படித்தால் மட்டும் போதுமா

சுருக்கம்:
அமெரிக்கா-வில் எம்.பி.ஏ பட்டப் படிப்பில் நுழைவதற்கு முன் மிகுந்தத் தயக்கம் இருந்தது. அதை வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்றக் கேள்வி எழுந்தது. அதைக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகங்கள், கணிதம் மற்றும் அறிவியலில் திறமைத் தேவை என்று வலியுறுத்தின. அந்த இருப் பாடங்களின் அடிப்படையில் பாடத் திட்டங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை, எம்.பி.ஏ பட்டப் படிப்புக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் ஊக்குவித்தன. எம்.பி.ஏ பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டப் பிறகு, அதன் கடினத்தை அளவிற்கு அதிகமாக எடைப் போட்டதாகத் தோன்றியது. எம்.பி.ஏ பட்டப் படிப்பை முடித்தப் பிறகுத் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். அதனால், எம்.பி.ஏ பட்டப்படிப்பின் மேல் இருந்த மதிப்பு அறவே அழிந்தது. எம்.பி.ஏ பட்டம் மீது இருந்த ஏமாற்றத்தை, பலவித நொண்டிக் காரணங்கள் கூறி என்னை நானேத் தேற்றிக் கொண்டு விட்டேன். எம்.பி.ஏ பட்டப் படிப்பின் பாடத்திட்டம், மிகவும் எளிதாக இருப்பது, வகுப்புகளில் படிக்க உட்கார்ந்தவுடன் தான் தெளிவாக உணர முடிகிறது. எம்.பி.ஏ பட்டப்படிப்பில் கற்றுக் கொடுக்கப்படும் வணிக மேலாண்மைத் திறனின் வரலாற்றை இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் விவரித்திருக்கிறார். எனது எம்.பி.ஏ பட்டப் படிப்பின் பொழுதுக் கற்றுக் கொண்டப் பல வணிக மேலாண்மை பாடப்புத்தகங்களின் ஆசிரியர்கள் செய்தத் தவறுகளை இந்தப் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. எம்.பி.ஏ பட்டப்படிப்பு ஒரு சில வகைகளில் மாணவர்களுக்கு உதவுகின்றது. நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பும் பொறுப்புடையவர்களை எம்.பி.ஏ பட்டப்படிப்பின் மூலம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பல நிறுவனங்கள் எம்.பி.ஏ பட்டப்படிப்பு ஒருவரின் வேலைப் பார்க்கும் திறனை எடைப் போட உதவியாக இருக்கும் என்று நம்புவதால், அவற்றில் வேலைக் கிடைக்க இந்தப் பட்டப்படிப்பு உதவுகிறது. பிரபலமான எம்.பி.ஏ பட்டப்படிப்பு அளிக்கும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிப்பதன் மூலம் அவற்றின் பிரபலம் மாணவர்களின் வருங்காலத்திற்கு ஏதுவாக இருக்கிறது. எம்.பி.ஏ பட்டப்படிப்பின் மூலம், வணிக மேலாண்மையில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக மொழியைக் கற்றுக் கொள்ள முடிகிறது. சக மாணவர்களுடன் கலந்துப் பழகும் வாய்ப்பு, எம்.பி.ஏ பட்டப் படிப்பின் மிக முக்கியப் பலனாக் இருக்கிறது. அந்தப் பலன்கள் மற்ற வழிகளில் கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்தால், எம்.பி.ஏ பட்டப்படிப்பைக் கைவிடுவது நல்லது. வாழ்க்கையில் முன்னேறுவதைக் கொள்கையாகக் கொண்ட அதிகப்பட்ச மக்களுக்கு, எம்.பி.ஏ பட்டப்படிப்பு, பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யும் முயற்சியாக அமைகின்றது.
வணிக மேலாண்மைத் திறனை ஒருத் தொழிலாகக் கருதும் அணுகுமுறையை இந்தப் புத்தகம் அலசி ஆராய்கிறது.  அந்தத் திறனை  மாணவர்களுக்குப் பயன்படும் தொழில் நுட்பமாக பல்கலைக்கழகங்களும் ஊக்குவிக்கின்றன. மாணவர்கள், அதைக் கற்றுக் கொண்டு, வாடிக்கையாள நிறுவனங்களின் நிலைமையை மேம்படுத்துவதுடன், தங்களதுச் செல்வச் செழிப்பையும் அதிகரித்துக் கொள்கிறார்கள். வணிக மேலாண்மைத் திறனைப் பற்றியக் கல்வி, அரசியல் மற்றும் தார்மீக ரீதியில் உள்ளப் பிரச்சினைகளைக் கையாள்வதால், தத்துவத்தை அடிப்படையாகக் கொள்வது வெகுவாகப் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் நடுத்தட்டு மேலாளர், அறிவியல் மற்றும் கணிதம் அடங்கியப் பாடத்திட்டத்திற்குப் பதிலாகத் தத்துவப் பாடத்திட்டத்தைக் கற்றுக் கொள்வதும் பொருத்தமாக இருக்கும். வணிக மேலாண்மைத் திறனைக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகங்களில் ஒரேயடியாக அறிவியலையும் கணிதத்தையும் அகற்ற வேண்டும் என்றத் தேவை இல்லை. ஆனால், அவற்றின் தலையாய முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். நிச்சயமான நிகழ்வுகளின் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும் நிலைமைகளில், அறிவியல் மற்றும் கணிதம் வெகு உதவியாக இருக்கிறது. வணிக மேலாண்மைத் திறன், மக்களின் பல்வேறு முகங்களைக் கண்காணிப்பதில்(தொழிலாளிகள், தொழிலாளர்கள், இதர அணியினர்) எழும் பிரச்சினைகளுக்கு, தவறானத் தீர்வுகளை அளிக்கின்றன. மற்ற மக்களிடமிருந்து வேலை வாங்குவதால், நிச்சயமற்ற நிகழ்வுகளைச் சமாளிக்க வேண்டியத் திறன் மிகவும் முக்கியம். வணிக மேலாண்மையில் உள்ளவர், தன்னிடம் வரும் தகவல்களை நேர்த்தியாக அலசி அதில் உள்ளக் கருத்துகளைச் சரிப்பட உணர வேண்டும். தங்களுக்குக் கீழ் வேலைப் பார்ப்பவர்களின் வேலையின் நுணுக்கங்களின் மேல் ஒரு கண்ணும், ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனத்தைப் பாதிக்கும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஒரு கண்ணும் வைத்துக் கொள்ளும் திறன் வேண்டும். கல்வி ஞானமும், படிப்பறிவில் ஆர்வமும் அதிகம் இருக்க வேண்டும். மற்ற மக்களிடம் நேர்மையாகவும், கண்ணியத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். இவை, ஒரு நல்ல மனிதருக்கு உரியப் பண்புகள் தானேத் தவிர, எம்.பி.ஏ பட்டப்படிப்பிற்குப் போய் கற்றுக் கொள்ளும் பண்புகள் அல்ல. எம்.பி.ஏ பட்டப் படிப்பு, அறிவியல் மற்றும் கணிதத்தை முதன்மைத் திறன்களாகக் கருதுவதால், நல்லப் பண்பு உடையவர்களைத் திசைமாற்றித் தவறானப் பாதையில் கொண்டுச் செல்லவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
அலசல்:
பளிச்சென மிளிரும் பொருட்களை வாங்கியப் பின் வருத்தப்படுவதுப் போல், எம்.பி.ஏ பட்டப் படிப்பு முடிந்தப் பின் தான் தவறை உணர முடிகிறது. சமீபக் காலமாக, எம்.பி.ஏ பட்டப் படிப்பு, அதிகமாகப் பிரபலமாகியுள்ளது. 1968-ஆம் ஆண்டில், அமெரிக்கா-வில் உள்ளப் பல்கலைக்கழகங்கள் மொத்தம் 18,000 வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டங்கள் அளித்தன. 2008-ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை, 140,000-ஆக உயர்ந்தது. வணிக மேலாண்மை ஆலோசனை அளிக்கும் துறையில் இருப்பவர்கள் ஏற்கனவே அறிந்தது போல், எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்தவர்களின் செயல்திறன் அந்தப் பட்டப்படிப்பு இல்லாதவர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. வணிக மேலாண்மைப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியிடப்படும் ஆராய்ச்சிகள், வணிக நிறுவனங்களுக்கு உதவியளிப்பதாக இல்லை. வணிக மேலாண்மைக் கல்வி, அறிவியல் மற்றும் கணிதத்தை முதன்மையாகக் கருதினாலும், அந்த இருத் துறைகளும் எதிர்ப்பார்க்கும் சோதனைக் கட்டுப்பாடுகளும் தெளிவானச் செயல்பாடுகளும் இல்லாததால், உருப்படாத யோசனைகளை அழகுப்படுத்தி, மாணவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விற்கும் பாடமாகப் பெயர் பெற்றிருக்கிறது. இன்றையக் காலத்தில் பேரும் புகழும் நிறைந்த வணிக மேலாண்மை நிபுணர்களான டாம் பீட்டர்ஸ் மற்றும் ஜிம் காலின்ஸ் போன்றோரும் இதில் அடங்குவர். பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியிடப்படும் பாடப்புத்தகங்கள், பிரபலமான நடையில் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை விடக் குறைந்த அளவிலேயே விற்கின்றன. மேலும், இந்தப் புத்தகங்கள், பாடப் புத்தகங்களில் கற்றுக் கொடுக்கப்படும் விஷயங்களுக்கு எதிர்மாறாக இருக்கின்றன. அறிவியல் மற்றும் கணிதத் துறைகளில், பாடப்புத்தகங்களில் விளக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, பிரபலப் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. பிரபல வணிக மேலாண்மை எழுத்தாளர்கள், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியிடப்படும் ஆராய்ச்சிகளை மதிக்காமல், இறந்துப் போன ஆசிரியர்களான ஃப்ரெட்ரிக் வின்ஸ்லோ டேய்லர், எல்டன் மேயோ போன்றோரை மட்டுமே மதிக்கின்றனர்.
வணிக மேலாண்மை ஆலோசகர்கள், தங்களதுத் தொழில் அறிவியலைச் சார்ந்து இருப்பதாகக் கருதுகின்றனர். நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்களதுத் திறனை விற்கின்றனர். இவர்கள், தங்களுக்கென்று ஒரு உடுப்பு நெறி வகுத்துக் கொண்டு அதனைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதுப் பண்டையக் காலத்தில் அரசர்களைச் சுற்றி வலம் வந்த உயர்சாதி மக்களை ஒத்து இருக்கிறது. இவர்கள் அளிக்கும் வணிக ஆலோசனை, கீழே உள்ளதுப் போல் படிப்படியாக அளிக்கப்படுகிறது:

மார்கெட்டிங்க் - நிறுவனங்களுக்கு, அதிகத் தள்ளுப்படியில் தங்களுடையச் சேவைகளை அளிக்கின்றனர்
டையக்னாஸிஸ் - நிறுவனத்தின் உடல் நலத்தை, அச்சுறுத்தும் வகையில் விவரிக்கின்றனர். அந்த நிறுவனத்தின் மேல்தட்டு அதிகாரிகள் அறண்டவுடன், அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் ஆலோசகரக்ள் தீர்ப்பளிக்கின்றனர். இந்தத் தீர்வுகள், நீண்ட நாளைக்கு ஆலோசகர்களுக்குக் ஊதிய வருவாயை அளிக்கும் குறிக்கோளோடுக் கொடுக்கப்படுகின்றன.
இம்ப்ளிமென்ட்டேஷன் - அந்த நிறுவனத்தின் பிரதானத் துறையில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு, அவற்றின் நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்வி மேல் கேள்விக் கேட்கின்றனர். அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள், கேள்விகளுக்குப் பதில் தேடும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் பொழுது, ஆலோசகர்கள் அந்தத் துறையில் மேலும் ஊடுருவிக் கொள்கின்றனர்.
ஃபாலோ ஆன்ஸ் - நிறுவனத்தில் உள்ள மற்றத் துறைகளில் இருக்கும் ஆலோசனை வருவாய் வாய்ப்புகளைக் கண்டுப்பிடித்து, அவற்றையும் தங்கள் கட்டிற்குள் கொண்டு வருகின்றனர்.
ப்ரேக் அப் - சில வருடங்கள் கழிந்தப் பின், நிறுவனத்தில் உள்ளவர்கள், ஆலோசகர்களைக் கண்டுச் சலிப்படைகின்றனர். இது, இந்தத் திட்டத்தின் முடிவுக் காலத்தைத் தெளிவாக்குகிறது. ஆலோசகர்களில் சிலர், பணத்தாசையினால் தங்களுக்கு உணவளிக்கும் கையைக் கடிப்பதுப் போல் அதே நிறுவனங்களுடன் மோதுகின்றனர்.

தாராள மனப்பான்மை உடைய நிறுவனத்திற்கு ஆலோசனைச் செய்யக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது அணியில் புதிதாகச் சேர்ந்தவர்கள் மற்றும் வேலைத் திறன் குறைவாக உள்ளவர்களை அந்த நிறுவனத்தில் ஆலோசனைச் செய்ய வேலையமர்த்துகின்றனர். சிறிதாக இருக்கும் நிறுவனங்களில் சுவாரஸ்யமான மற்றும் கடினமானப் பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றிற்குத் தீர்வுக் காண மிக அதிகமான முயற்சிகள் தேவைப்படும் என்பதால், ஆலோசகர்கள், அந்த நிறுவனங்களைத் தவிர்க்கின்றனர். பெரிய நிறுவனங்களில் வேலைச் செய்வதன் மூலம், அந்த நிறுவனத்தின் நான்குச் சுவர்களுக்குள் இருந்துக் கொண்டு, தொழில் ஞானத்தை, ஆலோசகர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது. இவ்வாறுச் செய்வதன் மூலம், அந்த நிறுவனத்தில் வேலைச் செய்பவர்களைக் காட்டிலும் அதிக ஊதியத்தைச் சம்பாதிக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு நிறுவனத்திற்கும் வணிக மேலாண்மை ஆலோசகர்களுக்கும் இடையே உள்ள உறவு, ஒரு வைரஸிற்கும் அது வாழும் மனித உடம்பிற்கும் இடையே உள்ள உறவிற்குச் சமானமாக இருக்கிறது. வைரஸ் (வணிக மேலாண்மை ஆலோசகர்), வார்த்தை ஜாலத்தினால், மனித உடம்பிற்குள் (பிரச்சினைகளில் ஆழ்ந்திருக்கும் நிறுவனம்) நுழைகிறது. வைரஸ், மனித உடம்பின் பல்வேறு நிர்வாகச் செயல்களைக் கற்றுக் கொள்கிறது. நாளடைவில், வைரஸ், மனித உடம்பிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கின்றது. மனித உடம்பு, சோம்பேறித்தனத்தாலோ உடல் நலக் கேட்டினாலோ, தான் செய்ய வேண்டிய வேலைகளை, வைரஸிடம் தள்ளி விடுகிறது. மனித உடம்பிற்குள் நன்றாகப் பரவியப் பின், வைரஸ் கொண்டு வரும் தரக்குறைவான ஆலோசகர்களையும் எதிர்க்க முடியாமல் மனித உடம்புத் திணறுகிறது. மனித உடம்பிலிருந்து தனக்கு வேண்டிய அனைத்தையும் எடுத்துக் கொண்டப் பின், வைரஸ் மனித உடம்பை அழித்து விட்டு (அந்த நிறுவனம் இழுத்து மூடப்படுவதாலோ ஆலோசனைக்குரியக் கெடு முடிவடைவதாலோ) பாதுகாப்பற்ற மற்ற மனித உடம்புகளுக்குத் தாவுகிறது. வணிக மேலாண்மைத் துறையில் பிரபலமாவதற்கு, படிப்படியான அறிவுரைகளையும் ஆசிரியர் (கேலியாக) சித்தரித்திருக்கிறார்:

உங்களுடையப் பேச்சைக் கேட்க வந்திருக்கும் நடுத்தட்டு மேலாளர்களை அச்சுறுத்தும் அளவு உங்களுடையப் பேச்சு அமைய வேண்டும்
அவர்கள் வேலைப் பார்க்கும் நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பின் பலவீனங்களைப் பட்டியலிடுங்கள்
அவர்கள் கவலையில் மூழ்கி இருக்கும் பொழுது, நல்ல செய்தி இருக்கிறது என்று அவர்களைத் தேற்றுங்கள்
அவர்களது நிறுவனங்களை ஒரேயடியாக மாற்றி அவற்றை வெற்றிப் பாதையில் கொண்டுச் செல்ல முடியும் என்று வாக்குறுதிச் செய்யுங்கள்
உங்களுடைய வெற்றியை எடுத்துக்காட்டி, உங்களுடையக் கொள்கைகளினால் தான் நிகழ்ந்தது என்ரு அடித்துக் கூறுங்கள் - உங்களுடைய வெற்றி நீங்கள் எழுதிய வணிகப் புத்தகங்களினால் தான் நிகழ்ந்தது என்ற உண்மையைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

வணிக மேலாண்மைத் துறை அமெரிக்கா-வில் பிறந்ததனால், அறிவியலைப் பற்றிய அந்த நாட்டின் கருத்துகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அறிவியலின் பயனால் கிடைக்கும் பல விதச் சொகுசுகளை அமெரிக்கா-வின் மக்கள் அனுபவித்தாலும், அந்த அறிவியலில் பயன்படுத்தப்படும் செயல்முறைகளையும் அவற்றின் விளைவுகளையும் அவர்கள் ரசிப்பதில்லை. அறிவியலைச் சார்ந்து இருப்பதால், வணிக மேலாண்மையின் கருத்துகள், பொருளாதார ஏற்றத்தாழ்வின் உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கின்றன. அதை மறந்து, அந்தக் கருத்துகள் தொழிலாளர்களின் நன்மைக்காகச் செயல்படுத்தப்படுகின்றன என்று அதனைக் கடைப்பிடிப்பவர்கள் நம்புகின்றனர். அமெரிக்க நாட்டை உருவாக்கியத் தலைவர்களின் கணிப்பில், பொருளாதாரச் சக்தி அதிகமாக உள்ளவர்கள், அந்தச் சக்தியைத் தீய விதத்தில் பயன்படுத்துவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையினால், அந்தத் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக, அமெரிக்கா-வின் மூன்று அரசியல் கிளைகளுக்கிடையே அதிகாரத்தைப் பங்குப் பிரித்தனர். இன்றையக் காலத்தில், அமெரிக்கா-வின் அரசியல் அமைப்புகள் ஒன்றை ஒன்று முரணாகச் செயல்படுவது இந்தக் காரணத்தினால் தான். வணிக மேலாண்மைத் திறன், வர்த்தக நிறுவனங்களில் இருக்கும் பலப் பிரச்சினைகளுக்குப் பொதுப்படையில் தீர்வுக் காண முடியும் என்பது நடக்காதக் காரியம். அதனால், வர்த்தக நிறுவனங்களில் இருக்கும் குறிப்பிட்டப் பிரச்சினைகளுக்கு அதனால் தீர்வுக் காண முடியும்.
வணிக மேலாண்மையின் தந்தை என்று ஃப்ரெட்ரிக் வின்ஸ்லோ டெய்லர் அழைக்கப்படுகிறார். அவரதுக் காலத்திற்கு முன்னால், வணிக மேலாண்மைப் பெரும்பாலும் கணக்கு எடுப்பதில் (யார் எந்த வேலையைச் செய்தார்கள்) குறியாக இருந்தது. அவருடையக் கண்டுப்பிடிப்புகளுக்குப் பின், வேலைப் பார்ப்பவர்களின் பொறுப்புகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றக் கேள்விக்குப் பதிலைத் தேடியது. வணிக மேலாண்மையில் பகுப்பாய்வு அணுகுமுறையைக் கொண்டு வந்தததில் பிரதானப் பங்கு இவருக்கு உண்டு. பெத்லெஹேம் ஸ்டீல் நிறுவனத்தில் உழைக்கும் தொழிலாளர்களிடம் நேரம் மற்றும் இயக்க ஆராய்ச்சியை நடத்தியதன் மூலம், அந்தத் தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, அங்குக் கடைப்பிடிக்கப்படும் செயல்முறைகளின் வெளியீட்டு அதிகரிப்பு, தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கருத்து வேறுப்பாட்டைக் குறைக்கும் வழிமுறைகள் மற்றும் திட்டங்களைப் பயன்படுத்தும் அணுகுமுறைப் போன்றவற்றை உருவாக்கினார். ஒரு நிறுவனத்தின் பொருட்களின் விலை மதிப்பை அளவிடும் கணக்கியல் முறைகளையும் உருவாக்கினார்.  அவரதுக் கருத்துகளைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்குத், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு மேலாளர் வர்க்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று நம்பினார். வணிக மேலாண்மைப் பயிற்சிக் காலங்காலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது - இந்தியா-வில் கட்டப்பட்டிருக்கும் கோவில்கள், அதற்கு உதாரணமாகத் திகழ்கின்றன. டெய்லரின் வணிக மேலாண்மைக் கோட்பாடுகள், பெத்லெஹேம் ஸ்டீல் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கவனித்ததில் இருந்து வரையறுக்கப்பட்டிருந்தாலும், மற்றப் பலத் தொழில்களுக்கும் பயன்படும் என்று நம்பினார். அவரது யோசனைகளை முதலில் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் வரவேற்றன - தொழில் வாழ்க்கையில் அறிவியல் நிறைந்த அணுகுமுறை தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் அளிப்பதோடு, சமூக நீதியையும் மேம்படுத்தும் என்று நம்பினர். 1914-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'ப்ரின்ஸிப்பிள்ஸ் ஆஃப் ஸைன்டிஃபிக் மேனேஜ்மெண்ட்' புத்தகம், அவரதுப் புகழை உலகெங்கும் பரவச் செய்தது. கம்யூனிஸக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த ருஷ்யா நாட்டிலும், 'டெய்லர் ஸிஸ்டம்' வெகுப் பிரபலமாக இருந்தது. அதனை அடிப்படையாக வைத்து, அந்நாட்டின் 5 வருட திட்டம் உருவாக்கப்பட்டது. ஹார்வார்ட் மற்றும் மதிப்பு வாய்ந்த மற்றப் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் வணிக மேலாண்மைத் திறன் பற்றியப் பாடப்படிப்புத் திட்டத்தை உருவாக்கியதிலும் டெய்லருக்கு அதிகப் பங்கு உண்டு. இன்றையக் கால ஆராய்ச்சியாளர்கள், டெய்லர் பெத்லெஹேம் ஸ்டீல் கம்பெனியில் தனதுச் சோதனைகளின் பயன்களை மிகைப்படுத்திக் காட்டியது மட்டுமல்லாமல், தவறானச் செயல்முறைகளையும் கடைப்பிடித்தார் என்றுக் குற்றம் சாட்டுகின்றனர். அறிவியலில் நிகழ்த்தப்படும் சோதனைகளின் செயல்முறையை மற்றவர்கள் கடைப்பிடித்தால், அவர்களுக்கும் அதே முடிவு வர வேண்டும்(இதனால் தான் ராமர் பிள்ளையின் தண்ணீரில் இருந்து எரிப்பொருள் உருவாக்கும் சோதனைத் தோல்வியடைந்தது). டெய்லர் தான் செய்தச் சோதனைகளின் தகவல்களை வெளிப்படுத்தாமலும் அவரதுச் சோதனைகளின் தீர்வுகள் நல்லதாக வர வேண்டும் என்ற ஆசையில் அவற்றில் பலத் திருத்தங்களைச் செய்ததாலும், அவருக்குக் கிட்டிய முடிவுகள் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போயின. பெத்லெஹேம் ஸ்டீல் கம்பெனி, சில நாட்களுக்குப் பின், டெய்லர் உருவாக்கியத் திட்டங்கள் அவர் எதிர்ப்பார்த்ததுப் போல் செயல்படவில்லை என்பதால், அந்தத் திட்டங்களை நிறுத்தியது. அதற்குள், டெய்லர், பெத்லெஹேம் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து, ஒரு லட்சம் டாலர் (இன்றையக் கால டாலர் மதிப்பில், 25 லட்சம்) ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார். டெய்லரின் சோதனைகளை முறைப்படிச் செய்ததை அறிவியலில் நிகழ்த்தப்படும் சோதனைகளைப் போன்றது என்றுத் தவறாகக் கருதினார். முறைப்படிச் செய்யப்படும் சோதனைகளில், கருதுகோள்கள், அந்தச் சோதனை முடிவுகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டு மதிப்பீடுச் செய்யப்படுகின்றன. ஆனால், அறிவியலில் கடைப்பிடிப்பதுப் போல், அந்தச் சோதனையின் முடிவைச் சரிபார்க்க வேண்டியக் கட்டாயம் இல்லை. டெய்லரின் வணிக மேலாண்மைக் கருத்துகளில் பலத் தவறுகள் இருந்தன:

செயல்திறனின் முதன்மை - வணிக மேலாண்மை, இதர இலக்குகளைக் (தரம், லாபம்) காட்டிலும் செயல்திறனை பிரதானக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டது
ஒற்றை அளப்பீடின் முதன்மை - டெய்லர், வணிக மேலாண்மை, அறிவியலைச் சார்ந்தப் படிப்பு என்று அடித்துக் கூறியதால், அதன் வெற்றியைக் கணிக்க ஒரு அளப்பீடு மட்டும் போதும் என்று நம்பினார். இன்றையக் காலக்கட்டத்தில், அந்த அளப்பீடு பங்குதாரர்களுக்குக் கிட்டும் மதிப்பாக இருக்கிறது. எல்லாத் தகவல்களும் வெளியிடப்பட்டு நிச்சயமாக  நிகழும் என்ற நம்பிக்கை இருக்கும் சூழ்நிலைகளில், ஒரு அளப்பீடைப் பயன்படுத்துவது உசிதமாகும். வர்த்தக உலகில் அந்தச் சூழ்நிலைக் கிடைக்காதப் பட்சத்தில், நிறுவனங்கள், ஒரு அளப்பீடை அடைவதற்காக, மற்ற அளப்பீடுகளை (தரம், வாடிக்கையாளருக்குச் செய்யப்படும் சேவை) புறக்கணிக்கின்றன.
அளவிடக் கூடிய மதிப்பீடுகளின் முதன்மை - டெய்லர் பெத்லெஹேம் ஸ்டீல் நிறுவனத்தில் தான் நிகழ்த்திய நேரம் மற்றும் இயக்கத்தைக் கணிக்கும் சோதனைகளின் வெற்றியால், நிறுவனங்களின் வெற்றிக்குத் தரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளை விட அளவிடக்கூடிய மதிப்பீடுகளே முக்கியம் என்றுக் கருதினார்.

தனது வணிக மேலாண்மைக் கருத்துகளைச் செயல்படுத்துவதற்கு, நிறுவனங்களில் மேலாளர் வர்க்கம் ஒன்று வேண்டும் என்று டெய்லர் எதிர்பார்த்தார். அந்த வர்க்கம், நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதற்கு உகந்த  உக்திகளைப் பயன்படுத்தியும் தொழிலாளிகளின் வேலைப் பளுவையும் கண்காணிக்கவும் முற்பட வேண்டும் என்று நம்பினார். இந்த அணுகுமுறை, கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ளத் தலைவர்களின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. திட்டம் தீட்டுபவர்களும் (மேலாளர்கள்) அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களும் (தொழிலாளிகள்) இரு வேறுக் குழுக்களாக இருக்க வேண்டும் என்று நம்பினார். இதனைத் தங்கள் தாரக மந்திரமாகக் கருதிய அமெரிக்கா-வின் நிறுவனங்கள், 1980-களில் ஜப்பான்-இல் இருந்த நிறுவனங்களுடன் நடந்த வணிகப் போட்டியில் பின்னடைவுகளைச் சந்தித்தன. ஜப்பான்-இல் உள்ளக் கம்பெனிகளில் மேலாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் செயற்கையானப் பிரிவு இயற்றப்படவில்லை. அமெரிக்கா-வில் முதல் முதலில் அதிக அளவில் கார்களை வெற்றிகரமாக உற்பத்திச் செய்த ஹென்றி ஃபோர்ட், டெய்லருடையக் கருத்துகளைத் தன்னுடையத் தொழிற்சாலைகளில் செயல்படுத்தினார். தொழிற்சங்கங்கள் முதலில் டெய்லரின் வணிக மேலாண்மைக் கருத்துகளை வெகுவாக ஆதரித்தாலும், அந்தக் கருத்துகள், தொழிலாளிகளின் உரிமைகளைப் பறிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்ததை உணர்ந்து,எதிர் முகாமிற்குத் தாவினர். டெய்லர், கேபிடலிஸம் சமநிலையில் இல்லாமல், பல மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டு வருவதால், அது சமூகத்திற்கு நன்மை தராது என்று நம்பினார். அவர் உலகில் உள்ளப் பல அரசியல் தலைவர்களிடத்தில் தனக்கிருந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னுடையக் கருத்துகளை மேலும் பரப்பினார். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, வல்லுநர்களின் கையில்  கொடுத்து விட வேண்டும் என்று நம்பினார். இதனை அடுத்து, கம்யூனிஸ்ட் நாடுகளும் சோஷியலிஸ்ட் நாடுகளும் 5 வருடத் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தனர்.
டெய்லரின் காலத்திற்குப் பிறகு, எல்டன் மேயோ என்பவர் வணிக மேலாண்மையின் கருத்துகளை முன்னெடுத்துச் சென்றார். அவர் ஆஸ்திரேலியா-வில் பிறந்து, அமெரிக்கா-வில் பேரும் புகழும் பெற்றவர். தொழிலாளர்கள் இடையே இருக்கும் அதிருப்தி, அவர்கள் வேலைச் செய்யும் இடங்களில் உள்ள ஆபத்தான சூழலினாலும், குறைவான ஊதியத்தினாலும் அன்றி தொழிலாளர்களின் மனதளவில் உள்ளக் குறைகளை நிறுவனங்கள் பூர்த்திச் செய்யாததால் நிகழ்கின்றன என்றுக் கூறினார். தொழில்துறை உளவியல் என்றப் பெயரில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு இவருடையப் பங்கு அதிகமானது. நிறுவனங்களிடம், தன்னுடையக் கருத்துகளைக் கடைப்பிடித்தால் அவர்களுடையத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணலாம் என்று வாக்குறுதி அளித்தார். டெய்லரின் கருத்துகள், பெரும்பாலும் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கானத் தீர்வாக விற்கப்பட்டதால், பட்டப்படிப்புக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகங்களில் அந்தக் கருத்துகளைப் போதிக்கும் பாடத்திட்டங்களை உருவாக்குவதுக் கடினமாக இருந்தது. டெய்லர், தனதுக் கருத்துகளை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும் என்று நம்பினாலும், அதற்கேற்றப் பாடத்திட்டங்களை உருவாக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. மேயோவின் தொழில்துறை உளவியல் கருத்துகள், எல்லாத் தொழில்களுக்கும் பொதுப்படையாக அமையும் என்ற நம்பிக்கையினால், பல்கலைக்கழகங்கள், அதனைத் தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதுச் சுலபமாக இருந்தது. மேயோ மற்றும் டெய்லரின் கருத்துகள், அன்றையக் காலக்கட்டத்தில் வெடித்தத் தொழிலாளர் அதிருப்திக்குப்  பதிலளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. மேயோவின் கருத்துகள் பிரபலாமானதை அடுத்து, 1927-ஆம் ஆண்டு வெஸ்டர்ன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஹாத்தார்ன் தொழிற்சாலையில் நிகழ்த்தப்பட்ட ரீலே அசெம்ப்ளிச் சோதனையை அலசி ஆராயும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அந்தச் சோதனைகளின் மூலம், தனதுத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் ஒரே நாளில் பலவாறு மாறுவதன் காரணத்தைக் கண்டுப்பிடிக்க அந்த நிறுவனம் முயற்சிச் செய்தது. அந்தச் சோதனையின் முடிவுகள், தனதுத் தொழில்துறை உளவியலின் கோட்பாடுகளை உண்மையாக்குகின்றன என்று மேயோ கருதினார் - உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்கு, ஒரு அணியில் உள்ள உறுப்பினர்களிடையே இருக்கும் நம்பிக்கைப் பிராதனமானது என்றுக் கூறினார். அந்தச் சோதனையில், உற்பத்தித் திறனை அதிகரிக்க, அதில் பங்கேற்றுக் கொண்டத் தொழிலாளர்களுக்கு (மற்றவர்களைக் காட்டிலும்) அதிக அளவு ஊதியம் அளிக்கப்பட்டதினால், தொழில் திறன் கூடியது என்றக் கருத்தைப் புறக்கணித்தார். இதனை அடுத்து, சந்தோஷமானத் தொழிலாளி நல்லத் தொழிலாளி என்றும், தொழிலாளிகளின் சந்தோஷத்தை அதிகரிக்க அவர்களதுச் சமூக மற்றும் மனதளவுத் தேவைகளைப் (உடல்நலம் மற்றும் ஊதியத் தேவைகளைக் காட்டிலும்) பூர்த்திச் செய்வது முக்கியம் என்றும் நிறுவனத்தின் கலாச்சாரம் அதன் உள்கட்டமைப்பைக் காட்டிலும் முக்கியம் என்றும் கருதினார். ஹாத்தார்ன் தொழிற்சாலையில் நிகழ்த்தப்பட்டச் சோதனைகளில் கிடைத்தத் தீர்வுகள் அவரதுக் கருத்துகளுக்கு ஆதரவாக இல்லை என்பதைப் புறக்கணித்து, தனது தொழில்துறை உளவியல் கருத்துகள் அறிவியல் சோதனைகளின் விளைவால் உருவாக்கப்பட்டவை என்று அடித்துக் கூறினார்.
இன்றையக் காலக்கட்டத்தில், வணிக மேலாண்மைத் துறையில் கொடிக் கட்டிப் பறக்கும் பீட்டர் ட்ரக்கர், கேரி ஹாமெல் மற்றும் டாம் பீட்டர்ஸ் போன்றவர்களும் ஒட்டுமொத்த நிறுவன நடத்தைத் துறையும் மேயோவின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மேயோவிற்கு அடுத்து, செஸ்டர் பார்னார்ட் என்பவர் ஹாத்தார்ன் சோதனைகளை வைத்து, ஒரு நிறுவனத்திற்கு, அதன் பணி அறிக்கைகளும் கலாச்சாரமும் இன்றியமையாதவை என்று வாதாடினார். டக்ளஸ் மெக்க்ரகர் என்பவர் தனது எக்ஸ் கோட்பாடு மற்றும் ஒய் கோட்பாட்டை ஹாத்தார்ன் சோதனைகளில் இருந்து உருவாக்கினார். எக்ஸ் கோட்பாட்டின்படி, தொழிலாளர்கள் சோம்பேறிகளாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் அவர்களைச் சரிக்கட்ட தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஒய் கோட்பாட்டின்படி, தொழிலாளிகள், தங்களுடையச் சந்தோஷத்தை அதிகரிக்கச் சொந்தத்தில் முயற்சிச் செய்வார்கள் என்றும் அந்தச் சந்தோஷத்தை எட்டுவதற்கு வேலையில் சுதந்திரம் அளித்தால் அவர்களதுத் தொழில் திறன் அதிகரிக்கும் என்றும் கூறினார். தொழிலாளர்களிடையே உள்ள நம்பிக்கை அதிகரிப்பதினால், தொழில் திறன் அதிகரிக்கும் என்றக் கருத்து, பண்டையக் கால கிரேக்கத் தத்துவவாதிகள் காலத்தில் இருந்தேத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. தத்துவத்தில் இருக்கும் கருத்துகளை, அறிவியலின் அடிப்படையில் வரையறுக்க முற்படுவதன் மூலம், மேயோ மற்றும் அவரதுச் சீடர்கள் நிச்சயமற்ற நடப்புகளுக்கு நிச்சயமான நடப்புகளைக் கையாளும் தீர்வுகளை அளிக்கின்றனர். மேயோவின் கோட்பாடுகளால், நிறுவனங்கள் தங்களதுத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அளிப்பதற்குப் பதில், அவர்களை மனதளவில் தேற்றும் குறைந்தப்பட்ச நடவடிக்கைகளில் முதலீடுச் செய்கின்றனர்.
வணிக மேலாண்மைத் துறையில், மூலோபாயம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவரின் மதிப்புத் தானாகவே அதிகரிக்கிறது. வர்த்தக உலகில் பரவலாக இருக்கும் நிறுவன உள்கட்டமைப்பு, எம் ஃபார்ம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில், உச்ச நிலையில் உள்ளவர்கள் திட்டமிடுதல், மனித வள ஒதுக்கீடு மற்றும் ஒருங்கிணைத்தல் போன்றப் பொதுப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்குக் கீழ் இருக்கும் துறைகள், குறிப்பிட்டச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன. பெரும்பாலும்,மூலோபாயம் ஒரு நிறுவனத்தின் உச்சத்தில் இருப்பவர்களின் விருப்பப்படி நடப்பதால், வர்த்தக உலகமெங்கும் பரவி உள்ளது. வணிக மேலாண்மை ஆலோசகர்கள், நிறுவனங்களின் உச்சநிலையில் இருக்கும் தலைவர்களிடம் இருந்து ஊதியம் பெறுவதால், மூலோபாயத்தின் பயனை மிகைப்படுத்திக் கூறுகின்றனர். வணிக மேலாண்மைப் பட்டப்படிப்பை வழங்கும் பல்கலைக்கழகங்கள், மூலோபாயத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம், நிறுவனங்களுக்கும் ஆலோசகர்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றனர். மூலோபாயத்தை, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பிரதானமாகக் கருதுவதற்கு மூன்று நிபுணர்களின்  பங்கு அதிகமாக உள்ளது - இகார் அன்ஸாஃப் என்பவர் தனது கார்ப்பரேட் ஸ்ட்ராடெஜி புத்தகத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் மூலோபாயத்தை வரையறுத்தும், அந்த மூலோபாயத்தை உருவாக்கப் பயன்படும் திட்டக் கருவிகளையும் உருவாக்கினார், பாஸ்டன் கன்ஸல்டிங்க் க்ரூப் நிறுவனத்தை நிலைநாட்டிய ப்ரூஸ் ஹெண்டெர்ஸன் என்பவர், இன்று எல்லா மூலோபாய ஆலோசகர்களும் பயன்படுத்தும் எக்ஸ்பிரீயன்ஸ் கர்வ் மற்றும் போர்ட்ஃபோலியோ மேட்ரிக்ஸ் கருவிகளை உருவாக்கினார், மைக்கேல் போர்ட்டர் தனது காம்பெட்டிட்டிவ் ஸ்ட்ராட்டெஜி புத்தகத்தின் மூலம் ஃபைவ் ஃபோர்ஸஸ் ஃப்ரேம்வர்க் கோட்பாட்டை உருவாக்கினார். வேறுச் சில நிபுணர்களும் மூலோபாயத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள் - ஆடம் ப்ரான்டென்பர்கர் மற்றும் பாரி நேல்பஃப் தங்களது கோ-ஆப்பட்டிஷன் கோட்பாட்டின் மூலமும், கேரி ஹேமல் மற்றும் ஸி.கே.ப்ரஹலாத் நிறுவனங்களின் கோர் காம்படன்ஸி கோட்பாட்டின் மூலமும் மூலோபாயத்தின் பிரபலத்தை அதிகரித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் உச்சத்தில் உள்ளவர்கள், மூலோபாயத் திட்டமிடலை அந்த நிறுவனத்திற்கு உசிதமானத் தீர்வைக் கண்டுப்பிடிக்கும் உக்தியாகக் கருதினாலும், அந்தத் திட்டமிடலின் அடிப்படையில் உள்ள அனுமானங்கள் அதை ஒருக் குறிப்பிட்ட மூலோபாயத்தை நோக்கித் தள்ளுகின்றன - பொதுவாக, அந்த நிறுவனத்தின் தலைவர் எந்த மூலோபாயத்தை விரும்புகிறாரோ, அதுவே மூலோபாயத் திட்டமிடலின் முடிவில் தீர்வாக அளிக்கப்படும் - தனது ஊதியத்தை அளிக்கும் நிறுவனத்தின் தலைவரை எதிர்க்கும் அளவு மனோபலம் வணிக மேலாண்மை ஆலோசகர்களுக்குக் கிடையாது. மூலோபாயத் திட்டமிடலின் பரவலினால், நிறுவனங்களில் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஒருப் புதிய அடுக்கு உருவாகியிருக்கிறது. இந்த நடுத்தட்டு மேலாளர்கள், தொழிலாளிகளைக் காட்டிலும் தங்களது நிலைமைப் பாதுகாப்பானது என்றுக் கருதினாலும், நிஜ வாழ்க்கையில் முதலாளிகளின் கையில் இரண்டுக் குழுக்களும் சிக்கிக் கொண்டு வேலையை இழக்கும் வாய்ப்புச் சமமாகவே இருக்கிறது. மூலோபாயத் திட்டங்கள் ஒரு நிறுவனத்தின் பொதுப்படையான வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால் தங்களது ஊதியம் அதிகமாக இருக்க வேண்டும் என்று நடுத்தட்டு மேலாளர்கள் கருதுகின்றனர். தங்களுக்குக் கீழ் வேலைச் செய்பவர்களும் மற்றத் தொழிலாளிகளும் அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமேச் செய்ய முடியும் என்று நம்புகின்றனர்.  தங்களுடைய வேலை அதிக அளவில் மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டி இருக்கிறது என்றும், தங்களுக்குக் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகள் அதிக அளவு சிந்திக்காமல் செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்றும் நம்புகின்றனர்.
மூலோபாயத் திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக நிறுவனங்களில் பங்குதாரர்களின் மதிப்பு குறைந்து இருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மூலோபாயத்தின் அடிப்படைத் திடகாத்திரமாக இல்லாததால், புதிய யோசனைகளை முன்வைத்து, வணிக மேலாண்மை ஆலோசகர்கள் நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கின்றனர். நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு அசாத்தியத் தீர்வுக் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் சில நிறுவனங்கள் அந்த மூலோபாயத்தைச் செயல்படுத்துகின்றன. சிறிய எண்ணிக்கையில் இந்த மூலோபாயச் செயல்பாடுகள் நிகழ்த்தப்படுவதால், அவற்றில் நிகழும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மற்ற எல்லா நிறுவனங்களும் அந்த மூலோபாயத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்கின்றன. அதிக அளவில் நிறுவனங்கள் மூலோபாயத்தைச் செயல்படுத்தும் பொழுது, அந்த மூலோபாயத்தில் இருக்கும் ஓட்டைகள் வெளிவருகின்றன. இதனை அடுத்து, பல நிறுவனங்களுக்கு அந்த மூலோபாயத்தை விற்ற ஆலோசகர்கள், மற்றுமொரு மூலோபாயத்தை விமோசனமாக எண்ணி, அதன் பின் அலைகின்றனர். மூலோபாயத்தின் மூலம், பங்குதாரர்களின் மதிப்பே ஒரு நிறுவனத்திற்குப் பிரதானக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றக் கருத்துப் பரவியிருக்கிறது. வணிக மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் இருக்கும் மாணவர்கள், பங்குதாரர்களின் மதிப்பைக் கூட்டுவதன் மூலம், தங்களதுப் பொறுப்பு முடிவடைகிறது என்ற நம்பிக்கையில், நேர்மை,  நியாயம் போன்றவற்றை ஒதுக்குகின்றனர்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ஃப்ளேவர் ஆஃப் தி மந்த்: வை ஸ்மார்ட் பீப்பிள் ஃபால் ஃபார் ஃபாட்ஸ் - ஜோயெல் பெஸ்ட்
ஒன் மார்க்கெட் அண்டர் காட்: எக்ஸ்ற்றீம் கேபிடலிஸம், மார்க்கெட் பாப்புலிஸம், ஆண்ட் தி எண்ட் ஆஃப் ஈக்கனாமிக் டெமோக்ரஸி - தாமஸ் ஃப்ராங்க்
ஃப்ரம் ஹையர் ஏய்ம்ஸ் டு ஹையர்ட் ஹாண்ட்ஸ்: தி சோஷியல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆஃப் அமெரிக்கன் பிஸினஸ் ஸ்கூல்ஸ் ஆண்ட் தி அன்ஃபுல்ஃபில்ட் ப்ராமிஸ் ஆஃப் மெனெஜ்மென்ட் அஸ் அ ப்ரோஃபெஷன் - ராகேஷ் கூரானா
டேஞ்சரஸ் கம்பெனி: மெனெஜ்மேன்ட் கஸல்டன்ட்ஸ் ஆண்ட் தி பிஸினஸஸ் தெ ஸேவ் ஆண்ட் ரூயின் - ஜேம்ஸ் ஒ ஷே ஆண்ட் சார்லஸ் மாடிகன்

No comments: