பாக்டீரியாவின் ராஜ்யம்

சுருக்கம்:
மனித உடம்பில் இருக்கும் எல்லாப் பாக்டீரியாக்களும் தீமையானவை என்றுக் கருதி இன்றையக் காலத்தில், அவற்றை அடக்கி ஆள,
ரசாயனத்தைப் பயன்படுத்தும் சுகாதார முறைகள் மூலம், மனிதர்கள் உலகைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர் (இதனை, கிருமிகள் மீதானப் போர் என்று வளர்ந்த நாடுகளில் கூறுகின்றனர்). சுகாதார அமைப்புகள் (கழிவு நீர் அமைப்புகள், க்ளோரின் கலக்கப்பட்ட நீர், பதப்படுத்தப்பட்ட உணவு முறைகள், குளிர் சாதன வசதிகள்) பரவலாகப் பயன்படுத்தப்படும் வளர்ந்த நாடுகளில், உடலில் நிகழும் வீக்கத்தினால் தோன்றும் தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் அனைத்து வயதினரையும் பதம் பார்க்கின்றன. இந்த வியாதிகள், வளர்ந்த நாடுகளில் குடியேற்றம் செய்பவர்களிடையே, அவர்கள் அந்த நாடுகளின் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டப் பிறகு பரவுவதால், இவற்றைக் 'குடியுரிமை' நோய்கள் என்று அழைக்கின்றனர். வளர்ந்த வரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்களிடையே, அவர்கள் மண்ணைத் தொட்டு, சுத்தப்படுத்தப்படாதக் குடிநீரைக் குடித்து, மிகச் சிறிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டாலும், மனித உடம்பின் வீக்கத்தினால் ஏற்படும் தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் குறைந்த அளவிலேயே நிகழ்கின்றன. மேலும், நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தியைப் பெரும்பாலானப் பாக்டீரியாக்கள் வளர்த்துக் கொண்டுள்ளன. கிருமிகளைக் கொன்று மக்களுக்கு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் மனித உடம்பில் உள்ள எல்லாப் பாக்டீரியாக்களையும் (நல்ல மற்றும் தீய) அழிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ளக் கால்நடைகளின் உணவில், ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதால், பால், முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்வதன் மூலம், மனித உடம்பிற்குள் அந்த ஆன்டிபயாட்டிக்குகள் வந்து சேர்கின்றன. ஆன்டிபயாட்டிக்குகள் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு, மக்களை அதிக அளவில் கொன்றுக் குவித்தத் தொற்று நோய்கள் இருந்தக் காலத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசிரியர் பரிந்துரைச் செய்யவில்லை. ஆன்டிபயாட்டிக்குகளை நேர்த்தியாகப் பயன்படுத்துவதற்கு, அவை மனித உடம்பில் உள்ளப் பாக்டீரியாக்களுடன் தொடர்புக் கொள்ளும் வழிகளை ஆராயப் பரிந்துரைச் செய்கிறார். மேலும், பாக்டீரியாக்களால் நிகழும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க, சிலப் பழைய முறைகளையும் (ஒழுங்காகத் தடுப்பூசிப் போடுவது), சிலப் புதிய முறைகளையும் (மரபணு நுட்பங்கள், மருந்துக் கண்டுப்பிடிப்புகள்) அலசி ஆராய்கிறார்.
அலசல்:
 உலகில் தொற்று நோய்கள் நெடுங்காலமாகப் பரவி இருக்கிறது. வேட்டைக்காரர்களாக இருந்த பொழுது, சிறியக் கூட்டங்களில் வாழ்ந்ததால், தொற்று நோய் பரவுவதற்குத் தேவையான மூலப் பொருள் (மனித உடம்புகள்) குறைவாக இருந்தது. அதனால், தொற்று நோயின் வீரியம் குறைந்து இருந்தது. மேலும், வெவ்வேறுக் கூட்டங்கள் ஒன்றையொன்றுத் தொடர்புக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்ததால், கிருமிகள் ஒருக் கூட்டத்தில் இருந்து மற்றொருக் கூட்டத்திற்குத் தாவுவது அரிதாக இருந்தது.மனிதர்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து வெளி வந்து, நகரங்கள் உருவாக்கிய பொழுது, கூட்டத்தினாலும் நீர் மாசுப்பட்டதினாலும் வீரியம் மிகுந்தப் பாக்டீரியாக்கள் வெளிவந்தன. அமைதியாக மனித உடம்பில் வேலை செய்தப் பாக்டீரியாக்கள், அடைக்கலம் தந்த மனித உடம்போடு அழிந்தன. வீரியம் மிகுந்தப் பாக்டீரியாக்கள், மற்ற மனிதர்களின் உடம்புகளுக்குத் தாவியதன் மூலம் தங்களது வாழ்க்கையை நீட்டிக் கொண்டன. பண்டையக் காலத்தில், ஸுமேரியன் நாகரிகத்தைச் சார்ந்தவர்களிடத்தில் முதலாகத் தொற்று நோய் பதிவுச் செய்யப்பட்டது. 16-வது நூற்றாண்டில், வியென்னா நகரத்தின் விஞ்ஞானி ஜிரலோமா
ஃப்ராகாஸ்ட்ரோ தொற்று நோய் பற்றியக் கிருமிகளின் கோட்பாட்டை உருவாக்கினார்(இன்றைய காலத்தில் அது பொது அறிவாகத் தோன்றினாலும், 16-ஆம் நூற்றாண்டில் அதுப் புரட்சிகரமானக் கருத்தாக இருந்தது):
1. தொற்று நோய் எப்பொழுதும் கண்ணுக்குப் புலப்படாத விதைகளால் பரவும்
2. நேரடித் தொடர்பாலும், கிருமிகள் இருக்கும் பொருட்களாலும் காற்று மூலமும் நோய்கள் பரவுகின்றன
3. ஒவ்வொருக் கிருமிக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது - அதனால் காய்ச்சலை உண்டாக்கும் கிருமியும் பெரியம்மை உண்டாக்கும் கிருமியும் வேறுபடும்
4. வெவ்வேறுக் கிருமிகளும் நோய்களும் வெவ்வேறுச் சிகிச்சைகளுக்குப் பதிலளிக்கும்
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், நெதர்லாண்ட்ஸ் நாட்டின் அன்டோனி வன் லீவென்ஹொக் என்பவர் நுண்ணுயிர்களை அலசும் நுண்ணோக்கியைக் கண்டுப்பிடித்தார். ஐரோப்பாவில் நோயாளிகளைக் குணப்படுத்தத் திறக்கப்பட்ட மருத்துவமனைகளில் தூய்மையானச் சுற்றுச் சூழல் இல்லை என்பதால் வீட்டைக் காட்டிலும் மருத்துவமனையில் இறப்பதுச் சகஜமாக இருந்தது. இங்கிலாந்து நாட்டின் மருத்துவரான ஜோசப் லிஸ்டர், துணிகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கானக் கருவிகளை தூயப்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் பிழைப்பு விகிதத்தை அதிகப்படுத்தினார். கிருமிகளைப் பற்றிய ஞானம் அதிகரித்தவுடன், ஐரோப்பாவில் உள்ள விஞ்ஞானிகள் இருக் கட்சிகளாகப் பிரிந்தனர்: கிருமிக் கோட்பாட்டை ஆதரிக்கும் தொற்றுவாதிகளும், கிருமிகள் நகரங்களின் கழிவிலும் இழிவிலும் உருவாகி ('மியாஸ்மா') காற்று மூலம் பரவுகின்றன என்று சுகாதாரவாதிகளும் வாதிட்டனர். லூயிஸ் பாஸ்சர் என்ற விஞ்ஞானி, அறிவியல் சோதனைகள் மூலம் நுண்ணுயிர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றன என்றும் பொருட்களிலிருந்துத் தானாகவே அவை வருவதில்லை என்றும் நிரூபித்தார். இதனால், தொற்றுவாதிகளின் கட்சியில் இருந்த விஞ்ஞானிகளின் கை ஓங்கியது. ஆனால், சுகாதாரவாதிகளின் கட்சியில் இருந்த விஞ்ஞானிகள், நோயாளிகளின் பிழைப்பு விகிதத்தை, மருத்துவமனைகளைச் சுத்தப்படுத்தியும் நோயாளிகளைக் கிருமிகள் தொற்றிக் கொள்ளாமலும், மேம்படுத்தினர்(இவர்களில், ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேலும் ஒருவர்).  நுண்ணுயிர்களின் ஆராய்ச்சி மூலம், அனைத்துப் பாக்டீரியாக்களும் தீமையானவை அல்ல என்றும் சிலப் பாக்டீரியாக்கள் உடல் நலத்திற்கு உகந்தவை என்றும் லூயிஸ் பாஸ்செர் கூறினார். ஆனால், அவரது மாணவரான இலாய் மெட்ச்னிகாஃப் என்ற விஞ்ஞானி, பாக்டீரியாக்கள் அனைத்தும் தீயவை என்றுக் கூறினார். அவரதுக் கருத்துகள் தான் இன்றையக் காலக்கட்டத்தில், மனித உடம்பில் உள்ள நல்ல மற்றும் தீய ஆன்டிப்பயாட்டிக்குகளை அழிக்கும், அணுகுமுறைக்கு அடித்தளமாக விளங்குகின்றன. அதன் பிறகு, அலெக்ஸாண்டர் ஃப்லெமிங்க் பென்சில்லின் மருந்தைக் கண்டுபிடித்தார். அவருக்கு 20 வருடங்களுக்கு முன்னமே, எர்னெஸ்ட் டுஷென் என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானி
பென்ஸில்லினைக் கண்டுபிடிக்கும் தருவாயில் இருந்த பொழுது, சோதனைச் செய்யும் பொழுது வந்தக் காச நோயினால் மரணம் அடைந்தார்.
மனிதர்கள் பிறப்பதற்கு முன்னமே, சிலப் பாக்டீரியாக்கள் அவர்களைப் பாதுகாக்கின்றன. இந்தப் புத்தகத்தில், ஒருக் குழந்தைத் தாயின் வயிற்றில் இருப்பதிலிருந்து அதன் சிறு வயது வரை, கிருமிகளின் ஆதிக்கம்  விவரிக்கப்பட்டிருக்கிறது. தாயின் யோனியில் இருக்கும் லாக்டோபஸில்லி பாக்டீரியாவும், தாய்ப்பாலில் உள்ள பிஃபிடோ பாக்டீரியாவும், பிறந்தக் குழந்தையை பல்வேறுத் தீயப் பாக்டீரியாக்களிடமிருந்துக் காக்கின்றன. தாயின் யோனியில் இருந்து வெளிவரும் குழந்தை, தாயின் உடம்பில் உள்ள இந்தப் பாக்டீரியாக்களுடன் தொடர்புக் கொள்வதால், அதனால் கிடைக்கும் பாதுகாப்பு, ஸிஸேரியன் மூலம் வெளிவரும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நவீனக் காலத்தில், குழந்தைத் தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்தவுடன், நன்றாகச் சுத்தப்படுத்துவதால், அதன் உடம்பைச் சுற்றி இருக்கும் அனைத்துப் பாக்டீரியாக்களும் அழிந்து விடுகின்றன. இன்றையக் காலத்தில், குழந்தைகள் பிறந்தவுடன் ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதால், நல்லப் பாக்டீரியாக்கள் அழிந்து, மீதம் இருப்பது வீரியம் நிறைந்தத் தீயப் பாக்டீரியாக்கள் தான் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. தீயப் பாக்டீரியாக்கள், மனித உடம்பின் கவசத்தில் உள்ளப் பலவீனங்களைக் கண்டுப்பிடிப்பதில் குறியாக இருக்கின்றன. ஆன்டிபயாட்டிக்குகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம், நல்லப் பாக்டீரியாக்கள் அழிந்து, தீயப் பாக்டீரியாக்களின் வேலையைச் சுலபமாக்குகின்றன. விஞ்ஞானிகள், சோதனைகள் மூலம், ஒரு குழந்தையின் முதல் வருடத்தில், ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்தினால், குழந்தை வளரும் பொழுது அலெர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் இரட்டை மடங்கில் ஏற்படுகின்றன என்றுக் கண்டுப்பிடித்துள்ளனர். வளர்ந்த நாடுகளின் சுகாதார அமைப்புகள், தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கு ஒருக் காரணமாகவும் உள்ளன - விஞ்ஞானிகள், வளர்ந்த நாடுகளில் உள்ளக் குழந்தைகள் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள், வயது முதிர்ந்தவர்களைப் போல் இருப்பதால், அவர்களுக்கு தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் அதிக அளவில் வருகின்றன. வளர்ந்து வரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளக் குழந்தைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள், வயது முதிர்ந்தவர்களைக் காட்டிலும் மிகவும் மாறுப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் அதிக அளவில் வருவதில்லை. ஒருக் குழந்தையின் வாயும் மூக்கும் பாக்டீரியாக்களை, முழுங்குவதன் மூலமும் இருமுவதன் மூலமும் வெளியில் தள்ளுகின்றன. சோதனைகளில், தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் கூடும் பொழுது, குறைந்த அளவில் நிகழ்கின்றன. அதனைக் கண்டு, டெவிட் ஸ்ட்ரச்சன் என்ற இங்கிலாந்து விஞ்ஞானி, சுகாதாரக் கருதுகோளை விகித்தார் - முன்காலத்தில், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் சளி போன்றத் தொற்று நோய்கள் தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறைவாக நிகழ்வதன் மறுபக்கம் தான் தோல் மற்றும் சுவாசத்திற்கு ஒவ்வாத நோய்கள் என்றுக் கூறினார். அவரது கருத்து, மற்றவர்களால், நிரூபிக்க முடியவில்லை. அதனால், அந்தக் கருதுகோளைச் சரி செய்தனர் - நுண்ணுயிர்களுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே மீண்டும் மீண்டும் தொடர்புக் கொள்ளாமல் இருப்பதனால்(செல்லப் பிராணிகள், சுத்தப்படுத்தப்படாதக் குடிநீர், மற்றக் குழந்தைகள்), அவர்களது நோய் எதிர்ப்பு சக்திகள் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன.  இதனை அடுத்து, விஞ்ஞானிகள், மண் மற்றும் அழுக்கை மூலப்பொருளாக வைத்துத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியில் இருக்கும் பாக்டீரியாக்களை (மைக்கோப் பாக்டீரியம் வாக்கே) வைத்து, மனித உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியை முடக்கி விட முயற்சி செய்தனர். க்ரகாம் ரூக் என்ற விஞ்ஞானி, சுகாதாரக் கருதுக்கோளை மேலும் திருத்தினார் - மனித உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த 3 வகையான உயிரினங்கள் பயன்படுகின்றன - நம்மைச் சுற்றி இருக்கும் பாக்டீரியாக்கள், நமது உடம்பில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் குடலில் உண்டாகும் புழுக்கள் (இதனால், குழந்தைகளின் குடலில் இருந்து புழுக்களை அகற்றாமல் இருந்தால், அது அவர்களது வளர்ச்சியைக் முடக்கி, வயிற்றுக்கடுப்பு மற்றும் இரத்தச் சோகை போன்ற நோய்களை உண்டாக்கும்). மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் பரவலாகத் தொற்று நோய்க்குக் காரணமாக இருக்கின்றன. ஒருவர் தன் வாழ்க்கையில் அதிக அளவில் தொற்று நோய்களால் அவதிப்பட்டால், அவரது வயதானக் காலத்தில் கீல்வாதம், பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன(தொற்று நோய் குணமானாலும், அதனால் ஏற்படும் வீக்கம் நீண்ட நாள் இருக்கிறது).
தொற்று நோயினால் நிகழ வேண்டியப் பல இறப்புகளை, ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் மருத்துவர்களால் நிறுத்த முடிந்தது. பாக்டீரியாக்கள் அதிவேகமாக ஆன்டிபயாட்டிக்குகளுக்குச் சுதாரித்துக் கொள்வதை மருத்துவர்கள் கவனித்தனர். இதையடுத்து, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஆன்டிபயாட்டிக்குகளின் (க்ளின்டாமைஸின், ப்ளூரோக்வீனோலோன்ஸ், ஸெஃபாலோஸ்போரின்) மூலம் அனைத்து வகைப் பாக்டீரியாக்களை அழிக்க முயற்சித்தனர். மருத்துவர்கள், இந்தப் புதிய ஆன்டிபயாட்டிக்குகளை, நோயாளிகளுக்கு கொடுத்தனர். அதன் மூலம், நோயாளிகளை வேகமாகக் குணப்படுத்த முடிந்ததனால், அவர்களது நோயின் காரணத்தைக் கண்டுப்பிடித்து அந்தக் காரணத்திற்குத் தேவையான மருந்தை மட்டுமேக் கொடுக்கும் கடினமான அணுகுமுறையை மருத்துவர்கள் கைவிட்டனர். மேலும், நோயாளிகளுக்குக் கொடுக்கும்
ஆன்டிபயாட்டிக்குகளின் அளவு, பாரம்பரியத்தைக் (அந்தந்த நோய்க்கும் நோயாளிக்கும் ஏற்ற அளவைக் கணிப்பதை விட்டுவிட்டு) கடைப்பிடித்ததனால், பல முறை கொடுக்கப்படும்  ஆன்டிபயாட்டிக்குகளின் அளவு அதிகப்படியானது. சில மருத்துவர்கள், பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு, வருமுன் காக்கும் செயலாக(அவ்வாறுச் செய்வதனால், நோயாளிக் குணப்படப் போவதில்லை என்றாலும்) , ஆன்டிபயாட்டிக்குகளை நோயாளிகளுக்கு அளிக்கின்றனர். ஆன்டிபயாட்டிக்குகளினால், தீயப் பாக்டீரியா இறந்து போவதுடன், மனித உடம்பிற்குத் தேவையான நல்லப் பாக்டீரியாக்களும் இறக்கின்றன. இந்த மருந்துகளிலிருந்துத் தப்பிக்கும் பாக்டீரியாக்கள், ஆன்டிபயாட்டிக்குகளை  எதிர்க்கும் சக்தியைப் பெற்றதாக இருக்கின்றன.
ஆன்டி பயாட்டிக்குகளிலிருந்துத் தப்பிக்கும் பாக்டீரியாக்கள், அந்த மருந்துகளை எதிர்கொண்டப் பின் சுதாரித்துக் கொள்வதில்லை. மாறாக,  பாக்டீரியாக்களுக்குள் இருக்கும் பிறழ்வுகள் அதனைச் சுதாரிக்க உதவுகின்றன. மருத்துவர்கள், பாக்டீரியாக்களை முடக்கப், பல ஆன்டிபயாட்டிக்குகளை நோயாளிகளுக்குக் கொடுத்தனர். முதலில் குடுத்த ஆன்டிபயாட்டிக்கிடமிருந்துத் தப்பினாலும், அதற்குப் பிறகுக் கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்கிடம் மாற்றிக் கொள்ளும் என்று நினைத்து இவ்வாறுச் செய்தனர். இவ்வாறுச் செய்ததன் மூலம், நோய் எதிர்ப்புத் தன்மைக் கொண்டப் பாக்டீரியாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு மின்னூட்டம் கொடுத்ததுப் போல் அமைந்தது. தாறுமாறாக ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்தியதால், இப்பொழுது அனைத்துப் பாக்டீரியாக்களும், தங்களதுப் பிழைப்பின் பொருட்டு, ஒன்று சேர்ந்துச் செயல்படக்கூடியக் கிருமியாக மாறி உள்ளன(புத்தகத்தின் இந்தப் பகுதி மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது). மருந்து எதிர்ப்புச் சக்திக் கொண்டப் பாக்டீரியாக்களைப் பற்றி ஊடகங்களில் செய்தி வெளிவந்தப் பின் (உதாரணமாக, 2006-இல் க்ளோஸ்ற்றிடியம் டிஃபிஸில் பற்றிய செய்திகள்), சில மருத்துவர்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள், நோயாளிகளுக்கு ஆன்டிபயாட்டிக்குகளைக் குறைக்க முற்பட்டனர். வளர்ந்த நாடுகளில், இன்று வரை, ஆன்டிபயாட்டிக்குகளை அதிக அளவில் பயன்படுத்தியதால், மருந்தை எதிர்க்கும் பாக்டீரியாக்களின் தேக்கங்களாக அங்குள்ள மக்கள் இருக்கின்றனர். பாக்டீரியாக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் உள்ள சில ரசாயனங்களைப் பாக்டீரியாக்கள் தங்களுடையத் தீனியாக மாற்றிக் கொண்டு உள்ளன. இதில், ட்ரைக்ளோஸான் என்ற ரசாயனமும் அடங்கும். இது, பாக்டீரியாவை அகற்றும் சோப்புகள், பற்பசைகள், வாய்க்கழுவிகள் மற்றும் ஏனைய வீட்டுச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியப் பொருளாக விளங்குகிறது. இதனை, மருந்தை எதிர்க்கும் சக்திக் கொண்டப் பாக்டீரியாக்கள், தங்களதுத் தீனியாக மாற்றிக் கொண்டு உள்ளன.
மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் தங்களதுச் சுகாதார நிலைமையை மென்மேலும் மேம்படுத்தப் பயன்படுத்தும் பொருட்கள் மருந்து எதிர்ப்புச் சக்தியைக் கொண்டப் பாக்டீரியாக்களைப் பரவ உதவுகின்றன.
வளர்ந்த நாடுகளில், ஆன்டிபயாட்டிக்குகளின் மற்றொரு மூலாதாரம், கால்நடைகளாகும். 1950 வருடம் ஏப்ரல் மாதத்தில், லெடெர்ல் லெப்ஸ்-இன் தாமஸ் ஜூக்ஸ் மற்றும் ராபர்ட் ஸ்டொக்ஸ்டாட் என்ற விஞ்ஞானிகள், ஒரு டன் கால்நடைத் தீவனத்தில் 5 கிலோச் சுத்தீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக்குகளைச் சேர்த்தால், அதை உண்ணும் பன்றிகள் 50 விகிதம் அதிகம் வளர்வதைக் கண்டுப்பிடித்தனர். இதற்கடுத்து,
ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்தி, கால்நடைகளைப் பெரிய அளவில் விவசாயம் செய்வதுச் சகஜமாகியது. ஆரம்பக் காலத்தில், அமெரிக்க நாட்டின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ளச் சிலப் பாலாடைக்கட்டிப் பண்ணையாளர்கள், பென்ஸில்லின் மற்றும் ஆரியோமைஸின் மருந்துகள் கலக்கப்பட்டத் தீவனத்தை உண்ட மாடுகளின் பால் விரைவில் திரிந்து விடுவதாகக் குறைக் கூறினர். அவர்களதுக் குறைகளுக்குச் செவிசாய்க்காமல், தீவனத்தில் சேர்க்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்குகள், கால்நடையின் வயிற்றிற்குள் அதன் கூறுகளாகப் பிரிந்து விடும் என்றும் அவற்றின் பால், முட்டை மற்றும் இறைச்சியில் அந்த ஆன்டிபயாட்டிக்குகள் இருக்காது என்றும் விஞ்ஞானிகள் உத்தரவாதம் அளித்தனர். அந்தக் கருத்து, மீண்டும் மீண்டும் தவறு என்றுக் காட்டப்பட்டிருக்கிறது. இதனால், ஒவ்வொரு வருடமும், 30 - 40 லட்சம் மக்கள் அமெரிக்கா-வில் ஸால்மோனெல்லா மற்றும் காம்பைலோபாக்டெர் போன்றப் பாக்டீரியாக்களால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 1999-இல் ஐரோப்பிய யூனியன், கால்நடைத் தீவனத்தில் ஆன்டிபயாட்டிக்குகளைச் சேர்ப்பதற்குத் தடை விதித்தது. அதன் பின், ஐரோப்பியர்களின் உடம்பில் உள்ள ஆன்டிபயாட்டிக்குகளின் அளவு மிகவும் குறைந்தது. அதற்கு எதிர்மாறாக, அமெரிக்க மற்றும் கெனடா நாட்டில் உள்ள கால்நடை வர்த்தகர்கள், தீவனத்தில் ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், கால்நடைகளின் உடம்பில் உள்ள ஆன்டிபயாட்டிக்குகள், மனிதர்கள் உடம்பில் இருந்து வந்தவை என்று வாதாடுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் ஆன்டிபயாட்டிக்குகளின் அளவைக் குறைக்க, ஆசிரியர் சில பரிந்துரைகளைச் செய்தாலும், நடைமுறையில் அவற்றைச் செயலாற்றுவது எவ்வளவுச் சாத்தியம் என்பது கேள்விக் குறியாகத் தான் உள்ளது - மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் ஆன்டிபயாட்டிக்குகளின் அளவைக் குறைக்க வேண்டும், நோயாளிகளை ஆன்டிபயாட்டிக்குகளில் இருந்துச் சீக்கிரமாக வெளிக் கொணர வேண்டும் மற்றும் குறுகிய நோக்குடைய மருந்துகளைப் பெரும்பாலும் உபயோகிக்க வேண்டும். கிருமிகளை எதிர்க்கும் பரிந்துரைகளையும் ஆசிரியர் அளித்திருக்கிறார். சிலப் பரிந்துரைகள் ஏற்கனவேச் செயல்படுத்தப்பட்டு வெற்றிக் கண்டாலும் பாக்டீரியாக்களிடையே மருந்து எதிர்ப்பைக் கூட்டுகின்றனவாக இருக்கின்றன - நுண்ணுயிர்களான பாக்டீரியோ ஃபெஜெஸ், ப்ளாஸ்மிட்ஸ், தீவனத்தில் ஆன்டிபயாட்டிக்குகளின் அளவைக் குறைப்பது மற்றும் மருந்துகளை உடம்பிற்குள் கட்டுப்படுத்தும் முறைகளும் இதில் அடங்கும்.
சில பரிந்துரைகள் இன்று வரையில் மருந்து எதிர்ப்பைக் கூட்டாமல் இருக்கின்றன:
1. தடுப்பு ஊசிகள் - தடுப்பு ஊசிகள் இறந்தப் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி, மனித உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியைச் செயல்படுத்துகிறது
2. ப்ரோபையாடிக்ஸ் - மனித உடம்பில் குறைந்து இருக்கும் நல்லப் பாக்டீரியாக்களின் அளவைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விஞ்ஞான ரீதியாக நன்றாக வேலைச் செய்பவை, வர்த்தகத்திற்காக விற்கப்படும் ப்ரோபையாடிக்ஸுடன் குழப்பபடுவதால்,  இந்த அணுகுமுறைக் கடினமாக இருக்கிறது.
3. தீயப் பாக்டீரியாக்களின் நச்சுகளோடு இணையும் மருந்துகள் - இந்த மருந்துகள் மூலம், தீயப் பாக்டீரியாக்கள் உடம்பிற்குள் செயலிழக்கின்றன. அதனைச் சாதகமாக்கிக் கொண்டு, மனித உடம்பில் உள்ள நல்லப் பாக்டீரியாக்கள் மீண்டும் செழித்து, தொற்று நோயைத் தோற்கடிக்கின்றன.
இன்றையக் கால மருத்துவர்கள்,  அதிக அளவில் ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்தாமல், நோயாளிகள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயைத் தோற்கடிக்க உதவும் மற்ற யுக்திகளை மேற்கொள்கின்றனர் - வெகுவேகமாகக் கொடுக்கப்படும் உடம்பிற்குத் தேவையானத் திரவங்கள், இரத்த நாளங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மருந்துகள் மற்றும் இரத்தக் குளுக்கோஸ் அளவைப் பராமரிப்பது. தொற்று நோயிற்குப் பின் வரும் வீக்கங்களைக் கையாள உணவில் கொழுப்புச் சத்தைக் கூட்டும் மீன் கொழுப்பு, ஆலிவ் எண்ணை போன்றவை உதவுகின்றன.
தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து, தாங்கள் தொடும் இடங்களைத் (கதவுக் குமிழ்கள், மனிதத் தோல்கள்) தூயப்படுத்துவதன் மூலம் தங்களைக் காத்துக் கொள்வது மடத்தனம் என்பதை உணர வேண்டும். அமெரிக்கத் தொலைக்காட்சியில், மங்க் எனப்படும் சீரியலின் கதாநாயகன், தான் வாழும் ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் குப்பையும் அழுக்கும் எங்கும் இருப்பதைக் கண்டு மிரண்டதனால், அவனது மேலதிகாரி, மிகத் தூய்மையான இடமானக் கணினிக்குள் பயன்படுத்தப்படும் சிப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, எந்தக் கிருமியும் இல்லாமல் இருப்பதால், எந்த வாசனையும் இல்லாமல் இருக்கிறது. தீவிரவாதிகள், கிருமிகளை வைத்துத் தாக்குவார்கள் என்ற அச்சுறுத்தலால்,    அவை எங்கும் இருப்பதாகக் கருதி, அதிலிருந்துத் தங்களைக் காத்துக் கொள்ள கூரியக் கத்திப் போன்ற அணுகுமுறைக்குப் பதிலாக, மழுங்கியச் சுத்தியலை ஒத்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
சேஸிங்க் டெர்ட் - தி அமெரிக்கன் பர்ஸ்யூட் ஆஃப் க்ளென்ளினெஸ் - ஸுஎலன் ஹாய்
தி ஆன்டிபயாட்டிக் பாரடாக்ஸ் - ஸ்டுவர்ட் லெவி

No comments: