களவாணிக் கூட்டம்

சுருக்கம்:
ஆங்கிலேயர் இந்தியாவை 1764-இலிருந்து (பக்ஸார் போரில் வங்காளத்தின் நவாப் மிர் காஸிம் மற்றும் முகலாய பேரரசர் ஷா ஆலம் II அணியை தோற்கடித்ததன் மூலம்) 1947 வரை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி மூலம் ஆதிக்கம் செலுத்தி ஆண்டு வந்தனர். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி வருவாயை தனது இருத்தலியல் காரணமாகக் கொண்டதனால் , இதர அம்சங்களுக்கு (அரசியல், பொருளாதாரம், ராணுவம், சட்டம், தொழில் நுட்பம்) ஆங்கிலேயரின் ஆட்சியில் இடமில்லை. ஆங்கிலேயர் கண்களில் தெற்கு ஆசியா தங்களுடைய பேரரசின் (வருவாய்)  கீரிடமாக மின்னியது. இந்தப் புத்தகத்தில்ப, ஆங்கிலேயர், தீவிரக் கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை, தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள மக்களைப் பற்றிய அறியாமையினாலும் அந்த மக்களின் உள்ளீடு இல்லாமலும், செயல்படுத்தினர். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு அது சாதகமாக இருந்தாலும், தெற்கு ஆசியாவை அரசியல், பொருளாதார, ராணுவ, சட்ட, மனிதாபிமான ரீதியில் நிலைகுலைய வைத்தது. அப்படி பார்ர்கும் பொழுது, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் அரசியல், பொருளாதார மற்றும் தார்மீக அடிப்படையில் ஒரு மகத்தான தோல்வியாகத் தான் தோன்றுகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சியில் இழந்த மக்களின் எண்ணிக்கையும் அவர்கள் ஆட்சி முற்றியவுடன் தெற்கு ஆசியாவில் பெரிய அளவில் பஞ்சம் எதுவும்  தலைவிரித்து ஆடவில்லை என்பதும்  பிரிட்டிஷ் ராஜ்-இன் கொடுமையானப் போக்கின் சான்றிதழாகும்.  பெரிய பஞ்சங்களை கணித்துப் பார்க்கும் பொழுது, ஆங்கிலேயரின் அலட்சியப் போக்கும் கொடுமை நிறைந்த கோட்பாடுகளும் பஞ்சத்தின் தீவிரத்தை குறைக்க உதவும் எதிர்நடவடிக்கைகள் இல்லாததும் 5 கோடி உயிர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது (போதிய ஊட்டச்சத்து இல்லாத்தால் தனி மனித சாத்தியத்தின் அழிவைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும்). இது ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் ஒரு வருஷத்திற்கு 273200 இறப்புகள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 31 இறப்புகள் என்ற எண்ணிக்கை கொள்ளலாம். நாட்ஸி ஜெர்மனி யூதர்களை அழித்ததை விட இந்து குறைய அளவாகும் (4 வருடங்களில் 0.6 கோடி உயிர்கள் அழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கு 171 உயிர் இழப்புகள்).வரலாற்றில் கொடுமைக்குப் பெயர் போன ராஜ்யங்களான சோவியத் யூனியன், சீனா மற்றும் ஜெர்மனி-உடன் பிரிட்டன்-உம் அடங்கும். தெற்கு ஆசியாவின் உயிர் இழப்பின் எண்ணிக்கை பஞ்சத்தினால் மட்டும் நிகழ்ந்ததாகும் (ஆங்கிலேயரின் கொடுமைகள் மற்றும் தெற்கு ஆசியா முழுக்க நடந்த போர்களில் நேர்ந்த உயிர் இழப்புகளைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்).
அலசல்:
ஐரோப்பா-வின் ஆட்சி இந்தியாவிற்கு 1500-களில் முதலில் போர்த்துகீசியர்-இல் ஆரம்பித்து, 1600-களில் டச்சு-இனால் தொடரப்பட்டது. இந்தியாவின் மேற்குக் கடலோரத்தில் போர்த்துகீசியர் தங்கள் ஆட்சியை நிலை நாட்டினர். டச்சு மற்றும் ஆங்கிலேயர் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரத்தின் மீது கண் வைத்தனர். நிலவியலினால் மேற்கு தொடர்ச்சி மலை ஒரு சுவர் போல் அமைந்ததால் போர்த்துகீசியர் அந்த கடற்கரையில் உள்ள சிறிய ராஜ்யங்களை தங்களது கடற்படை மூலம் அடக்கி அங்கு தழைத்த மசாலா பொருட்களின் வணிகத்தை ஆண்டு வந்தனர். இந்தியாவின் கிழக்குக் கடலோரம் பல நதிகள் மூலம் உள்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தது. அதனால், ஆங்கிலேயர், போர்த்துகீசியரைக் காட்டிலும் பரவலான பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முடிந்தது. ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி இந்திய வணிகத்தின் ஏகபோக உரிமையை ஆங்கிலேய அரசிடம் இருந்து பெற்றதினால், மற்ற வணிகப் போட்டியாளர்களின் (தனிப்பற்ற ஆங்கிலேய வணிகர்கள் உட்பட) மேல் நிபந்தனைகளை விதித்தது. இந்தியாவை 1500-களில் இருந்து கூட்டணி முறையில் ஆண்டு வந்த முகலாயப் பேரரசு (பெர்சிய மொழியில் மங்கோல் என்பது முகலாயர் என்று ஆனது) சட்ட மற்றும் வருவாய் அமைப்புகளை தெற்கு ஆசியா முழுவதும் நிறுவியிருந்தது. ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியின் ஏகபோக உரிமை, முகலாயப் பேரரசின் வருவாயைக் குறைத்தது. அதனால், முகலாயப் பேரரசு ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி முகலாயரிடம் 'அடிபணிந்து' போவதை விரும்பவில்லை. அதனால், தங்கள் வணிகத்தில் ஈடுப்பட்ட இடங்களில், முகலாயர் தடை இல்லாமல் இருக்க, தங்களுடைய பாதுகாப்பிற்காக கோட்டைகளை எழுப்பினர். வெளிநாட்டில் இருந்ததால், தங்களது பாதுகாப்பை கருதி கோட்டைகளுக்குள் ஆயுதங்களை குவித்து வைத்திருந்தனர். இதனால், அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் பொழுது மற்ற தெற்கு ஆசிய வணிகர்களுடன் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது. ஒரு முறை, ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி மசாலா வணிகம் நடத்துவதற்குக் பயன்படுத்திய அஞ்செங்கோ கோட்டையிலிருந்து ராணுவக் கட்டமைப்பில்  அட்டிங்கல் நாட்டின் அரசி அமுதாம்பரன்-இடம் வாடகைக் கட்டச் சென்றனர். அந்த நாட்டை ராணி அமுதாம்பரன், ராணி அஸ்வதி-க்குப் பின் ஆண்டு வந்தார்.  சில நாட்களுக்கு முன், அங்குள்ள தெற்கு ஆசிய வணிகர் ஐரோப்பா-வைச் சார்ந்த ஒரு பெண்ணை கொன்றதால், அந்த நாட்டின்  நிலைமை பதற்றமாக இருந்தது. அதனால், ஆங்கிலேயர், ராணி அமுதாம்பரன்-ஐ மிரட்ட இவ்வாறு சென்றனர். அதே சமயத்தில், அங்கு இருந்த சில குடிப்படைகள் அஞ்செங்கோ கோட்டையில் இருந்த அனைவரையும் கொன்றனர். இதனால் கோபமுற்ற ஆங்கிலேயர், அஞ்செங்கோ கோட்டையை முற்றுகை இட்டனர். மராத்தா நாட்டுடன் போர் நடந்து கொண்டிருந்ததால், தங்களது முற்றுகையை சில நாட்களுக்குப் பின் கைவிட்டனர். அந்த முற்றுகையை ராணி அமுதாம்பரன்
தாக்குப்பிடித்தாலும், அவர் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தார் என்பதால் அவரது ஆட்சிக் காலம் வெகு நாள் நீளவில்லை.
1700-களின் ஆரம்ப காலத்தில், இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகள்  மராத்தா-க்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களது அரசர், ஷாகு(சத்ரபதி சிவாஜி-யின் பேரன்) தனது பேஷ்வா (தலைமை நிர்வாகி) பாலாஜி விஷ்வநாத் உதவியுடன் ஆண்டு வந்தார். அன்றைய காலத்தில், அரபிக் கடலில் மராத்தா ராஜ்யத்தின் கடற்படை-யின் தலைவர் கனோஜி அங்க்ரே ஆங்கிலேயர், போர்த்துகீசியர் மற்றும் எத்தியோப்பியர் (சிதி காஸிம்)-களின் கடற்படைகளை பின்வாங்கச் செய்தார். இது 1730-களில் நடந்த ஆங்கிலேய மராத்தா போர்களில் அடங்கும். ஐரோப்பா-வின் நாடுகள் தெற்கு ஆசியாவில் நுழைந்ததனால், தெற்கு ஆசியாவில் இருந்த ராஜ்யங்கள் போர் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் ஒருங்கிணைந்து செயல்பட முயன்றன. இதனால், தெற்கு ஆசியாவின் மேற்கில் மராத்தா-க்களும் கிழக்கில் வங்காளமும் அவத்-உம் தெற்கில் ஆற்காட்டுன் தென்கிழக்கில் ஹைதராபாத்-உம் பெரிய ராஜ்யங்களாக உருவெடுத்தன. நிர்வாகத்தை மத்தியப்படுத்தியும், வணிகர்களுக்கு கடன் வலைப்பின்னல்கள் ஏற்படுத்தியும் உள்நாட்டில் நல்ல உறவுகள் ஏற்படுத்தியும் தங்களது ஆட்சியை மேம்படுத்தின. மராத்தாக்களின் ஆட்சி நிலம் மற்றும் கடலைச் சார்னததாக இருந்தது. முகலாயர்களின் ஆட்சி நிலத்தை மட்டும் சார்ந்து இருந்தது. இதனால், முகலாயர்களை ஆங்கிலேயர் தோல்வி அடைய வைத்தது சுலபமாயிற்று.
1739-இல் நாதிர் ஷா டில்லி மீது படையெடுத்து முகலாயர்களை தோற்கடித்து முகலாயப் பேரரசராக ஆண்டார். பிறகு, புகழ் பெற்ற மயில் சிம்மாசனத்தை தன்னுடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எடுத்துச் சென்றார். இதற்குப் பின், முகலாயப் பேரரசின் நம்பகத்தன்மை அழிந்ததனால், அதன் மேல் சார்ந்திருந்த வணிகர்களின் கடன் வலைப்பின்னல்கள் முறிந்தன. பொதுநலனுக்குத் தேவையான நிதியளவும் குறைந்தது. முகலாயத் தலைமையை ஏற்றிருந்த தெற்கு இந்திய ராஜ்யங்களின் கருவூலங்கள் இதன்பின் காலியாகின. இதையடுத்து, அந்த ராஜ்யங்கள், தங்கள் மக்களிடம் இருந்து சூறையாடி தங்கள் வருவாயை மேம்படுத்தினர். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி ஊழியர்கள், நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளிலிருந்து வணிகர்களுக்கும் மற்ற ராஜ்யங்களுக்கும் கடன் அளித்து தங்களது ஆதரவை கூட்டிக் கொண்டனர். லண்டனின் பங்குச் சந்தையில் இருந்து கடன் மூலம் நிதி திரட்டவும் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியால் தங்களுடைய ராணுவத்தையும் வணிக வலைப்பின்னல்களையும் பராமரிக்க முடிந்தது. முகலாயப் பேரரசு டில்லியில் சோர்ந்து போய் அரசாண்டது.
வங்காளத்தின் நவாப், ஷுஜா உத்-தின் நாதிர் ஷா-வின் படையெடுப்புக்கு 5 மாதங்களுக்குப் பின் மரணமடைந்தார். அவருக்குப் பின், அவருடைய முந்தைய நாளில் வேலைக்காரனாக இருந்த அலிவர்தி கான் அந்த நாட்டின் அரசர் ஆனார். 1756-இல் 80 வயதாகும் பொழுது அவர் மரணமடைந்ததால், ஷுஜா உத்-தின்-இன் பேரன் சிராஜ் உத்-தௌலா அரசர் ஆனார். ஆற்காட்டில், அரசப் பதவியைப் பிடிக்க, சந்தா சாஹெப்-உம் ஆற்காட்டு நவாப்-உம் போட்டியிட்டனர். சந்தா சாஹெப்-உக்கு ஃப்ரெஞ்ச் உறுதுணையும் ஆற்காட்டு நவாப்-உக்கு பிரிட்டிஷ் உறுதுணையும் இருந்ததால் இருவரும் சமநிலையில் இருந்தனர். மராத்தாக்களின் உதவியால் சந்தா சாஹெப்-ஐ தோற்கடித்து ஆற்காட்டு நவாப் அரசர் ஆனார். ஒவ்வொரு முறை ஆங்கிலேயர் உதவி அளித்த பக்கம் வென்ற போது, அவர்கள் தங்களுக்கு வருவாய் தரும் நிலங்களை கூட்டிக் கொண்டே சென்றனர். வடக்கில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பெர்ஷியா-வில் இருந்து மலைச் சாரல்களிலிருந்து வீரர்கள் டில்லி-யை நோக்கிப் படையெடுத்தனர். அதனால், 1757-இல் வங்காளத்தின் நவாப்-ஆக இருந்த சிராஜ் உத்-தௌலா ஆங்கிலேயரை தன் பக்கம் வைத்துக் கொள்ள கல்கத்தா-வின் மீது போர் தொடுத்தார்.ராபர்ட் க்ளைவ் ஆங்கிலேயர் படையுடன் சென்று ப்ளாஸி என்ற இடத்தில் சிராஜ் உத்-தௌலா-வை வென்றார். இந்த வெற்றி, சிராஜ் உத்-தௌலா-வின் தளபதியான மிர் ஜாஃபர்-இன் சூழ்ச்சியினால் ஆங்கிலேயருக்குக் கிட்டியது. மிர் ஜாஃபர் சில நாட்களுக்கு நவாப்-ஆக இருந்த பின், ஆங்கிலேயர் அவரை சிம்மாசினத்தில் இருந்து இறக்கி மிர் காஸிம்-ஐ நவாப்-ஆக முடிசூட்டினர்.
1764-இல் பக்ஸார் என்ற இடத்தில் மிர் காஸிம் மற்றும் முகலாய பேரரசர் ஷா அலாம் II-இன் இணைந்த படையை ஹெக்டர் முன்ரோ தலைமையில் இருந்த ஆங்கிலேயப் படை தோற்கடித்தது. இந்த போரில், முன்ரோ, சிப்பாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களில் 20 பேரை பீரங்கி வாயில் கட்டி வைத்து சுட்டார். இந்த வெற்றிக்குப் பின், ஆங்கிலேயர் வங்காளத்தின் வருவாய் திரட்டும் பிரதிநிதிகளாக ஆனார்கள். 1761-இல் மூன்றாவது பானிபட் போர்-இல் ஆஃப்கானிஸ்தான்-இல் இருந்து படையெடுத்த அஹ்மத் ஷா துர்ரானி-இடம் மராத்தாக்களின் படை பெரும் தொல்வி அடைந்தது. பெரிய சக்திகளாக இருந்த முகலாயர், மராத்தாக்கள் மற்றும் சீக்கியர் தழுவியத் தோல்விகளினால், ஆங்கிலேயர் தெற்கு ஆசியாவின் முடிசூடா மன்னர்கள் ஆனார்கள். ஆனால், தங்களது சொந்த கருத்தில், தங்களை வருவாய் நிதி திரட்டும் பிரதிநிதிகளாகவே கருதினர்.
ராபர்ட் க்ளைவ் ஒபியம் மிகுந்த அளவு உட்கொண்டபடியால் 1774-இல் மரணம் அடைந்தார். முதல் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்-ஆக வாரன் ஹேஸ்டிங்க்ஸ் 1772-இல் பதவி ஏற்றார். அவருக்குப் பின், லார்ட் கார்ன்வால்லிஸ் கவர்னர் ஜெனரல்-ஆக நியமிக்கப் பட்டார். இந்தியாவுக்கு வரும் முன், கார்ன்வால்லிஸ் அமெரிக்கா-வின் விடுதலைப் போராட்டம் முற்றிய போரில் ஜார்ஜ் வாஷிங்க்டன்-இடம் 1781-இல் தோல்வி அடைந்திருந்தார். கார்ன்வாலிஸ் 1793-இல் பெர்மனென்ட் செட்டில்மென்ட்  என்ற பெயரில் புதிய அணுகுமுறையை உருவாக்கினார். இதனால், தெற்கு ஆசியாவில் ஆங்கிலேயர்களின் கட்டுக்குள் இருந்த நிலங்களில் அங்குள்ள  நிலக்கிழார்களுக்கு (ஜமீந்தார்) அதன் உரிமைகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தார்.  அந்த ஜமீந்தார்கள், மாதந்தோறும் ஆங்கிலேய கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு குறிப்பிட்ட வரிக் கட்ட வேண்டும் என்று அறிவித்தார். இந்த வரிக் கணக்கில் நெகிழ்வு எதுவும் இல்லாத்தால், ஜமீந்தாரர்கள் தங்களுடைய நிலத்தை இழக்க வேண்டியதாயிற்று.  மேலும், ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி விதிக்கும் வரி அளவினை முன்னமே அறிந்து கொள்ள ஜமீந்தார்கள் கம்பெனியின் ஊழியர்களை லஞ்சம் கொடுத்தனர். இந்த தகவல் சமநிலையற்ற தகுதியினால், ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியில் இருந்த தெற்கு ஆசிய ஊழியர்கள் பல நிலங்களையும் எஸ்டேட்களையும் உயர்குடி மக்களிடம் இருந்து தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர்.
1798-இல் நடந்த நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்-இல், திப்பு சுல்தான்  மரணமடைந்தார். அதன் பிறகு, ஆங்கிலேயர் மைசூர் ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வோடையார் வம்சத்தை அமர்த்தி அந்த ராஜ்யத்தின் வருவாய் நிதி திரட்டும் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டது. இன்று கேரளாவாக இருக்கிறப் பகுதியில் பழஸி வர்மா ராஜா-வும், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன்-உம் நடத்திய போர்கள், திப்பு சுல்தானின் மறைவினாலும் ஜமீந்தார்கள் மூலம் வருவாய் திரட்டும் அமைப்பினாலும் நிகழ்ந்தது தான்.  1799-இல் இருந்து 1801 வரை நடந்த பொலிகர் போர்களில் (பாளையக்காரர்கள் போர்) , ஆங்கிலேயர் கொடுமையான செயல்களை பொது மக்கள் முன்னிலையில் செய்து எஞ்சி இருந்த எதிர்ப்பை அழித்தனர். 1803 அஸ்ஸய்-இல் முற்றிய ஆங்கிலேய மராத்தாக்களின் போரின் முடிவில், மராத்தாக்களின் படைத் தோற்ற பின், ஆங்கிலேயர், வருவாய் திரட்டும் முறையை மீண்டும் மாற்றினர். ஸர் தாமஸ் முன்ரோ-ஆல் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, ரயட்வாரி என்று அழைக்கப்பட்டது. இதனால், வரியை ஆங்கிலேயர் விவசாயிகளிடம் ('ரயட்கள்') இருந்து நேராக திரட்டும் முறை செயல்படுத்தப்பட்டது. ஸர் தாமஸ் முன்ரோ, தெற்கு ஆசியாவின் கிராமங்கள், பண்டைய காலத்தில் சுயபோதுமான நிலையில் இருந்ததாகவும் (மோஹந்தாஸ் காந்தியும் பின்னாளில் இந்த வாதத்தை முன் வைத்தார்), பாளையக்காரர்களும் ராஜாக்களும் அதனை பறித்ததாகவும் குற்றம் சாட்டினார். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி பல நெருக்கடிகளை சந்தித்தவுடன், பிரிட்டிஷ் பாராளூமன்றம் 1833-இல் சார்டர் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், தெற்கு ஆசியாவில் ஆங்கிலேயர் கீழ் இருந்த பகுதிகளில், சட்டம் மற்றும் நிதித் துறை மத்தியமையாக்கப்பட்டு, வருவாயும் நிர்வாகமும் கவர்னர் ஜெனரல் ஆஃப் இந்தியா கவுன்சலின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தெற்கு ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சியின் ஊழியர்களைத் தேர்வு செய்ய பரீட்சைகளும் கொண்டு வரப்பட்டன.
1857-இல் நடந்த, முதலாம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டன் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. தெற்கு ஆசியா உள்கட்டமைப்புகளில் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு பின் தங்கி இருந்ததால், பிரிட்டிஷ் அதிகாரிகள் பொது நிலையத் துறையை உருவாக்கினர். பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு நிதி ஒதுக்காமல் இருந்ததால், உள்கட்டமைப்பு கட்டுவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் ஆங்கிலேய ஊழியர்களை பயன்படுத்த முடியாமல் போயிற்று. அதன் விளைவாக, தெற்கு ஆசியாவில் உள்ளவர்களை நீர்வளம் மற்றும் ரெயில் பணிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தெற்கு ஆசியாவில் உள்ள மக்களுக்கு சட்ட ஒழுங்கு பராமரிக்க, கோட் ஆஃப் சிவில் ப்ரோசிஜர் 1858-இலும் மற்றும் கோட் ஆஃப் பீனல் லா 1861-இலும் நிறுவப்பட்டது. இதனை எழுதிய லார்ட் மக்கௌலேய், தெற்கு ஆசிய மக்கள் தொடர்பு எதுவும் இல்லாமல் இந்த இரு சட்டக் கோப்புகளையும் உருவாக்கினார். இந்த சட்டக் கோப்புகள், மக்கள் நலனுக்காக உருவாக்கப்படுவதற்குப் பதில், பிரிட்டிஷ்-இன் ஏகாதிபத்தியத்தை பாதுகாக்க எழுதப்பட்டவையாகும்(இந்த கோப்புகள், இன்றைய இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாக இருக்கின்றன).
பொருளாதாரத்தில், பிரிட்டிஷ் வங்கிகள் தெற்கு ஆசியாவின் நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வராததால், தெற்கு ஆசியர்களால், விதை நிதி இல்லாமல் நிதி உருவாக்கலில் பங்குகொள்ள முடியவில்லை.   சட்டத் தொழிலில் தெற்கு ஆசியர்கள் பங்கு கொள்ளும் நிலை வந்த பிறகு, தெற்கு ஆசியாவின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்கையில் அவர்களால் பங்குகொள்ள முடிந்தது. அதற்கு முன்னோடியாக, 1885-இல் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது.   மெதுவாக, ஸ்வதேஷி முறையில் வங்கி மற்றும் நிறுவனங்களுக்கு நிதி திரட்ட முடிந்தது. அரசியலில் பல்வேறு அணுகுமுறைகள் உருவாயின - லாலா லஜ்பத் ராய் (தங்களது பண்டைய நாகரிகம் மற்றும் இலக்கியம் (முகலாயர்களின் நாகரிகம் மற்றும் இலக்கியம் உட்பட) கண்டு தெற்கு ஆசியர்கள் பெருமை கொள்ள வேண்டும். மேலும், தங்களது உரிமைகளுக்குப் போராடும் பொழுது வன்முறையற்ற போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியவர்), ஷ்யாம்ஜி க்ருஷ்ண வர்மா (நாட்டின் நிர்வாகம் உள்நாட்டுச் சக்தியில் ஏகபோக பங்கு வகிக்க வேண்டும் மற்றும் இந்தியர்கள் டைனமைட் மூலம் நெறிமுறைகளை அடைய வேண்டும் என்று போதித்தவர்), மோஹன் தாஸ் காந்தி(ஸ்வராஜ் என்பது சக்தியின் நவீன அமைப்பாக இருப்பதற்கு பதில்  தார்மீக மற்றும் சமூக மறுஉற்பத்தியாக இருக்க வேண்டும் என்று கூறியவர்).
தெற்கு ஆசியாவின் மக்களின் பங்கு மேலும் மேலும் வளர, பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் அமைத்த கூட்டுக்குள் இருந்து கொண்டு, தெற்கு ஆசியர்கள் தங்களது கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அந்த போக்கில், 1905-இல் வைஸ்ராயாக இருந்த கர்ஸான்('உண்மையின் சிகரம் பெரும்பாலும் மேற்கத்திய கருத்தாகும்' என்று கூறியவர்) வங்காள மாநிலத்தை பிரிப்பதாக அறிவித்தார். 1903-இல் ஆங்கிலேய அரசர் தனது ஏகாதிபத்திய சக்தியை தெற்கு ஆசியாவில் அனைவரும் உணருமாறு டில்லியில் தர்பார் ஒன்றை நடத்தினார். கர்ஸான், வங்காளத்தை பிரிப்பதாக அறிவித்தப் பிறகு, தெற்கு ஆசியா எங்கும் ஆங்கிலேயருக்கு சிலை வைத்தார். 1917-இல் முதலாம் உலகப் போர் முடிந்த பின், பிரிட்டிஷ் அரசு 1928-இல் தெற்கு ஆசியாவில் பிரதிநித்துவ நிறுவனங்கள் உருவாக்குவதை அலசுவதற்காக(1907-இல் ஆஸ்திரேலியா, நியூ ஸீலாந்து மற்றும் கனடா-விற்கு இதனை ஏற்கனவே பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது) சைமன் கமிஷன்-ஐ அறிவித்தது. அதற்குப் போட்டியாக, காங்கிரஸ் தரப்பில் ஜவஹர்லால் நேருவின் தந்தையான  மோதிலால் நேரு தலைமையில் நேரு ரிப்போர்ட் தயாரானது.
நேரு ரிப்போர்ட் வெளி வந்த பிறகு தெற்கு ஆசியாவின் பெரிய கட்சிகளான முஸ்லிம் லீக்-உம் காங்கிரஸ்-உம் பிரதிநித்துவ ஜனநாயகம் அடையும் போக்கில் வேறுபட்டன. சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில், லாலா லஜ்பத் ராய், பிரிட்டிஷ் வன்முறையினால் உடல் நிலை குன்றி மாரடைப்பால் காலமானார். அதையடுத்து, காங்கிரஸ், பிரிட்டிஷ் சக்தியை முறியடிக்க ஆக்கிரமிப்பு நிறைந்த பிரச்சாரத்தைத் தொடங்கியது (காந்தி, காங்கிரஸ் ஆக்கபூர்வமான பணியில் இறங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட வேண்டுதல்களுக்கு மட்டும் புறக்கணிப்பில் எடுபட வேண்டும் என்றும்  கூறி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை).
1929-இல் உலகமெங்கும் பொருளாதாரச் சரிவிற்குப்பின், தெற்கு ஆசியாவின் பொருளாதாரம் உலக வணிகத்துடன் இணைந்திருந்ததால் அதனுடைய நிலை மோசமானது. பிரிட்டிஷ் அரசாங்கம், தெற்கு ஆசியாவின் நாணயமான ரூபாயை, பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு எதிராக மிதக்க விடாமல் மாற்று விகிதத்தை நிலையாக வைத்து, அந்த நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதற்காக, டில்லியில் வைஸ்ராய் வெள்ளி ரூபாய் நாணயங்களை உருக்கி, காகித ரூபாய் நோட்டுகளை எரித்து நாணயப் புழக்கத்தை குறைத்தார். கிராமங்களில் வேலை வாய்ப்பு குறைந்ததனால், மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். கல்கத்தாவின் மக்கள் தொகை 1931-இல் 12 லட்சத்தில் இருந்து 1941-இல் 21 லட்சமாக கூடியது. 1935-இல் கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா சட்டத்தின் மூலம் தெற்கு ஆசியாவில் மாநிலங்களில் தேர்தல் நடத்த பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டது. மாநிலங்களின் நிர்வாகத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளும், ராஜ்யங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கலாம் என்பது இந்த சட்டத்தின் இலக்காக இருந்தது. எல்லா மாநிலங்களில் நடந்த காங்கிரஸ் அல்லது முஸ்லிம் லீக் வெற்றி பெற்றன.
1939-இல் இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், வைஸ்ராய் இந்தியா போரில் பங்கெடுக்கும் என்று அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல்
கூறியதை அடுத்து, காங்கிரஸ் மாநில அரசுப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தது. பிரிட்டிஷ் போர் எத்தணிப்புகளுக்கு காந்தியும் நேருவும் சாதகமாகவே இருந்தனர். ஜப்பான் மற்றும் ஜெர்மனி பக்கம் சாய்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் படையெடுப்பு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தால், அவரையும் எதிர்க்க காந்தியும் நேருவும் தயாராக இருந்தனர். 1942-இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காங்கிரஸ் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க கடன் மற்றும் படை உதவி பிரிட்டனுக்குத் தேவையாக இருந்ததால், அமெரிக்காவின் ஜனாதிபதி ஃப்.டி.ஆர், பிரிட்டிஷ்-இடம் இந்தியாவிற்கு விடுதலை அளிக்குமாறு கட்டளையிட்டார். இந்தியர்களை அறவே வெறுத்த பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில், அதனை மறுத்தார். மேலும், 1943-இல் வங்காளத்தில் நிகழ்ந்த பஞ்ச நிவாரணத்திற்கு வேண்டிய
தானியங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பியும், பஞ்ச நிவாரண முகாம்களை நிறுவாமலும் பஞ்சத்தின் வீரியத்தைக்  கூட்டினார்(பஞ்ச நிவாரண முகாம்களை நிறுவுவதில் பிரிட்டிஷுக்கு மிகுந்த ஆற்றல் இருந்தது - அவர்களது ஆட்சியில் பஞ்சங்கள் தலை விரித்து ஆடின). இதனால், வங்காளத்தில் 20 - 30 லட்சம் மக்கள் உயிர் இழந்தனர். இரண்டாம் உலகப் போர் முற்றியப் பிறகு, பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த தொழிலாளிகள் கட்சி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விடுதலை அளித்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவின் போது மக்களைப் பாதுகாப்பதிற்குப் பதிலாக, ஆங்கிலேய அதிகாரிகளும் வீரர்களும் பத்திரமாக மீண்டும் வீடு செல்வதற்குப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இந்திய பாகிஸ்தான் இடையே உண்டான பிரிவின் போது நடந்த கலவரத்தில் பன் மடங்கில் மக்கள் மடிந்தனர்.
இறுதியில் பிரிட்டன் தெற்கு ஆசியாவில் உலகத்தில் ஒத்திசைவற்றும் குழப்பமும் நிறைந்த சமூகங்களை விட்டுச் சென்றதை அதனுடைய அழியாச் சாதனையாகக் கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்ற புத்தகங்கள்:

மராத்தாஸ் 1600 - 1818 - கார்டன் ஸ்டீவர்ட்
தி போர்த்துகீஸ் இன் இந்தியா - எம்.என்.பியெர்ஸன்
தி கெரியர் ஆண்ட் லெஜண்ட் ஆஃப் வாஸ்கோ ட காமா - சஞ்சய் சுப்ரமணியம்
தி ஸீ ஹாக்: லைஃப் ஆண்ட் பாட்டில்ஸ் ஆஃப் கானோஜி அங்க்ரே - மனோஹர் மல்கோங்கர்
நேவல் ரெஸிஸ்டன்ஸ் டொ பிரிட்டன்'ஸ் க்ரோயிங்க் பவர் இன் இந்தியா, 1660 - 1800: தி ஸாஃப்ரன் பானர் ஆண்ட் தி டைகர் ஆஃப் மைசூர் - ஃபிலிப் மக்டூகல்
தி இல்லுஷன் ஆஃப் பெர்மனென்ஸ்: பிரிட்டிஷ் இம்பிரியலிசம் இன் இந்தியா - ஃப்ரான்ஸிஸ் ஜி ஹட்சின்ஸ்
இம்ப்ரின்ட் ஆஃப் தி ராஜ்:ஹௌ ஃபிங்கர் பிரின்டிங்க் வாச் பார்ன் இன் கோலோனியல் இந்தியா - சந்தக் செங்குப்தா
லேட் விக்டோரியன் ஹாலோகாஸ்ட்ஸ்: எல் நினோ ஃபாமின்ஸ் ஆண்ட் தி மேகிங்க் ஆஃப் தி தேர்ட் வேர்ல்ட் - மைக் டேவிஸ்
அடாமிக் ஸ்டேட் - ஜானாவி ஃபால்கே

Copyright © 2017 Kunthavaiyin Kaathalan

No comments: