ஓட்டத்தின் போதை

சுருக்கம்:
ஓட்டத்தைப் பற்றியப் புத்தகங்களைப் படிப்பதை விட அதைப் பற்றியக் கட்டுரைகளைப் படிப்பது எளிது. ஓடுவதற்கு மனதுத் தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதினால் மனது அலைபாய்கிறது. இந்தப் புத்தகத்தில், ஸ்காட் ஜுரெக், உலகின் தலைசிறந்த அல்ட்ரா மராத்தான் போட்டியாளராக ஆனதின் சுயச் சரிதையை எழுதியிருக்கிறார். ஸ்காட் ஜுரெக், பெரும் சித்திரவதையில் தவித்து வெற்றிப் பெற்ற நிறைய ஓட்டப் பந்தயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார் - உதாரணத்திற்கு, பேட்வாட்டர், வெஸ்டெர்ன் ஸ்டேட்ஸ் 100, ஸ்பார்ட்டாத்லான்). அவற்றில், வெற்றிப் பெற்றதைப் பற்றி எழுதுவதோடு, தனது வெற்றிக்கு (ஒரு) முக்கியக் காரணமான மாமிசம், பால் மற்றும் முட்டை அற்றத் தனது சைவ உணவுப் பழக்கங்களையும் விளக்கியிருக்கிறார். ஓட்டப் பந்தயங்களில், அவரது நண்பர் (மற்றும் ஓட்டப் பந்தய வீரர்) டஸ்டி ஓல்ஸென் அவருக்கு ஊக்குவிப்பு (அவர் அளிக்கும் அப்பட்டமான பின்னூட்டத்தைக் கேட்டப் பிறகு, என்னைப் போன்றோர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ந்து ஓடுவதுக் கடினம்) அளித்து உதவுகிறார். புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில், ஓட்டப் பந்தயங்களைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கு ஸ்காட் ஜுரெக் பதில்கள் அளிக்கிறார் (எப்படி ஓடுவது, ஓட்டத்தின் பொழுது ஒழுங்காகச் சுவாசிப்பது, ஓட்டத்தின் வேகம்). மேலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில், ஓடுபவர்களுக்குச் சத்து அளிக்கும் வகையில், மாமிசம், பால் மற்றும் முட்டை அல்லாத உணவுக் குறிப்புகளை அளித்திருக்கிறார். புரத  உணவுச் சத்துப் பற்றி நல்ல விளக்கங்களை அளிக்கிறார். அதே நேரத்தில், ஓடும் பொழுது தீவிரக் காயங்கள் ஏற்பட்டால், அதைக் குணப்படுத்த அவர் கடைப்பிடிக்கும் முறைகள், இன்றைய விஞ்ஞான யோசனைகளுக்கு எதிர்மறையாக இருக்கின்றன. அதைப் படித்தப் பின், விஞ்ஞானிகள் விரக்தியில் புலம்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. புத்தகத்தின் சில இடங்களில் ஸ்காட் ஜுரெக், தினசரி ஓட்ட அட்டவணையைக் கடைப்பிடிக்கத் திணறும் பொழுது, நம் வாழ்க்கையில் அதை போல் நிகழ்வதைச் சிந்தித்து மனதைத் தேற்றிக் கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்பு, எனது ஓட்டங்களின் அனுபவத்தின் மூலம் என் மனதில் உள்ளச் சில உண்மைகளை உறுதிப்படுத்த முடிகிறது - நீண்டத் தூரம் ஓடுவதற்கு, ஆரம்பத்தில் நமது மனதைக் காலியாக வைத்திருக்க வேண்டும். ஓட ஆரம்பித்தப் பிறகு, அந்த ஓட்டத்தின் வலியை மறக்க எவ்வளவுக் கவனச் சிதறல்களை நம்மால் உருவாகிக் கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு ஓட்டம் சுலபமாக இருக்கும் (அதனாலேயோ என்னமோ, நிறைய ஓட்ட வீரர்கள், தங்களதுப் பயிற்சி ஓட்டங்களின் பொழுது, தலையணிப் போட்டுக் கொண்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டே ஓடுகின்றனர் - அது ஆபத்தானது என்று அறிந்த பிறகும் இவ்வாறுச் செய்கின்றனர்). இதைப் படித்து விட்டு, பயிற்சி ஓட்டத்தில் ஆர்வம் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் ஆரம்பித்து ஓடி முடிக்கும் ஓட்டப் பயிற்சியாளர்களை முட்டாள்கள் என்று நினைக்கலாம். ஆனால், அந்த ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் நடுவே நடக்கும் ஓட்டத்தில் தான் அளவுக்கடங்கா மகிழ்ச்சி இருக்கிறது.
அலசல்:
வாழ்க்கையில் எனக்குப் பிடித்த இரண்டும் இந்தப் புத்தகத்தில் பிரதானமாக் இடம் பெற்றிருக்கின்றன - ஓடுவதும் உணவு உட்கொள்வதும்.  உணவு உட்கொள்வதில் எனக்குச் சிறப்புத் திறன் இருந்தாலும், பயிற்சிக்காக ஓடுவதில் அவ்வளவுத் தேர்ச்சிப் பெறவில்லை. பயிற்சிக்காக ஓடுவதன் மூலம், வேறு எந்தச் செயலிலும் கிடைக்காத மன அமைதி எனக்குக் கிடைக்கிறது. மேலும், அதிக அளவில் சாப்பிட்டிருந்தால், அதைச் செரிப்பதற்குப் பயிற்சி ஓட்டம் மிக உதவியாக இருக்கிறது. இந்தியா-வில் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிற்சி ஓட்டம் செய்த பொழுது சைவ உணவு மட்டுமே உட்கொண்டிருந்தேன். சைவ உணவினால் எனதுத் திண்மையோ, வேகமோ (ஊர்ந்துச் செல்லும் வேகம்) பாதிக்கப்படவில்லை. அமெரிக்கா-விற்கு வேலைக்காகச் சென்றப் பின், அங்குள்ளக் கட்டுரைகளைப் படித்து, மாமிசம் உள்ள உணவு, பயிற்சி ஓட்டம் செய்பவர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகத் தோன்றியது. மாமிச உணவு உட்கொண்டு சில வருடங்கள் ஓடியப் பின், பயிற்சி ஓட்டம் ஒரு வேலைப்பளுவாகத் தோன்ற ஆரம்பித்தது. அமெரிக்கா-வில் கிடைக்கும் மாமிச உணவுகளின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதனாலும் அங்குள்ள மாமிசங்கள் நிறையச் செயற்கை ரசாயனங்கள் கலந்திருக்கும் என்பதனாலும், ஓடும் பொழுது, வயிற்றில் ஒருக் கல்லைக் கட்டிக் கொண்டு ஓடுவதுப் போல் இருந்தது. மாமிச உணவை நிறுத்தியப் பின்பு, பயிற்சிக்கு ஓடுவது, இலகுவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
ஓட்டப் பந்தயங்களில், மராத்தான், 26.2 மைல் நீளம் உள்ளது. அதை விடக் கூடத் தூரம் ஓடும் பந்தயங்கள் (100 - 150 மைல்கள் வரை), அல்ட்ரா மராத்தான் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகத்தில், அல்ட்ரா மராத்தான் ஓட்டப் பந்தய வீரர்களின் தீவிரக் காயங்கள், உடம்பிற்கு ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை. உதாரணமாக, நீண்ட நேரம் ஓடுவதால், கால்களின் விரல்களில் கொப்பளங்கள் வந்தால், அதனுடைய அழுத்தத்தைக் குறைக்க, அல்ட்ரா மராத்தான் ஓட்டப் பந்தய வீரர்கள், தங்களது கால் விரல் நகங்களைப் பிய்த்து விடுகின்றனர். நீண்டத் தூரம் ஓட வேண்டும் என்பதால், காட்டுப் பாதைகளிலும் இரவிலும் ஓட வேண்டும். இரவில் ஓட வேண்டும் என்பதால், தங்களுக்கு உறுதுணையாக (ஓட்டக் களைப்பால் இருட்டில் வழி மாறாமல் இருக்கவும் தங்களுடைய உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்) ஒருக் குழுவையும் தங்களுடன் கூட ஓடுவதற்கு நண்பர்களையும் வைத்துக் கொள்ளலாம்.
ஸ்காட் ஜுரெக், அமெரிக்கா-வின் மின்னஸோட்டா மாநிலத்தில், அதன் தலைநகர் மின்னியப்போலிஸ்-இல் இருந்து 150 மைல்களுக்கு அப்பால், 3 குழந்தைகளில் மூத்தவராக வளர்ந்தார். குடும்பம் ஏழ்மையில் இருந்ததனால், அவருடையத் தந்தை, தினமும் ஊதியத்திற்காக இரண்டு வேலைகள் செய்தார் - மாலை வரை குழாய் சரிப் பார்ப்பவராகவும், இரவு நேரத்தில், அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் பராமரிப்பு வேலையாளியாகவும் இருந்தார். ஸ்காட் ஜுரெக், கிராமங்களில் வளர்ந்ததால், அங்கு எளிதில் கிடைக்கும் மாமிசங்களையும் மீன்களையும் உண்டு வாழ்ந்தார். காய்கறிகள் சிறிய அளவில், தொட்டுக் கொண்டுச் சாப்பிடும் அளவில் தான் அவர் உணவில் இருந்தன. அவரதுத் தாயாருக்கு 50 வயது ஆனப் பின்பு, மல்டிபிள் ஸ்க்ளீராஸிஸ் எனும் நரம்புத் தளர்ச்சி வியாதியால் நோய் வாய்ப்பட்டார். அதனால், ஸ்காட் ஜுரெக், வீட்டின், சமையலையும், சுத்தம் செய்வதையும் தான் ஏற்றுக் கொண்டார். 12 வயதாக இருக்கும் பொழுது, அவருக்கு அதிக அளவில் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர்கள் கூறி அதற்கான மருந்துகளைக் கொடுத்தனர். பள்ளிக் கூடத்தில், ஸ்கீயிங்க் அணியில் பங்கெடுத்துக் கொண்டார். அவரது ஸ்கீயிங்க் பயிற்சியாளர் அறிவுரையின் பேரில், ஸ்கீயிங்க் பந்தயங்களுக்குத் தேவையானத் திண்மையை அதிகரிக்கும் பொருட்டு, ஓட ஆரம்பித்தார். எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடினார் - வீட்டிலிருந்து மளிகைக் கடைக்கு மற்றும் வீட்டிலிருந்து தனது வேலைக்கு ஓடினார். ஸ்கீயிங்க் பயிற்சியில், அவர் தேர்ச்சிப் பெற்ற அதே நேரம், அவரதுத் தாயாரின் உடல் நிலை மோசமாகத் தொடங்கியது. மாநில அளவில், இளைய ஸ்கீயிங்க் வீரர்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததால், ஸ்கீயிங்க் கேம்பில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு, சைவ உணவு முறைகளைப் பற்றி முதல் முறையாக அறிந்துக் கொண்டார். உயர்நிலைப் பள்ளியைக் கடந்தவுடன், ஸ்கீயிங்க் போட்டிகளில் கலந்துக் கொள்ளவும், சம்பாதியத்திற்காக உடல் சிகிச்சை நிபுணராகவும் ஆக ஆசைப்பட்டார். ஐவி லீக் எனப்படும் பெருமை வாய்ந்தக் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவரதுக் குடும்பத்தின் பொருளாதார நிலைமையால், அருகில் இருந்தக் கல்லூரியில் உடல் சிகிச்சைப் பாடத் திட்டத்தில் இடம் தேடிக் கொண்டார். கல்லூரியில் படிக்கும் பொழுது, தனதுத் தந்தையுடன் போட்டச் சண்டையில், தனதுப் பெற்றோர்களின் வீட்டை விட்டு வெளியேறினார். அப்பொழுது, அவரது வருங்கால நண்பரான டஸ்டி ஓல்ஸனைச் சந்தித்தார். இருவரும், ஸ்கீயிங்க் பயிற்சிக்காக அதிக நேரம் ஸ்கீயிங்கும், ஓட்டப் பயிற்சியும் செய்தனர். ஸ்கீப் பந்தயத்திற்குத் தேவையான உடல் திண்மையை வளர்ப்பதற்காக ஆரம்பித்த ஓட்டப் பயிற்சி, நாளடைவில், பிரதானப் பயிற்சியானது.  தனதுக் கல்லூரிக்கு அருகில் நடந்த நீண்டத் தூர ஓட்டப் பந்தயங்களில் (மராத்தான்களும், 50 மைல் ஓட்டப் பந்தயங்களும்) கலந்துக் கொண்டு, அவற்றில் வெற்றிப் பெற்றார். அன்று அவரதுக் காதலியாக இருந்த லீயா என்பவரின் ஊந்துதலால், மாமிசத்தை அறவே நிறுத்த முயற்சித்தார். அவ்வாறு செய்யும் எல்லாப் பயிற்சி ஓட்டக்காரர்களைப் போல், தனது ஓட்டத்திற்குத் தேவையான புரதச் சத்து சைவ உணவிலிருந்துக் கிடைக்குமா என்றுக் கவலைப்பட்டார். நாளடைவில், மாமிச உணவில் உள்ளப் புரதச் சத்து, மனித உடம்பிற்குத் தேவையான அளவை விட அதிகமாக இருக்கிறது ('அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பதைப் போல்) என்பதை அறிந்தப் பின்பு, சைவ உணவிற்கு மாறுவது அவருக்குச் சுலபமாகியது. தனது உடல் சிகிச்சை வேலையின் பொழுது, ஆஸ்பத்திரியில், நோய்வாய்ப்பட்ட ஒரு வயதானவர், தனக்கு அந்த ஆஸ்பத்திரி அளித்த மாமிச உணவை வெறுப்போடுச் சாப்பிடுவதைக் கண்டு, மாமிச உணவுச் சாப்பிடுவதைக் கைவிட்டார். மாமிச உணவை நிறுத்தியப் பின், ஓட்டப் பயிற்சிச் செய்வது அவரது உடலுக்குப் பாதகமாக இல்லை. மாமிசம், முட்டை மற்றும் பால் வகைகளை அறவேச் சாப்பிட மாட்டேன் என்றுச் சொன்னாலும், ஓட்டப் பந்தயங்களுக்குச் செல்லும் பொழுது,  அங்கு வேறொன்றும் கிடைக்கவில்லை என்றால், பாலாடைக்கட்டிச் சாப்பிடவும் அவர் தயார் என்றுக் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தில், ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு, நல்ல விதத்தில் உணவுகளை உட்கொள்வது, நல்ல விதத்தில் பயிற்சிச் செய்வது மற்றும் யோகா போன்றவற்றை நன்றாக விளக்கியிருக்கிறார். ஒரு ஓட்டப் பந்தயத்திற்குத் தயாராவதையும், அதை வெற்றிகரமாக ஓடி முடிக்கும் அணுகுமுறையையும் நன்றாக விவரித்திருக்கிறார். ஓட்டப் பயிற்சிச் செய்பவர்களுக்குப் பலன் அளிக்கும் சிலப் புத்தகங்களை (அவரது அனுபவத்தில் அப்புத்தகங்கள் அவரது ஓட்டப் பயிற்சிக்கு உதவியாக இருந்ததனால்) பட்டியலிட்டிருக்கிறார்.
1. ஸ்பான்டேனியஸ் ஹீலிங்க் - ஆண்ட்ரூ வெய்ல்
2. ரன்னிங்க் வித் ஹோல் பாடி - ஜாக் ஹெக்கி
3. பாடி, மைண்ட் ஆண்ட் ஸ்போர்ட் - ஜான் டொய்யார்ட்
4. ரன்னிங்க் வைல்ட்! ஆன் எக்ஸ்ட்ராடினரி அட்வென்ச்சர் ஆஃப் தி ஹ்யூமன் ஸ்பிரிட் - ஜான் அன்னெரினோ
5. ரன்னிங்க் ஆண்ட் பீயிங்க்: தி டோட்டல் எக்ஸ்பீரியன்ஸ் - ஜார்ஜ் ஷீஹன்
6. தி மராத்தன் மாங்க்ஸ் ஆஃப் மவுன்ட் ஹேய் - ஜான் ஸ்டீவென்ஸ்
7. அல்ட்ரா மராத்தான் - ஜேம்ஸ் ஷப்பிரோ
பயிற்சி ஓட்டங்களில் அல்லது ஓட்டப் பந்தயங்களில் நிகழும் தீவிரக் காயங்களை எதிர்கொள்ளும் நடைமுறைக்கேற்ற வழிமுறைகளை விளக்கியிருக்கிறார், அவரது ஓட்டப் பயிற்சியில் காயங்கள் நேர்ந்தால் 4 கட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்:
1. காயத்தை உணர்ந்து அதன் வலியை ஒப்புக்கொள்ள வேண்டும்
2. நிலைமையை மதிப்பீடுச் செய்ய வேண்டும்
3. நிலைமையை மேம்படுத்தக் கூடியச் செயல்களில் இறங்க வேண்டும் - என்னுடைய ஓட்டங்களில், சில முறைக் காயங்கள் பட்டிருக்கிறது. இந்தக் கட்டத்தை ஒருத் தடவையும் தாண்டியதில்லை
4. எதனால் காயம் ஏற்பட்டது, எதற்காகக் காயம் ஏற்பட்டது என்பதை ஒரு ஓரத்திற்குத் தள்ளி வைத்து விட்டு, அடி மேல் அடி வைத்து ஓடுவதில் கவனம் செலுத்த வேண்டும்
நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சிச் செய்பவர் என்பதனால், அவரது ஓட்டப் பயிற்சித் திட்டங்கள் சில சமயங்களில் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றன. ஆனால், அவ்வாறுப் பயிற்சி செய்வது, அல்ட்ரா மராத்தான் ஓட்டப் பந்தயம் ஓடுபவர்களுக்குச் சகஜமாக இருக்கிறது. தனது நண்பர்களில், அல்ட்ரா மராத்தான் பந்தயத்தில் ஓடுபவர்கள் சிலர் சண்டைச் சச்சரவுகளினாலோ, இறப்பினாலோ இழந்திருப்பதை, சுய விழிப்புணர்வோடு ஆராய்ந்திருக்கிறார். ஒருச் செயலில் குறியாக வைத்துச் செயல்படுபவர்கள் (மற்றும் குடிப் போதையிலிருந்து மீண்டவர்கள்) அதிக அளவில் அல்ட்ரா மராத்தான் ஓட்டப் பந்தயங்களில் இருப்பதுப் பற்றி அலசி ஆராய்கிறார். நீண்ட தூரம் ஓடுவதனால், அந்த ஓட்டமே மனித உடம்பிற்கு ஒரு போதைப் பொருளாக மாறி விட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள், எலிகளில் செய்தச் சோதனைகளின் மூலம் எச்சரித்திருக்கின்றனர்.
அவரது அல்ட்ரா மராத்தான் ஓட்டப் பந்தயப் புகழின் காரணமாக, மெக்ஸிகோ நாட்டில் வாழும் தரஹுமாரா இந்தியர்களின் மேற்கத்தியப் பிரதிநிதியான கபயோ ப்ளாங்கோ (வெள்ளைக் குதிரை/மிக்கா ட்ரூ) அவரை அங்கு வருமாறு அழைக்கிறார். தனது ஓட்டப் பந்தய ஆரம்பக் காலத்தில் ஏஞ்சலஸ் க்ரெஸ்ட் 100 அல்ட்ரா மராத்தான் போட்டியில் ஓடிய பொழுது, தரஹுமாரா இந்திய இனத்தினரை முதலில் ஸ்காட் ஜுரெக் சந்தித்தார். அந்த இனத்தினர், நீண்டத் தூரங்கள், மேற்கத்திய உலகில் அனைவரும் அதி நவீனக் காலணிகளை அணிந்து ஓடுவதற்குப் (இந்தக் காலணிகள் ஓடுபவர்களின் கால்களைப் பதம் பார்க்கின்றதேத் தவிர, ஓடுவதற்கு உகந்தவை அல்ல)  பதிலாக, வெறும் செருப்புகளை அணிந்து ஓடுகின்றனர். இதனை, க்ரிஸ்டோஃபர் மக்டூகல் என்ற ஆசிரியர் தனது பார்ன் டு ரன் என்றப் புத்தகத்தில் வெகு விமரிசையாக விவரித்திருக்கிறார். க்ரிஸ்டோஃபர் மக்டுகல் கூறுவதுப் போல், ஸ்காட் ஜுரெக், தரஹூமாரா இந்திய இனத்தவருக்கு மனிதர்களுக்கு அப்பாற்பட்ட திண்மை இருக்கிறது என்பதை  ஒப்புக் கொள்ளவில்லை. ஸ்காட் ஜுரெக்கைப் பொறுத்தவரை, தரஹூமாரா இந்திய இனத்தினர், ஓடும் பொழுதுத் தங்களது உடம்புகளை மிகுந்தத் திறனோடுப் பயன்படுத்துகின்றனர் என்றுக் கூறுகிறார். க்ரிஸ்டோஃபர் மக்டுகலின் புத்தகம் வெளி வந்தப் பிறகு, ஓட்டப் பயிற்சிச் செய்பவர்கள், தரஹூமாரா இந்திய இனத்தவரைப் போல், வெறும் காலில் ஓட முயற்சிச் செய்தனர். பயிற்சி ஓட்டத்தில் எப்பொழுதும் நடப்பது போல், வெறுங்காலில் ஓடுவது இப்பொழுது வேறுத் திசை மாறி, விலை மிகுந்தச் செருப்புகளை விற்கும் நிறுவனங்களுக்கு வருவாய் அளிக்கப் பயன்படுகிறது. அதனால், ஓட்டப் பயிற்சிச் செய்பவர்களுக்குக் கிடைத்தப் பலன் மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
பார்ன் டு ரன் - க்ரிஸ்டோஃபர் மக்டுகல்
தி லூர் ஆஃப் லாங்க் டிஸ்டன்ஸஸ்: வை வி ரன் - ராபின் ஹார்வி
வாட் ஐ டாக் அபௌட் வென் ஐ டாக் அபௌட் ரன்னிங்க்: அ மெமாய்ர் - ஹாருக்கி முராக்காமி

No comments: