபத் அல்-நுஸ்ரா போன்ற பயங்கரவாத அமைப்புகள் சமூக ஊடகங்களில் தங்களது வீடியோக்களை பகிர்ந்தன. ஐ.எஸ்.ஐ.எல், அது மட்டுமின்றி, ஆன்ற்றாய்ட் மற்றும் ட்விட்டர்-இல் உள்ள ஆப்ஸ் மூலம் ட்விட்டர் புயல்களை (அனுமதி அளித்த ஆதரவாளரின் தொலைபேசிக் கணக்கில் இருந்து தானியங்கியாக ஐ.எஸ்.ஐ.எல் பற்றிய செய்திகள் மற்றும் பிரச்சாரம் வெளி உலகிற்கு அனுப்பும் முறை - இதனால், ட்வீட்-களின் தரவரிசைக் கூடிக் கொண்டே செல்லும்) உருவாக்கியது.
அல்-கெய்டா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல்-ஐ ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சோவியத் யூனியன்-இல் அக்டோபர் புரட்சிக்கு முன் போல்ஷவிக்ஸ் மற்றும் மென்ஷவிக்ஸ் இடையே இருந்த பிரிவு நினைவிற்கு (அனைத்து கோணங்களிலும் இந்த பொருத்தம் இருக்காது என்றாலும்) வருகிறது. போல்ஷவிக்ஸ் மற்றும் மென்ஷவிக்ஸ் இருத் தரப்புகளிலும் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து எழுச்சி பெறும் என்று நம்பினாலும், அதனை அடையும் திறன் பாட்டாளி வர்க்கத்திற்கு இருக்காது என்று நம்பினர். இரு தரப்பிலும் வன்முறை மூலமாக தங்களதுக் கொள்கைகளை நிலைநாட்டினாலும், அதைக் கையாண்ட விதம் வேறுப்பட்டது. அல்-கெய்டா போல் மென்ஷவிக்ஸ் மற்ற கம்யூனிஸ்டுகள் மற்றும் சோஷியலிஸ்டுகளுடன் வேலை செய்ய முற்பட்டாலும், ஐ.எஸ்.ஐ.எல் போல் போல்ஷவிக்ஸ் அணியினர், கூட்டு முயற்சியை அறவே  வெறுத்தனர்(தங்களைக் காட்டிலும் ஜிஹாத்தைப் பற்றி வீரியச் சித்தாந்தம் உடையவர்களின் முயற்சிகளை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டனர்). இரு தரப்பினரும் வெறிகொண்டவர்களாக இருந்ததாலும், அவர்கள் ஆதரவு தேடுபவர்களும் வெறிமிகுந்தவர்களாக இருந்ததாலும், எந்த அணி எளிமையான சித்தாந்தத்தைக் கடைப்பிடித்ததோ, அது (போல்ஷவிக்ஸ்/ஐ.எஸ்.ஐ.எல்) இறுதியில் வெற்றி பெற்றது.
ஐ.எஸ்.ஐ.எல்-இன் செய்தித் தொடர்பு மூலோபாயத்தைக் கண்டச் சமூக ஊடகங்களின் அணுகுமுறை வெவ்வேறு திசையில் சென்றது. அரப் வசந்தம் சமூக ஊடகங்களின் உதவியின்றி நடந்திருக்காது என்றாலும், ஐ.எஸ்.ஐ.எல்-இன் கீழ் எழுந்த இஸ்லாமியக் காலிஃபெட்டும் அதே சமூக ஊடகங்கள் இல்லாமல் நடந்திருக்காது. ஐ.எஸ்.ஐ.எல்-க்கு சாதகமான பிரச்சாரத்தை யூட்யூப் மற்றும் இன்ஸ்டாக்ராம்-இல், அவற்றின் தாய் நிறுவனங்களான கூகிள் மற்றும் ஃபேஸ்புக்  மிக விரைவில் முடக்கின. அந்த இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் இருப்பதினால், பயங்கரவாதத்தின் விளைவைப் பொறுப்பேற்கும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுடைய பங்குதாரர்கள் அழுத்தினர். அதற்கு மாறாக, ட்விட்டர் தனியார் நிறுவனமாக 2013 வரை இருந்ததனால் (அதன் அன்றைய முதலாளி லிபர்டேரியனிஸம் என்னும் அரசியல் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வந்தார்), தனது மேடையில், ஐ.எஸ்.ஐ.எல் பிரச்சாரத்தைத் தடுக்காமல் ஒதுங்கி இருந்தது. ட்விட்டர் மேடையை பயன்படுத்தி, அரபு வசந்தம் புரட்சி மிக வேகமாக முன்னேறியது. அதனால், ட்விட்டர், தனது மேடையில் செய்யப்படும் எந்தப் பிரச்சாரத்தையும் தடுக்க மாட்டோம் என்ற நிலையை மேற்கொண்டது. அதனைப் பயன்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எல் அப்பாவி மக்களைக் கொல்லும் காட்சிகளை வீடியோ மூலம் ட்விட்டரில் வெளியிட்டது. ட்விட்டர், பங்குச் சந்தையில் சேர்ந்தவுடன், இந்த வீடியோக்களை முடக்கியும் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு உதவி செய்யவும் ஆரம்பித்தது. மேலும், வன்முறையைத் தூண்டும் கணக்குகளை தனது மேடையில் இருந்து விலக்கியது. வாக்-ஏ-மோல் (ஒரு கணக்கை விலக்கினால், அந்த கணக்கின் பொறுப்பாளர் மற்ற பல கணக்குகளை உருவாக்கி அதே பிரச்சாரத்தை முன்பு போல் தொடர்வது) என்ற மூலோபாயம் வேலைக்கு ஆகாது என்று விமர்சிக்கப்பட்டாலும், ஐ.எஸ்.ஐ.எல்-இன் தீவிர ஆதரவாளர்களுக்குப் பல முட்டுக்கட்டைகளை அது எழுப்பியது. ட்விட்டர், அதன் மேடையை பயன்படுத்தும் கணக்குகளை, அரசுகளிடம் பகிர்வதனால், தீவிர ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களைக் கண்டுகொள்ள முடிகிறது(சாதாரண அளவு ஆதரவு காட்டுபவர்கள், 2 அல்லது 3 முறை விலக்கப்பட்டப் பின் ட்விட்டர் மேடைப் பிரச்சாரத்தைக் கைவிடுகின்றனர், ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளும் தீவிர ஆதரவாளர்களும் எத்தனை முறை விலக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்). இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு சமூக ஊடகங்கள் மிக முக்கிய பிரச்சார மேடை என்பதால், இது ஐ.எஸ்.ஐ.எல்-ஐ பதட்டப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பயங்கரவாத ஜிஹாதி அமைப்புகளின் பிரச்சாரத்தை முடக்க ட்விட்டர்-இன் நடவடிக்கைகள் மிகுந்த பயனை அளித்ததால், இந்த மூலோபாயம் மற்ற சமூக மேடைகளுக்கும் வழிக்காட்டியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எல் இஸ்லாமிய காலிஃபெட்-ஐ உருவாக்கியப் பின்னர், அதை ஒரு அரசு போல கையாள வேண்டும் என்று இந்தப் புத்தகம் பரிந்துரைக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், அதன் தோல்விகள், களவாணிச் செயல்கள் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனுடைய ஈர்க்கத்தைக் குறைக்கலாம். மேலும், ஊடகங்கள் ஐ.எஸ்.ஐ.எல்-இன் பயங்கரவாத நடவடிக்கைகளை உணர்ச்சிபூர்வமாக விவரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலைமையை முன்னேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகிறது. அவ்வாறு செய்யும் பொழுது, மேற்கத்திய நாடுகளில் இருக்கும் குடிமையைச் சார்ந்த சுதந்திரங்களையும் சலுகைகளையும் குறைக்கக் கூடாது என்று கூறுகிறது.
வன்முறை வெடிக்கும் அபாயம், சமூகங்களில் அரசியல் சார்ந்த சுதந்திரங்களை மக்களுக்கு அளிக்கும் பொழுது அதிகமாக இருக்கிறது என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சர்வாதிகாரம் மற்றும் நன்கு மேம்பட்ட ஜனநாயக சமூகங்கள், தங்கள் மக்களிடையே எழும் எதிர்பார்ப்புகளை மிதமான அளவில் கொண்டு செல்கின்றன. நிறைய மாற்றம் நிறைந்த சமூகங்களில், மக்களின் எதிர்பார்ப்புகளைச் சமாளிக்கும் திறன் குறைந்து இருப்பதால், அந்த நேரத்தில், பயங்கரவாத அமைப்புகள், மக்களின் குறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:

ப்ளாக் ஃப்ளாக்ஸ்: ரைஸ் ஆஃப் ஐ.எஸ்.ஐ.எஸ் - ஜோபி வாரிக்
தி கால் டு அ க்ளோபல் இஸ்லாமிக் ரெஸிஸ்டென்ஸ் - அபு முஸப் அல்-ஸுரி
மெனெஜ்மென்ட் ஆஃப் ஸவேஜரி: தி மோஸ்ட் க்ரிடிகல் ஸ்டேஜ் த்ரூ விச் தி இஸ்லாமிக் நேஷன் வில் பாஸ் - அபு பாக்கர் நாஜி
ஸ்மார்ட் மாப்ஸ்: தி நெக்ஸ்ட் சோஷியல் ரிவல்யூஷன் - ஹோவர்ட் ரைங்கோல்ட்

No comments: