வறுமையின் நிறம் சிகப்பு*

சுருக்கம்:
இந்தப் புத்தகத்தை, என்னை அறிந்தால் படம் பார்ப்பதற்கு முன் படித்தேன். அந்தப் படம், சட்டவிரோதமான மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தின் இயக்கவியலை நன்றாகச் சித்தரிக்கிறது. இந்தப் புத்தகம், சில மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தை, பரந்தப் பார்வையில் அலசுகிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், மனித உடலின் அனைத்துப் பாகங்களிலும் உள்ளச் சட்டவிரோத வர்த்தகத்தை அலசுவதை தனது நோக்கமாகக் கொள்ளவில்லை.  அதனால், தூக்கிலிடப்பட்ட கைதிகளின் உடல்களைக் காட்டும் நடமாடும் அருங்காட்சியகங்கள், சமாதிகளிலிருந்து சடலங்களைத் தோண்டி மனிதத் தசைநார் வணிகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு விற்கும் அமெரிக்க மயான அமைப்புகள், ஹெ.ஜி.ஹெச் எனப்படும் மனித வளர்ச்சி ஹார்மோன் உருவாக்க இங்கிலாந்தில் இருந்து திருடப்படும் பிட்யூடரிச் சுரப்பிகள், கொல்லப்பட்டப் பாலஸ்தீனியத் தீவிரவாதிகளின் கண்களை அறுவடைச் செய்யும் இஸ்ரேலி இராணுவம், மற்றும் ஐரோப்பாவின் உயர்தர முகக்களிம்பை உற்பத்திச் செய்யும் நிறுவனங்களுக்கு பொலிவியா-வின் சில தொடர் கொலையாளிகள் தாங்கள் கொன்றவர்களின் உடம்பில் இருந்தக் கொழுப்பை விற்பதுவும் இந்தப் புத்தகத்தில் இடம்பெறவில்லை. தமிழ் குடும்பத்திற்குள் மணம் செய்துக் கொண்டதனாலோ என்னவோ, சென்னையின் மீது அதீதக் கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால், சென்னை (மற்றும் இந்தியாவின்) வண்டவாளம் தண்டவாளம் ஏறுகிறது.
மனித உடல் பாகங்களின் வர்த்தகம், அதன் மூலப் பொருளான மனித உடல் பாகங்கள் பொதுநலப் பண்பு மற்றும் கட்டாயப்படுத்துதல் மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் இதரப் பங்கேற்பாளிகள் (மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள், மருத்துவப் பள்ளிகள், முடி நிறுவனங்கள்), பொதுநலப் பண்பினால் கிடைக்கும் மூலப் பொருளை வைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கும், முன்னுக்குப் பின் முரணான நிலையை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். குழந்தைகளைக் கடத்தி, வெளிநாட்டில் உள்ள தத்தெடுக்கும் அமைப்புகளுக்கு அனுப்பும் வர்த்தகத்தைப் படித்தால் இந்தியாவில் உள்ளப் பெற்றோர்களுக்குப் பீதியை உண்டாக்கும். மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தில், விநியோகத் தேவை வளர்ந்த மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெரும்பாலும் வருகிறது. அந்தத் தேவையைப் பூர்த்திச் செய்யும் சுமைப் பெரும்பாலும் வறுமை நிறைந்த மூன்றாம் உலக நாடுகளின் மேல் விழுகிறது. வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் தனியுரிமையைக் காக்கும் சட்டங்களால்(அந்தச் சட்டங்கள் காலாக்காலத்தில் மூன்றாம் உலக நாடுகளிலும் பரவுவதால்), இந்த வர்த்தகத்தில் உள்ள தரகர்கள் பணம் கொள்ளையாகச் சம்பாதிக்கின்றனர். அதேப் போல், வளர்ந்த மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களும் மருத்துவ ஸ்தாபனங்களும் நிறைய லாபம் காண்கின்றன. கொடையாளிகள் (விருப்பம் கொண்டோ விருப்பமற்றோ) மற்றும் திருடப்பட்டக் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த வர்த்தகத்தின் பலி ஆடுகளாகின்றனர்.
இந்தப் பிரச்சினையின் வரைகோடுகளை, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தெளிவாக விவரித்திருக்கிறார். அதற்கானத் தீர்வுகளை விளக்குவதில் தயக்கம் காட்டியிருக்கிறார். மாற்று உடல் பாகங்களைக் கொண்டு நடத்தப்படும் அறுவைச் சிகிச்சைகள், பல நோயாளிகளின் வாழ்க்கையை  நீட்டித்து மிகுந்த அளவில் மாத்திரை மற்றும் மருந்துகளை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டாலும்,  பெரும்பாலும் தடையின்றி நடக்கிறது.  மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தில் 10 விழுக்காடு சிகப்புச் சந்தை மூலம் கிடைப்பதால், அந்த உடல் பாகங்களை கொடையளித்த ஏழை மக்களின் வாழ்க்கைக் கனவுகள் சிதைக்கப்படுகிறது. சிகப்புச் சந்தையின் எல்லாப் பாகங்களிலும் வெளிப்படைத்தன்மைக் கொண்டு வருவது  (ஆசிரியர் வெளிப்படைத்தன்மை மட்டுமே இந்தப் பிரச்சினையை முற்றிலும் அழிக்கும் என்று நம்பவில்லை என்றாலும்) , மக்களைக் கொன்று, குழந்தைகளைக் கடத்தும்,  அதிர்ச்சித் தரக் கூடிய அத்துமீறல்களைக் குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு முழுமையானத் தீர்வுக் காண, அது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும்.
அலசல்:
இன்றைய இந்தியாவில் இரத்தம் மற்றும் சிறுநீரக வர்த்தகங்கள், மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட் படத்தில், அணுக் குண்டுகளின் சக்தியால் நிகழ்ந்த அழிவிற்குப் பின் காட்டப்படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் தவிக்கும் மக்களின் சித்தரிப்பை ஒத்து இருக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில், இந்தியாவின் மக்கள் தொகை, அதன் பலமாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகையை சாதகமாக வைத்து இந்தியர்கள், தங்கள் மூளைச் சக்தியை, வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளின் வணிக நலனுக்காகப் (வளர்ந்த நாடுகளில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு மூலத் தயாரிப்பு மூலம்)  பயன்படுத்தித், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.  பணப் பரிமாற்றல் ஆக இருக்கும் இந்த ஒப்பந்தங்கள், கடுமையாக வரையறுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவதால், தங்களது மூளையின் சக்தியை, மீண்டும் மீண்டும் (மூளை மழுங்கிப் போகும் வரை) பயன்படுத்தி,  தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவின் அரசாங்கங்கள், காலங்காலமாக, மக்களின் கல்வி மற்றும் உடல் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கவில்லை என்பதால், இந்தியாவில் மக்கள் படிப்பறிவுக் குறைவாகவோ அல்லது படிப்பறிவு அறவே இல்லாமலோ இருக்கின்றனர். இதனால், மூளைச் சக்தியைப் பயன்படுத்தி அதற்குரிய பணத்தைச் சம்பாதிப்பத்தற்குத் தடுமாறுகின்றனர்.
தீவிரமான வுறுமையினால் (வாழ்க்கைச் சூழ்நிலையினாலோ சுனாமி போன்ற இயற்கை அழிவுகளினாலோ), அவசரமாகத் தேவைப்படும் பணத்திற்கு தங்களது உடல் பாகங்களை விற்கின்றனர். அவ்வாறு விற்கப்படும் உடல் பாகம், எளிதில் மறு உற்பத்திச் செய்ய முடியாது என்பதினால், அந்த ஒரு முறைப் பண வரவு வாழ்நாள் முழுவதும் நீட்டிக்க முடியாமல் போகிறது. சில பொருளாதார நிபுணர்கள், உடல் பாகங்களில் வர்த்தகம் சட்டமயமாக்கப்பட்டு, தளர்வாகக் கட்டுப்படுத்தினால், வறுமையில் வாழும் மக்களின் நிலை மேம்படும் என்று வாதித்தாலும், கல்வி ஆராய்ச்சியாளர்களின் பார்வையில், உடல் பாகத்தைக் காசுக்காக அளிப்பவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாமல் குறைகிறது என்றுக் கூறுகின்றனர். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பந்தங்கள் நேர்த்தியாகச் செயல்படுத்துவதுக் குறைவாக இருப்பதனால், தங்களது உடல் பாகத்தைக் கொடுத்து விட்டு அதற்குரியப் பணத்தைப் பெறுவதற்குள், ஏழை மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.  கட்டுப்பாடுகள் வலிமையற்று இருப்பதனால், உடல் பாகத்தை இழந்த ஏழை மக்களுக்கு, அந்தப் பணத்தை மீட்கொள்ள முடிவதில்லை. இதனால், உடல் பாகத்தை இழந்ததற்கு முன்னை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நடப்புகளுக்கு விதிவிலக்காக, ஒரு குழந்தைத் தன் பெற்றோர்களிடமிருந்துக் கடத்தப்பட்டு, உலகமங்கும் பரவியிருக்கும் தத்தெடுப்பு விநியோகச் சந்தையில்  தள்ளப்படும் பொழுது, குழந்தைகள் பெரும்பாலும் வறுமையான மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருவதாலும் தத்தெடுப்பவர்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதாலும் , அதன் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
மனித உடல் பாக வர்த்தகத்தில் பணம் செய்யும் தரகர்கள், இதர மக்களைப் போல் முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் விற்கும் பொருட்கள், குழந்தைகளும், மனித உடல் பாகங்களாக இருந்தாலும், வாங்கும் பொழுது குறைந்த விலையும் விற்கும் பொழுது கூடிய விலையும் கிடைப்பதில் குறியாக இருக்கின்றனர். அதற்காகச், சட்டத்தை முறித்து, கொடையாளிகளை ஏமாற்றி, ஆவணங்களை போலிப்படுத்த வேண்டி வந்தால், அவற்றைச் செய்யத் தயாராக உள்ளனர். இந்தியா போன்ற நாடுகள் தங்களதுச் சட்டங்களையே ஒழுங்காகச் செயல்படுத்தத் தவறுவதால், தரகர்களுடைய வேலைச் சுலபமாகிறது. தத்தெடுப்பவரோ உடல் பாகத்தை இறுதியாகப் பயன்படுத்தக் கூடியவரோ வளர்ந்த நாடுகளில் இருந்தால், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சட்டங்களை ஏமாற்றுவது இன்னும் சுலபமாகிறது. வளர்ந்த நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையே சட்டம் மற்றும் செயல்பாட்டுத் திரநிலைகளின் வேறுபாடுகளைத்  தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும், வளர்ந்த நாடுகளின் செல்வச் செழிப்பினால், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மூலப்பொருளாக அனுப்பப்படும் உடல் பாகங்கள், இறுதியாக விநியோகம் செய்பவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் மூலம், தரகர்கள் நிறையப் பணம் சம்பாதிக்கின்றனர்.  இந்தப் புத்தகத்தின் ஆசிரியரைப் பொறுத்தவரை, மூன்று விதச் சந்தைகள் பொருளாதாரத்தில் இருக்கின்றன:
வெள்ளைச் சந்தைகள் - சட்ட ரீதியாகவும், வெளிப்படையாகவும் பொருட்கள் கைமாறுகின்றன. உதாரணம் - வீடுகள், கார்கள்
கருப்புச் சந்தைகள் - சட்டவிரோதமாகவும், சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாமலும் பொருட்கள் கைமாறுகின்றன. உதாரணம் - திருட்டு டி.வி.டிக்கள், மருந்துகள்
சிகப்புச் சந்தைகள் - குழந்தைகள் அல்லது மனித உடல் பாகங்களில் நடக்கும் வர்த்தகம்.  இவற்றின் மூலப் பொருட்கள், பொதுநலப் பண்பின் மூலம் சேகரிக்கப்பட்டாலும், அதனைச் சார்ந்து இருக்கும் வணிகச் சேவைகளான தரகர்களும் (சட்டத்திற்கு முரணாகச் சேகரிக்கப்பட்டதினால், மூலப் பொருட்களுக்கு மந்திர மாயையால் சட்ட முலாம் பூசி, அவ்வாறுச் செய்வதினால் உண்டாகும் ஆபத்திற்கு ஏற்ற லாபத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றனர்)  வணிக நிறுவனங்களும் மருத்துவ ஸ்தாபனங்களும் நிறைய லாபம் சம்பதிக்கின்றனர்.  இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உடல் பாகங்களின் வர்த்தகங்கள்:
எலும்புகள்:
காலங்காலமாக உலகெங்கிலும், வருங்கால மருத்துவர்களைப் பயிற்சி செய்ய உதவும் எலும்புகளுக்கும் எலும்புக்கூடுகளுக்கும் மூலாதாரமாக இந்தியா  விளங்கியிருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா-வில் இருந்த மருத்துவர்கள், இறந்து போனவர்களின் சடலங்களை அவைப் புதைக்கப்பட்டிருந்த சமாதியிலிருந்து எடுத்துக் கொள்ள, சமாதித் திருடர்களுக்குப் பணம் அளித்தனர்(இன்று, எல்லோராலும் போற்றப்படும் மருத்துவத் தொழில், முன் காலத்தில், நாவிதர்களின் தொழிலுக்குச் சமமாக இருந்து, பின்னர், நாவிதர் தொழிலைக் காட்டிலும் மதிப்புப் பெற்றது). சமாதிக் கொள்ளைக்காரர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல், அவர்களின் பணி, தீயதாக இருந்தாலும், இன்றியமையாத ஒன்றாகக் கருதின. யூனிவர்ஸிடி ஆஃப் எடின்பரோவிற்கு அனுப்ப வேண்டிய எலும்புக்கூடுகள், மக்களைக் கொன்று அந்தச் சடலங்களில் இருந்து வந்ததனால், இங்கிலாந்தில், 1832-இல் அனாடமிச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. மற்ற மேற்கத்திய நாடுகள், அதற்குப் பின் தத்தம் நாடுகளில் அதே போன்றச் சட்டத்தைச் செயலாக்கின. இதனால், மருத்துவக் கல்லூரிகளுக்கு வேண்டிய எலும்புக் கூடுகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்தது. வரலாற்றில் மற்றப் பொருட்களில் நிகழ்ந்தது போல், இங்கிலாந்து அரசு, எலும்புகள் மற்றும் எலும்புக் கூடுகளின் வர்த்தகத்தை அதன் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்த இந்தியா போன்ற நாடுகளுக்குத் தள்ளி அதனை ஊக்குவித்தது. அதனால், எலும்பு மற்றும் எலும்புக் கூடுகளின் வர்த்தகம் செய்த வணிகர்கள், சமாதிகளிலிருந்தும், எரிந்துக் கொண்டிருக்கும் சிதைகளிலிருந்தும் (இறந்தவரின் குடும்பங்கள் திரும்பிச் சென்றப் பிறகு) சடலங்களைத் திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பினர். இந்த வர்த்தகத்தைப் பற்றிய விவரங்கள் கிராமங்களில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. இந்தப் புத்தகத்தில், ஆசிரியர், இறந்த உடலில் இருந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரத்திற்கு ஒரு எலும்புக்கூட்டைத் தயாரிக்கும் முறையை விவரிக்கிறார். 1984-இல், இந்தியா, உலகெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, வருடம் ஒன்றுக்கு 60,000 மண்டை ஓடுகளையும் எலும்புக் கூடுகளையும் ஏற்றுமதி செய்தது. 1985-இல் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு எலும்பு வணிகர், 1,500 குழந்தை  மண்டை ஓடுகளை ஏற்றுமதி செய்ய முற்படும் பொழுதுக் கைது செய்யப்பட்டப் பின்பு, எலும்புகள் மற்றும் எலும்புக் கூடுகள் ஏற்றுமதியைத் தடைச் செய்யும் சட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதித் தடை இருந்தாலும், உள்நாட்டிற்குள் எலும்பு மற்றும் எலும்புக் கூடுகளின் வர்த்தகம் தடைப்படுத்தப்படவில்லை என்பதால், அதனைத் தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு, இந்திய வணிகர்கள் காலாக்காலத்தில் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் மீண்டும் கொடிக்கட்டிப் பறந்தனர். ஏனினும், இந்தச் சட்டத்தினால் அதிர்ச்சித் தரக் கூடிய அத்துமீறல்கள் குறைந்து உள்ளன.
சிறுநீரகம்:
மாற்றுச் சிறுநீரகங்களில் நடக்கும் வர்த்தகம், ஏழை மக்களையேப் பெரும்பாலும் பாதிக்கின்றது. உயிரைக் காப்பாற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்களால், உலக மக்கள் நீண்ட வாழ்க்கையை தங்களது உரிமையாகக் கருதுகின்றனர். வளர்ந்த நாடுகளின் மருத்துவ ஸ்தாபனங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைகள், சட்ட வரம்பை மீறிச் செயல்பட வேண்டி இருந்தாலும்,  சிறுநீரகங்களின் வர்த்தகம் பரந்த அளவில் இருக்கிறது என்பதை உணர்ந்து உள்ளனர். அதனால், வளர்ந்த நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு மாற்றுச் சிறுநீரகத் தேவையைக் கணிக்கும் தொடக்க நிலையைத் தளர்த்திக் கொண்டுள்ளனர். இது, மேற்கத்திய நாடுகளில் மாற்றுச் சிறுநீரகத்தின் தேவையை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் மருத்துவ ஸ்தாபனங்கள், நோயாளிகளின் தேவைகளையும், உடனடியாகக் கிடைக்கும் சிறுநீரகங்களையும் நிர்வகிக்க, காத்திருக்கும் பட்டியலின் மூலம் தனது இரும்புப் பிடியில் வைத்திருக்கின்றன. தனியுரிமை பற்றியக் கவலைகளைத் தங்களுக்குச் சாதகமாக வைத்து, கொடையாளிகளுக்கும் நோயாளிகளுக்கும் உள்ள சதவிகிதத்தை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் சிறுநீரகங்களைப் பற்றி அறிந்தப் பின்பும், நீண்ட நாள் மாற்றாமல் வைத்திருக்கின்றன.  இவ்வாறுச் செய்வதன் மூலம், மாற்றுச் சிறுநீரகத்தைச் சுற்றி உள்ள சேவைகளுக்கு (அதனைச் செய்யும் மருத்துவ ஸ்தாபனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைகள்) நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது. இதனால், நோயாளிகளின் பார்வையில், மாற்றுச் சிறுநீரகம் தட்டுப்பாட்டில் இருப்பதாகத் தென்படுகிறது. அதனால், அவர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மருத்துவ அமைப்புகளிடம் சென்று, மாற்றுச்
சிறுநீரக அறுவைச் சிகிச்சையை அதிகத் தள்ளுபடி விலையில் செய்துக் கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் உள்ள உயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், எரியும் தீயில் எண்ணையைக் கொட்டுவதுப் போல், மூன்றாம் உலக நாடுகளில் மாற்றுச் சிறுநீரக அறுவைச் சிகிச்சைச் செய்யும் மேற்கத்திய நோயாளிகளுக்கு (சிகிச்சையின் மொத்த விலை மேற்கத்திய நாடுகளை விடக் கம்மியாக இருக்கும் என்பதால், காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதில் லாபம் கிட்டுகிறது) ஆதரவு அளிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளுக்கு, இதன் மூலம், மருத்துவச் சுற்றுலா என்றப் பெயரில் வருவாய் கூடுகிறது. இந்தப் பரிமாற்றங்களில், கைவிடப்பட்டது, தங்களதுச் சிறுநீரகத்தை இழந்த ஏழை மக்கள் தான். அவர்களதுத் தரகர் ஏமாற்றுபவராக இருந்தால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தையும் இழக்கின்றனர்.
இந்தியாவில் சிறுநீரகத்தைத் தானம் செய்வதற்கு முன், மாற்று அங்கீகரிப்புக் குழுவின் முன் சென்று நெறிமுறை விமர்சனத்தைக் கடக்க வேண்டும். மாற்றுச் சிறுநீரகத் தேவையினாலும், தளர்க்கப்பட்டக் கோட்பாடுகளினாலும்,  நியாயமற்றத் தரகர்கள் வலுக்கட்டாயமாக ஏழை மக்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து குழுவிற்கு முன் நிறுத்தி(சில சமயங்களில், அவர்களுக்கு உரிய பணத்தைக் கொடுக்காமல்), சிறுநீரகத்தை அகற்றுவதற்கு ஒப்புதல் பெறுகின்றனர். இந்தப் புத்தகத்தில், சமூக ஆர்வலர் ஒருவர், மிகுந்தப் பிரயர்த்தனத்திற்குப் பின், சிறுநீரகத் தானம் செய்த சிலரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு உரியப் பணத்தைத் தரகர்களிடம் இருந்து வாங்கும் முயற்சி, தரகர்கள் நீதிமன்றத்தைத் தங்கள் கைகளில் லஞ்சம் மூலம் வைத்துக் கொண்டிருப்பதனால், தோல்வியில் முடிகிறது. தரகர்கள் வில்லன்களாகத் தோன்றினாலும், இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்தாபனம் (மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள்) அவர்களுக்கு ஆதரிக்கும் கூட்டமாகச் (நோயளிகளின் தனியுரிமை என்றச் சாக்கில்) செயல்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளில் வேவ்வேறு நாடுகள் வேவ்வேறு முறையில் சிறுநீரக வர்த்தகத்தைக் கையாளுகின்றன - இந்தியாவில் சட்டம் நீதி போன்ற உள்கட்டமைப்புகள் இருந்தாலும், அதனைத் தங்கள் கைவசம் கொண்டு வந்து, தரகர்களும் மருத்துவ ஸ்தாபனமும் ஏழை மக்களின் வாழ்க்கையை நரவேதனையாக ஆக்குகின்றனர், இரான்-இல், சிறுநீரக வர்த்தகத்தை அந்நாட்டு அரசு சட்டப்பூர்வமாக அனுமதித்தாலும், சிறுநீரகத்தை ஏழைகளிடமிருந்தும், வீடற்றவர்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாக எடுப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, சீனா - அரசியல் எதிரிகளைக் கைது செய்து, அவர்களின் சிறுநீரகத்தை வலுக்கட்டாயமாக அகற்றி அவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு மூலப் பொருளாக விற்று, அந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவாயைத் தேடிக் கொள்கிறது. சிறுநீரகத்தில் நடக்கும் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதன் மூலம், மனித நேயத்திற்கு எதிரானச் சீன அரசின் தவறுகளையும், மேற்கத்திய மருத்துவ ஸ்தாபனங்கள் மாற்றுச் சிறுநீரகத்தின் மூலாதாரத்தைப் பொது மக்கள் பார்வையில் வைப்பதற்கும், இந்தியர்கள் (அவமானம் தாங்காமல்) சிறுநீரகத்தை இழந்தவர்களுக்கு உரியச் சன்மானம் அளிப்பதற்கும் வழி வகுக்கும்.
தத்தெடுப்புகள்:
மூன்றாம் உலக நாடுகளின் (இந்தியா, சீனா, சாட், மலாவி, ஹெய்டி) உள்ளக் குடும்பங்களில் இருந்துக் கடத்தப்பட்டக் குழந்தைகளை, மேற்கில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்பி உலகத் தத்தெடுப்பு வர்த்தகம் இயங்குகிறது. தங்களின் பொறுப்பில் உள்ளக் குழந்தைகளின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் (சராசரியாக, அமெரிக்க தத்தெடுப்பு அமைப்புகள், ஒரு குழந்தைக்கு $14,000 பணமாக அளிக்கும், இந்திய அனாதை இல்லங்கள் ஒரு குழந்தைக்கு $3,500  செலவு செய்யும்) என்பதால், சில இந்திய அனாதை இல்லங்கள், வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கடத்தி, உலக தத்தெடுப்பு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கின்றன. மேற்கத்திய வாடிக்கையாளர்கள், சிறிய வயதுக் குழந்தைகளை மட்டுமே விரும்புவதால், சில இந்திய அனாதை இல்லங்கள், கடத்தப்பட்டக் குழந்தைகளை உடனுக்குடன் மேற்கத்திய நாடுகளில் தத்தெடுப்பிற்கு அனுப்பிவிட முயல்கின்றனர். இந்தப் புத்தகத்தில், சுபாஷ் என்றச் சென்னையில் இருந்தச் சிறுவனின் கதையை ஆசிரியர் விளக்கியிருக்கிறார். சுபாஷை அவன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவன் வீட்டுத் தோட்டக்காரர் அவனைக் கடத்திச் சென்னையில் உள்ள மலேஷியன் சோஷியல் ஸெர்விஸெஸ் என்ற அனாதை இல்லத்திடம் விற்றார். ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ளக் குறிப்புகளை வைத்து,ஆசிரியர், சுபாஷை, அனாதை இல்லத்தில் இருந்து, ரகுபதி (போலீஸால் இவர் கைதுச் செய்யப்பட்டார்) என்பவர், அமெரிக்கா-வில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள தத்தெடுப்புத் தரகர், ரமணி ஜெயக்குமாரிடம் விற்றார். ரமணி ஜெயக்குமார், சுபாஷைப் பாக்கெட் அடாப்ஷன் ஸெர்வீஸெஸ் என்ற அமைப்புக்கு விற்றார். அந்த அமைப்பு, சுபாஷை, அமெரிக்கா-வின் மத்திய மேற்குப் பிரந்தியத்தில் குடியிருக்கும் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்திற்கு விற்றது. சுபாஷ் இப்பொழுது அந்தக் குடும்பத்தில் வளர்ந்து வருகிறான். தன்னிடம் இருக்கும் ஆவணங்களைக் காட்டி அவனது பிறப்புப் பெற்றோர்களான  நாகேஸ்வர ராவ் மற்றும் சிவகாமி, சுபாஷைப் பிரிந்ததனால் தவிப்பதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறியும்,  ஒரு பலனும் அளிக்காமல் போகிறது. சுபாஷின் வளர்ப்புப் பெற்றோர்கள், அவனது, பிறப்புப் பெற்றோர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த மறுக்கின்றனர். மேலும், பாக்கெட் அடாப்ஷென் ஸெர்வீஸெஸும் சுபாஷின் வளர்ப்புப் பெற்றோர்களும் இந்திய நீதிமன்ற ஆவணங்களை நம்ப மறுக்கின்றனர். இதுத் தனித்து நடந்தச் சம்பவம் அல்ல என்றுச் சுட்டிக் காட்டுவதைப் போல், இந்தியா-வில் ப்ரீத் மந்திர் என்னும் அனாதை ஆசிரமத்தின் முதலாளி, தொலைக்காட்சிச் சேனலான சி.என்.என்-ஐ.பி.என்-இடம், 2 குழந்தைகளுக்கு, $24,000 கேட்டிருக்கிறார். அமெரிக்கா-வில் பிரபலமான சில்ட்ரன்ஸ் ஹோம் சொஸைட்டி ஆண்ட் அடாப்ஷன் ஸெர்வீஸெஸ் என்னும் தத்தெடுப்பு அமைப்பு, ப்ரீத் மந்திரின் அம்பலம் வெளிவரும் வரை, அதனுடன் வர்த்தகம் மேற்கொண்டிருந்தது. அதனைப் பற்றி வினவிய பொழுது, சில்ட்ரன்ஸ் ஹோம் சோஸைடி ஆண்ட் அடாப்ஷன் ஸெர்வீஸெஸ் தங்கள் கைக்குக் கிடைத்த ஆவணங்கள் சரியாக இருந்தது என்றுக் கூறி தனதுப் பதிலை நிறுத்திக் கொண்டது. இதைப் படிக்கும் பொழுது, இந்தியப் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும். தத்தெடுப்பில் நடக்கும் சிகப்புச் சந்தையில் மாட்டுவதற்கு பிரபலமானவர்களும் விதிவிலக்கல்ல. பிரபலமானப் பாடகியான மடோன்னா, 2006-இல் மலாவி-யில் இருந்துத் தத்தெடுத்தக் குழந்தை, அனாதை இல்லை என்றுப் பிறகுத் தெரிய வந்தது.
முட்டை அறுவடை:
தனக்கென்று ஒருக் குடும்பத்தை உருவாக்குவது உலகில் பெரும்பாலானவர்களுக்கு உள்ள ஆசையாக இருக்கிறது. தங்களது சொந்த முயற்சியால் முட்டை உருவாக்க முடியாத பொழுது(கர்ப்பம் தரிக்க முடியாதத் தம்பதியினர், ஓரினச் சேர்க்கையில் வாழும் தம்பதியினர்), அந்தக் குறையைத் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நிவர்த்திச் செய்துக் கொள்ளலாம். இதுப் பெரும்பாலும், மேற்கத்திய நாடுகளில் இருந்து வருவதாலும், அங்குள்ளவர்கள் பிறக்கும் குழந்தைகளின் நிறம் அவர்களைப் போல் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாலும், கிழக்கு ஐரோப்பா-வில் உள்ள ஏழைப் பெண்களையே பாதிக்கின்றது. தங்களது முட்டையைக் கொடையாக அளிப்பவர்கள், ஹார்மோன்களைத் தூண்டி விட்டு முட்டையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்க, குறைந்தப் பட்சம் 2 வாரம் ஆகிறது. அறுவைச் சிகிச்சை என்பதால், மயக்க மருந்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனைச் செய்து முடிப்பதற்குத் தங்களை முழு மனதுடன் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. முட்டையிலிருந்துக் கரு உருவாகிறது என்பதால், அதனை விலைக் கொடுத்து வாங்குபவர்களும், மேற்கத்திய மருத்துவ ஸ்தாபனங்களும் இதனைப் பொதுநலப் பண்பினால் செய்யப்படும் செயல் என்றுக் கருதுகின்றனர். ஆனால், முட்டையைக் கொடையாக அளிப்பவர்களுக்கு, இதில் நிறையச் சிக்கல்கள் அடங்கியுள்ளது. நெறிமுறைச் சிக்கல்கள் நிறைய இருப்பதால், இங்கிலாந்து இதற்குத் தடை விதித்திருக்கிறது. அதனைச் சாதகமாக வைத்து, ஸைப்ரஸ் நாட்டின் மருத்துவ ஸ்தாபனங்கள், ஏழை கிழக்கு  ஐரோப்பியப் பெண்களிடம் பணத்தைக் காட்டி, ஸைப்ரஸ்-இற்குக் கொண்டு வந்து, 2 வாரத்தில் முட்டையை அறுவடை செய்து, அவர்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்புகின்றனர். மேற்கத்திய நாடுகளில் (அமெரிக்கா போன்ற நாடுகளில் முட்டை அறுவடைச் செய்யப்பட்டாலும், அங்குள்ள விலை, முட்டையைக் கொடையாக வழங்குபவரின் தராதரத்தைப் பொறுத்து வேறுபடும்) உள்ளவர்கள் அந்த முட்டைகளை தங்கள் வயிற்றிற்குள் வைத்துக் கொள்ள, ஸைப்ரெஸ்-இற்குச் சென்று முட்டையைப் பெற்றுக் கொண்டுத் தங்கள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். பணம் அளிப்பவர்கள் இதனை பொதுநலப் பண்பாகப் பார்ப்பதினால், இந்த வர்த்தகத்தை நடத்தும் மருத்துவமனைகள், முட்டைக் கொடையாளிகளிடம் குறைந்தப் பணம் அளிப்பதற்குச் சாதகமாக அமைகிறது. முட்டையை ஒரு பொருளாகக் கருதி, அதற்கேற்ற ஒப்பந்தங்களை உருவாக்கினால், கிழக்கு ஐரோப்பியப் பெண்களுக்குக் கிடைக்கும் சன்மானம் கூடும். ஆனால், முட்டைகளை வாங்குபவர்கள் கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும், ஸைப்ரெஸ் போன்ற நாடுகளின் மேல் தேவையற்றக் கவனம் திரும்பும்.
வாடகைக் கர்ப்பம்:
வாடகைக் கர்ப்ப வர்த்தகத்தில், காசுச் சம்பாதிப்பதில், உடலை மூலமாக வைப்பதற்குப் பதில், மூளையை மூலமாக வைப்பதன் பலன் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குழந்தைப் பிறப்பதற்கு நீண்ட நாள் தேவை என்பதால், வாடகைக் கர்ப்பிணிகளின் உடம்பை மீண்டும் பயன்படுத்திக் காசுச் சம்பாதிப்பதுச் (வாடகைக் கர்ப்பத்திற்குப் பணம் கொடுப்பவர்கள், அதனை பொதுநலப் பண்புடையச் செயலாகக் கருதினாலும், கர்ப்பம் தரிக்கும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெண்கள், அந்தப் பணத்தை எதிர்ப்பார்த்துத் தான் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்) சுலபமில்லை. மேற்கத்தியப் பெண்கள், இந்தியாவில் உள்ள வாடகைக் கர்ப்பிணிகளை க்ளினிக்கின் கண்காணிப்பில் இருந்துத் தப்பிக்காமல் இருப்பதை நம்பித் தான் தேர்ந்தெடுக்கின்றனர்.  அதனால், க்ளினிக்கை விட்டு வெளியில் நடக்க அனுமதி இல்லாமல் உள்ளேயே அடங்கி இருக்கின்றனர். வாடகைக் கர்ப்பம், இந்தியா-வில் 2002-இல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் உள்ளக் கட்டுப்பாட்டுகள் தளர்ந்து இருப்பதால், க்ளினிக்குகள், வாடகைக் கர்ப்ப வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களை குழந்தைச் சுமக்கும் இயந்திரங்களாகப் பார்க்கின்றனர். அமெரிக்க இனப்பெருக்க மருத்துவ அமைப்பு, ஒரு முயற்சியில் ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் ஒருக் கருவை வைக்குமாறுப் பரிந்துரைக்கிறது. இந்திய அரசு, ஒரு முயற்சியில், ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் மூன்றுக் கருக்களை வைக்குமாறுப் பரிந்துரைச் செய்கிறது. இந்தியா-வில் உள்ளக் க்ளினிக்குகள், ஒரு முயற்சியில், ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் ஐந்துக் கருக்களை வைக்கின்றனர். இந்த வர்த்தகத்தினால் கிடைக்கும் பணம் ஏழைக் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கிறது. மேலும், கர்ப்பக் காலத்தில், க்ளினிக்கில் இருப்பதால், கிராமங்களில் அண்டை அயலார் பேசும் அவதூறுகளில் இருந்துக் காக்கப்படுகின்றனர். வெற்றிகரமாகக் குழந்தைப் பிறந்தால், வாடகைக் கர்ப்பிணிப் பெண்ணிற்கு, $5,000 - $6,000 வரைக் கிடைக்கிறது. வாடகைக் கர்ப்பத்தின் பொழுது கருச்சிதைவு ஆனால், அது வரை அந்தப் பெண் வாங்கியப் பணத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். கருக்கலைப்புச் செய்தால், க்ளினிக்கிற்கும் பணம் கொடுத்தக் குடும்பத்திற்கும், அவர்கள் செய்த செலவிற்கேற்றப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
இரத்தத் தானம்:
தன்னார்வ இரத்தத் தானத்தில், கொடையாளிகளைப் பராமரிப்பதில், சென்னைக்கும் அமெரிக்கா-விற்கும் நிறைய வித்தியாசமில்லை. இந்திய மருத்துவமனைகளில் கேட்கப்படும் கேள்விகள், அமெரிக்கா-வை விடக் குறைய இருந்தாலும், அங்குள்ளப் பணியாளர்கள் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்க முயற்சிச் செய்கின்றனர்.  அமெரிக்கா-வில் இரத்தப் பரிமாற்றம் செய்ய வேண்டிய மருத்துவத் தொழில்நுட்பம் இந்தியா-விற்கு முன்னமேப் பரவியிருந்ததால், இரத்தத் தானத்திற்காகப் பணம் கொடுக்கும் முறையினால் உண்டாகும் சிக்கல்களை (இரத்தம் சுலபமாக மாசுபடுவதும், இரத்ததின் தரம் கீழே இறங்கிக் கொண்டே போவதும்), ரிச்சர்ட் டிட்மஸ் தனது கிஃப்ட் ரிலெஷன்ஷிப் புத்தகத்தில் கூறியிருந்ததிற்கேற்பச் சரிசெய்ய முடிந்தது. அமெரிக்கா-வில், 1940-களிலும், 1950-களிலும் இரத்தத் தானத்திற்குப் பணம் அளிக்கும் முறைப் பரவலாக இருந்தது. அதில் கிடைத்த இரத்தத்தின் தரத்தில் நோயாளிகளும் மருத்துவமனைகளும் திருப்தியாக இல்லை. கிஃப்ட் ரிலெஷன்ஷிப் புத்தகம் வெளி வந்தவுடன், மருத்துவமனைகள் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து இரத்தத் தானம் பெற ஆரம்பித்தவுடன், அமெரிக்காவின் அரசு வர்த்தகக் குழுவான ஃபெடெரல் ட்ரெட் கமிஷனிடமிருந்துப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஃபெடெரல் ட்ரெட் கமிஷன், மருத்துவமனைகளைப் பணம் கொடுத்து இரத்தத் தானம் செய்பவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த நீதிமன்றத்தில் எழுப்பியக் குற்றச்சாட்டை, அமெரிக்கன் மெடிக்கல் அசோசியெஷனின் பலத்த உதவியுடன் மருத்துவமனைகள் தோற்கடித்தன. அதன் பின், பெரும்பாலும் அமெரிக்காவில் தன்னாரவத் தொண்டர்கள் அளிக்கும் இரத்தத் தானம், எல்லா மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்பட்டது. அதையடுத்து, அமெரிக்கா-வின் காங்கிரஸ் அரசியல் சட்டத்தில்
இரத்தத் தானத்திற்குப் பணம் கொடுக்கும் முறையை அறவே ஒழித்தது. அதையும் மீறி, இரத்தத் தானத்திற்குப் பணம் கொடுக்கும் முறை சில மாநிலங்களில் பரவலாக இருந்து வந்தது. 1994-இல் இறுதியாக, ஆர்கன்ஸாஸ் மாநிலம் கடைசியாக இரத்தத் தானத்திற்குப் பணம் கொடுக்கும் முறை கைவிட்டதனால், அங்குள்ள இரத்தத்தின் தரம் பல வருடங்கள் குறைவாக இருந்தது. சட்ட ரீதியாக இரத்தத் தானத்திற்குப் பணம் கொடுப்பதைத் தடைச் செய்த பொழுது, காங்கிரஸ், அந்த இரத்தத்தைப் பயன்படுத்தும் இதரச் சேவைகளுக்கு மருத்துவமனைகள் கேட்கும் விலையை மட்டுப்படுத்தாமல் விட்டது. அமெரிக்கா-வில், பண்டிகை நேரத்தில் இரத்தத் தேவை வெகு அதிகமாக இருக்கும் பொழுது, அதற்கேற்ற அளவு இரத்தம் கிடைக்காமல் இருப்பது இப்பொழுது வாடிக்கையாகி விட்டது. அமெரிக்கன் மெடிக்கல் அசோசியெஷனின் உதவியால் வெற்றிப் பெற்ற மருத்துவமனைகள், தங்களதுச் சேவைகளுக்குத் தேவையான இரத்தத்தை வாங்குவதற்குரிய விலை வெகுவாகக் குறைந்தது.
இந்தியா-வில், இரத்தம் தேவைப்படும் நோயாளி, தனக்குத் தேவையான இரத்தம் கிடைக்க, அதே அளவில் வேறு ஒரு கொடையாளியிடமிருந்து அந்த மருத்துவமனைக்கோ இரத்த வங்கிக்கோ இரத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதனால், இரத்தத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, நோயாளியின் தலையில் தள்ளப்படுகிறது. உள்ளுரில் இருப்பவர்களுக்கு இதுச் சாதகமாக இருந்தாலும், வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு (புலன் பெயர்ந்தவர்கள், சென்னைப் போன்ற நகரங்களின் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்த வரும் மருத்துவச் சுற்றுலாப் பயணிகள்) இது இடையூறாக அமைகிறது. இந்தியர்கள், தங்களது உடம்பில் இருந்து இரத்தத் தானம் செய்தால், தங்களது உடற்சக்திக் குறைந்து விடும் என்றத் தவறான நம்பிக்கையில்(அமெரிக்கா-வின் ஜனாதிபதி டானல்ட் ட்ரம்ப், உடம்பில் உள்ளச் சக்தி, உடற்பயிற்சிச் செய்தால் குறைந்து விடும் என்றுத் தவறாக எண்ணுவதுப் போல்),  இரத்தத் தானம் அளிக்கத் தயங்குவதால், இந்திய அரசும் மருத்துவ ஸ்தாபனமும், பணம் கொடுத்தால் இரத்தத் தானம் கொடுக்கும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவர்களும் செவிலியர்களும், பணம் கொடுத்து இரத்தத் தானம் செய்யும் முறையைக் கண்டிப்பதற்குப் பதில், நோயாளிகளின் தனியுரிமையின் பின் ஒளிந்துக் கொள்கிறார்கள். மருத்துவ ஸ்தாபனத்தின் பணம் கொடுத்து இரத்தத் தானம் செய்யும் முறையைப் பற்றிய நிலையற்றப் போக்கினால்,திருட்டுக் கும்பல்கள், சாதாரண மக்களைக் கடத்தி, அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்து, அவர்களது இரத்தத்தை மருத்துவமனைகளுக்கு விற்கின்றனர்(சமீபக் காலத்தில், கோரக்பூரில் நடந்தது போல்).
மருத்துவச் சோதனை:
அமெரிக்கா-வில் மருந்துத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது மருந்துகளை,  மருத்துவர்களிடமும் மருத்துவமனைகளிடமும் விற்க, ஃபெடெரல் ட்ரக்ஸ் அட்மினிஸ்ட்ரெஷன் நிர்ணயிக்கும் பலக் கட்டச் சோதனையைத் தாண்ட வேண்டும். 1950-களிலும், 1960-களிலும், மருந்து நிறுவனங்கள், சிறையில் இருந்தக் கைதிகளைத் தங்களது மருந்துச் சோதனைக்குப் பயன்படுத்தினர். கைதிகள் வேறு எங்கும் செல்ல முடியாதக் காரணத்தினால், மருத்துவ நிறுவனங்கள், தங்களது மருந்துகளின் பலனைப் பற்றி மிகத் துல்லியமான முறையில் தகவல் சேகரிக்க முடிந்தது. மருத்துவச் சோதனையில் கைதிகள் பங்கெடுக்கக் கூடாது என்ற முடிவிற்குப்பின், மருந்துத் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. அதன் பிறகு, மூன்றாம் தரப்பு நிறுவனங்களான கான்ட்ராக்ட் ரிஸர்ச் ஆர்கனைஸெஷன்ஸ் எனப்படும் ஸி.ஆர்.ஓக்களிடம் மருந்துச் சோதனையை ஒப்படைத்தனர். அதற்குப் பிறகு, பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்த மருந்துச் சோதனையில் பங்கேற்பவர்கள் ஸி.ஆர்.ஒக்களை ஏமாற்றி, வேவ்வேறு மருந்துகளின் சோதனைகளில் பங்கெடுத்துக் கொண்டனர். அமெரிக்கா-வில் மருந்துச் சோதனை செய்பவர்களின் உடலில் உள்ள பல மருந்துகளின் அளவு மிகவும் கூடியதால், ஸி.ஆர்.ஒக்கள் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மக்களைக் குறிப்பார்த்து உள்ளனர். இந்திய அரசு, பொது மக்களுக்கு, போதிய அளவு நிதி ஒதுக்கீட்டை, உடல் சுகாதாரத்திற்கு ஒதுக்காமல் இருந்ததால், இந்திய மக்களின் உடம்பில் இருக்கும் மருந்துகளின் அளவுக் குறைந்தேக் காணப்படுகிறது. மேலும், மருந்து நிறுவனங்களை இந்தியாவில், மருந்துச் சோதனைச் செய்ய அனுமதி அளிப்பதன் மூலம், இந்திய அரசிற்குக் கூடுதலாக வருவாய் கிட்டுகிறது. இதனால், மருந்துச் சோதனைகளில் பங்கேற்பவர்களின் குறைந்த அளவு உரிமைகளும், சில சமயம் அவர்களின் இறப்பும் கூட, இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாடுத் துறையான ட்ரக் கன்ட்ரோல் ஜெனரலின் நோக்கை மாற்றவில்லை.
முடி:
மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தில், சாதாரணப் பொருட்களுக்கு ஒத்து இருப்பது முடி தான். மகாவிஷ்ணுவிற்குச் சமர்ப்பணமாக, திருப்பதியில் பக்தர்கள் முடியை இழக்கின்றனர். 1960-களில், திருமலா திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் கொடுத்த முடியை எரித்தது. இந்திய அரசு, அதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என்றுக் கூறி அதற்குத் தடை விதித்தது. அதன் பிறகு, பக்தர்களின் முடியை பயன்படுத்தும் விக்குகளைத் தயாரிக்கும், இந்திய மற்றும் வெளிநாட்டு, நிறுவனங்களுக்குஅளித்தது. அதன் மூலம், வருடத்திற்கு 10 - 15 மில்லியன் டாலர் வருவாய் சம்பாதித்தது (குபேரனுக்கு மகாவிஷ்ணு அடைக்க வேண்டியக் கடனில் இதுவும் அடங்கும்). பக்தர்களுக்கு மீண்டும் வளர்ந்து விடும் என்பதால், முடி வர்த்தகம் மற்றப் பொருட்களின் வர்த்தகம் போல் நடத்தப்படுகிறது. இத்தகையச் சேவை செய்யும் பக்தர்களுக்கு, திருப்பதியில் நுழையும் டிக்கெட்டின் விலையைக் குறைக்கலாம்.
மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களினால், மக்கள் தங்கள் வாழ்க்கை நீண்டு விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், மனித உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பே இருக்கிறது. மக்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய (அவ்வாறுச் செய்து, தங்கள் லாபத்தைக் கூட்டிக் கொள்ள), மருத்துவ ஸ்தாபனம் அறுவைச் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால், மருந்துக் கண்டுப்பிடிப்புகளிலும் மறு உற்பத்தி சிகிச்சைகளிலும் முன்னேற்றம் பெரிய அளவுக் காணவில்லை. இதனால், அசாத்திய சிகிச்சைகளைத் தேடுபவர்கள், அறுவைச் சிகிச்சைகளில் தங்களது நம்பிக்கையை வைக்கின்றனர். வயதுக் கூட, அவர்களது உடல் மெதுவாக நோய்ப்பட ஆரம்பிக்கிறது. அறுவைச் சிகிச்சையின் அடிப்படை மூலப் பொருளாக உடல் பாகங்கள் விளங்குவதனால், சிகப்புச் சந்தை இன்னும் பல காலம் கொடிக்கட்டிப் பறக்கும். நாடுகள், உடல் பாகங்களுக்கு முற்றிலுமாகப் பணம் கொடுப்பதைத் தடை செயதால், அந்த வர்த்தகம், வெளிப்படையாக நடப்பதற்குப் பதிலாக, திருட்டுத்தனமாக நடக்கும். அதற்கு மாறாக, மனித உடல் பாகங்களைப் பொருட்களாகப் பாவித்து, அவற்றிற்குப் பணம் அளிப்பதன் மூலம், கீழ்த்தரத்திற்குக் கொண்டு செல்லும் பந்தயமாக அமையும். மனித உடல் பாகங்களின் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மைக் காட்டுவதனால், அந்த உடல் பாகங்களின் மூலமாக இருக்கும் கொடையாளிகளின் பங்கை, உலகின் மருத்துவ ஸ்தாபனங்கள் அங்கீகரிக்கும். இன்றையக் காலக்கட்டத்தில், அது நடப்பதில்லை.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
பாடிப் ப்ரோக்கர்ஸ் - இன்ஸைட் அமெரிக்காஸ் ட்ரேட் இன் அண்டர்க்ரவுண்ட் ரிமேயின்ஸ் - ஆன் சேனி
ஸ்டிஃப் - தி க்யூரியஸ் லைவ்ஸ் ஆஃப் ஹ்யுமன் கடவெர்ஸ் - மேரி ரோச்
தி கிஃப்ட் ரிலேஷன்ஷிப் - ரிச்சர்ட் டிட்மஸ்
ஸ்ட்ரேஞ்ச் ஹார்வெஸ்ட் - லெஸ்லி ஷார்ப்


* - கே.பாலச்சந்தர் மன்னிப்பாராக

No comments: