சுருக்கம்:
சமீப காலத்தில் வெளிவந்தப் படமான 'டார்க்கஸ்ட் அவர்', இரண்டாம் உலகப் போரின் பொழுது லண்டன் மீது குண்டு மழை பொழிந்த ஜெர்மனி-யின் தாக்குதலை எதிர்கொண்ட பிரிட்டன்-இன் எதிர்ப்பைக் காட்டுகிறது. அமெரிக்கா-வின் அகெடமி விருது என்று அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுக் கிடைக்கும் நோக்குடன், பல இடங்களில் உண்மையைத் திரித்து, அதன் தலைமை நாயகனான அன்றைய பிரிட்டிஷ் பிரதமர், ஸர் வின்ஸ்டன் சர்ச்சில்-ஐ மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். சர்ச்சில்-ஆக நடிக்கும் கேரி வோல்ட்மேன், சர்ச்சில்-இன் தனது நம்பிக்கைக்கு ஒவ்வாத சாத்தியக் கூறுகளின் புறக்கணிப்பு (சர்ச்சில்-இன் வார்த்தைகளில் - 'வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே எனக்கு வேண்டியவற்றை நம்பிய அதே நேரத்தில் பகுத்தறிவை அதனுடைய பாதைகளில் செல்ல விடும் அமைப்பை உருவாக்கிக் கொண்டேன்') மற்றும் நடப்புகளின் தனதுப் பங்கை மிகைப்படுத்துதல் போக்கினை அடித்தளமாக வைத்தே, ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆஃப்கானிஸ்தான்-இல் பிரிட்டிஷ்
ஏகாதிப்பத்தியத்தின் பொழுது நடந்த சண்டையை நினைவுக் கூறும் வகையில் எழுதப்பட்ட 'தி ஸ்டோரி ஆஃப் மலகண்ட் ஃபில்ட் ஃபோர்ஸ்' என்ற அவரதுப் புத்தகத்தில் அந்தச் சண்டையில் தனதுப் பங்கை அளவுக்கு அதிகமாக புனைவது, முதலாம் உலகப் போரில் கல்லிப்போலி போர்க்களத்தில் 57000 போர் வீரர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தது மற்றும் இரண்டாம் உலகப் போரில் இந்தியா-வை கேவலமாகக் கையாண்டக் கதைகளை வைத்து, சர்ச்சில்-இன் குறைகளை வெளிக்கொணரும் பாத்திரத்தின் மூலம் அகடெமியின் வாக்காளர்களைக் கவர்ந்து இருக்கலாம்.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன்-இன் பிரதமராக இருந்த சர்ச்சில், 'பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தைக் கலைப்பதற்காக நான் (பிரிட்டிஷ்) ராஜ்யத்தின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை' என்று அறைகூவல் விடுத்தார். ஜுலை 1945-இல் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் தோல்வியுற்று பதவி விலகிய பொழுது, நடைமுறைக்கு மாறாக நடப்புகளைக் கணிக்கும் தனதுப் போக்கினால், பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தைக் கலைக்கும் பொழுது ஏற்பட்டக் கலவரங்கள் மற்றும் குழப்பத்தினால் கோடிக்கணக்கான உயிர் இழப்புகள், எண்ணிலா அளவில் இடப்பெயர்ப்புகள் மற்றும் இன்று வரை ஒன்றை ஒன்று வெறுக்கும் இரு நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான்) உருவாகும் நிலைக்குக் காரணமானார். இரண்டாம் உலகப் போரின் பின்னரும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் உலகெங்கும் தொடரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியர்களுக்கு ஆட்சியைக் கொடுத்து அங்கிருந்துக் கிளம்புவதுப் பற்றியத் திட்டங்களுக்குத் தகுந்த அளவுக் கவனம் அளிக்கவில்லை. இதனால், ஜுலை 1945 தேர்தலில் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன், தனது உலகளாவியச் சக்தியைக் குறைக்கும் நோக்கோடு, பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியக் கீரிடத்தின் மணி என்றுக் கருதப்பட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கும் முன், தொலைநோக்கோடு தேவையான திட்டங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறினர். பஞ்சங்களின் பொழுதும் இந்தியா பாகிஸ்தான் பிரிவின் பொழுதும் இழந்த இந்தியர்களின் மரணத்திற்கு பிரிட்டன் தான் பிரதானப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதிக அளவில் நிகழ்ந்த இந்திய மக்களின் சாவு, பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின், பிழையாகக் கருதுவதைக் காட்டிலும் அதன் முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டும்.
தங்களது ஏகாதிப்பத்தியத்தின் ஆரம்பத்தில், 1770-களில் வங்காள மாநிலத்தின் அதிபதிகளான பொழுது, பஞ்சத்தினால் அங்கு 100 லட்சம் இந்தியர்கள் இறந்தனர். தங்களது ஆட்சியின் இறுதியில், 1943-இல் நிகழ்ந்த வங்காளப் பஞ்சம், குறைந்தப் பட்ச மதிப்பீட்டில் 30 லட்சம் மக்களின் உயிரைக் குடித்தது. 1943-இல் ஒரிஸா மற்றும் மதராஸ் மாநிலங்களில் பட்டினியால் நிகழ்ந்த பல ஆயிரம் சாவுகள் (வங்காளத்தில் நிகழ்ந்த பஞ்சத்தின் உயிரிழப்புகள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டதன் காரணமாக ஒரிஸா மற்றும் மதராஸ் மாநிலங்களில் இருந்த அரிசி மூட்டைகள் வங்காளத்திற்கு அனுப்பப்பட்டன) இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. மதராஸ் மாநிலத்தில் பஞ்சம் 1783, 1792, 1807, 1813, 1823, 1834, 1854 வருடங்களில் தலைவிரித்தாடியது. காலனித்துவ இந்தியாவின் பஞ்சங்கள் மற்றும் அதன் கேடுகெட்ட நிலைமை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிகழ்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் மக்கள், இந்தியா காலங்காலமாக அவ்வாறு இருந்திருக்கிறது என்று கூறி தங்களுக்கு உரியத் தார்மீகப் பொறுப்பிலிருந்து நழுவினர். இவ்வாறு இந்தியர்களின் பேரளவு உயிரிழப்பிற்கானப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில் சர்ச்சில்-உம் சராசரி பிரிட்டிஷ் மக்களும் ஒத்த மனதோடு இருந்தனர். இந்தப் புத்தகத்தில், காலனித்துவ இந்தியா-வை இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன்-இன் ராணுவ, தொழில் உற்பத்தி மற்றும் உணவு விநியோகத்தின் அடித்தளமாகப் பயன்படுத்தியதனால், காலனித்துவ இந்தியா-வின் ஹிந்துக்கள் மீது இருந்த சர்ச்சில்-இன் ஆணித்தனமான இனவெறி, 1943-இல் நிகழ்ந்த வங்காளப் பஞ்சத்தின் வீரியம் வழக்கமாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிகழ்ந்ததைக் காட்டிலும் அதிகரித்தது. ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் வெகுஜனக் கொலையாளிகள் என்று நியாயமாகக் கருதப்படுகின்றனர். ஆனால், சர்ச்சில், பிரிட்டன்-ஐப் பாதுகாத்து மேற்கத்தியர்களை, இரண்டாம் உலகப் போரின் அழிவில் இருந்துக் காப்பாற்றிய நாயகனாகக் கருதப்படுகிறார். இரண்டாம் உலகப் போரின் பொழுது இந்தியர்களை ஆண்டப் பிரிட்டிஷ் கொள்கைகள், அவர்களைப் (குறிப்பாக, ஹிந்துக்கள்) பற்றிய சர்ச்சில்-இன் மருட்சிகளால் தாக்கம் அடைந்ததால், பின்னர் பஞ்சத்தினால் நடந்த வெகுஜன உயிரிழப்பிற்கும் இந்தியா பாகிஸ்தான்-இன் பிரிவின் போது நடந்த கொலைகளுக்கும் வித்திட்டது. இந்தப் புத்தகம், இரண்டு இணைப்புப் பாதைகளில் செல்கிறது - ஒன்றில், சர்ச்சில் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவ இந்தியாவின் நிர்வாகம், வங்காளப் பஞ்சம், பேரழிவில் கொண்டு போய் விட்டதற்கான தடயங்களை (பிரிட்டிஷ் அரசால் அனுமதிக்கப்பட்டுப் பொதுப்பார்வையில் இருக்கக் கூடியத் தடயங்கள்) முன்வைக்கிறது. மற்றொன்றில், இந்தியா-வின் பஞ்ச நிவாரணம் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட இந்தியக் குடிமகன்களைக் கண்முன் கொண்டு வருகிறது. பொதுப்படையில் அறிந்துக் கொள்வதற்குப் பதிலாக, குறிப்பான சில ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றிப் படிப்பது சந்தோஷத்தைத் தருகிறது (பொதுவாக, வரலாற்றுப் புத்தகங்களில், இது ஐரோப்பியர்களுக்குப் பெரும்பாலும் நடப்பதில்லை). வங்காளத்தைப் பற்றியப் புத்தகம் என்பதால், அந்த மாநிலத்தில் உள்ள விடுதலை வீரர்கள் மேல் ஓரவஞ்சனைக் காட்டுவதால், மிர் காஸிம் ஹீரோவாகக் காட்சியளிக்கிறார்(இந்தப் புத்தகத்திலும், மிர் ஜாஃபர், புதுக்கோட்டை ராஜா போல் வில்லனாகத் தான் வருகிறார்).
அலசல்:
சிறு வயதில், 'காந்தி' படம் வெளியான பொழுது, அதைக் காண எங்கள் பள்ளியில் இருந்து 'ஊக்கம்' அளிக்கப்பட்டது. ஒரு தனி மனிதனின் முயற்சி, இந்தியா-வில் இருந்து பிரிட்டிஷ்-ஐ விரட்டக் காரணமாக இருந்தக் கதையை எளிமையாகக் கூறியது. அந்த வயதில், வரலாற்றில் நிறைய ஆர்வம் இல்லாததனால்(அதை வளர்க்க அப்பா செய்த முயற்சிகளையும் மீறி), என்னுடைய இதர பள்ளிக்கூட நண்பர்களுடன் பார்த்தக் குஷியே நினைவிற்கு வருகிறது. அதன் பிறகு, அந்தப் படத்தை, தொலைக்காட்சியில் ஒன்றிரண்டு முறைப் பார்த்திருக்கிறேன். ஆனால், காந்தியின் அரசியல் மற்றும் குடும்பத் திறனில் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், அதை முழுமையாகப் பார்க்கப் பொறுமை இருந்ததில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், அந்தப் படத்தில் வங்காளப் பஞ்சம் பற்றியோ சர்ச்சில்-ஐப் பற்றியோக் குறிப்பு இல்லாதது, இந்தியா-வின் என்.எஃப்.டி.ஸி-ஆல் அந்தப் படம் தயாரிக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் கலைஞர்களால் எழுதி இயக்கப்பட்டதனால், விநோதமாகத் தோன்றியது. ஏனெனில், அந்தப் படம் இந்தியா-வின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய படம். விடுதலைப் போராட்டத்தில், இரண்டாம் உலகப் போரின் காலத்தில், காந்தி-யின் முக்கிய எதிராளியாகச் சர்ச்சில் இருந்தார். இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், பிரிட்டிஷ் ஸ்தாபனங்கள், இந்தியா-வின் விடுதலைப் போராட்டக் கதைகளில் இருந்து சர்ச்சில்-இன் பங்கை மறைப்பதன் காரணம் புரிகிறது.
பிரிட்டிஷ் நச்சு, இந்தியா-விற்குள் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் வங்காளத்தை 1770-களில் கையகப்படுத்தியதின் காரணமாக நுழைந்தது. முதல் வேலையாக, வங்காளத்தின் பணவளத்தை பிரிட்டன்-இற்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர். அந்த நடவடிக்கைகளின் இரக்கமற்றத் திறனால், 1770-களில் நிகழ்ந்த வங்காளப் பஞ்சத்தின் விளைவாக 100 லட்சம் மக்கள், வங்காளத்தின் ஜனத் தொகையில் ஏறத்தாழ 30 சதவிகிதம், உயிர் இழந்தனர். 1600-களின் நடுவில், வங்காளத்தை, 'உலகிலேயே சிறந்த செழிப்பு நிறைந்த நாடு' என்று ஒரு ஐரோப்பிய பயண எழுத்தாளர் விவரித்திருந்தார். 1766-இல் இருந்து 1768-இற்குள், வங்காளத்தின் ஏற்றுமதி, அதன் இறக்குமதியை விட 10 மடங்கானது. இதில் இருந்து கிட்டிய லாபம், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தைச் சென்று அடைந்தது. 1900-இல் உணவு ஏற்றுமதி வருடத்திற்கு 100 லட்சம் பவுண்ட் மதிப்பை எட்டியது. 1856-இல் இருந்து 1862 வரை ரெயில் தண்டவாளங்களின் கட்டுமானத்திற்கான முதலீட்டினால் , இந்தியா-விற்குள் பணம் மற்றும் பொருட்களின் இறக்குமதி அதன் ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ஏனைய வருடங்களில், பிரிட்டன் இந்தியா-வில் இருந்து உணவு மற்றும் பணத்தை ஏற்றுமதி செய்து அதற்குப் பதில் அதிக அளவுப் பொருட்கள் கொடுக்காமல் இருந்தது. பருத்தியைப் பொறுத்தவரை,
காலனித்துவ இந்தியா-வில் இருந்து பருத்தி மூலத்தை ஏற்றுமதி (பிரிட்டன்-இன் நிலப்பரப்பில் பருத்தி விதைத்து வளர்ப்பதற்கு போதிய இடம் இல்லாததால்) செய்து, பிரிட்டன்-இல் செய்யப்பட்ட பருத்திப் பொருட்களை இந்தியா-விற்குள் இறக்குமதி செய்தனர். அதன் விளைவாக, தொழிற்துறைப் பரட்சி மூலம் தனது வளர்ச்சியை பிரிட்டன், வெகுவாக ஏற்றிக் கொண்டு, அதனுடன் போட்டியிடும் மற்ற நாடுகளைக் காட்டிலும் 50 வருடங்கள் முதல் தொடக்கம் பெற்றது. பிரிட்டன்-இன் வங்கிகள், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் தொழிற்துறைப் புரட்சிக்காக கடன் அளித்து, லாபம் சம்பாதித்துக் கொண்டனர். சில வருடங்களில், இந்த இரு நாடுகளும் கூடுதல் உற்பத்தித் திறன் மற்றும் புதியக் கண்டுபிடிப்புகள் மூலம், பிரிட்டன்-ஐ பின் தள்ளின. காலனித்துவ இந்தியா பிரிட்டன்-இடம், வருடத்திற்கு 200 லட்சம் பவுண்டுகளை, வெளிநாட்டுப் போர்களில் பங்கெடுத்ததற்கானச் செலவு, ரெயில் முதலீட்டுகளின் வட்டி, பிரிட்டிஷ் குடிமக்களின் ஓய்வூதியம், மற்றும் லண்டன் நகரில் லெடென்ஹால் தெரு-வில் அமைந்திருந்த இந்தியா ஹவுஸ்-இற்கான செலவுகள் உட்பட, 'ஹோம் சார்ஜ்' என்ற பெயரில் திருப்பி அனுப்பியது. காலனித்துவ இந்தியா-வில் இருந்து பயிர்ச் சாகுபடியை பிரிட்டன்-இற்கு அனுப்பிய அதே நேரத்தில், அதைப் பயிரிட்ட விவசாயிகள் மீது வாடகை, வட்டி மற்றும் இதர செலவுகளை திணித்தது. காலனித்துவ இந்தியா-வின் பல பகுதிகளை ரெயில் மூலம் இணைத்தாலும், அதன் கட்டுமானப் பணிக்கான கடன் தொகை, ஒரு இந்தியனுக்கு ஒரு வருடத்திற்கு 10,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அன்றைய காலத்தில், ஒரு இந்தியனுக்கு ஒரு வருடத்திற்கு வருவாய், 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக இருந்தது. இவ்வாறு, நீண்டக் காலம் உணவு ஏற்றுமதிச் செய்யப்பட்டதினால், காலனித்துவ இந்தியா, உணவில், நிகர ஏற்றுமதியாளர் நிலைமையில் இருந்து, நிகர இறக்குமதியாளராக மாறியது. பயிர் விளைச்சல் அதிகம் இல்லாத பொழுது, இதனால், பஞ்சமும் இறப்பும் தலைவிரித்தாடின. ரெயில் வண்டிகள் நிறைய இடங்களுக்கு செல்ல முடியும் என்பதனால், பஞ்சம், பரந்த அளவில் நிகழத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் காலனித்துவ இந்தியா-வில், ஐரோப்பியர்களின் வாழ்க்கை எந்தப் பாதிப்பும் இல்லாமல் சென்றாலும், பஞ்சமும் பசியும் இந்தியர்களின் வாழ்க்கையின் அம்சமாக திகழ்ந்தன. பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் கொடுமைகள் வெற்றி அடைந்த பொழுது, வங்காளம், இந்தியா-வின் செழிப்பான மாநிலம் ஆக விளங்கியதினால், அந்த மாநிலம், மிகுந்த அளவில் சரிவைக் கண்டது. 1905-இல் லார்ட் கர்ஸன், வங்காளத்தை, மதச் சார்பில் பிரிக்க உத்தரவிட்டார். இந்தியா-வின் மதங்கள், பண்டைக் காலத்தில் இருந்து, நடைமுறை வாழ்விற்கு முக்கியமாக இருந்தாலும், நன்றாக வரையறுக்கப்படவில்லை. இதனால், இந்தியா-வில் மதங்களிடையே பரிமாற்றம் அதிக அளவில் இருந்தது. ஐரோப்பியர்களுக்கும் பிரிட்டிஷ்-இற்கும், கிறிஸ்துவ மதத்தை அற்ற மதங்கள் தாழ்வாகத் தோன்றின. இஸ்லாம் மற்றும் யூத மதங்களை, புத்தகத்தை ஒத்த மதங்களாகக் கருதி, சிறிதளவு மதிப்பு அளித்தனர்.
பலக் கடவுள்களைக் கொண்டாடும் ஆஸ்த்திகத்தை ஒழுக்கக்கேடாக காலனித்துவ இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் கருதினர். கர்ஸன்-இன் பிரிவு, வங்காளத்தை மதத்தினால் வேறுபட்ட இரண்டுப் பிராந்தியங்களாகப் பிரித்தார். 1911-இல், மிகுந்த அளவில் போராட்டங்கள் மற்றும் வெடிக்குண்டுச் சம்பவங்களின் பலனால், வங்காளத்தின் பிரிவினையை, பிரிட்டிஷ் கைவிட்டனர். மிகுந்த அழுத்தத்துடன் இந்திய மக்களின் அரசியல் உரிமைகளை முடக்கினாலும், அடி மேல் அடியாக, இந்தியர்களுக்குச் சுய ஆட்சி அளிக்க முற்பட்டனர்(மான்டெகு செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம், சைமன் கமிஷன்). பெரும்பாலும் வெள்ளையர்கள் வாழ்ந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கானடா-விற்கு சுய அரசாட்சி 1907-இல் அளிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சில், சார்ல்ஸ் டார்வின், தாமஸ் மால்துஸ் மற்றும் தாமஸ் பபிங்க்டன் மக்கௌலே போன்றோரின் எண்ணங்களின் தாக்கம் கலந்தக் கண்ணோட்டத்தில் இந்தியர்களைக் கருதினார். இன்றையக் காலத்தில், இது சோஷியல் டார்வினிஸம் என்றுக் கருதப்படும்(1898-இல் நிகழ்ந்தப் பஞ்சத்தின் பொழுது, "ஒரு தத்துவ ஞானி, வாழ்க்கையின் தேவைகளினால் இன்பம் காணாது வாழும் பல லட்சக் கணக்கான மக்களின் அழிவைக் கண்டு அசைந்துப் போவதில்லை" என்றுக் கூறினார்). 4-வது க்வீன் ஹுஸ்ஸார்ஸ் படையில் காலனித்துவ அதிகாரியாக (வேலைக்காரர்களின் சேவையிலும், புத்தகப் படிப்பிலும், குதிரைப் பந்துப் போட்டியிலும் காலத்தைப் போக்கி) இருந்தப் பின், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் சபைக்கு தான் எழுதியப் புத்தகங்களின் பிரபலத்தால், 25-ஆம் வயதில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சபையில், இந்தியர்களுக்காகச் சுய ஆட்சி வழங்குவதை அறவே எதிர்த்தார். இந்தியர்களின் அரசியல் உரிமைகளை விரிவாக அவர் எதிர்த்தச்
சில நடவடிக்கைகள் பலனற்றுப் போயின, சில பலன் அளித்தன - முதலாம் சுற்று மேடைக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாகக் காந்தியுடன், சரிநிகர் சமமாக, வணிகர்கள், ராஜாக்கள், நில உரிமையாளர்கள் மற்றும் வெவ்வேறு மதங்களின் பிரதிநிதிகளுக்கு மரியாதைக் கொடுக்கப்பட்டது. 1929-இல் நிகழ்ந்த டிப்ரெஷன்-இல் சர்ச்சில் பணம் இழந்தார். டிப்ரெஷன் பொழுது, பிரிட்டிஷ் அரசு, காலனித்துவ இந்தியா-வில் வரிகளும் இதர நிலுவைகளும் வசூலித்தது. லண்டன் நகரம், உலகின் நிதி வர்த்தகத்தின் தலைநகராக இருப்பதை ஆதரிக்க, காலனித்துவ இந்தியா-வில் இருந்து 3.4 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை உருக்கி, அந்த நகருக்குப் பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுப்பினர். 1930-களில், பிரிட்டிஷ் அரசு, காலனித்துவ இந்தியா-விலும் பிரிட்டன்-இலும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முற்பட்ட பொழுது, சர்ச்சில் அதனை எதிர்த்ததினால், அரசியல் வாழ்வில் எதிர்க்கட்சி இருக்கைகளில் பின்னோக்கித் தள்ளப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், நெவில் சேம்பர்லெய்னிற்குப் பதிலாக சர்ச்சில் பிரதமராகப் பதவியேற்றார். காலனித்துவ இந்தியா-விற்கானப் பொறுப்பை அரசியல் வாழ்வில் சமகாலமாக இருந்த லியோபோல்ட் எஸ் அமேரி-யிடம் ஒப்படைத்தார். காலனித்துவ இந்தியா-வின் வைஸ்ராய்-ஆக இருந்த லார்ட் லின்லித்கோ, இரண்டாம் உலகப் போரில் இந்தியாப் பங்கற்கும் என்று இந்திய அரசியல் தலைவர்களை ஆலோசிக்காமல் அறிவித்தார். காங்கிரஸ் மூன்று அணிகளாகப் வேறுபட்டு இருந்தது - போஸ், பிரிட்டன்-உம் ஜெர்மனி-யும் ஒரேக் குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும், போரினால் கிடைத்த ஆதாயத்தை பயன்படுத்தி, விடுதலைக்காகப் பிரிட்டனை அழுத்த வேண்டும் என்றுக் கருதினார், நேரு ஃபாஸிஸத்தை வெறுத்தாலும், பிரிட்டிஷ்-இடம், இந்திய விடுதலைக்கு வேண்டிய சில உத்தரவாதங்கள் பெறாமல் அவர்களை ஆதரிக்க முடியாது என்றுக் கருதினார், காந்தி வன்முறையை வெறுத்தாலும், நாஸிஸத்தை அதன் மேலும் வெறுத்ததால், பிரிட்டன்-ஐ ஆதரிக்க நேரு மற்றும் போஸ்-ஐ விடத் தயாராக இருந்தார். காங்கிரஸ்-இன் 1939-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ் அவரது மூலோபாயங்களைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, காந்தி மூத்த காங்கிரஸ் தலைவர்களை கட்சி நிர்வாகத்தில் இருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜினாமா செய்த போஸ், தன்னுடைய சொந்த வழியில் செல்லத் தொடங்கினார். காங்கிரஸ் தங்களுக்குள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக, 'பூனா ஆஃபர்' பிரிட்டிஷ்-இடம் அளிக்கப்பட்டது. இதன் மூலம், போரில் இந்தியர்கள் முழுமையாகப் பங்கு கொள்ள, போருக்குப் பின வைஸ்ராய், இந்தியா-வின் சுதந்திரத்தைப் பற்றி உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்று கோரினர். அந்தக் கோரிக்கையை லின்லித்கோ நிராகரித்தவுடன், காங்கிரஸ் தனது கட்சியின் மந்திரிகளை (1937 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள்) ராஜினாமாச் செய்ய ஆணையிட்டது. அது, முஸ்லிம் லீக்-இற்கு சாதகமாக அமைந்தது. அதனைப் பயன்படுத்தி முஸ்லிம் லீக்-இன் தலைவர் ஜின்னா, தனது அரசியல் சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். காங்கிரஸ்-இற்கும் பிரிட்டிஷ்-இற்கும் இடையேப் பேச்சுவார்த்தைத் தடைப்பட்டது, காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகத்திற்குச் சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் அரசு, அவர்களது போர் முனைப்பிற்குத் தேவையான காலனித்துவ இந்தியா-வின் வீரர்கள், பொருட்கள் மற்றும் விநியோகங்களைப் பயன்படுத்துவது எளிமையானது. காலனித்துவ இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் போர் முயற்சிக்கு உதவுவதும், உள்நாட்டில் காங்கிரஸ் கட்சியை முடக்கி வைப்பதும் முக்கிய நோக்காக, அமெரி மற்றும் லின்லித்கோவிற்கு சர்ச்சில் ஆணையிட்டார். அதனை அடுத்து, லின்லித்கோ, காலனித்துவ இந்தியா-வின் போர் வீரர்களை, மிகக் குறைய அளவில் பயிற்சி அளித்து, மெடிட்டெரேனியன் மற்றும் மத்திய கிழக்குப் போர்க்களங்களில் சண்டைப் போட அனுப்பினார். வெளிநாட்டுப் போர்க்களங்களுக்கு அனுப்புவதன் மூலம், காலனித்துவ இந்தியா-விற்குள் வீரர்களை நிறுத்தி வைத்திருந்தால் 1857-இல் நிகழ்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் போரின் பொழுது நடந்தது போல் மீண்டும் கலவரம் ஆகி விடும் என்று பிரிட்டிஷ் அஞ்சினர். காலனித்துவ இந்தியா-வின் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்க சர்ச்சில் இணங்காததாலும், இனவெறிக் காரணமாக, ஜப்பான்-இன் ராணுவம், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் காலனித்துவ இந்தியா-வை முற்றுகையிடாது என்றுத் திடமான நம்பிக்கைக் காரணமாகவும் பிரிட்டிஷ் அரசு, காலனித்துவ இந்தியா-வின் எல்லையைப் பாதுகாப்பின்றி வைத்திருந்தது. ஜப்பான் ராணுவம் பர்மா-வை
ஆக்கிரமித்த போது, அவர்கள் கையில் சிக்காமல் தப்பிய ஐரோப்பியர்களும் இந்தியர்களும் பர்மா நாட்டினரும், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த முகாம்களில், ஐரோப்பியர்கள் நல்ல உணவோடு நன்குக் கவனிக்கப்பட்டாலும், இந்தியர்களும் பர்மா நாட்டினரும் உணவில்லாமல் தவித்தனர். மேலும், இந்தியர்களும் பர்மா நாட்டினரும் கிருமிகளைப் பரப்பி விடுவர் என்ற அச்சத்தில், முகாம்களை விட்டு வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
காலனித்துவ இந்தியா-வை பிரிட்டிஷ் அடக்கி ஆளுவதை உதாரணமாகக் கருதி, கிழக்கு ஐரோப்பா-வை ஜெர்மனி-யின் காலனியாக ஆக்கிரமிக்கத் திட்டமிட்டார். அவர், பிரிட்டன்-இன் காலனித்துவக் கொள்கைகளை வெகுவாக ரசித்து அதனைப் பெரிய அளவில் செயல்படுத்த விரும்பினார். 1899 போயர் போர், தெற்கு ஆஃப்ரிக்கா-வின் போயர்களின் தோல்வியில் முடிந்த பின், பிரிட்டிஷ் அரசு அவர்களை கவனிப்பு முகாம்களில் அடைத்தது. அதை மனதில் கொண்ட ஹிட்லர், பின்காலத்தில், யூதர்களை அது போன்ற முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொன்றார். அவருடையப் புத்தகங்களில், பிரிட்டனில் வாழும் ஆங்கில இனத்தவரின் மேல் இருந்த மதிப்பும் ஆர்வமும் நன்றாக வெளிவந்தது. அதன் விளைவாக, போரில் சில மூலோபாயத் தவறுகளை அவர் செய்தார். பிரிட்டன்-ஐப் போரில் அடிபணிய வைப்பதைக் கைவிட்டுவிட்டு, சோவியத் யூனியன்-ஐ ஆக்கிரமிக்கும் திட்டங்களில் இறங்கினார். அந்த நாட்டை தன் வசப்படுத்தியவுடன், ஜெர்மனி-யின் வலிமையைக் கண்டு பிரிட்டன் அஞ்சி அதன் உயர் நிலையை ஏற்றுக் கொள்ளும் என்று நம்பினார். அதன் பிறகு, நார்டிக் இனமும் ஆங்கிலேயர் இனமும் உலகைத் தத்தம் சொத்தாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றுத் திட்டமிட்டார். அவரது இனவெறியின் கண்ணோட்டத்தில், இந்தியர்கள், பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை தூக்கி எறிய முடியாது என்றும் தூக்கி எறியக் கூடாது என்றும் திடமாக நம்பினார். அவரது திட்டங்களுக்கு பிரிட்டிஷ் அரசு இணங்கவில்லை என்று அறிந்தவுடன், தனது விமானப் படையான லுஃப்ட்வாஃபெ மூலம் பிரிட்டன்-ஐத் தாக்கினார். மேற்கத்திய எழுத்தாளர்கள், லுஃப்ட்வாஃபெ-யின் தாக்குதலால் பிரிட்டிஷ் மக்கள் பட்டத் துயரங்களை நிறைய விவரித்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின் பொழுது தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்ததனால், வங்காளத்திற்கு வரும் 10 லட்சம் டன் அரிசி பர்மா மற்றும் தாய்லாந்து-இல் இருந்து வருவது நின்று போனது. அதே சமயத்தில், காலனித்துவ இந்தியா-வை ஜப்பானிய ராணுவத்திடம் இருந்து காக்க, ராணுவக் கட்டமைப்பு மற்றும் விநியோகங்களுக்காக நிறையப் பணம் செலவழிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உணவு நிவாரணங்களைக் கொண்டுச் செல்வதற்காக, காலனித்துவ இந்தியா-விற்கு கடல் போக்குவரத்துக் குறைக்கப்பட்டது. காலனித்துவ இந்தியா-வின் உணவு மற்றும் வாடிக்கையாளர் பொருட்களின் அளவு இதனால் மிகவும் குறைந்தது. அதனை வாங்கும் பணபலம் இருந்த மக்களின் (உணவு மற்றும் தொழில் உற்பத்தியில் போர் காலத்தில் பணம் செய்தவர்கள்) செயல்களால் அவற்றின் விலைக் கூடியது. இதனால், ஏழை மக்கள் உணவு மற்றும் வாடிக்கையாளர் பொருட்களை வாங்குவதுக் கடினமாகியது. காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகம் ராணுவ நோக்கங்களுக்காக செலவு செய்ததனால், மக்கள் நலத்திற்காக செலவுச் செய்ய மிகக் குறைய அளவில் இருந்தது. உள்நாட்டிற்குள் வளர்க்கப்பட்ட உணவு போர்க்காலத்திற்காக காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகத்தின் கட்டுக்குள் வைக்கப்பட்டதினால், சில நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த உணவுத் தானியங்களை பதுக்கினர் (வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறையில் சிக்காமல் இருப்பதற்காக).
ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகம், சர்ச்சில்-இன் ஆணைப்படி, மறுப்புக் கொள்கை என்ற பெயரில் உதிர்ந்த பூமியாக ஆக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வங்காள மாநிலம் நதிகளால் கடக்க முடியும் என்பதால், ஜப்பான் ராணுவத்திற்கு சைக்கிள், படகு போன்றவற்றைக் கிடைக்காமல் செய்ய அவற்றை முடக்கினர். அந்த வருட பனிக்கால பயிரையும் தங்கள் கட்டிற்குள் வைத்துக் கொண்டனர். பனிக்காலப் பயிர், கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு, வெளிச்சந்தையில் கிடைக்கும் அரிசியை வாங்க, முஸ்லிம் லீக்-ஐச் சார்ந்த மிஸா அஹ்மெத் இஸ்பஹானி என்பவரின் நிறுவனம் மூலம் செயல்பட்டது. இதனால், நிலமற்ற ஏழைகள் உணவும் துணியும் (பருத்தியை பிரிட்டிஷ் போர் முயற்சிக்காக காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகம் பிரிட்டனிற்கு அனுப்பியதன் மூலம் இந்தியா-வில் கிடைக்கும் துணிகளின் விலைக் கூடியதால் ஏழைகளுக்கு துணி வாங்குவது கடினமாக இருந்தது) அன்றித் தவித்தனர். 1942 பனிக்காலப் பயிர், சூறாவளியினால், எதிர்ப்பார்த்த அளவுச் சாகுபடி செய்ய முடியாமல் போனது. அதனால், பஞ்ச நிலைமைப் பரவியது. பனிக்காலப் பயிர் அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சாகுபடிச் செய்யப்படுவதாக இருந்தது. பிரிட்டிஷ் போர் முயற்சிக்காக, காலனித்துவ இந்தியா-வின் நிர்வாக மக்கள் விநியோகத் துறை, சந்தையில் இருந்த அரிசியை மொத்த அளவில் வாங்கி, சூறாவளி நிவாரணத்திற்கு வேண்டிய அளவில் கால் பங்கை ஒதுக்கியது. தென்கிழக்கு ஆசியா-வை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியவுடன், வங்காளத்திற்குள் வரும் அரிசி இறக்குமதியும் நின்றது. பிரிட்டிஷ் அரசு, போரை வெல்வதிலும் காங்கிரஸை முடக்குவதிலும் கவனம் செலுத்தியதால், பொது மக்களுக்கு வேண்டிய அளவு உணவு இருக்கிறதா என்பதைக் கவனிக்காமல் விட்டது.
பிரிட்டிஷ் அரசு, தனக்குச் சாதகமாக பவுண்ட் ஸ்டெர்லிங்க் செலாவணி விகிதத்தை விதித்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், பிரிட்டன்-உம் காலனித்துவ இந்தியா-வும் கட்டணப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. அதன்படி, காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகம் இந்தியா மற்றும் அதன் அருகில் இருந்த பிரிட்டிஷ் வசம் இருந்த நாடுகளின் விநியோகம் மற்றும் பாதுகாப்பிற்கானச் செலவை ஏற்றுக் கொள்ளும் என்றும் வெளிநாட்டு போரில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் மற்றும் ராணுவப் பொருட்களின் செலவை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் விதிக்கப்பட்டது. பிரிட்டன்-இல் ஸ்டெர்லிங்க்-இல் கணக்கு ஒன்றை வைத்து அதில் காலனித்துவ இந்தியா-விற்கான பணத்தைச் சேர்ப்பதாக பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இந்தக் கணக்கில் இருந்துப் போர் முடிந்த பிறகே பணத்தை எடுக்க முடியும் என்ற நிபந்தனையையும் விதித்தது பிரிட்டிஷ் அரசு. இதனால், காலனித்துவ இந்தியா-வின் பணப் புழக்கம் முக்கியமான நேரத்தில் முடங்கியது. பிரிட்டிஷ் போர் அமைச்சரவை, காலனித்துவ இந்தியா-விடம் வைத்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற போதிய பணம் இல்லாததால், ஸ்டெர்லிங்க் கணக்கின் மதிப்பை வைத்து வைஸ்ராய், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்தார். வரி மற்றும் நிலுவைகள் அதிக அளவில் இருந்ததால், இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை வந்தது. இதனால், பண வீக்கம் கூடி அத்தியாவஸ்யப் பொருட்களின் விலை மிக வேகமாக உயர ஆரம்பித்தது. பருத்தி, மரம் மற்றும் சணல் போன்ற பொருட்களின் உற்பத்தி முழுக்க பிரிட்டிஷ் போர் முயற்சிக்கு ஒதுக்கப்பட்டதினால், ஸ்டெர்லிங்க் கணக்கில் வைத்திருந்த பணத்தின் அளவுக் கூடியது. சாதாரணக் காலத்தில், இந்த நிலையினால் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும். ஆனால், வைஸ்ராய் செயல்படுத்திய பணவீக்கக் கொள்கைகளால், ஸ்டெர்லிங்க் கணக்கில் இருந்த பணத்தின் மதிப்பு 70 சதவிகிதம் குறைந்தது.
பிரிட்டன் தனது சொந்த உணவு விநியோகத்திற்கு இறக்குமதியை நம்பி இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் பரந்த பரப்பளவு, பிரிட்டன்-இன் உணவு இறக்குமதிக்குச் சாதகமாக அமைந்தது. போரின் ஆரம்பக் காலத்தில், பிரிட்டன் நாட்டிற்குள் விநியோக இடையூறுகளின் பாதிப்பைக் குறைக்க, குறைந்தப் பட்சம் 3 மாதக் காலத்திற்குத் தேவையான உணவு விநியோகங்கள் வைப்பில் இருக்க வேண்டும் பிரிட்டிஷ் போர் அமைச்சரவை முடிவு எடுத்திருந்தது. முதலாம் உலகப் போரின் பொழுது ஜெர்மன் யூ நீர்முழ்கிக் கப்பல்கள் விநியோக இடையூறுகளை ஏற்படுத்தியதை அலசி ஆராய்ந்ததன் மூலம் இதனைக் கண்டறிந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் உணவுத் தேவைப் பற்றி, சர்ச்சில்-இன் ஆலோசகராக லார்ட் ஸ்ரெவெல் நியமிக்கப்பட்டார். அவரது உண்மைப் பெயர் ஃப்ரெட்ரிக் அலெக்ஸாண்டர் லின்டமன். அவர் ஜெர்மனி நாட்டில் பிறந்து வளர்ந்தவர். மாமிசமும் மதுவும் அறவேத் தொடாதவர். ஏழைகளின் வறுமைக்கு அவர்களேக் காரணம் என்ற நோக்கைக் கொண்டவர். போர் அமைச்சரவையின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல், சர்ச்சிலின் ஒப்புதல் பெறுவதற்காக தனது அலசலை ஒரு நபருக்காக (சர்ச்சில்) உருவாக்கியவர். சர்ச்சில்-இற்கு, மாட்டிறைச்சி, சாக்லெட் மற்றும் மிட்டாய்கள் பிடிக்கும் என்பதால் பிரிட்டிஷ் மக்களின் போர்க்கால உணவுத் தேவைகளில் அவை இடம் பெற்றிருந்தன. ஆராய்ச்சியில் இந்த உணவு வகைகளை விட, சில உணவுப் பொடிகளின் ஊட்டச் சத்து அதிக அளவில் இருக்கும் என்றுத் தெரிய வந்தாலும் இவை பிரிட்டிஷ் மக்களின் உணவில் சேர்க்கப்பட்டன. சர்ச்சில்-இற்குப் பிடித்த உணவுகள், குளிர்ப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதால், அவற்றை நீண்ட தூரம் அனுப்புவதற்கு போர் வீரர்களைக் கொண்டு செல்லும் கப்பல்களைப் பயன்படுத்த வேண்டி வந்தது. போர்க்காலத்தில், பிரிட்டிஷ் மக்கள் காய்ந்த வயிற்றுடன் சண்டைப் போடக் கூடாது என்பதனால், சர்ச்சில், லார்ட் ஸ்ரெவெல்-இன் ஆலோசனையின் பேரில், பிரிட்டிஷ் மக்களுக்குத் தேவையான உணவு இறக்குமதிச் செய்ய அதற்கான கப்பலின் எடையைக் கணித்தார். கப்பல்களை அமெரிக்கா தயாரித்தது. பஸிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களில் செல்லும் கப்பல்களின் எடையை அமெரிக்காக் கணித்தது. இந்தியக் கடலில் செல்லும் கப்பல்களின் எடையை பிரிட்டன் கணித்தது. இரண்டாம் உலகப் போரில், அல்லெய்ட் அணி நாடுகளுக்கு மலிவு விலைக் கடன் அளிக்கும் லெண்ட் லீஸ் திட்டத்தை பிரிட்டன்-இற்கும் அளித்திருந்தது. ஆனால், பிரிட்டன்=இன் உணவு இறக்குமதியால், போர் முடிந்த பிறகு திரும்பிக் கட்ட வேண்டிய கடன் கூடி விடும் என்று சர்ச்சில் அஞ்சினார். வங்காளத்தின் பஞ்சத்தை அடக்கக் காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகம் அரிசி மற்றும் கோதுமையின் அளவைக் கூட்டுவதற்குக் கெஞ்சிய பொழுது, லார்ட் ஸ்ரெவெல் அதற்கு முற்றுக்கட்டைகள் எழுப்பினார். பிரிட்டன்-இன் மக்களுக்குத் தேவையான உள்நாட்டு உணவு விநியோகம், லார்ட் ஸ்ரெவெல் புள்ளிவிவரங்களைக் கையாண்டதில் குறைந்தப்பட்சம் 115 லட்சம் டன் இருக்க வேண்டும் என்றுக் கணித்த கப்பல் குழுவின் அளவை விட 31 லட்சம் டன் கூடுதலாகவும், தயாரிப்பு அமைச்சகத்தின் குறைந்தப்பட்ச அளவான 98 லட்சம் டன்னை விட 48 லட்சம் டன் அதிகமாகவும் இருந்தது. போர் முடிந்த காலத்தில், பிரிட்டன்-இன் கடன் வெகுவாக இருக்கும் என்று சர்ச்சில் எதிர்பார்த்ததால், தங்களிடம் இருக்கும் உள்நாட்டு உணவு அளவை அதிகமாக வைத்துக் கொண்டால், மூலோபாய அனுகூலம் கிடைக்கும் என்று நம்பினர். அதன் விளைவாக, பிரிட்டன்-இற்கு வரும் கப்பல்களின் எடையைக் கூட்டுவதற்காக இந்தியக் கடலில் மிதக்கும் கப்பல்களின் எடையைக் குறைத்தார். போர்க்காலத்தில் பிரிட்டன்-இன் மக்களுக்கு இறைச்சி, வெண்ணை, பாலாடைக்கட்டி, தேயிலை, சர்க்கரை மற்றும் ஜாம் உணவாகக் கொடுக்கப்பட்டது. இறுதியில், காலனித்துவ இந்தியா நிர்வாகத்தின் கோரிக்கையான 600,000 டன் கோதுமைக்குப் பதிலாக 30,000 டன் கோதுமையை பிரிட்டன் அனுப்பியது. ஆனால், அந்த கோதுமை வரும் முன், வங்காளத்தில் உள்ள ஏழை மக்கள் நிறைய எண்ணிகைகளில் இறக்கத் தொடங்கினர். பஞ்சம் வங்காளத்தில் தலைவிரித்தாடிய அதே நேரத்தில், அங்கிருந்து பிரிட்டன்-இற்கு 70,000 டன் கோதுமை 1943 வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து ஜுலை மாதத்திற்குள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதற்குள், இந்தியக் கடலில், ஜெர்மனி-யின் யூ நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டன்-இன் கப்பல்களை மூழ்கடிக்கும் அளவுக் குறைந்தது. அமெரிக்கா-வின் கப்பல் தயாரிப்பின் அளவும் கூடியது. கிழக்கு ஐரோப்பா-வில் உள்ள பால்கன்ஸ் பிராந்தியத்தில் உணவுப் பற்றாக்குறையை அடக்க வங்காளத்தில் இருந்து கோதுமை அனுப்ப வேண்டும் என்று சர்ச்சில் வாதாடினார். வங்காளத்தில் அரிசி மற்றும் கோதுமையின் அளவுக் குறைந்ததால், பஞ்ச நிவாரண முகாம்களில் தரப்படும் கஞ்சியில் அரிசியின் அளவுக் குறைக்கப்பட்டது. 1943 வருடத்தின் கடைசியில், பஞ்ச முகாம்களில் கொடுக்கப்படும் உணவின் சத்து ஒரு நாளைக்கு 400 காலரீஸ் ஆக ஆனது. அது நாட்ஸிகள் யூதர்களைக் கொடுமைப்படுத்திய புக்கென்வால்ட் முகாமில் அளித்த உணவுச் சத்திற்கு ஒத்த அளவாகும்.
வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, போருக்காக அங்கு இருந்த பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா-வின் வீரர்களுக்கு வயிறுப் புடைக்கச் சாப்பாடு அளிக்கப்பட்டது. கடும் பசி மற்றும் பட்டினியால் மக்கள் மீதான விளைவுகளை இந்தப் புத்தகம் மிகக் கோரமாக விவரிக்கிறது - உணவுக் கிடைக்காத சிலக் குழந்தைகள் பசியை அடக்க தெருவில் ஒரு பிச்சைக்காரன் வயிற்றுப் போக்கினால் வெளி வந்த கழிவில் உள்ள அரிசி தானியங்களைச் சாப்பிடுவதும், தனதுக் குழந்தைகைகள் பசியால் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் முன்னாலேயே அரிசிக் கஞ்சியை ஒரு தாய் குடித்து விட்டு தான் செய்ததை நினைத்து ஓலமிடுவதும் ஈனமாக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் சில மக்களின் உடலை பசியின் விளைவால் நாய்கள் கடித்துக் குதறுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உணவு இல்லாமல் இருந்தவர்கள், நரமாமிசம் உண்ணாமல் இருந்தது இந்தச் சித்தரிப்பின் மூலம் தெரிய வருகிறது.
ஊடகங்கள் வங்காளத்துப் பஞ்சத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பியதனால், வெளிநாட்டில் வாழும் இந்திய மக்கள், ஆக்ஸிஸ் அணியின் வானொலி மூலமாகப் பஞ்சத்தின் தீவிரத்தைக் குறைக்க அரிசி மற்றும் கோதுமையைக் கப்பல்களில் அனுப்பத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தனர். போஸ் ஜெர்மனி-யில் இருந்து 100,000 டன் அரிசியை அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கானடா, தென் ஆஃப்ரிக்கா மற்றும் ஐயர்லாந்து (ஈமன் டிவலேரா தலைமையில்) கோதுமை அனுப்பத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தன. அவை அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு மறுத்தது. அது, 1941-இல் க்ரீஸ் நாட்டில், நாட்ஸி ஆக்கிரமிப்பின் கீழ் பஞ்சம் வந்த பொழுது, மனிதாபிமான அடிப்படையில் சர்வதேசச் செஞ்சிலுவை இயக்கம் மூலமாக தவிக்கும் கிரேக்க மக்களுக்கு உதவி செய்ய அனுமதி அளித்ததற்கு எதிர்மறையாக அமைந்தது. காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகத்தின் கையில் அரிசி மற்றும் கோதுமை அளவுக் கூடிய பொழுதும் அதனை, போர்க்காலத்திற்காக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பஞ்ச நிவாரணத்திற்கு மிகக் குறைய அளவை ஒதுக்கினர். இதுப்பற்றி வினவிய பொழுது, சர்ச்சில் இதற்குக் காரணம் இந்தியர்கள் தான் என்றுக் கூறினார் - அன்றைய இந்திய நாட்டின் அதிகாரம் காலனித்துவ இந்தியா-வின் நிர்வாகத்திடமும், பிரிட்டிஷ் அரசிடமும் இருந்தது என்பதைத் தெரிந்திருந்தும் அவ்வாறுக் கூறினார்.
அரசியல் ஆடுகளத்தில், வைஸ்ராய் மற்றும் காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததனால், 16 ஆகஸ்ட் 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கியது. உடனடியாக காட்டுமிராண்டித்தனமாக பிரிட்டிஷ் அரசு, மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் கட்சித் தொண்டர்களையும் சிறையில் அடைத்தது. சிறைகளில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த மோசமானக் குற்றவாளிகளை, காங்கிரஸ் கட்சியினரை அடைக்க இடம் தேவை என்றுக் கூறி, விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளிகள், அவர்களது ஊர்களுக்குத் திரும்பி, காவல்துறையின் ஒற்றர்களாக வேலை செய்தனர்.
போஸ் அதற்கு முன்னரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததால், அவரது உடநிலைமை மோசமாவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுச் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அங்கிருந்துத் தப்பி, ஆஃப்கானிஸ்தான் மார்க்கமாக, சோவியத் யுனியன் சென்று, இத்தாலியன் கடவுச்சீட்டில் ஜெர்மனி சென்றார். அவரைக் கொல்ல பிரிட்டிஷ் அரசு ஆணைப் பிறப்பித்து இருந்தது. அவர் இரான், இராக் மற்றும் துருக்கி மார்க்கமாக ஜெர்மனி செல்லுவார் என்று பிரிட்டிஷ் நம்பினர். ஹிட்லரிடம் சென்று தன்னுடைய தலைமையில் இந்தியப் படை ஒன்றை அமைத்தால், அதைப் பயன்படுத்தி, இந்திய மக்களிடையேப் புரட்சியை வளர்ப்பேன் என்றுக் கூறினார். அதற்கு உதவி செய்ய ஹிட்லர் மறுத்த பொழுது, சக ஆசியச் சக்தியான ஜப்பான் தனக்கு உதவி அளிக்கும் என்று நம்பினார்.
பஞ்சக் காலத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்குச் சென்றது வங்காளத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஆதரவானக் குரல்களை முடக்கும் வகையில் அமைந்தது. அதனை, முஸ்லிம் லீக்-உம் கம்யூனிஸ்டுகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஹிட்லர் ஸ்டாலின் உடன் கையொப்பமிட்ட மொலொடாவ் ரிப்பன்ற்றாப் ஒப்பந்தத்தை, சோவியத் யூனியன் மீது போர் தொடுத்ததன் மூலம் கிழித்ததால், இந்தியாவில் உள்ளக் கம்யூனிஸ்டுகள், பிரிட்டன் பக்கம் சாய்ந்தனர். ஹிட்லரும் ஸ்டாலினும் ஒரேப் பக்கத்தில் இருந்த பொழுது, இந்தியாவின் கம்யூனிஸ்டுகள், சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து வந்தனர். தன் ஒருக் கையெழுத்தால், கம்யூனிஸ்டுகளை பிரிட்டிஷ்-இன் ஒத்துழைப்பாளர்களாக ஸ்டாலின் மாற்றினார். பஞ்ச நிவாரணத்திலும், பிரிட்டிஷ்-இற்கு எதிரானப் போராட்டங்களை முடக்குவதிலும் ஈடுபட்டு, வங்காளத்தில் ஒரு தழைக்கும் அரசியல் இயக்கத்தைக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினர். வங்காளப் பஞ்சத்திற்கானக் காரணம், ஜப்பான் ராணுவமும், அரிசி விலையை ஏற்றிய வணிகர்களும் தான் என்று பிரிட்டிஷ் உடன் சேர்ந்து வாதாடினர். வயிற்றிற்கு உணவுக் கிடைக்காத நிலையில், வங்காளம், ஒரிஸ்ஸா மற்றும் மதராஸ் மாநிலங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் விரீயத்தை இழந்தது. இதை அறிந்த சர்ச்சில் சந்தோஷமடைந்தார். அவரது சந்தோஷத்தை அழிக்கும் வகையில், அமெரிக்கா-வின் ஜனாதிபதி எஃப்.டி.ஆர் சர்ச்சிலை, காங்கிரஸுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துமாறு வற்புறுத்தினார். அமெரிக்க மக்களின் நல்லெண்ணத்தில் இடம்பிடிக்க, சர்ச்சில், ஸர் ஸ்டாஃப்ஃபோர்ட் க்ரிப்ஸ்-ஐ, அவரது முயற்சி வீணாகும் என்று அறிந்திருந்தாலும், இந்தியா-விற்கு அனுப்பினார். க்ரிப்ஸ்-இன் முயற்சி தோல்வி அடைந்த பொழுது, எஃப்.டி.ஆர் சர்ச்சிலை மீண்டும் வற்புறுத்தினார். அதன் பின் மிகவும் ஆத்திரமடைந்த சர்ச்சில், அமெரிக்கா-வின் மீதான தனது ஆத்திரத்தைக் கொட்டித் தள்ளினார். தனது நினைவுகள் அடங்கியப் புத்தகமான தி ஹிஞ்ச் ஆஃப் ஃபெட்-இல், எஃப்.டி.ஆர்-இன் யோசனையைக் கேட்டு க்ரிப்ஸ் முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவிற்குள் அமைதி குலைந்து அராஜகம் கூடியிருக்கும் என்றுக் கொக்கரித்தார். எஃப்.டி.ஆர் இறந்தப் பின்பு, அமெரிக்கா, பிரிட்டன்-இன் காலனித்துவ நாடுகளை, சர்வதேசக் கண்காணிப்பில் வைக்க முயன்ற பொழுது, பிரிட்டன் அதை மறுத்தது. ஜுலை 1944-இல் பிரிட்டன் வங்காளத்தில் நடந்த பஞ்சத்தை ஆராய கமிஷன் ஒன்றை அமைத்தது. அந்தக் கமிஷன், பஞ்சத்தின் காரணம் இந்தியாவிற்குள் இருந்த உள்நாட்டு நிலை தான் காரணம் என்பதை ஆவணங்கள் மூலம் சுட்டிக் காட்டியது. பஞ்சம் தலைவிரித்தாடக் காரணமாக இருந்தப் பிரிட்டன்-இன் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டும் ஆவணங்களை மறைத்தும் சிலவற்றை அழித்தும் தனது குறிக்கோளைப் பூர்த்தி செய்துக் கொண்டது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், லார்ட் ஸ்ரெவெல் தலைமையில் செயல்பட்ட எஸ் ப்ரான்ச் அளித்த பஞ்சத்தின் வீரியத்தைக் குறைக்க பிரிட்டிஷ் போர் அமைச்சரவை ஒன்றும் செய்யாததற்கான காரணங்களை தூள் தூளாகச் சிதற அடித்திருக்கிறார்.
காலனித்துவ இந்தியா, மூன்றாக பிரிக்கப்படும் என்று சர்ச்சில் நம்பினார் - ஹிந்துக்களுக்கு ஒன்று, இஸ்லாமியர்களுக்கு ஒன்று, ராஜாக்களுக்கு ஒன்று. பாகிஸ்தான் மற்றும் ராஜாக்களின் உதவியுடன் ஹிந்து இந்தியா-வை அடக்கி ஆள முடியும் என்றுத் திடமாக நம்பினார். இந்தியர்களுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளின் கரவொலிக் கூடிக் கொண்டே போக, காங்கிரஸ்-உம் முஸ்லிம் லீக்-உம் முதலில் இணக்கம் தெரிவித்த பிறகு இந்தியா-விற்கு விடுதலை அளிக்கப்படும் என்று இந்தியா-வின் வைஸ்ராய் ஜெனரல் ஆர்சிப்பால்ட் வேவெல் அறிவித்தார்(அமெரி, பிரிட்டிஷ் இருந்தால், காங்கிரஸ்-உம் முஸ்லிம் லீக்-உம் பிரிட்டிஷ்-ஐ காரணம் காட்டி விடுதலைப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகளை எழுப்புகின்றன என்றுக் கூறி, முதலில் விடுதலை அளித்து பிறகு காங்கிரஸ்-உம் முஸ்லிம் லீக்-உம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார், அவர் விருப்பம் நிறைவேறவில்லை). இரு அரசியல் கட்சிகளுக்கிடையே சமரசம் விரைவாக நிகழாத பொழுது, பிரிட்டன் காலனித்துவ இந்தியா-வில் இருந்து குறிப்பிட்ட நாளில் விலகி விடுவோம் என்றுக் கூறி புறமுதுகிட்டு ஓடத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டனர். அதன் விளைவாக, இந்தியா பாகிஸ்தான் பிரிவு மிக அதிக அளவில் வன்முறையைக் கண்டது. பிரிட்டன்-இன் உதவி தங்கள் பக்கம் இருக்கிறது என்ற மெத்தனத்தில், முஸ்லிம் லீக்-உம் அதன் தலைவர் ஜின்னா-வும் காங்கிரஸ் உடன் ஷிம்லா-வில் நடந்தப் பேச்சுவார்த்தையில் நெகிழ்வற்றப் போக்கை (ஜின்னா தலைமையிலானப் பாகிஸ்தான், பாதுகாப்பற்ற இந்தியாவை விடுதலைக்குப் பிறகு ஆக்கிரமித்தால், பிரிட்டன் கைக்கட்டிக் கொண்டுப் பேசாமல் இருக்கும் என்று சர்ச்சில் உத்தரவாதம் அளித்ததாக ஒரு வதந்தியும் இருக்கிறது) மேற்கொண்டனர். முஸ்லிம் லீக்-இல் இல்லாத முஸ்லிம்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெறக் கூடாது என்ற ஜின்னா-வின் கட்டாய நிபந்தனையின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஜுலை 1945-இல் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் லேபர் கட்சியின் கைகளில் சர்ச்சில் மாபெரும் தோல்வியைத் தழுவினார். 1946-இல் இந்தியா-வில் நடந்த தேர்தலில், கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம் லீக் கட்சியும் நிறைய இடங்களைக் கைப்பற்றின. பஞ்சத்தின் பொழுது, காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் மூத்தத் தலைவர்களும் சிறையில் இருந்ததால், பஞ்ச நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம் லீக்-உம் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்றன. வங்காளத்தில், எஹ்.எஸ்.ஸுஹ்ரவர்டியின் தலைமையில் முஸ்லிம் லீக் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தேர்தலில் இடங்களைக் கைப்பற்றியதால், அரசியல் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி, தற்காலிக மத்திய அரசை, புது டில்லியில் தனது தலைமையில் உருவாக்கியது. அதற்குப் பதிலடியாக ஜின்னா, நேரடிச் செயல்பாட்டு நாள் என்று ஆகஸ்ட் 16, 1946-ஐ அறிவித்தார். ஸுஹ்ரவர்டி, ஒரு பொதுக் கூட்டத்தில், ஹிந்துக்களை கொன்றால், போலீஸ் தடுக்காது என்றுக் கூறியவுடன், அதை சைகையாக எடுத்துக் கொண்டு, வங்காளத்தில் அவரது கட்சித் தொண்டர்கள், மதக் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பியர்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்பதால், பிரிட்டிஷ் அரசு, வன்முறையை அடக்க ராணுவத்தை அனுப்ப இணங்கவில்லை. அவர்கள் ராணுவத்தை அனுப்பிய சமயத்தில், கொலையாளிகள் தங்களது கோரமான வேலையை முடித்தக் களைப்பில் இருந்தனர்.
சர்ச்சில் இந்தியர்களைப் பற்றிய கணிப்பில் மிகத் தெளிவாக இருந்தார் - இனவெறியின் காரணமாக பிரிட்டிஷ் மக்கள் இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என்றும் பிரிட்டன்-இன் ஏகாதிப்பத்தியத்தின் விளவாக இந்தியா அமைதி நிறைந்தப் பூங்காவாக விளங்கியது என்றும் கருதினார். இந்தியர்களுக்குள், இஸ்லாமியர்களை வீரமிகுந்தவர்கள் என்றுக் கருதியனதால், அவர்களது அரசியல் விருப்பங்களை ஆதரித்தார். இவ்வாறு செய்வதன் மூலம், காங்கிரஸ், இந்திய மக்களுக்கானக் கட்சி என்பதை விட ஹிந்துக்களுக்கானக் கட்சியாகத் தோற்றமளித்தது அவரது எண்ணத்திற்குத் தோதாக அமைந்தது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைவரான கான் அப்துல் காஃபர் கான், காங்கிரஸ் பக்கம் ஆதரவு அளித்தது, சர்ச்சில்-இன் வீர இனங்கள் பற்றிய உள்ளார்ந்தக் கருத்துகளில் ஓட்டைப் போட்டன. காலனித்துவ இந்தியா-வில் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் நலத்திற்கு, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை பாதகமாக இருக்கும் என்று நம்பினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை பாதுகாக்க என்ன வாதம் கைக்குக் கிடைத்ததோ அதை பயன்படுத்தினார். 1930-களில், காலனித்துவ இந்தியா-வில், வெவ்வேறு மதச் சமூகங்களிடையே சண்டை வராமல் தடுக்க பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் தேவை என்று வாதாடினார். 1940-களில், வைஸ்ராய் லின்லித்கோ-விடம், வெவ்வேறு மதச் சமூகங்கள் ஒன்று சேர்ந்தால், அவர்கள் இணைந்து பிரிட்டிஷ் பக்கம் பாய்ந்து விடுவார்கள் என்பதனால் மதச் சமூகங்கள் ஒன்று சேராமல் இருக்கக் கூடிய செயல்களை நிகழ்த்துமாறு ஊக்குவித்தார். மார்ச் 1940-இல் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் என்ற தனி நாடு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தவுடன் அதனை, 'தன்னம்பிக்கையும் உறுதியும் நிறைந்த ஒரு புதிய உற்சாகம்' என்று விவரித்தார். பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் கொள்கைகள், தங்களது ஆட்சியை நீட்டிக்க, ஹிந்து இஸ்லாம் மதங்களுக்கு இடையே உள்ள விரிசல்களை பெரிதுப்படுத்தின. அந்த விரிசல்கள் காரணமாக விடுதலைக்கு முன்னால் வங்காளத்தில் நடந்த மதக் கலவரத்தைக் எடுத்துக்காட்டி, தான் தீர்க்க தரிசியாக பிரிட்டிஷ்-இன் ஆதிக்கம் இல்லாமல் அந்த இரு மதங்களும் அமைதியாகவும் சுமூகமாகவும் வாழ்வது கடினம் என்றுக் கொக்கரித்தார். காலனித்துவ இந்தியா-வின் விடுதலையை ஒட்டி நடந்த பஞ்சத்தினால் நேர்ந்த இறப்புகளும், இந்திய பாகிஸ்தான் பிரிவின் பொழுது ஏற்பட்ட கொலைகளுக்கும் காரணமான பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கு அடித்தளமாக சர்ச்சில்-இன் இனவெறி அமைந்தது. தனது வாழ்வின் இறுதி நாட்களில், இந்தியர்களைப் பற்றிய தனது தவறானக் கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தாலும், அதனைப் பதிவு செய்யவில்லை. வரலாற்று ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ஆவணங்களான அவரது புத்தகங்களும், பேச்சுகளும், ஹிந்துக்கள் 'மிருகத்தனமான மதத்தைக் கடைப்பிடிக்கும் மிருகத்தனமான மக்கள்' என்றக் கருத்தையே வெளிக்காட்டுகிறது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1949-இல் கையொப்பமிடப்பட்ட ஜெனிவா மாநாட்டில், 'ஆக்கிரமிக்கும் நாட்டிற்கு, தன்னால் இயன்ற அளவு, ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடமை இருக்கிறது;ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இருக்காதப் பட்சத்தில், அவற்றை ஆக்கிரமிக்கும் சக்தி இறக்குமதி செய்ய வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டது. போர்க்காலத்தில், காலனித்துவ இந்தியா-வில், கப்பல்களின் கட்டுப்பாடு, பிரிட்டிஷ் போர் அமைச்சரவை இடம் இருந்தது. காலனித்துவ இந்தியா, ஆக்கிரமிக்கப்பட்ட எதிரிக் களம் என்று பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறையின் கருத்தை வைத்து காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தனர். மற்ற நாடுகள் உணவு மற்றும் மருத்துவ உதவி அளிக்க முன் வந்த பொழுது, அதனை சர்ச்சிலின் தலைமையில் இருந்த பிரிட்டிஷ் போர் அமைச்சரவை அவற்றை மறுத்தது. அதை வைத்துப் பார்ர்க்கும் பொழுது, வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தக் கூடியச் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இந்தியா போன்ற ஜனநாயகத்தில், பஞ்சத்தில் மக்கள் பெரும் அளவில் உயிர் இழப்பது அரிதான ஒன்று. கஷ்டப்படும் மக்களின் நிலையை மேம்படுத்த அவர்களது அரசியல் பிரதிநிதிகளை இதர மக்களும் ஊடகங்களும் அழுத்தினால், மாறுதல்கள் ஏற்படும். காலனித்துவ இந்தியா-வில் இந்திய மக்களுக்கும் பிரிட்டிஷ் அரசிற்கும் இடையே இருந்த சக்தி ஏற்றத்தாழ்வுகளினால், இந்தியர்களுக்கு பஞ்ச நிவாரணம் மறுத்த அதே நேரத்தில், பிரிட்டிஷ் மக்களுக்கு போர்க்கால உணவைக் கூட்டும் முயற்சியில் (தேர்தலில் பிரிட்டிஷ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியக் கட்டாயத்தால்) பிரிட்டிஷ் அரசு ஈடுப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் யூதர்களின் கஷ்டங்களைப் பற்றி எழுதிய ஹனா ஆரென்ட், ஏகாதிப்பத்தியத்தின் நேரடி விளைவாக இனவெறி அமைகிறது என்றுக் கூறினார் - இனம் சார்ந்த எண்ணம் என்பது மனிதர்களின் உணரப்பட்டப் பண்புகளை வைத்து அவர்களை வெவ்வேறு வகையறாக்களாகப் பிரிப்பது. இது உலகில் எல்லா மக்களும் செய்கிறார்கள். இந்த வகைகளை மூலம் நிஜ வாழ்க்கையில் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று தரம் பார்க்கும் பொழுது அது இனவெறியாக வெளிவருகிறது.
உலக வரலாற்றில் வெகுஜனக் கொலையாளிகளைப் பற்றி அலசும் பொழுது, ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் முதன்மையாகத் தோற்றம் அளிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் சர்ச்சிலும் சேர்க்கப்பட வேண்டும். அது நடக்காததற்கு, சர்ச்சிலின் கையில் உயிர் இழந்தவர்கள் வெள்ளைக்காரர்கள் இல்லை என்பதனால் இருக்கலாம்(ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் கையில் உயிர் இழந்தவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாக இருந்தார்கள்).
இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
சர்ச்சில் ஆண்ட் ஆர்வெல்: தி ஃபட் ஃபார் ஃப்ரீடம் - தாமஸ் இ ரிக்ஸ்
காந்தி & சர்ச்சில்: தி எபிக் ரைவல்ரி தட் டிஸ்ற்றாய்ட் ஆன் என்பையர் அண்ட் ஃபொர்ஜ்ட் அவர் ஏஜ் ஆர்தர் ஹெர்மன்

No comments:
Post a Comment