காகிதக் கனவுகள்

சுருக்கம்:
2008-ஆம் வருடம் அமெரிக்கா-வில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் வினையாக, வீட்டின் அடமானத்தில் உள்ள முதலைக் குறைப்பதற்கு உருவாக்கப்பட்ட எஹ்.ஏ.எம்.பி திட்டத்தின் மூலம் சென்ற அனுபவம் மிகுந்த வருத்தத்தை அளித்தது. இறுதியில், முதலைக் குறைப்பதற்குப் பதிலாக, குறுகியக் கால அடமானத்தில் இருந்து 30 வருடத்திற்கு நிலையான வட்டியைக் கொண்ட அடமானத்திற்கு மாற்ற முடிந்தது. வீட்டு அடமானத்திற்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆவணங்களை, அடமானத்தை அடைக்க முடியுமா என்பதைக் கண்டுப்பிடிக்கப் பயன்படுத்தவில்லை. எஹ்.ஏ.எம்.பி திட்டத்தின் கீழ் அதே ஆவணங்களைக் கோரினார்கள். அந்த அனுபவத்திற்குப் பின், அமெரிக்கா-வில் வீட்டு அடமானம் எவ்வாறுச் செயல்படுகிறது என்றக் கேள்வி எழுந்தது. இந்தப் புத்தகத்தில், அமெரிக்கா-வின் வீட்டு அடமானச் சந்தையின் பின் இருக்கும் ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான பெத்தனி மேக்லீன், அமெரிக்கா-வில் 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு அழிந்த என்ரான் நிறுவனத்தைப் பற்றி எழுதியப் புத்தகம், மிக்கச் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்டிருந்தது. 2008-ஆம் ஆண்டிலிருந்து பத்தே வருடங்கள் தான் கழிந்திருந்தாலும், வீட்டைப் பணயம் வைப்பதில் இருந்து, (பொருளாதார) உலகமே அழியப் போகிறது என்ற நிலைமைக்கு மக்கள் மாறியிருக்கின்றனர். அமெரிக்கா-வின் பொருளாதாரம் திடகாத்திரமாக  அடிப்படையோடு இருந்தாலும் அதையும் மீறி அனைவரும் எதிர்காலம் மிகவும் அபாயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். அமெரிக்கா-வின் மக்களிடையே வீடு வாங்குவதை அதிகரிக்க நல்ல நோக்கோடு எடுத்த முடிவுகள், நிதித் துறை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கையில் எத்தகைய அளவுத் தவறானப் பாதையில் செல்லும் என்பதற்கு இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கின்ற நடவடிக்கைகள் எடுத்துக்காட்டாக அமைகிறது. 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பொருளாதாரச் சரிவிற்குப் பின், அமெரிக்கா-வில் டீக் கட்சிப் பிரபலம் அடைந்தது. தொலைக்காட்சியில் பொருளாதார வர்ணனையாளரான ரிக் ஸான்ட்டெல்லி, வங்கிகளுக்கு அமெரிக்கா அரசுச் செய்தப் பொருளாதார உதவியைப் புறக்கணித்து, மக்களுக்குப் பொருளாதார உதவிச் செய்ய முயன்றதைக் கண்டித்துத் தொலைக்காட்சியில் அறைகூவல் விடுத்தார். அதில் துவங்கிய டீக் கட்சி அமைப்புகள், மகத்தான செல்வம் படைத்த கோச் சகோதரர்களின் நிதி உதவியுடன் நாடு முழுவதும் பரவின. ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் மக்களின் வீட்டு அடமானங்களுக்கு உத்தரவாதம் அளித்து வந்ததால், அவர்களை நோக்கியும் டீக் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பின.
1990-களில் ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், அரசியல்வாதிகளைத் தங்களின் கையில் வைத்துக் கொண்டு, அந்த இரு நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அரசியல் முயற்சிகளை முறியடித்தனர். டெமோக்ராட்ஸும் மற்றும் ரீபப்ளிகன்ஸும், இந்த இரு நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முற்பட்டப் பொழுது, அமெரிக்க மக்களின் அடமானங்களுக்கு உத்திரவாதம் செய்வதைக் காரணமாகக் காட்டி, அந்த முயற்சிகளைத் தோற்கடித்தனர். அரசுத் துறையாகவும், தனியார் நிறுவனமாகவும் இல்லாமல் இருந்ததால், அவர்களது நிலைமை மோசமானவுடன் அவர்களின் ஆதரவும் வெகுவாகக் குறைந்தது. மக்கள்  சொந்த வீட்டை வாங்குவதன் மூலம், அவர்களது வாழ்க்கை மேம்படையும் என்ற  நோக்கத்தின் தோல்வியை இது வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா-வில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வீட்டு வரிக் கட்டுவதன் மூலம், அவர்களுடைய ஊர்களின் அரசியல் நலத்தில் அதிக அளவுப் பங்கு வகிக்கின்றனர். வாடகை வீட்டில் இருப்பவர்கள், வீட்டு வரிக் கட்ட வேண்டிய நிபந்தனை இல்லாததால், அதிக அளவு அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்கின்றனர். அமெரிக்கா-வில் உள்ள சிறுப்பான்மை இனத்தவரின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சக்தியை அடக்கி வைத்திருப்பதற்கும், சொந்த வீடு வாங்குவதற்கான அடமாந்த்தின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றையக் காலத்தில், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன - அடமானத்திற்கு உத்திரவாதம் அளிக்க மக்கள் செலவிடும் கட்டணம், அமெரிக்கா-வின் தேசியக் கடனைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அலசல்:
பெரும்பாலான உலக நாடுகளில், சுகாதாரத் துறைக்கு அரசு உதவியின் மூலமாக, மக்கள் சுகாதாரத்தை இலவசமாகவோ அதிக மானியங்கள் கொடுத்து மலிவு விலையிலோ அளிக்கின்றனர். அதே நாடுகளில், வீடு வாங்கும் வணிகத்தில் அரசின் ஊடுருவல் அதிகம் இல்லாமல் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அமெரிக்கா-வில், சுகாதாரத் துறையில் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளையும், வீட்டு வணிகத்தில் மக்களுக்கு மலிவு விலையில் வீடுக் கிடைக்கும் ஸோஷியலிஸக் கொள்கைகளையும் கடைப்பிடிக்கின்றனர். உலக நாடுகளில், வீட்டு அடமானங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்கு, வங்கி வைப்புகளில் இருந்தும் மக்களின் அடமானங்களை வகைப்படுத்தி அவற்றை அடிப்படையாக வைத்து விற்கப்படும் நிதிப் பத்திரங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால், எல்லா அடமானங்களும் குறைந்தக் கால வட்டியில் அளிக்கப்படுகின்றன. அமெரிக்கா-வில், பெரும்பாலும் 30 வருடத்திற்கு வட்டி நிலையாக இருக்கும் அடமானம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா-வில் அளிக்கப்படும் அடமானங்களில் மூன்று வகையான ஆபத்துகள் இருக்கின்றன - கடன்(வீட்டின் சொந்தக்காரர் கடனைத் திருப்பி அடைக்க முடியாத நிலைமை), வட்டி விகிதம் (வட்டி விகிதத்தின் உயர்வால், அடமானத்தில் முதலீடுச் செய்யப்பட்ட நிதி அதை விட அதிகமான வட்டி அளிக்கும் நிதிக் கருவியில் முதலீடுச் செய்ய முடியாமல் இருப்பது) மற்றும் முன்பணமளிப்பு (அடமானத்தைச் சீக்கிரமாக அடைப்பதன் மூலம், வங்கிக்கு அதே அளவு லாபம் அளிக்கும் நிதிக் கருவியைத் தேட வேண்டிய நிலைமை). வங்கிகள், வட்டி விகிதம் மற்றும் முன்பணமளிப்பு ஆபத்துகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், கடன் ஆபத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் (இவை அரசு ஆதரிப்புடைய நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன), கடன் ஆபத்தைக் குறைத்து, வங்கிகள் அமெரிக்க மக்களுக்கு 30 வருடத்திற்கு வட்டி விகிதம் நிலையாக இருக்கும் அடமானத்தை அளிக்க உதவுகின்றனர். வீட்டுச் சொந்தக்காரர்கள், அடமானப் பணத்தைப் பூர்த்திச் செய்ய முடியாதப் பொழுது, அதனைத் தாங்கள் பூர்த்திச் செய்வதாக வாக்களிப்பதன் மூலம், கடன் ஆபத்துப் பற்றிய வங்கிகளின் கவலையை அகற்றுகின்றனர். இவ்வாறுச் செய்ததன் மூலம், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், அதிக அளவில் கடன் பளுவை ஏற்றுக் கொண்டன. 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் பின், அமெரிக்கா-வின் வீட்டு வணிகத்தில் இருந்தச் சிக்கல்களுக்கு இந்த நிறுவனங்களும் ஒருக் காரணம் என்றக் கருத்துப் பரவ ஆரம்பித்தது. அப்பொழுது ஏற்பட்ட நிதி இழப்புகளின் விளைவாக, அரசுக் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் பின், அமெரிக்கா-வின் கருவூலத் துறையிடம் இருந்து பலக் கோடி அளவிற்குக் கடன் உதவிக் கிட்டியது. ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களை, நிதித் துறையில் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளுக்கு மாறாக, அரசு உதவியின் வெளிப்பாடாகக் கருதி, ரீபப்ளிகன்ஸ் அந்த நிறுவனங்களை வெறுத்தனர். டெமொக்ராட் கட்சியினர், அந்த இரு நிறுவனங்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டப் பணியைக் (அமெரிக்கா-வின் எல்லாத் தட்டு மக்களுக்கும் வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு) செம்மையாகச் செய்யாததால் அவற்றை வெறுத்தனர். அமெரிக்கா-வின் மக்களிடையே வேரூன்றி இருக்கும் தேச நம்பிக்கையின் வெளிப்பாடாக, சொந்த வீட்டை வாங்குவதுக் கருதப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவிற்கு முன், இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் அதிக அளவு லாபம் பார்த்தன. பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு, அந்த நிறுவனங்களின் வருங்கால நிலைமை, இந்த அடிப்படை நம்பிக்கையைச் சரி செய்யும் வரை, முன்னேறுவதுக் கடினம்.
1929-இல் அமெரிக்கா-வில் நிகழ்ந்த மகத்தானப் பொருளாதாரச் சரிவான க்ரேட் டிப்ரெஷனுக்குப் பிறகு, அமெரிக்கா-வின் ஜனாதிபதியான ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் (எஃப்.டி.ஆர்), மக்களுக்கு அமெரிக்கா-வின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பங்குக் கொடுப்பதற்காக, சொந்த வீடு வாங்குவதைப் பயனுள்ள அணுகுமுறையாகக் கருதினார். 1930-ஆண்டு வரை, சொந்த வீடு வாங்குவது அமெரிக்கா-வின் மக்களுக்கு ஒருப் பெரியக் குறிக்கோளாக இருந்தாலும், அதற்குரிய நிதி அமைப்புகள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாமல் இருந்தது. 1920-களில், அடமானம் அளிக்கும் வணிகர்கள் மக்களை ஏமாற்றி அவர்களதுப் பணத்தைச் சூறையாடினர்.  எஃப்.டி.ஆர்-க்கு முன் அமெரிக்கா-வின் ஜனாதிபதியாக இருந்த ஹெர்பெர்ட் ஹூவர், காங்கிரஸின் உதவியுடன் 1932-ஆம் ஆண்டில் கூட்டாட்சி வீட்டுக் கடனளிக்கும் வங்கிச் சட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் மூலம், பிராந்திய வங்கிகள் தங்களுடைய கிளைகளின் மூலம் மக்களுக்குக் கடன் அளிக்க ஊக்குவிப்பதற்காக அமெரிக்கா-வின் அரசு நிதி உதவி அளித்தது. 1933-ஆம் ஆண்டில், எஃப்.டி.ஆர் தலைமையில், காங்கிரஸ் கூட்டாட்சி வீட்டுச் சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம், கூட்டாட்சி வீட்டு வசதி நிறுவனம் ஒரு அரசுத் துறையாக உருவாக்கப்பட்டது. மேலும், குறைந்த முதலோடு வாங்கப்பட்ட நீண்டக் கால அடமானங்கள் திவாலாவதைத் தடுக்க, அடமானம் வழகும் வணிகர்களுக்குக் காப்பீடு அளிக்கத் திட்டமிடப்பட்டது. இதன் பின், அமெரிக்கா-வில் மிகக் குறைய வட்டி விகிதத்தோடு அடமானங்கள் கிடைத்தன. இந்த அடமானங்களை அளிப்பதில், இனத்தைச் சார்ந்தப் பாகுபாடு அதிகம் இருந்ததால், சிறுப்பான்மை இனத்தவருக்கு சொந்த வீடு வாங்குவதுக் கடினமாக இருந்தது. அடமானம் அளிக்கும் வணிகர்களிடம் இருந்து வட்டிகளை ஒட்டு மொத்தமாக வாங்குவதற்குத் தனியார் அடமான அமைப்புகளை அமைப்பதற்கு வசதிச் செய்யப்பட்டது. ஆனால், தனியார் வங்கிகளும் வணிகர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களை ஊக்குவிக்க, கூட்டாட்சி வீட்டு வசதி வாரியம், மாதிரிக்கு தேசியக் கூட்டாட்சி அடமான அமைப்பு (ஃபான்னி மே) என்ற நிறுவனத்தை உருவாக்கியது. 1967-ஆம் ஆண்டு வரை, ஃபான்னி மே அரசு நிறுவனமாக இருந்தது. அந்த ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்ஸனிடம், பட்ஜெட் குழுமம் ஒன்று ஃபான்னி மே-யின் கடன், அமெரிக்கா-வின் ஒட்டு மொத்த கடனில் சேர்க்கப்பட வேண்டும் என்றுப் பரிந்துரைச் செய்தது. அதை விரும்பாத ஜான்ஸன், ஃபான்னி மே நிறுவனத்தை இரண்டாகப் பிரித்தார் - கூட்டாட்சி வீட்டு வசதி வாரியம் மற்றும் இராணுவ வீரர்களின் துறைகளின் அடமானங்களுக்கு உத்திரவாதம் அளிக்க,  தேசிய அரசு அடமான அமைப்பு (ஜின்னி மே) என்றப் புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. அமெரிக்கா-வின் இதர மக்கள் வாங்கிய அடமானங்களுக்கு உத்திரவாதம் அளிக்க ஃபான்னி மே பயன்படுத்தப்பட்டது. ஃபான்னி மே, பங்குச் சந்தையில் இருக்கும் தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. ஃபான்னி மேயின் பங்குகளை மக்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்கு, ஃபான்னி மேயின் நிதி நிலைமைக்கு அமெரிக்கா-வின் கருவூலத் துறை உத்திரவாதம் அளித்தது. அமெரிக்கா-வின் மத்திய வங்கியான ஃபெடெரல் ரீஸர்வ், ஃபான்னி மேயின் பங்குகளை அளவில்லா எண்ணிக்கையில் வாங்கவும் அனுமதி அளித்தது. இதனால், பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள், ஃபான்னி மேயின் பின் அமெரிக்கா-வின் முழு பணப் பலமும் இருப்பதாக நம்பினர். அமெரிக்கா-வின் அரசோ, ஃபான்னி மேயைப் பங்குச் சந்தையில் இருக்கும் ஒருத் தனியார் நிறுவனமாகக் கருதியது. ஃபான்னி மே பெரிதாக ஆனப் பின், அதன் கொட்டத்தை அடக்க, காங்கிரஸ் கூட்டாட்சி வீட்டு அடமானக் கடன் அமைப்பை(ஃப்ரெட்டி மாக்) உருவாக்கியது. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்த் துருவங்களாக இருப்பதற்குப் பதில், ஒரேக் குறிக்கோளோடுச் செயல்பட்டன.
1980-களில், அமெரிக்கா-வின் தனியார் நிதி நிறுவனங்கள், அடமானத்தை அடிப்படையாக வைத்துப் பங்குகளை வெளியிட்டனர். அந்த நிதி நிறுவனங்கள், அடமானங்களை விற்கும் வணிகர்களிடம் இருந்து வாங்கி, அவற்றை வகைப்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு விற்றனர். முதலீட்டாளர்களை இந்தப் பங்குகளை வாங்க வைப்பதன் மூலம், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களைத் தவிர்த்து, பங்குச் சந்தையின் மூலம் கடன் ஆபத்துக் குறையும் என்றுக் கணித்தனர். முதலீட்டாளர்களோ, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் சான்றிதழ் இல்லாமல், அடமானத்தைச் சார்ந்த எந்தப் பங்குகளையும் வாங்குவதாக இல்லை. காங்கிரஸ், அடமானத்தை அடிப்படையாகக் கொண்ட தனியார் பங்குகளை வாங்குவதற்குச் சட்டத்தை அமல்படுத்தியது.  எனினும், முதலீட்டாளர்கள் அப்பங்குகளை வாங்குவதாக இல்லை. 1990-களில், அடமானங்களுக்கு உத்திரவாதம் அளிக்க வேறு எவரும் இல்லை என்ற மெத்தனத்தில், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடித்தன. தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும், காங்கிரஸில் தங்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக்கைக் கண்காணிக்க ஓ.எஃப்.ஹெச்.ஈ.ஓ என்ற அரசுத் துறையை உருவாக்கினர். அதற்குப் பதிலடியாக, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், அந்த அரசுத் துறையின் பணப் பலத்தை வெகுவாகக் குறைத்தன. அந்த அரசுத் துறைக்கு, வருடத்திற்கு 200 லட்சம் டாலர் மட்டுமேச் செலவுச் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் மேல்தட்டு நிர்வாகத்தில் இருந்தவர்களின் ஊதியம் வருடத்திற்கு 330 லட்சம் டாலராக இருந்தது. இதனால், அந்த அரசுத் துறை ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக்கைக் கண்காணிக்கச் சிரமப்பட்டது. அதே நேரத்தில், தனியார் நிறுவனங்களின் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் சொந்த வீடு வாங்க உதவும் செயல்களைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர். மேலும், அடமானங்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில் சங்கடம் ஏற்பட்டால், அதைச் சமாளிக்க நிதி இருப்புகளை அதிகமாக வைத்துக் கொள்ளும் நிபந்தனையும் போடப்பட்டது. தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் நிதி இருப்பை வெகுவாகக் குறைத்தன. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அடமானம் கிடைப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், பின் காலத்தில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் பொழுது வீட்டு விலைகள் வெகுவாகக் குறைந்தவுடன், ரீபப்ளிகன்ஸ் அந்த நிபந்தனையைக் காரணமாகச் சுட்டிக்காட்டினர். ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வீட்டு அடமானம் வாங்கும் பொழுது, கடனுக்கும் அவர்களது வருவாய்க்கும் 80 விகிதத்திற்குக் குறைய இருந்தால், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் அவர்களிடம் இருந்து அடமானக் காப்பீடு வாங்க வேண்டி இருக்கும். தனியார் நிறுவனங்கள், இந்தக் காப்பீட்டை வாங்க வேண்டாம். அடமானத்தை அடிப்படையாக வைத்து விற்கப்பட்டப் பங்குகள், முதலில் தனியார் நிதி நிறுவனங்களால் விற்கப்பட்டன. அந்தப் பங்குகளை அதிக அளவில் விற்பதற்கு, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களுக்கு 10 வருடக் காலம் ஆகின. மேலும், இந்த நிறுவனங்கள் உத்திரவாதம் அளித்த அடமானக் கடன், அவர்களதுக் ஒட்டுமொத்தக் கடன் அளவில் சேர்க்கப்பட்டது. தனியார் நிறுவனங்களோ, அவர்கள் உத்திரவாதம் அளித்த அடமானங்களை மாயாஜாலங்கள் மூலம், மற்றத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றனர். இதனால், அமெரிக்கா-வின் நிதி உள்கட்டமைப்பில் பல ஆபத்தான விளைவுகள் தனியார் நிதி நிறுவனங்கள் உத்திரவாதம் அளித்த அடமானக் கடன்களினால் நிகழ்ந்தது. அமெரிக்கா-வின் வீட்டுச் சந்தை வெகு வேகமாக வளர்ந்ததின் விளைவாக, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் உத்திரவாதம் அளித்த அடமானங்களின் மதிப்பு, 1990-இல் 3.1 ட்ரில்லியன் டாலரில் இருந்து 2000-இல் 5.5 ட்ரில்லியன் டாலராக எகிறியது.
ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் முக்கியத்துவமும் அவர்களதுப் பொருளாதாரச் சக்தியும், அமெரிக்கா-வின் நிதி அமைப்பில் ஒவ்வொரு முக்கிலும் அவர்களதுச் செல்வாக்குப் பரவ உதவியது. அவர்களது நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தேவையான நிதியை, வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் மூலம் திரட்டின. இதனால், வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கட்டணங்களின் மூலம் வருவாய் கிடைத்தது. அமெரிக்கா-வின் கருவூலத் துறை டாலரின் மதிப்பை நிலைப்படுத்த வெளியிடும் பத்திரங்களுக்குப் பிறகு முக்கியமான நிதிக் கருவியாக, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் பங்குகள் திகழ்ந்தன. அதனால், வெளிநாட்டு அரசுகளும் நிதி வணிகர்களும் அதிக அளவில் அந்தப் பங்குகளை கொள்முதல் செய்தன. அமெரிக்கா-வின் நிதி நிறுவனங்கள் வேறுப் பல நிதிக் கருவிகளை வாங்குவதற்கு ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் பங்குகளைப் பயன்படுத்தினர். 2004-ஆம் ஆண்டின் முடிவில், இந்த இரு நிறுவனங்களின் அடமானப் பங்குகளில் 87,500 கோடி டாலர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் கையில் வைத்திருந்தனர். பொதுவாக அமெரிக்கா-வின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் குறிப்பாக அமெரிக்கா-வின் சொந்த வீடுகளின் விலை ஏற்றமும் அந்த நாடு - நிதித் துறையில் செய்த மாயாஜாலத்தை மறைத்தது. 30 வருடம் நிலையான வட்டியுடைய அடமானம் அவ்வளவு எளிதில் விற்றுப் பணம் செய்ய முடியாது. மேலும் அவ்வகை அடமானத்தில், கடன், வட்டி விகிதம் மற்றும் முன்பணமளிப்பு ஆபத்துகள் எல்லாம் அடங்கியிருந்தன. அடமானப் பங்குகளின் மூலமாக அமெரிக்கா-வின் கருவூலப் பத்திரங்களுக்கு அடுத்தப்படி உடனடியாக விற்றுப் பணம் செய்யும் நிதிக் கருவியாக அவை உருமாறின. அமெரிக்கா-வின் வீட்டு அடமான வணிகம் மேலும் மேலும் வலுவெடுக்க, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் அடமானங்களை உத்திரவாதம் அளிப்பதோடு, அடமான வட்டிகளை அடிப்படையாக வைத்து நிதி நிறுவனங்களால்  உருவாக்கப்பட்டப் பங்குகளைத் தங்களது பேரில் வாங்கிக் கொண்டன. பிற்காலத்தில், 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்தப் பொருளாதாரச் சரிவின் பொழுது, அடமான வட்டிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டப் பங்குகளின் தரத்தில் நிதி நிறுவனங்கள் செய்தத் தில்லுமுல்லுச் செயல்களினால், மிக உயர்ந்தத் தரம் என்றுக் கருதப்பட்ட ஏ.ஏ.ஏ பங்குகள், உண்மையில் குறைந்தத் தரம் நிறைந்தப் பங்குகள் என்றத் தெரிய வந்தது. இதனால், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டங்களைச் சந்திக்க ஆரம்பித்தன. பொருளாதார நிபுணர்களிடையே, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள், லாபத்தைத் தனியார்மயமாக்கியும் (அந்த நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் கோடீஸ்வரர்களாக இருந்தனர்) நஷ்டங்களை பொது மக்கள் தலையில் கட்டியும் (அமெரிக்கா-வின் அரசு இந்த இரு நிறுவனங்களுக்கும் உத்திரவாதம் கொடுத்திருந்ததால், அவற்றின் நஷ்டத்தைச் சரிக்கட்ட மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டி வரும்) தங்களது நடவடிக்கைகளை நடத்தின என்றுக் குற்றம் சாட்டினர். 1999-ஆம் ஆண்டில், கடன் அடைப்பதில் சிரமப்படும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளில் உள்ள அடமானங்களை இந்த இரு நிறுவனங்களும் வாங்க ஆரம்பித்தனர். இந்த வகை அடமானங்கள், அதிக அளவு வட்டியோடு விற்கப்பட்டன. அரசியல் தலைவர்கள், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் கைக் கொடுத்தனர். சொந்த வீட்டை வாங்குவது, அமெரிக்க வாழ்வின் இலக்காகச் சித்தரிக்கப்பட்டதால், இந்த இரு நிறுவனங்களை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் அமெரிக்க மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்றக் குற்றச்சாட்டு எழுந்தது. பில் க்ளின்டன் ஜனாதிபதியாக இருந்தப் பொழுது தேசிய சொந்த வீடு மூலோபாயத்தைச் செயல்படுத்தினார். ஜார்ஜ் டபுள்யூ புஷ், அவர் ஜனாதிபதியாக இருந்தப் பொழுது, சொந்தக்காரர்கள் சமுதாயம் என்றத் திட்டத்தைச் செயல்படுத்தினார். ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் செல்வாக்கினால் பல அரசியல் தலைவர்கள் அவர்களின் (அரசியல்) எதிரிகளாகினர்.
இந்த இரு நிறுவனங்களின் சரிவு, 2003-ஆம் ஆண்டு வரவுச் செலவுக் கணக்குகளில் முறைகேடு இருந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டப் பொழுது ஆரம்பித்தது. இந்த இரு நிறுவனங்களின் தணிக்கையாளரான ஆர்தர் ஆன்டெர்சென் நிறுவனம் என்ரான் நிறுவனத்தின் ஊழல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டு அழிவைக் கண்டது. இதனால், ஆர்தர் ஆன்டெர்சென் தணிக்கையாளராக இருந்த மற்ற நிறுவனங்களின் மேல் மக்களுடையக் கவனம் திரும்பியது. அந்தச் சந்தேகத்தை நிவர்த்திச் செய்ய, ஃப்ரெட்டி மாக் நிறுவனம், ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைத் தனதுப் புதுத் தணிக்கையாளராகப் பணியமர்த்தியது. இதன் விளைவாக, ஃப்ரெட்டி மாக் நிறுவனம் 2001-ஆம் ஆண்டில் இருந்துத் தனது வருவாயை 500 கோடி டாலர் அளவிற்குத் திருத்தம் செய்ய வேண்டி வந்தது. இது, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் அரசுக் கண்காணிப்பாளரான ஓ.எஃப்.ஹெச்.ஈ.ஓ-வின் பலவீனத்தை வெளிக்காட்டியது. ஃப்ரெட்டி மாக், தனது வருவாயில் திருத்தம் அறிவித்தச் சில மாதங்களுக்கு முன்பு, ஓ.எஃப்.ஹெச்.ஈ.ஓ ஃப்ரெட்டி மாக் வருவாயின் தரத்திற்கு உறுதி அளித்திருந்தது. இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஃப்ரெட்டி மாக் நிறுவனத்தின் நெருக்கடியைப் பயன்படுத்தி, ஜார்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகம், அமெரிக்கா-வின் மத்திய வங்கியான ஃபெடெரல் ரிஸர்வ் தலைவரான அலன் க்ரீன்ஸ்பானுடன் இணைந்து, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் செல்வாக்கைக் குறைக்க முயற்சிகள் எடுத்தனர். அதே நேரத்தில், ஓ.எஃப்.ஹெச்.ஈ.ஓ, ஃப்ரெட்டி மாக்கின் கணக்குகளை அலசியப் பிறகு, தனது வருவாய் திருத்தத்தை 500 கோடி டாலரில் இருந்து, 1100 கோடி டாலராக உயர்த்தியது. இதனை அடுத்து, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் உயர்த்தட்டு நிர்வாகிகள் தங்களதுப் பதவியை இழந்தனர். இந்த இரு நிறுவனங்களின் மதிப்பும் அதி வேகமாகக் குறைந்தது. ஆனால், இந்த இரு நிறுவனங்களுக்குப் பதிலாக மற்ற நிறுவனங்களை உருவாக்குவதில் அரசியல் தலைவர்களுக்கு நாட்டம் இல்லை. இதனால், இந்த இரு நிறுவனங்களும் மிகவும் பலவீனமான நிலையில், குறைந்தப் பண இருப்புகளோடும், மிக ஆபத்தான அடமானங்களோடும் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. மற்றத் தனியார் நிறுவனங்களும் ஆபத்தான அடமனங்களைத் தங்களுடைய நிறுவனங்களின் கணக்குகளில் வைத்துக் கொண்டிருந்தன. 2008-ஆம் ஆண்டில் பொருளாதாரச் சரிவு ஆரம்பித்தவுடன், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்கள்
மாதா மாதம் பலக் கோடி டாலர்களின் இழப்பைச் சந்தித்தன. வெளிநாட்டு அரசுகளும் (இவற்றில் முதன்மையான நாடுகளாக சீனா மற்றும் ஜப்பான் விளங்கின)  முதலீட்டாளர்களும் அழுத்தியதன் விளைவாக, அமெரிக்கா-வின் அரசு, இந்த இரு நிறுவனங்களுக்கும் நிதி உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது. அவ்வாறுச் செய்யாமல் இருந்தால், அமெரிக்க அரசின் அறிக்கைகளின் மதிப்புக் குறைந்து, அமெரிக்க டாலரை முதலீட்டாளர்கள் அதிகமாக விற்கும் வாய்ப்பு இருந்தது. 2008-ஆம் ஆண்டில் இருந்து 2014-ஆம் ஆண்டு வரை, அமெரிக்கா-வின் மத்திய வங்கியான ஃபெடெரல் ரிஸர்வ், 3 லட்சம் கோடி டாலர் மதிப்பளவில் அடமானப் பங்குகளைத் தன்னுடையக் கணக்கில் வாங்கிக் கொண்டது.
அமெரிக்கா அரசு, பெரிய வங்கிகளின் அழிவைத் தடுப்பதற்காகத் தங்களால் முடிந்த அளவு, நிதி உதவி செய்தனர். அதே நேரத்தில், சாதாரண மக்களின் வீடுகளின் விலை வெகு அதிகமானச் சரிவைக் கண்டப் பிறகும், அமெரிக்க அரசு அவர்களுக்கு உதவிச் செய்ய முன்வரவில்லை. இதனைக் கண்டு வெகுண்டு எழுந்த மக்களின் ஆத்திரத்தை அடக்க, அமெரிக்க அரசு, மக்களின் அடமானச் சிக்கல்களைக் கையாளச் சிலத் திட்டங்களைச் செயல்படுத்தியது. இவற்றில், ஹாம்ப் திட்டமும் அடங்கும். வீட்டின் சொந்தக்காரர்களிடையே, இரு வேறுக் குழுக்கள் உருவாயின - தங்கள் வீடுகளின் விலைத் தங்களுடைய அடமான நிலுவைகளைக் காட்டிலும் குறைந்த அளவில் இருந்தவர்களுக்கு, அடமானத்தின் முதலைக் குறைப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. மற்ற மக்களின் வீடு விலைக் குறையாமல் இருந்ததனால், அவர்கள் அடமான முதலைக் குறைக்க முற்படுபவர்களை பொறுப்பற்ற வீட்டுக்காரர்களாகப் பார்த்தனர். ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் நடவடிக்கைகள் தீவிரமானக் கண்டிப்பிற்கு ஆளானதால், இந்த இரு நிறுவனங்களும் தங்களது அசல் வணிகமான அடமான உத்திரவாதத்திற்குத் திரும்பினர். வீட்டு விலைகள் வெகுவாகக் குறைந்ததனால், அடமான உத்திரவாதத்திற்கு அதிக அளவு பணக் கட்டணமும் விதிக்க ஆரம்பித்தனர். மிகப் பலவீனமான நிலையில் இருந்த இந்த இரு நிறுவனங்களை அழிக்க ரீபப்ளிகன்ஸ் மற்றும் டெமோக்ராட்ஸ் எவ்வளவு முயன்றும் கடைசியில் தோல்வி அடைந்தனர். அமெரிக்க மக்களின் சொந்த வீடு வாங்கும் கனவை அலசி ஆராயாமல், இந்த இரு நிறுவனங்களையும் அழிக்கவோ சீர்திருத்தவோச் செய்த முயற்சிகள், அவற்றிற்குப் பதில் உருவாக்கப்படும் நிறுவனங்களைப் பற்றியச் சண்டைச் சச்சரவுகளில், தோல்வியைத் தழுவின. ஜார்ஜ் டபுள்யூ புஷ்-இன் ஜனாதிபதிக் காலம் முடிவுக்கு வந்த நேரம் இந்த இரு நிறுவனங்களும் அரசுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன - இந்த இரு நிறுவனங்களின் உயர்த்தட்டு நிர்வாகிகள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர், அரசியல் தலைவர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்த இரு நிறுவனங்கள்  பங்கேற்பதுப் புறக்கணிக்கப்பட்டது, அமெரிக்க அரசு இந்த இரு நிறுவனங்களிலும் 79.9% பங்கு மேற்கொண்டது. மொத்தமாக 100% பங்கு எடுத்துக் கொன்டால், இந்த இரு நிறுவனங்களின் கடன் அமெரிக்க அரசின் கடன் பளுவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றப் பயத்தில், தங்களுடையப் பங்கை 79.9% ஆக வைத்துக் கொண்டனர். அமெரிக்க அரசு, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் கடன் மற்றும் அடமானப் பங்குகளின் சொந்தக்காரர்களுக்கு, அவர்கள் செய்த முதலீட்டின் மதிப்புக் குறைக்கப்பட மாட்டாது என்ற உத்திரவாதம் அளித்தனர். ஆனால், இந்த இரு நிறுவனங்களின் பங்குச் சந்தையில் கிடைக்கும் பங்குகளை வாங்கியவர்களுக்கு உத்திரவாதம் அளிக்க அமெரிக்க அரசு மறுத்தது. வங்கிகளுக்கு நிதி உதவிச் செய்தப் பொழுது, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்தவர்கள் மற்றும் அந்த வங்கிகளின் பங்குகளின் சொந்தக்காரர்களை அமெரிக்க அரசுச் சமமாகக் கருதியது. மேலும் வங்கிகளின் உயர்த்தட்டு நிர்வாகிகளை பதவியில் இருக்க அமெரிக்க அரசுச் சம்மதித்தது. அமெரிக்க அரசு, இந்த இரு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கு முன், சில நிதி நிறுவனங்கள், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் பொருளாதார நிலை அரசுக் கூறியதுப் போல் மோசமாக இல்லை என்றுக் கருதி, அந்த இரு நிறுவனங்களின் பங்குகளை வாங்கினர். அமெரிக்க அரசு தனதுக் கண்காணிப்பில், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களைத் தீவிரமாகக் கண்காணித்து, பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்களை மீண்டும் தனியார் நிறுவனங்களாக மாற்றி விடும் என்று இந்த முதலீட்டாளர்கள் நம்பினர்.  அமெரிக்க அரசும் கருவூலத் துறையும், பொருளாதாரச் சரிவின் வீரியத்தைப் பயன்படுத்தி, இந்த இரு நிறுவனங்களை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டம் தீட்டினர். அதனைச் செயல்படுத்த, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் வருவாயை முழுவதும் அரசுக்கே அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தனர். 2008-ஆம் ஆண்டுப் பொருளாதாரச் சரிவிற்கு முன், இந்த இரு நிறுவனங்களின் வருவாயில் இருந்து 10% கருவூலத்திற்கு அனுப்பப்பட்டன. அமெரிக்கக் கருவூலத் துறை இதை அறிவித்தவுடன், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் பங்குச் சந்தை விலை வெகுவாகச் சரிந்தது. இதை அடுத்து, இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள், அமெரிக்க அரசின் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தங்களதுத் தனியார் சொத்தானப் ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க அரசு முறைகேடாக எடுத்துக் கொண்டதாகவும், அரசு அந்த நிறுவனங்களைத் தனதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது வெளியிட்ட ஒப்பந்தத்தை அரசுத் தரப்பில் முறித்ததாகவும் குற்றம் சாட்டினர். அமெரிக்க அரசு, ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் வருவாயைப் பயன்படுத்தி, தனது தேசியக் கடனளவை குறைக்க ஆரம்பித்தது.
இன்றையக் காலக்கட்டத்தில், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களின் நிலைமையைச் சரிக்கட்டுவதில் முன்னேற்றம் எதுவும் இல்லை - ரீபப்ளிகன்ஸ் மற்றும் டெமோக்ராட்ஸ் இடையே இந்த இரு நிறுவனங்களின் வருங்காலப் பாதைப் பற்றி இணக்கம் இல்லாததால், இந்த நிலைமை உருவாகியுள்ளது. பொருளாதாரச் சுதந்திரச் சந்தைப் பழமைவாதிகள், அமெரிக்கா-வின் ஜனாதிபதி டானல்ட் ட்ரம்பின் உதவியுடன், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களை அழித்து, அதற்குப் பதிலாகத் தனியார் நிறுவனங்களை உருவாக்க மிகுந்த முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்த அணுகுமுறை வரலாற்றில் வெற்றிப் பெற்றதில்லை என்றாலும் அது அவர்களைத் தடுப்பதாக இல்லை. இதர ரீபப்ளிகன்ஸும் டெமோக்ராட்ஸும், ஃபான்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் நிறுவனங்களை வெளிப்படையாக ஆதரித்தால், தங்களது அரசியல் வாழ்விற்குச் சமாதிக் கட்டும் என்ற நம்பிக்கையில் மௌனம் சாதிக்கின்றனர். இந்த இரு நிறுவனங்கள் அமெரிக்கா-வின் வீட்டுச் சொந்தக்காரர்களின் பொருளாதார வருங்காலத்திற்கு முக்கியம் என்பதையும் உணர்ந்திருக்கின்றனர். இதனால், முன்னால் செல்லாமலும், பின் வாங்காமலும் ஒரே இடத்திலேயே நிற்கின்றனர். வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வது, அமெரிக்க மக்களின் வாழ்க்கை இலக்கு என்று விற்கப்படுவதால், இந்த இரு நிறுவனங்களின் வருங்கால நிலைமையை முன்னேற்ற, மக்கள் எதிர்ப்பார்ப்பிற்கும் அவர்களது நிஜ வாழ்க்கைக்கும் இருக்கும் வேறுப்பாட்டைக் குறைப்பது முக்கியம். ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிகக் கடினமாக உள்ளது.

No comments: