களவாணிக் கூட்டம் - இரண்டாம் பாகம்

சுருக்கம்:
இன்றைய நாளில், முதலாளித்துவம் எங்கும் வியாபித்து இருப்பதற்கு, ஐரோப்பிய நாடுகள், ஏகாதிப்பத்தியம், அடிமைத்தனம் மற்றும் நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்த (இதனைப் போர் முதலாளித்துவம் என்று ஆசிரியர் பெயரிடுகிறார்), அலாதி அளவில் வன்முறையைக் கையாண்டதன் பயனாகும். போர் முதலாளித்துவம் தேசிய தொழில்துறைகளை ஊக்குவிக்க எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும், லெஸெஸ்-ஃபேர் பொருளாதாரச் சித்தாந்தத்தைப் பரப்பும் இன்றைய கால பொருளாதாரப் பழமைவாதிகளும் மற்றும் லிபர்டெரியன்ஸ்  எவ்வளவு தவறாக இதனைக் காண்கின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தொழில்துறைப் புரட்சி இந்தியா மற்றும் சீனா-வில் மலராமல், பிரிட்டன்-இல் தோன்றியதற்குக்கான காரணங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.
1750-களில், பருத்தி வர்த்தகத்தில் இந்தியா உச்ச நிலையில் இருந்தது. இந்திய உழவர்கள், நூற்பவர்கள், நெசவாளிகள் மற்றும் அச்சிடுபவர்கள் ஒருங்கிணைத்து உருவாக்கிய பருத்திப் பொருட்கள், அவற்றின் நேர்த்திக்கும் தரத்திற்கும் பேர் பெற்று இருந்தன. பருத்தி வர்த்தகத்தின் உச்சத்தில் இருந்தாலும், நூறு பவுண்ட் பருத்தியை மூலமாக வைத்து, நூல் நோற்பதற்கு  இந்தியாவில் 50000 மணி நேரம் எடுத்தது. 1790-இல், பிரிட்டன்-இல் அதே அளவு பருத்தி நூல் 100 சுழல் கொண்ட இயந்திரத்தை வைத்து நோற்பதற்கு, 1000 மணி நேரம் தான் எடுத்தது. பிரிட்டன்-இன் உற்பத்தித் திறன் மேலும் கூட, அது 1795-இல் 300 மணி நேரமாகவும், 1825-இல் 135 மணி நேரமாகவும் அது குறைந்தது.  1830-இல் இருந்து 1860-க்குள், இந்தியா-வில் 20 லட்சத்திலிருந்து 60 லட்சம் பேர் பருத்தி உற்பத்தியில் வேலை வாய்ப்பு இழந்தனர். அதே நேரத்தில், பிரிட்டன், இந்தியா-வை, பருத்தியைச் சாகுபடி செய்யவும்,  பிரிட்டன்-இன் பருத்தித் தொழிலாளர்கள் உருவாக்கிய பொருட்களின் விற்பனை இலக்காகவும் கருதியதனால், தொழில் நுட்பத் திறன் அறவே அழிந்தது.
இன்றையக் காலக்கட்டத்தில், உலகளாவியப் பருத்தி வர்த்தகம், 1750-க்கு முன்னால் இருந்தச் சூழ்நிலைக்கு மீண்டும் திரும்பி இருக்கிறது - இந்தியா-வும் சீனா-வும் இணைந்து பருத்திச் செடி உற்பத்தியில் 50 சத விகிதத்திற்குச் சற்றுக் குறைவாக பங்கு வகிக்கின்றனர். பருத்திப் பொருட்கள் உற்பத்தியில் மீண்டும் ஆசியா கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த இடைக்காலத்தில், இந்தியா, எகிப்து மற்றும் ப்ரேஸில் நாடுகளின் பருத்தி வர்த்தக அழிவின் பயனாகவும், தொழில்துறைப் புரட்சியின் காரணமாகக் கிடைத்தச் செல்வாக்கின் மூலமும் ஐரோப்பா-வின் நாடுகள், எஞ்சிய உலக நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்தன.
இந்தப் புத்தகத்தில், போர்த்துகீஸியர்களிடம் ஆரம்பித்து, மற்ற ஐரோப்பிய நாடுகள், முதலில் தனியார் நிறுவனங்களின் மூலமாகவும், பின்னர், அரசுகளின் மூலமாகவும் வன்முறையைப் பயன்படுத்தி, இந்தியாவை மையமாகக் கொண்டுச் செம்மையாக வளர்ந்திருந்த பருத்தி வர்த்தகத்தை நிலைகுலையச் செய்ததை விவரித்திருக்கிறார்கள். அதே நேரத்தில், லட்சக்கணக்கான ஆஃப்ரிக்கர்களை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டி, அடிமைகளாக விற்று, அமெரிக்கக் கண்டத்திற்குக் கொண்டுச் செல்லும் நயவஞ்சகமான அடிமைத்தன அமைப்பையும் உருவாக்கினர்.  இன்றைய உலகின் பொருளாதார மேன்மை, தொழில்துறைப் புரட்சியின் பொழுது ஏற்பட்ட தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் கடன் போன்ற நிதிச் செயல்பாடுகளுக்கு மிக்கக் கடன் பட்டிருக்கிறது. அதே சமயம், சில மேற்கத்திய வர்ணணையாளர்கள், ஐரோப்பா-வின் நாடுகள் உலகின் எஞ்சியப் பகுதிகளின் மீது அளவுக்கடங்கா அழிவைக் கொணர்ந்ததைத் தவிர்த்து, தொழில்துறைப் புரட்சியை தங்களது வெற்றியாகக் கருதுவது (ஐரோப்பா-வில் நிகழ்ந்த என்லைட்டென்மென்ட் காலத்தின் பயனாக நடந்தது என்று அதை நியாயப்படுத்தி) வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியாகும்.
தொழில்துறைப் புரட்சி, ஏகாதிப்பத்தியம் மற்றும் அடிமைத்தனத்தினால் உருக்கொடுக்கப்பட்டது போல், அவை இரண்டும், அந்தப் புரட்சியின் தாக்கத்தால் புதிய வடிவுக் கொண்டன. இதன் விளைவே, இன்று நாம் உலகெங்கும் கடைப்பிடிக்கும் முதலாளித்துவமாக அமைந்திருக்கிறது.
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்தச் செயல்முறையில் ஈடுப்பட்டன. அதன் விளைவாக, உலகைத் தங்கள் அனுகூலத்திற்காக மாற்றி அமைத்து, பருத்தி வர்த்தகத்தை அடிப்படையாக வைத்து, பரிமாற்ற அமைப்பினை உலகமயமாக்கினர். இந்த உலகமயமாக்கல், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பிய மண்ணில் எரிந்து சாம்பல் ஆகியது. இன்றைய மூன்றாம் உலக நாடுகளை (அல்லது பொருளாதார ரீதியில் உலகத்தின் தெற்கு நாடுகள்)  1600-இலிருந்து 1900 வரை தங்கள் ஆட்சிக்குக் கட்டுப்படுத்திய வன்முறையை ஐரோப்பியக் கண்டத்திற்குள்ளேயேச் செலுத்தி, தங்களுடைய வசதியான நிலைமையைக் கெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அமெரிக்கா இரண்டு உலகப் போர்களுக்குப் பின் வல்லரசானது.
இந்த காலக்கட்டத்தில், இந்தியா பருத்தி வர்த்தகத்தின் மையமாக இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் உலக ஆதிக்க முயற்சிகளின் விளைவாக, மிகுந்தச் சரிவைக் கண்டது. எகிப்து மற்றும் ப்ரெஸில் நாடுகள், ஐரோப்பிய ஏகாதிப்பத்தியத்தினால் பருத்தி வர்த்தகத்தில் சரிவுகளைச் சந்தித்தாலும், முதன்மை பருத்தி வர்த்தக நாடாக இருந்ததனால், இந்தியாவின் சரிவு அவற்றை எஞ்சியது. சீனா-வும் இதனால் பாதிக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிபணியவில்லை என்பதால், அதன் மீதானத் தாக்கம் குறைந்தே இருந்தது. ஐரோப்பிய அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் சுதந்திர வர்த்தகத்திற்கு வாதாடும் வெட்கமற்றப் போலித்தனத்தை நினைவில் கொள்ள வேண்டும். பாதுகாப்புவாதத்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முழுமையாகச் செயல்படுத்துவது அந்த நாட்டு மக்களின் வாழ்வுத் தரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சிறப்பான முறையில் சில  முக்கியமானத் தொழில்களில் அதனைச் செயல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் இன்றைய வளர்ச்சி அடைந்த நிலை அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
அலசல்:
2012 பிரிட்டன் நாட்டின் தலைநகரமான லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் திறப்பு விழாவில், அந்த நாட்டிற்குப் பெருமைத் தரக் கூடிய வரலாற்று நிகழ்வுகளை, விரிவானக் காட்சியாக நடித்துக் காட்டினர். தொழில்துறைப் புரட்சி மற்றும் அதனை உருவாக்கி உலகெங்கும் பரவச் செய்ததில் பிரிட்டன்-இன் தலையாயப் பங்கினையும் (16:20 நிமிடத்தில் இருந்து) பெருமிதத்துடன் காட்டினர். தொழில்துறைப் புரட்சி, ஐரோப்பிய நாடுகளின் செல்வச் செழிப்பை உயர்த்திய அதே நேரத்தில், ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளின் செல்வாக்கை அறவே அழித்தது. ஐரோப்பிய நாடுகள் (பிற்காலத்தில், அமெரிக்கா, ருஷ்யா மற்றும் ஜப்பான் உட்பட), பருத்தி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி அவரவர் பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்றதன் விளைவாக தொழில்துறைப் புரட்சி வெகு வேகமாக முன்னேறியது.
வரலாற்றில், பருத்திச் செடி உலகில் எல்லாக் கண்டங்களிலும், அங்கங்கு நிலவும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வளர்ந்திருக்கிறது(மெஸோ அமெரிக்கா-வில் காஸிப்பியம் ஹிர்ஸுடம், தென் அமெரிக்கா-வில் காஸிப்பியம் பார்படென்ஸ், ஆஃப்ரிக்கா-வில் காஸிப்பியம் ஹெர்பேஸியம், ஆசியா-வில் காஸிப்பியம் ஆர்பரீடம்). இன்று உலகெங்கும் வளர்க்கப்படும் பருத்தி, காஸிப்பியம் ஹிர்ஸுடம் அல்லது அமெரிக்கன் அப்லெண்ட் என்று அழைக்கப்படுகிறது. பருத்திச் செடி ஆதிகாலத்தில், இன்றைய நாள் பெரு நாடு மற்றும் வடக்கு இந்தியா-வில் முதலில் பேணி வளர்க்கப்பட்டது. இந்த இரு நாடுகளும் பருத்தி வளர்ப்பினை ஒருவருக்கொருவர் அறியாமல் தங்கள் சொந்த முயற்சியில் கண்டுப் பிடித்தனர்.
பருத்தி விதை செம்மையாக முடிக்கப்பட்டப் பொருளாக உருவெடுப்பதற்கு வேண்டிய நிலைகள்:
1. பருத்தி மூலம் - பருத்திச் செடியிலிருந்து செய்யப்படும் சாகுபடி
2. விதை நீக்கல் - பருத்திச் செடியிலிருந்துப் பறித்து விதை, கடினமான வெளிப்புறம் மற்றும் இதர மாசுப் பொருட்களை விலக்குவது. பண்டைய காலத்தில், இது எளிமையானக் கருவிகளால் செய்யப்பட்டது
3. நூல் நூற்பது - சுத்தப்படுத்தப்பட்டப் பருத்தியை, சுழல்கள் மூலம் நூலாக நோற்பது. பண்டைய காலத்தில், இது கைவேலையாக பெண்களால் பெரும்பாலும் செய்யப்பட்டது
4. நெசவு - பருத்தி நூலை நெசவுத் தொழிலாளர்கள் தறிகள் மூலம், துணியாக மாற்றினர்
5. அச்சடிப்பது - துணியில் நேர்த்தியாக வடிவமைத்து விநியோகத்திற்குத் தயார் செய்வது
இந்தியா-வில் இருந்த பருத்தி வர்த்தகத்தில் கிராமப்புறங்களில் இருந்து நிறைய தொழிலாளிகள் வேலை செய்தனர். 1750-களுக்கு முன், பருத்தி வர்த்தகத்தில், குஜராத் மாநிலத்தின் வணிகர்கள் (பணியா) கொடிக்கட்டிப் பறந்தனர். விநியோகத்திற்கு 8-இல் இருந்து 10 மாதங்களுக்கு முன்னரே, கிழக்கு ஆஃப்ரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா-வில் உள்ள வாடிக்கையாளர்கள் அளிக்கும் விவரக்குறிப்பை, வணிகர்கள் அதற்குத் தேவையான பணக் கட்டையும் தரகர்களுக்குக் கொடுத்தனர்.  தரகர்கள் தங்களுக்குத் தெரிந்த பருத்தி உழவர்களிடம் சென்று, அவர்களுக்கு விதை மற்றும் கருவிச் செலவிற்கு முன்பணத்தை ரொக்கமாக அளித்தனர். அதற்கேற்ப பருத்தி மூலத்தை அளிப்பதாக உழவர்கள் ஏற்றுக் கொண்டனர். உழவர்கள் தங்கள் நிலங்களில் செய்தப் பருத்திச் சாகுபடி, அதே வலைப்பின்னல் மூலம் வாடிக்கையாளர்களிடம் சென்று அடைந்தது. தங்கள் நிலங்களில், பருத்தியைத் தவிர, உணவிற்கு மற்ற பயிர்கள் விதைத்ததாலும், வணிகர்கள், தரகர்கள் மற்றும் உழவர்கள் ஒரே சமூகத்தில் வாழ்ந்ததாலும், சாகுபடி குறைந்த காலங்களில் சமரசம் செய்வது அந்தந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் மூலம் செய்யப்பட்டது. வானிலையின் மாற்றங்களை ஒற்று சாகுபடி இருந்தாலும், குறைவாக பயிர் விளைந்த காலத்தில், உழவர்களின் வருவாய் குறைந்ததன் தாக்கம், தங்களது நிலங்களில், உணவிற்கான பயிர்களை விதைத்ததால், சிறிதாகவே இருந்தது. தரகர்கள் கொடுக்கும் முன்பணத்தை நம்பி வாழ்ந்தாலும், குறைவானச் சாகுபடிக் காலத்தில், உழவர்கள் தங்களது நிலங்களில் இருந்து உணவுப் பயிர்களின் சாகுபடி மூலம் உணவுக்கான வழியைத் தேடிக் கொண்டனர்.
ஐரோப்பிய மக்களுக்கு, பருத்தியைப் பற்றி, மதச் சண்டைகளான க்ருஸேட்ஸ் காலத்தில் தெரிய வந்தது. ஆட்டுக் கம்பளிப் பற்றி மட்டுமே அறிந்திருந்ததால், பருத்திச் செடிப் பற்றி அபிரிமிதமானக் கதைகள் ஐரோப்பா-வில் எங்கும் பரவின - ஆடுகள் மரக் கிளைகளில் இருந்து கொண்டு, இரவில் அந்தக் கிளைகளைக் கீழே அழுத்தி, தண்ணீர் நிறைந்த மடுக்களில் இருந்து தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். வர்த்தகம் மூலம், பருத்திப் பொருட்களின் தேவை இந்தியா-வில் இருந்து ஆஃப்ரிக்கா, மெடிட்டெரேனியன் வழியாக ஐரோப்பா-விற்குப் பரவியது. 1492-இல் அமெரிக்கக் கண்டத்தை க்றிஸ்டோஃபர் கொலம்பஸ் கண்டுப்பிடித்தார். 5 வருடங்களுக்குப் பிறகு, 1497-இல், வாஸ்கோ ட காமா கேப் ஆஃப் குட் ஹோப் மூலம் இந்தியா-விற்கு ஐரோப்பா-வில் இருந்து கடல் வழிப் பாதையைக் கண்டுப்பிடித்தார். இந்த இரு நிகழ்வுகளும், உலகைப் பற்றிய ஐரோப்பா-வின் சிந்தனையை மாற்றி, பின் காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் பொருளாதாரத்தில் அதீதமாக முன்னேறும் பாதையில் செலுத்தியது - ஐரோப்பிய நாடுகள், வன்முறை, வலுக்கட்டாயமாக நிலங்களைக் கையகப்படுத்துவது மற்றும் அடிமைத்தனம் மூலம் தங்களது செல்வச் செழிப்பை அதிகரித்துக் கொண்டனர் - முந்தைய காலங்களில் செல்வம் கொழித்த பிராந்தியங்களான இந்தியா, சீனா, கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும்  மீஸோ அமெரிக்கா அனைத்தையும் இழந்து அதனால் ஏற்படும் துன்பங்களில் துவண்டன. மீஸோ அமெரிக்கா-வில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிக் கிடங்குகளை ஸ்பெய்ன் நாட்டு வீரர்கள் வன்முறை நிறைந்த மிருகத்தனத்துடன் சூறையாடிய அதே நேரம், இந்தியா-வின் கிழக்குக் கடற்கரையில் போர்த்துகீசியர்கள் அதைச் செய்துக் கொண்டிருந்தனர்.
இந்தியா-வில், வர்த்தக வலைப்பின்னல்கள் காலங்காலமாக வேலை செய்து வந்தாலும், ஐரோப்பியர்கள் ஆயுதத் தலையீட்டின் மூலம், அவற்றைச் சிதற அடித்து, அந்த வர்த்தகத்தை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வழி வகுத்தது. போர்த்துகீசியர் (மற்றும் டட்ச், பிரிட்டிஷ், ஃப்ரென்ச் தத்தம் கிழக்கு இந்திய நிறுவனங்கள் மூலம்) இந்திய வணிகர்களை ஓரவஞ்சனை மிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்ததன் மூலம், அவர்களது நிதி நிலைமையை மோசமாக்கினர். இதை அடுத்து, இந்தியா-வின் பருத்தி வர்த்தகத்தை ஐரோப்பியர்கள் தங்களுக்கு அனுகூலமாக அமைத்துக் கொண்டனர். பருத்தி உழவர்களின் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் முன் போல் தரகர்களிடம் மட்டுமே தொடர்புக் கொண்டிருந்தனர்.
1500-களில், ஸ்பெய்ன் நாட்டு வீரர்கள் அமெரிக்கக் கண்டத்தை ஆக்கிரமித்து அங்குள்ள தங்கம் மற்றும் வெள்ளியை தங்கள் அரசாங்கத்தின் பேரில் சுறையாடி, இந்தியாவிலிருந்து ஸ்பெய்ன்-இற்கு வரும் பருத்திப் பொருட்களுக்கு ஈடாகப் பரிமாற்றிக் கொண்டனர். தத்தம் நாட்டு எல்லைகளுக்குள் பருத்தி விளைச்சல் மற்றும் சாகுபடி செய்வதை ஐரோப்பியர்கள் தொடர்ந்தாலும், இந்தியா-வில் இருந்து வர்த்தகத்திற்கு அனுப்பப்படும் பருத்திப் பொருட்களின் தரத்திற்கும் அளவிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். ஜெர்மனி நாட்டில் ஆக்ஸ்பர்க் மற்றும் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரங்களில் துவக்கப்பட்ட பருத்தி வர்த்தகச் சந்தைகள் சில வருடங்களில் மூடப்பட்டதன்  விளைவாக அரசு ஆதரவு இல்லாமல் பருத்தி வர்த்தகத்தில் தழைப்பதுக் கடினம் என்றப் பாடத்தை மனதார ஏற்றுக் கொண்டனர். 1648-இல் ட்ரெடி ஆஃப் வெஸ்ட்ஃபாலியா-விற்கு பிறகு, ஐரோப்பிய நாடுகள் இன்றைய வடிவத்தை அடைந்தன. இந்தியா-வில் பருத்தி வர்த்தகத்தில் புகுந்த அதே நேரத்தில், அமெரிக்கக் கண்டத்தின் பரந்த நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்குப் புகையிலை மற்றும் சர்க்கரைத் தோட்டங்களை அடிமைகளை வைத்து உருவாக்கினர்.
1600-களின் இறுதியிலும் 1700-களின் ஆரம்பத்திலும், ஐரோப்பிய வர்த்தகர்கள் பருத்தியை கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் உள்ள அடிமைகளுக்கு பரிமாற்றிக் கொண்டனர். இந்தியா-வில் இருந்து பருத்திப் பொருட்களை அனுப்பி, அதற்குப் பரிமாறாக கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் உள்ள லட்சக்கணக்கான ஆஃப்ரிக்க மக்களை அடிமைகளாக கப்பல்களில் ஏற்றி, அமெரிக்கா-வில் உள்ள தங்களது தோட்டங்களுக்கு வேலை ஆட்களாக அனுப்பினர். 1770-களில் வங்காள மாநிலம் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனம் கைக்குள் வந்தவுடன், அந்த மாநிலத்தை பருத்தி மூலத்திற்காக உடனே பணித்தனர். பிரிட்டிஷ் அரசு, விநியோகத்திற்காக இந்தியா-வில் இருந்து வரும் பருத்திப் பொருட்களுக்குக் கட்டணம்  வசூலித்தது. இதனால், பிரிட்டன்-இல் ஆரம்பக்கட்டத்தில் இருந்த பருத்தி உற்பத்தி தொழில் தழைத்தது. பிரிட்டன் வழியில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் அவ்வாறு செய்ததால், பருத்தி வர்த்தகத்தில் இந்தியா-வின் பங்கு குறைந்து கொண்டே வந்தது. அரசு  ஆதரவின் மூலம் (1) நூற்பவர்களையும் நெசவாளர்களையும் ஊதிய ஊழியர்களாக வலுக்கட்டாயமாக மாற்றுவது (2)  உள்நாட்டுப் பருத்தி ஆலைகளை ஊக்குவிக்கக் கூடியக் கோட்பாடுகளை இயற்றுவது (3) உள்நாட்டுப் பருத்தித் தொழில் திறனை மேம்படுத்த பாதுகாப்புவாதக் கொள்கைகளை இயற்றுவது போன்றவற்றை ஐரோப்பிய அரசுகள் செம்மையாகச் செய்தன. அதற்கு மாறாக, இந்தியா-வின் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு, பிரிட்டிஷ் பருத்தி வியாபார்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை இயற்றியது. பிரிட்டன்-இற்குள் இயந்திரக் கண்டுபிடிப்பாளர்கள் பருத்திச் ஆலைகளின் பல்வேறு நிலைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த, நிறைய புதியக் கருவிகளை உருவாக்கினர். விதை நீக்கல், நூல் நோற்பது மற்றும் நெசவு நிலைகளில், பிரிட்டிஷ் கண்டுபிடிப்புகளால், இந்திய நூல் நோற்பவர்கள் மற்றும் நெசவாளர்களின் (இந்தியா-வில், நூல் நோற்பதும் நெசவுத் தொழிலும் பெரும்பாலும் பெண்கள் தங்களது ஊத்தியத்தைக் கூட்டுவதற்குச் செய்யும் வேலையாகக் கருதப்பட்டது) உற்பத்தித் திறனைக் காட்டிலும், பன்மடங்கு அதிகரிப்பு பிரிட்டிஷ் நாட்டில் காணப்பட்டது. நெசவுத் தொழிலின் உற்பத்தித் திறன், 1733-இல் ஜான் கே கண்டுபிடித்த ஃப்லையிங்க் ஷட்டில், எட்மன்ட் கார்ட்ரைட் கண்டுபிடித்த நீரினால் ஓடக் கூடிய தறி போன்றவற்றினால் எட்டுக்கால் பாய்ச்சலில் வளர்ந்தது. நூல் நோற்பதன் உற்பத்தித் திறன், 1760-இல் ஜேம்ஸ் ஹார்க்ரீவ்ஸ் கண்டுபிடித்த ஸ்பின்னிங்க் ஜென்னி, 1769-இல் ரிச்சர்ட் ஆர்க்ரைட் கண்டுபிடித்த வாட்டர் ஃப்ரெம் மற்றும் 1779-இல் சாமுவேல் காம்ப்டன் கண்டுபிடித்த ம்யூல் போன்றவற்றினால் அதிக வேகத்தில் வளர்ந்தது. பிரிட்டன்-இன் தொழிலாளர் கட்டணம் அதிகமாக இருந்தாலும், உற்பத்தித் திறனின் பெருக்கத்தினால் அதனை ஈடுக்கட்ட முடிந்தது.
அதனைக் கண்ட பிரிட்டிஷ் நிதியாளர்கள், பருத்தி உற்பத்தியை இயந்திரமயமாக்கி அதில் அதிக லாபம் கிட்டலாம் என்றுத் திட்டமிட்டனர். பருத்திப் பொருட்களில் மிக நேர்த்தியாகவும் திகைப்பூட்டும் வகையிலும் வடிவமைப்புகளை அச்சிடுவதில் இந்தியத் தொழிலாளர்கள் ஏகபோகத் திறன் கொண்டிருந்தாலும், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் (மற்றும் இதர ஐரோப்பிய கிழக்கு இந்திய நிறுவனங்கள்) அச்சிடுவதற்கானத் தொழில்நுட்பத்தைத் திருடி ஐரோப்பா-வில் உள்ள அச்சிடுபவர்களுக்கு உதவினர்.
1700-களின் முடிவிலும் 1800-களின் ஆரம்பத்திலும், பிரிட்டன்-இல் முதலாளிகள் புதியக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பருத்தி ஆலைகளை உருவாக்கினர். பிரிட்டன்-இல் ஏற்கெனவே இருந்த பருத்தி நூல் நோற்பவர்களையும் நெசவாளர்களையும் அந்த ஆலைகளில் ஊதிய வேலைக்காரர்களாகப் பணியமர்த்தினர். பிரிட்டன்-இல் உள்ள பருத்தி உற்பத்தியாளர்கள், அந்த நாட்டில் பருத்தி வளர்ப்பதற்கு போதிய இடம் இல்லாததால், பருத்தி மூலத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதற்கு நிதியாளர்களை நம்பி இருந்தனர். பருத்தி உற்பத்தி மென்மேலும் இயந்திரங்களால் செய்யப்படும் நிலையில், அவர்கள் நிதியாளர்கள் இல்லாமல் தங்கள் தொழில் நடத்த முடியாது என்ற நிலைமையை அடைந்தனர். இது, தொழில்துறை புரட்சியாக ஆரம்பித்து, சத்தம் நிரம்பிய இயந்திரங்கள், மூச்சடைக்கும் அளவிற்கு மாசுப்பட்ட காற்று மற்றும் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் புகைபோக்கிகள் என்று யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு முன்னேறியது. அதில் வரும் லாபத்தைக் கண்டு, பிரிட்டிஷ் முதலாளிகள், சிறுவர் சிறுமியரை (8 வயதே ஆன)  தங்கள் ஆலைகளில் பெரிய அளவில் பணிக்கு அமர்த்தினர். சாட்டை மற்றும் கம்பால் அடித்தும் கழுத்தைச் சுற்றி இரும்பு எடைகளைத் தொங்கவிட்டும் அந்தச் சிறுவர் சிறுமியரை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தனர். அந்தக்  குழந்தைகளின் பெற்றோர்கள், குடும்பத்திற்கு கூடுதல் பணம் கிட்டுவதால், அந்த குழந்தைகள், வேலைப்பளு மற்றும் கட்டுப்பாடு தாங்காமல் வீட்டிற்கு ஓடி வந்தால், மீண்டும் அதே ஆலைகளுக்குத் திருப்பி அனுப்பினர். பருத்தி உற்பத்தியின் லாபத்தில் இருந்து, இரயில் மற்றும் இதர தொழில்நுட்பங்களை முதலாளிகள் ஐரோப்பா-வில் உருவாக்கினர்.
1776-இல் அமெரிக்கா-வின் விடுதலைக்குப் பிறகு, தொழில்துறைப் புரட்சியும் பருத்தி வர்த்தகமும் அங்கும் பரவியது. அமெரிக்கா-வின் தெற்கு மாநிலங்களில், பருத்தி ராஜநடைப் போட்டு வலம் வந்தது. அடிமைத்தனம் மூலமாக, அமெரிக்கா-வில் உள்ள பருத்தித் தோட்டங்களில் தொழிலாளர் செலவுகளை மிகவும் குறைத்து இந்தியா-வை விட மலிவு விலைக்குப் பருத்தியை வளர்க்க முடிந்தது. அடிமைத்தனத்தை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்த அமெரிக்கா-வின் மலிவு விலை பருத்தி மூலத்திற்கு ஐரோப்பிய நாடுகள் அடிமையாகின. 1830-களில், பிரிட்டன், தனது ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள நாடுகளில் அடிமைத்தனத்தை அழிப்பதற்கு முன்னால், தனது பருத்தி உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய பருத்தி மூலம், அமெரிக்கா-வில் உள்ள அடிமைத்தனத்தினால் கிடைக்கும் என்பதை கண்டறிந்தப் பின்னரே, அந்த தேர்வைச் செய்தது.  1850-களில், பருத்தி வர்த்தகத்தினால் வளர்ந்த உலகமயமாக்கல் நன்றாகச் சென்றுக் கொண்டிருந்தது - போர் முதலாளித்துவம் மூலம் ஐரோப்பிய நாடுகள் தத்தம் பருத்தி உற்பத்தி ஆலைகளுக்கு பருத்தி மூலத்தைக் கைப்பற்றினர். அந்த பருத்தி வர்த்தகத்தின் வந்த வருவாய் மூலம், அவரவர் நாடுகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடு செய்து, பொருளாதாரத்தை மெருகேற்றி, ராணுவத்தை வலிமையாக்கினர். தங்களது ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தப் பகுதிகளில் இரயில் தளவாடங்களை அமைத்து பருத்தி மூலத்தை தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர்.
1861-இல் வெடித்த அமெரிக்கா-வின் உள்நாட்டுப் போர் , ஐரோப்பிய நாடுகளை தங்களது மெத்தனமானப் போக்கிலிருந்து உலுக்கி  எழுப்பியது. அதன் பிறகு, பருத்தி மூலம் கிடைக்கும் இடத்தேர்வுகளை விரிவுப்படுத்த முயன்றனர். அமெரிக்கா-வின் உள்நாட்டுப் போர் நடக்கும் பொழுது, அந்த நாட்டின் ஜனாதிபதி ஆப்ரஹெம் லிங்கன் ஐரோப்பிய நாடுகளின் பருத்தி முலத்தேவையைப் பூர்த்தி செய்து அவர்களுடைய நல்லிணக்கத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டிய தேவையை உணர்ந்திருந்தார். அமெரிக்கா-வின் யூனியன் கடற்படை, அந்த நாட்டின் தெற்கில் இருந்த துறைமுகங்களை சுற்றி வளைத்திருந்ததால், பருத்தி வர்த்தகம் மிகவும் மலிந்திருந்தது.
அதற்கு மாறாக, அமெரிக்கா-வின் தெற்கில் இருந்த கான்ஃபெடெரஸி அணியின் தலைவர்கள், பருத்தியின் முக்கியத்துவத்தை அதிக அளவில் எடைப் போட்டு, ஐரோப்பிய நாடுகள் தங்களது கோரிக்கைகளை அங்கீகரிக்கும் என்று கனவுலகில் மிதந்துக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா-வின் தெற்கு மாநிலங்களை தனி ஒரு நாடாக அங்கீகரிப்பதைப் பற்றி தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டாலும், அதனைச் செயலாற்றவில்லை. அதற்கு, பருத்தி முலத்தை, இந்தியா மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையேக் காரணம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்ததனால், இந்த இரு நாடுகளிலும், பிரிட்டன்-இன் விருப்பதிற்கேற்ப, பருத்தி விதைக்கும் சட்டங்களை இயற்றி மிகப் பெரிய அளவில் பருத்தி முலத்தை உருவாக்க முடியும் என்று நம்பினர். அவ்வாறு செய்வதன் மூலம், பஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது ஏற்படும் சாவுகளுக்குத் தார்மீகப் பொறுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்பினர். பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தால், பருத்தி உழவர்கள், பண்டையக் காலத்தில் இருந்து தழைத்த வலைப்பின்னல்களில் மூலம் செயல்பட்டனர். ஆனால், பருத்திச் சாகுபடி குறைந்தால், முன்னர் தரகர்களிடமும் வணிகர்களிடமும் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் கடன்களுக்குத் தீர்வுக் காண்பதிற்குப் பதில் பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ்,  சிறைக்குள் அடைக்கப்பட்டனர். தங்கள் நிலங்களில், பருத்தி விதை, மற்ற உணவுப் பயிர்களுடன் வளர்த்த காலம் போய், பருத்தி மட்டுமே பிரதானப் பயிராக வளர்க்கும் காலம் வந்தது. சில நாட்கள் கழித்து, ஐரோப்பிய நிறுவனங்கள், நடுவில் இருந்த தரகர்களை விலக்கி,  பருத்தி விதைக்கும் நிலங்கள் அருகில் இடம் பெயர்ந்தன. பிரிட்டிஷ் அரசு, பருத்தி பயிரிட்ட நிலங்களில், சொத்து உரிமையை நிலைநாட்ட விரும்பியது. இதனால், பருத்தியின் விளைச்சலை அவர்களால் கண்காணிக்க முடியும். இதன் காரணமாக, நிலப் போகங்களை, கத்தேதார் என்ற நிலச் சொந்தக்காரர்களுக்கு விற்றனர். அந்த நிலப் போகங்களை வாங்க, கத்தேதார்கள், நிதியாளர்களிடமிருந்து கடன் வாங்கினர். கத்தேதார்கள், தங்கள் நிலத்தை பருத்தி வளர்க்கும் உழவர்களை வாடகைக்கு அமர்த்தி, அதற்குப் பதிலாக அந்த நிலத்தில் வளர்ந்த பருத்தி மூலத்தை வாடகையாக எடுத்துக் கொண்டனர். இதனால், அமெரிக்கா-வில் உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைகள் பயிர் பங்குதாரர்களாக ஆனது போல், இந்தியா-வின் பருத்தி உழவர்களும், பயிர் பங்குதாரர்களாக ஆயினர்.
அமெரிக்கா-வின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, விடுதலை செய்யப்பட்ட அடிமைகள், தங்களது உரிமைகளில் முன்னேற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், மறுசீரமைப்புக் கொள்கைகள் தளர்வாக இருந்ததனால், உள்நாட்டுப் போர் முன் சொகுசுக் கண்டிருந்த அடிமை முதலாளிகள், மீண்டும் அரசியலில் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், அமெரிக்கா-வின் தெற்கு மாநிலங்களில், முன்னாள் அடிமைகள், பயிர் பங்குதாரர்களாக மாறினர்.
ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் விளைவாக, ஷிமோனோஸெகி ஒப்பந்தத்தின் கீழ், சீனா-வும் அதன் உள்நாட்டு பருத்தி வர்த்தகத்தை தளர்த்த வேண்டியிருந்தது. காலனியாக இல்லாததனால், அவர்களது தொழில்துறையின் அடித்தளத்தை ஒருவாறுக் காத்துக் கொள்ள முடிந்தது.
சீனா-வின் அரசு, உள்நாட்டு பருத்தி உற்பத்தியைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்நிய வணிகர்கள் மேல் கட்டணத்தை வித்தித்தது. அதனால், சீனா-வின் பருத்தி வர்த்தகப் பங்குக் கூடியது. இந்தியா மற்றும் எகிப்து-ஐ, பிரிட்டிஷ் அரசு, பருத்தி முலத்தின் தயாரிப்பாளராகவும் பிரிட்டன்-இன் பருத்திப் பொருட்களின் வாடிக்கையாளர்களாகவும் கருதியது. பருத்தி ஆலைகளில் உலகெங்கும் நிகழ்ந்த உற்பத்தித் திறனின் வளர்ச்சியினால், இந்தியா-வில் உள்ள நூல் நூற்பவர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு, தொழில்துறைப் புரட்சியின் முன் உலகோடு இருந்த கட்டண வேறுபாடு அறவே அழிந்தது. அதனால், இந்தியா-வில் தொழில்துறைப் புரட்சிக்கு வேண்டிய திறன் மிகப் பெரிய அளவில்  குன்றியது. இதன் விளைவாக, நூல் நூற்பவர்களும், நெசவுத் தொழிலாளர்களும், ஊதியத் தொழிலாளர்களானார்கள். பருத்தி வர்த்தகத்தில், ஐரோப்பிய அரசுகளின் செல்வாக்கு அதிகரிப்பு, இரட்டை முனைக் கொண்ட வாள் போல் ஆனது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த மற்ற நாடுகளில் பருத்தி மூலத்தை வளர்க்கவும், பருத்திப் பொருட்களின் வாடிக்கையாளர்களாகக் கருத வாய்ப்பு அளித்தாலும், ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்குள், பருத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தங்களது உரிமைகளுக்குப் போராட ஆரம்பித்தனர். இதனால், ஐரோப்பிய பருத்தி உற்பத்தியின் தொழிலாளர் கட்டணம் உயர ஆரம்பித்தது. அதற்கு மாறாக, தங்களுக்குக் கீழ் இருந்த நாடுகளில், ஐரோப்பிய நாடுகள் தொழிலாளர்கள் பக்கம் சாய்ந்தனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள பருத்தி முதலாளிகள், இந்தியா-வில் இருக்கும் பருத்தி ஆலைகளிடம் இருந்து போட்டி இருக்கக் கூடாது என்பதனால், பிரிட்டிஷ் அரசிற்கு இவ்வாறு விண்ணப்பம் வைத்தனர். இதனால், இந்தியா-வில் இருந்த ஊதியத் தொழிலாளர்கள், ஐரோப்பிய நாடுகளில், தொழில்துறைப் புரட்சியின் உச்சத்தில் நிகழ்ந்த நரக வேதனைகளை அனுபவிக்காமல் தப்பித்தார்கள்.  தொழிலாளர் கட்டணத்தின் உயர்வு, இந்திய பருத்தி முதலாளிகளுக்கு வருத்தம் அளித்தது. அதனைச் சரி செய்ய, அவர்கள், பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்ட பிறகும் எதுவும் நடக்கவில்லை.
இந்தியா-வின் விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் சிறிய அளவில் மேடைப் பேச்சுகள் செய்யும் கூட்டத்தில் இருந்து பரந்த அரசியல் செல்வாக்குப் பொருந்தியக் கட்சியாக மாறுவதற்கு, இந்தியப் பருத்தி முதலாளிகள், உறுதுணையாக நின்றனர். காங்கிரஸ், ஸ்வதேஷி
பொருட்களைப் பயன்படுத்த மக்களிடம் கேட்டுக் கொண்டதன் விளைவாக, இந்திய பருத்தி முதலாளிகளின் லாபம் பெருகியது. இதனால், அவர்கள் காங்கிரஸ் தலைமையில் இருந்த விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். இந்திய மூவர்ணக் கொடியின் நடுவில் அமைந்துள்ள நூல் நூற்கும் சக்கரம் காந்தியால் பிரபலப்படுத்தப்பட்டது. காந்தி, சுழலும் சக்கரம் மூலம், பருத்தி உடைகளைத் தயாரிப்பதை ஊக்குவித்தது, ஊதியத் தொழிலாளிகளின் பங்களிப்பையும் இந்தியச் சமூகத்தில் பருத்தியின் புகழையும்  உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து, புதிய நாடுகள் விடுதலைப் பெற்றப் பிறகு, அவரவர் நாட்டுப் பொருளாதாரத்தை சரிகட்டுவதில் ஒரே நோக்காக இருந்ததால், ஐரோப்பா-வின் பருத்தி வர்த்தகம் குறைந்தது. தொழில்துறைப் புரட்சியின் பொழுது பூதாகரமாக பருத்தி உற்பத்தி வளர்ந்ததன் காரணம் அரசு ஆதரவு பெருமளவில் இருந்ததால் தான் என்பது தெள்ளத் தெளிவாகியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பொருளாதாரத்தில் கனரகத் தொழில்களில் முதலீடு செய்து, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இறக்குமதி பதிலீட்டு அணுகுமுறையைக் கையாண்டது. ஜவஹர்லால் நேரு, நவீன இந்தியா-வின் கோவில்கள் என்று போற்றிய கனரகத் தொழில்களில் உள்ள முதலீட்டு அணுகுமுறையை பலர் கண்டித்தனர். அதற்குப் பதிலாக, ஏற்றுமதியை நோக்காக வைத்து பொருளாதாரத்தை வளர்த்த ஜப்பான், ஆசியப் புலிகள் என்று கருதப்படும் தென் கொரியா, சீனா போல் இந்தியா-வும் அதன் பொருளாதாரத்தை வளர்த்திருக்க வேண்டும் என்று வாதாடினர். நேரு சோஷியலிஸத்தின் விசிறி என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்திய தொழில்துறையின் நிலைமை, விடுதலைக்குப் பிறகு ஏற்றுமதி அணுகுமுறையை தொடர்ந்த இதர நாடுகளிலிருந்து வேறுபட்டது. இந்தியா-வின் தொழில்துறை அடித்தளம் பிரிட்டன்-இன் ஏகாதிபத்திய ஆட்சியில் பலவீனமாகியது.  இரண்டாம் உலகப் போரின் பொழுது, இந்தியா-வின் தொழில்துறை வேகமாக வளர்ந்தாலும், இந்தியா, பெரும்பாலும் விவசாயத்தை நம்பிய நாடாகவே இருந்தது. மேலும், ஏற்றுமதி அணுகுமுறை வெற்றியடைய, இந்தியா-வின் இரத்தத்தை பிழிந்து எடுத்த அதே மேற்கத்திய நாடுகளிடம் இருந்து முதலீடுப் பெற்றிருக்க வேண்டும். அதை வைத்துப் பார்க்கும் பொழுது, இறக்குமதி பதிலீட்டு அணுகுமுறையை நேரு கடைபிடித்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய காலகட்டத்தில், பருத்தி வர்த்தகம் 1750-களுக்கு முன் இருந்த நிலையை அடைந்திருக்கிறது - பருத்திச் சாகுபடியில் இந்தியா-வும் சீனா-வும் இணைந்து உலகில் பாதி அளவை அறுவடை செய்கின்றனர். பருத்தி உற்பத்தி, பெரும்பாலும் ஆசியாவில் நடக்கிறது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ஸிவிலைஸேஷன்: தி வெஸ்ட் ஆண்ட் தி ரெஸ்ட் - நீயால் ஃபெர்குஸன்

No comments: