சந்தோஷம் பொங்குதே

சுருக்கம்:
அமெரிக்கா-வில் வந்திறங்கியச் சில வருடங்களில், எதிரேப் பார்க்கும் ஒவ்வொருவரும் புன்முகத்தோடு நலன் விசாரிப்பது விசித்தரமாக இருந்தது. இந்தியா-வில், பழக்கம் இல்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுப்பது அபூர்வம். அமெரிக்கா-வில், நலன் விசாரித்தவரிடம் பேசுவதற்குத் தயார் செய்து முடிப்பதற்குள் அவர் அந்த இடத்தைத் தாண்டி போயிருப்பார். சில வருடங்களுக்குப் பின், இது அமெரிக்கா-வில் எழுதப்படாத விதிமுறைகளில் ஒன்று என்றுத் தெரிந்தது. அமெரிக்க மக்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் அதற்கு எதிர்மாறானப் பலனை அளிக்கின்றன. இந்த முயற்சிகள் எவ்வாறுச் செயல்படுகின்றன என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. சந்தோஷம், தனிமனிதப் பொறுப்புகளைக் காட்டிலும், கூட்டு முயற்சிகளால் நிகழ்வதாகவும், உற்றார் உறவினர் உதவியுடன் சமூகச் செயல்களில் பங்கேற்பதாலும் நிகழ்கின்றன என்பதை  விளக்குகிறது. ஆசிரியர், அமெரிக்கா-விற்குப் புதிதாகக் குடிபெயர்ந்தவராக  இருப்பதால், அவருடையக் கதைகளின் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது.
அமெரிக்கா-வில்  வாழும் மக்கள், சந்தோஷத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இருப்பது அவர்களது நாட்டின் அரசியல் சாசனத்தில் இருந்துத் தெளிவாகத் தெரிகிறது - அமெரிக்கா-வின் அரசியல் சாசனத்தில்,  உயிர், சுதந்திரம் மற்றும் சந்தோஷத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றையக் காலத்தில், உயிர் மற்றும் சுதந்திரத்தைக் காட்டிலும், சந்தோஷத்தைப் பிராதனமாகக் கருதுவது, அவற்றைப் பற்றியப் புத்தகங்களின் பிரபலத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். சமீபக் காலமாக, நவீனக் கைப்பேசிகளில் இருக்கும் பயன்பாடுகளின் மூலம் சந்தோஷத்தைப் பெருக்குவதற்குச் செய்யும் முயற்சிகளைக் கண்காணிப்பது வெகுப் பிரபலாமாகியிருக்கிறது. துக்கமளிக்கும் எந்த ஒரு எண்ணமோ சம்பவமோத் தங்களை அண்டாமல், எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்கு அமெரிக்க மக்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை ஆசிரியர் விவரிக்கிறார். சந்தோஷத்தை அதிகரிக்கும் இந்த இயக்கத்திற்கென்றுப் பிரத்தியேகமான வார்த்தைகள் உருவாகியிருக்கின்றன. அமெரிக்கா-வில் தகுதி உள்ளவர்களே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வளர முடியும் என்ற அணுகுமுறை, சுய முயற்சியின் மூலம் தனி மனிதச் சந்தோஷத்தை அடைவதற்காக, யோகா வகுப்புகளிலும் கவனத்தைக் கூட்டும் வகுப்புகளிலும் அதிகமாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் வெளிப்படுகிறது. ஆராய்ச்சியில், சந்தோஷத்தை அடையும் குறிக்கோளோடு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தனி மனித சந்தோஷத்தைக் குறைக்கின்றன என்றுத் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்து, அமெரிக்கா-வில் நடத்தப்பட்டு வரும் பொதுச் சமூகக் கணக்கெடுப்பில், 1970-களை விட இன்றையக் காலத்தில், அமெரிக்க மக்களின் சந்தோஷம் குறைந்துக் காணப்படுகிறது. தனி மனிதச் சந்தோஷத்தை சுய முயற்சிகளின் மூலம் அடைய முற்படுவதனால், உற்றார் உறவினர்களுடன் பழகுவதற்கும் தங்களதுச் சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்பதற்கும் அடிமட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுச் சமூகக் கணக்கெடுப்பு, 1974-ஆம் ஆண்டில், அமெரிக்க மக்களில் பாதிப் பேர் தங்களதுச் சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்றனர் என்றுக் கூறுகிறது. அந்த எண்ணிக்கை, 2008-ஆம் ஆண்டில், ஒன்றில் மூன்றாகக் குறைந்தது. உற்றார் உறவினர்களுடன் பழகியும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்றும் தனி மனிதச் சந்தோஷத்தை அதிகரிக்காமல், அதனை அடைவதற்கு
போலி ஆராய்ச்சிகளை நம்பினால், அதில் காசைக் கரைய விட்டுத் துயரத்தில் ஆழ்வதுத் தான் முடிவில் நடக்கிறது.
அலசல்:
அமெரிக்கா-வில், குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தனி மனிதச் சந்தோஷத்தை அடையும் முயற்சிகள் துவங்குகின்றன - பெற்றோர்கள், குழந்தைகளைத் தங்களுடன் இறுக்கமாகத் தக்க வைத்துக் கொள்ளும் முறைகள் சிறு வயதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. குழந்தைகள், பெற்றோர்களின் உடலுடன் அதிகக் காலம் இணைந்துக் கொண்டிருந்தால், குழந்தைகளின் சந்தோஷமும் பாதுகாப்பு உணர்ச்சியும் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். குழந்தைகளை அழ விட்டால், வருங்காலத்தில் அவர்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, அழாமல் இருப்பதும் அழுதால் அதனை உடனடியாக நிறுத்துவதும் பெற்றோர்களின் தலையாயக் கடமை என்றுக் கருதுகின்றனர். இதன் விளைவாக, தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் கூடவே உறங்குவதும், அவர்களுக்குத் தாய்ப்பால் நீண்டக் காலம் கொடுப்பதும் குழந்தைகளின் வருங்கால உணர்ச்சிகளுக்கு நல்லது என்று நம்புகின்றனர். சிறுக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பள்ளிகளும் இதன் பலனாக, பல வித வகுப்புகள் அளிக்கின்றன. இவ்வகுப்புகளின் மூலம், நல்ல வருவாய் கிடைப்பது அதற்குச் சாதகமாக இருக்கிறது. பெற்றோர்களும் சிறுக் குழந்தைகளைப் பராமரிப்பவர்களும், அக்குழந்தைகளின் உணர்ச்சிகளைப் புண்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், எந்த வித எதிர்மறைப் பின்னூட்டம் அளிப்பதைத் தவிர்க்கின்றனர். அமெரிக்கா-வில் உள்ளக் குழந்தைகள், உடல் ரீதியிலும், மன ரீதியிலும், எந்தவித எதிர்மறைப் பின்னூட்டமும் இல்லாமல் வளர்ப்பதுப் பரவலாக இருக்கிறது. தங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அவர்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற (தவறான) எதிர்பார்ப்போடு, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளை மிகுந்தக் கவனத்தோடுக் கண்காணிக்கின்றனர்.  இதனால், பெற்றோர்களின் மன அழுத்தம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், குழந்தைகள் பெரியவர்களாகியவுடன், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அமெரிக்கா-வில் வாழும் குடும்பங்கள் தங்களிடையே சமூகப் பாகுபாடுப் பார்ப்பதன் விளைவாக, அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி குறைந்திருக்கிறது. மற்ற நாடுகளில், சமூகப் பாகுபாடுப் பார்க்காமல் பழகும் திறனை அரசுப் பள்ளிகள் கற்றுக் கொடுக்கின்றன. இதன் விளைவாக, அமெரிக்கா-வில், சமூக நிலையை அடிப்படையாக வைத்துப் பழகும் குடும்பங்கள் அதிகப்பட்சமாக உள்ளன. இவ்வாறு, குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் பாதுகாக்கும் விசித்திரப் பழக்க வழக்கங்கள் வேரூன்றுகின்றன. சுதந்திரச் சந்தைக் கொள்கைகளின் பரவினால், அமெரிக்கா-வின் அரசாங்கம், அரசுப் பள்ளிகளில் உள்ள நிதி முதலீட்டைக் குறைத்துக் கொண்டுள்ளது. இதனைத் தங்களுக்கு ஆதாரமாக்கிக் கொண்டு, தனியார் நிறுவனங்கள், குழந்தை வளர்ப்பு வகுப்புகள், கோட்பாடுகள், புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள், மூலம் லாபம் செய்கின்றன. பெற்றோர்கள், உற்றார் உறவினர்களின் உதவி இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதால், பலச் சித்தாந்தங்களுக்கிடையேச் சிக்கித் தங்களதுக் குழந்தை வளர்ப்புத் திறனில் உள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். இன்றைய அமெரிக்க மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் மன அழுத்தம், 1950-களில் மன நோயாளிகளின் மன அழுத்தத்திற்கு ஒத்ததாக இருக்கிறது.  ஆராய்ச்சிகள், குழந்தை வளர்ப்பு, பெற்றோர்களின் தனிப்பட்டச் சந்தோஷத்தைக் குறைக்கும் என்றுக் கண்டுப்பிடித்திருந்தாலும், குழந்தை வளர்ப்பது ஒவ்வொருக் கணமும் தங்களுக்கு அலாதிச் சந்தோஷத்தை அளிக்கும் என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். அமெரிக்கா-வில் தனி மனிதப் பொறுப்புக் கொள்கையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப வாழ்க்கையில் வெற்றி அடையாத பொழுது, அமெரிக்கப் பெற்றோர்கள் தங்கள் மேலேயே பழிச் சுமத்திக் கொள்கின்றனர். சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் கொள்கைகளை உடைய நாடுகளில் உள்ள மக்கள், அக்கொள்கைகள் இல்லாத நாடுகளில் (உதாரணத்திற்கு, அமெரிக்கா) உள்ள மக்களைக் காட்டிலும் அதிகச் சந்தோஷத்துடன் இருக்கின்றனர்.
தனி மனிதச் சந்தோஷத்தைச் சமூக ஊடகங்களில் தேடும் முயற்சிகள் அமெரிக்க மக்களின் சந்தோஷத்தை மேலும் குறைத்து இருக்கின்றன. சமூக ஊடகங்களில், மற்றவர்களின் கண்களில் வெற்றிப் பெற்றவர்களாகத் தெரிய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, அவர்களின் உண்மை வடிவத்தை மறைக்கிறது. சமூக ஊடகங்களில் நெடு நேரம் செலவிடுபவர்கள், கண நேரச் சந்தோஷமும் வாழ்க்கைச் சந்தோஷமும் குறைந்து உடையவர்களாகவேக் காணப்படுகின்றனர். மற்றவர் கண்களில் தங்களது நிலைமை உயர்ந்தேக் காண வேண்டும் என்றக் குறிக்கோளோடு அனைவரும் செயல்படுவதால், தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நேர்மறைச் சம்பவங்களையும் நல்லச் செய்திகளையும் மட்டுமேப் பகிர்ந்துக் கொள்கின்றனர். எப்பொழுதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது, அவர்களின் சந்தோஷத்தை அறவே அழித்து, சோகத்தில் கொண்டுப் போய் முடிக்கிறது.  ஆராய்ச்சியில், இதனை, பொறாமைச் சுழல் என்று அழைக்கின்றனர் - முன்காலத்தில், அண்டை வீட்டுக்காரர்கள் கண்டுப் பொறாமைப்பட்டக் காலம் போய், இப்பொழுது சமூக ஊடகங்களில் உள்ளவர்களைக் கண்டுப் பொறாமைப்படும் காலம் வந்து விட்டதை இதுக் குறிக்கிறது. இதன் விளைவாக, தங்களுக்குத் தெரிந்தவர்களின் சுய விவரங்கள் மினுங்குவதைக் கண்டுத் தங்களுடையச் சுய விவரத்தையும் மேலும் அழகுப்படுத்துகின்றனர். சில இணைய தளங்கள், நேர்மறை நிகழ்வுகளை மட்டுமேப் பிரசுரிப்பதன் மூலம் அதிக அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்கின்றனர் (இதனால், அவர்களது இணைய தளத்தின் விளம்பர வருவாய் அதிகரிக்கிறது - உதாரணத்திற்கு அமெரிக்கா-வில் செய்திகளை வெளியிடும் அப்வெர்த்தி என்ற இணையதளம்). இவ்வாறு வெளியிடும் செய்திகள் வெகு வேகமாக மக்களிடையேப் பரவினாலும், அச்செய்திகளில் உள்ள நெளிவுச் சுளிவுகளும் சிக்கல்மிக்கச் சூழ்நிலைகளும் அறவே அகற்றப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா-வில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் ருஷ்யா வெற்றிகரமாக சமூக ஊடகங்களில் அமெரிக்க மக்களைத் தவறானச் செய்திகளின் மூலம் கையாண்ட விதம், இவ்வாறுப் பய உணர்ச்சியை எளிதாகக் கிளறி விட்டதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. 
சந்தோஷத்தைப் பற்றிய ஆராய்ச்சி நேர்மறை உளவியல் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா-வின் உளவியல் அமைப்பு, அதன் முன்னாள் தலைவர் டாக்டர். மார்ட்டின் ஸெலிக்மன் தலைமையில், 1998-ஆம் ஆண்டில், சந்தோஷத்தின் காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை அலசி ஆராயும் ஆராய்ச்சியைத் துவங்கியது. மார்ட்டின் ஸெலிக்மன், தனது ஆராய்ச்சியில், அடைக்கப்பட்ட நாய்களின் மேல் செய்தச் சோதனைகளின் மூலம், மனிதர்களிடையே உதவியற்ற நிலையை உருவாக்குவதில் தேர்ச்சிப் பெற்றவர். அவர் தலைமையில், அமெரிக்கா-வின் உளவியல் அமைப்பு, அமெரிக்கா-வின் உளவுத் துறையான ஸி.ஐ.ஏ-விற்கு, இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடம் இருந்து உண்மையை வரவழைக்கச் செய்தக் கொடூரமானச் செயல்களுக்குப் பேருதவி அளித்தது. இதனை அந்த அமைப்பும் அமெரிக்கக் காங்கிரஸும் அச்செயல்களை விவரமாக எழுதப்பட்ட அறிக்கைகளில் ஒப்புக் கொண்டன. நேர்மறை உளவியல் ஆராய்ச்சி, ஜான் டெம்பிள்டன் ஃபவுன்டேஷன் என்ற அமைப்பின் நிதி உதவியால் பலக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, சந்தோஷத்தை மிகைப்படுத்துவதற்கு உதவும் வகுப்புகள் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் பல நிறுவனங்கள் பெரும் லாபத்தைச் சம்பாதித்துள்ளன. இந்த வகுப்புகள் அனைத்தும், தனி மனித சந்தோஷம், அவரவர் கைகளில் இருக்கிறது என்றும் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளின் பங்கு அதில் மிகக் குறைவு, என்றும் ஆணித்தரமாக நம்புகின்றன. 1950-களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், தனி மனித சந்தோஷம் மூன்றுக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்றுக் கண்டுப்பிடித்தனர் - மரபியல் (50 %), வாழ்க்கைச் சூழ்நிலை (30 - 40%) மற்றும் தனி மனித முயற்சிகள்(10 - 20%). சமீபக் கால ஆராய்ச்சியாளர்கள், ஜான் டெம்பிள்டன் அமைப்பின் பாதிப்பால், வாழ்க்கைச் சூழ்நிலையின் பங்கைக் குறைத்தும் தனி மனித முயற்சிகளின் பங்கை அதிகரித்தும் தங்களது ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர். தனி மனித முயற்சியின் மூலம் சந்தோஷத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் நேர்மறை உளவியலைப் பற்றியப் பலப் புத்தகங்களையும் இதர வகுப்புகளையும் வெற்றிகரமாக விற்றுப் பணம் சம்பாதித்துள்ளனர். ஆனால், அவற்றை வாங்கிய மக்களின் சந்தோஷ நிலையில் மாற்றம் எதுவும் காணப்படவில்லை. இந்தப் புத்தகத்தில், 'ஹவ் ஆஃப் ஹாப்பினெஸ்' என்றப் புத்தகத்தை ஆசிரியர் அலசி ஆராய்ந்திருக்கிறார் - அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், டாக்டர் ஸோன்யா ல்யூபோமோர்ஸ்க்கி நன்றி அளவைக் கூட்டும் ஒருப் பயிற்சியைக் கடைப்பிடித்தால், அது தனி மனிதச் சந்தோஷத்தை அதிகரிக்கும் என்ற ஆராய்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த ஆராய்ச்சி, விஞ்ஞானிகளால் ஆய்வுச் செய்யப்படாமல் இருப்பதால், டாக்டர் ஸோன்யா விவரித்தப் பயிற்சிப் பயனுள்ளதாக இருக்காது என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறுகிறார். நேர்முறை உளவியலைப் பற்றி ஆராய்ச்சிச் செய்பவர்கள், தங்களுடையச் சோதனைகளின் சில முடிவுகள் நிதி வருவாய் கிடக்கும் என்றப் பட்சத்தில், அந்த முடிவுகளுக்குப் பாரபட்சம் காண்பிப்பார்கள். மருந்துத் தொழிலில் காலாகாலமாக இவ்வாறு நடப்பது இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு சோதனையை எந்தப் பாரபட்சமும் இல்லாமல் செய்யும் இரட்டைக் குருட்டுச் சோதனை முறையைக் கடைப்பிடிக்கலாம். நேர்முறை உளவியலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சிகளை ஒட்டு மொத்தமாக ஆராய்ந்ததில், எதிர்ப்பார்த்தப் பலன்கள் நிகழாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அதையும் மீறி, பல நாடுகளில் சந்தோஷத்தைக் கணிக்கும் குறியீடுகள் நடைமுறையில் வந்துள்ளன - உதாரணத்திற்கு, இங்கிலாந்தில், தேசிய சந்தோஷக் குறியீடு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயம், நிஜ வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகரிக்கும் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை இந்த நாடுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன.
ஆராய்ச்சிகளில் இருந்து ஒருவரின் மனிதத் தொடர்புகளை விரிவுப்படுத்துவதன் மூலம் அவரின் சந்தோஷம் அதிகரிக்கிறது என்பதுத் தெரிய வருகிறது.  அமெரிக்கா-வில் உள்ள மக்களின் பதட்டத்தைக் குறைத்து அவர்களதுச் சந்தோஷத்தை அதிகரிக்கத் தியானம் ஒருக் கருவியாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா-வில் சந்தோஷத்தை எட்டுவது தனி மனித முயற்சியால் தான் நிகழும் என்ற நம்பிக்கைத் திடகாத்திரமாக இருப்பதால், தியானம் மற்றும் யோகா வகுப்புகளில் குறைந்த அளவிலேயே மனிதத் தொடர்புகள் இருக்கின்றன. இதனால், அவை இரண்டும் அமெரிக்கா-வில் உள்ள மக்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கத் தவறுகின்றன.  மனிதத் தொடர்புகளைப் புறக்கணிக்கும் பொழுது ஒருவரின் மன நிலைத் தடுமாறுகிறது. தனி மனித முயற்சியால் சந்தோஷம் கிட்டும் என்ற அணுகுமுறை மக்களுக்கு உதவாமல் இருந்தாலும், அதை அடிப்படையாக வைத்து லாபம் சம்பாதிப்பவர்களுக்கு அதுப் பயனுள்ளதாக இருக்கிறது. நிறுவனங்கள் விற்கும் நேர்முறை உளவியலை அடிப்படையாகக் கொண்ட வகுப்புகள், உற்றார் உறவினர் மற்றும் சமூகத்திற்கு உதவும் நடவடிக்கைகளுக்குப் பதிலாகச் செயல்படுகின்றன. நேர்முறை உளவியலை அடிப்படையாக வைத்து வகுப்புகள் நடத்தும் லேண்ட்மார்க் ஃபோரம் என்ற நிறுவனம் வருடத்திற்கு 840 லட்சம் டாலர் வருவாயைச் சம்பாதித்தது. அமெரிக்கத் தொலைக்காட்சியில் நேர்முறை உளவியலை அடிப்படையாக வைத்து நிகழ்ச்சி நடத்தும் டாக்டர் ஃபில் மெக்ரா வருடத்திற்கு 700 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார். இந்த நேர்முறை உளவியல் வகுப்புகளில் கற்றுத் தரப்படும் விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆசிரியர், லேண்ட் மார்க் ஃபோரம் நடத்தும் வகுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டு அவற்றைப் பற்றி எழுதுகிறார். இந்த வகுப்புகளில், மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி உள்மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் கதைகளில், உண்மை எது பொய் எது என்பதை வேறுபடுத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், அந்த வகுப்புகளில் பங்கேற்பவர்களின் வாழ்க்கையில் நடந்தத் துயரச் சம்பவங்கள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, சந்தோஷமானச் சம்பவங்களை மிகைப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த வகுப்புகளில் பங்கேற்பவர்கள், மீண்டும் மீண்டும் மற்ற வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தினால், வருங்கால வகுப்புகளுக்குத் தள்ளுபடிகளும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு நேர்முறை உளவியல் வகுப்புகளை நடத்தும் லேண்ட் மார்க் ஃபோரம் போன்ற நிறுவனங்களும், டோனி ராப்பின்ஸ் போன்ற நபர்களும் தனி மனிதச் சந்தோஷம் மக்களின் சுய முயற்சியால் நிச்சயம் அடைய முடியும் என்ற (தவறான) அடிப்படையில் செயல்படுகின்றனர். லேண்ட் மார்க் ஃபோரத்தில் வேலை செய்தவர்கள் ஆரம்பித்த சேலஞ்ச் டே போன்றத் தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் ஆசிரியர் பங்கேற்கிறார். சேலஞ்ச் டே நிகழ்ச்சிகள் அமெரிக்கா-வில் உள்ளப் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக வழங்கப்படுகிறது. மாணவர்களிடையேச் சந்தோஷத்தை அதிகரிக்க அவர்களது நண்பர்களும் அவர்களைப் போன்றச் சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் என்றும் தனி மனித முயற்சியால் அவர்களின் சந்தோஷம் அதிகரிக்கும் என்றும் பாடம் புகட்டுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் இருக்கும் சில மாணவர்களின் வாழ்க்கையில், சமூகக் கேடுகளான வறுமை, குடும்பக் கொடுமைகள், இன வெறி போன்றக் காரணிகள் அதிகப் பங்கு வகிக்கின்றன என்பதைப் புறக்கணிக்கின்றனர். சேலஞ்ச் டே தனது நிகழ்ச்சிகளில் மாணவர்களை அவர்களது நண்பர்கள் முன்னே அவர்களது வாழ்க்கை இரகசியங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்துக் கொள்ள வைப்பதால், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டப் பள்ளிகளில், வன்முறை நிறைந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. 
 நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளும் ஊழியர்களும் நேர்முறை உளவியலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் நிகழ்ச்சிகளில் இருந்துத் தப்பவில்லை. தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களின் சந்தோஷத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களது வேலைத் திறன் அதிகரித்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கிறது. தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் தொழிற்சங்கங்களின் மூலம் தங்களது உரிமைகளைக் கோரும் முயற்சிகளையும் நிறுவனங்கள் முறியடித்துள்ளனர். அதே நேரத்தில், தொழிலாளர்களுக்கு, உடல் நலம் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கும் தற்காலிகச் சலுகைகள் அதிகரித்துள்ளன. சில நிறுவனங்கள், தங்களதுத் தொழிலாளர்களின் தனி மனிதச் சந்தோஷத்தை அளவிடுவதற்கான சிறியக் கருவிகளை வலுக்கட்டாயமாக அணிய வைத்துள்ளனர். அமெரிக்கா-வில் இருக்கும் ஸப்போஸ் நிறுவனத்தை உதாரணமாக ஆசிரியர் காட்டுகிறார். தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணிப்பதைத் தனதுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தனதுத் தொழிலாளர்களிடையே, வாழ்க்கை மற்றும் வேலை இரண்டிற்கும் இடையேச் சமநிலை இருக்க வேண்டும் என்றக் கருத்தைப் புறக்கணித்து, அவர்களின் திறன் முழுவதையும் தனது லாபத்திற்காகப் பயன்படுத்துகிறது. இந்த நிறுவனத்தின் தலைவரான டோனி ஷே, தனதுச் சொந்த வாழ்க்கையிலும் ஸப்போஸ் நிறுவனத்தின் வாழ்க்கையிலும், அதிக அளவு நேர்முறை உளவியலைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால், தனது நிறுவனத்தில், எதிர்மறையான நிகழ்ச்சிகள் அறவே இருக்கக் கூடாது என்பதில் அதீத நம்பிக்கைக் கொண்டவர். ஸப்போஸ் நிறுவனம், 'பாஸிட்டிவிட்டி' என்றப் பெயரில், எதிர்மறை யோசனைகள் நியாயமானதாக இருந்தாலும், அவற்றைப் புறக்கணிக்கிறது. ஸப்போஸ் நிறுவனத்தில் வேலைத் தேடி வரும் தொழிலாளர்களிடம் , 'இவருடன் ஒரு கோப்பை மதுக் குடிக்க முடியுமா ?' என்றக் கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில் பிராதனமாகக் கருதப்படுகிறது. இது, கடந்த சில வருடங்களில், அமெரிக்கா-வில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள்(ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஓபாமா மற்றும் டானல்ட் ட்ரம்ப்), சாதாரண மக்களுடன் சகஜமாக ஒருக் கோப்பை மது அருந்தக் கூடியத் திறன் அதிகமாக உள்ளதால் வெற்றிப் பெற்றார்கள் என்றக் கருத்துப் பரவலாக இருப்பதற்குச் சமானமாக இருக்கிறது. ஸப்போஸ் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகள், தங்களதுக் குடும்பங்களுக்குப் பதில் அந்த நிறுவனத்தை அவர்களதுக் குடும்பமாகக் கருதுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். ஸப்போஸ் அலுவலகத்தின் கட்டட அமைப்பு அனைவரையும் சமமாகக் கருதும் நோக்கோடுக் கட்டப்பட்டு இருந்தாலும், டோனி ஷேவிற்கும் இதரத் தொழிலாளிகளுக்கும் இடையே அதிக அளவு வேறுபாடு இருக்கிறது - ஸப்போஸ் நிறுவனத்தில் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால்,  ஒருக் கோப்பை மது யாருடன் அருந்துவது என்ற முடிவை டோனி ஷே மட்டும் எடுக்கிறார். ஸப்போஸ் நிறுவனத்தின் மூலம் சம்பாதித்தச் செல்வத்தைப் பயன்படுத்தி, டோனி ஷே லாஸ் வேகாஸ் நகரத்தின் அருகில் 'டவுண்டவுன்' என்ற ஊரை நிறுவினார்.
ஸப்போஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் 'பாஸிட்டிவிட்டி' கொள்கையை இந்த ஊரிலும் செயல்படுத்தினார். நிறைய வணிகர்களும் தொழிலாளர்களும் தங்களுடையக் குடும்பங்களை விட்டு விட்டு, இந்தப் புதிய ஊருக்குக் குடிப்பெயர்ந்தனர். இந்த ஊரில் உள்ளவர்கள் எல்லா நேரமும் மற்றவர்களுடன் பழக வேண்டும் என்ற நிபந்தனைப் போடப்பட்டது. வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்க வேண்டும் என்பதால், எதிர்மறை அனுபவங்கள் நிகழும் பொழுது அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் உள்ளேயே வைத்துக் கொண்டு மன உளைச்சல் அடைகின்றனர். இதனால், அதிக அளவில் தற்கொலைகள் அங்கு நிகழ்கின்றன. அனைவரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கு வேண்டும் என்பதால், வாழ்க்கையில் துக்கம் நிகழும் பொழுது அதனைச் சரிக்கட்டத் தேவையான மன நிலை நிபுணர்கள் அந்த ஊரில் இல்லை. இது, தனிமையாக இருப்பவர்களின் நிலைமையைத் தற்கொலையில் கொண்டு முடிக்கிறது. ஸிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களிடையே ஸப்போஸ் நிறுவனம் நேர்மறை உளவியலில் கொண்ட அளவிற்குத் தீவிர நம்பிக்கை இல்லை என்றாலும், பேர் போன மற்ற நிறுவனங்களான கூகுள், ஃபேஸ் புக் போன்றவையும் இம்மாதிரிச் செயல்களைச் செய்கின்றன. தொழிலாளர்கள் சந்தோஷமாக இருந்தால், நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கிறது என்ற ஆராய்ச்சியின் பலனாக, அவர்களுக்குப் பல விதமான உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். ஸப்போஸ் நிறுவனம் போல், இந்த நிறுவனங்களில் உள்ள உயர்தட்டுத் தலைவர்கள், மற்றத் தொழிலாளர்களின் நடுவில் உட்கார்ந்து வேலைச் செய்கின்றனர். இந்த நிறுவனங்களில் உள்ளத் தொழிலாளிகளுக்கு, இலவச உணவு, விளையாட்டு அறைகள், நடைப்பயிற்சி செய்துக் கொண்டே வேலைச் செய்வதற்கான மேஜைகள் போன்றச் சலுகைகளை அளிக்கின்றனர். அமெரிக்கா-வில் நடு நிலை மற்றும் உயர்தட்டுத் தொழிலாளிகள், அலுவலகத்திலும் வீட்டிலும் அதிக நேரம் வேலைச் செய்கின்றனர். கீழ் தட்டுத் தொழிலாளிகள், பகுதி நேர வேலையைச் செய்வதால், தங்களது வாழ்க்கை நிலையைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வருவாயைச் சம்பாதிக்கத் திணறுகின்றனர். அமெரிக்கா-வில் உள்ள நிறுவனங்கள், தங்களதுத் தொழிலாளிகளுக்குச் சலுகைகளை அதிகமாக அளிக்கும் அதே நேரத்தில், தொழிலாளிகள் ஒன்றுக் கூடி தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகச் தொழிற்சங்கங்கள் உருவாக்குவதை எதிர்க்கின்றனர்.
ஆராய்ச்சியில், நாத்திகர்களைக் காட்டிலும், ஆத்திகர்கள் அதிக அளவுச் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதுத் தெளிவாகிறது. ஆத்திகர்கள், தொண்டுச் செய்வதிலும், தன்னார்வ நடவடிக்கைகளிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும், இரத்த தானம் செய்வதிலும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். மத அமைப்புகள், சக மதத்தினருக்கு ஒரு சமூகமும் தெளிவானக் குறிக்கோள்களும் அளிக்கின்றன. நாத்திகர்கள், அதுப் போன்றக் குறிக்கோள்களை உருவாக்குவதற்கு, சுய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு, ஆசிரியர் அமெரிக்கா-வில் யூடா மாநிலத்தை ஒரு உதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார். அமெரிக்கா-வில் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்குக் குறைந்தச் சாத்தியக் கூறுகளே உள்ளன. ஆனால், யூடா மாநிலத்தில், அதற்கு மாறாக, கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெற அதிக அளவுச் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. யூடா மாநிலத்தில், மார்மன்ஸ் என்று அழைக்கப்படும் சர்ச் ஆஃப் ஜீஸஸ் க்ரைஸ்ட் ஆஃப் தி லேட்டர் டே ஸேய்ன்ட்ஸ் அமைப்பு, தீவிரமானச் சமூகக் கோட்பாடுகளைச் செயல்படுத்துகிறது. அங்குள்ள மார்மன் மக்களுக்குத் தாராளமாகச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் ஏழை மக்களுக்கு நிதி உதவிகளும் அதிக அளவில் செய்கின்றனர். இதனால், அங்குள்ளக் கீழ்தட்டு மக்கள், தங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ப்ரட் ஸைடட்! ஹவ் தி ரெலென்ட்லஸ் ப்ரோமோஷன் ஆஃப் பாஸிட்டிவ் திங்கிங்க் ஹாஸ் அண்டர்மைண்ட் அமெரிக்கா - பார்ப்பரா எஹ்ரென்ரைக்
ஹாண்ட் டூ மவுத், லிவிங்க் இன் பூட்ஸ்ற்றாப் அமெரிக்கா - லிண்டா டிராடோ

No comments: