உன்னை அறிந்தால்

சுருக்கம்:
நகரங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியினால், மக்கள், வாகனப் போக்குவரத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்தப் புத்தகம் உலகத்தில் பல்வேறுப் பகுதிகளில் மக்களின் போக்குவரத்துப் பழக்க வழக்கங்களை அலசி ஆராய்கிறது. மனிதர்கள், ஓட்டுநர்களாகும் பொழுது எவ்வளவுச் சிக்கல்மிக்கவர்களாக ஆகிறார்கள் என்பதை ஆராய்கிறது. போக்குவரத்து நெரிசல் உருவாகுவது பற்றியும் அதனைக் குறைக்க வேண்டியச் சில வழிகளையும் அலசுகிறது. உலக அளவில், இன்றையப் போக்குவரத்து உள்கட்டமைப்பு எவ்வாறு வந்தது என்பதையும் இன்று நாம் அசாத்தியமாக எடுத்துக் கொள்ளும் போக்குவரத்து நடைமுறைகளைச் செயல்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் விவரிக்கிறது (உதாரணமாக, போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் சமிக்ஞைகளான சிவப்பு (நில்) மற்றும் பச்சை (செல்) நிறங்கள் நீண்ட காலச் சோதனைகளாலும் ஓட்டுநர்களின் நடத்தைகளை மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாலும் உண்டானவை. எனினும், நிறக்குருடு உள்ளவர்களில் 10  சதவிகிதத்தினருக்கு அந்த நிறங்கள் சாம்பல் நிறமாகத் தெரிகிறது. அந்த நிறங்களை நீலம் மற்றும் மஞ்சளாக மாற்றினால் பயனுள்ளதாக அமையும்) .
இந்தியா-வின் போக்குவரத்தை, மேற்கத்திய நாட்டினரும், சில இந்தியர்களும், அபாயகரமான அளவிற்கு ஒழுங்கற்றுச் செல்வதாகக் குறைக் கூறுகின்றனர்.  இந்தியா-வின் (மற்றும் சீனா-வின்) போக்குவரத்தின் அபாய நிலைமையை அலசி அங்குள்ள லஞ்ச ஊழல் மிகுந்த அளவில் பரவி இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்று முடிவு செய்கிறார். இந்திய ஓட்டுநர்களின் அபாயகரமான போக்குவரத்துப் பழக்க வழக்கங்கள், அவர்களின் உள்ளார்ந்தப் பண்பு என்பதை விட, அவர்கள் தினமும் காணும் போக்குவரத்தின் விளைவினால் வந்தது என்றுக் கூறுகிறார். பல நாடுகளில் புதிய போக்குவரத்துச் சலைகளைக் கட்டுவது, அங்குள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, அவற்றை மோசமாக்குகின்றன என்றும் அதனால் சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது என்றும் கூறுகிறார். நடத்தை உளவியலின் கோட்பாடுகளை ஓட்டுநர்களின் கண்ணோட்டத்தில் இருந்து இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் சராசரி ஒட்டுநர், போக்குவரத்தைச் சமாளிக்கும் அணுகுமுறைகளைப் பற்றிப் படித்தாலும், இதுவரையில் சொந்த அனுபவத்தில், போக்குவரத்துத் திறன் மேம்படவில்லை.
அலசல்:
உலகில் சில நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் உள்ளச் சாலைப் போக்குவரத்து, அறிவியல் புனைக்கதை ஆசிரியர் டக்ளஸ் ஆடம்ஸ் மனித நிலையைப் பற்றித் தனதுப் புத்தகமான ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி காலக்ஸியில் 'மக்கள் கருத்தில், ஆரம்பக் காலத்தில் மரத்தில் இருந்து இறங்கி வந்ததேத் தவறு என்றும், சிலர் கடலை விட்டு விட்டு மரத்தில் ஏறியதேத் தவறு என்று நினைத்தனர்' என்றுக் கூறியதை மெய்யாக்குவதைப் போல் இருக்கிறது. வரலாற்றுக்கு முந்தையக் காலத்தில் காடுகளில் அலைந்துக் கொண்டிருப்பதை விட, கார்களில் செல்வது உயர்த்தியானது என்றுக் கருதினாலும், மனிதர்களின் முளையின் பரிணாம வளர்ச்சி மிக நிதானமாகவே நிகழ்கிறது. கார்களும் ட்ரக்குகளும் ஓட்டுநர்களுக்கு அதிக அளவு  நன்மைகளை அளித்தாலும், அவை ஓட்டுநர்களுக்கும் பாதசாரிகளுக்கும் உடம்பு ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான இன்னல்களுக்குக் காரணமாக இருக்கின்றன.
தொல் பொருள் ஆய்வின் மூலம், பண்டையக் காலத்தில் ரோம் நாட்டில், அங்குள்ள பாம்ப்பேய் நகரில் ரதங்கள் ஒரு வழிச் சாலைகளில் சென்றதுத் தெரிய வந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் குதிரை வண்டிகளின் போக்குவரத்து அதிகரித்த பொழுது, லண்டனின் சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் அந்த நகரத்தின் நிகழ்ந்த இறப்புகளின் பிரதானக் காரணமானது. நியூ யார்க் நகரில், 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வாரத்திற்கு 4 பாதசாரிகள், குதிரை வண்டிகளால் விபத்துகளில் கொல்லப்பட்டனர். மிதிவண்டிகள், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிக அளவில் போக்குவரத்தில் தோன்றிய பொழுது, சாலையில் சென்றுக் கொண்டிருந்த மற்றப் போக்குவரத்து மீண்டும் உருமாற்றம் கண்டது. போக்குவரத்தில் புதிய வண்டிகள் தோன்றும் பொழுது, சாலைகளில்  சென்றுக் கொண்டிருந்த ரதங்கள், குதிரை வண்டிகள், மிதி வண்டிகள் மற்றும் கார்கள் பொதுவான இடத்தைப் பங்குக் கொள்ள வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. மற்ற வண்டிகளைக் காட்டிலும் மிதமிஞ்சிய வேகத்துடன் கார்கள் சென்றதனால், போக்குவரத்தில் உள்ள மக்களிடையே நிகழும் பரிமாற்றங்களின் வேகமும் கூடியது.
காரில் செல்லும் பொழுது ஓட்டுநருக்கும் வெளி உலகுக்கும் இருக்கும் வாய்மொழிப் பரிமாற்றம் அகற்றப்படுகிறது. அந்தத் தொடர்பு சமிக்ஞைகளின் மூலம் செயல்பட வேண்டியக் கட்டாயம் ஏற்படுகின்றது. இந்தியா-வில் போக்குவரத்து கூச்சலாக இருப்பதன் காரணம், தங்களது இருப்பைத் தெரிவிக்க காரின் ஹார்னை அமுத்துமாறு ஓட்டுநர்கள் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். கார்களின் ஓட்டுநர்களிடையே தொடர்புக் குறைவாக இருப்பதனால், மற்ற ஓட்டுநர்களைப் பொதுப்படையாகக் கருதுகின்றனர் - உதாரணத்திற்கு, பெண்கள் மோசமாக ஓட்டுபவர்கள்.  எதிர்கொள்ளும் ஓட்டுநர், நம்மைப் போன்றவராக இருந்தால், அந்தப் பொதுப்படைக் கருத்தின் தீவிரம் குறைகிறது - எதிர்கொள்ளும் ஓட்டுநர், நம்மைப் போன்றக் காரை ஓட்டிக் கொண்டிருந்தால், அவரைப் பற்றி நல்லதாகச் சிந்திக்கத் தோன்றும். அமெரிக்கா-வில் காரின் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள், எவ்வளவு சில்லறைத்தனமாக இருந்தாலும், அந்த ஓட்டுநர் உலகில் மதிப்பிடும் செயல்களை உலகிற்குப் பறைசாற்றப் பயன்படுகின்றன. அந்த ஓட்டுநரை சாலையில் எதிர்கொள்பவர்கள், கார் அவருடையதா அல்லது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியதா என்றுச் சிந்திப்பதில்லை. ஓட்டுநர்கள், தங்களது ஓட்டும் திறன் குறைவாக இருந்தாலும், தங்களது மனதில் தங்களுடைய ஓட்டும் திறனை மிகையாக எண்ணிக் கொள்கின்றனர்(இது சராசரியை விட அதிகமான விளைவு என்று அழைக்கப்படுகிறது). ஓட்டுநர்களுக்கு, சாலைகளிலிருந்து உடனடியாகப் பின்னூட்டம் கிடைக்காததாலும், ஏனைய ஓட்டுநர்களிடம் வாய்த் தொடர்புக் கொள்வதன் கஷ்டத்தினாலும், கிடைக்கின்றப் பின்னூட்டம் ஓட்டுநர்களுக்கு,  சாதகமாக (சிறந்தக் கண்ணோட்டத்தில்) அல்லது நடுநிலையாக (மோசமானக் கண்ணோட்டத்தில்), இருக்கிறது. ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் பின்னூட்டமாக, போக்குவரத்துத் துறைப் பொறியாளர்கள், சாலையின் பக்கத்தில், ஓட்டுநர்களின் கண் பார்வைக்கு ஏற்ற உயரத்தில், கார்களின் வேகத்தைக் காட்டும் மின்னணுக் காட்சிகளை வைக்கின்றனர்.  போக்குவரத்துக் காவல்துறையினர், ஓட்டுநர்களுக்கு அபராதச் சீட்டு (அதி வேகமாக ஓட்டியதனால்) வழங்கினால், அதைத் தங்களது ஓட்டும் திறனின் எதிர்மறைப் பின்னுட்டமாகக் கருதுவதை விட, காவல்துறைக்கு அந்த மாத ஒதுக்கீட்டை எட்டுவதற்குச் செய்யப்படும் முயற்சியாகக் கருதுகின்றனர். காரில் தனியாக ஓட்டிச் செல்பவர்கள், மற்ற ஓட்டுநர்களுடன் தொடர்புக் கொள்வதன் கஷ்டத்தினாலும், காரினால் கிடைக்கும் அநாமேதயத்தினாலும், மெத்தனமாக ஓட்டுகின்றனர். காரில் மற்றப் பயணிகள் இருந்தால், அந்த மெத்தனப் போக்குக் குறைகிறது.  கார் ஓட்டுநர், காரைத் தன் அடையாளமாகக் கருதினாலும், உடன் இருக்கும் பயணிகள் அவ்வாறுக் கருதுவதில்லை. அதன் விளைவாக, சில சமயங்களில், உடன் இருக்கும் பயணிகள் தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது, ஓட்டுநர்கள், தங்களது தன்அடையாளத்தைக் குறைச்சுட்டிக் காட்டப்படுவதாக எடுத்துக் கொள்கின்றனர். காரில் மற்றப் பயணிகள் இல்லாமல் செல்லும் ஓட்டுநரின் நடத்தைகள், வளையதலத்தில் இருக்கும் அரட்டை அறைகளில் புனைப்பெயரில் பங்கேற்பவர்களின் மெத்தனப் போக்கிற்குச் சமமாக இருக்கிறது. இரு இடங்களிலும், முகத்திற்கு நேராக உடனடிப் பின்னூட்டம் கிடைக்கவில்லை என்பதால், மற்றவர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும் தன்னைப் பற்றி மிதமிஞ்சிய அளவிற்குத் தற்பெருமை அடித்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர் (இதனை, 'தங்களது உண்மையான வெளிப்பாடு' என்றுக் கூறி அதனை நியாயப்படுத்துகின்றனர்). வரலாற்றிற்கு முன் இருந்தக் காலத்தில், மற்றவருக்கு நல்லதுச் செய்தால், உடனடியாக அல்லது வருங்காலத்தில் அதற்குப் பரிபலனாக தனக்கு நன்மைக் கிட்டுவதற்குரியச் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருந்தன. இதனை, 'ரெஸிப்ரோக்கல் ஆல்ட்ரூயிஸம்'  என்று அழைக்கின்றனர். போக்குவரத்தில், மற்ற ஓட்டுநர்கள் நமக்கு நல்லதுச் செய்தால், அவ்வாறு நன்மைச் செய்தவருக்கு வருங்காலத்தில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது (அவரை மீண்டும் சந்திப்போம் என்றச் சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்தாலும்). காரின் வேகம் ஒரு மணி நேரத்தில் 20 மைல் செல்லும் வேகத்தைக் கடந்தவுடன், மனிதர்களின் செயலாக்கத் திறன் மலிவடைகிறது. இதனால், 'ரெஸிப்ரோக்கல் ஆல்ட்ரூயிஸம்' அதிக வேகங்களைக் காட்டிலும், குறைந்த வேகங்களில் நடப்பது சாத்தியம்.
ஓட்டுநர்கள், சாலைகளில் உள்ளப் பாதைகளில் சிக்கி வேகம் குறைந்தால், அவர்களின் கண்ணோட்டத்தில், அந்தச் சாலையில் உள்ள மற்ற பாதைகள் வேகமாகச் செல்வது போன்றுத் தெரிகிறது. பலப் பாதைகளை அடங்கியச் போக்குவரத்துச் சாலைகள், ஒரு இலக்கை அடைவதற்குக் காத்துக் கொண்டிருக்கும் பல வரிசைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது. தனது வரிசையில் தனக்குக் கிடைத்த இடம் பிடிக்கவில்லையென்றால், (மற்றவர்களைக் காயப்படுத்தாதவரைக்கும்), மற்றோரு வரிசைக்குத் தாவலாம். இவ்வாறுப் பல வரிசைகள் உள்ள இடங்களில் நிற்பவர்கள் (மெக்டோனால்ட்-களில் உள்ள வரிசைகளைப் போல), ஒரு இலக்கை அடைய ஒரே வரிசையில் நிற்பவர்களை விட, குறைந்த அளவில் திருப்தி அடைகின்றனர் என்று ஆராய்ச்சி முடிவுகள் கண்டுள்ளன. நடத்தை உளவியலில் உள்ள ஒருக் கோட்பாடான 'லாஸ் அவெர்ஷன்' மூலம் இதனை விளக்கலாம். அதன்படி, மனிதர்கள், தங்களுக்கு நிகழும் வெற்றிகளை விடத் தோல்விகளுக்கு அதிக மதிப்பு அளிக்கின்றனர். ஒரு வரிசையில் நிற்பவர்கள், தங்களுக்கு முன்னும் பின்னும் மட்டும் கண்காணிக்கின்றனர். தங்களுக்குப் பின்,அதிக அளவில் மக்கள் வரிசையில் நின்றால், அந்த இடத்தின் மதிப்பு அங்கு நிற்பவரின் மனதில் பெரிதாகத் தோன்றுகிறது(கண்ணதாசன் கூறியது போல் - 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' ). பல வரிசைகள் இருக்கும் இடங்களில், மக்கள் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டிருப்பதோடு, தங்களது இருப் பக்கத்திலும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. இதனால், தங்களுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்காணிப்பதுக் குறைவதினால், வரிசையில் தங்களது இடத்தின் மேல்  வைத்திருக்கும் மதிப்புக் குறைகிறது.
சாலைகளில் பழுது வேலை செய்யப்படும் தருணங்களில், ஓட்டுநர்கள் அந்தச் சாலையில் உள்ள மற்றப் பாதைகளில் செல்ல வேண்டியிருக்கிறது. பழுது செய்யப்படும் இடத்திற்கு வெகு முன்னதாகவே, அதைப் பற்றிய எச்சரிக்கைகள் சாலை ஓரத்தில் எழுப்பப்படுகின்றன.  சில ஓட்டுநர்கள், இந்த எச்சரிக்கைகளைப் படித்து விட்டு, முன்னதாகவே அந்தச் சாலையில் உள்ள மற்றப் பாதைகளில் இணைகின்றனர். இவர்களை, சீக்கிரமாக இணைபவர்கள் என்று ஆசிரியர் விவரிக்கிறார். மற்ற சிலர், பழுதுப் பார்க்கப்படும் பாதையில் சென்று (பாதை மூடப்படுகிறது என்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல்), அந்தப் பாதை (தற்காலிகமாக) மூடப்படும் இடத்திற்குச் சற்று முன்னால், அந்தச் சாலையின் மற்றப் பாதைகளில் இணைகின்றனர். இவர்களை, தாமதமாக இணைபவர்கள் என்று ஆசிரியர் விவரிக்கிறார். சீக்கிரமாக இணைபவர்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இட்ட விதிகளுக்கு இணங்கிச் செயல்படுவதாகத் தங்களைத் தற்பெருமையுடன் கருகின்றனர். தாமதமாக இணைகின்றவர்கள், காலியாக இருக்கும் பாதையைப் பயன்படுத்துவதால், சாலையின் ஒட்டுமொத்த போக்குவரத்தின் மேம்பாட்டைக் கருதிச் செயல்படுவதாக மார்தட்டிக் கொள்கின்றனர். ஆராய்ச்சியாளர்களின் கணிப்பில், ஓட்டுநர்கள் அவரவர் பாதைகளில் இருந்துக் கொண்டு, பழுதுப் பார்க்கப்படும் இடத்திற்குச் சற்று முன்னர், மற்றப் பாதைகளில் இணைந்தால், அந்தச் சாலையில் அதிக அளவில் ஊர்திகள் செல்ல முடியும் என்றுக் கண்டுப்பிடித்துள்ளனர்.
ஓட்டுநர்கள் தினமும் ஒரேப் பாதையில் தங்களதுக் கார்களைக் கொண்டு சென்றால், அந்தப் பாதையின் முடிவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை, நடத்தை உளவியலில், 'ரீஸென்ஸி பையஸ்' என்றக் கோட்பாட்டின் மூலம் விளக்கலாம். இதனால், கார் விபத்தில் அகப்பட்டால், தாங்கள் செய்தத் தவறுகள், பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தால், அதை ஓட்டுநர்கள் மறந்து விடுகின்றனர். விபத்துகள் நடந்தால், அதில் தங்களதுப் பாகத்தை எவ்வளவு அளவுக் குறைத்துச் சொல்ல முடியுமோ, அந்த அளவிற்குக் குறைத்துச் சொல்கின்றனர். இவ்வாறு ஓட்டுநர்கள் செய்வதற்குப் பின் ஒரு விதி இருக்கிரது - பேக்கர் விதி - 'ஓட்டுநர்கள், தங்களுக்கு நடக்கும் விபத்துகளில், நம்பகத்தன்மைக் குறையாமல் தங்களதுக் குற்றத்தை அதிகப்பட்ச அளவில் குறைக்கும் அளவிற்குத் தங்கள் பங்கினை ஒத்துக் கொள்வார்கள்'. தினமும், ஒரேப் பாதையில் செல்லும் ஓட்டுநர்கள் அதில் சலித்து (அல்லது சோர்ந்து) விடுவர். அதற்கு எதிர்மாறாக, தங்களதுப் பாதையில் வரும் ஒவ்வொருத் தடையையும் மிகக் கூர்மையாகக் கவனிக்கும் ஓட்டுநர்களின் மன அழுத்தம் கூடி விடும். தங்களது வழக்கமானப் பயணத்தினால் சலித்து விடும் ஓட்டுநர்கள், தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவுச் செய்வதாக எண்ணி மற்றச் செயல்களில் தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர் (உதாரணத்திற்கு, புத்தகங்கள் படிப்பது, சிகை அலங்காரம் செய்வது, சவரம் செய்வது). ஒரே நேரத்தில் பல பணிகள் செம்மையாகச் செய்வதாகப் பலர் கூறினாலும், ஆராய்ச்சியில், மனிதர்கள் ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வதில் தேர்ந்தவர்கள் அல்ல என்றுத் தெரிய வந்துள்ளது. மற்றொருச் செயலில் ஈடுபடும் கார் ஓட்டுநர்கள், இரண்டுக் காரியங்களிலும் குறைந்தத் திறமையோடுச் செயல்படுகின்றனர் - முதன்மைச் செயலான கார் ஓட்டுவதிலும், இரண்டாவதாகச் செய்யும் செயலிலும். தாங்கள் செய்ய வேண்டியச் செயல்களைச் செய்ததாகக் காட்டிக் கொள்ள பல பணி அணுகுமுறைப் பயனளிக்கிறதேத் தவிர, அந்தச் செயல்களுக்குத் தங்களது முழுமையானக் கவனத்தைச் செலுத்த முடிவதில்லை. ஓட்டுநர்கள் விபத்துகளில் சிக்குவது, 2 விநாடி விதி என்ற விதியைக் கடைப்பிடிக்கிறது - 2 விநாடிகளுக்கு மேல், ஓட்டுநர்களின் முன்னோக்கியக் கவனம் தவறினால், விபத்துகள் நிகழ்கின்றன. 2 விநாடிகளுக்கு மேல் தங்கள் கவனம் சாலையில் இருந்துத் தவறியப் பிறகு மீண்டும் சாலையில் தங்கள் கவனத்தைச் செலுத்தும் பொழுது, ஓட்டுநர்களின் மூளை, அந்த இரு விநாடிகளுக்கு முன் சாலையைப் பற்றி மூளை வைத்திருந்தப் புகைப்படத்தை வைத்து முன்னோக்கிச் செல்கிறது. கார்களின் வேகங்கள் இன்றையக் காலத்தில் அதிகமானதால், சாலையின் புதிய நிலைமையை புரிந்துக் கொள்ள மூளைக்குச் சிரமமாக இருக்கிறது. ஓட்டுநர்களுக்கு, கைப் பேசியில் பேசுவது, அதில் எண்களை அழுத்துவதற்கு இணையான அபாயத்தை அளிக்கிறது. கைப் பேசியில் எண்களை அழுத்தும் பொழுது, ஓட்டுநரின் முன்னோக்கியக் கவனம் சாலையிலிருந்துக் கைப் பேசிக்கு மாறுகிறது. கைப் பேசியில் பேசும் பொழுது ஓட்டுநரின் முன்னோக்கியக் கவனம் சாலையின் மீது இருந்தாலும், அவரது மூளை, சாலையில் இருந்து வரும் பின்னூட்டத்தைக் கவனிப்பதோடு, கைப் பேசியில் நடக்கும் பேச்சு வார்த்தையிலும் கவனம் செல்கிறது. மேலும், கடினமான ஒருக் கேள்விக் கேட்க்கப்படும் பொழுது, ஓட்டுநர்களின் கண்கள், அவர்கள் அறியாமலேயே, மேல் நோக்கிச் செல்லும். ஓட்டுநர், காரின் திசைமாற்றி மீது இரு கைகளை வைத்திருந்தாலும், அவர்களது முன்னோக்கியக் கவனம் குறைந்தே இருக்கும்.
ஓட்டுநர்கள், நடத்தை உளவியலின் ஒரு கோட்பாடான கவனக்குறைவால் நிகழும் குருட்டுத்தன்மையால் அவதிப்படுகின்றனர் - வட்டமான வியூகத்தில்  நிற்கும் மக்களிடம், ஒரு கூடைப்பந்தைக் கொடுத்து அவர்களுக்கிடையே அதை பகிர்ந்துக் கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அந்த வியூகத்தில், ஒரு பாதி மக்கள் வெள்ளை உடையை அணிந்திருந்தனர். மீதிப் பாதி மக்கள், கருப்பு உடையை அணிந்திருந்தனர். அந்தக் காணொளியை, வாடிக்கையாளர்களிடம் காட்டி, பந்தைப் பகிர்ந்துக் கொண்ட எண்ணிக்கையைக் கணிக்கக் கோரினர். அந்த வாடிக்கையாளர்களிடம், பந்தைப் பகிர்ந்துக் கொண்டிருக்கும் பொழுது, கொரில்லா உருவ வேடத்தில் ஒருவர் வட்ட வியூகத்தைக் கடந்ததைப் பற்றிக் கேட்டனர். வாடிக்கையாளர்களில் பாதிக்கும் மேலானோர், கொரில்லா உருவத்தைக் கவனிக்கவில்லை என்றனர். அதே ரீதியில், ஓட்டுநர்கள், தங்களது எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக நடக்கும் நிகழ்வுகளுக்கு மெதுவாகப் பதிலளிக்கின்றனர். இதனை, ஸ்ட்ரூப் எஃபெக்ட் என்று அழைக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வர்ணங்களின் பெயர்களைக் காட்டினர் - சில வார்த்தைகள் அவைச் சித்தரிக்கும் வர்ணத்தில் எழுதப்பட்டிருந்தன (உதாரணமாக, கருப்பு என்னும் வார்த்தை, கருப்பு மையில் எழுதப்பட்டிருந்தது). மற்ற வார்த்தைகள், அவைச் சித்தரிக்கும் வர்ணங்களில் இருந்து வேறுபட்டு இருந்தன(உதாரணமாக, கருப்பு என்னும் வார்த்தை சிகப்பு வர்ணத்தில் எழுதப்பட்டிருந்தது). அவ்வாறு, வர்ணங்களின் பெயர்கள் வேறுபட்ட வர்ணங்களில் எழுதப்பட்டிருந்தால், அதனைப் படிப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு அதிக நேரம் எடுத்தது.
ஓட்டுநர்களின் கண்கள், அவர்கள் சுற்றும் உலகைப் பற்றி நிறைய அனுமானிக்கின்றன. கார்களின் அதிகரித்த வேகங்களில், மூளை மற்றும் கண்களால் இயற்றப்பட்ட உலகம் (வரலாற்றிற்கு முன் இருந்தக் காலக்கட்டத்தில், அது மனிதர்களின் வாழ்க்கைக்கு ஏதுவாக இருந்தது) நிஜ உலகத்தில் இருந்து வேறுபடுகின்றது. விரைவாகச் செல்லும் கார்களின் சக்கரங்களைப் பார்க்கும் பொழுது, அவைப் பின்னோக்கி சுழல்வது போல் இருக்கின்றன. இது வாகன் வீல் எஃபெக்ட் என்று அழைக்கப்படுகிறது. ஓட்டுநர்களின் கண்கள்  சக்கரங்களின் சுழற்சியின் வேகத்திற்கு ஈடுக் கொடுக்க முடியாததால், சக்கரத்தின் புதிய நிலையை அதன் பழைய நிலையோடுக் குழப்பிக் கொள்கிறது. கார்களில் அமர்ந்திருக்கும் பயணிகள், கார்களுக்கு வெளியில் இருக்கும் பொருட்கள் அருகில் இருந்தால் மெதுவாகச் செல்வதையும் தொலைவில் இருந்தால் விரைவாகச் செல்வதையும் தூரத்தில் இருக்கும் மலைகள் கார் செல்லும் திசையில் செல்வதையும் காண்பார்கள். இதற்கு 'மோஷன் பாரலாக்ஸ்' என்றுப் பெயர் - காரின் ஜன்னலில் இருந்துப் பார்க்கும் பொழுது, கார் செல்லும் திசைக்கு எதிராக பயணிகளின் கண்கள் செல்ல வேண்டும். பயணிகள் பார்க்கும் இடத்திற்கு முன் இருக்கும் பொருட்கள், அவர்களின் விழித்திரையைத் தாண்டி, கார் செல்லும் திசைக்கு எதிராகச் செல்கின்றன.  பயணிகள் பார்க்கும் இடத்திற்குப் பின் இருக்கும் பொருட்கள், அவர்களின் விழித்திரையைத் தாண்டி, கார் செல்லும் திசையில் செல்கின்றன.
அதிக அளவுப் போக்குவரத்துச் செல்லும் நேரத்தில், ஓட்டுநர்களின் நடத்தை, பூச்சிகள் உலகின் நடவடிக்கைகளை ஒத்து இருக்கிறது. ஆசிரியர், 3 விதமானப் பூச்சிகள் கூட்டத்தில் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை வைத்து, அதிகப் போக்குவரத்து நேரங்களில் ஓட்டுநர்களின் நடத்தைகளுக்கு உரியப் பாடங்ககளை அலசுகிறார். மார்மன் க்ரிக்கெட்ஸ் எனப்படும் பூச்சி, உணவை நோக்கிக் கூட்டமாகச் செல்லும் பொழுது தீவிரமாகப் போட்டிப் போடுகிறது. அந்தப் பூச்சிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்க, தங்களைச் சுற்றி இருக்கும் மற்றப் பூச்சிகளைச் (தங்கள் இனத்தில் உள்ளப் பூச்சிகளையும்)  சாப்பிடுகின்றன. அதனால், அந்தப் பூச்சிகள், ஒரேத் திரளாகச் செல்லும் பொழுது, தங்கள் அருகில் இருக்கும் பூச்சிகளைச் சாப்பிட முயலும் அதே நேரம், மற்றப் பூச்சிகள் தங்களைச் சாப்பிடாமல் இருக்கவும் முயற்சிக்கின்றன. அந்தத் திரளில் இருந்துத் தனிக்கப்பட்டப் பூச்சிகள் சுலபமாக மற்ற மிருகங்களுக்கு இரையாகின்றன. இது, சில மாநிலங்களில், போக்குவரத்துச் சட்டங்களைக் குறைவாக வைத்து, அவற்றை மிக்கத் தளர்ச்சியோடுச் செயல்படுத்துவதினால், அங்குள்ளப் போக்குவரத்து, ஓட்டுநர்களுக்கு அபாயமாக இருப்பதைப் போல் (ஓட்டுநர்கள் தங்களுடைய இலக்கைச் சென்று அடைந்தாலும்) இருக்கிறது.
பாலைவனத்தில் இருக்கும் வெட்டுக்கிளிகளுக்கு இரண்டு வேறுபட்ட ஆளுமைகள் உள்ளன - தனித்து இருக்கும் பொழுது, வேறு எவருக்கும் துன்பம் தராமல் இருக்கின்றன. வறட்சிக்குப் பிறகு, மற்றப் பூச்சிகளோடு உணவுத் தேடும் பொழுது, வெறிப்பிடிக்கிறது. சில ஓட்டுநர்கள், அமைதியாக மற்ற ஓட்டுநர்களுடன் ஒத்துழைப்பவர்களாக இருந்து, போக்குவரத்தில், அவர்கள் முன் வேறொரு ஓட்டுநர் வழியை மறிக்கும் பொழுது, மிகவும் வெறிப்பிடித்தவர்களாகச் செயல்படுகின்றனர். இந்த இருப் பூச்சிகளும், இன்றுப் போக்குவரத்துச் சாலைகளைச் சமாளிக்கும் ஓட்டுநர்களை ஒத்து இருக்கின்றன. நியூ வோர்ல்ட் ஆர்மி ஆன்ட் எனப்படும் எறும்பு, போக்குவரத்துச் சாலைகள் வருங்காலத்தில், அனைவருக்கும்
சாதகமாகச் செயல்படும் முறைகளைக் காட்டுகிறது. உணவுச் சேமிக்கச் செல்லும் பொழுது, இந்த எறும்புகள், மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் தங்களதுப் போக்குவரத்தை நிர்வகிக்கின்றன - எறும்புக் கூட்டை விட்டு உணவுச் சேகரிக்கச் செல்லும் எறும்புகள், சாலையின் இரு ஓரங்களில் உள்ளப் பாதையிலும், உணவைச் சேகரித்துக் கொண்டு வரும் எறும்புகள் நடுவில் உள்ளப் பாதையையும் பயன்படுத்துகின்றன. ஃபெரோமோன்ஸ் எனப்படும் ரசாயனப் பொருள் மூலம், இந்த எறும்புகள் மற்றப் பாதைகளில் செல்லும் எறும்புகள் மீது மோதாமல் செல்கின்றன. இதனை மனித ஓட்டுநர்களின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஓட்டுநர்கள் அவரவர் பாதைகளில் இருந்துக் கொண்டு, அவர்களுடையப் பாதைகள் வேலை நிமித்தத்தால் மூடப்படும் பொழுது, போக்குவரத்துச் செல்லும் மற்றப் பாதைகளில் கடைசித் தருணத்தில் இணைய வேண்டும்.
போக்குவரத்திற்கானச் சிலச் சாத்தியக் கூறுகள், தனிப்பட்ட முறையில் ஓட்டுநர்களுக்குச் சாதகமாக இல்லையென்றாலும் (அவர்களைக் காத்திருக்க வைத்தும், அவர்களது வேகத்தைக் குறைத்தும்) , போக்குவரத்து அமைப்பிற்குச் சாதகமாக அமைகிறது. அதில் ஒன்று, போக்குவரத்துச் சாலைகளுக்குள் நுழைவதற்கு முன், ஓட்டுநர்களை நிறுத்தி வைக்கும் ரேம்ப் மீட்டர்களைப் பயன்படுத்துவது. போக்குவரத்துச் சாலையில் உள்ளக் கார்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டத் தொடக்க நிலையைத் தாண்டாமல் இருக்கும் வரை, போக்குவரத்துச் சாலையில் உள்ளக் கார்கள் சீரான வேகத்தில் செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் தொடங்கும் பொழுது, கார்களின் எண்ணிக்கைக் கூடினாலும் போக்குவரத்து நிற்காமல் செல்லும். சாலைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், சாலையின் போக்குவரத்து சீராகச் செல்வதைப் பார்த்து, தங்களுடையக் கார்கள் ஏன் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றக் கேள்வியை எழுப்பலாம். ஆனால், நிறையக் கார்கள் சாலைக்குள் நுழைய, நிர்ணயிக்கப்பட்டத் தொடக்க நிலையின் எண்ணிக்கை அடைகிறது. இதனால், கார்கள் சாலையில் இணையும் பாதையில் முதலில் வேகம் குறைகிறது. அந்தப் பாதையில் இருக்கும் ஓட்டுநர்கள், அருகில் இருக்கும் பாதைகளில் இணைய முயலும் பொழுது, அந்தப் பாதைகளும் வேகக் குறைவு அடைகின்றன. போக்குவரத்துச் சாலையில் நுழையும் கார்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், சாலை நெருக்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்டத் தொடக்க நிலையை விடக் குறைவான எண்ணிகையை போக்குவரத்துப் பொறியாளர்கள் பராமரிக்கின்றனர். ஓட்டுநர்களின் கவனக் குறைவினால் போக்குவரத்துச் சாலையில் நெருக்கடி ஏற்படும் பொழுதும், சாலையில் அதிகக் கார்கள் நுழையாமல் தடுத்து நிறுத்த முடியும்.
ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை வெளிக்காட்டும் ஜி.டி.பி., உயரும் பொழுது, அதன் மக்களின் பண வளமும் கூடுகிறது. ஒரு தலைக்கு 5000 டாலர் அளவை ஜி.டி.பி அடையும் பொழுது, அதிகமான அளவுக் கார்களை மக்கள் வாங்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் கூடுகிறது. வரலாற்றில், உலகில் எங்கு இருந்தாலும், மக்கள் தங்கள் வேலைக்குச் சென்று வர சராசரியாக ஒரு மணி நேரம் செலவிடுவதை ஏற்றத்தக்கதாக மதிப்பிடுகின்றனர். கார்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால், மக்கள் தங்கள் வேலைக்குச் சென்று வருவதற்கு 2 அல்லது 3 மணி நேரம் ஆகிறது. உலகத்தில் தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெவ்வேறு இடங்களுக்குக் கூட்டிச் செல்வதற்காக அதிக அளவில் கார் ஓட்டுகின்றனர் - தனிக்குடும்பத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் வேலைக்குப் போய் வருவதில் தங்களின் பயணக் காலத்தைச் செலவிடுகின்றனர், தனிக்குடும்பத்தில் உள்ளப் பெண்கள் குழந்தைகளை அவர்களதுச் செயல்பாடுகளுக்குக் கூட்டிச் செல்கின்றனர். கூட்டுக் குடும்பங்கள் இருந்த நாட்களில், குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள விளையாட்டுத் திடல்களில் குறைவானக் கண்காணிப்பில்  நேரத்தைக் கழித்தனர். கூட்டுக் குடும்பங்கள் குறைந்ததனால், குழந்தைகளின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் அவர்களதுப் பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. இதனால், தனிக் குடும்பத்தில் உள்ளத் தாய்மார்கள், குழந்தைகளைப் பல இடங்களுக்குக் கொண்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. பண வளம் அதிகரிக்கும் பொழுது, தங்களது சம்பாதிப்பில் கூடுதல் அளவில் வீடு வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். நகரங்களில், விலைவாசியின் அளவு அதிகமாக இருப்பதனால், பெரிய அளவில் வீடு வாங்குவதுக் கடினமாக இருக்கிறது. அதனால், நகரங்களைச் சுற்றி இருக்கும் ஊர்களில், பெரிய வீடுகளை வாங்க முயல்கின்றனர். தங்கள் சம்பளத்திற்கேற்ப வாங்கிய வீடுகளில் குடி புகுந்துச் சில நாட்களுக்குச் சந்தோஷமாக இருக்கின்றனர். நாளடைவில், 'ஹெடானிக் அடாப்டேஷன்' எனப்படும் கோட்பாட்டினால், வாங்கிய பெரிய வீடு, சாதாரணமாகத் தோன்றுகிறது. அவர்களைப் போல் மற்ற மக்களும் அங்கு வீடுகளை வாங்குவதால், வேலைக்குச் போய் வர எடுக்கும் நேரம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதனால், வேலைக்குச் செல்லும் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டு, தங்கள் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். வீடு அடமானத்தில் வாங்கியிருப்பதால், உடனடியாக அதை விற்று வேறு இடத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதிக அளவில் மக்கள் நகரங்களைச் சுற்றி உள்ள ஊர்களுக்குக் குடியேறும் பொழுது, அங்குள்ள உள்ளூர் அரசியல் அமைப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் புதிய போக்குவரத்துச் சாலைகளைக் கட்டுகின்றனர். இதனால், கார்களின் போக்குவரத்து மேலும் அதிகரித்து, அனைவரும் போக்குவரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகிறது.
பிரம்மாண்டமான கடைகளைச் சுற்றியிருக்கும்  கார் நிறுத்தங்களில் பல ஓட்டுநர்கள், கடைக்கு மிக அருகில் தங்களதுக் கார்களை நிறுத்துவதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றனர். அதற்குப் பதிலாக, கிடைக்கும் முதல் இடத்தில் தங்கள் காரை நிறுத்தி விட்டு, கடைக்கு நடந்துப் போவதினால் நேரத்தைச் சிக்கனமாகச் செலவிட முடிகிறது. கார் நிறுத்தத்தைக் கண்டுப்பிடிக்க வேண்டிய நேரத்தை, ஓட்டுநர்கள் குறைவாக எடைப் போடுகின்றனர். நகரங்களில், தெருவில் கிடைக்கும் கார் நிறுத்தத்திற்குத் தேடுவதால், அங்குள்ளச் சாலைப் போக்குவரத்து தடைப்படுகிறது. நகரங்களின் தெருக்களில் கிடைக்கும் கார் நிறுத்தங்கள், இலவசமாக அல்லது மலிவானக் கட்டணத்தில் கிடைக்கின்றன. ஆனால், நகரங்களில் இருக்கும் கராஜ் கார் நிறுத்தங்களில், அதிக அளவில் பணம் செலவிட வேண்டியிருக்கிறது. கராஜ் கார் நிறுத்தங்கள், அதிக விலையாக இருந்தாலும், தெளிவான முறையில் கட்டணத்தை விளம்பரப்படுத்துவதால், ஓட்டுநர்கள் விரைவாக தங்கள் காரை அங்கு நிறுத்த முடிகிறது. தெருவில் இருக்கும் கார் நிறுத்தங்கள் மலிவானக் கட்டணமாக இருந்தாலும், அவற்றைக் கண்டுப்பிடிப்பதற்கு ஓட்டுநர்கள் அதிக நேரம் ஓட்ட வேண்டியிருக்கிறது. இதனால், நகரங்களில் உள்ளப் போக்குவரத்துத் தடைப்படுகிறது.
1950-களிலும் 1960-களிலும் போக்குவரத்துப் பொறியாளர்களும் வல்லுநர்களும் அதிக அளவில் போக்குவரத்துச் சாலைகளைக் கட்டினர். சமீப கால ஆராய்ச்சியில், இவ்வாறுப் புதியப் போக்குவரத்துச் சாலைகளைக் கட்டுவதால், போக்குவரத்து நெரிசல் குறைவதை விடக் கூடுகிறது. ஆசிரியர், இதற்கு உதாரணமாக, நியூ யார்க் நகரத்தில் உள்ள க்ரீன்விச் கிராமத்தில் இருந்த வாஷிங்க்டன் ஸ்குயர் பூங்காவைச் சுற்றி இருந்தச் சாலைகளில் அதிக அளவுப் போக்குவரத்துக் குறைந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அங்குள்ள சமூக ஆர்வலர்கள் புதியப் போக்குவரத்துச் சாலைகள் கட்டுவதை எதிர்த்ததனால், அதன் விளைவாக அந்தப் பூங்காவைச் சுற்றியப் போக்குவரத்து அதிக அளவில் குறைந்தது. இதனால், அந்தப் பூங்காவின் அருகில் வாழ்ந்து வந்த மக்கள் அந்தப் பூங்காவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடிந்தது. புதியப் போக்குவரத்துச் சாலைகள் போக்குவரத்து நெரிசலைக் கூட்டும் என்பதை விளக்குவதற்கு ப்ரேஸ் பெரடாக்ஸ் எனும் கோட்பாடுப் பயன்படுத்தப்படுகிறது. இரு நகரங்களுக்கு இடையே இரண்டுப் போக்குவரத்துச் சாலைகள் இருக்கின்றன - ஒன்று, போக்குவரத்து மெதுவாகச் செல்லும் பாதை. மற்றொன்று, போக்குவரத்து வேகமாகச் செல்லும் பாதை. முதல் சாலையில் சென்றால், ஓட்டுநர்களுக்குத் தங்கள் இலக்கை அடைய எப்பொழுதும் ஒரு மணி நேரம் எடுக்கும். இரண்டாவதுச் சாலையில் சென்றால், அதிகப் போக்குவரத்து இல்லை என்றால், இலக்கை அடைய அரை மணி நேரம் எடுக்கும். போக்குவரத்து நெரிசல் இருந்தால் இலக்கை அடைய ஒரு மணி நேரம் எடுக்கும். ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடைய எந்த வழியில் சென்றாலும் அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். இரு நகரங்களுக்கு நடுவில் ஒரு சாலை மற்றொருச் சாலையாக மாற்றினால், ஓட்டுநர்களின் மொத்த பயண நேரம் ஒரு மணி நேரமாகவே இருக்கிறது. இரு நகரங்களுக்கு நடுவில் ஒருப் பாலத்தைக் கட்டினால், இருத் திசைகளிலும் செல்லும் ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்துத் தப்ப முடியும். அவ்வாறுப் பாலம் கட்டப்பட்டால், ஓட்டுநர்களின் பயண நேரம் குறைவதை விட, இருச் சாலைகளுக்கும் அதிகமாகிறது. தனிப்பட்ட ஓட்டுநர்களின் நலனுக்காகச் செய்யப்படும் மாற்றம் ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பின் பயண நேரத்தைக் கூட்டுவதாக அமைகிறது.
வளர்ந்த நாடுகளில், ஓட்டுநர்கள், போக்குவரத்துச் சாலைகள் பொதுச் சொத்தாகக் கருதுகின்றனர். குடிநீர், தொலைபேசி போன்ற அரிதாகக் கிடைக்கும் மற்றப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவுச் செய்தாலும், போக்குவரத்துச் சாலைகளில் மக்கள் தங்கள் பங்கிற்குச் செலவுச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. சமீபக் காலத்தில், நகரங்கள், நெரிசலுக்கானக் கட்டணம், உள்ளே நுழையும் போக்குவரத்து வண்டிகளுக்கு விதிக்கும் பொழுது, ஓட்டுநர்களிடம் இருந்து மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த வருடம், அமெரிக்கா-வின் தலைநகரமான வாஷிங்க்டனில் அவ்வாறுக் கட்டணம் உயர்த்தப்பட்டப் பொழுது, ஓட்டுநர்களிடையே மிகுந்தக் கொந்தளிப்பைக் கிளப்பியது. ஆராய்ச்சியில்,
நெரிசலுக்காகக் கட்டணம் விதிக்கும் பொழுது, ஓட்டுநர்கள் தங்களதுப் பயணத்தைப் பற்றி ஆழ்வாகச் சிந்தித்து, நெரிசல் கட்டணத்தைக் குறைக்க, மற்றச் சாத்தியக் கூறுகளைப் (வேலைக்குச் சீக்கிரமாகச் வீட்டை விட்டுக் கிளம்புவது, குறைந்த நெரிசல் கட்டணம் உடைய மற்றப் போக்குவரத்துச் சாலைகளில் செல்வது, அரசுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது) பயன்படுத்துகின்றனர் என்பதுத் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா-விற்கும் ஐரோப்பாவிற்கும் போக்குவரத்துச் சாலைகளைப் பற்றிய அடிப்படைக் கொள்கை வேறுப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில், ரவுண்டானாக்கள் அதிகமாக உள்ளன. அமெரிக்கா-வில் போக்குவரத்துச் சந்திப்புகள் அதிகமாக் இருக்கின்றன. ஆராய்ச்சியில், ரவுண்டானா, சந்திப்புகளை விடப் பாதுகாப்பானவை என்றுத் தெரிய வந்துள்ளது - ரவுண்டானாவில் நுழையும் பொழுது, ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருக்க முன்னோக்கிக்  கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்துச் சந்திப்புகளில், ஓட்டுநர், முன்னோக்கிக் கவனம் செலுத்துவதற்குக் கூடுதலாக, இரு பக்கங்களிலும் கார்கள் திரும்புகின்றனவா என்றுக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால், ஓட்டுநரின் கவனம் சிதைந்து, அதிக அளவில் விபத்துகள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. போக்குவரத்துச் சாலையை ஆபத்தானது என்று ஓட்டுநர் நினைத்தால் அதுப் பாதுகாப்பாக இருக்கும். பாதுகாப்பாக இருக்கிறதே என்று நினைத்தால் அது ஆபத்தானதாக இருக்கும் என்று ஆசிரியர் கூறுகிறார்.
போக்குவரத்துச் சாலைகளில் பயன்படுத்தப்படும் அடையாளங்கள் ஓட்டுநர்கள் எதிர்வரும் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க உதவுகின்றன என்பதனால் கட்டப்படுகின்றன. ஆனால், ஆராய்ச்சியில், அவ்வாறுப் போடப்பட்ட அடையாளங்களை, ஓட்டுநர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை என்றுக் கூறுகிறார்கள். அதேப் போக்குவரத்துச் சாலையில் தினசரிச் செல்லும் ஓட்டுநர்கள், அந்த அடையாளங்களைப் பற்றி மறந்து விடுகின்றனர்.  அடையாளங்களை எழுப்பியதனால், போக்குவரத்துச் சாலைகளின் அருகில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளைச் சாலை அருகில் விளையாடுவதுப் பற்றிக் குறைவாகக் கவலைப்படுகின்றனர். இதனால், அதிக விபத்துகள் நிகழ்கிறது. பேர் போன போக்குவரத்துப் பொறியாளரான ஹான்ஸ் மோண்டர்மேன் என்பவர், நகரங்களில் போக்குவரத்துப் பற்றிய அடையாளங்களை அறவே அகற்ற வேண்டும் என்று வாதாடினார் - நகரங்களில் வாழ்பவர்களுக்கே அந்த நகரங்கள் சொந்தம் என்றும், வெளியூரிலிருந்து ஓட்டி வரும் ஓட்டுநர்கள், அந்த நகரங்களின் விருந்தாளிகள் என்பதால், நகரங்களில் வாழும் பாதசாரிகளை அனுசரித்துச் செல்லும் சுமை, ஓட்டுநர்களிடையே இருக்கிறது என்று வாதாடினார். அடர்த்தியாக மக்கள் இருக்கும் நகரங்களில், ஓட்டுநர்கள் பாதசாரிகளைத் தங்கள் கார் ஓட்டும் திறனிற்கு ஏற்ப மாற வேண்டும் என்று நினைப்பதைக் கைவிட்டு, தங்களது ஓட்டும் திறனிற்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றையப் போக்குவரத்து வல்லுநர்கள் அதற்கு எதிர்மாறாக, ஓட்டுநர்களின் ஓட்டும் திறனில் உள்ளத் தவறுகளை மன்னிக்கும் வண்ணம் போக்குவரத்துச் சாலைகளைக் கட்டுகின்றனர். போக்குவரத்துச் சாலைகளில் உள்ள பாதை அடையாளங்களும் வேகக் குறிப்புகளும் ஓட்டுநர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ப இருக்குமாறுச் செய்கின்றனர். இவ்வாறுச் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட வேகக் குறிப்புகளைக் கடந்து மிக வேகமாகச் செல்கின்றனர். அமெரிக்கா-வில், ஓட்டுநர்களின்சொகுசுக்கு ஏற்ப வேக அளவுகளை அதிகமாக வைத்திருக்கின்றனர். மற்ற வளர்ந்த நாடுகளில், வேக அளவுகளைக் குறைத்தும், வேகத் தடைகளை வைத்தும், வேகக் கேமராக்களை வைத்தும், ஓட்டுநர்களின் வேகத்தைக் குறைக்க முற்படுகின்றனர். அமெரிக்கா-வில் உள்ள வேகக் கேமராக்கள், ஓட்டுநர்களின் வேகத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்துவதற்குப் பதில், வேக அளவைக் கடப்பவர்களிடம் வாங்கும் அபராதத்தின் மூலம், உள்ளூர் அரசாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் உள்ளச் சாலைப் போக்குவரத்தின் அபாயம், மக்கள் அடர்த்தியாக இருப்பதனால் அதிகரிக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள், குறைவான மக்கள் அடர்த்தி இருக்கும் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டதால், மேற்கத்திய நாடுகளில் அவைச் செயல்படுவதுப் போல்  இந்தியா-வில் செயல்படுவதில்லை. இந்தியா-வில் உள்ள போக்குவரத்து விதிகள், பாதசாரிகளுக்குச் சாதகமாக இல்லை என்பதால், அந்த விதிகள் எல்லா இடங்களிலும் முறியடிக்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகள், வெவ்வேறு வண்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் செயல்படுத்தியிருக்கின்றன. இந்தியா-வில் அவ்வாறுச் செய்யாததால், மக்கள், சாலை விதிகளை மீறுகின்றனர். ஆராய்ச்சியில், போக்குவரத்துச் சந்திப்பில் உள்ளப் பாதசாரிகளுக்கான 'நட' சமிக்ஞை 30 விநாடிகளுக்கு மேல் இருந்தால், பாதசாரிகள், 'நட' சமிக்ஞைக்குக் காத்துக் கொண்டிருக்காமல், சாலையைக் கடக்க முயல்கின்றனர் என்றுக் கண்டுப்பிடித்துள்ளனர். அதனால், இந்தியா-வில், தாங்கள் செல்லும் இடங்களுக்குக் குறுக்குவழியில் செல்வதுப் பரவலாக உள்ளது.
ஒரு நாட்டின் ஓட்டுநர்கள், சாலை விதிகளை மதிப்பது, அந்த நாட்டின் லஞ்ச ஊழல் நிலைமையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. உலகத்தில் குறைய அளவில் லஞ்ச ஊழல் இருக்கும் நாடுகளான ஃபின்லாந்து, நியூ ஸிலாந்து, ஸ்வீடன், ஸிங்கப்பூர் போன்றவை, போக்குவரத்தில் ஓட்டுநர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன. உலகில் லஞ்ச ஊழல் அதிகமாக இருக்கும் நாடுகளில், போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு மிகவும் அபாயமாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், 1997-இல் இருந்து, 2002 வரை, நியூ யார்க் நகரத்தில், உள்ள ஐக்கிய நாடுகள் சபை அருகில் பல நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட கார் நிறுத்த அபராதச் சீட்டுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டப் பொழுது, லஞ்ச ஊழல் மிக அதிகமாக இருந்த   நாடுகளின் தூதரக அதிகாரிகள் மிக அதிகமாக அபராதச் சீட்டுகளையும், லஞ்ச ஊழல் குறைந்து இருக்கும் நாடுகளிலிருந்து அபராதச் சீட்டுகள் அல்லாமல் இருப்பதையும் கவனித்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்தப் பட்டியலில் நடுவில் வந்தனர். லஞ்ச ஊழலிலும் இந்தியாவிற்கு நடுவில் இடம் கிடைத்திருக்கிறது.
சமீபக் காலத்தில் தானியங்கி வாகனம் ஒன்று அமெரிக்கா-வில் சோதனையின் பொழுது ஒருத்தரைக் கொன்றச் செய்தி வெளியாகியது. தானியங்கி இயந்திரங்கள் தனித்தியங்கும் செயல்களைச் செய்வதில் திறன் கொண்டவை. ஆனால், மனித நடவடிக்கைகளின் வேறுபாடுகளைக் கையாள்வதில் சிரமப்படுகின்றன. ஓட்டுநர்கள் ஒரு வண்டியை இயக்கும் பொழுது பல வித முடிவுகள் எடுப்பதை ஒருத் தானியங்கி இயந்திரத்தால் செய்வது எவ்வளவுக் கடினம் என்று இதில் இருந்துத் தெரிகிறது. போக்குவரத்து வண்டிகளில் உள்ளத் தொழில்நுட்பங்களை, வல்லுநர்கள், ஓட்டுநர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்றக் காரணம் கூறி அவற்றை விற்கின்றனர். அந்தத் தொழில்நுட்பங்கள் ஆரம்பத்தில் விளம்பரப்படுத்துவது போல் எல்லா விதத்திலும் வெற்றிப் பெறுவதில்லை - அவைப் பல உயிர்களைக் காக்கின்றன. அதே நேரத்தில், ஆரம்பத்தில்  அவற்றைச் செயல்படுத்தும் பொழுது, வல்லுநர்கள் பறைசாற்றுவதை விடக் குறைந்த அளவிலேயே நன்மைகளை அளிக்கின்றன. கார் தயாரிப்பாளர்கள், போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பிற்காகப் பல அம்சங்களை வைத்தாலும், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஓட்டுநர்கள், கார்களை அதி விரைவாக ஓட்டுகிறார்கள். பாதுகாப்பு அம்சங்களால், தான் தவறுச் செய்தாலும், தங்களுக்கு அடிபடாது என்ற மூட நம்பிக்கையில் அவ்வாறு வண்டியை ஓட்டுகிறார்கள். ஆராய்ச்சியாளர்களிடையே, பெல்ட்ஸ்மேன் எஃபெக்ட் என்றக் கோட்பாடு (யூனிவர்ஸிடி ஆஃப் சிகாகோவின் ஸாம் பெல்ட்ஸ்மேன் என்பவரின் நினைவாக), ஓட்டுநர்கள், விபத்து நிகழும் வாய்ப்புகள் குறையும் பொழுது, அதைச் சரிகட்டும் அளவிற்கு, தங்களது ஓட்டும் திறனின் தீவிரத்தைக் கூட்டுகிறார்கள் என்றுக் கூறுகிறது. அதனால், அதிக அளவில், உயிர்ச் சேதமும் நிகழ்கின்றன. அமெரிக்கா-வில் உள்ளப் போக்குவரத்துச் சாலைகள், ஓட்டுநர்களின் தவறுகளை மன்னிக்குமாறு வடிவமைக்கப்பட்டதாலும், பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருப்பதாலும், முன் காலத்தில் ஓட்டுநர்களைச் சாகடிக்கும் தவறுகளில் இருந்து இன்றையக் கால ஓட்டுநர்கள் உயிருடன் தப்பித்துக் கொள்கின்றனர்.

No comments: