கண்டார்கள்....கொன்றார்கள்

சுருக்கம்:
மக்கள் தொகை அதிகரிப்பு இன்றைய காலத்தில் குறைந்திருப்பதினால்,  1960-களிலும் 1970-களிலும் எதிர்பார்க்கப்பட்ட பேரழிவு விளைவுகள் பற்றிய கணிப்புகள், பொய்யாக்கப்பட்டன. ஆசியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள இரண்டு நாடுகளான இந்தியாவும் சீனாவும் அவர்களது மக்கள் தொகை அதிகரிப்பை மிகவும் குறைத்து விட்டன. பாப்புளேஷன் பாம்ப் எழுதிய பால் எஹ்ர்லிக் மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகளை தவறான முன்னறிவிப்புகள் மூலம் மேற்கத்திய நாடுகளில் பீதியைக் கிளப்பினார். அந்த பீதியை  கேம்ப் ஆஃப் தி ஸெய்ன்ட்ஸ் போன்ற கதைநூல்கள் மூலம் ஜான் ரஸ்பேய்ல் போன்ற எழுத்தாளர்கள் மேலும் பரப்பினர். மக்கள் தொகை அதிகரிப்பின் குறைவு மேற்கத்திய கொடையாளர்கள் தங்களது முயற்சியால் நடந்தது என்று கொக்கரித்தனர். அதன் விளைவாக, ஆசியக் கண்டத்தில் உள்ள மற்ற அரசுகளுக்கு, சீனா மற்றும் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அந்த நாடுகளிலும் செயல்படுத்த மேலும் நிதி உதவி வழங்கப்பட்டது. அமர்த்யா ஸென், இன்று பிரபலமாகக் கருதப்படுகிற '10 கோடிக்கு மேல் பெண்களைக் காணவில்லை' என்றக் கட்டுரையை டிசம்பர் 1990-இல் நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்-இல் பிரசுரித்தார்.  அதில் ஆசிய மக்களிடையே இரு பாலினருக்கிடையே நிலவும் சமநிலையற்ற போக்கை தகவல் மூலம் விரிவாக்கிக் காட்டினார். அமர்த்யா ஸென்-இன் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை பெரும்பாலும், மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்ட குறைவு, பிறப்பில் உள்ள பாலின விகிதத்தில் (100 பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை) ஏற்பட்ட கூடுதலினால் ஆனதாகும். பிறப்பில் உள்ள பாலின விகிதத்தின் அதிகரிப்பு, பாலினத் தேர்வு மற்றும் கருக்கலைப்பு செய்ததால் நிகழ்ந்ததாகும். அந்த நிகழ்வு, மக்கள் தொகைக் கட்டுப்படுத்த இந்திய, சீன மற்றும் தென் கொரிய அரசுகள், மேற்கத்திய மக்கள் தொகை விஞ்ஞானிகள்  மற்றும் நிதிக் கொடையாளர்களின் (உனைடெட் நேஷன்ஸ் ஃபண்ட் ஃபார் பாப்புளேஷன் ஆக்டிவிடீஸ் (யு.என்.ஃப்.பி.ஏ), இன்டர்னேஷனல் ப்ளாண்ட் பேரண்ட்ஹூட் ஃபெடெரெஷன்(ஐ.பி.பி.ஃப்), ஃபோர்ட் ஃபவுன்டேஷன், ராக்கஃபெல்லெர் ஃபவுன்டேஷன்) உதவியுடன் திட்டங்களைச் செயல்படுத்தினர். இந்த வல்லுநர்கள், ஆசிய மக்களுக்குப் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளைப் பெறுவதில் தான் விருப்பம் அதிகம் என்றும் அதனால் அவர்கள் மிகுந்த அளவில் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கருதினர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மேற்கத்திய மக்கள் தொகை விஞ்ஞானிகளும், ஜனத்தொகை கணிப்பாளர்களும் மற்றும் நிதிக் கொடையாளர்களும் மக்கள் தொகையை பெண்களின் படிப்பிலும் அதிகாரத்திலும் முதலீடு செய்துக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக  தொழில்நுட்ப ரீதியில் அணுகியதால் ஏற்பட்ட நிலை இது என்று விளக்கியிருக்கிறார்.
1950-களில், ஆசியாவின் மக்கள் தொகை வளர்ச்சி, கம்யூனிசக் கொள்கைக்குச் சாதகமாகச் சாய்ந்தால், அன்றைய காலத்தில் சர்வதேச அளவில் சக்திகளின் சமநிலைக்குப் பாதகமாக அமையும் என்று மேற்கில் இருந்த காபிடலிஸம் கொள்கையை தழுவிய நாடுகள் நம்பினர். முந்தைய காலத்தில், மால்துஸ் என்ற மக்கள் தொகை விஞ்ஞானி உலகத்தில் அதிக மக்கள் தொகை வளர்ச்சியினால் உண்டாகும் பயங்கரமான விளைவுகளை விவரித்திருந்தார். அதனைத் தங்களுடைய தாரக மந்திரமாகக் கொண்டு, மேற்கத்திய அரசுகளும் அரசு சாரா அமைப்புகளும் இந்தியா (சாப்பாட்டு உதவியை பணயமாக வைத்து), சீனா மற்றும் தென் கொரியா (மேற்கின் உதவியால் நிறுவப்பட்ட ராணுவச் சர்வாதிகாரத்தின் மூலம்)  அரசுகளை, மக்கள் தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை 1960-களிலும் 1970-களிலும் அந்த அரசுகளின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுத்தத் தூண்டினர். முதலில், இந்தக் கட்டுப்பாட்டில் சிக்கியது இந்த நாடுகளில் இருந்த ஆண்கள் தான். அவர்களை வலுக்கட்டாயமாக கருத்தடை அறுவைச் சிகிச்சைச் (வெஸெக்டமி) செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தினர். இந்தியாவில் 1975-இலிருந்து 1977 வரை இந்திரா காந்தி தனது ஆட்சியில்  அவசரச் சட்டத்தை அறிவித்து ஜனநாயகத்தை ஒரு இருட்டறைக்குள் அடைத்துத் தங்களுக்கு எதிரான அரசியல் கருத்தை வெளிவராமல் இருக்க எதிர்க்கட்சித்தலைவர்களை சிறையில்  வைத்தார்.  அந்த சமயத்தில், மேற்கத்திய அமைப்புகள் (ஐ.பி.பி.எஃப், யூ.என்.எஃப்.பி.ஏ) இந்திரா காந்தியின் அரசுடன் இணைந்து, ஸஞ்சய் காந்தியின் (இந்திரா காந்தியின் புதல்வர்) தலைமையில் நாடெங்கும் ஆண்களுக்கு வலுக்கட்டாயமான கருத்தடை அறுவை சிகிச்சையைச் செய்யும் திட்டத்தை அமல்படுத்தினர். 1977-இல், ஜனதா கட்சியின் கைகளில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி மகத்தான தோல்வியை அடைந்ததனால், வலுக்கட்டாயமாக ஆண்களுக்குச் செய்யும் கருத்தடை அறுவைச் சிகிச்சைத் திட்டம் முற்றுக்கு வந்தது. ஆனால், இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க மேற்கத்திய அரசுகளும் அரசு சாரா அமைப்புகளும் வலியுறுத்தியதனால், குடும்ப மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் பெண்கள் மேல் பாய்ந்தன. இந்தியாவில், கருத்துக் கணிப்புகள் மூலம், ஜோடிகள் தங்களுக்கு ஆண்பிள்ளை வரும் வரை பல பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் ('ஸ்டாப்பிங் ரூல்') என்பது தெரிய வந்தவுடன், இந்தத் திட்டங்களின் வீரியம் கூடியது.  இதை அடிப்படையாக வைத்து, இனத் தேர்வு மற்றும் கருக்கலைப்பு அணுகுமுறைகளை இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு பயனுள்ளவை என்று மேற்கத்திய அரசுகளும் அரசு சாரா அமைப்புகளும் சான்றிதழ் அளித்தன. அதே நேரத்தில், பனிக்குடத் துளைப்பு போன்ற தொழில்நுட்பத் திருப்புமுனைகள் மக்கள் தொகை விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு குழந்தையின் பாலினத்தைக் கண்டுகொள்ள உதவின. அவற்றின் மூலம், பெற்றோர்கள் கர்ப்பக் காலத்தைப் பற்றிய முடிவுக்கு வர முடிந்தது. இவ்வாறு, தொழில்நுட்பத் தேர்வுகளுடன் இணைந்த  கலாச்சார விருப்பங்களின் நச்சுச் சேர்க்கையினால், ஏற்றத்தக்க பாலின விகிதத்திலிருந்து வேறுபாடு உண்டாகி, பல பெண்களின் மறைவுக்குக் காரணமாகியது.
பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை கத்தோலிக்கத் தேவாலயங்கள் போன்ற பழமைவாத அமைப்புகள் உறுதியாக எதிர்த்து வந்துள்ளன. மேற்கில் பெண்களின் தேர்வு உரிமைகளைப் பாதுகாக்கும் அரசு சாரா அமைப்புகள் அதே உறுதியுடன் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து வந்துள்ளன.  மேற்கத்திய நாடுகளின் உள்நாட்டு அரசியல், பல கோடி பெண்கள் மறைந்ததற்கான காரணத்தை ஆழ்ந்த ஆய்வுச் செய்வதற்குச், சாதகமாக இல்லை. பாலினத் தேர்வு மற்றும் தடையில்லாத கருக்கலைப்பினை பரவலாக செயல்படுத்த வெளிநாடுகளில் ஆதாரம் அளித்த அமைப்புகளான யூ.என்.எஃப்.பி.ஏ, ஐ.பி.பி.எஃப் போன்றவை மேற்கே பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து வந்தன. இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா நாடுகளில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் உள்ள அப்பட்டமான தவறுகள் மற்றும் கட்டாயப்படுத்துதலினை, பழமைவாத அமைப்புகள் மேற்கே பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ஒற்றுமொத்தமாக அழிக்க, ஆதார முட்டுகளாக பயன்படுத்தினர். மெக்ஸிகோ சிடி-யில் நடந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு பற்றிய மாநாட்டில் பழமைவாத அமைப்புகள், ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் வெளிநாட்டில் அரசு சாரா அமைப்புகளுக்கு கருக்கலைப்புச் சேவைகளுக்கான நிதி உதவிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்தினர். அமெரிக்காவில், இரு கட்சிகளின் பாகுபாட்டிற்கேற்ப, ரிபப்ளிகன் கட்சியின் ஜனாதிபதிகள் மெக்ஸிகோ சிடி கொள்கையை பெரும்பாலும் ஆதரிப்பதும் டெமோக்ராட் கட்சியின் ஜனாதிபதிகள் அந்த கொள்கையை பெரும்பாலும் எதிர்ப்பதும் சகஜமாக உள்ளது. 2016-இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டானல்ட் ட்ரம்ப்-இற்கு ப்ராடெஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் ஒரு பிரபலமான குழுவான மறுபிரவேசக் கிறிஸ்துவர்களின் உறுதியான ஆதரவு, அவர் மெக்ஸிகோ சிடிக் கொள்கையை ஆதரிப்பேன் என்று வாக்குக் கொடுத்ததனால், கிட்டியது. மற்றொரு பக்கத்தில், பெண்களின் கருக்கலைப்புத் தேர்வு உரிமைகளைப் பாதுகாக்கும்  அரசு சாரா அமைப்புகள், ஆசிய நாடுகளில்  பலவந்தக் கருத்தடைகள், பலாத்காரமாக சுகாதாரமற்ற சூழ்நிலையில் நடத்தப்பட்ட பாலினத் தேர்வடங்கிய கருக்கலைப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்களது நம்பகத்தன்மை பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதாரமாக அவர்கள் வைக்கும் வாதங்களை பலவீனப்படுத்துகிறது.
ஆசிய மக்கள், இனப்பெருக்கத் தேர்வை நடைமுறைக்கு ஏற்ற யதார்த்ததோடும் உணர்ச்சி குன்றியும் அணுகுகிறார்கள் என்ற கருத்துப் பரவலாக உள்ளது. இது, மேற்கத்திய மக்கள் தொகை விஞ்ஞானிகளும் நிதிக் கொடையாளிகளும் முதலில் கம்யூனிஸத்தின் பரப்பைத் தடுப்பதற்கும் பின்னர் தங்களுக்குக் கிட்டும் வெளிநாட்டு நிதி உதவியைப் பராமரிப்பதற்குரிய வழிமுறையாகவும் அந்த ஆசிய அரசுகள்  செலவிட்ட பணம் மற்றும் பொருளினால் நடந்ததே தவிர, கலாச்சாரத்தில் அந்த அணுகுமுறை உள்ளார்ந்ததால் அல்ல.
இன்றைய நாளில், தொழில்நுட்பத்தில் உண்டான முன்னேற்றங்களால், இன்விட்ரோ கருத்தரிப்பு மற்றும் உள்வைப்பதற்கு முன்னால் மரபணு கண்டறிதல் போன்ற முறைகள் பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளின் குறிப்பிட்டப் பண்புகளை தேர்வு செய்ய உதவுகிறது. இந்த முறைகள் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அலசல்:
பிறக்கும் போது பாலின விகிதத்தின் ஏற்ற அளவு வரலாறு தோறும் 100 பெண்பாலருக்கு 105 ஆண்பாலர் என்று இருந்திருக்கிறது. இந்த அளவில், ஆண்பாலரின் எண்ணிக்கை கூடியிருப்பதற்கு, ஆண்கள் வன்முறையில் இறங்குவதனால் அவர்களது வாழ்க்கைக் காலம் குறுகுவதைக் கணக்கில் எடுத்துக்  கொள்வது தான் காரணம். ரானல்ட் ஏ ஃபிஷர் என்ற விஞ்ஞானி, பிறப்பில் பாலின விகிதத்தில் 100 பெண்களுக்கு குறைந்த ஆண்பாலர் இருந்தால், ஆண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அனுகூலம் கிடைக்கும் என்றும்(வாழ்க்கைத் துணைக்கு ஆண்களின் தேவை அதிகரிக்கும் என்பதால்), மற்றப் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால், பிறப்பில் உள்ள பாலின விகிதத்தில் ஆண்பாலரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றார். அவரது ஆய்வு, இயற்கையில் உள்ள பிறப்பில் பாலினத் தேர்வின் அளவுக்குப் பொருந்தும். வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில், பிறப்பில் பாலின விகிதம் ஏற்றத்தக்க அளவிலிருந்து நிறைய மாறுபட்டு இருக்கிறது - 1870-இல் கலிஃபொர்னியாவில் 166, இடைக்கால போர்ட்சுகலில் 112 மற்றும் ஏதென்ஸில் பி.ஸி 4வது நூற்றாண்டில் 143 - 174 ஆக இருந்திருக்கிறது. பிறக்கும் போது பாலின விகிதத்தின் அளவில் ஆண்பாலரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது, சமூகத்தில் வன்முறையும் இடையூறுகளும் மிகுந்து, அதில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது (போர்ட்சுகலின் விவரத்தில், ஆசியா மற்றும் ஆஃப்ரிகாக் கண்டங்களில் உள்ள நாடுகளைப் பாதித்தது).
சீனாவின் மன்சூ வம்சத்தில், பிறக்கும் போது பாலின விகிதத்தின் வேறுபாட்டினால், அதிருப்தி மிகுந்த ஆண்கள் வெறி கொண்ட தலைவர்களின் தூண்டுதலால் வன்முறை மிக்க கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அதனால், அந்த வம்சம்,  முதலில் சோர்ந்து, பிறகு அழிவைக் கண்டது. 2000-ஆம் ஆண்டில் பிறப்பில் பாலின விகிதம் 100 பெண்பாலருக்கு 112 ஆண்பாலர் ஆக இந்தியாவிலும், 121 ஆண்பாலர் ஆக சீனாவிலும், 118 ஆண்பாலர் ஆக ஜார்ஜியாவிலும், 115 ஆண்பாலர் ஆக அஸர்பைஜானிலும், 120 ஆண்பாலர்  ஆக ஆர்மீனியாவிலும் இருந்தனர். இந்தியாவில் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள் பிறப்பில் பாலின விகிதத்தில் நிறைய வேறுபாடு காணப்படுகிறது - இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் 100 பெண்பாலருக்கு 126 ஆண்பாலரும், கேரளாவில் 100 பெண்பாலருக்கு 104 ஆண்பாலரும், தமிழ்நாட்டில் 100 பெண்பாலருக்கு 106 ஆண்பாலரும் இருக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில், பணக்கார நாடுகளில் (தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா) உள்ள ஆண்கள் அருகில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் (சீனா, வியட்நாம்) மணப்பெண்களை விலைக்கு வாங்குகின்றனர். வறுமை நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் மணப்பெண்களை கடத்தியும் விபச்சாரிகளிடம் சென்றும் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர். இதனால், ஹ்.ஐ.வி போன்ற பாலியல் நோய்கள் நிறைய அளவில் பரவி வருகின்றன. ஏனெனில், தனிமையில் இருக்கிற மணமாகாத ஆண்கள் பாலியல் நோய்களினால் பாதிக்கப்பட்டு, அந்த நோய்களை அவர்கள் மணக்கும் பெண்களுக்கும் பரவ விடுகின்றனர். பல ஆண்களை ஒரு பெண் மணப்பதும், குழந்தைத் திருமணமும் இந்தியாவில் பிறப்பில் பாலின விகிதம் ஏற்றத்தக்க அளவிலிருந்து நிறைய வேறுபட்டதினால் இன்றும்  தொடர்கின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவிற்கு வருவதற்கு முன், இந்தியாவில் பிறப்பில் பாலின விகிதம் பதிவு செய்யப்படவில்லை.  இந்தியாவில் வந்து இறங்கிய பின், பிரிட்டிஷ் நாட்டினர் அதனை அளவெடுத்துப் பதிவு செய்தனர். அப்போது, பிறப்பில் பாலின விகிதத்தில் 100 பெண்பாலருக்கு ஆண்பாலரின் எண்ணிக்கை வெகு அதிகமாக இருந்ததனால், அந்த அளவு அவர்கள் வருவதற்கு முன் இந்தியாவில் எப்போதும் இருந்ததாக யூகித்தனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் பெர்மனெண்ட் ஸெட்டில்மென்ட், ரயாட்வாரி போன்ற வருவாய் முறைகளின் செயல்பாடு பிறப்பில் பாலின விகிதம் ஏற்றத்தக்க அளவிலிருந்து நிறைய மாறுபடுவதற்குக் காரணமாக அமைந்தது. புதிதாய் இயற்றப்பட்ட வருவாய் அணுகுமுறைகள் நெகிழ்வற்றதாய் இருந்ததினால், பணம் மற்றும் பொருள் கொண்ட ஜமீந்தார்கள் தங்களது நிலங்களை இழந்தனர் (இதனால், அந்த நிலத்தில் வேலை செய்து வந்த விவசாயிகளும் தொழிலாளிகளும் முன்னை விட மோசமான நிலையை அடைந்தனர்). பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியர்கள் தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகளை பல வகைகளில் இழக்க முயன்றதைக் கருத்தில் கொண்டு அதனை சரிகட்ட 1873-இல் பெண்கள் சிசுக்கொலைத் தடுக்கும் திட்டத்தின் மூலம் வரதட்சணை மற்றும் இதர கல்யாணச் செலவுகளை மட்டுப்படுத்தத் தண்டனைகளைக் கூட்டினர். இதனால், பெண் சிசுக் கொலை இந்தியாவில் சில இடங்களில் மேலும்  மோசமாகியது. பிரிட்டிஷ் வருவதற்கு முன், முகலாயர் ஆட்சியில் குடும்பங்களில் பெண்களுக்கு சொத்து உரிமை இருந்து வந்தது. பெர்மனெண்ட் ஸெட்டில்மென்ட்-இனால் பெண்களுடைய சொத்து உரிமை அழிக்கப்பட்டதனால், குடும்பங்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு கல்யாணத்திற்குப் பின் சொத்துகளை அளிப்பதற்கு வரதட்சணையை வெகுவாகப் பயன்படுத்தினர். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு சொத்தை புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் இருக்க, மக்கள் ஆண் குழந்தைகளை பெறுவதற்கு முயன்றனர். அவ்வாறு முயற்சிக்கும் போது, முதலில் பெண் குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தைகள் பிறக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சித்தனர்('நிறுத்தும் விதி'). இதனால், குடும்ப அளவு மேலும் அதிகரித்தது. தங்களது குழந்தைகளை பார்த்துக் கொள்ள பணமும் பொருளும் குன்றிய போது, பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பங்கைக் குறைத்து அதனை ஆண் குழந்தைகளுக்கு கொடுத்தனர். இதன் மூலம், பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் உள்ள குடும்பங்களில் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட முக்கியமாகக் கருதப்பட்டனர். பெண் சிசுகொலையின் காரணத்தினால் ஏற்றத்தக்க பிறப்பில் பாலின விகிதத்தில் வேறுபாட்டோடு கருவுறுதல் விகிதத்தின் அளவும் அதிகரித்தது. இதனால், எஞ்சியுள்ள பெண்பாலருடன் ஜோடியாக இணைக்க ஆண் குழந்தைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்ய பெற்றோர்கள் எத்தனித்தனர். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு பிரிட்டிஷ் காலத்தில் இருந்த 'இரும்புச் சட்டம்' என்று கூறப்படும் நிர்வாக உள்கட்டமைப்பைப்  புதிய அரசு தக்கவைத்துக் கொண்டது. அதனால், விடுதலைக்குப் பிறகும் பிறப்பில் பாலின விகிதம்  உச்ச அளவில் இருந்தது.
1950-க்குப் பிறகு, மேற்கத்திய ஆலோசகர்கள் இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகையை கம்யூனிஸ முப்பட்டகத்தின் மூலம் அலசினர். அவர்களுடைய நோக்கில், இந்தியாவிலும் சீனாவிலும் வறுமை நிலை  அதிகரிக்க, கம்யூனிஸ சித்தாந்தம் அங்குள்ள மக்களைத் தன் வசப்படுத்தி மேற்கத்திய சக்தியை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்று நம்பினர். அதனால், மேற்கிலிருந்து இந்தியாவிற்கு நிறைய மக்கள் தொகை வல்லுநர்களை அனுப்பி, மேற்கத்தியச் சாப்பாடு மற்றும் வளர்ச்சி நிவாரண உதவி கிடைக்க வேண்டுமானால், அந்த வல்லுநர்களின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். இந்திய அரசு, கம்யூனிஸ மற்றும் காபிடலிஸ சித்தாந்தங்களை பின்பற்றும் இருதரப்பினரையும் சமாளித்து, தனக்குச் சாதகமான உதவியைத் தேடிக் கொண்டது. ஜான் டி ராக்கஃபெல்லர் III போன்ற மேற்கத்திய நிதிக் கொடையாளர்கள் இந்தியாவின் அதிக மக்கள் தொகைப் பற்றியக் கவலையினால் பாப்புளேஷன் கவுன்ஸில் போன்ற  அரசு சாரா அமைப்புகளை நிறுவினர். இந்த அமைப்புகள் மூலம் இந்தியாவிலும் தென் கோரியாவிலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தனர். அதனை, இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் எதிர்த்தது. ஆனால், மேற்கத்திய அரசு சாரா அமைப்புகள் அந்த எதிர்ப்பை நயவஞ்சகத்தால் தூளாக்கின. அதற்கு ஒரு உதாரணம், பாப்புளேஷன் கவுன்சிலின் டாக்டர் ஷெல்டன் சீகல் ஐ.யூ.டி என்று அழைக்கப்படும் கருத்தடை இயந்திரத்தை, இந்திய சுகாதார அமைச்சகம் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தாலும், தனது சாமான்களுக்குள்  அவற்றைக் கிறிஸ்துமஸ் ஆபரணங்கள் என்று பொய் கூறி இந்தியாவிற்குள் கொண்டு வரும் பொழுது சுங்கக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்தார்.
கொரியன் போருக்குப் பிறகு, தென் கொரியா அமெரிக்க உதவியுடன் ராணுவ ஆட்சி ஆனது. தாய்வான் மற்றும் இந்திய நாடுகளுடன் சேர்ந்து, தென் கொரியாவும் பாப்புளேஷன் கவுன்சில் மற்றும் இதர அமைப்புகள் (ஐ.பி.பி.எஃப், யூ.என்.எஃப்.பி.ஏ) நடத்திய மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளின் மையமாக அமைந்தது. சாப்பாட்டு நிவாரணத்தில் கருத்தடை ரசாயனங்கள் சேர்க்கவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள கடன் திட்டம் உருவாக்கவும், மூன்று குழந்தைகளுக்கு மேல் இருந்த ஆண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யவும் யோசனைகளாக ஆராயப்பட்டன. தென் கொரியா, அமெரிக்காவின் உதவியுடன், பொருளாதார அதிகாரம் பொருந்திய நாடாக உருவான பின்னரும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டினை இராணுவ துல்லியத்துடனும் ஒழுக்கத்துடனும் செய்ததால் மிக அதிக அளவில் கட்டாய கருக்கலைப்பு நடத்தப்பட்டது. அதில் சில கருக்கலைப்புகள் பாலினத் தேர்வு அடங்கியதாக இருந்தன.
1968-இல் பால் எஹ்ர்லிக் எழுதிய பாப்புளேஷன் பாம்ப் புத்தகம் பிரசுரமானவுடன், இந்தியா மற்றும் சீனாவில் உள்ள அதிக மக்கள் தொகை பற்றிய கவலை உச்சக் கட்டத்தை அடைந்தது. மேற்கத்திய மக்கள் தொகை வல்லுநர்கள்,  புது டில்லியில் எங்கும் வலம் வந்தனர். இந்திய அரசும் மேற்கத்திய மக்கள் தொகை வல்லுநர்களுக்கு ஆதரவு அளித்தது. இந்தியாவின் உயரடுக்கு மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் சுற்றி வாழ்ந்த  வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களை அச்சத்துடன் பார்த்தனர். மேற்கத்திய மக்கள் தொகை வல்லுநர்கள் முன்றைய காலத்தில், மக்கள் தொகை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்று கூறிய தவறான கருத்தை நம்பி, இந்தியாவின் உயரடுக்கு மக்கள் வறுமையில் உள்ள ஆண்களை கட்டாயமாகக் கருத்தடைச் செய்தால் இந்தியாவின் பொருளாதாரம் மேன்மை அடையும் என்று நம்பினர். அரசியல்வாதிகள், உயரடுக்கு மக்கள் மற்றும் மேற்கத்திய வல்லுநர்கள் ஒன்று கூடி, மாநில அரசுகளின் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை (பெரும்பாலும் வலுக்கட்டாயமாக ஆண்களுக்குக் கருத்தடை செய்வதன் மூலம்)  செயல்படுத்தினர். மாநில அரசளவில் பொறுப்புடைமையில்லாததால்,  இந்திய ஆண்களின் நடுவில் இது அளவிடங்கா சோகத்தை உண்டாக்கியது(கருத்தடை முகாங்களில் அவர்களது விருப்பத்திற்கு எதிராகக் கருத்தடை செய்வதன் மூலமும் மற்றும் சேரிகளை அகற்றும் பிரச்சாரத்தில், குடும்பங்களின் நில உரிமையை பறிப்பதன் மூலமும்). இதற்கு உதாரணம், சில மாநில அரசுகள் (தமிழ் நாடு உட்பட) அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்கு இரண்டுக்கும் மேல் குழந்தைகள் இருந்தால், சம்பள ஏற்றத்தை நிறுத்தின. இந்திய அரசு அதிகாரிகளும் மேற்கத்திய மக்கள் தொகை வல்லுநர்களும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த கட்டாயத்தையும் அச்சுறுத்தலையும் கண்டு கொள்ளவில்லை.
1970-களில் பச்சைப் புரட்சியின் வெற்றி பால் எஹ்ர்லிக்-இன் கணிப்பைப் பொய்யாக்கியதை கண்டு கொள்ளாமல் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தொடரப்பட்டன. 1975-இலிருந்து இந்திரா காந்தி ஆட்சியில் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டு எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஆட்கொணர்வு மனு உரிமைத் தடையிடப்பட்டது. அதே நேரத்தில், நியூ டில்லியில் உள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ்-இல் முதன்முறையாக இந்தியாவில் பனிக்குடத் துளைப்பு (அம்நியோஸென்டெஸிஸ்) மூலம் கருவின் பாலினத்தைக் கண்டுகொள்ளும் முறை நடைமுறையாக்கப்பட்டது. அவசரச் சட்டத்தின் போது, இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி தலைமையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சஞ்சய் காந்தி அந்த அதிகாரத்தை அதிதீவிரமாகவும் இரக்கமற்ற முறையிலும் பயன்படுத்தினார். 1977 வருடத்தில் மட்டும் 60 லட்சம் ஆண்களுக்குக் கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைச் செய்தனர். 1977-இல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி ஜனதா கட்சியின் கைகளில் படு தோல்வி அடைந்தது. அந்த அரசியல் தோல்வியின் பாடமாக அரசியல் தலைவர்கள் இந்தியாவில் ஆண்களை கட்டாயமாகக் கருத்தடை செய்வதில் உள்ள தவறை உணர்ந்தனர். மக்கள் தொகை அதிகரிப்பைக் குறைக்க மேற்கத்திய அமைப்புகள் அழுத்தியதால், கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இந்தியப் பெண்கள் மீது பாய்ந்தன. பனிக்குடத் துளைப்பு முறைக்குப் பிறகு, பாலினத் தேர்வு அடங்கிய கருக்கலைப்பு பரவலானது. மேற்கத்திய மக்கள் தொகை வல்லுநர்கள் இந்த அணுகுமுறையை ஆமோதித்தனர். அவர்கள், பாலினத் தேர்வு அடங்கிய கருக்கலைப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு நெறிமுறையான மற்றும் பயனுள்ள அணுகுமுறை என்று கருதினர் (தற்காலத்தில் அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டதில், வரலாற்றை திருத்தி எழுதும் போக்காக பெண்களின் படிப்பிலும் அதிகாரத்திலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்). 1978-இலிருந்து 1983 வரை, இந்தியாவில் கிட்டத்தட்ட 78000 கருக்கள் கலைக்கப்பட்டன. இன்று, இந்திய அரசியலில், பஞ்சாயத்து தேர்தலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர்களது வேட்பாளர் தகுதியை நீக்கி விடுகின்றனர். 1980-களில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கிடைத்த வெற்றிக்களிப்பில், மேற்கத்திய வல்லுநர்கள் இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா-வில் உள்ள கருக்கலைப்புச் சட்டங்களை தாராளமயமாக்கும் பணியில் இறங்கினர். அந்த நாடுகளின் மதம் மற்றும் கலாச்சாரம் கருக்கலைப்பை ஆதரிக்கவில்லை என்றாலும், அங்குள்ள அரசாங்கங்கள் கருக்கலைப்புச் சட்டங்களைத் தாராளமயமாக்கினர்.  இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் வெற்றிகளைக் கொண்டாட, ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மக்கள் தொகை விருது இந்திரா காந்தி-க்கும், சீனா-வின் சீயான் ஷின்ஷாங்க்-இற்கும் வழங்கப்பட்டது.
சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் பொழுது, சீனாவின் கம்யூனிஸ்ட்கள் குடும்பக் கட்டுப்பாட்டை அங்குச் செயல்படுத்த மேற்கத்திய வல்லுநர்களின் உதவியைக் கோரினர். யூ.என்.எஃப்.பி.ஏ சீனாவுடன் 50 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. மேற்கத்திய வல்லுநர்களின் பரிந்துரைகளை ஒரு குழந்தைக் கொள்கை மூலம் செயல்படுத்தினர். சீனாவின் அரசும் ஐ.பி.பி.எஃப்-உம் சீனாவின் பெண்களைக் கட்டாயப்படுத்தியும் அச்சுறுத்தியும் செய்தக் கருக்கலைப்பு அறிக்கைகளை ஒடுக்கினர்.  ஐ.பி.பி.எஃப்-இன் ஆராய்ச்சியாளர் ஒருவர்  தனது அறிக்கை முடக்கப் பட்டபின், கருக்கலைப்பை எதிர்க்கும் ஒரு அமைப்பை அமெரிக்காவில் தொடங்கினார்.
மக்கள் தொகை விஞ்ஞானிகள் மற்றும் ஜனத்தொகை ஆய்வாளர்களிடையே, ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வளர, பிறப்பில் பாலின விகிதம் ஏற்றத்தக்க அளவை அடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், பிறப்பில் பாலின விகிதத்தின் அண்டைக் காலப் போக்கு அதனைப் பொய்யாக்கியுள்ளது. இந்தியா சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவர்களது பிறப்பில் பாலின விகிதம் குறையாமல் உயர்ந்த அளவில் இருந்து வருகிறது. தென் கொரியா மேம்பட்ட பொருளாதாரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியும் அங்குள்ள பிறப்பில் பாலின விகிதம், மக்கள் தொகை விஞ்ஞானிகளும் ஜனத்தொகை ஆய்வாளர்களும் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. 1980-களில் மேம்பட்ட பொருளாதார நாடாக வலம் வந்த தென் கொரியாவின் பிறப்பில் பாலின விகிதம் இன்றும் 100 பெண்பாலருக்கு 113 ஆண்பாலராக இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் இன்றைய காலகட்டத்தில் வளரும் பொருளாதார நாடுகளிலிருந்து மேம்பட்ட நிலையை அடைந்தாலும், அவர்களது பிறப்பில் பாலின விகிதம் குறைவதற்கு பல தசாப்தங்கள் எடுக்கும். தென் கொரியாவின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் அதனுடைய கருவுறுதல் விகிதம் 1.08-ஆக இருக்கிறது. இது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் குறைந்த பட்சத் தேவையான கருவுறுதல் விகிதத்தின் மாற்று அளவான 2.1-விட மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், தென் கொரிய அரசு அந்த நாட்டின் கருவுறுதல் விகிதத்தைக அதிகரிக்க, கருக்கலைப்பை அறவே தடை செய்துள்ளது. அண்டைய காலத்தில், இந்திய அரசு,  பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்குச் சமமாக பாவிக்க வேண்டி மக்களிடம் கோரிக்கைகள் விடுத்துள்ளது. இது முதலில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி, இன்றைய பா.ஜ.க ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஆசியாவில் கருக்கலைப்புச் செய்த பெண்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவும், கல்யாணமாகிக் குழந்தைகள் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளில், கருக்கலைப்புச் செய்த பெண்கள் வயதில் சிறியவர்களாகவும், கல்யாணம் ஆகாதவர்களாகவும், குழந்தைகள் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். இது, ஆசியாவில், பெரும்பாலும் ஆண் குழந்தைகளைப் பெறுவதற்காக முதலில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கருக்கலைப்புச் செய்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
மேற்கத்திய நாடுகளில் பெண்களின் கருத்தடைத் தேர்வை ஆதரிக்கும் அரசு சாரா அமைப்புகள், ஆண்களுக்குக் கட்டாயக் கருத்தடை அறுவைச் சிகிச்சையும் பெண்களுக்கு அச்சுறுத்தி பாலினத் தேர்வு அடங்கியக் கருக்கலைப்புகளையும் செய்ததை ஆதரித்ததனால் , இன்று தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கின்றன. இவை, மேற்கத்திய நாடுகளில் மட்டும் கவனம் செலுத்துவதனால், அங்குள்ள பெண்களின் கருக்கலைப்பு  உரிமையைப் பிராதனமாகக் கருதுகின்றனர். இந்தியா, சீனா மற்றும் தென் கொரியாவில் 1960-களிலும் 1970-களிலும் இந்த அமைப்புகள் செயல்பட்டபோது, அதன் தலைவர்கள் ஆண்களாக இருந்தனர். 1980-களில் இந்த அமைப்புகளின் தலைமையை பெண்கள் ஏற்றுக் கொண்டனர்.  அவர்கள், மேற்கத்திய நாடுகளில் பெண்களின் கருக்கலைப்பு உரிமையை ஆதரிக்கும் சட்டங்களை இயற்ற முயன்றனர். அமெரிக்காவில் இந்திய, சீன மற்றும் தென் கொரிய வம்சாவெளியில் வந்தவர்களிடையே, பாலினத் தேர்வு அடங்கியக் கருக்கலைப்பு எஞ்சியுள்ள மக்கள் தொகையை விட மிக அதிகமாக நடக்கிறது. அமெரிக்க மக்களிடையே பரந்த அளவில் ஆதரவைத் தேடுவதால், என்.ஏ.ஆர்.ஏ.எல் ப்ரோ சாய்ஸ் அமெரிக்கா, நேஷனல் ஆர்கனைசெஷன் ஃபார் விமன் போன்ற அரசு சாரா அமைப்புகள், பாலினத் தேர்வு அடங்கிய கருக்கலைப்பு பெண்குழந்தைகளுக்கு எதிராக அமையும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், செயல்படுகின்றன.  இதனைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, பெண்களிடையே கருக்கலைப்பை எதிர்க்கும் பழமைவாத அமைப்புகள், சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளில் நடந்த பாலினத் தேர்வு அடங்கிய கருக்கலைப்புகளைக் காரணம் காட்டி, மேற்கத்திய நாடுகளிலும் கருக்கலைப்பு உரிமையை அறவே விலக்க முயன்று வருகின்றன. இன்றைய காலத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமையை ஆதரிக்கும் அரசு சாரா அமைப்புகள் மேற்கத்திய நாடுகளில் பெண்களின் படிப்பு மற்றும் அதிகாரத்தை மேம்படுத்த அதிலுள்ள முதலீட்டை அதிகரிக்க வாதாடுகின்றனர். முன்பு கட்டாய ஆண் கருத்தடைகளையும் பாலினத் தேர்வு அடங்கிய பெண் கருக்கலைப்புகளையும் ஆதரித்ததனால், அவர்களின் விவாதங்கள் வீரியம் குறைந்து ஒலிக்கின்றன. 

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:

மே யூ பீ தி மதர் ஆஃப் ஹண்டிரட் ஸன்ஸ் - எலிஸபெத் ப்யூமில்லர்
ஷா கமிஷன் ரிப்போர்ட்
தி கேம்ப் ஆஃப் தி ஸெய்ன்ட்ஸ் - ஜான் ரஸ்பெய்ல்
ஃபெடல் மிஸ்கண்ஸெப்ஷன் - தி ஸ்ட்ரகிள் டு கண்ட்ரோல் வேர்ல்ட் பாப்புளேஷன் - மாத்யூ கானேலி

No comments: