ஏழை படும் பாடு

சுருக்கம்:
கல்லூரி நாட்களில் பேருந்தில் ஏறி விட்டு, பேருந்துச் சீட்டிற்கானக் காசு இல்லாமல் தவித்த அனுபவம் உண்டு. கல்லூரி மாணவர்களுக்கான மானிய விலைச் சீட்டுகளைப் பயன்படுத்தினாலும் வங்கியில் எனதுப் பெயரில் பணம் இருந்தாலும் இந்த நிலைமை ஏற்பட்டது. பெரும்பாலும், பேருந்தில் ஏறுவதற்கு முன் முக்கியமான வேலைகள் முடிப்பதில் கவனம் இருந்த பொழுது இவ்வாறு நடக்கும். அவசரமாகப் பேருந்தில் ஏறும் முன், சீட்டிற்குத் தேவையானச் சில்லறையை ஒழுங்காக எண்ணாததால், இது நடந்தது. அவ்வாறுத் தர்மசங்கடமான நிலைமையில் மீண்டும் மீண்டும் மாட்டிக் கொண்டதைப் பற்றி நினைக்கும் பொழுது, ஒரு கண முன் யோசனையுடன் கையில் இருக்கும் சில்லறையை ஒன்றுக்கு இரண்டு முறைச் சரிப்பார்த்துக் கொண்டிருந்தால் அது நடந்திருக்காது. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், எனது நடத்தையின் காரணம் சிறிதுத் தெளிவடைந்தது. நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களின் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் மனிதர்களின் நடத்தை மாறுபடுவதற்கானக் காரணங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை உள்ளவர்கள், அவற்றின் ஒன்றில் பற்றாக்குறை ஏற்பட்டால், மற்றவைகளிலும் பின் தங்குவதை ஆசிரியர்கள் விவரித்திருக்கிறார்கள். பற்றாக்குறையின் விளைவுகளை எடுத்துக்காட்டும் சோதனைகளை நன்றாக விவரித்திருக்கிறார்கள். ஆசிரியர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவராக இருப்பதால், இந்தியா-வில் நடத்தப்பட்ட சோதனைகள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. வருங்காலத்தில், பற்றாக்குறையின் விளைவுகளை அலசி ஆராய்வதன் மூலம் அதிக அளவில் மனிதர்களின் நடத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு முயன்றும், நேரப் பற்றாக்குறையால் தினமும் அவதிப்படுவதால்(வீட்டிலிருந்து, வேலைக்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அது வரைக் கையில் வைத்திருந்த பழக் கூடையை, ஷூ அணிவதற்காக பையின் மேல் வைப்பதற்குப் பதில் (நேரப் பற்றாக்குறை இல்லாதப் பொழுதுப் பையின் மேல் வைப்பதுப் பழக்கம்), அருகில் இருந்த ஷூ மேடையில் வைத்தேன். ஷூ அணிந்தவுடன், பழப் பையை வீட்டில் வைத்து விட்டு, வேலைக்கானப் பையை எடுத்துக் கொண்டுப்  பேருந்தைப் பிடிக்கச் சென்று விட்டேன். பேருந்தை நோக்கிப் பாதி வழிச் சென்றவுடன் பழப்பையை வீட்டில் வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தாலும் திரும்பிச் சென்று அதை எடுப்பதற்குள் பேருந்துக் கிளம்பி விடும் என்பதால் அவ்வாறுச் செய்யவில்லை), இந்தப் புத்தகம் படிப்பதற்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.
அலசல்:
சிலப் புத்தகங்களில் படிக்கும் யோசனைகள், நிஜ வாழ்க்கையில் நமது அனுபவத்தை ஒன்றி இருந்தால், நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அந்த நோக்கோடுப் பார்க்கத் தோன்றும் ('அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல்). தினப்படி,  நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலின் விளைவால், மனிதர்களின் நடத்தை வேறுபாடுகளை இந்தப் புத்தகத்தில் ஆராய்ந்து இருக்கிறார்கள். பற்றாக்குறையை 'நமக்குத் தேவை என்று நாம் எண்ணும் அளவை விடக் குறைவாக இருப்பது' என்று வரையறுக்கின்றனர். சில சமயம், ஆசிரியர்கள், பற்றாக்குறையின் விளைவுகளை வாழ்க்கையின் எல்லா விதப் பிரச்சனைகளுக்கும் விளக்கமாக அணுகுவதுப் போலத் தோன்றுகிறது. மக்களின் தினசரிப் பிரச்சனைகளான வறுமை, தனிமை, உடல் பருமன் போன்றவற்றை ஆராய்ச்சிச் செய்பவர்கள்,  பற்றாக்குறையினால் மனிதர்களின் நடத்தை மாறும் யோசனையை வருங்காலத்தில் பெரிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். பொருளாதார நிபுணர்கள், தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பற்றாக்குறைகளை அலசி ஆராய்கிறார்கள் - உதாரணமாக,  பணம் கையில் குறைவாக உள்ள பொழுது, அதற்கு ஏற்றாற் போல் சிறியக் காரை வாங்குவதைப் பற்றிய அலசல். இந்தப் புத்தகத்தில், நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலால் தனி மனிதர்களின் மன நிலை எவ்வாறுப் பாதிக்கப்படுகிறது என்று அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். இந்த நான்குப் பரிமாணங்களில், பணப் பற்றாக்குறையினால் ஏற்படும் வறுமையை ஆசிரியர்கள் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள். கையில் பணம் இருந்தால், நேரம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களின் பற்றாக்குறையைப் பணத்தை வைத்துத் தீர்த்துக் கொள்ளலாம்( உதாரணத்திற்கு,  நேரப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்வது போல்). கையில் பணம் இல்லா விட்டால், தான் மற்றும் தனதுக் குடும்பத்தாரின் வாழ்க்கைச் சீர்குலையக் கூடிய முடிவுகளை(உதாரணத்திற்கு, சுகாதாரமற்ற உணவு, தேவையான மருத்துவச் சிகிச்சை கிடைக்காதது, குழந்தைகளைச் சீரான முறையில் பேணிப் பாதுகாப்பது)  எடுக்க வேண்டி வரும்.
பற்றாக்குறையின் விளைவுகளைப் பற்றிய அலசல் இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்கா-வின் யூனிவர்ஸிட்டி ஆஃப் மின்னஸோட்டாவில் நடத்தப்பட்டச் சோதனைகளில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தச் சோதனைகளில், பட்டினியின் விளிம்புகளில் உள்ள மனிதர்களுக்கு எந்த அளவு உணவும் எப்படிப்பட்ட உணவும் அளிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சிச் செய்யப்பட்டது(விஞ்ஞான ஆராய்ச்சியாக இல்லாமல் இருந்தால், இதைப் பற்றிப் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியர்களிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாம். அவர்களது ஏகாதிப்பத்தியத்தில் பட்டினியால் கணக்கிலடங்கா மக்கள் இறந்தனர்).  பட்டினிக் கிடப்பவர்களின் மனதைப் பற்றாக்குறைப் பற்றிய எண்ணங்கள் கைப்பற்றி, எப்பொழுதும் அதைப் பற்றியே நினைக்க வைக்கின்றன. பற்றாக்குறையைப் பற்றி நினைக்கக் கூடாது என்று சோதனைகளில் பங்கேற்றவர்கள் முயன்றாலும், அவர்களின் உறுதியையும் மீறி அவர்களின் சிந்தனைப் பற்றாக்குறைப் பக்கம் சென்றது. அதன்பின் நடத்தப்பட்ட மற்றச் சோதனைகளும் அந்த விளைவுகளை உறுதிப்படுத்தியிருக்கின்றன. பட்டினியால் தவிக்கும் பொழுது, சோதனையில் பங்கேற்றவர்கள், பட்டினியை உணர்ந்து தங்கள் சுய உணர்வைப் பயன்படுத்தி, அவர்களதுத் தேர்வுகளைச் செய்யவில்லை.  அவர்களது ஆழ்ந்த உணர்வுகளின் செயலினால், தங்கள் தேர்வுகளைச் செய்தார்கள். நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் இருப்பவர்கள், தங்களது வாழ்க்கையில் உள்ள மற்ற நிகழ்வுகளுக்குத் தேவையானக் கவனம் செலுத்த முடிவதில்லை. பற்றாக்குறையில் தவிப்பவர்களுக்கு, அதுவே அதிகப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது - பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யப் போதுமான அளவு மனத் திறன் இல்லாததால், பிரச்சினை மேலும் பெரிதாகிறது - தங்களது வாழ்க்கையில் உள்ள மற்ற நிகழ்வுகளுக்கு தங்களது மனத் திறனைச் செலுத்த முடியாததால், அவற்றிலும் பிரச்சினைகள் வெடிக்கின்றன - அதனால், தீவிரமடைந்தப் பற்றாக்குறைப் பற்றி மேலும் கவலைப்படுகின்றனர். பற்றாக்குறையின் நன்மை என்று ஒன்று இருந்தால், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய ஒரேக் குறிக்கோளுடன் செயல்பட வைக்கிறது. அவர்களது வாழ்க்கையில் மற்ற நிகழ்வுகளைக் கண்காணிக்க முடியாததால், அது நல்ல அணுகுமுறையும் அல்ல.
நேரப் பற்றாக்குறையால் ஏற்படும் குறுகியக் காலக் கெடுவினால், மனிதர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது - சோதனைகளில், கல்லூரி மாணவர்களிடையே எஞ்சியிருக்கும் கல்லூரி நாட்களை, ஒட்டு மொத்தமாக ஒரு எண்ணிக்கையாக நினைப்பதை விட அந்த வருடத்தின் விகிதமாக நினைத்தால், அதிக அளவில் அனுபவிக்கிறார்கள், வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் கூப்பான் சீட்டுகளில் அவைக் காலாவதியாகும் நாள் குறிப்பிடப்படாமலிருந்தால், அவற்றைப் பயன்படுத்தாமல் காலாவதியாகும் நாள் குறிப்பிடப்பட்டிருக்கும் கூப்பான் சீட்டுகளை (அவைக் குறைந்த மதிப்புடையதாக இருந்தாலும்) பயன்படுத்துகிறார்கள்.
பற்றாக்குறையினால், தன் முன் இருக்கும் பணியில் செலுத்தும் கவனத்தினால் கிடைக்கும் பலனிற்கு கவனத்தின் ஈவுத்தொகை என்று அழைக்கின்றனர். மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் பற்றாக்குறையும், கவனத்தின் ஈவுத்தொகையும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு, தன் கண் முன்னால் உள்ளப் பணியில் அதீதக் கவனம் செலுத்துவதினால், வாழ்க்கையில் உள்ள மற்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய உதிரி மனத் திறன் இல்லாமல் போகிறது. இதனை டன்னலிங்க் என்று அழைக்கின்றனர். மற்றச் செயல்களில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடியும் திறன் பலபணிச் செயல் என்று அழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பலபணிச் செய்வதில் மனிதர்கள் திறனாளிகள் அல்ல என்றும் ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.
டன்னலிங்க் மற்றச் சிந்தனைச் சிதறல்களை முடக்குவது இலக்குத் தடுப்பின் மூலம் நடக்கிறது - ஒருச் செயலின் மீதுக் கவனம் இருக்கும் பொழுது மற்றவைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு மனம் தடுமாறுகிறது. தற்சமயம் ஈடுப்பட்டிருக்கும் செயலில், கவனத்துடன் செய்யப்படும் பணிக்குத் தேவையானவை  அந்தப் பாதையில் தோன்றுவதால் செயல்படுத்தப்படுகின்றன. அந்தப் பாதைக்கு வெளியில் இருக்கும் செயல்கள் (அவை முக்கியமானதாக இருந்தாலும், தற்சமயக் கவனத்திற்கு உட்படாதவை என்பதால்) புறக்கணிக்கப்படுகின்றன. பற்றாக்குறையில் வாழும் நபர், ஒருக் குறிப்பிட்டப் பணியை முடிப்பதற்குரியப் பாதையில் செல்லும் பொழுது நல்லது கெட்டதை மதிப்பிட்டு முடிவுகளை எடுப்பதில்லை - பற்றாக்குறை மனதை முழுக்க ஆக்கிரமிப்பதால், கவனத்தின் ஈவுத்தொகையின் நன்மையையும் டன்னலிங்கின் கெடுதலையும் கணித்துத் தனக்கு அதிகப்படியாகச் சாதகமாக இருக்கும் அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதில்லை. டன்னலிங்கினால் ஏற்படும் பாதிப்பு டன்னலிங்க் வரி என்று அழைக்கப்படுகிறது - வேலைச் செய்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றொருப் பக்கம் தொலைபேசியில் பேசினால், செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்வதோடு, தொலைபேசியிலும் கவனம் சிதறக் கூடும். இதனால் தான், வேலையில் ஆழ்ந்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் நலனைக் கருதாமல் இருப்பதுப் போன்றத் தோற்றம் அளிக்கிறது - தன் முன் இருக்கும் வேலையை முடிப்பதில் கவனம் செலுத்துவதால், அந்தப் பாதையில் அந்த வேலை முடிப்பதற்கு உதவாதச் செயல்கள் புறக்கணிக்கப்படும்.
கவன ஈவுத்தொகை மற்றும் டன்னலிங்கின் விளைவுகளை ஆராய, ஆசிரியர்கள் அலைவரிசை என்றக் கருத்தை முன்வைக்கின்றனர் - ஒருச் சமயத்தில், ஒரு மனிதரின் ஒட்டுமொத்தக் கணிப்புத் திறன் (கணினியில் வரையறுக்கப்படும் சீரற்ற அணுகல் நினைவகத்திற்கு ஒத்தது). பற்றாக்குறையினால், இருக்கின்றத் திறன் குறைந்து, வாழ்க்கையின் ஏனையச் செயல்களில் கவனம் செலுத்தும் திறன் குறைகிறது - உதாரணத்திற்கு, ஒரே நேரத்தில், அதிக அளவில் கணினித் திட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தால் கணினியின் செயலி வேகம் குறைவதுப் போல். ஒரு மனிதரின் அலைவரிசை இரண்டுப் பாகங்களைக் கொண்டது - அறிவாற்றல் திறன் (பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண்பது, தகவல்களை தேக்கி வைத்துக் கொள்வது, தர்க்க ரீதியாக அலசுவது போன்றவை) மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு (திட்டமிடல், கவனம் செலுத்துதல், செயல்களைத் தொடங்குதல், செயல்களை முடக்கி வைத்தல், உந்துவிசையை அடக்குதல் போன்றவை). பற்றாக்குறையை அலசும் சோதனைகளில், நிஜ வாழ்க்கையில் நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில்  பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் ஒருவர் இல்லை என்றாலும், அவரது மனதை அந்தத் திசையில் சிந்திக்குமாறுத் (கேள்விகள் மற்றும் பரிந்துரைகள் மூலம்) தட்டி விட்டால், பற்றாக்குறை மனதை முழுதும் ஆக்கிரமிக்கிறது.
பணப் பற்றாக்குறையினால் மக்கள் எடுக்கும் முடிவுகள் பற்றி நிறையச் சோதனைகளை விவரித்திருக்கிறாரகள் - உதாரணத்திற்கு, கரும்பு விவசாயிகள் மூலம் அலைவரிசையின் இயக்கத்தை விளக்கியிருக்கிறார்கள். இந்தச் சோதனைகள் மூலம், பணப் பற்றாக்குறையினால் தவிக்கும் ஏழை மக்கள், தங்களது ஏழ்மையை அகற்ற முடியாமல் இருப்பது அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றலினால் அன்றிப் பணப் பற்றாக்குறை அவர்களது மனதை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்வதனால் தான் என்று வாதாடுகின்றனர். மனிதர்கள் தனிப்பட்ட முறையில் முடிக்க வேண்டியச் செயல்களுக்குத் தேவையான அலைவரிசையை நெருக்கமின்மை என்றக் கருத்தின் மூலம் விளக்கியிருக்கின்றனர். நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் இருக்கும் பொழுது, செய்து முடிக்க வேண்டியச் செயல்களுக்குத் தேவையான நெருக்கமின்மை இன்றி இருக்கின்றனர் - பற்றாக்குறை நிகழ்வதற்கு முன் அதிக அளவில் நெருக்கமின்மை இருப்பதால், தாங்கள் செய்து முடிக்க வேண்டியச் செயல்களை நினைவில் கொள்வதுக் கடினம். நெருக்கமின்மைக் குறையும் பொழுது, மனிதர்கள் தங்களுக்குப் பிரதானமானக் காரியத்தை முடிக்க டன்னலிங்க் செய்கின்றனர் - இதனால், மற்ற முக்கியச் செயல்கள் அந்தப் பாதைக்கு வெளியில் தள்ளப்படுகின்றன(சில நாட்கள் கழித்து, அவைப் பிரதானச் செயல்களாக மாறும்). இவ்வாறுத் தீயச் சுழற்சியில் பற்றாக்குறை மென்மேலும் அதிகரிக்கும்.  பற்றாக்குறை, மனதை ஆக்கிரமிக்கும் வரை, நெருக்கமின்மையை மனிதர்கள் கருத்தில் கொள்வதில்லை. நெருக்கமின்மை அதிகமாக இருக்கும் பொழுது, அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களை அதிகரிக்க பெரும்பாலானோர் முயற்சிப்பதில்லை. நெருக்கமின்மை அதிகமாக இருக்கும் பொழுது, மக்களால் தவறுகளிலிருந்து மீண்டு வர முடிகிறது. தவறுச் செய்தாலும் அதனைச் சரி செய்து, மீண்டும் ஒரு முறை முயற்சிச் செய்ய நெருக்கமின்மை உதவுகிறது.அதற்கு மாறாக, நெருக்கமின்மைக் குறைவாக உள்ளவர்கள், தேவையானப் பணி முடிக்கப்படாமல் போனால், அவர்களை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடுகிறது(இதனால் தானோ என்னவோ, இந்தியா-விற்கும் அமெரிக்கா-விற்கும் இடையே கல்வி அணுகுமுறையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் முழுக்க, அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சிக் கண்டதனால், அங்கு பிறந்து வளர்ந்தவர்களுக்குப் கல்வியைச் சார்ந்தத் தேர்வுகளைச் செய்ய, அதிக அளவில் நெருக்கமின்மை இருந்தது. கல்லூரிப் படிப்பை நிறுத்தினாலும், நடுத்தர வர்க்கத்தில் செழிக்கும் அளவிற்கு நெருக்கமின்மை இருந்தது. படிப்பு மட்டுமின்றி, கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் நாட்டம் செலுத்தவும் அவகாசம் கிடைத்தது. 2008-இல் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவிற்குப் பின், வேலை வாய்ப்புகள் குறைந்து, அதிகச் சம்பளம் தரும் வேலைகளுக்கு இளநிலைப் படிப்புக் குறைந்தப் பட்சம் தேவை என்ற நிலைமை உருவாகியது. அமெரிக்கப் பொருளாதாரம் கொடிக்கட்டிப் பறந்த நேரத்தில், மக்களைச் சேமிக்க ஊக்குவிக்காமல், அவர்களை செலவுச் செய்யும் வாடிக்கையாளர்களாகக் கருதியதனால், 2008-இல் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவிற்குப் பின், அங்குள்ள மக்கள் பண நெருக்கடியில் தவித்தனர். கல்லூரிப் படிப்பிற்கான செலவுகள் அதிவேகமாகக் கூடிக் கொண்டே போனதனால், இளநிலைப் பட்டம் வாங்கும் முயற்சியில், தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் கடனுக்கு மேல் அதிக அளவில் கடனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர். அதற்கு மாறாக, இந்தியா-வின் பொருளாதாரம், சோஷியலிஸத்தைக் கடைப்பிடித்ததனால், 20-ஆம் நூற்றாண்டில் ஆமை வேகத்தில் முன்னேறியது. வேலைத் தேடுபவர்களை விடக் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் இருந்ததனால், இந்திய மக்கள், இருக்கின்ற வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறுக் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தினர். இதனால், கலை மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு மிகக் குறைந்த அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், கல்லூரிப் படிப்பில் கவனம் சிதைந்து பின்னடைவு நேர்ந்தால், அதனைப் பிற்காலத்தில் சரிக்கட்டுவது மிகவும் கடினமாக இருந்தது.). தவறாக அல்லது உந்துவிசையினால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் திட்டங்களின் விளைவுகள், நெருக்கமின்மை அதிகமாக இருந்தால், மக்களை அதிகமாகப் பாதிப்பதில்லை. அதே தவறுகளின் விளைவுகள், நெருக்கமின்மைக் குறைவாக இருந்தால், பூதாகரமாக வெடிக்கின்றன. நெருக்கமின்மை அதிகமாக இருந்தால், திட்டமிடும் பொழுது, திட்டக் கூறுகளின் நுணுக்கத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டாம் - மாதக் கடைசியில் பண வருவாய் குறைவாக இருக்கும் பொழுது, பிரம்மாண்டமானத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது அதிகச் செலவாகத் தெரியும். மாத ஆரம்பத்தில் பண வருவாய் அதிகமாக இருக்கும் பொழுது, அதுத் தங்களுக்கு உகந்தப் பரிசாகத் தோன்றும்.
நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் இருப்பவர்கள், அந்தப் பற்றாக்குறையைத் தளர்த்தக் கூடியத் தகவல்களில் கைத்தேர்ந்தவர்களாகிறார்கள். ஆனால், அந்தத் தகவல் திறனைச் செயல்படுத்தத் தேவையான நெருக்கமின்மை இன்றித் தவிக்கின்றனர். வெவ்வேறுப் பரிமாணங்களில் பற்றாக்குறை எதிர்கொள்ளாதவர்கள் அந்தத் தகவல் திறனின் நன்மையை உணராமல், தங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது அதனை உணர்கின்றனர். இதன் விளைவாக, நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் இருக்கும் ஏழைகள், பொருளாதார வல்லுநர்கள் விவரிக்கும் பகுத்தறிவுப் பொருந்தியப் பாத்திரங்களாகத் திகழ்கின்றனர். வெவ்வேறுப் பரிமாணங்களில் பற்றாக்குறை அல்லாதவர்கள் நடத்தைகளை அலசும் பொருளாதார நிபுணர்கள் விவரிக்கும் பகுத்தறிவு அற்ற பாத்திரங்களாகத் திகழ்கின்றனர். விற்பனையாளர்களும் லாபக் குறிக்கோளற்ற அமைப்புகளும் இதனைத் தங்களுக்குச் சாதகமாக வைத்து நிதித் திரட்ட  முயல்கின்றனர்(உதாரணத்திற்கு, அரசுச் சாராப் பொது வானொலி அமைப்புகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வருடத்திற்கு 365 டாலர் கொடைக் கொடுக்குமாறுக் கேட்பதற்குப் பதிலாக ஒரு நாளைக்கு ஒரு டாலர் கொடுக்குமாறுக் கேட்கின்றனர்). நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழல், ஒருவரின் சிக்கனமானப் போக்கினாலும் உருவாகலாம். அது, அவரதுத் தேர்வுகளால்  நேர்கிறது. நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழல், ஏழை மக்களின் மேல் திணிக்கப்படுகிறது. சிக்கனமாக இருக்கும் மக்களிடம் கூட, பற்றாக்குறையின் அணுகுமுறை சில சமயம் வெளிப்படுகிறது - உதாரணத்திற்கு, வண்டியில் போடப்படும் எரிவாயு விலைக் கூடும் பொழுது, மலிவு விலையில் கிடைக்கும் குறைந்தத் தர எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். அதற்குப் பதிலாக, மற்றச் செலவுகளை குறைத்துக் கொண்டு அதேத் தர எரிவாயுவைப் பயன்படுத்தலாம்.
நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை நிறைந்தச் சூழலில் உள்ளவர்கள், தற்சமயம் முடிக்க வேண்டியப் பணிக்கானத் தேவைகளை வருங்காலத்தில் இருந்துக் கடன் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறுச் செய்வதற்கு, கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது(பணப் பற்றூக்குறையை உதாரணமாகக் கொண்டால், கடன்களுக்கு செலுத்தும் வட்டியைப் போல்). அதன் பலனாக, அவர்கள் முடிக்க வேண்டியப் பணியில் முன்னேற்றம் காண்கின்றனர். ஆனால், அந்தப் பணியை முடிக்கக் கூடியப் பாதையில், வருங்காலத்தில் இருந்துக் கடன் வாங்கியதனால் உருவாகும் பிரச்சினைகள் நுழைவதில்லை. இதனால், வருங்காலத்தில் நிகழப் போகும் நெருக்கமின்மையின் குறைவு, அந்தப் பாதையின் வெளியில் இருப்பதால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. சில சூழ்நிலைகளில், இது மிகச் சிறந்த அணுகுமுறையாக விளங்குகிறது - வீடுத் தங்கள் கையை விட்டு போகும் நிலைமையில், கடன் வாங்குவது உசிதமான அணுகுமுறையாகும். ஆனால், அவ்வாறுச் செய்வதன் மூலம், வருங்காலத்தில் பற்றாக்குறையில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது(20-ஆம் நூற்றாண்டில், இந்திய கல்வி முறையின் வெற்றிகள் குறைவாக இருந்ததற்கு இது ஒருக் காரணமாக் இருக்கலாம். இந்தியா-வில் சோஷியலிஸக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதால், கிடைக்கும் வங்கிக் கடன்களின் (கல்வி மற்றும் ஏனைய செயல்களுக்கும்) வட்டி மிக அதிகமாக இருந்தது.அதனால், தங்களது வாழ்க்கைப் பிழைப்பைப் பார்ப்பதா அல்லது கல்விக்காக கடன் வாங்குவதா என்றக் கேள்வி எழுந்தப் பொழுது, வாழ்க்கைப் பிழைப்பின் கை மேலோங்கியது. 1990-களில், இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலின் விளைவினால், கடன்களின் வட்டி விகிதம் குறைந்தது. கல்விக்காக எடுக்கப்பட்டக் கடனை அடைக்க, கல்வி நிறைவடைந்தப் பிறகு, நல்ல வேலைக் கிடைப்பது முக்கியமாக இருந்தாலும், அதிக அளவில் கடன்கள் கிடைப்பதன் மூலம், கல்வியின் பலனை அனுபவிக்கும் வாய்ப்பு முன்பை விட அதிகப்படியான மக்களுக்குக் கிட்டியது).
இந்த அணுகுமுறை, நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறையில் தவிக்கும் ஏழைகளைப் பற்றி,  பரவலாக மக்களிடையே நிலவும் கருத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. பொதுவாக, மக்களின் ஏழ்மைக்கு, அவர்களது கிட்டப் பார்வையும், உந்து விசைக் கட்டுப்பாட்டுக் குறைவையும், உள்ளார்ந்தத் திறனாலும், செல்வத்தை உண்டாக்கும் மற்றும் சிக்கனமாகச் செலவு செய்யும் அறிவின்மையும் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பற்றாக்குறையின் பிடியில் இருப்பவர்கள், தற்சமயப் பணியை முடிக்கும் பாதைக்கு வெளியில் இருப்பவற்றை வருங்காலத்திற்குத் தள்ளிப் போடுகின்றனர். பற்றாக்குறையில் தவிக்கும் ஒருவருடைய நடத்தையே, பற்றாக்குறைப் பெரிதாகக் காரணமாகிறது - இதை, பற்றாக்குறைப் பொறி என்று விவரிக்கின்றனர். தங்கள் கையில் இருக்கும் சொத்துகளை உகந்த முறையில் பயன்படுத்தாதினால், நிஜத்தில், அவர்களது விருப்பங்களைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பணப் பற்றாக்குறை உள்ளவர்கள், கடன் வாங்குவதன் மூலம் அந்தப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்கின்றனர். அவர்களுக்கு இன்றுக் கிடைக்கும் வருமானம், அந்தக் கடனை அடைப்பதற்குக் கொடுக்க வேண்டிய வட்டிக்குச் செல்கிறது - பற்றாக்குறையின் சூழலில் கடன் வாங்குவதினால், சாதாரணமான வட்டியைக் காட்டிலும் அதிக வட்டிக் கொடுத்துக் கடன் வாங்குகின்றனர்.
இதனால், பற்றாக்குறையால் தவிக்கும் மக்களின் அத்தியாவசியச் செலவுக்காக ஒதுக்கப்படும் வருமானம் குறைகிறது(இது, அமெரிக்கா-வில் வாழ்பவர்கள், பார்ப்பதற்குப் பணக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் பணக்காரர்களாகத் தங்களைக் கருதாதது போன்றதாகும். பலத் திசைகளில் இருந்து வரும் கடன்களைக் கையாள்வதால், ஒவ்வொருக் கடனை அடைக்க அவர்கள் செய்யும் முன்னேற்றம் மிகக் குறைவாக உள்ளது). டன்னலிங்க் செய்யும் ஏழைகள் ( நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில்), பல்வேறு முக்கியப் பணிகளை ஒரே நேரத்தில் கையாள்வதால், ஒவ்வொருப் பணிக்கும் அளிக்கத் தேவையானக் கவனம் அளிக்கப்படாமல் போகின்றது. இதனால், முக்கியப் பணிகளைப் பற்றாக்குறை அல்லாதவர்கள் சாதாரணமாகக் கையாண்டாலும், பற்றாக்குறையின் அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு அதேப் பணிகள் அதிர்ச்சியைத் தருகின்றன. பற்றாக்குறை அல்லாமல் இருந்தால், ஏழைகள்( நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில்), தங்கள் நிலைமையை மேம்படுத்தக் கூடியத் திட்டத்தைத் தீட்டி அதனைச் செயல்படுத்தக் கூடிய அவகாசம் இருக்கிறது. ஆனால்,  நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் பரிமாணங்களில் திடீரெனத் தோன்றும் தேவைகளால், இவ்வாறு உருவாக்கப்பட்டத் திட்டங்கள் சின்னாப்பின்னமடைகின்றன.  நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறை இல்லாத பொழுது, மக்கள் வருங்காலத்திற்கான நெருக்கமின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், பற்றாக்குறை நிகழும் பொழுது, அவர்களைக் காப்பாற்ற, நெருக்கமின்மை உதவும். ஆனால், பெரும்பாலான மக்கள் எந்த ஒரு முக்கியக் காரியத்தையும் தள்ளிப் போடுவதால், நெருக்கமின்மையை வளர்க்கும் திட்டங்களும் வருங்காலத்திற்குத் தள்ளப்படுகின்றன. அவற்றைச் சரிகட்டுவதற்கு முன், நிறைய மக்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.
நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களின் பற்றாக்குறை அவைத் தழைக்கும் சூழலைச் சார்ந்து இருப்பதால், பற்றாக்குறையைக் குறைத்து நெருக்கமின்மையை அதிகரிக்க, அந்தச் சூழலை மேம்படுத்துவது ஒருப் பதிலாக அமைகிறது. பணப் பற்றாக்குறையால் தவிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கூட்டக் கூடிய வறுமை நிவாரணத் திட்டங்களைத் திறன்பட வடிவமைக்கச் சில யோசனைகளை ஆசிரியர்கள் அளித்திருக்கிறார்கள். வறுமை நிவாரணத் திட்டங்கள் திட்டமிட்ட வகையில் வேலைச் செய்யாத பொழுது, அது ஏழை மக்களின் நடத்தையினால் தான் என்றக் கருத்து இன்றுப் பரவலாக உள்ளது - அமெரிக்கா-வின் ஒரு அரசியல் கட்சியான ரிபப்ளிகன் கட்சி, வறுமை நிவாரணத்தின் சீர்திருத்தலைத் இரக்கமில்லாமல் அணுகுவது இந்த அடிப்படையில் தான். வறுமை நிவாரணத் திட்டங்களைப் பயன்படுத்தும் ஏழை மக்கள், இலவசத்திற்குக் கிடைக்கும் பொருட்களுக்காக வருகின்றனர் என்ற நம்பிக்கையை ஆணித்தரமாக வைத்துக் கொண்டு, அத்திட்டங்களின் பலனடைபவர்களுக்குப் பலவிதமான முட்டுக்கட்டைகளை எழுப்புகின்றனர். வறுமை நிவாரணத் திட்டங்களை ஏழை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்காக, அரசாங்கங்கள், இத்திட்டங்களின் வடிவமைப்பில் பணப் பற்றாக்குறையில் தவிப்பவர்களின் மனநிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஏழை மக்களுக்கு அத்திட்டங்களின் நுணுக்கங்களை விளக்கப் பல விதமானப் பயிற்சிகளை செயல்படுத்துகின்றன.  இதனை மாற்றும் விதத்தில், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், பாடத் திட்டங்கள், அடுத்தடுத்து அணிவகுப்பதிற்குப் பதில், அவற்றை தனிப்பட்டத் தொகுப்புகளாக அமைக்குமாறுப் பரிந்துரைச் செய்கின்றனர் - அவ்வாறுச் செய்வதன் மூலம், பற்றாக்குறையால் ஒருப் பாடத் திட்டத்தில் கலந்துக் கொள்ள முடியா விட்டாலும், மற்றவைகளில் கலந்துக் கொண்டுப் பின் நாளில் நேரம் அல்லது அவகாசம் கிடைக்கும் பொழுது, தவற விட்டப் பாடத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு, வறுமை நிவாரணத் திட்டங்களை வடிவமைப்பதன் மூலம், மக்களின் தனிப்பட்டப் பொறுப்பை ஆசிரியர்கள் புறக்கணிக்குமாறுக் கூறவில்லை. நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறையால் தவிப்பவர்கள், தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சி செய்தால், அதற்கான வாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றுக் கூறுகின்றனர். நேரம், பணம், உணவு மற்றும் சமூக உறவுகள் ஆகியப் பரிமாணங்களில் பற்றாக்குறையில் தவிக்கும் மக்கள் தற்சமயப் பணியை முடிக்கும் பாதையில் கவனத்துடன் இருப்பதனால், வறுமை நிவாரணத் திட்டங்களைப் பற்றிய நினைவூட்டல்கள் அவர்களைச் சென்று அடைய, அந்தப் பாதைக்குள் ஊடுருவ வேண்டும் என்றும் கூறுகின்றனர். உதாரணமாக, வறுமை நிவாரணத் திட்டங்களின் நினைவூட்டல்கள், முடிக்க வேண்டிய ஒருப் பணியின் காலக்கெடுவின் இறுதியில் ஒரு முறை அனுப்புவதற்குப் பதில், காலக்கெடுவின் இறுதிக் காலத்திற்கு முன்பே அடிக்கடி அனுப்புவதன் மூலம் மக்களின் கவனத்தை அந்தத் திட்டங்களின் பால் ஈர்க்க முடியும் என்றுக் கூறுகின்றனர். மேலும், உணவுச் சாமான்களை அளிக்கும் திட்டங்கள் வருங்காலத்தில் அளிக்கப்படும் என்று வடிவமைக்கப்படுவதற்குப் பதிலாக, உடனடியாகக் கொடுக்குமாறு வடிவமைக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில், மிதி வண்டி, கணினி, தொலைபேசி போன்றவை மக்களுக்கு அரசாங்கத்தில் இருந்து அளிக்கப்படும் திட்டங்கள், மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒருக் காரணம். அவற்றை, வரிக் கட்டும் மக்களின் பணத்தைச் சூறையாடும் திட்டங்கள என்றுச் சிலர் விமர்சித்தாலும், அத்திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள், மக்களுக்குத் தேவையானவையாக இருந்தால், மக்கள் அதற்காக அரசாங்கத்திற்கு நன்றிச் சொல்வார்கள். பணப் பற்றாக்குறையால் அவதிப்படும் ஏழை மக்களுக்கு, அந்தப் பற்றாக்குறையின் தீவிரத்தைக் குறைக்க, ஏழை மக்களுக்கான பணச் சேமிப்பு அணுகுமுறைகளை ஆராயுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களை நேர்த்தியாகவும் மெதுவாகவும், பெரிதாக நிதி உதவி செய்து, அதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தங்களது வருவாயாக எடுத்துக் கொள்கின்றனர். அது, பணப் பற்றாக்குறையால் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவாமலும், அப்பற்றாக்குறையைப் போக்கத் தேவையான நிதி நெருக்கமின்மையை வளர்க்க முடியாமலும்  இருக்கிறது. இன்றையக் காலத்தில், பிரபலமான நிதிக் கருவியான நுண் நிதித் திட்டங்கள், சிறிய அளவில் முதலீடுச் செய்வதற்கு உதவுகின்றன. ஆனால், அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான நிதியைக் கொடுக்க வங்கிகள் முன்வந்தால், பணப் பற்றாக்குறையால் தவிக்கும் ஏழைகளுக்குப் பெருமளவில் உதவும் - அடகுக் கடைகள் மற்றும் அதிக வட்டிக்குக் கடன் அளிக்கும் தரகர்கள் இவ்வாறுச் சிறிய அளவுக் கடன் கொடுத்து அதற்கு அதிக வட்டி விதிப்பதன் மூலம், கடன் வாங்கியவர்கள் கூடிக் கொண்டேப் போகும் வட்டிப் பணத்தை அடைப்பதில் கவந்த்தைச் செலுத்துகின்றனர். அந்தக் கடனின் முதல், குறையாமல் பணப் பற்றாக்குறையால தவிக்கும் ஏழைகளின் பற்றாக்குறையை மேலும் மோசமாக்குகிறது.
உலகில் பல்வேறு அமைப்புகளில் பற்றாக்குறை அணுகுமுறையின் பயனையும் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் - உதாரணத்திற்கு, ஒரு மருத்துவமனையில், சாதாரண நோயாளிகள் மருத்துவர்களைப் பார்க்க, அதிக நேரம் காக்க வேண்டி இருந்தது. ஆலோசகர் ஒருவர் கொடுத்தப் பரிந்துரையின் பேரில், மருத்துவமனையின் ஒரு அறையை அவசரச் சிகிச்சைக்காக ஒதுக்கினர். மருத்துவமனையில், சாதாரண நோயாளிகளுக்கான அறைகளின் மொத்த எண்ணிக்கைக் குறைந்தாலும், அவர்கள், மருத்துவர்களுக்காகக் காக்கும் நேரத்தைக் குறைக்க முடிந்தது. அவசரச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குக் கொண்டுச் சென்றதனால், சாதாரண நோயாளிகளைச் சீக்கிரமாகக் காண முடிந்தது (முன்னால், அவசரச் சிகிச்சை நோயாளிகள், தாறுமாறாக வந்ததனால், சீராக வந்துக் கொண்டிருந்த சாதாரண நோயாளிகளின் அறைகளை எடுத்துக் கொண்டனர்.). அதிக அளவில் நெருக்கமின்மை இருந்தால் அது நிறுவனங்களின் செயல் திறனை வீக்கம் அடையச் செய்யும். அதனால், அந்த நிறுவனங்கள், தங்களதுத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைத்து விடுகின்றன. இதனால், அந்த நிறுவனங்களின் நெருக்கமினமைக் குறுகலாகி, அதன் செயல் திறனைக் குறைத்து விடுகிறது.  1900-களில், அமெரிக்கா-வில் ஃபோர்ட் காரைக் கண்டுப்பிடித்த ஹென்றி ஃபோர்ட், தனதுத் தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளர்களிடையே நெருக்கமின்மையின் மகிமையை உணர்ந்திருந்தார். அதன் காரணமாக, தன்னுடையத் தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளிகளுக்கு, 40 மணி நேர வேலை வாரத்தை விதித்தார். தனதுத் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை வாங்குவதால், அவர்களின் உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைகிறது என்று உணர்ந்திருந்தார். ஆனால், இன்றும் பெரிய அளவில் ஆலோசனை அளிக்கும் நிறுவனங்கள், தங்களதுத் தொழிலாளிகளை மணி நேரக் கணக்கில் தான் உற்பத்தித் திறனைக் கணிக்கின்றனர். இதனால், அந்த நிறுவனத்தின் தொழிலாளிகள், எவ்வளவு அதிக மணி நேரம் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு அதிகம் வேலை செய்கின்றனர். இதனால், அந்தத் தொழிலாளிகளின் உற்பத்தித் திறன் குறைந்து அதிக அளவில் தவறுகள் நிகழ்கின்றன. அதைச் சரிக்கட்ட, தொழிலாளிகள் அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால், மேலும் தவறுகள் நிகழ்கின்றன. இவ்வாறு, தீயச் சுழற் சக்கரமாக தொழிலாளிகளின் வாழ்க்கைச் செல்கிறது. தனிப்பட்ட முறையில், தற்சமயம் கவனத்தோடு செய்யும் பணியின் பாதையில் நடக்கும் நிகழ்வுகளைச் சரிக்கட்ட முயலுமாறு ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல நிறுவனங்களில்,  தொழிலாளிகளிடையே நடக்கும் கூட்டங்கள், குறிப்பிட்ட நேரக் கெடுவைத் தாண்டிப் போவதால், அவற்றிற்குப் பின் அட்டவணையில் உள்ள மற்றக்
கூட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனைச் சரி செய்ய, கூட்டத்தின் முடிவிற்கு 5 நிமிடங்கள் மீதம் இருக்கும் பொழுது, கூட்டத்தில் அல்லாதவர் ஒருவர் கூட்டத்திற்கு வந்து அனைவருக்கும் கூட்டத்தின் காலக்கெடுவை ஞாபகப்படுத்த வேண்டும் என்றுக் கூறுகின்றனர். கூட்டம் முடிந்தவுடன், அவரவருக்கான அடுத்தக் கூட்டத்தின் விவரங்களை அளித்தால், அவர்களின் உற்பத்தித் திறன் மேம்படும் என்றும் கூறுகின்றனர். ரசீதுக் கட்டணம், சுங்கவரிக் கட்டணம் போன்றவைகளைத் தானியங்கிச் செயல்முறைகளின் மூலம் கட்டுவதன் மூலம் டன்னலிங்க் மற்றும் அலைவரிசை நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்ரும் பரிந்துரைக்கின்றனர். கடனுக்கான வட்டியை, விகிதங்களாக வெளியிடுவதற்குப் பதிலாக, புரிந்துக் கொள்ளக் கூடிய எண்ணிக்கையாக வெளியிடுவதனால், கடன் அடைப்பவர்கள் அவற்றை எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது - அமெரிக்கா-வில் உள்ள க்ரெடிக்ட் கார்ட் நிறுவனங்கள், சமீபக் காலமாக கடனை அடைக்கத் தேவைப்படும் காலத்தை வெளியிடுகின்றனர். மக்கள், விகிதங்களை விட, எண்களை எளிதில் புரிந்துக் கொள்கின்றனர். கடன் கொடுப்பதைத் தடைச் செய்வதற்குப் பதில், அந்தக் கடனைப் பற்றியத் தகவல்களை குறைய அலைவரிசை இருக்கக் கூடிய நபருக்குப் புரியும் வகையில் வெளியிடுவதன் மூலம், அந்தக் கடனை அவர்களால் நேர்த்தியாகப் பயன்படுத்த முடியும் என்றுக் கூறுகின்றனர். அது அதிக அலைவரிசை உடைய நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றுக் கூறுகின்றனர். 

No comments: