தப்புக் கணக்கு

சுருக்கம்:
உலகெங்கும் பரவி வரும் தொற்று நோய், நீர்ப் பற்றாக்குறை, விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் வாக்களிப்பில் ஏற்படும் முறைகேடுகள் போன்றவற்றை கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட பிக் டேட்டா-வினால் சரி செய்ய முடியும் என்றக் கருத்துப் பரவலாகி உள்ளது. தனி மனிதத் தகவல்களைச் சேமிப்பது சமூகத்தின் நலனிற்கே என்றக் கருத்தும் பரவலாக இருப்பதால், அதிக அளவில் தகவல்களை சேகரிப்பது மேலும் நன்மையையே அளிக்கும் என்றுக் கருதப்படுகிறது. பிக் டேட்டா-வை எடைப்போடும் கருத்துகள், அதன் அனுமானங்கள் தவறானவை என்பதைக் கருதத் தவறுகின்றன. பிக் டேட்டா பெரும்பாலும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அதன் தீர்ப்புகள் நடுநிலையாக இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால், பிக் டேட்டா-வை பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் கம்பெனிகள், தங்களின் நடவடிக்கைகளால் புண்படுத்தப்படும் வாடிக்கையளர்களின் குறைகளை ஒருப் பொருட்டாகக் கருதுவதில்லை. இந்தப் புத்தகம், பிக் டேட்டா-வை பயன்படுத்தும் கணிணி மென்பொருட்கள் எத்தகைய அளவிற்கு மக்களுக்கு இன்னல்களை உருவாக்குகின்றன என்பதை அலசி ஆராய்கிறது. கணித மாதிரிகளின் மூன்று பண்புகள் அவற்றைப் பேரழிவுக் கருவிகளாக மாற்றுகின்றன என்பதை விவரிக்கிறது. கணித மாதிரிகளின் உள்கட்டமைப்பு, அவற்றை உருவாக்கும் கம்பெனிகளின் பிரத்தியேகச் சொத்தாகக் கருதப்பட்டு, மக்களிடம் இருந்து மறைத்து வைக்கப்படுகின்றன(ஒளிபுகா பண்பு). இந்த மாதிரிகள் மகத்தான எண்ணிக்கையில் மக்களின் தகவல்களைச் சேகரிப்பதால், அவற்றின் தீர்ப்புகளால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது (அளவு பண்பு). இந்த மாதிரிகளின் தீர்ப்புகள் மக்களின் நிஜ வாழ்க்கையில் சேதம் விளைவிக்கின்றன(சேதம் விளைவிக்கும் பண்பு). வெவ்வேறுத் துறைகளில் இந்த மாதிரிகளின் தாக்கத்தை ஆசிரியர் விவரித்திருக்கிறார் - பொருளாதாரம், கல்வித்துறையில் ஆசிரியர்களின் மதிப்பீடுகள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்கள், நீதி மன்றங்கள், வேலை வாய்ப்பு (வேலைக்கான விண்ணப்பம், வேலையில் தொழிலாளியின் அட்டவணை, நிறுவனங்கள் தொழிலாளிகளுக்கு வழங்கும் ஆரோக்கிய நலத் திட்டங்கள்), தேர்தல்கள்.
இந்தியா-வில் வாழும் மக்களை அடையாளம் கண்டுக் கொள்ள ஆதார் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அரசிடம் இருந்துக் குடிமக்களுக்குச் சலுகைகளை அளிக்கும் பொழுது ஏற்படும் கசியலை அகற்றி, தேவையானவர்களுக்குச் சென்று அடைய வேண்டும் என்பது அதன் ஒருக் குறிக்கோளாகக் கருதப்படுகிறது. இந்தியா-வில் உள்ள மக்கள், ஆதார் தேசிய நலனுக்காகச் செயல்படுத்தப்படுகிறது என்ற அரசின் விளம்பரங்களுக்குச் செவி சாய்த்து, தங்களுடைய தனியுரிமைத் தகவல்களை அரசிடம் விரும்பி அளித்துள்ளனர். மகத்தான அளவில் சேகரிக்கப்படும் மக்களின் தனியுரிமைத் தகவல்கள், மற்ற நாடுகளில் நிகழ்ந்ததுப் போல், பாதுகாப்பு அத்து மீறல்களாலும், கணிணி மென்பொருளை திருட்டுத்தனமாக மற்றவர்களுக்கு விற்பதாலும் நிலத்தடிச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. மேலும், ஆதாரின் அடையாளச் சரிப்பார்த்தல் முறையைத் தனியார் நிறுவனங்கள் (இணையத் தள இணைப்பு, ஸிம் கார்ட் கொள்முதல்) தங்களுடைய வாடிக்கையாளர்களின் மேல் செலுத்த முற்பட்டது மிகுந்தக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-வின் உச்ச நீதி மன்றம் தலையிட்டு, ஆதாரின் அடையாளச் சரிப்பார்த்தல், அரசு முதன்மையில் வரையறுத்தப் பணிகளுக்கேப் பயன்படுத்தலாம் என்றுத் தீர்ப்பளித்தது. இந்திய அரசு அளிக்கும் சலுகைகளைப் (எரிவாய், மலிவு விலைக் கடை) பெரும்பாலும் ஏழை மக்கள் பயன்படுத்துவதால், ஆதாரை நாடெங்கும்  பயன்படுத்தும் கொள்கையினால், அவர்களின் மேல் உள்ளச் சுமை அதிகரித்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள், ஆதாரை அடிப்படையாக வைத்து அடையாளத்தை ஊர்ஜிதப்பத்தும் புதிய மாதிரிகளை உருவாக்கினால்,   அவற்றின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது வருங்காலத்தில் தெரிய வரும்.
அலசல்:
உலகின் தீவிரப் பிரச்சனைகளின் தீர்வுக் காண்பதற்கு பிக் டேட்டா-வை  மென்பொருள் கருவியாகக் கருதினாலும், அந்தப் பிரச்சினைகளின் வளர்ச்சியை பிக் டேட்டா-வில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகள் ஊக்குவிக்கின்றன. சமீபக் காலமாக அமெரிக்கா-வில் நிகழ்ந்த நெருக்கடிகள் (2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் காரணமாக வீடு விலைகளின் சரிவு) கணித மேதைகள், தங்களுடையத் கணிதத் திறனை அதிக லாபம் சம்பாதிக்கும் குறிக்கோளோடுப் பயன்படுத்தியதன் காரணத்தால் பூகம்பம் போல் வெடித்தன. மக்களுடையத் தனியுரிமைத் தகவல்கள் அதிக அளவில் சேகரிக்கும் முயற்சிகள் பரவியதன் பலனாக, கணிதம் மற்றும் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் அவர்களது செலவழிக்கும் சக்தியையும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. மக்களின் நம்பகத்தன்மையையும் கடனை அடைக்கும் திறனையும் கணிதத்தின் மூலம் மதிப்பீடுச் செய்துள்ளனர். சில சமயங்களில், கடனை அடைக்கும் திறன், ஒருவரின் நம்பகத்தன்மையை எடைப் போடவும் பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, நாடுகளும் அங்குள்ள அரசாங்கங்களும் பிக் டேட்டா-வை தலை மேல் வைத்துக் கொண்டாடுகின்றனர். பிக் டேட்டா, வருங்கால நிகழ்வுகள், கடந்தக் கால நிகழ்வுகளைப் போல் இருக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறது. சமூகத்தின் உச்சியில் உள்ள மக்களுக்கு, பிக் டேட்டா-வின் தீர்வுகள் அவர்களுடைய சொகுசு நிலைமையை மேலும் வலுப்படுத்துகின்றன. பிக் டேட்டா-வின் அடிப்படையான கணித மாதிரிகள், மனித அனுமாங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், பிக் டேட்டா மென்பொருட்கள் நடுநிலை இல்லாமல் பாரபட்சமான முறையில் செயல்படுகின்றன. பிக் டேட்டா மென்பொருட்களில், ஒளிபுகா பண்பு, அளவுப் பண்பு மற்றும் சேதம் விளைவிக்கும் பண்பு ஒன்றுச் சேரும் பொழுது, அவை பேரழிவு விளைவிக்கும் கருவிகளாக வெடிக்கின்றன. இதை, வெபன்ஸ் ஆஃப் மாத் டிஸ்ட்ரக்ஷன் (ட்புள்யூ, எம்.டி) என்று ஆசிரியர் அழைக்கிறார். கணித மாதிரிகள், மிகச் சிக்கலானச் செயல்முறைகளை எளிமைப்படுத்துகின்றன. இதனால், அவற்றில், தவறுகள் எழுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. கணித மாதிரிகள் எளிமையாக இருப்பதனால் அவைத் தகுதியற்றுப் போவதில்லை. சிலச் சூழ்நிலைகளில் எளிதான மாதிரிகள், (வீடுத் தீப் பற்றி எரியும் பொழுது, புகையை வைத்து அறிந்துக் கொள்ளும் அணுகுமுறையைப் போல்) சூழ்நிலைக்கு ஏற்றப் பயனை அளிக்கின்றன.
கணித மாதிரிகளின் நம்பகத்தன்மைக்கு, அவற்றின் தீர்வுகளுக்கும் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கும் தூரத்தைக் குறைக்கப் பின்னூட்டத்தைப் பயன்படுத்தக் கூடியத் திறன் மிக முக்கியமாக அமைகிறது. மென்பொருள் நிறுவனங்களான கூகுள் மற்றும் அமேஸான் போன்றவை, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குத் தேவையான  மாற்றங்களைத் தங்களது இணையத் தளத்தில் செய்வதற்கு புள்ளி விவரங்களையும் கணிதத்தையும் பயன்படுத்துகின்றன. தங்களது இணையத் தளத்தில் தொடர்ச்சியாகச் சோதனைகள் செய்வதன் மூலம், அவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின்  விருப்பங்களை அறிந்துக் கொள்கின்றனர். பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பிக் டேட்டா மென்பொருட்கள், கணித மாதிரிகளை நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். பேஸ்பால் விளையாட்டின் முடிவுகளும் அதில் விளையாடுபவர்களின் திறன்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு அனைவரும் உட்கொள்ளும் வகையில் பிரசுரிக்கப்படுகின்றன. பேஸ்பால் விளையாட்டின் பலவிதத் தகவல்களும் நன்றாக மேம்படுத்தப்படுவதால், அவற்றை அலசி ஆராய்வதற்கு பேருதவிச் செய்கின்றன. இதனால், புள்ளி விவர நிபுணர்கள் வெவ்வேறுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பட்டச் சேர்க்கைகளைக் கண்டுப்பிடிப்பது சுலபமாக இருக்கிறது. பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகளும் பிக் டேட்டா மென்பொருட்களும் அந்த விளையாட்டின் அசல் பண்புகளைப் பயன்படுத்துகின்றன. மற்றச் சில பிக் டேட்டா மென்பொருட்களில் தேவைப்பட்டப் பண்புகள் கிடைக்காதப் பட்சத்தில், மாற்றுப் பண்புகள் (ப்ராக்ஸீஸ்) பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு மாணவரின் திறனை எடைப் போட அவருடைய மதிப்பெண்கள் ப்ராக்ஸியாகப் பயன்படுத்தப்படுகிறது. பேஸ்பால் விளையாட்டை அலசி ஆராயும் புள்ளி விவர நிபுணர்களும் பிக் டேட்டா மென்பொருட்களும் தங்களதுக் கணிப்புகளின் முடிவுகளை, நடந்து முடிந்தப் போட்டிகளுடன் ஒப்பிடுவதால், அந்தத் துறையில் வலிமையான பின்னூட்ட வளைவு இருக்கிறது. தங்களுடையக் கணிப்புகளின் முடிவுகளை நடந்து முடிந்தப் போட்டிகளின்  முடிவுகளுக்கு மாறாக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய கணித மாதிரிகளைச் சரிச் செய்வதற்கு முயல்கின்றனர். இதனால், பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகளும் பிக் டேட்டா மென்பொருட்களும் நிஜ  வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு இருக்கின்றன.
2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவிற்கு, நிதி நிறுவனங்கள் பயன்படுத்திய கணித மாதிரிகள் முக்கியக் காரணமாக அமைந்தது. கடந்தக் காலத்தில் நிகழ்ந்ததுப் போலவே வருங்காலத்திலும் நடக்கும் என்ற அனுமானத்தில் இந்த கணித மாதிரிகள் செயல்பட்டன. நிதி நிறுவனங்களில் உள்ள கணித மற்றும் புள்ளி விவர நிபுணர்கள், தங்கள் நிறுவனத்திடம் இருந்த பல் வேறுச் சொத்துகளின் அபாய நிலைமையை அறிந்துக் கொள்ள முடியும் என்ற மெத்தனத்தில் இருந்தனர்(ஒளி புகா பண்பு). கடன் வாங்கிய அனைவரும் ஒரேச் சமயத்தில் அதனைக் கட்ட முடியாமல் இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஒரு சிலர் தங்களுடைய வீட்டு அடமானக் கட்டணங்களை நிறுத்தினாலும், பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டு அடமானக் கட்டணத்தை எப்பொழுதும் போல் கட்டுவார்கள் என்று நிதி நிறுவனங்களின் கணித மேதைகளும் புள்ளி விவர நிபுணர்களும்  எதிர்பார்த்தனர். இந்த இரு அனுமானங்களும் பொய்யாக்கப்பட்டப் பொழுது, பங்குச் சந்தையில் நிகழ்ந்த அமளி அமெரிக்க மக்கள் அனைவருடைய வீட்டு விலையை அதல பாதாளத்திற்குத் தள்ளியது. மக்களின் வீட்டு அடமானங்களை பலக் கூறுகளாக்கி அவற்றை விலை மதிப்புள்ளப் பங்குகளாக விற்க உதவியக் கணித மாதிரிகளும் பிக் டேட்டா மென்பொருட்களும், பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு, சங்கடங்கள் நிறைந்த வீட்டு அடமானங்களை அந்தப் பங்குகளில் இருந்துப் பிரிக்க முடியாமல் தவித்தன. இந்த வேலை, நிதி நிறுவனங்களில் உள்ள நிபுணர்கள், பொறுமையாகக் கையால் செய்ய வேண்டியிருந்தது. முதலில் பொருளாதாரம் மற்றும் நிதி நிறுவனங்களில் ஆரம்பித்த பிக் டேட்டா மென்பொருட்கள், இப்பொழுது எல்லா விதமானத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பிக் டேட்டா மென்பொருட்களை உருவாக்குவதற்கு, உயர்தரக் கல்லூரிகளான எம்.ஐ.டி, ஹார்வார்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்ட்-இல் படிக்கும் மாணவர்களை வேலைக்கு எடுத்து, மகத்தான செல்வத்தை அவர்கள் முன் ஆசைக்காட்டுகின்றனர். இந்தக் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள், தங்களது வாழ்க்கை முழுவதும் சமூகம் பெரிதாகக் கருதும் அளவுக்கோல்களை அடைவதைத் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், பிக் டேட்டா மென்பொருட்கள் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் செல்வத்தைப் பிரதானமாகக் கருதி, வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டதாகச் சந்தோஷம் அடைகிறார்கள்.   
அமெரிக்கா-வின் அரசுப் பள்ளிகளில் இருக்கும் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்கு, அங்குள்ள ஆசிரியர்களை எடைப் போடும் பிக் டேட்டா மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மென்பொருட்கள் பயனற்ற ஆசிரியர்களை விலக்கி, பயனுள்ள ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம், அரசுப் பள்ளிகளின் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் என்று அதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்த பிக் டேட்டா மென்பொருட்கள், மாணவர்களின் பரீட்சை மதிப்பெண்கள் ஆசிரியரின் கற்பிக்கும் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கோலாகக் கருதுகின்றனர். மாணவர்களிடம் ஆசிரியருக்கு இருக்கும் மதிப்பு, மாணவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமை போன்ற மற்ற அளவுக்கோல்களைப் புறக்கணிக்கின்றனர். மேலும், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் பிக் டேட்டா மென்பொருட்கள், மிகக் குறையத் தகவல் அளவினைப் பயன்படுத்துகின்றன. கூகுள் போன்ற நிறுவனங்களின் இணையத் தளத்தில் நேரம் செலவிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலக் கோடிகளில் இருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் பிக் டேட்டா மென்பொருட்கள், அதிகப் பட்சம் நூற்றுக்கணக்கில் தகவல்களைச் சேகரிக்கின்றன. கூகுள் போன்ற நிறுவனங்கள், பிக் டேட்டா மென்பொருட்களை செயல்படுத்தும் பொழுது, பின்னூட்டத்தை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் பிக் டேட்டா மென்பொருட்கள், பின்னூட்டத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, தங்களுடைய ஆசிரியரின் கற்பிக்கும் திறனைப் பற்றி எதிர்மறையாகப் பின்னூட்டம் அளிக்கும் மாணவர்கள், அந்த ஆசிரியரின் கற்பிக்கும் திறனுக்கு கணித மாதிரியில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பொழுது, மாணவர்கள் அளிக்கும் எதிர்மறைப் பின்னூட்டத்தின் காரணத்தை அலசி ஆராயாமல் பிக் டேட்டா-வின் கணித மாதிரியில் மாற்றங்கள் செய்யத் தவறுகின்றனர். அமெரிக்க அரசு, அவசர கதியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும்  ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடுவதற்காகப் பிக் டேட்டா மென்பொருட்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, பலப் பள்ளிகள் தங்களுடைய மாணவர்களின் தீர்ப்பு மதிப்பெண்களை தவறான முறைகளால் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் பிக் டேட்டா மென்பொருட்கள் ஒரு ஆசிரியருக்கு குறைந்த மதிப்பெண்ணை அளிப்பதனல்ல், அந்த ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிக் டேட்டா மென்பொருட்கள் அளிக்கும் தவறான முடிவுகளை எதிர்க்க வேண்டுமானால், ஆசிரியர்கள் வைத்திருக்கும் தடயங்கள் மாசற்றதாக இருக்க வேண்டும். பிக் டேட்டா மென்பொருட்கள் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் பொழுதுத் தவறுச் செய்தால், அதநால், அரசுத் தனது முடிவை மாற்றிக் கொள்வதில்லை. தனியார் துறையில், பிக் டேட்டா மென்பொருட்கள் பெரும்பாலும் அதிக லாபம் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பிக் டேட்டா மென்பொருள் அளிக்கும் பரிந்துரைகளால் அந்த நிறுவனத்திற்கு வருவாய் அதிகரிப்பதனால், அந்த மென்பொருளின் தவறான முடிவுகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பிக் டேட்டா மென்பொருள் தவறுதலாக முடிவுக்கு வந்தால், அதனை உருவாக்கிய தகவல் துறை நிபுணர்கள், அந்தத் தவறுகளை விதிவிலக்குகளாகக் கருதுகின்றனர். அந்தத் தவறுகளைப் பின்னூட்டமாகப் பயன்படுத்தி, பிக் டேட்டா-வின் அடிப்படையான கணித மாதிரிகளைச் சரிச் செய்தால், வருங்காலத்தில் தவறுகள் நிகழும் வாய்ப்புகள் குறையும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எடைப் போடும் கணித மாதிரிகள், அனைவரையும் சமமாகக் கருதுவதற்குப் பதிலாகச் செயல்திறனை அடிப்படையாகக் கருதுவதினால், அரசுப் பள்ளிகளில் உள்ள நிர்வாகிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், பிக் டேட்டா மென்பொருளைப் பயன்படுத்தி அரசுப் பள்ளி நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளில் தவறுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது.
அமெரிக்கா-வில் உள்ளக் கல்லூரிகளில் நுழைவதற்கு அங்குள்ள மாணவர்களிடையேக் கடும் போட்டி நிலவுகின்றது. தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளைப் பற்றி அறிந்துக் கொள்ள, யு.எஸ் நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்போர்ட் நாளிதழில் வருடாவருடம் பிரசுரிக்கப்படும் கல்லூரித் தரவரிசைப் பட்டியலை மாணவர்களும் அவர்களதுப் பெற்றோர்களும் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். கல்லூரிகள், அந்தப் பட்டியலில் உயர்ந்த இடத்தை அடைய, பலவித யுக்திகளைக் கையாள்கின்றனர். 1983-ஆம் ஆண்டில் யு.எஸ். நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்போர்ட் நாளிதழ் மிகவும் மோசமான நிதி நிலையில் இருந்தது. அதை நிவர்த்திச் செய்ய, கல்லூரிகளின் தரவரிசையை வெளியிட ஆரம்பித்தது. ஆரம்பக் காலத்தில், கல்லூரி நிர்வாகத் தலைவர்களிடம் அனுப்பியக் கணக்கெடுப்பில் இருந்துத் தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப்பட்டது. முதன் முதலாக இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளிவந்தவுடன், கல்லூரி நிர்வாகிகள் தங்களுடையக் கல்லூரியின் இடம் மேலும் உயரமாக இருக்க வேண்டும் என்று யு.எஸ் நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்பெர்ட்-இடம் முறையிட்டனர். அவர்களதுப் புகார்களுக்குச் செவிச் சாய்த்து, தனதுத் தரவரிசைப் பட்டியலை வகுக்க
பலவித ப்ராக்ஸிக்களை தேர்ந்தெடுத்தது. 1988-ஆம் ஆண்டில், அந்த ப்ராக்ஸிக்களை, தான் உருவாக்கியக் கணித மாதிரியில் பொருத்தியது. எஸ்.ஏ.டி பரீட்சை மதிப்பெண்கள், மாணவர் ஆசிரியர் விகிதம், புதிய மாணவர்களை ஏற்றுக் கொள்ளும் விகிதம், இரண்டாம் வருடத்திற்குச் செல்லும் புதிய மாணவர்களின் விகிதம் மற்றும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்தக் கல்லூரிகளுக்குப் பணம் கொடுக்கும் அளவு போன்ற மாற்றுப் பண்புகள் ஒருக் கல்லூரியின் மதிப்பில் 75% பங்கு வகித்தன. மீதிய 25%, கல்லூரி நிர்வாகிகளிடம் இருந்துக் கிடைத்த கணக்கெடுப்புகளிலிருந்துக் கணிக்கப்பட்டன. இந்த மாற்றுப் பண்புகள், கல்லூரித் தரவரிசை உருவாக்கப்பட்டக் காலத்தில் அமெரிக்கா-வில் கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருந்தக் கல்லூரிகளான ஹார்வார்ட், ப்ரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் யேல்-ஐ முன்னோடியாக வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த உயர்மட்டக் கல்லூரிகள், அதிக எஸ்.ஏ.டி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதில் அதிக விகிதமும், செல்வம் கொழிக்கும் முன்னாள் மாணவர்களும் நிறைந்தவையாக இருந்தன. இந்தக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடிப்பதற்குத் தேவையான நிதிச் செலவை யு.எஸ் நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்போர்ட் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரித் தரவரிசையின் பின்னூட்டம் பலக் கல்லூரிகளுக்குத் தீயச் சக்தியாக அமைந்தது - தரவரிசையில் கீழ்த்தட்டில் இருக்கும் கல்லூரிகளின் பெயரும் புகழும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குறைந்தது, பேராசிரியர்களும் அந்தக் கல்லூரிகளில் இருந்து விலகி நின்றனர். அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அதற்கு நிதி உதவிச் செய்வதைக் குறைத்துக் கொண்டனர். இதனால், அந்தக் கல்லூரியின் நிலைமை கல்லூரித் தரநிலையில் மேலும் கவலைக்கிடமாக ஆனது. தரவரிசையில் தங்களுடைய நிலையை மேம்படுத்தப் பலக் கல்லூரிகள் வெவ்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பக்னெல் பல்கலைக்கழகம் மற்றும் க்ளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரி தங்களுடைய மாணவர்களின் பரீட்சை மதிப்பெண்களைப் பொய்யாகப் பதிவுச் செய்தன. பெய்லர் பலகலைக்கழகம் போன்றவைத் தங்களுடைய மாணவர்களை எஸ்.ஏ.டி பரீட்சையை மீண்டும் எடுப்பதற்கு (அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்கு) நிதி உதவியை அளித்தன. தன்னுடையத் தரவரிசைப் பட்டியல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நல்ல இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு ஊக்குவிக்கின்றன என்று யூ.எஸ். நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்போர்ட் நாளிதழ் வாதாடியது. கல்லூரித் தரவரிசையில் மாற்றுப் பண்புகள் தாராளமாகப் பயன்படுத்தப்படுவதால், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மிக எளிதாக அந்தப் பட்டியலில் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தும் யுக்திகளை வெற்றிகரமாகக் கையாண்டு வருகின்றனர். பலக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரவரிசைப் பட்டியலில் உயர்ந்த இடத்தை அடைவதற்கு கல்வியைத் தவிர மற்ற எல்லா வசதிகளிலும் நிதி முதலீடுச் செய்துள்ளன. உதாரணத்திற்கு, 2009-ஆம் ஆண்டில் டெக்ஸஸ் க்ரிஸ்டியன் பல்கலைக்கழகம் தனது நிதித் திரட்டும் திறனை மேம்படுத்தப் பலக் கோடி டாலரைச் செலவுச் செய்தது. அந்தக் காலத்தில், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிதித் திரட்டும் திறன் தரவரிசையில் சேர்க்கப்படும் மாற்றுப் பண்புகளில் ஒன்றாக இருந்ததால், டெக்ஸஸ் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தின் அசாத்தியச் செலவு மிகுந்தப் பலன் அளித்தது - கல்லூரித் தரவரிசையில் அதன் நிலை வெகு வேகமாக முன்னேறியது. இதனால், எஸ்.ஏ.டி பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தப் பல மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர முற்பட்டனர். பட்டப் படிப்பின் நிதிச் செலவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பலக் கோடி டாலர்களை கல்விக்கு அப்பாற்பட்ட வசதிகளில் செலவுச் செய்தனர் - ஆடம்பரமான விளையாட்டு மைதானங்கள், சொகுசான மாணவ விடுதிகள், உயர்தரக் கண்ணாடியால் கட்டப்பட்ட மாணவ மையங்கள் இவற்றில் அடங்கும். இவற்றைக் கட்டுவதற்குச் செலவுச் செய்தப் பணத்தை, மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து எடுத்துக் கொண்டனர்.
பிக் டேட்டா மென்பொருட்கள், கல்லுரிகளையும் பல்கலைக்கழகங்களையும்  தரவரிசைப்படுத்துவது மட்டுமல்லாமல்,  அந்தக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் படிக்க வரும் மாணவர்களைத் தரவரிசைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளன. கணிப்புப் பகுப்பாய்வின் மூலம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகிகளுக்கு, அங்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை பலவித மாற்று பண்புகள் மூலம் (நிலவியல், பாலினம், இனம், படிப்புத் துறை, படிப்புத் திறன்) தரவரிசைப்படுத்த முடிகிறது.  இந்தத் தரவரிசையைப் பயன்படுத்தி, எந்த மாணவர்களை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இடம் அளித்தால் யு.எஸ் நியூஸ் ஆண்ட் வோர்ல்ட் ரிப்போர்ட்-இன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தரவரிசையில் தங்களது நிலையை மேம்படுத்த முடியும் என்பதை அறிய முடிகிறது. இதன் விளைவாக, பெற்றோர்களும் மாணவர்களும் கல்விப் பயிற்சியாளர்களிடம் அதிகப் பணம் முதலீடுச் செய்கின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தரவரிசையின் அடிப்படை வழிமுறைத் தெளிவாகத் தெரியாததால், பெற்றோர்களும் மாணவர்களும் கல்லூரியில் இடம் பிடிப்பதற்கும் அங்குப் பட்டப் படிப்பை முடிப்பதற்கும் தலை மேல் கடன் வாங்கித் தவிக்கின்றனர். பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தப் பொழுது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படை அனுமானங்களில் பட்டப்படிப்பின் செலவைச் சேர்க்க முயற்சிச் செய்தப் பொழுது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தலைவர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அமெரிக்க காங்கிரஸ் இடம் இருந்து ஆதரவுக் கிடைக்காத நிலைமையில், ஒபாமாவின் நிர்வாகம், கல்லூரி நுழைவுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பொது மக்கள் படிக்கும் வண்ணம் பிரசுரித்தது. இதன் மூலம், பெற்றோர்களும் மாணவர்களும் வெவ்வேறுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பட்டப் படிப்பின் மதிப்பைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
பட்டப் படிப்பைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுவதன் காரணமாக கல்வி வசதியை அளிக்கும் இணையத் தளங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கின்றன. இணையத் தளத்தில் உள்ள விளம்பரங்களையும் பிக் டேட்டா மென்பொருட்களையும் பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள், ஏழை மற்றும் மிகவும் நலிந்தப் பிரிவின மக்களைக் குறி வைத்துத் தங்களுடையக் கல்விச் சேவைகளை விற்கின்றனர். இணையத் தளத்தில் கிடைக்கும் பட்டத்திற்கு அதிக அளவு மதிப்பு இல்லை என்றாலும், அதில் பங்கேற்கும் மாணவர்கள் கடன் தொல்லையில் சிக்கின் கொள்கின்றனர். பெரும்பாலும், அமெரிக்கா-விற்குக் குடிபெயரும் மற்ற நாட்டினரும் ஏழை மக்களும் இதில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களை விடத் தனியார் பல்கலைக்கழகங்கள் மேல் அதிக மதிப்பிருக்கிறது.  மற்ற நாடுகளில் இருந்துக் குடிப் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழையான நாடுகளில் இருந்து வருவதால், அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள அரசுகள் கல்வித் துறையில் அதிக அளவு முதலீடுச் செய்யாமல் இருப்பதை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வாறுத் தனியார் பல்கலைக்கழகங்களின் பிடியில் மாட்டிக் கொள்கின்றனர். இணையத் தளத்தில் உள்ள விளம்பரத்தில் வாடிக்கையாளர்கள் க்ளிக் செய்தவுடன், அந்த இணையத் தளக் கல்லூரி அல்லதுப் பல்கலைக்கழகத்தில் இருந்துக் கிடைக்கும் பட்டத்தின் மதிப்பை அங்குள்ள விற்பனையாளர்கள் விளக்குகின்றனர். கூகுள் போன்ற நிறுவனங்கள் போல, எந்த விளம்பரம் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருகிறது என்பதைக் கண்டுப் பிடிக்க, இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாகச் சோதனைகள் நடத்துகின்றன. தங்களுடைய விளம்பரங்களில் பொய்யானத் தகவல்களை அளிப்பதற்கும் இந்த இணைய தளக் கல்வி நிறுவனங்கள் தயங்குவதில்லை.  உதாரணத்திற்கு, அமெரிக்க அரசாங்கம் அங்குள்ளக் கல்வித்  துறையை ஒரேயடியாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது என்றப் பொய்யானத் தகவல்களை விளம்பரப்படுத்துவதன் மூலம், அந்த விளம்பரத்தில் க்ளிக் செய்யும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுக் கொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, அமெரிக்கா-வில் உள்ள மாணவர்கள், பட்டப் படிப்புப் பற்றிய ஆராய்ச்சியை காலேஜ் போர்ட் எனும் இணையத் தளத்தில் செய்கின்றனர். அந்த இணைய தளம், ஏழை மற்றும் தகவல் பற்றாக்குறை நிறைந்த மாணவர்களுக்கு அதிகப் பணம் வசூலிக்கும் இணையத் தளக் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை பரிந்துரைச் செய்கிறது. ஒரு மாணவர் (அல்லது அவரதுப் பெற்றோர்) இணைய தளக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தப் பின், அவர்களதுப் பொருளாதார நிலைமையை இணையத் தளக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ஆராய்கிறது. மாணவர்கள் (அல்லது அவர்களதுப் பெற்றோர்கள்) கொடுத்த வாழ்க்கைத் தகவல்களைப் பயன்படுத்தி, இணையத் தளக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் அவர்களுடையப் பொருளாதார நிலைமையைத் தெள்ளத் தெளிவாக அறிந்துக் கொள்கிறது. அமெரிக்க அரசாங்கம், தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 90-10 என்ற ஒரு விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்கா-வில் உள்ள கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்களுடைய நிதித் திரட்டலில் 90% மேல் அரசு மாணவர்களுக்கு அளிக்கும் பண உதவியின் பங்கு இருக்கக் கூடாது. இதனால், இணையத் தளக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்களிடம் வரும் மாணவர்களை அவர்களால் முடிந்த அளவு நிதியைத் திரட்டுமாறு நிர்பந்திக்கின்றனர். அந்த மாணவர்கள் திரட்டிய நிதி அளவை அரசிடம் காண்பித்து, மேலும் அதிக அளவு நிதியை அரசு அளிக்கும் மாணவக் கடன் திட்டங்கள் மூலம் சேகரிக்குமாறு ஊக்குவிக்கின்றனர். இணையத் தளக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடம் இருந்துப் பட்டப் படிப்பிற்கான கட்டணத்தைத் தங்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர். அரசிடம் வாங்கியக் கடனை அடைப்பது மாணவர்களின் பொறுப்பாகிறது. அமெரிக்கா-வில் மாணவர்களுக்காக அரசு வழங்கும் கடன் அந்த மாணவர் திவாலானாலும், கட்டாயமாகஅடைக்க வேண்டும். அமெரிக்கா-வில் சமூகக் கல்லூரிகள் குறைந்தச் செலவில் நல்லக் கல்வியை அளிக்கும் அதே நேரத்தில், ஏழை மாணவர்கள் இந்த நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
அமெரிக்கா-வில் உள்ள காவல்துறை, அவர்களின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட இடங்களில், கணித மாதிரிகள், கணிப்புப் பகுப்பாய்வு மற்றும் பிக் டேட்டா மென்பொருட்களை வெகுவாகப் பயன்படுத்துகின்றனர். காவல் துறையினர் பயன்படுத்தும் கணித மாதிரிகள், வன்முறை நிறைந்தக் குற்றங்களான கொலை, கலவரம் மற்றும் தாக்குதல்களை முன்னரே அறிந்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், அந்தக் கணித மாதிரிகளைப் பயன்படுத்தி, வன்முறை அல்லாத சிறியக் குற்றங்களான பிச்சை எடுத்தல், நாடோடித்தனம் மற்றும் சிறிய அளவில் போதைப் பொருள் வணிகம் போன்றவற்றையும் முன்னரேக் கண்டுப்பிடிக்கப் பயன்படுத்துகின்றனர். 1980-களில் நியூ யார்க் நகரத்தின் காவல் துறை கமிஷனர் பில் ப்ராட்டன்-ஆல் பிரபலப்படுத்தப்பட்ட உடைந்த ஜன்னல்கள் கோட்பாட்டின் விளைவாக  இந்த அணுகுமுறை இன்றுப் பெரும்பாலான அமெரிக்கக் காவல்துறைகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. பின்னர் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம், உடைந்த ஜன்னல்கள் கோட்பாட்டின் பலன் மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மை வெளிவந்தாலும், காவல்துறை மற்றும்  அரசியல்வாதிகளிடம் இந்தக் கோட்பாடுப் பிரபலமாக உள்ளது. எல்லா விதமானக் குற்றங்களும் பிக் டேட்டா மென்பொருட்களில் சேர்க்கப்படுவதால், மிகச் சிறியக் குற்றங்களுக்குக் கூட அதிக அளவில் காவல்துறையினர் அனுப்பபடுகின்றனர். உடைந்த ஜன்னல்கள் கோட்பாட்டின் ஆசிரியர்கள், அந்தக் கோட்பாடு, அந்தந்தச் சமூகத்தின் சட்ட ஒழுங்குத் தரநிலைக்கு ஏற்பச் செயல்படுத்தினால் அமோக வெற்றிப் பெரும் என்றுக் கருதினர். உதாரணத்திற்கு, நியூ ஜெர்ஸி மாநிலத்தில் ஒரு நகரில் உள்ள மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், போதைப் பொருளை வீட்டு வாசலில் உட்கார்ந்துக் கொண்டுப் பயன்படுத்தினால் தவறில்லை என்றுக் கருதினர். அதே போதைப் பொருளை உட்கொண்டதன் விளைவாக தெரு ஓரத்தில் வீழ்ந்துக் கிடந்தால், அவர்களைக் கைதுச் செய்ய வேண்டும் என்று அந்தச் சமூகம் விரும்பியதால், அங்குள்ளக் காவல்துறை அதைக் கணக்கில் வைத்துக் கொண்டு, அந்த நகரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். உடைந்த ஜன்னல்கள் கோட்பாட்டின்படி, ஒவ்வொருச் சமூகத்தில் உள்ளவர்கள் நிர்ணயித்தத் தரநிலையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், அதில் நிகழும் விதி விலக்குகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதக் குற்றங்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரிப்பதைப் பற்றி வினவினால், கணித மாதிரிகள் மூலம் ஆராய்வதற்கு நிறையத் தகவல்கள் தேவை என்றப் பதில் வருகிறது. சிறியக் குற்றங்களைக் கையாள்வதுச் சுலபம் என்பதால், அவர்களுடையச் செயல்திறனைச் சிறப்பான விதத்தில் காட்டுவதற்கு, காவல்துறையினர் அந்தத் தவறுகளைச் செய்யும் ஏழை மக்களைக் குறி வைக்கின்றனர். இதற்கு, நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. பிக் டேட்டா மென்பொருட்களைப் பயன்படுத்தி, ஏழ்மையில் வாழ்பவர்களைக் குற்றவாளிகளாக்குவதை காவல்துறையினர் அறிவியல் சார்ந்த அணுகுமுறையின் விளைவு என்றுக் கருதுகின்றனர். ஜனநாயகங்களில் உள்ள சட்டத் திட்டங்கள், மக்களை நேர்மையாகக் கையாள்வதைப் பிரதானமாகக் கொண்டுள்ளன. மக்களை மிகுந்தத் திறனோடு விரைவில் கையாள்வதை இரண்டாம் பட்சமாகக் கொண்டுள்ளன. இதை, 'பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதிச் சிறைப்படுத்தப்படக் கூடாது' என்ற ப்ளாக்ஸ்டோன் உருவாக்கத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். பிக் டேட்டா மென்பொருட்கள், இந்த அணுகுமுறைக்கு எதிர்மறையாகச் செயல்படுகின்றன. மக்களை நேர்மையாகக் கையாள்வது இரண்டாம் பட்சமாகி, அவர்களை விரைவாகத் தண்டிப்பதுப் பிரதானமாகியுள்ளது. பிக் டேட்டா மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகளை உருவாக்கும் தகவல் விஞ்ஞானிகள், சிறியக் குற்றங்களை தங்களுடையக் கணித மாதிரியில் சேர்க்கும் அதே நேரத்தில், நடுத்தர வர்க்க மற்று உயர்தட்டு மக்கள் செய்யும் பொருளாதாரக் குற்றங்களைத் தங்களுடையக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களை வெகுவாகப் பாதிக்காததால், நடுத்தர வர்க்க மற்றும் உயர்தட்டு மக்கள், பிக் டேட்டா மென்பொருட்களை காவல்துறையினர் பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் எதுவும் தெரிவிப்பதில்லை.
வேலைத் தேடுபவர்களின் விண்ணப்பங்கள், இன்றுப் பெரும்பாலும் பிக் டேட்டா மென்பொருட்களால் கையாளப்படுகின்றன. ஒரு வேலைக்கு வேண்டியவர்களை எடைப் போடுவதற்கு, ஆளுமைப் பரீட்சைகளை அளிப்பது வழக்கமாகி உள்ளது. கணிணி மென்பொருட்கள், வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர் அந்த நிறுவனத்தில் அந்த வேலையில் வருங்காலத்தில் எந்த அளவுத் திறனாளியாக இருப்பார் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம் என்பதால், மாற்றுப் பண்புகளைத் தங்களுடையக் கணித மாதிரியில் பயன்படுத்துகின்றன. அறிவாற்றல் சார்ந்தப் பரீட்சைகளும் குறிப்புச் சோதனைகளும் ஆளுமைப் பரீட்சைகளைக் காட்டிலும் அதிக அளவு வெற்றி விகிதம் உடையதாக இருக்கின்றன. ஆளுமைப் பரீட்சைகள் மிகவும் துல்லியமாக வேலைத் தேடுபவர்களின் திறனைக் கணிக்கும் என்றுக் கருதும் நிறுவனங்கள், அந்தப் பரீட்சைப் பற்றியத் தகவல்களை சுதந்திரத் தணிக்கையாளர்களிடம் அளிப்பதற்குத் தயங்குகின்றனர். இதற்கு மாறாக, பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பிக் டேட்டா மென்பொருட்கள், தாங்கள் பயன்படுத்தும் அளவுகோல்களையும் புள்ளி விவரங்களையும் வெளிப்படையாகப் பிரசுரிப்பதனால், அனைவரும் அதை அலசி ஆராயும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஆளுமைப் பரீட்சையினால் வேலைக்கு நிராகரிக்கப்பட்ட ஒருவர், வேறொரு நிறுவனத்தில், அதே வேலையை கனக் கச்சிதமாகச் செய்யும் பொழுது, பிக் டேட்டா மென்பொருட்களின் தீர்வுகளை மீண்டும் எடைப் போட்டு, எதனால் அந்தத் தவறு நடந்தது என்பதை அலசுவதில்லை. அதற்கு எதிர்மாறாக, பேஸ்பால் விளையாட்டில் பிக் டேட்டா மென்பொருட்களைப் பயன்படுத்தும் அணிகள், தங்களுடையக் கணித மாதிரிகளை மீண்டும் மீண்டும் அலசுகின்றன. பிக் டேட்டா மென்பொருளின் பரிந்துரையில் ஒரு அணி, தன்னிடம் இருக்கும் ஒரு விளையாட்டு வீரரை வேறொரு அணிக்கு அனுப்பி விடலாம். அந்த விளையாட்டு வீரர் புதிய அணியில் பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தால், அவரை இழந்தப் பழைய அணித் தங்களுடைய கணித மாதிரியில் எதனால் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது என்றுக் கடும் ஆராய்ச்சிச் செய்கிறது. இது, அந்த அணி, வருங்காலத்தில் அதேப் போன்றத் தவறுகளைச் செய்யாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கிறது. நிறுவனங்களில், பிக் டேட்டா மென்பொருட்கள் தங்களுடைய மனித வளர்ச்சித் தொழிலாளிகளை விட மலிவான விலையில் வேலையைச் செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் பிக் டேட்டா மென்பொருட்களில் பின்னூட்டம் அறவே இல்லாததால், அவற்றின் தீர்ப்புகள் நெகிழ்வற்றதாக இருக்கிறது. மேலும், இன்றையக் கால நிறுவனங்களில், பெரும்பாலானவை, தங்களுடையத் தொழிலாளிகளை எளிதாகக் கழட்டி விடக் கூடிய சொத்தாகக் கருதுவதால், பிக் டேட்டா மென்பொருட்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பெரிய நட்சத்திரமாகத் திகழும் விண்ணப்பதாரர்களைக் கைவிட்டதன் விளைவுகளைக் கண்டுக் கொள்ள முடிவதில்லை. வேலை விண்ணப்பங்களை நிர்வகிக்கும் பிக் டேட்டா மென்பொருட்கள் தர்க்க ரீதியில் செயல்படுவதனால், அவற்றின் தீர்ப்புகளை வெகு எளிதில் ஏமாற்ற முடிகிறது. வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது  , தன்னுடையத் திறமைகளைப் பெரிதுப்படுத்துவதற்கு அந்த நேரத்தில் பிரபலமாக் இருக்கும் தொழில் சார்ந்த சொற்றொடர்களைப் பயன்படுத்துவது அதற்கு உதாரணம். இன்று, வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை நிர்வகிக்க பிக் டேட்டா மென்பொருட்கள் மிகவும் அவசியம் என்ற நம்பிக்கை, 19-ஆம் நூற்றாண்டில் ஃப்ரெனாலஜி மேல் இருந்தப் பைத்தியத்திற்கு ஒத்து இருக்கிறது. ஃப்ரெனாலஜியில் ஒரு மனிதரின் ஆளுமையை, அவரது நெற்றியில் இருக்கும் மேடுப் பள்ளத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்
என்றுக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
வேலைக் கிடைத்தப் பின், தொழிலாளிகளின் வேலை அட்டவணை பிக் டேட்டா மென்பொருட்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. கணக்கு மாதிரிகளின் மூலம், அந்தந்த நேரத்திற்கு குறைந்தப்பட்ச தொழிலாளி எண்ணிக்கையை வைத்து அதிகப்பட்ச லாபம் கிடைப்பதற்கு வழி தேடுகிறார்கள். இதனால், தொழிலாளிகளின் அட்டவணைத் தாறுமாறாக வரையறுக்கப்பட்டு, அவர்களதுச் சொந்த வாழ்க்கைக்கு வேண்டியக் கவனத்தை அளிக்க முடியாமல் போகிறது. இதனால், தொழிலாளிகளின் குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். இந்த மாதிரி வேலை அட்டவணையை நிர்ணயிப்பதற்கு 'க்ளோபெனிங்க்' என்று அழைக்கப்படுகிறது - இரவு நேர வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, அந்தத் தொழிலாளியையேக் காலையில் கடைத் திறக்க வைப்பது. நிறுவனங்கள் தங்களுடையச் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதன் மூலம் பங்கு உரிமையாளர்களிடமிருந்து வெகுமதிப் பெறுகிறார்கள். இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகள்,
தொழிலாளிகளின் வேலை மற்றும் லாபத் திறனை அதிகரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது இந்தக் கணித மாதிரிகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.  ஆராய்ச்சியில், தொழிலாளிகள் சகத் தொழிலாளிகளுடன் வேலையைத் தவிர மற்ற விஷயங்களைக் கலந்துரையாடுவதன் மூலம், அவர்களது வேலைத் திறன் அதிகமாகிறது என்றக் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிக் டேட்டா மென்பொருட்களோ, தொழிலாளிகள் ஒவ்வொருவரும் தனித்து நிற்கும் நபர்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது லாபத் திறனை அதிகரிப்பதைப் பிரதானக் குறிக்கோளாகக் கருதுகிறது. தொழிலாளிகளின் வேலை அட்டவணையைக் கண்காணிக்கும் மென்பொருட்கள், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கணித மாதிரிகள், தொழிலாளிகளின் பின்னோட்டத்தை ஒருப் பொருட்டாக மதிப்பதில்லை என்பதால், நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமல் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள், தங்களுடைய கடன் நிலைமையை பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளில் பிக் டேட்டா மென்பொருட்களின் கட்டுக்குள் அடங்கியிருக்கின்றனர். முந்தையக் காலத்தில், அந்தச் சமூகத்தில் இருந்த வங்கி மேலாளர் தனக்குத் தெரிந்த மாதிரிகளைப் பயன்படுத்திக் கடன் வாங்குபவர்களை எடைப் போடுவார். இந்த மாதிரிகளில், மாற்றுப் பண்புகள் (வேலை நிலைமை, வீட்டு நிலைமை, இனம், மொழி)) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இதனால், பெண்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் வங்கி மேலாளரின் கவனத்திற்கு வருவதுக் கடினமாக இருந்தது. ஏர்ல் ஐஸாக் மற்றும் பில் ஃபேர் என்ற இருவர், ஃபைக்கோ எனும் புதிய மாதிரியை உருவாக்கினர். இதன் மூலம், கடன் வாங்குபவர்களின் கடன் அடைக்கும் திறனைக் கணிக்க முடிந்தது. இன்று அமெரிக்கா-வில் பயன்படுத்தப்படும் கடன் மதிப்பீட்டு அமைப்புகளான எக்ஸ்பீரியன், ட்ரான்ஸ் யூனியன் மற்றும் எக்விஃபாக்ஸ் ஃபைக்கோ மாதிரியை அடிப்படையாக வைத்து கடன் வாங்குபவர்களின் தரத்தை எடைப் போடுகின்றனர். பிக் டேட்டா-வில் பயன்படுத்தப்படும் கணித மாதிரிகள் சரியாக வேலைச் செய்வதற்கு ஃபைக்கோ ஒரு உதாரணமாகும். வாடிக்கையாளர்கள் கடன் வாங்கிக் கொள்முதல் செய்யும் தகவல்கள் சரியாக இல்லாத பொழுது, அதைப் பற்றி கடன் மதிப்பீட்டு அமைப்புகளிடம் முறையிட்டுத் திருத்தலாம். கடன் அளிக்கும் நிறுவனங்கள், கடன் வாங்குபவர்களின் தரத்தை ஃபைக்கோ மாதிரியின் மூலம் அறிந்து, நிஜ வாழ்க்கையில் கடன் வாங்குபவரது நடத்தையோடு ஒப்பிடலாம். ஃபைக்கோ இணையத் தளத்தில், கடன் வாங்குபவர்கள் தங்களுடையக் கடன் அடைக்கும் தரத்தில் முன்னேற்றம் அடையப் பல யுக்திகளைக் கற்றுக் கொள்ளலாம். சமீபக் காலமாக, பல நிறுவனங்கள், ஃபைக்கோ மாதிரியின் கடன் அடைக்கும் தரத்தை அடிப்படையாக வைத்துப் புதிய அளவுக்கோல்களைச் செயல்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு, நியூஸ்டார் எனும் நிறுவனம், தன்னுடைய சொந்த மாதிரியைப் பயன்படுத்தி (ஃபைக்கோ மாதிரியை அடிப்படையாக வைத்து) கால் ஸென்டர் நிறுவனங்களுக்கு அதிகப்பட்ச லாபம் கிட்டும் வாடிக்கையாளர்களைச் சுட்டிக் காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் இணையத் தளத்தில் க்ளிக் செய்யும் தகவல்களையும் அவர்கள் வாழும் நிலவியல் தகவல்களையும் மாற்றுப் பண்புகளாக இந்த மாதிரிப் பயன்படுத்துகிறது. உள்ளூர் வங்கி மேலாளர் பயன்படுத்திய மாதிரியில் மாற்றுப் பண்புகள் பயன்படுத்தியதால் ஏற்பட்டத் தவறுகளை ஃபைக்கோ மாதிரி நிவர்த்திச் செய்தது. ஃபைக்கோ மாதிரி வாடிக்கையாளர்கள் செய்யும் செலவுகளை வைத்து அவர்களது கடன் அடைக்கும் தரத்தை எடைப் போட்டது. புதிதாக உருவாக்கப்படும் மாதிரிகள் முந்தையக் காலத்து உள்ளூர் வங்கி மேலாளர் மாதிரியைப் போல் மாற்றுப் பண்புகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. வேலைக்கானப் பேட்டியை வெற்றிகரமாக முடித்து விட்டு வேலைக் கிடைத்ததாக உறுதிப்படுத்தும் தகவல் வருவதற்கு முன், ஃபைக்கோ தரநிலையை வைத்து எடைப் போடப்படுகிறார்கள். இதனால், ஏழ்மையில் உழல்பவர்கள் மோசமானச் சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறார்கள் - குறைந்த ஃபைக்கோ தரநிலையினால் வேலைக் கிடைக்காமல் திணறும் பொழுது, வேலைக் கிடைக்காததனால், அதிக வட்டி அளிக்கும் கடன்களை வாங்கித் தங்களுடைய ஃபைக்கோ தரநிலையை மேலும் குறைத்துக் கொள்கின்றனர். இன்றையக் காலத்தில், நிறுவனங்கள் எல்லா வகையான வாடிக்கையாளர் நடத்தைகளையும் கண்காணித்து அதைப் பற்றியத் தகவல்களைச் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் கடன் அடைக்கும் திறனை எடைப் போடுகின்றனர். உதாரணத்திற்கு, ஸெஸ்ட் ஃபைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் கடன் அடைக்கும் தரநிலையை எடைப் போடுவதற்குப் பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர் தங்கள் தொலைபேசியின் கட்டணத்தைக் கட்டினார்களா இல்லையா என்பதுக் கூட இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அந்தந்த நிறுவனம் சொந்தமாக கணித மாதிரியைப் பயன்படுத்துவதால், தவறாகக் கணிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தவறுகளை திருத்தக் கோரும் வாய்ப்பு அறவே இல்லை.
காப்பீடு, ஐரோப்பா-வில் நடுத்தர வர்க்க மக்கள் செல்வச் செழிப்பை அடைய ஆரம்பித்தப் பொழுது வருங்காலத்திற்காகத் திட்டமிடும் ஆர்வத்தின் விளைவாக முதலில் உருவாக்கப்பட்டது. லண்டன் நகரில் ஜவுளி வியாபாரியாக இருந்த ஜான் க்ராண்ட் என்பவர் அங்குள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை அலசி 1682-ஆம் ஆண்டில் உலகின் முதலான  இறப்பு விகிதத்தைக் கணக்கிட்டார். காப்பீட்டு நிறுவனங்களுக்கு, தனி மனிதர்களின் விதியை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இல்லை. மக்களை பல்வேறுக் கூட்டங்களாகப் பிரித்து, அவற்றிற்குள் மனித வாழ்வில் சோக
நிகழ்ச்சிகளான விபத்துகள் மற்றும் இறப்புகளின் சாத்தியக் கூறுகளைக் கணிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். பிக் டேட்டா மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் சார்ந்திருக்கும் கூட்டத்தின் அளவை மேலும் சிறிதாக்கித் தங்களுக்குத் தேவையான வகைகளை உருவாக்குகின்றனர். வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களின் ஆபத்து நிலையைக் கணிப்பதற்கு, காப்பீட்டு நிறுவனங்கள், பல வித மாற்றுப் பண்புகளைப் பயன்படுத்துகின்றன. மக்கள் தொகைத் தகவல்கள், கடன் அடைக்கும் தரநிலை போன்றவை இவற்றில் அடங்கும். ஓட்டுநர்களின் வாகன ஓட்டும் திறனைக் காட்டிலும் இந்த மாற்றுப் பண்புகள் காப்பீட்டைக் கணிப்பதில் அதிகப் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, ஃப்ளோரிடா மாநிலத்தில், சுத்தமான ஓட்டுநர் வரலாறு இருந்து குறைந்தக் கடன் அடைக்கும் தரநிலை இருப்பவர்கள், மிக அதிகமான கடன் அடைக்கும் தரநிலையும் குடித்து விட்டு ஓட்டியதற்காகத் தண்டிக்கப்பட்ட ஓட்டுநர்களை விட சராசரி $1552 அதிகமாகக் காப்பீட்டுக் கட்டணம் கட்டுகின்றனர். இதுக் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் கூட்டும் அணுகுமுறைக்குச் சாதகமாக அமைகிறது. செல்வச் செழிப்பு உள்ளவர்களின் காப்பீட்டுக் கட்டணத்தை அதிகரித்தால் பணப் பலத்தைப் பயன்படுத்தி அந்த அதிகரிப்பை எதிர்ப்பதற்கு சட்ட் ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறுச் சட்ட ரீதியாக எதிர்ப்பது, கடன் அடைக்கும் தரநிலைக் குறைவாக இருப்பவர்களுக்கு உதவாது.  பலக் காப்பீட்டு நிறுவனங்கள், வாகனங்களுக்குள் ஓட்டுநர்களின் ஓட்டும் திறனைக் கண்காணிப்பதற்காக ஒரு சிறியக் கருவியைப் பொருத்துகின்றனர். அதற்குப் பதில், அந்த ஓட்டுநர்களின் காப்பீட்டுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி, வாகன ஓட்டுநரின் நிலவியல், ஓட்டும் முறை, ஓட்டும் அளவு போன்றத் தகவல்களைச் சேகரிக்கின்றனர். இது ஏழை மக்களுக்குப் பல சங்கடங்களை அளிக்கிறது - அவர்களது வேலையின் அட்டவணைத் தாறுமாறாக இருப்பதினால், அவர்கள் வாகனம் ஓட்டும் நேரமும் தாறுமாறாக இருக்கிறது. இதனால், காப்பீட்டு நிறுவனங்கள், ஏழை மக்களின் காப்பீட்டுக் கட்டணத்தை அதிகரிக்கின்றனர். இன்று, இந்தக் கருவியை ஓட்டுநர்களின் சம்மதத்தோடு அளித்தாலும், வருங்காலத்தில் ஓட்டுநர்களின் நடத்தைப் பற்றி அதிகத் தகவல்கள் கிடைத்தவுடன், இந்தக் கருவியை எல்லா ஓட்டுநர்களும் அவரவர் வாகனங்களில் கட்டாயமாகப் பொருத்த வேண்டும் என்று நிபந்தித்து, அதற்கானச் சலுகைகளையும் நிறுத்தும் அபாயமும் இருக்கிறது. அந்தக் கருவியைப் பயன்படுத்த மாட்டோம் என்று எதிர்ப்பவர்களிடம் இருந்து அதிகக் காப்பீட்டுக் கட்டணம் வசூலிப்பார்கள். செல்வச் செழிப்புடைய மக்கள், தங்களுடையத் தனியுரிமையைப் பாதுகாக்க அதிகக் காப்பீட்டுக் கட்டணத்தை அளிக்க முடியும். ஆனால், ஏழை ஓட்டுநர்களுக்கு அந்தக் கட்டண உயர்வு அவர்களின் நிதி நிலைமையை மேலும் கஷ்டத்தில் தள்ளும்.
மகத்தானக் கணிணி மென்பொருள் நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உருவாக்கும் மென்பொருட்கள் கணிதத்தால் அழிவை உண்டாக்கும் ஆயுதங்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்தும் கணித மாதிரிகளின் விவரங்களை வெளியிட மறுக்கின்றன - கூகுள் தன்னுடைய தகவல் தேடும் வழிமுறையையும், ஃபேஸ்புக் தனது செய்தித் தகவல்களைத் தரநிலைப்படுத்தும் வழிமுறையையும் தங்களுடைய நிறுவனங்களின் பிரத்தியேகச் சொத்து என்றுக் கருதி வெளியிட மறுக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் உலகெங்கும் பலக் கோடி மக்களைத் தங்களது வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களின் மென்பொருட்களிலும் ஒரு நபரைப் பற்றி எதிர்மறைத் தகவல்கள் வெளிவந்தால், அவர்களது நிஜ வாழ்க்கைச் சின்னாப்பின்னமாகிறது. 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்கத் தேர்தலில், ஃபேஸ்புக் வாக்காளர்கள் ஓட்டுப் போடும் விகிதத்தை அதிகரிக்கப் பலச் சோதனைகளை நடத்தியது. இதன் விளைவாக, அந்த வருடங்களில் நிகழ்ந்த அமெரிக்கத் தேர்தலில் 340,000 அதிக மக்கள் வாக்களித்ததாக ஃபேஸ்புக் அறிவித்தது. ஜனநாயகத்தில் தேர்தல்கள் தனியார் நிறுவனங்களின் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கின் இந்தச் சோதனைகள் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கின. ருஷ்யா, ஃபேஸ்புக்கின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமாகத் தலையிட்டது. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதனை நடுநிலையானத் தரகர் என்றுக் கருதுகின்றனர். ஆனால், ஃபேஸ்புக் பங்குச் சந்தையை நம்பியத் தனியார் நிறுவனம் என்பதால்,  அதன் லாபத்தை அதிகரிக்கத் தேவையானத் தேர்வுகளைத் தனது செய்தித் தகவல் தரநிலையில் செய்கிறது. இந்தப் புத்தகம் 2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டானல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெறுவதற்கு முன் எழுதப்பட்டதால், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் செயல்களை நடுநிலையோடு அணுகுகிறது.  பிக் டேட்டா மென்பொருட்கள் மூலம் அரசியல்வாதிகள், வெவ்வேறு வாக்காளர்களுக்கு அவர்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் விதவிதமான செய்திகளை அளிக்கிறார்கள். ஃபேஸ்புக்கின் தலையீட்டால் தான் டானல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார் என்று டெமோக்ராட் கட்சிப் புலம்பினாலும், அவர்களும் பிக் டேட்டா மென்பொருட்களைப் பயன்படுத்திப் பல அரசியல் வெற்றிகளை அடைந்துள்ளனர். ஒபாமா மற்றும் ஹில்லரியின் அரசியல் ஆதரவு அமைப்புகள், தங்களுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பிக் டேட்டா மென்பொருட்களைப் பயன்படுத்தினர். அமெரிக்க அரசியலில் எல்லா இடுக்குகளிலும் பிக் டேட்டா மென்பொருட்கள் மூலம் வாக்காளர்களுக்கு வேறுபடும் செய்திகளை அளிப்பதனால், ஜனநாயகத்தின் பயன் குறைந்துள்ளது. ஜனநாயகத்தில், மக்களிடையே இருக்கும் குறைகளை நிவர்த்திச் செய்ய அவர்கள் ஒன்றுக் கூடி எதிர்ப்புத் தெரிவித்தால் தான் அந்தக் குறிக்கோளை அடைய முடியும்.
பிக் டேட்டா மென்பொருட்களின் தீய விளைவுகளைக் குறைக்க ஆசிரியர் மக்களுக்குப் பலப் பரிந்துரைகள் அளிக்கிறார். தகவல் துறை விஞ்ஞானிகள், மருத்துவத் தொழிலில் தீங்குச் செய்யக் கூடாது என்பதற்காக ஹிப்போக்ரேட்டிக் ஓத் இருப்பது போல், தங்களுடையத் துறையிலும் மக்களின் தகவல்களை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். லாபம் மற்றும் செயல்திறனை அதிகரிப்பது போன்றக் குறிக்கோள்களோடு பொது நலம் மற்றும் நியாயம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறுகிறார். பிக் டேட்டா மென்பொருட்களின் 'அடிப்படையாக இருக்கும் கணித மாதிரிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கத் தணிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பல கணித மாதிரிகள் நிறுவனங்களின் பிரத்தியேகச் சொத்தாகக் கருதப்படுவதனால், அவற்றின் விவரங்கள் வெளியே வராதப் பட்சத்தில், அந்த மாதிரிகளின் வெளிப்பாடுகளை வைத்து அவற்றின் வழிமுறைகளைக் கணித்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறுகிறார். சிலத் துறைகளில் பிக் டேட்டா மென்பொருட்கள் மிகப் பயனுள்ளதாக இருந்தாலும், பலத் துறைகளில் அவை மிகவும் எளிமையானக் கருவிகளாக இருக்கின்றன. அரசாங்கங்கள் பிக் டேட்டா மென்பொருட்களின் தீர்வுகள் மக்களின் வாழ்க்கையைக்
கெடுக்காமல் இருப்பதற்கு, கோட்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அமெரிக்கா-வில் மாற்றுத் திறனாளிகளுக்காக இயற்றப்பட்ட அமெரிக்கன்ஸ் வித் டிஸெபிலிட்டிஸ் சட்டம் மூலம், பிக் டேட்டா மென்பொருட்களினால் செயல்படுத்தப்படும் ஆளுமைப் பரீட்சைகள் மற்றும் உடல் நல மதிப்பெண்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றுப் பரிந்துரைக்கிறார். தொழிலாளிகளின் உடல் நலம் பற்றியத் தகவல்களைச் சேகரிக்கும் பட்சத்தில், அவற்றைச் சேகரிப்பவர்கள், அமெரிக்கா-வின் ஹிப்பா சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுக் கூறுகிறார். ஐரோப்பா-வில் சமீபத்தில் இயற்றப்பட்ட தகவல் தனியுரிமைச் சட்டமான ஜி.டி.பி.ஆர் போல் அமெரிக்கா-விலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுக் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
யூ ஆர் நாட் ஏ கேட்ஜெட்: அ மானிஃபெஸ்டோ - ஜரான் லானியர்
டூ ஸேவ் எவெரிதிங்க் க்ளிக் ஹீயர் - தி ஃபாலி ஆஃப் டெக்னலாஜிகல் ஸோல்யூஷனிஸம் - எவ்கெனி மரஸோவ்
டேட்டாக்லிஸம்: லவ், ஸெக்ஸ், ரேஸ், ஐடென்டிட்டி -- வாட் அவர் ஆன்லைன் லைவ்ஸ் டெல் அஸ் அபௌட் அவர் ஆஃப்லைன் ஸெல்வ்ஸ் - க்றிஸ்டியன் ரட்டர்
ஆல் யூ கேன் பே: ஹவ் கம்பெனிஸ் யூஸ் அவர் டேட்டா டூ எம்ப்டி அவர் வாலட்ஸ் - ஆனா பெர்னாஸெக், டி.டி.மொங்கன்

No comments: