ஒற்றுமையில் வேற்றுமை

சுருக்கம்:
இந்தியா-வில் உள்ள வர்க்கம், ஜாதி, மதம், மொழி வேறுபாடுகள் அதிகமாகப் பரவியிருக்கின்றன. அரசியல் கட்சிகள், உடனடி அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் நீண்டக் கால வளர்ச்சியைப் பணயம் வைத்து மதச் சார்ப்பின்மையைக் குலைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கின்றன. உலகில் பல நாடுகளில், மக்கள் இன விசுவாசத்தை முதன்மையாகக் கருதியதால், அந்த நாடுகளின் வருங்காலம் கேள்விக்குறியாக ஆகியிருப்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பெரும்பாலும் இரத்தப் பந்தத்தினால் ஏற்படும் இனப் பிரிவுகள் (மதம், இனம், மொழி) இந்த நாடுகலை நிலைக் குலைய வைத்துள்ளன.  அமெரிக்கா தனது இராணுவம் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளது. அந்நாடுகளில் உள்ள இனம் மற்றும் மொழி வேறுபாடுகளை முழுவதும் அறிந்துக் கொள்ளாமல் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைச் செய்ததால் அமெரிக்கா அந்த நாடுகளில் தோல்விகளைச் சந்தித்தது. இந்தப் புத்தகம், அமெரிக்கா-வின் வெளிநாட்டுக் கொள்கைகளை அலசி எழுதப்பட்டிருந்தாலும், இந்தியா-வின் உள்நாட்டுக் கொள்கைகளுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு,இந்தியா-வில் ஆங்கில மொழியைத் தெரிந்தவர்கள், இந்தியா-வின் சொந்த மொழிகளை மட்டும் பேசும் மக்களைத் தங்களை விடக் குறைவாக எண்ணுகின்றனர். ஆங்கிலம் அறிந்தவர்கள், தங்களுடைய மாநிலத்தோடு நின்று விடாமல், இந்தியா முழுவதும் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்களுடையத் தாய் மொழியை மட்டும் கற்றுக் கொள்ளும் மக்களுக்கு, அவர்களது மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை மட்டுமேப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. 1991-ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்தப் பொருளாதாரத் தாராளமயமாக்கலின் விளைவாக, மக்கள் தாங்கள் பிறந்த மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். மாநிலங்கள் மொழியால் வரையறுக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் கலவரங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. பிரிவினைக்குக் காரணமான மற்றுமொருக் காரணியான மதக் கலவரங்கள், மதச்சார்ப்பின்மையைக் கடைப்பிடித்தால், குறையும் வாய்ப்பு இருக்கிறது. சில அரசியல் கட்சிகளுக்கு இந்தியா-வின் மதச் சார்ப்பின்மை ஒரு முட்டுக்கட்டையாக இருந்தாலும், அது வருங்கால நலனிற்கு ஏதுவானக் கொள்கையாக இருக்கும்.
அலசல்:
ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலைச் செய்தது இந்திய மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. நிதானமாக அலசி ஆராயாமல்,  ஸ்ரீ லங்கா நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில்  இந்தியா தலையிட்டுக் தன்னுடையக் கையைச் சுட்டுக் கொண்டது. இந்திய அமைதிப்படை, ஸ்ரீ லங்காவின் போரைச் சுமூகமான முடிவிற்குக் கொண்டு வரச் செய்த நடவடிக்கைகள், தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளுக்குள் கலகத்தைக் கிளறி விட்டன. அன்றைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, இறந்த இந்திய அமைதிப்படை வீரர்களின் சடலங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியப் பொழுது, மரியாதை நிமித்தமாக அவற்றை வரவேற்கச் செல்லவில்லை. இந்திய அமைதிப்படையை இந்திய தமிழர் கொல்லும் படை என்று விமர்சித்தார். ஸ்ரீ லங்கா-வில், பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் இடையே இருந்த விரோதத்தை இந்திய அரசாங்கம் குறைவாக எடைப் போட்டதனால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிங்கள அரசாங்கத்தின் உந்துதலால் ஈழத் தமிழ் மக்களின் படுகொலைகள் ஆரம்பிக்கும் முன், ஈழத் தமிழர்கள், ஸ்ரீ லங்கா-வில் சிறுப்பான்மைக் இனமாக இருந்துக் கொண்டு வணிகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தினர். இந்தியா ஸ்ரீ லங்கா-வில் மூக்கை நுழைத்தது போல், அமெரிக்கா, ஒரே வல்லரசாக வலம் வருவதால், உலகின் வெவ்வேறுப் பகுதிகளில் அமைதிக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பல நாடுகளில் உள்ள இன விசுவாசங்களை அறிந்து அதற்கேற்ற மூலோபாயத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உலகின் முதலாளித்துவ மற்றும் ஜனநாயக நாடுகளின் தலைவராக அமெரிக்காத் தன்னைக் கருதுவதால், மற்ற நாடுகளைத் தன்னுடையப் பிரதிப்பலிப்பில் காண்கிறது. வியட்நாம், இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெனுசுவேலா நாடுகளில் அமெரிக்கா-வின் இடையூறால் ஏற்பட்டச் சிக்கல்களை இந்தப் புத்தகம் அலசி ஆராய்வதோடு நின்று விடாமல்,  அமெரிக்கா-வின் உள்நாட்டுப் பிரச்சினைகள்,  இன விசுவாசங்களால், பூதாகரமாக வெடிப்பதையும் விளக்குகிறது.
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற ஏகாதிப்பத்திய நாடுகள், அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த மற்ற நாடுகளில் இருந்த இனப் பிரிவினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நீண்டக் காலம் ஆட்சிச் செய்தன. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள் அடைந்தத் தீவிரப் பின்னடைவினால், உலகின் தலைமையை அமெரிக்கா மற்றும் ஸோவியத் யூனியன்-இடம் இழந்தன. ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறைக்கு மாறாக, அமெரிக்காப் பொருளாதாரச் சக்தியைப் பயன்படுத்தித் தனது வெளியுறவுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. அமெரிக்கா-விற்குள், இனத்தின் அடிப்படையில் நிகழும் அநீதிகள் ஏராளம் என்றாலும், வெளிநாட்டில் இருந்துக் குடியேறிய மக்களைத் தனதுச் சமூகத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததால், அதே போக்கை மற்ற நாடுகளிடம் இருந்தும் எதிர்ப்பார்த்தது. உலகின் பல நாடுகளில், குடியுரிமை அந்த நாட்டில் ஏற்கனவேக் குடிமகன்களாக இருப்பவர்களுக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அமெரிக்கா-வில், பிறப்புரிமையால் குடியுரிமை அளிக்கப்படுகிறது. அமெரிக்கா-வின் அரசியல் சாசனத்தின் 14-ஆவது திருத்தம், உலகின் எந்த முக்கில் பிறந்திருந்தாலும், அவரது இனம், மொழி மற்றும் வர்க்கத்தை ஒருத் தடையாகக் கருதாமல், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்கா-விற்குள் உள்ளக் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் இருந்தச் இனம் சார்ந்த விலக்கக் கொள்கைகளையும் மாற்றியுள்ளது. உலகில் சில நாடுகள் பல இன மக்கள் வாழும் இடமாக இருந்தாலும், அங்கு நாட்டுப் பற்றுக் குறைந்துக் காணப்படுகிறது - இராக், ஸிரியா மற்றும் லெபனான் போன்ற நாடுகள் இதற்கு உதாரணம். உலகில் சில நாடுகளில், தேசப் பற்று அதிகமாக இருந்தாலும், பெரும்பாலும் ஒரே இன மக்கள் வாழும் இடமாகத் திகழ்கின்றன - ஜெர்மனி மற்றும் ஜப்பான் இதற்கு உதாரணம். பல இன மக்களும் மிகுந்தத் தேசப் பற்றும் உடைய மிகக் குறைந்த நாடுகளில் அமெரிக்கா-வும் ஒன்று. இங்கிலாந்தில் பல இன மக்கள் இருந்தாலும், அங்குள்ள அரசு, தேசப் பற்றை மக்களின் மேல் திணிப்பதில்லை. ஃப்ரான்ஸ் நாடு, பல இன மக்கள் அங்கு வாழ்வதனால், தேசப் பற்றை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. அமெரிக்கா உலக நாடுகளில் சூப்பர் க்ரூப் என்றுக் கருதப்படுகிறது - க்ரூப்பில் இருக்கும் வேறுபாடு (அமெரிக்கர்களுக்கும் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு) வெளிப்பட்டாலும் , அந்தக் க்ரூப்பிற்குள் நுழைவதற்கு இனம், மதம், மொழி மற்றும் வர்க்கத் தடைகள் இல்லாமல் இருக்கிறது.
மேலும், அமெரிக்க மக்களிடையே தனிப்பட்ட முறையில் அவரவருடைய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றச் சுதந்திரமும் இருக்கிறது. இதர நாடுகளில் ஜனநாயகத்தைத் திணிக்கும் பொழுது, அவைத் தன்னைப் போன்று இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது - மிகுந்த அளவுத் தேசப் பற்றுடன், அங்குள்ள மக்களின் பல்வேறு அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறது. ஜனநாயகத்தின் பரவினால், இன வேறுபாடுகள் பரவுகின்றன. உயர்த்தட்டு மக்கள், தாராளவாதம், மதச் சார்பின்மை, பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகள், மனிதர்கள் ஏக்கத்தோடு எதிர்ப்பார்க்கும்வ் இன அடையாளத்தை அளிப்பதில்லை.
ஆராய்ச்சியில், குழந்தைகள் 4 வயது ஆகும் பொழுதேத் தங்கள் குழுவில் இருப்பவர்கள் யார் என்பதையும் தங்கள் குழுவிற்கு வெளியில் இருப்பவர்கள் யார் என்ற வேறுபாட்டையும் அறிந்து அதற்கேற்பத் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன என்றுத் தெரிய வந்துள்ளது. மனிதர்கள் தத்தம் குழுவில் இருப்பவர்களைத் தனிப்பட்ட முறையில் எடைப் போட்டு தங்களுடையக் குழுவின் உறுப்பினர்களாகக் கருதுகின்றனர். தங்கள் குழுவிற்கு அப்பால் உள்ளவர்களை வேற்றுமையோடு எடைப் போட்டு, சராசரி மனிதர்களாகக் கருதுகின்றனர். தங்கள் குழுவில் இருப்பவர்களுக்குப் பரிசுக் கிடைக்கும் பொழுது, தங்களுக்குப் பரிசுக் கிடைத்ததுப் போல் எண்ணி மகிழ்ச்சிக் கொள்கின்றனர். தங்கள் குழுவின் உறுப்பினர்கள் காயப்படும் பொழுது அவர்கள் மேல் அதிக அளவில் கரிசனம் காட்டுகின்றனர்.  தங்கள் குழுவில் அல்லாதவர்களின் துயரைக் (தங்களால் அந்தத் துயரம் உருவாக்கப்படவில்லை என்றாலும்) கண்டுச் சந்தோஷப்படுகின்றனர். இரத்தச் சம்பந்தத்தை ஒட்டி இருக்கும் காரணிகளான இனம் மற்றும் மொழி வேறுபாடுகள், குழுவின் உறுப்பினர்களை குழுவிற்கு அப்பால் இருப்பவர்களை அதிக வெறுப்புடன் பார்க்க வைக்கிறது. குழுவின் உறுப்பினராக இருந்தால், புறநிலை உண்மைகளைப் பற்றியத் தனிப்பட்டக் கருத்துக்கள் பாதிக்கப்படுகின்றன. அந்தக் குழுவின் உறுப்பினர்கள், அதிகம் படித்திருந்தால், அந்தப் பாதிப்பு அதிகமாகிறது. அமெரிக்கா-வின் ஜனாதிபதியான டானல்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களிடையே அதிகம் படித்த வெள்ளையர்களிடம், ட்ரம்பைப் பற்றிய அரசியல் உண்மைகளை எடுத்துக் கூறினால் அந்த ஆதரிப்புக் குறைந்து விடும் என்ற நம்பிக்கை எவ்வளவுத் தவறானது என்பது இதில் இருந்துத் தெரிய வருகிறது. தனிப்பட்ட நபர் ஒருக் கேள்விக்குத் தான் அளிக்கும் பதில், தான் உறுப்பினராக இருக்கும் குழுவின் பதிலுக்கு எதிர்மறையாக இருக்கும் பொழுது, தன்னுடையப் பதிலை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டார். தனிப்பட்ட நபர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் சேரும் குழுக்களின் பாதிப்பால், தவறானப் பாதையில் செல்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றப் பயங்கரவாத அமைப்புகள், சராசரி இஸ்லாமியர்களை, சமூகமயமாக்கல், போதனைகள் மற்றும் தீவிரமயமாக்குதல் போன்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றக் குழுக்கள் தங்களது உறுப்பினர்கள் பெருமைக் கொள்ளும் இன விசுவாசம் ஒன்றை அளிப்பதால், அவர்களது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு குழுவின் உறுப்பினர்களின் கண் பார்வையில், அந்தக் குழுவிற்கு அப்பால் இருப்பவர்களின் மனிதத்தன்மைக் குறைவாகத் தென்படுகிறது. அதிகமான வறுமையினால், பயங்கரவாதம் எழுகிறது என்றக் கருத்து, நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாமல் இருக்கிறது. உலகில் பிரபலமடைந்தப் பலப் பயங்கரவாதத் தலைவர்கள் சொகுசானச் சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் - உதாரணத்திற்கு, ஒஸாமா பின் லேடன். ஒருத் தனிப்பட்ட நபரின் வறுமையை விட, அவர் சார்ந்திருக்கும் குழு எதிர்கொள்ளும் சமத்துவமின்மை, அதிகாரமற்ற நிலை, அவமானம் மற்றும் வெறுப்புப் போன்றக் காரணிகள் அவர் பயங்கரவாதியாவதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்தக் காரணிகளினால், சொகுசு வாழ்க்கையில் வளர்ந்தவர்களும் கூட, பயங்கரவாதிகளாக ஆகின்றனர் - உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் வசதியானக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நல்லப் படிப்பறிவு நிறைந்தவர். ஆனால், அவரதுத் தலைமையில், விடுதலைப் புலிகள், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைச் செய்வதில் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். அல் கெய்டா பயங்கரவாத அமைப்பு, உலகில் பல நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களதுச் சுய மரியாதையை மேற்கத்திய அரசுகள் சின்னாப்பின்னமாக்கி விட்டனர் என்ற எண்ணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இன விசுவாசத்தைச் சார்ந்தக் குழுக்கள், தங்களுடைய உறுப்பினர்களுக்கு, குறிக்கோள்களும், வெறுப்பதற்கு ஒருப் பகையாளியும், தங்களதுச் சக்தியற்ற நிலைமையை மாற்றி வெற்றியடையும் வாய்ப்பை அளிக்கின்றன.
வரலாற்று முழுவதும், வியட்நாம் நாடு, சீனா-வின் நிழலில் இருந்திருக்கிறது. கி.மு 111-ஆம் ஆண்டில், சீனப் பேரரசு, இன்றையக் கால வியட்நாம் நாட்டில் உள்ள நிலங்களில் இருக்கும் மக்களை ஆக்கிரமித்து, அவர்கள் இருக்கும் இடத்தை நாம் வியட் (தெற்குக் காட்டுமிராண்டிகளின் நிலம்) என்றுப் பெயர் சூட்டியது. அடுத்தப் பத்து நூற்றாண்டுகளுக்கு, சீனப் பேரரசு, வியட்நாம் மீதுத் தனதுப் பண்பாடு மற்றும் ஏகாதிப்பத்திய ஆட்சியை வலுக்கட்டாயமாகத் திணித்தது. சீனப் பேரரசின் ஆதிக்கம் பல நூற்றாண்டுகள் இருந்தாலும், வியட்நாம் மக்கள் தங்களுடைய மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்தனர். கி.பி 938-ஆம் ஆண்டில், சீனப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்து வியட்நாம் தன்னை விடுவித்துக் கொண்டது. அதன் பின், சரமாரியாக ஏவப்பட்ட சீன ஏகாதிப்பத்தியத்தின் முயற்சிகளை வியட்நாம் வெற்றிகரமாக முறியடித்தது. சமீபக் காலமாக ஃப்ரென்ச் நாட்டினர், வியட்நாம் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தப் பொழுது, பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனப் பேரரசின் ஆதிக்கத்தை எதிர்த்த நினைவுகளை ஊக்கமாகப் பயன்படுத்தி, விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டது. 1954-ஆம் ஆண்டில், ஃப்ரென்ச் நாட்டின் படைகளை டியென் பியென் ஃபு-வில் தோற்கடித்ததன் விளைவாக, அமெரிக்கா-வின் பார்வை வியட்நாம் நாட்டின் மேல் பாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின் பின், ஸோவியத் யூனியன் தலைமையில் பிரபலமாக்கப்பட்டக் கம்யூனிஸக் கொள்கையை வியட்நாம் கடைப்பிடிக்காமல் இருக்கவும், கம்யூனிஸ்ட் கொள்கையைக் கடைப்பிடிக்கும் சீன நாட்டின் ஆதிக்கத்தைத் தடுக்கவும் அமெரிக்கா முயற்சிச் செய்து வந்தது. வியட்நாம் நாட்டின் தலைவரான ஹோ சி மிந் சீன நாட்டின் ஆதரவாளர் என்ற நம்பிக்கையில், அமெரிக்கா அவரையும் எதிர்த்தது. ஹோ சி மிந் பார்வையில், அமெரிக்கா-வும் ஃப்ரான்ஸும் வியட்நாம் நாட்டின் குறுகியக் கால முதலாளிகளாக இருந்தாலும், சீனா-வை நீண்டக் கால எதிரியாகக் கருதினார். வியட்நாம் நாட்டில் வாழும் சீன இனத்தவர்கள் ஹோ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள், வியட்நாம் நாட்டின் மக்கள் தொகையில் 1% மட்டுமே இருந்தாலும், அந்த நாட்டின் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டத் தனியார் வணிகத்தில் 90% பங்கு வகித்தனர். சீனா, ஃப்ரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகள், ஹோ இனத்தவருடன் பெரும்பாலும் தொடர்புக் கொண்டிருந்தன. ஹோ, வியட்நாம் நாட்டில் உள்ள வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டிருந்ததால் இந்த நிலைமை உருவாகியிருந்தது. ஃப்ரென்ச் நாடு, போரில் தோல்வி அடைந்தப் பின், அமெரிக்கா ஜெனீவா ஒப்பந்தம் என்றப் பெயரில் வியட்நாம் நாட்டை இரண்டாகப் பிரித்தது. வடக்கில், கம்யூனிஸக் கொள்கையைக் கடைப்பிடித்து ஹோ சி மிந் தலைமையில் வியட்நாம் ஜனநாயகக் குடியரசும் (வடக்கு வியட்நாம்) தெற்கில், முதலாளித்துவக் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா-வின் ஆதரவோடு வியட்நாம் குடியரசும் (தெற்கு வியட்நாம்) உருவாக்கப்பட்டன. வியட்நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், ஹோ சி மிந் தெற்கு வியட்நாம் நாட்டை இராணுவச் சக்தியால் வடக்கு வியட்நாம் நாட்டுடன் இணைக்க முடிவெடுத்தார். அதற்குப் பதிலடியாக, தெற்கு வியட்நாம் நாட்டின் பாதுகாப்பை அமெரிக்கா வலுப்படுத்தியது. கம்யூனிஸ்ட் ஆளுமைக்குத் தெற்கு வியட்நாம் நாட்டைப் பலிக் கொடுக்காமல் இருக்க அமெரிக்கா முயற்சிகளில், தெற்கு வியட்நாம் நாட்டின் இனம் சார்ந்த விசுவாசங்களைப் புறக்கணித்தது. தெற்கு வியட்நாம் நாட்டில் ஹோ இன மக்கள் பெரும்பாலும் முதலாளித்துவக் கூட்டத்தில் இருந்தனர்.  அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள், முதலாளித்துவத்தைத் தூக்கி நிறுத்த எடுத்த நடவடிக்கைகள், ஹோ மக்களுக்கு அதிக அளவில் செல்வத்தைக் குவித்தன. தெற்கு வியட்நாம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குத் தீவிர வறுமையே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. ஹோ வணிகர்கள், அதிக அளவு லாபம் சம்பாதிப்பதற்கு, அரிசியைக் கிடங்குகளில் மறைத்துச் செயற்கையான அரிசிப் பற்றாக்குறையை ஏற்படுத்தினர். இதனால், பெரும்பான்மையாக இருந்த வியட்நாம் மக்களில் அதிக அளவில் பட்டினியால் மாண்டனர். அமெரிக்கா, முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த தெற்கு வியட்நாம் அரசை ஆதரிக்க எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும், ஹோ சி மிந் தலைமையில் இருந்த வடக்கு வியட்நாம்-இன் கையை வலுவாக்கியது. தெற்கு வியட்நாம் நாட்டில் நடந்தச் சண்டைகளின் பொழுது, ஹோ-விற்கும் வியட்நாம் மக்களுக்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை அறியாததால், அமெரிக்கா-வின் இராணுவம் கண்மூடித்தனமாக இரண்டுக் குழுக்களையும் சுட்டுத் தள்ளியது. ஆனால், ஹோ இனத்தவரின் செல்வச் செழிப்பு, அவர்களுடைய வீடுகளின் காவலைப் பலப்படுத்தப் பயன்பட்டதால், அவர்களுடைய உயிர் இழப்பைக் குறைக்க முடிந்தது. செல்வச் செழிப்புக் குறைவாக இருந்த பெரும்பான்மை வியட்நாம் மக்கள், அமெரிக்கா நாட்டின் இராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாயினர். அமெரிக்கா, தெற்கு வியட்நாம் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்குப் பதில், கம்யூனிஸத்தை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதனால், தெற்கு வியட்நாம் நாட்டின் இராணுவ வீரர்கள், வடக்கு வியட்நாம் வீரர்களைக் காட்டிலும் குறைந்தத் தீவிரத்தோடுப் போரிட்டனர். வியட்நாம் நாட்டில் இருந்து அமெரிக்கா பின் வாங்கியவுடன், ஹோ மேல் இருந்த வெறியில் வியட்நாம் மக்கள், 1975-ஆம் ஆண்டிலும் 1978-ஆம் ஆண்டிலும் அவர்களை அதிக அளவில் இனப் படுகொலைச் செய்தனர். இதனால், பல ஹோ இன மக்கள், சீனா-விற்குக் குடிபெயர்ந்தனர். சீன அரசு, வியட்நாம் அரசுடன் எவ்வளவு முறையிட்டாலும், இந்தக் கொலைகள் நிற்கவில்லை.
2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ஆம் தேதி அமெரிக்கா-வில் நடந்த பயங்கரவாதத்திற்குப் பதிலடியாக, ஆஃப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது. இன்று வரை நடந்துக் கொண்டிருக்கும் அந்தப் போர், அமெரிக்கா-வின் வரலாற்றிலேயே மிகவும் நீண்டப் போர் என்றப் பெயரைப் பெற்றுள்ளது. தாலிபானை இஸ்லாமிய அமைப்பாகப் பார்ப்பதினால், அது ஒரு இனம் சார்ந்த அமைப்பு என்பதை அமெரிக்கா மறந்து விட்டது. ஆஃப்கானிஸ்தான்-இன் பெரும்பான்மை இனமான பாஷ்டூன் இனம், அந்த நாட்டை வெகுக் காலமாக ஆண்டு வருகிறது. 1747-இல் அஹ்மத் ஷா துரானியின் தலைமையில் ஆஃப்கானிஸ்தான் நாடு உருவானதில் இருந்து, 1973-ஆன் ஆண்டில் ஸஹீர் ஷா அரசப் பீடத்தை இழக்கும் வரை பஷ்டூன் இனத்தவர் ஆஃப்கானிஸ்தான் நாட்டை ஆண்டு வந்துள்ளனர். பஷ்டூன் இனத்தவருக்கு இடையே, பஷ்டூன்வாலி என்றக் கோட்பாடுக் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. இதில், மரியாதை, விருந்தோம்பல், பழி வாங்குதல் போன்றவை அடங்கும். பின் லேடன் தாலிபானிடம் அடைக்கலம் புகுந்தப் பொழுது, பஷ்டூன் இனத்தவரின் இஸ்லாமிய மதத்தை மட்டுமின்றி, அவர்களின் பஷ்டூன்வாலிக் கோட்பாட்டின் காரணமாகவும் அவர்களிடம் உதவிக் கோரினார். ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையோரப் பகுதிகளில் பஷ்டூன் இனத்தவர் வாழ்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் பொழுது, பஷ்டூன் இனத்தவரின் நிலங்களை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேப் பிரிப்பதற்காக, ட்யூராண்ட் கோடுப் போடப்பட்டது.  ஆஃப்கானிஸ்தான் சமூகத்தில் இருக்கும் இனம் சார்ந்த விசுவாசங்களைக் கண்டுக் கொள்ளாமல் ஸோவியத் யூனியன் தோற்றதுப் போல், அமெரிக்கா-வும் அவற்றைப் புறக்கணித்து வந்துள்ளது. 1978-ஆம் ஆண்டு, ஆஃப்கானிஸ்தான் இராணுவத்தில் உள்ள பஷ்டூன் வீரர்கள், அந்த நாட்டின் அரசைத் தூக்கி எரிந்தனர். இதற்கு, அன்றைய வல்லரசான ஸோவியத் யூனியன்-இன் உதவி அதிக அளவில் இருந்தது. வெற்றிகரமாக ஆட்சியைக் கவிழ்த்தவுடன், பஷ்டுன் வீரர்கள், கண்மூடித்தனமாக மற்ற இனத்தவரைக் கொல்ல ஆரம்பித்தனர். ஆஃப்கானிஸ்தான்-இன் உள்நாட்டு நிலைமையைக் காரணமாகக் காட்டி, அமெரிக்கா-வின் தலைமையில் முதலாளித்துவ நாடுகள் அங்கு நுழைந்து விடுவதைத் தடுக்க, ஸோவியத் யூனியன், 1979-ஆம் ஆண்டில், ஆஃப்கானிஸ்தான் நாட்டை முற்றுகையிட்டது. அதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தான் மூலம் இஸ்லாமிய மத வெறி நிறைந்த வீரர்களான முஜாஹித்தீனிற்கு ஆயுதங்களும் தோட்டாக்களும் வழங்கினர். பாகிஸ்தான் நாடு, பல இன மக்கள் உடைய நாடாக இருப்பது, அதன் பெயரில் இருந்துத் தெரிகிறது - பஞ்சாபி இனத்தவருக்கு ப, பஷ்டூன் (அல்லது ஆஃப்கான்) இனத்தவருக்கு ஆ, காஷ்மீரி இனத்தவருக்கு க, ஸிந்தி இனத்தவருக்கு ஸ் மற்றும் பலோச்சி இனத்தவருக்கு தான். ஆனால், இராணுவம், கலாச்சாரம் மற்றும் அரசியல் செல்வாக்குப் பெரும்பாலும் பஞ்சாபி இனத்தவரிடம் இருக்கிறது. அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதியான ஸியா உல் ஹக், பயங்கரவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் போராளிகளுக்கு, 1980 - 1992 காலக்கட்டத்தில் அமெரிக்க அளித்த 50,000 லட்சம் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களையும் தோட்டாக்களையும் கொடுத்து, மிதவாத இஸ்லாமிய வீரர்களைப் புறக்கணித்தார். இதன் மூலம், பஷ்டூன் இனத்தவரைப் பிரித்து ஆளும் மூலோபாயத்தை மிகவும் நேர்த்தியாகச் செயல்படுத்தினார். இதன் விளைவால், பாகிஸ்தான்-இல் பஞ்சாபி இனத்தவரின் தாக்கம் குறையாமல், பஷ்டுன் இனத்தவரின் செல்வாக்கு மிகவும் குறைந்தது. முஜாஹித்தீன் மற்றும் பாகிஸ்தான் செய்யும் அட்டுழியங்களைக் கண்டுக் கொள்ளாமல், ஸோவியத் யூனியன்-இன் எதிர்காலத்தை இருட்டாக்க வேண்டும் என்ற ஒரேக் குறிக்கோளோடு அமெரிக்கா செயல்பட்டது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில், ஸோவியத் யூனியன் நாட்டின் தோல்விக்குப் பிறகு, தனதுக் குறிக்கோள் அடைந்து விட்டதாகக் கருதி, ஆஃப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேறியது. ஆனால், அது வழங்கியிருந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பயன்படுத்தி, அஃப்கானிஸ்தான் மக்கள் உள்நாட்டுப் போரில் ஈடுப்பட்டனர். அமெரிக்கா-விடம் இருந்துக் கிடைத்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களைப் பயன்படுத்தி, முல்லா முகமது ஒமாரின் தலைமையின் கீழ் இருந்தத் தாலிபான் அமைப்பு, அஃப்கானிஸ்தான் தலைநகரான காபுலை வெற்றிகரமாக ஆக்கிரமித்தது. தாலிபானின் வெற்றிக்கு, பஷ்டூன் இனத்தவரின் எல்லையில்லா விசுவாசம் முக்கியக் காரணமாக இருந்தது. பாகிஸ்தான், பஷ்டூன் இனத்தவரைப் பிரித்து ஆளும் அணுகுமுறையைச் செம்மையாகச் செயல்படுத்தியதன் பயனாக, அனைத்துப் பஷ்டூன் இனத்தவரையும் தாலிபான் தலைமையில் கொண்டு வரச் செய்த முயற்சிகள் வீண் போயின. மேலும், தாலிபான் அமைப்பு பஷ்டூன் அல்லாத இனத்தவர்களை - ஹஸாரா இனத்தவர், டாஜிக் இனத்தவர், சரமாரியாகக் கொன்றுக் குவித்ததால், ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்தது. செப்டெம்பெர் 11-ஆம் தேதியில் நடந்தப் பயங்கரவாதத்திற்குப் பதிலடியாக, ஆஃப்கானிஸ்தான் நாட்டின், தாலிபான் அரசைக் கவிழ்த்தப் பின்னர், பல இனத்தவர் அடங்கிய அரசை அமெரிக்கா நிறுவியது. ஸோவியத் யூனியன் உடனானப் பனிப் போரை மையமாகக் கொண்டு ஆஃப்கானிஸ்தான்-இன் அரசியல் சூழ்நிலையை  அலசிய அமெரிக்கா, செப்டெம்பர் 11-ஆம் தேதிக்குப் பின், இஸ்லாமியப் பயங்கரவாதத்தை முடக்கும் நோக்கில் ஆஃப்கானிஸ்தான்-இன் அரசியல் சூழ்நிலையை அலசியது. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இன விசுவாசங்களைத் துல்லியமாகப் புரிந்துக் கொண்டிருந்ததால், தன்னுடையச் செயல்களில் மிகுந்த அளவு வெற்றியைக் கண்டது. ஆஃப்கானிஸ்தான்-இல் உள்ள பஷ்டூன் இனத்தவர், தங்களதுக் கலாச்சாரம் மற்றும் இனத்தின் முதன்மை இடத்திற்குச் சேதம் ஏற்பட்டதாகக் கருதி, தாலிபான் அமைப்பிற்கு ஆதரவளித்தனர். பாகிஸ்தான்-உம், தனது ஆதரவைத் தாலிபான் அமைப்பிற்கு அளித்ததால், அதன் கை மீண்டும் ஓங்கியது. அதே நேரத்தில், அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மேல் இருந்தக் கவனத்தை இராக் நாட்டின் மீதுச் செலுத்தியது. ஆஃப்கானிஸ்தான்-இன் நிலைமையைச் சரிக்கட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பதற்குள், தாலிபான் அமைப்பு, ஆஃப்கானிஸ்தான்-இல் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
இராக் நாட்டை, அமெரிக்கா ஆக்கிரமித்தப் பொழுது, அதை இரண்டாம் உலகப் போரின் பின் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளைப் போல் சரி செய்யும் நோக்கோடு களமிறங்கியது. இந்த இருச் சூழ்நிலைகளிலும், சர்வாதிகார அரசைத் தூக்கி எறிந்து, மக்களை விடுவித்து, ஜனநாயகம் மற்றும் தாராளவாத அரசியல் சாசனத்தை உருவாக்கும் செயல்கள் நிகழ்ந்தன. ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் செல்வச் செழிப்பு மிகுந்த நாடுகளாக வலம் வந்தன. இராக் நாடு, தோல்வியைத் தழுவிய நாடாக வலம் வந்தது. ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் பெரும்பாலும் ஒரே இனத்தவர் உடைய நாடாக இருக்கின்றன.  இராக் நாட்டில், பல இனத்தவர் வாழ்கின்றனர் - உதாரணத்திற்கு, சுன்னி, ஷியா, கர்ட் இன மக்கள். இராக் நாடு, 1990-களில் உடைந்துச் சிதறிய யூகோஸ்லாவியா நாட்டிற்கு ஒத்து இருக்கிறது - இரு நாடுகளிலும், பல இனத்தவர் நெடுங்காலமாக
இனப் படுகொலைச் செய்து வருகின்றனர். 1990-களில் யூகோஸ்லாவியா ஜனநாயகமாக மாறியப் பொழுது, வெவ்வேறு இனத்தவர்களிடையே சண்டை வெடித்தது. இராக் நாட்டில், சுன்னி இனத்தவர் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், பொருளாதாரம் மற்றும் இராணுவத்தில் அதிகச் செல்வாக்குடன் உள்ளனர். அவர்களைச் சுற்றி, பெரும்பான்மையான ஷியா இனத்தவர் ஏழ்மையில் வாழ்கின்றனர். 1979-ஆம் ஆண்டில், சதாம் ஹுஸேய்ன் இராக் நாட்டில் பதவிக்கு வந்தப் பொழுது, அங்குள்ள ஷியா மற்றும் கர்ட் இனத்தவரைக் கொன்றுக் குவித்தார். சதாம் ஹுஸேய்னின் ஆட்சியைத் தூக்கி எறிந்தப் பின்பு, அமெரிக்க அரசியல் நிபுணர்கள் (இருக் கட்சிகளில் இருந்தும்),  இராக் நாட்டை ஜனநாயகமாக மாற்றுவதில் ஆர்வம் காட்டினர். இராக் நாட்டின் இன விசுவாசங்களை அலசி ஆராயாததால், அமெரிக்கா தனது வீரர்கள், இராக் நாட்டில் விடுதலையைக் கொண்டு வந்தவர்களாகக் கருப்படுவர் என்றுத் தவறாகக் கணக்கிட்டது. அமெரிக்கா-வின் கூட்டுத் தற்காலிக அமைப்பு (ஸி.பி.ஏ), முதல் வேலையாக, இராக் இராணுவத்தில் சதாம் ஹுஸேய்னின் கட்சியான பாத் கட்சி உறுப்பினர்கள் மேல்தட்டுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்ததன் விளைவாக, பல ஆயிரம் வீரர்கள் வேலை இழந்துத் தெருவிற்குத் தள்ளப்பட்டனர். இந்த ஆணையைக் கண்டு, இராக் நாட்டின் சுன்னி இனத்தவர், அந்த நாட்டில் தங்களது செல்வாக்கு அழியும் நேரம் வந்து விட்டது என்று நம்பினர். இதனால், அமெரிக்கா-வின் இராணுவத்தை எதிர்க்கும் போராளிகளிக்கு சுன்னி இனத்தவர் பெருவாரியாக ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர். இவற்றைப் புறக்கணித்த அமெரிக்கா அரசாங்கம், 2005-ஆம் ஆண்டில், இராக் நாட்டில் தேர்தல்களை அறிவித்தது. தேர்தலில் போட்டியிட்டக் கட்சிகள், இராக் நாட்டின் இன விசுவாசத்திற்கு ஒத்து இருந்தன. இந்தத் தேர்தல்களில் சுன்னி இனத்தவர் பங்கெடுக்காமல் புறக்கணித்ததால், ஷியா மற்றும் கர்ட் இனத்தவர் அமோக வெற்றிப் பெற்றனர். ஷியாத் தலைவரான நூரி அல் மாலிக்கிக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து, அவரை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது. இரான் நாட்டின் நெருங்கிய நண்பரான மலிக்கி, இராக் நாட்டின் அரசாங்கப் பதவிகளில் இருந்து சுன்னி மற்றும் கர்ட் இனத்தவரை அப்புறப்படுத்தினார். இராக் நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அமெரிக்க இராணுவம் 'ஸர்ஜ்' என்றப் பெயரில் அதிக அளவு அமெரிக்க வீரர்களை இராக் நாட்டிற்கு அனுப்பியது. அவர்கள், இராக் நாட்டில் உள்ள சுன்னி இனத் தலைவர்களுக்கு லஞ்சம் அளித்து அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முற்பட்டனர். அந்த முயற்சிகள் வெகுவாக வெற்றிப் பெற்றதினால் நிலவிய அமைதியை இராக் நாட்டின் அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிரதமர் மாலிக்கி, இராக் ஷியா இனத்தவரின் நாடு என்றுக் கருதியதால், சுன்னி மற்றும் கர்ட் இனத்தவருக்கு அரசியல் கலந்தாலோசனைகளில் இடம் அளிக்கவில்லை. இதன் விளைவாக், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்தது. அல் கெய்தா இஸ்லாமிய மத அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கைகளை அணுகியது.    ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ, சுன்னி இனத்தவரைப் பாதுகாக்கும் நோக்கோடுப் பயங்கரவாதச் செயல்களைச் செய்தது. ஷியா இனத்தவருக்குப் பாரப்பட்சமாக ஆட்சிச் செய்ததினால், நூரி அல் மாலிக்கியின் அரசை ஆதரிப்பதற்குப் பதிலாக, சுன்னி இனத்தவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரித்தனர். ஷியா இனத்தவரின் கொலை வெறியை காட்டிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் இன வெறியைக் கண்டு அஞ்சினர்.
வெனுஸுவேலா நாட்டின் ஜனாதிபதியாக 1998-ஆம் ஆண்டு, ஹ்யுகோ சாவெஸ் பதவி ஏற்றார். அந்த வருடம் நடந்தத் தேர்தலில், முன்னாள் அழகுப் போட்டியில் வெற்றிப் பெற்ற வேட்பாளரைத் தோற்கடித்தார். மற்ற தெற்கு அமெரிக்க நாடுகள் போல், வெனுஸுவேலா நாட்டு மக்கள், அழகிப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அழகிப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், வெனுஸுவேலா-வில் அரசியலில் கொடிக் கட்டிப் பறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த நாட்டில் உள்ள கருப்புத் தோல் பொருந்தியப் பெரும்பான்மை இந்திய இனத்தவரின் பிரதிநிதியாகத் தன்னை சாவெஸ் நியமித்துக் கொண்டார். அவர் பதவிக்கு வரும் முன், ஐரோப்பியர்களும் இந்திய இனத்தவரும் இனச் சேர்க்கைச் செய்ததால் பிறந்த மெஸ்டிஸோ இனத்தினர் வெனுஸுவேலா நாட்டை நீண்டக் காலம் ஆண்டு வந்தனர். சாவேஸ், தனதுக் கரிய நிறத் தோலைப் பெருமையாக முன்நிறுத்தி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார். ஜனாதிபதியானப் பின், அன்று வரை வெனுஸுவேலா-வின் அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளை உடைத்து எறிந்தார். இது, ஆதரவாளர்களிடையே அவரது ஆதரவை மேலும் அதிகரித்தது. ஏழ்மையில் வாழும் பெரும்பான்மை இந்திய இனத்தவருக்கு நடுவில், மெஸ்டிஸோ இனத்தினர், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மைக் கூட்டமாகத் திகழ்கின்றனர். தங்களது நாட்டில் இனவெறி இல்லை என்று மெஸ்டிஸோ இனத்தினர் அடித்துக் கூறினாலும், அவர்களுக்கும் பெரும்பான்மை இந்திய இனத்தவருக்கும் இடையே உள்ள அரசியல் மற்றும் பொருளாதார வேறுபாடு அந்தக் கருத்தைப் பொய்யாக்குகிறது. அமெரிக்கா மற்றும் இதர வெளிநாடுகள், வெனுஸுவேலா நாட்டில், மெஸ்டிஸோ இன மக்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதினால், சாவெஸ் ஆட்சிக்கு வந்தது, அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. வெனுஸுவேலா நாட்டில் இன வெறி இல்லை என்றுக் கூறினாலும், மெஸ்டிஸோ இனத்தவர், சாவெஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அவரை இன ரீதியில் மிகவும் தரக்குறைவாகத் திட்டினர்.  2002-ஆம் ஆண்டு, அமெரிக்கா-வின் உதவியுடன், வெனுஸுவேலா-வின் இராணுவம், சாவெஸை ஆட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக விலக்கியது. அதன் பின், பெற்றோ கார்மோனா என்ற வெள்ளைக்காரரைப் பதவியில் அமர்த்தியது. சாவெஸ், வெனுஸுவேலா-வின் பெரும்பான்மை இந்திய இனத்தவரின் ஒருமித்த ஆதரவோடு, மீண்டும் பதவிக்கு வந்தார். வெனுஸுவேலா-வின் பொருளாதாரத்தைத் தரை மட்டமாக்கினாலும், அவர் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வாக்குக் கொடுத்ததுப் போல், அவர்களுடைய வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தினார். அவரது இறப்பிற்குப் பின் ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோ, வெனுஸுவேலா-வை தோல்வித் தழுவிய நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், போதை மருந்துக் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் அந்த நாட்டைத் தள்ளியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டானல்ட் ட்ரம்பின் வெற்றியைக் கண்டு அந்த நாட்டில் உள்ள உயர்தட்டு மக்கள் (ஊடகங்கள், அரசியல், கலாச்சாரம்) அதிர்ச்சி அடைந்தனர். டானல்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவருக்கு இன விசுவாசத்தின் பேரில் ஆதரவு அளிக்கின்றனர். அமெரிக்கா-வில் உள்ள உயர்தட்டு மக்கள் மற்ற நாடுகளில் உள்ள தீவிர வறுமையைப் பற்றிக் கவலைப்படும் பொழுது, டானல்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்கா-வின் உயர்தட்டு மக்கள் அங்குள்ள மக்களைக் காட்டிலும் வெளிநாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதாகக் கருதுகின்றனர். கி.பி 2055-ஆம் ஆண்டில், அமெரிக்கா-வில் பெரும்பான்மை மற்றும் சிறுப்பான்மை இனத்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் எல்லா இனத்தவரும் சிறிய விகிதங்களில் இருப்பார்கள் என்றும் மக்கள் தொகை நிபுணர்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியால் நிகழும் இந்த மாற்றங்கள், வருங்காலத்தில் நடக்கப் போவது என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் வெள்ளையர்கள் இல்லை. அமெரிக்கா-வில் உள்ள மக்களின் நிறம் வெள்ளையில் இருந்து பழுப்பாக மாறி விடும் என்று மக்கள் தொகை நிபுணர்கள் கூறுவதைக் கேட்டு வெள்ளையர்கள் பீதி அடைந்துள்ளனர். அமெரிக்கா-வில் உள்ளச் சில இனத்தவர்கள் தங்களுடைய அச்சங்களையும் சக்தியற்ற நிலையையும் விளக்கும் பொழுது, மற்ற இனத்தவர்கள், அதே அனுபவங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்காததால், அதனைக் கண்டுக் கொள்ளாமல், தங்களுடைய நிலைமையைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணத்திற்கு, அமெரிக்கா-வில் உள்ள கருப்பர்கள், அந்த நாட்டின் இன வெறி வரலாற்றைச் சுட்டிக் காட்டும் பொழுது, அங்குள்ள வெள்ளையர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர். அந்த வெள்ளையர்களின் பார்வையில், தங்களுடைய மூதாதையர்களைக் காட்டிலும் இன விசுவாசத்தினால் நிகழும் கொடுமையானச் செயல்களை நிறுத்தியதைக் கருப்பு இனத்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றுக் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பான்மை இனத்தவர்களான வெள்ளையர்கள், சிறுப்பான்மை இனத்தவர்களின் அடையாளங்களைப் பயன்படுத்தும் பொழுது, "கலாச்சாரப் பறிமுதல்" என்றக் குற்றச்சாட்டைச் சிறுப்பான்மையினர் எழுப்புகின்றனர். உதாரணத்திற்கு, வெள்ளைப் பெண்கள் புடவை அணிவது. அமெரிக்கா-வில் எல்லா இனத்தவரும் தங்களுடைய நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது என்ற எண்ணத்தில் செயல்படுவதால், பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களிடையே வெள்ளையர்களின் உரிமைகளைக் கொண்டாடும் வெள்ளையர்கள் நாட்டுரிமை இயக்கம் வலிவடைந்துள்ளது. அமெரிக்கா-வில் உள்ள ஏழை மக்கள், வாழ்வில் வெற்றிப் பெற அமெரிக்கன் ட்ரீம் குறிக்கோளை அடைய முற்படுகின்றனர். சொகுசு வாழ்க்கையில் திளைக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், இந்த முயற்சிகளைப் பயனற்றது என்றுக் கேலிச் செய்கின்றனர். ஏழை மக்களுக்காகப் போராடுகிறோம் என்று அறைக்கூவல் விட்ட ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்  இயக்கம், செல்வச் செழிப்பு அதிகம் உள்ள மக்கள் கலந்துக் கொள்ளும் இயக்கமாக இருந்ததால் சில மாதங்களில் செயலற்றுப் போனது. சமூக ஆராய்ச்சியாளர்கள்,  சிலக் காலமாகவே ஏழை மக்களின் வாழ்க்கையில் தனிமை அதிகரித்திருக்கிறது என்றுப் பல ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சித் தவறான முடிவுகளுக்கு வந்துள்ளது. செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள் ஒன்றுக் கூடும் விளையாட்டு மைதானங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் ஏழை மக்கள் கூடுவதில்லை என்றாலும், செல்வச் செழிப்பு நிறைந்த மக்கள் கூடாத இடங்களான காவல்துறை மற்றும் இராணுவம் போன்ற இடங்களில் ஏழை மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். சிறுபான்மை இனத்தவர்களில் இருக்கும் ஏழை மக்கள், போதை மற்றும் தெருக் கும்பல்களில் உறுப்பினர்கள் ஆகின்றனர். ஏழை வெள்ளையர்களும் வெள்ளையர் அல்லா ஆத்திகர்களும், ப்ராஸ்பெரிட்டி கோஸ்பெல் என்று அழைக்கப்படும் கிறிஸ்துவப் போதனைக்கு ஈர்க்கப்படுகின்றனர். இப்போதனைகள், வாழ்க்கையில் செல்வத்தைச் சேர்ப்பது, கடவுளைச் சென்று அடைவதற்குச் சமானமாகும் என்றுக் கூறுகின்றன. அமெரிக்கா-வில் உள்ள ஏழை மக்களுக்கு, ப்ராஸ்பெரிட்டி கோஸ்பெல் சமூகம், குறிக்கோள் மற்றும் நம்பிக்கையை அளிக்கிறது. கார்களை விரைவாக ஓட்டிச் செல்லும் பந்தயமான நாஸ்கார் மற்றும் போலிச் சண்டைகள் நிறைந்த ரெஸ்ட்லிங்க் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏழை வெள்ளையர்களின் வாழ்க்கையில் பெரிய அங்கம் வகிக்கின்றன. அமெரிக்கா-வின் உயர்தட்டு மக்கள், இவற்றை ஒருப் பொருட்டாகக் கருதுவதில்லை.  அமெரிக்கா-வின் மக்கள் தொகை மாற்றங்களினால் ஏற்படும் நிகழ்வுகளைக் கண்டு அச்சமுறும் வெள்ளையர்கள், அந்த அச்சத்தை, டானல்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், மற்றச் சிறுப்பான்மை இனத்தவரின் மேல் உள்ளப் பொறாமையிலும் வெளிப்படுத்துகின்றனர். வெள்ளையர்கள், அமெரிக்கா-வின் பொருளாதாரம் நிதானமாக வளர்ச்சிக் கண்டிருந்தப் பொழுது, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார இழப்புகளை அதிகம் கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த பொருளாதாரச் சரிவிற்குப் பின், தங்களதுப் பொருளாதார நிலைமையில் சரிவை வெள்ளையர்கள் அதிகம் உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்கா-வைத் தங்களுடைய நாடு என்றுக் கருதுவதால், அவர்களுக்கு இது மேலும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. மேலும், சிறுப்பான்மை இனத்தவர்கள், தங்களுடைய இனப் பெருமையை வெளிக்காட்டும் பொழுது, பெரும்பான்மை வெள்ளையர்கள் தங்களுடைய இனப் பெருமையை வெளிக்காட்ட முடியாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வரலாற்றில், பெரும்பான்மை வெள்ளையர்கள் அமெரிக்கா-வில் தங்களுடைய உயர்ந்த நிலைக்கு ஆபத்து வந்தப் பொழுது, அந்த நிலையைப் பாதுகாக்க, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிறுப்பான்மை இனத்தவரின் அரசியல் உரிமைகளை முடக்கியுள்ளனர். அமெரிக்கா-வில் கொத்தடிமையை அழிக்கும் குறிக்கோளோடு நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில், சில தெற்கு மாநிலங்களில், கருப்பு இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்ததைக் கண்டு, அந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்த வெள்ளையர்கள் இன வேறுபாடுச் சட்டங்களைச் செயல்படுத்தினர். இன்றையக் காலத்தில், அமெரிக்கா-வில் இன வேறுப்பாட்டினால், வெள்ளையர்களின் வாழ்க்கை நிலைக் குறைந்து இருக்கிறது என்றக் கருத்து இரண்டு அரசியல் கட்சிகளிலும் பரவலாக இருக்கிறது. அமெரிக்கா-வின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எல்லா இனத்தவர்களுக்கும் வாய்ப்புகளை விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில், ஏழை மற்றும் கிராமத்தில் வாழும் வெள்ளையர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், ஏழை மற்றும் கிராமத்தில் வாழும் வெள்ளையர்கள் இடையேத் தங்களுடையப் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்களை விடக் குறைந்தச் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள் என்றக் கருத்துப் பரவலாக இருக்கிறது. சிறுப்பான்மை இனத்தவர்களான கருப்பர்களும் ஹிஸ்பானிக் மக்களும் தங்களுடையக் குழந்தைகள் தங்களைக் காட்டிலும் அதிகச் செல்வாக்குடன் இருப்பார்கள் என்றுக் கூறுகின்றனர். அமெரிக்கா-வின் வரலாற்றில் வெள்ளையர்கள் அதிக அளவு அரசியல் செல்வாக்கு இருந்ததால், நாட்டுப் பற்றைச் சுட்டிக்காட்டி சமூகத்தில் இருக்கும் இன வெறித் தவறுகளைத் திருத்த இரு அரசியல் கட்சிகளும் வெவ்வேறுக் காலங்களில் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். உதாரணத்திற்கு, 1960-களில், டெமோக்ராட் கட்சி சிறுப்பான்மை இனத்தவர்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்கானச் சட்டங்களை இயற்றியது, அமெரிக்கா-வின் உள்நாட்டுப் போர் ரீபப்ளிகன் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்டது. நாட்டுப் பற்றை முன் வைத்து, அமெரிக்கா-வில் வாழும் அனைவருக்கும் அரசியல் உரிமைகளை வழங்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1980-களிலும், 1990-களிலும், அந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி, பழமைவாதிகள், அன்றுச் சமூகத்தில் இருந்தச் சமநிலையை மாற்றுவதை எதிர்த்தனர். அதற்குப் பதிலடியாக, தாராளவாதிகள், இனம் சார்ந்த உரிமைகளைத் தங்களது அரசியல் ஆதிக்கத்தால் செயல்படுத்தினர். 1990-களில், ஸோவியத் யூனியன் உடைந்துச் சிதறியப் பிறகு, தாராளவாதிகளின் பொருளாதாரக் கொள்கைகள் தோல்வியுற்றதால், அதற்குப் பதிலாக, இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் தங்களுடையக் கவனத்தைச் செலுத்தினர். ஆரம்பக் காலத்தில், இன அடையாளத்தைச் சார்ந்த அரசியல் கொள்கைகள் அனைவரையும் அனுசரித்துச் சென்றன - உதாரணத்திற்கு, சிறுப்பான்மையினரின் நிலைமையைப் புரிந்துக் கொள்ளுமாறுப் பெரும்பான்மையினரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்). சமூகத்தின் சமநிலையில் எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தப் பொழுது, தாராளவாதிகள், இன அடையாளத்தைப் போற்றும் அரசியலில் பெரும்பான்மை இனத்தவரை அப்புறப்படுத்தும் அணுகுமுறைகளைக் கையாண்டனர் - உதாரணத்திற்கு, அமெரிக்கா-வின் வரலாற்றில் நிகழ்ந்த இன வெறித் தவறுகளுக்கு வெள்ளையர்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை). இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் பரவலினால், வெவ்வேறுக் குழுக்கள் தத்தம் உரிமைகளுக்கு எப்பொழுதும் போராடிக் கொண்டே இருக்கின்றன. இதிப் பலக் காரணிகளால் நிகழும் தனிமனித அடக்குமுறையை வெளிக்கொண்டு வந்துள்ளது - உதாரணத்திற்கு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய வேறுப்பாட்டை வெள்ளை இனப் பெண்கள் எழுப்பியப் பொழுது, சிறுப்பான்மை இனத்தவர்களில் உள்ளப் பெண்கள், தங்களுக்கும் பெரும்பான்மை இனப் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய வேறுப்பாட்டைச் சுட்டிக் காட்டி, தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். டானல்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற அடுத்த நாள் (ஜனவரி 21, 2017), பெண்கள் பெருந்திரளாக அமெரிக்கா-வின் பல நகரங்களில் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் பெயர் முதலில் மில்லியன் வுமன் மார்ச் என்றப் பெயரோடு ஆரம்பித்தது. ஆனால், 1997-ஆம் ஆண்டில், கருப்புப் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்கு நிகழ்த்திய அமைதி ஆர்ப்பாட்டத்தின் பெயர் மில்லியன் வுமன் மார்ச் என்று இருந்ததால், அந்தப் பெயரை மீண்டும் பயன்படுத்துவதற்கு கருப்புப் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் விளைவாக, டானல்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பியப் பல பெரும்பான்மைப் பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இன அடையாளத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதினால், தாராளவாதிகள், கலாச்சாரப் பறிமுதல் எல்லாத் திசைகளிலும் எல்லாச் சிறுப்பான்மை இனங்களுக்கும் நிகழ்வதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து வருகின்றனர். பழமைவாதிகள், தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக, டானல்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களாகத் தங்களை உருமாற்றிக் கொண்டுள்ளனர். தங்களுடைய எந்த ஒரு முடிவிலும் தனி மனிதப் பொறுப்பு எடுத்துக் கொள்வதை விரும்பாமல்(தனி மனிதப் பொறுப்பு, மற்றவர்களுக்குப் போதிக்கும் பொழுதுப் பழமைவாதிகளுக்கு பயனுள்ளக் கருவியாக உள்ளது), டானல்ட் ட்ரம்ப்பைத் தாங்கள் ஆதரிப்பது, தாராளவாதிகள் அவரை எதிர்ப்பதினால் தான் என்றுச் சாக்குக் கட்டியுள்ளனர்.  தனி மனித உரிமைகளுக்குப் போராடுவதுத் தங்களுடைய அரசியல் கொள்கை என்றுக் கூறினாலும், டானல் ட்ரம்ப்பை வெகு விமரிசையாக ஆதரிப்பதினால், பழமைவாதிகள்  அவர்களதுக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ஜஸ்ட் பேபீஸ்: தி ஆரிஜின்ஸ் ஆஃப் குட் ஆண்ட் ஈவில் - பால் ப்ளூம்
க்வீன் ஃபார் அ டே: ட்ரான்ஸ்ஃபார்மிஸ்டாஸ், ப்யூட்டி க்வீன்ஸ் ஆண்ட் தி பெர்ஃபார்மன்ஸ் ஆஃப் ஃபெமினினிட்டி இன் வெனுசுவேலா - மார்சியா ஓச்சொவா
ஸ்ட்ரேஞ்சர்ஸ் இன் தெயர் ஓண் லாண்ட்: ஆங்கர் ஆண்ட் மோர்னிங்க் ஆன் தி அமெரிக்கன் ரைட் - ஆர்லி ரஸ்ஸல் ஹாத்ஸ்சைல்ட்
ஹூ ஆர் வீ: தி சேலஞ்சஸ் டூ அமெரிக்கன் ஐடென்டிட்டி - சாமுவேல் பி ஹன்டிங்க்டண்

No comments: