இந்தியர்களின் ஐரோப்பிய முற்றுகை

சுருக்கம்:
அமெரிக்காவின் ஊடகங்களில் ஒன்றான ப்ரேய்ட் பார்ட் நியூஸ்-இன் நிர்வாகத் தலைவரான ஸ்டீவ் பாணன், இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டானல்ட் ட்ரம்ப்-க்கு 2016 ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதரித்து வந்துள்ளார். டானல்ட் ட்ரம்ப்-இன் பிரச்சார மேலாளராக ஆகும் முன்னரே, நடுகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா-வை நோக்கி புலம் பெயர்ந்தவர்களின் நிலை, கேம்ப் ஆஃப் ஸெய்ன்ட்ஸ் கதை நூலில் சித்தரிக்கப்பட்ட சூழ்நிலை போன்றது என்று கூறியிருந்தார். மேலும், ஐரோப்பா-விற்கு புலம் பெயர்பவர்களைப் பற்றிய பாணனின் நோக்கு, ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியின் உறுதிமொழி எடுத்துக் கொண்டவுடன் அமெரிக்காவிற்கு சில இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்குத் தடை விதிப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதனால், இந்த புத்தகத்தைப் படிக்கலாம் என்று தோன்றியது. கதை நூல்களைப் பெரும்பாலும் படிப்பதில்லை என்றாலும், இது அதற்கு விதிவிலக்காக அமைந்தது. அய்ன் ராண்ட் எழுதிய கதைநூல்களுக்குப் போல இருந்ததால் படிக்கலாம் என்று தோன்றிற்று - இவை இரண்டும் மிக எளிமையான யோசனைகளும் நன்மை, தீமை என்று நன்கு வரையறுக்கப்பட்ட பாத்திரங்களும் உள்ளவையாக இருக்கின்றன. இந்த கதை நூல்கள் நல்ல உரைநடையில் எழுதப்படவில்லை என்றாலும், செல்வாக்கு பொருந்திய பல தலைவர்கள் இவற்றைப் படித்து அதில் வரும் யோசனைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் (அமெரிக்காவின்  மக்கள் பிரதிநிதிகளின் சபாநாயகர் பால் ரயன் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான அலன் க்ரீன்ஸ்பான் ஆகியோர் அய்ன் ரான்ட் கதை நூல்களின் தீவிர ரசிகர்கள், ஸ்டீவ் பாணன் மற்றும் ப்ரான்ஸ்-இன் எதிர்க்கட்சி அரசியல்வாதி மேரீன் லேபென் கேம்ப் ஆஃப் ஸெய்ன்ட்ஸ் கதை நூலின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்). இந்த கதை நூலின் உரை நடை, இனவெறி மிகுந்து இருப்பதாலும் வெகுவாக உப்பி இருப்பதாலும் படிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது (அதன் அசல் பதிப்பு ப்ரென்ச் மொழியில் இருந்ததால், ஆங்கில மொழிபெயர்ப்பினால் இது நடந்திருக்கலாம்). அய்ன் ரான்ட் எழுதிய அட்லஸ் ஷ்ரக்ட் கதை நூலின் நாயகன் ஜான் கால்ட் அதில் ஆற்றிய நீண்ட சொற்பொழிவை விட இந்த கதை நூலைப் படிப்பதுக் கடினமாக இருந்தது. இந்த கதை நூல் 100 பக்கங்ககள் தான் என்றாலும், அதில் வெள்ளையர் அல்லாதவர்களின் தரக்குறைவானச் சித்தரிப்பைப் படிப்பது ஒரு கடுமையானச் பனிச்சவாரியில் செல்வது போல் இருக்கிறது.
இந்தக் கதை நூலில், வறுமையில் வாழும் கருப்பு மற்றும் பழுப்பு நிற இந்தியர்கள் உலகெங்கிலும் உள்ள பணக்கார வெள்ளையர்களின் மனிதாபிமானத்தை சூழ்ச்சிகளின் மூலம் தங்களுக்காக அனுகூலப்படுத்தி, ப்ரென்ச் நாட்டின் எல்லை மூலம் ஐரோப்பா-வில் நுழைய பழைய கப்பல்களில் பயணிக்கின்றனர்.  ப்ரென்ச் நாட்டில் நிலமிறங்கிய பிறகு, உலகமெங்கும் வாழும் வெள்ளையர் அல்லாத மக்கள் , வெள்ளையர்கள் வாழும் பகுதிகளை வன்முறை மூலம் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ஐரோப்பாவின் வெள்ளையர்கள், ஆசிய மற்றும் ஆஃப்ரிகா-வில் இருந்து வரும் மக்களின் மிகுந்த எண்ணைக்கையைத் தாக்குபிடிக்க முடியாமல் அழிகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள உயர்தட்டு மக்கள் தங்களுடைய இனத்தையும்  பாரம்பரியத்தையும் மதிக்காமல் மற்ற வெள்ளையர்களை நயவஞ்சகமாகக் கூட இருந்தேக் காட்டிக் கொடுக்கின்றனர். மேற்கத்திய அரசுகளும், கத்தோலிக்கத் தேவாலயங்களும், ஊடகங்களும், ஐக்கிய நாட்டுச் சபையும், தெரிந்தோ தெரியாமலோ,  ஐரோப்பா-வின் எல்லையை முற்றுகையிடும் வெள்ளையர் அல்லாத மக்களுக்கு உதவி அளிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பை, ப்ரென்ச் நாட்டில் 20 பேர் அடங்கிய குழு ஒன்று, மற்றவர் அனைவரும் அழிக்கப்பட்டாலும், எதிர்த்துப் போராடுகிறது.
அலசல்:
டானல்ட் ட்ரம்ப் 2016 ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய பொழுது, இந்திய மக்கள் ட்ரம்ப்-ஐ திகிலுடன் பார்த்தனர். ஆனால், ஹிந்துத்வா தேசியவாதிகளிடையே ட்ரம்ப்-இற்கு, அவர் இஸ்லாமியர்களை மேல் வெறுப்பைக் கூட்டியதினாலும் சர்வாதிகாரப் போக்குகளைக் காட்டியதாலும், மிகுந்த ஆதரவு இருந்தது.  என்னுடைய இந்திய நண்பர்களுக்கிடையே ட்ரம்ப் இஸ்லாமியர்களை வெறுப்பதினால் அவரை ஆதரிப்போம் என்று கூறுபவர்களும் உள்ளனர். ஸ்டீவ் பாணன், அமெரிக்காவின் ஸிலிக்கான் வேலியில் சராசரி அளவுக்கு மேல் பல தலைமை அதிகாரிகள் தெற்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பதால், அது போன்ற பகுதிகள் அமெரிக்காவின் குடிமைச் சமூகத்திற்கு ஒவ்வாது என்றுக் கருதுகிறார்.  ஸ்டீவ் பாணன்-உம் டானல்ட் ட்ரம்ப்-உம் இணைந்து முழங்கிய 'அமெரிக்காவை மீண்டும் பெருமையாக்கு'  அணுகுமுறை அகண்ட பாரதம் கோரும் ஹிந்துத்வா தேசியவாதிகளுடன் மிக இலகுவாக பொருந்தும் - இரு தரப்பிலும், தத்தம் நாடுகளின் இன்றைய நிலைமையை வலுப்படுத்தி, ஆதாரமற்ற பண்டைய காலத்தின் மகிமையை மீட்பது  கூரிய நோக்காக இருக்கிறது.
இந்த கதை நூலின் ஆரம்பத்தில், கறுப்பு மற்றும் பழுப்பு நிற இந்தியர்கள், கல்கத்தாவில் உள்ள பெல்ஜியம் நாட்டுத் தூதரகத்தில் புகலிடம் கோரும் பொழுது அங்கிருந்துத் துரத்தபடுகின்றனர் (பெல்ஜியம் நாட்டுத் தூதரக நிர்வாகி இனவெறி நிறைந்த அவதூறுகளை அவர்கள் பக்கம் வீசி, அந்த கும்பலின் கையில் சிக்கி இறக்கிறார்).  அந்தக் கும்பல், பிரிட்டிஷ் காலத்தில் அஞ்சல் கொண்டுச் செல்லப்பட்டக் கப்பல்களை, ப்ரான்ஸ்-இன் கடற்கரையை நோக்கிச் செல்ல, தங்கள் வசம் பறித்துக் கொள்கின்றனர். அனைவரும் இதனை 'கடைசி வாய்ப்பு போர்க்கப்பல்கள்' என்று பெயர் சூட்டுகின்றனர். இந்தியாவில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் பல்லன் என்ற வெள்ளைகார நாத்திகனின் உதவியுடன் அந்தக் கும்பல் கப்பல்களில் ஏறுகிறது. புலம் பெயரும் இந்தியர்களின் தலைவனை (பெயர் கிடையாது) ஆசிரியர் 'தீண்டத்தகாத பறையன், எச்சங்களின் வியாபாரி, சாணி வணிகம் நடத்துபவன், சாணி வரட்டிகளை அச்சு வார்ப்பவன், பஞ்ச காலங்களில் பீ தின்பவன்' என்றுச் சித்தரிக்கிறார். இந்தக் கும்பல், இந்தியா ஸ்டார், கல்கத்தா ஸ்டார் (கப்பலின் பெயர்களின் மூலம் எங்கிருந்து இந்த கும்பல் வருகிறது என்பதை யூகிப்பதற்காக) என்று பெயரிடப்பட்ட 100 கப்பல்களில் ஏறி, ப்ரான்ஸை நோக்கிப் பயணிக்கிறார்கள். உயிர் விடுவதற்கு முன், பெல்ஜியன் தூதரக நிர்வாகி, பெல்ஜியன் அரசுக்கு, இந்தக் கப்பல்கள் ப்ரான்ஸ்-இற்கு வருகின்றன என்ற தகவலைக் கூறுகிறார். வங்காள விரிகுடா-வில் செல்லும் பொழுது, ஆஸ்திரேலிய அரசு, இந்தக் கும்பல் தங்கள் நாட்டின் பக்கம் வர விட மாட்டோம் என்று அறிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாடு, தனது வெள்ளை இன அடையாளத்தைப் பாதுகாத்ததிற்காக ஆசிரியர் அதற்குப் புகழாரம் சூட்டுகிறார். ப்ரெஞ்ச் அரசு அதனுடை கடலோரப் பகுதிகளில் அபாய எச்சரிக்கை எழுப்புகிறது. இந்த நேரத்தில், சீனாவில் இருந்து புலம் பெயர்பவர்கள், அண்டை நாடான சோவியத் ஒன்றியத்தின் (இந்த நூல் எழுதிய காலத்தில், சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறாமல் அடைய வேண்டிய ஒரு இலக்காக இருந்தது. மேலும், சீன மக்கள், பாரம்பரிய புரட்சியின் விளைவால் பல இடங்களில் வறுமையில் வாடினர்)  எல்லையில் ஒன்று கூடுகிறது. ப்ரான்ஸ்-இன் ஜனாதிபதி அந்த நாட்டினை நோக்கி வரும் புலம் பெயர்ந்தவர்களின் கப்பல்களை நிறுத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதில் தனது ஆலோசகர்கள் மற்றும் ஊடகங்கள் (வட ஆஃப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் ஊடகங்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார்) கொடுத்த யோசனைகளால் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு புலி போல் உணர்கிறார். ப்ரென்சு ஜனாதிபதிக்கு ஆதரவாக ஊடகங்களில் சில ஆதரவாளர்கள் இருந்தாலும்,  அவரது ஆலோசகர்கள், ப்ரான்ஸ்-இன் உயர்தட்டு கல்வி நிறுவனங்களில் படித்ததால், அந்த நாட்டின் எல்லைகளைத் திறந்து கப்பல்களில் வரும் இந்தியர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று வாதாடுகின்றனர். கப்பல்கள் ப்ரான்ஸ்-ஐ நெருங்கி வர, ஊடகங்கள் பசியில் தவிக்கும் அந்த கும்பலின் பரிதாப நிலையையும், அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களையும்  பரபரப்புடன் விவரிக்கின்றன. இந்த கப்பல்களின் பயணத்திற்கு வானிலையும் ஆதரவாக இருக்கிறது. கப்பல்களைப் பத்திரமாகக் கொண்டு செல்ல, ஐக்கிய நாடுகள் சபை ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கிறது. 1970-களில் நடப்பதால், கப்பல்கள் தென் ஆஃப்ரிக்க நாட்டின் அருகில் செல்லும் பொழுது, அங்குள்ள நிறவெறி அரசு, அந்த நாட்டின் எல்லையில் நங்கூரம் பாய்ச்சக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கிறது. மற்ற உலக நாடுகள் அதனைக் கண்டித்தப் பின், தென் ஆஃப்ரிக்க அரசு, கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுக்கிறது. கத்தோலிக்கத் தேவாலயங்கள், கிறித்துவ மறுப்பிரவேச மற்றும் ரெட் க்ராஸ் அமைப்புகள், மேலும் பொருட்களைத் திரட்டி, கப்பல்களுக்கு அனுப்புகின்றன. ப்ரான்ஸ்-இல் கப்பல்கள் இறங்கப் போகிறது என்பதைக் கண்டவுடன், அந்த நாட்டின் உயர்தட்டு மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுடைய இடங்களிலிருந்து கிளம்புகின்றனர். அந்த நேரத்தில், ப்ரான்ஸ்-இன் தொழிலாளிகளும் ராணுவ வீரர்களும் மனிதனின் உலகளாவிய சகோதரத்துவக் கொள்கையைப் பின்பற்றி, கப்பல்களில் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.  கத்தோலிக்கத் தேவாலயங்களின் தலைவரான போப், வந்திருக்கும் புலம் பெயர்ந்த மக்களை உளமாற ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார். புலம் பெயர்ந்த இந்தியர்கள் ப்ரான்ஸ்-இன் எல்லையில் கப்பல்களில் இருந்து இறங்கிய பிறகு, அந்த நாட்டைக் கைப்பற்றுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க, ப்ரென்ச் இலக்கியப் பேராசிரியர் கால்குவெஸ்,  ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தார் ஜூல்ஸ் மாச்சஃபர், பாண்டிச்சேரியின் பூர்வீகம் கொண்ட ஹமதூரா, ராணுவ கர்னல் ட்ராகாஸெஸ், க்ரீஸ் நாட்டுக் கேப்டன் நோடரஸ், ப்ரான்ஸ் நாட்டின் உதவிச் செயலாளர் ஜான் பெரே ஆகியோர் கொண்ட 20 பேர் அடங்கிய ஒரு சிறிய குழு உருவாகிறது. ப்ரான்ஸ் நாட்டைக் கைப்பற்றியவுடன், புலம் பெயர்ந்த இந்தியர்கள் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர்.
2016-இல் நடந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில்  இந்தக் கதை நூலைப் பற்றித் தகவல் வெளிவந்ததால் முதலில் இதைப் படிக்கத் தோன்றியது. இந்தக் கதை நூலைப் படித்த பின், அதன் நோக்கை அது எழுதப்பட்ட சுழலை வைத்துப் புரிந்துக் கொள்ள முடிகிறது. 1968-இல் பால் எஹ்ர்லிக் எழுதிய பாப்புளேஷன் பாம்ப் புத்தகத்தின் பிரசுரத்தினால் உண்டான மக்கள் தொகைப் பற்றிய பீதி ஒரு காரணமாகும். ப்ரென்ச் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியம் உலகெங்கும் பரவியிருந்த பொழுது, வெள்ளையர்களின் வாக்கே வேதமாகக் கருதப்பட்டது. அந்த காலத்திற்கான ஏக்கம் இந்த கதை நூல் முழுவதும் வியாபித்திருக்கிறது. இது எழுதப்பட்ட காலத்தில், இனவெறி உலகெங்கும் சகஜமாக வலம் வந்தது. இன்றைய காலகட்டத்தில், இனத்தை விட மதவெறி பெரிதாக இருக்கிறது. இதில் வரும் பாத்திரங்களின் இனங்களின் அணிவகுப்பில் முதலில் வெள்ளையர்களும், பிறகு இஸ்லாமியர்களும் அதன் பிறகு கிழக்கு ஆசியர்களும் சீன மக்களும் ஆஃப்ரிக்கக் கண்ட மக்களும் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரிக்கா பூர்வீகம் கொண்டவர்களும் பிறகு கடைசியாக  இந்துக்களும் வருகின்றனர். பால் எஹ்ர்லிக் புது டில்லியில் வெயில் காலத்தில் நடந்த பொழுது இந்திய மக்கள் அன்றாட வாழ்க்கையின் நடப்புகளை உத்வேகமாகக் கொண்டு பாப்புளேஷன் பாம்ப் புத்தகத்தினை எழுதினார். இந்தக் கதை நூல் அது பிரசுரிக்கப்பட்டக் காலத்தில், மக்கள் தொகைப் பற்றிய பீதியின் காரணமாக மேற்கத்திய நாடுகளில்  (மாரா ஹ்விஸ்டென்டால் புத்தகத்தில் காட்டியது போல், சில ஆசிய நாடுகளிலும்), அனைவரும் ஆமோதிக்குமாறு எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
அன்னாச்சுரல் ஸெலெக்ஷன் - சூஸிங்க் பாய்ஸ் ஓவர் கெர்ள்ஸ், ஆண்ட் தி காஸிக்வென்ஸெஸ் ஆஃப் எ வொர்ல்ட் ஃபுல் ஆஃப் மென் - மாரா ஹ்விஸ்டென்டால்
ஃபெடல் மிஸ்கண்ஸெப்ஷன் - தி ஸ்ட்ரகிள் டு கண்ட்ரோல் வேர்ல்ட் பாப்புளேஷன் - மாத்யூ கானேலி

No comments: