மேற்கத்தியப் பித்தலாட்டம்

சுருக்கம்:
அமெரிக்கா-வில் நிறைய நாள் வாழ்ந்தப் பின், அங்குள்ள மக்கள் ஜனநாயகம் மற்றும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளால் தங்கள் நாடு வல்லரசாக ஆனதுப் பற்றித் தற்பெருமை அடித்துக் கொள்வதை அதிகம் கேட்கலாம். அவர்களது நாட்டின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருந்ததால், ஜனநாயகம் மற்றும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகள் மற்ற நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். அந்த அடிப்படையில், தங்கள் கை வசம் உள்ளப் பொருளாதார நெம்புகோல்களைப் பயன்படுத்தி (அன்னிய நாட்டு நிதி தவி மூலம்) மற்ற நாடுகளில் ஜனநாயகத்தையும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளையும் பரப்புகின்றனர். அவ்வாறுப் பரப்பப்பட்டக் கொள்கைகளினால், அமெரிக்கா மீதான வெறுப்பு முன்னை விட அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இந்தப் புத்தகம், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஒரே நேரத்தில், ஏனைய நாடுகளில் வலுக்கட்டாயமாக திணிப்பதால் ஏற்படும் தர்ம சங்கடங்களை விவரிக்கிறார். இராக் நாட்டிற்குள், பேரழிவு உண்டாக்கும் ஆயுதங்களை அழிப்பதாகக் (பொய்) காரணம் கூறி, அமெரிக்கா படையெடுத்தப் பின் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கூறி இருப்பது போல், ஜனநாயகம் மற்றும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்றமானவை அல்ல என்றக் கருத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்தால், அமெரிக்கா-வின் இராணுவ மற்றும் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கும். அவ்வாறுச் செய்யாமல் இருந்ததால், இராக் போரினால் நிகழ்ந்த இராணுவ மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை. இந்தப் புத்தகத்தில், தெற்கு ஆசியா-வை அலசாமல் விட்டிருப்பது ஒரு மாபெரும் குறையாகத் தோன்றுகிறது - ஸ்ரீ லங்கா மற்றும் பாகிஸ்தான் உள்நாட்டுக் கலவரங்களால், அங்குள்ளத் தமிழர்கள் மற்றும் சிந்தி இனத்தினர் கொல்லப்பட்டதை அலசினாலும், இந்தியா-வை அறவே அலசாமல் இருப்பது ஒருப் பெரியக் குறையாகத் தெரிகிறது. ஒரு வகையில், இந்தியா-வின் மொழி, மதம், சாதிப் போன்றவைகளின் காரணத்தினால் உள்ள வேறுபாடுகள், ஆசிரியரின் அலசலைக் கடினமாக்கியிருக்கலாம். கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் இந்தியர்கள் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மை இனத்தினராக இருப்பதை விவரித்திருக்கிறார். தத்தம் நாடுகளின் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகத்தின் வரலாற்றை மறந்து, இதர நாடுகளுக்கு அவற்றைப் பற்றிய மெத்தமானப் போக்கோடுத் தவறானப் போதனைகள் கூறும் மேற்கத்திய நாடுகளைத் தீவிரமாகச் சாடியிருக்கிறார். மேற்கத்திய நாடுகள், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் மிகத் தீவிரமானப் பதிப்புகளை இதர நாடுகளுக்குப் பரிந்துரைப்பது கண்டிக்கத்தக்க முறைகேடாகும். அமெரிக்கா-வில் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகத்தை எதிர்த்துக் கிளம்பியுள்ள இயக்கத்தை, அமெரிக்கா-வின் மீது உள்ள ஆணித்தரமான நம்பிக்கையினால், பெரிதாகக் கருதவில்லை. அமெரிக்கா-வில் பொருளாதாரச் சந்தையை ஆக்கிரமிக்கும் சிறுபான்மை இனத்தினராக எந்த ஒரு இனத்தையும் சுட்டிக் காட்ட முடியாது என்றும் கூறுகிறார். அமெரிக்கா-வின் பொருளாதாரச் சந்தையை முழுவதாக ஆதிக்கம் செலுத்தும் வெள்ளையர்கள் பெரும்பான்மையில் உள்ளதால், இந்தப் புத்தகத்தில் உள்ளக் கருத்துகள் அமெரிக்கா-விற்குப் பொருந்தாது என்றும் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்கா-விற்கு அலை அலையாகக் குடியேறும் பல இனத்தினர், அங்குப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் வெற்றிக் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, அமெரிக்கா-வில் இதர நாடுகள் போன்ற நிலைமை உருவாவதுக் கடினம் என்றுக் கூறியிருக்கிறார்.
அலசல்:
2004-இல் இந்தப் புத்தகம் பிரசுரமானது. அமெரிக்கா, பேரழிவு உண்டாக்கும் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் (பொய்) குற்றச்சாட்டைக் காரணமாகக் கொண்டு இராக் நாட்டின் மீதுப் படையெடுத்து சில நாட்களேக் கழிந்திருந்தது. இராக் நாட்டிற்கு சுதந்திரச் சந்தையும் ஜனநாயகமும் கொண்டு வருவோம் என்றுக் கொக்கரித்து அமெரிக்கா அந்நாட்டில் நீண்ட காலம் இருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது. என்னைப் பொறுத்தவரையில், இராக் நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கிய பொழுது, அமெரிக்கா ஒருத் தீயச் சக்தியாக உறுமாறியது. இன்டெர்நெட்டின் பரவலினால் பங்குச் சந்தையின் வளர்ச்சி மற்றும் என்ரான் கம்பெனி திவால் ஆகிய நிகழ்ச்சிப் போன்றவை அமெரிக்கா-வின் பொருளாதாரம் அதிக அளவில் கடன் மற்றும்  இதரப் பித்தலாட்ட முறைகள் மூலம் தான் வளர முடியும் என்ற நிலை உருவாகியது. 2000 வருடம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடந்தத் தில்லுமுல்லுச் சம்பவங்கள், அமெரிக்கா-வின் அரசியல் தலைவர்களின் தார்மீக ரீதியானத் தலைமையைக் கேள்விக்குறியாக்கியது. இராக் நாட்டின் ஆக்கிரமிப்பின் மூலம் அமெரிக்கா-வின் இராணுவம் இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ விஷயங்களில் அமெரிக்கா-வின் இழப்புகள், அது எடுத்த முடிவுகளினால் நிகழ்ந்ததேத் தவிர, அமெரிக்கா-வின் உள்நாட்டுப் பலவீனத்தினால் அல்ல. 2000 வருடம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிவாயுத் துறைகளில் நிகழ்ந்தப் பித்தலாட்டங்கள், 2008 அமெரிக்கா-வில் நடந்தப் பொருளாதாரச் சரிவின் பொழுது மற்ற எல்லாத் துறைகளுக்கும் பரவின. செப்டம்பர் 11 அன்று அமெரிக்காத் தாக்கப்பட்டதினால், அதற்குப் பதிலடியாகக் கண்மூடித்தனமாக அமெரிக்கா எதிர்த் தாக்குதலில் இறங்கியது. இது, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமைந்தது. ஃப்கானிஸ்தான்-இல் அமெரிக்கா நிகழ்த்திய எதிர்த் தாக்குதல்களுக்கு உலகமெங்கும் ஆதர்வு இருந்தது - ஆஃப்கானிஸ்தான்-இல் இருந்துத் தான் உஸாமா பின் லேடன் அமெரிக்கா-வைத் தாக்கச் சதித் திட்டமிட்டதால், அது உலகில் மற்ற நாடுகளுக்கு நியாயமாகத் தோன்றியது. அவ்வாறுக் கிடைத்த ஆதரவையும் நல்லிணக்கத்தையும் இராக் நாட்டை ஆக்கிரமித்ததன் மூலம் அறவே இழந்தது. அவ்வாறுச் செய்யாமலிருந்தால், அதன் விளைவு எப்படி இருந்தியிருக்கும் என்று நிறைய நாள் சிந்தித்ததுண்டு - இராக்-இன் முன்னாள் தலைவர் ஸதாம் ஹூஸெயினை, வன்முறையால் அணுகுவதற்குப் பதிலாகப் வன்முறையற்றத் திட்டங்களின் மூலம் முடக்கி வைத்திருந்ததன் விளைவு அமெரிக்கா-விற்குச் சாதகமாக அமைந்திருக்கும்.
சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள், அமெரிக்கா-வின் வெளியுறவுக் கொள்கைகளின் இருத் தூண்களாக நீண்டக் காலம் இருந்து வந்துள்ளன. சுதந்திரச் சந்தைக் கொள்கை, அரசுக் கட்டுப்பாடுச் சந்தைக் கொள்கைக்கு மாறாக, நல்ல விளைவுகளைத் தராது என்றக் கருத்து மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அது மேற்கத்திய வல்லுநர்களை (ஐ.எம்.எஃப், வோர்ல்ட் பேங்க், அமெரிக்கா), இதர நாடுகளுக்குச் சுதந்திரச் சந்தைக் கொள்கையின் நன்மைகளை எடுத்துக் கூறுவதையும், நிதி உதவி மூலம் செயல்படுத்துமாறு வற்புறுத்துவதையும்  தடுப்பதாக இல்லை.  இவற்றைக் கீழே உள்ளபடி வரையறுத்துள்ளார்:
சந்தைப் பொருளாதாரம் (சுதந்திரச் சந்தை)
தனியுரிமைச் சொத்து மற்றும் போட்டியின் மூலம் நடத்தப்படும் பொருளாதார அமைப்பு - அரசாங்கக் கட்டுப்பாடுகளும், மறுப்பகிர்வுத் திட்டங்களும் (ஸ்கான்டினேவியா பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அதிக அளவிலும், அமெரிக்கா-வில் குறைந்த அளவிலும்) அடங்கியது
ஜனநாயகம்
அனைவருக்கும் வாக்குரிமையும் நாடளாவியத் தேர்தல்களும் நடத்தும் அணுகுமுறை - பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தின் ஊக்குவிப்பினால் இதர நாடுகளில் இதுச் செயல்படுத்தப்படுகிறது
இனம் சார்ந்த அடையாளம்
அகநிலையாகச் செய்யப்படும் இனம் சார்ந்த குழுக்கள்
அமெரிக்கா, இதர நாடுகளில் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று ஊக்குவிப்பவர்களில் புத்தக ஆசிரியரும் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழின் பிரபலமான எழுத்தாளருமான தாமஸ் ஃப்ரீட்மென் முதன்மையானவர். அவர் மற்றும் அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் முன்வைக்கும் கருத்துகள் இதர நாடுகளைப் பாதிப்பதைப் பற்றி, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பல நாடுகளில் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் செயல்பாட்டினால், அந்நாடுகளில் உள்ள இனவெறிக் கலகங்கள் பெருகி வருவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்தாலும், அமெரிக்கா (மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள்)  இதர நாடுகளுக்கு அந்த இரண்டுக் கொள்கைகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துமாறு வற்புறுத்துவதைக் கண்டித்திருக்கிறார். அவர் விவரித்த நாடுகளில், பணச்செழிப்பு மிகுந்த ஒருச் சிறுப்பான்மை இனத்தினர்(இதனைச் சந்தை ஆதிக்கம் செலுதும் சிறுபான்மை இனத்தினர் என்று வரையறுக்கிறார்), அவர்களைச் சுற்றி வாழும் ஏழைப் பெரும்பான்மை இனத்தினருடன் நிகழும் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் - உதாரணத்திற்கு, தென் கிழக்கு ஆசியாவில் சீன மக்களும், கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் இந்தியர்களும் இந்த வரையறுத்தலில் அடங்குவர். சுதந்திரச் சந்தையால், பணச் செழிப்பு மிகுந்தச் சிறுப்பான்மை இனத்தினர் மேலும் செழிப்படைகின்றனர். ஆனால், அதே நேரத்தில், ஜனநாயகத்தைச் செயல்படுத்துவதன் மூலம், அந்த நாடுகளின் ஏழைப் பெரும்பான்மை இனத்தினரின் கை ஓங்குகிறது. இதனால், இந்த இரண்டுக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கிறது. சிறுப்பான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் இனங்கள் வேறுபடுவதால், இந்த மோதல் இனவெறிக் கலவரத்தில் முடிகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் வியாபாரம் மற்றும் அந்நிய நாட்டு முதலீடு போன்றவை, சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரின் பக்கம் சென்று அடைகிறது. இதனால், அந்த நாட்டின் பொருளாதார நெம்புக்கோலை சிறுப்பான்மை இனத்தவர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர். அவர்களைச் சுற்றி வாழும் ஏழைப் பெரும்பான்மை இனத்தினர், அதனைக் கண்டு, சுதந்திரச் சந்தையின் நன்மைகள் தங்களுக்குக் கிடைக்காததை எண்ணி விரக்தி அடைகின்றனர். தங்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஜனநாயக் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரை முடக்க முயற்சிக்கின்றனர். இந்த அரசியல் சூழ்நிலையில், ஏழைப் பெரும்பான்மை இனத்தினரின் ஆதங்கத்தைப் போக்க பேச்சுத் திறன் மிகுந்த அரசியல் தலைவர்கள், சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரின் கொட்டத்தை அடக்கி அவர்களின் செல்வச் செழிப்பை ஏழைப் பெரும்பான்மையினருக்கு அளிப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து செல்லும் ஆர்வலர்கள், மனதில் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும், இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றனர் - இனவெறியின் தீய விளைவுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், உலகமயமாக்கலின் விளைவுகளை எதிர்க்கக் கூடிய ஒரே ஆயுதம் ஜனநாயகம் தான் என்று அதே அரசியல் தலைவர்களை ஊக்குவிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளும் அமைப்புகளும் தத்தம் நாடுகளில் சுதந்திரக் கொள்கை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிர்மாறாக இதர நாடுகளிடம் அக்கொள்கைகளின் தீவிரமான வடிவை (லெய்ஸே ஃபேர் மற்றும் உடனடித் தேர்தல்கள்) உடனேச் செயல்படுத்துமாறு வற்புறுத்துகின்றனர் - உதாரணத்திற்கு, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோஸாஃப்ட் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய பொழுது அமெரிக்க அரசாங்கம் அதன் மீது நம்பிக்கையற்றச் சட்டத்தைப் பாய்ச்சியது. அதே நிபந்தனையை இதர நாடுகளில் இது நடந்திருந்தால், அமெரிக்க அரசாங்கம் தனது நிதி உதவியைக் குறைப்பதாக மிரட்டல் விடுத்திருக்கும். மேற்கத்திய நாடுகளில், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் வெற்றி, நீண்ட நாள் கடினமாகப் போராடியதன் விளைவினால் நிறுவிக்கப்பட்டது என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு, இதர நாடுகளுக்கு உபதேசம் செய்யும் பொழுது தன்னடக்கம் கொஞ்சம் தேவை என்றுக் கோரிக்கை விடுக்கிறார். இந்தப் புத்தகத்தை மூன்றுப் பாகங்களாகப் பிரித்திருக்கிறார் - முதல் பாகத்தில், உலகமயமாக்கலின் பொருளாதார விளைவுகளை இதர நாடுகள் சிலவற்றில் விளக்கியிருக்கிறார், இரண்டாம் பாகத்தில் அந்த நாடுகளில் உலகமயமாக்கலின் அரசியல் விளைவுகளை விவரித்திருக்கிறார், மூன்றாம் பாகத்தில் இவற்றினால் உண்டாகும் பிரச்சினைகளுக்குச் சிலத் தீர்வுகளை அளிக்கிறார்.
உலகமயமாக்கலின் பொருளாதார விளைவுகள்:
பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஏகாதிப்பத்தியம், அவர்களது ஆக்கிரமிப்புக்குள் இருந்த நாடுகளில் உள்ள சிலச் சிறுப்பான்மை இனத்தினரை மேல்நிறுத்தி ஏழ்மையில் இருந்த பெரும்பான்மை இனத்தவரின் சரிவுக்குக் காரணமாக இருந்தனர். பர்மா-வில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உதவியுடன், இந்திய முதலாளித்துவ வியாபாரிகள் தங்கள் பண வளத்தைப் பெருக்கியதால், அவர்களின் மேல், பர்மா நாட்டின் சொந்தக்காரர்களான பர்மன்களின் விரக்தியும் கோபமும் பாய்ந்தது. இதன் விளைவாக நிகழ்ந்த இனவெறிப் படுகொலைகளில் இந்தியர்கள் பலர் உயிரிழந்தனர். பர்மா-வில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்தப் பிறகு, அவர்கள் இடத்தைச் சீன வியாபாரிகள் பிடித்துக் கொண்டனர். சீன வியாபாரிகளின் பணச் செழிப்பு அவர்களைப் பர்மன்களின் இனவெறிக்கு இலக்காக ஆக்கியுள்ளது. முன்பு இருந்தப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இடத்தில் இன்றுப் பர்மாவின் இராணுவம் (எஸ்.எல்.ஒ.ஆர்.ஸி)  உள்ளது(இன்றுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆங்க் ஸான் சூ சீ தலைவராக இருக்கிறார்). பர்மா-வின் இராணுவத்தின் மனித உரிமை அத்து மீறல்களின் காரணத்தால், அமெரிக்கா, பர்மாவைப் புறக்கணித்தது. அமெரிக்கா இருந்த இடத்தைச் சீனாத் தனதாக்கிக் கொண்டு பர்மாவுடனான வணிகத்தில் கொடிக்கட்டிப் பறக்கிறது.
பர்மா-வின் இராணுவத்திற்கு அதிக அளவில் பணம் தேவை என்பதால், சீன நாட்டிலிருந்துக் கொண்டு வரப்படும் சீனத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதனால், பர்மா-வின் சாதாரணத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பாதிக்கப்படுகிறது. பர்மா-வின் மக்கள் தங்கள் நாட்டின் இயற்கை வளங்கள் சீனா-விற்கு விற்கப்படுவதைக் கண்டு ஆத்திரப்படும் வேளையில், அந்த வணிகத்தின் பொருளாதாரப் பலனும் சீனா-விற்குச் சென்று அடைவதைக் காண்கின்றனர். மேலும், சுதந்திரச் சந்தைக் கொள்கைகளை பர்மா-வின் இராணுவம் பின்பற்றுவதால், பர்மா-வில் சாதாரண மக்களுக்கு அவர்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனால், பர்மா-வில் உள்ள சீன மக்களைக் கண்டு பர்மா-வின் மக்கள் ஆத்திரப்படுகின்றனர். இவ்வாறு, பர்மா-வில் நடப்பதுப் போல் தென் கிழக்கு ஆசியா-வில் உள்ள அனைத்து நாடுகளிலும் (இந்தோனேஷியா, மலேஷியா, வியட் நாம், ஃபில்லிப்பின்ஸ், தாய்லாந்து) நிகழ்கின்றன.  தாய்லாந்து, மலேஷியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இந்திய வணிகர்கள் சிலர் இருந்தாலும், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மையினர், சீன மக்கள் தான். ஒவ்வொரு வருடமும், ஐ.எம்.எஃப் மற்றும் வோர்ல்ட் பேங்க் அமைப்புகள் கர்மச் சிரத்தையாக உலகமயமாக்கலினால் ஒவ்வொரு நாடும் அடைந்தப் பொருளாதார முன்னேற்றத்தை வெளியிடுகின்றன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள ஏழைப் பெரும்பான்மை மக்கள், உலகமயமாக்கலின் நன்மைகள் அனைத்தும் சிறுப்பான்மை இனக் குழுவானச் சீன மக்களுக்கும் ஒருச் சில ஊழல் தலைவர்களுக்கும் போய் சேர்ந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நாடுகளில், சிறுப்பான்மைச் சீன மக்கள், தங்களது தத்தெடுக்கப்பட்ட நாடுகளில் வணிகத்தில் வெற்றிப் பெறும் பொருட்டு, சிக்கனம், கடுமையான உழைப்பு, உடனே தங்கள் தேவைகளைப் பூர்த்திக் கொள்வதிற்குப் பதிலாகக் காத்திருந்துப் பூர்த்திச் செய்துக் கொள்ளும் பொறுமை, பணம் சேர்க்கும் முயற்சியை அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்கின்றனர்.  அவர்களது செல்வச் செழிப்பினால், இந்த நாடுகளுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அவர்களைத் தங்களதுப் பங்குதாரர்களாகக் கருதுகின்றனர்.
தெற்கு அமெரிக்கா-வின் சொந்த மக்களான இந்தியர்களிடம் இருந்து, ஐரோப்பியர்கள் நிலங்களையும் வளங்களையும் பறித்துக் கொண்டதனால், அங்கு வாழும் இந்திய இனத்தினர் வறுமையில் தவிக்கின்றனர். ஐரோப்பியர்கள் மற்றும் அவர்களதுச் சந்ததியினர் (மேஸ்டிஸோஸ் அல்லதுக் கலப்பட இன மக்கள்) அதிகாரப்பூர்வப் பதவிகளைத் தங்களுக்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபக் காலத்தில், அரசியல் ரீதியில், அவர்களதுப் பொருளாதார ஆதிக்கத்திற்கான எதிர்ப்பு, சில அரசியல் தலைவர்களிடம் இருந்துக் கிளம்பியிருக்கிறது. இந்த அரசியல் தலைவர்கள், ஏழைப் பெரும்பான்மையான இந்திய இன மக்களின் (அதிக எண்ணிக்கையின் காரணமாக) ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர் - உதாரணத்திற்கு, போலிவியா-வில் இவோ மோராலெஸ், வெனுஸுவேலா-வில் ஹ்யூகோ சாவெஸ். இந்த அரசியல் தலைவர்கள், தங்களது இந்திய இன அடையாளத்தை ஒருக் குறையாகக் கருதுவதற்குப் பதிலாக, அதனைப் பெருமையாகக் கருதுவதனால், ஏழ்மை நிறைந்த பெரும்பான்மை இந்திய இன மக்கள் அவர்களுக்குத் தங்களது அமோகமான ஆதரவை அளித்துள்ளனர்.  தெற்கு அமெரிக்கா-வின் இந்திய இன மக்கள், காலங்காலமாக, வணிகத்தில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், பொருளாதார ஆதிக்கம் மெஸ்டிஸோஸ் மற்றும் ஐரோப்பியர்கள் கையில் இருந்ததனால், சுதந்திரச் சந்தையின் பயன்களை அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. மொழி, இனம் மற்றும் வர்க்கத்தின் காரணமாக ஐரோப்பியர்களும் மெஸ்டிஸோஸும் உலகமயமாக்கலின் நன்மைகளைப் பெரும்பாலும் அனுபவிக்கின்றனர். தெற்கு அமெரிக்கா-வில் இனத்தளவில் பாகுப்பாடில்லை என்று ஐரோப்பியர்கள் ஆணித்தரமாக மறுத்தாலும், நிஜ வாழ்க்கையில் இனம் சார்ந்தப் படிநிலையில் ஐரோப்பியர்கள் உச்சியிலும் ஏழ்மை மிகுந்தப் பெரும்பான்மை இந்திய இனத்தவர் அடி மட்டத்திலும் இருக்கின்றனர். தெற்கு அமெரிக்க நாடுகளில், மக்களின் நிறம், சக்தி உள்ளவர்களை (வெள்ளையர்கள் மற்றும் மெஸ்டிஸோஸ்) சக்தி அல்லாதவர்களிடம் (இந்திய இனத்தவர்) இருந்துப் பிரிக்கிறது. மேலும், இந்திய இனத்தவர் பண்டை நாட்களில் ஐரோப்பியர்களின் கையில் கண்ட அபாரத் தோல்விகளினால் (அத்தோல்விகள் ஐரோப்பியர்களின் பொய்யும் பித்தலாட்டத்தினால் நடந்தது என்றாலும்), அவர்களிடையே அளவுக்கதிகமானத் தாழ்வு மனப்பான்மை ஆழமாகப் படிந்து உள்ளது. 
வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதுப் போல், சமீபக் காலத்தில் தெற்கு அமெரிக்க நாடுகளில் குடியேறியச் சிலச் சிறுபான்மை இனத்தவர்கள் (யூதர்கள் மற்றும் லெபனீஸ் இனத்தவர்), தெற்கு அமெரிக்க வணிகத்தில் கொடிக் கட்டிப் பறக்கின்றனர். புதிதாய் ஆதிக்கம் செலுத்தும் இந்தச் சிறுப்பான்மை இனத்தவரின் ஆதிக்கத்தால், ஐரோப்பியர்கள் மற்றும் மெஸ்டிஸோ இனத்தவரின் கொட்டம் அடங்கினாலும், ஏழ்மையில் வாழும் இந்திய இனத்தவர், தங்களைத் தவிர வேறோரு இனத்தவர் தங்கள் மத்தியில் செல்வச் செழிப்போடு வலம் வருவதைக் காண வேண்டியிருக்கிறது.
தெற்கு அமெரிக்க நாடுகளில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் சிலியில் இவ்வாறுச் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர் இல்லை - அந்நாடுகளில், இந்திய இனத்தவரின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது - ஐரோப்பியர்கள் தங்கள் இனப்படுகொலைகளைச் செம்மையாகச் செய்ததனால் இந்த நிலை உருவாகியிருக்கிறது. ப்ரெஸில் நாட்டில், ஆஃப்ரிக்க இனத்தவர் ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், அங்கும், அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம் வெள்ளை நிறம் உடையவர்களிடம் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான ஆஃப்ரிக்க இனத்தவர், சேரிகளில் இருக்கின்றனர்.
ரஷ்யா நாட்டில், யூதர்களின் வாழ்க்கையைக் கடினமாக்கும் யூத எதிர்ப்புக் கொள்கைகள் பரவலாக இருந்தும், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராகத் திகழ்கின்றனர். ஸோவியத் யூனியன், கம்யூனிஸத்திலிருந்துக் காப்பிடலிஸத்திற்கு மாறியக் காலத்தில், மேற்கத்தியப் பொருளாதார வல்லுநர்கள் புதிதாக உருவாகும் நாடுகளில் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைச் செயல்படுத்துமாறுப் பரிந்துரைச் செய்தனர். ஸோவியத் யூனியன்-இன் இறுதி நாட்களில், அதன் தலைவர் கோர்பச்சேவ், சிறிய அளவில் வணிக ஸ்தாபங்களைத் திறக்க அனுமதி அளித்தார். இவற்றில், யூதர்கள் கொடிக்கட்டிப் பறந்தனர். ஸோவியத் யூனியன்-இல் சட்ட விரோதமாக நடந்துக் கொண்டிருந்த வணிக ஸ்தாபனங்களை யூதர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். கம்யூனிஸத்தில் வணிகம் குற்றமாகக் கருதப்பட்டதால் அவைச் சட்ட விரோதமாக இருந்தது. அவைக் காப்பிடலிஸத்தில், சட்டத்திற்கு அடங்கியதாக இருந்திருக்கும். 2004-ஆம் வருடத்தில், ரஷ்யா-வின் 7 வணிகக் கணவான்களில் 6 பேர் யூதர்களாக இருந்தனர். ஏழ்மையில் வாழும் பெரும்பான்மை ரஷ்ய இனத்தனவர், யூத இன வணிகர்களின் செல்வச் செழிப்பைக் கண்டு யூத இனத்தவர் எவரைக் கண்டாலும் அவர்களின் வாழ்க்கையைக் கடினமாக்குகின்றனர். இதனால், ஏழ்மையில் வாழும் யூதர்கள் ரஷ்யா-வில் பெருமளவில் அவதிப்படுகின்றனர். 
தெற்கு ஆஃப்ரிக்கா-வில், வெள்ளையர்கள் (போயர்கள் மற்றும் பிரிட்டிஷ் நாட்டவர்) தங்களைச் சுற்றி வாழும் ஏழைக் கருப்புப் பெரும்பான்மை இனத்தவரின் பொருளாதார வாழ்க்கையில் பன்மடங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். தெற்கு ஆஃப்ரிக்கா-விற்குச் சென்றிருந்த பொழுது, அதன் தலைநகரமான ஜோஹனெஸ்பெர்க்-இல் உள்ள நடுத்தர மக்களின் வீடுகள் நன்றாகப் பாதுக்காக்கப்படும் கோட்டைகள் போல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நிறவெறிக் கொள்கை மூலம், கருப்பு இனத்தவரை படிப்பறிவில்லாமலும், அரசியல் செல்வாக்கு இல்லாமலும் அடக்கி வைத்திருந்தனர். அதன் காரணமாக, வெள்ளையர்களின் பொருளாதார ஆதிக்கம் உச்சியை அடைந்தது. தங்களது நிறத்தினால், வெள்ளையர்களுக்குப் பொருளாதாரத்தில் அறவேப் போட்டியில்லாமல் இருந்தது. கருப்பு இனத்தவருக்கு, வெள்ளையர்கள் போட்டப் பிச்சையை வைத்து வாழ்க்கையை வாழ வேண்டிய நிலை இருந்தது. இந்த இரு இனத்தவர்களுக்கு நடுவே, கலப்பட இனத்தினரும் ஆசிய இனத்தினரும் இடம் வகித்தனர். இவர்கள், கருப்பு இனத்தினர் போல் அடிமட்டமாகக் கருதப்படவில்லை என்றாலும், வெள்ளையர்களைக் காட்டிலும் குறைவாகவேக் கருதப்பட்டனர். நிறவெறிக் கொள்கையின் முடிவிற்குப் பிறகு, தெற்கு ஆஃப்ரிக்கா தன்னுடைய நாட்டின் கருப்புக் குடிமக்களின் பொருளாதார வாய்ப்புகளை அதிகமாக உயர்த்தி இருந்தாலும், எல்லா இனத்தினரும் சரி சமமாகப் பங்குக் கொள்ளும் நாள் வெகுத் தொலைவில் இருக்கிறது. தெற்கு ஆஃப்ரிக்கா-வைப் போல், நமிபியா நாட்டிலும், ஏழ்மையில் வாழும் பெரும்பான்மைக் கருப்பு இனத்தவரிடையே சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனமாக வெள்ளையர்கள் இருக்கின்றனர். 1890-களில், நமிபியா நாட்டை, ஜெர்மெனிக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நமிபியா நாட்டைத் தெற்கு ஆஃப்ரிக்கா ஆக்கிரமித்து, அங்குள்ள நிலங்களை வெள்ளைக் குடியேற்றக்காரர்களுக்கு அளித்தது. அங்குச் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் பரவலாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதால், வருவாயில் சமத்துவமற்றப் போக்கைச் சுட்டிக்காட்டும் குறிகள் மிக அதிகமாக உள்ளன. வெள்ளையர்கள் நிலங்கள் அனைத்தையும் தங்கள் கையில் வைத்துக் கொண்டு, கருப்பு இனத்தவரைப் பிழைப்பிற்காக விவசாயம் நடத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
அதுப் போன்று, ஸிம்பாப்வே நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் வெளியேறியப் பின்(முதலில், ஸிம்பாப்வே-விற்கு, ரோடீஷியா என்றப் பெயர் இருந்தது. திருட்டுத்தனத்திற்குப் பெயர் போன பிரிட்டிஷ் வணிகக் கணவானான சிசில் ரோட்ஸ்-இற்குப் பிறகு அவ்வாறுப் பெயரிடப்பட்டது), நிறவெறிக் கொள்கையைப் பின்பற்றிய இயன் ஸ்மித் நாட்டின் தலைவரானார்.   1970-களில், ராபர்ட் முகாபே தலைமையில் இயன் ஸ்மித்-இன் நிறவெறி ஆட்சித் தூக்கி எறியப்பட்டாலும், வெள்ளையர்களின் பொருளாதார ஆதிக்கத்தைக் குறைக்க முடியவில்லை. 1980-இல், ராபர்ட் முகாபே, ஸிம்பாப்வே-இல் வாழும் கருப்பு இனத்தவருக்கு, வெள்ளையர்கள் வைத்திருக்கும் நிலம் மறுப்பகிர்வாக அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் விளைவாக, பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் உரத்தக் குரலில் ஆட்சேபணை எழுப்பியதன் காரணமாக, அந்தக் கொள்கையின் செயல்பாட்டைப் பத்து வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக வாக்களித்தார். இந்த நிலங்கள், பிரிட்டிஷ் அரசுத் தனது ஏகாதிப்பத்தியத்தின் மூலம், கருப்பு இனத்தவரிடம் இருந்துப் பறித்து வெள்ளையர்களிடம் கொடுத்திருந்தது. இதனால், பிரிட்டன்-இன் ஆட்சேபணை போலித்தனமாக வெளி வந்தது. தேர்தல் நேரத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ராபர்ட் முகாபே எடுத்த முடிவுகளினால், ஸிம்பாப்வே-யின் பொருளாதார வளர்ச்சி முழுதாக முடங்கியுள்ளது. கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில் இந்தியர்களும் மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் லெபனன் நாட்டு வணிகர்களும் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராக உள்ளனர். மேலும், கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் உள்ள ஊழல் தலைவர்களை ஆதரிப்பதால், அங்குள்ள இந்தியர்களின் மீது இனவெறிக் கலவரம் பாய்ந்திருக்கிறது. வெவ்வேறு ஆஃப்ரிக்க நாடுகளுக்குள்ளேயேச் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர் இருக்கின்றனர் - உதாரணத்திற்கு, கென்யா நாட்டில் உள்ள கிக்குயு இனத்தவர், நைஜிரியா மற்றும் கேமரூன் நாட்டின் இபோ இனத்தவர். பொருளாதார ஆதிக்கத்தை அடைய அவர்களது சிக்கனம், கடும் உழைப்பு, வணிகத் திறனோடு அதிக அளவு அரசியல் ஆதரவும் சேர்ந்து இருக்கிறது - கென்யா நாட்டின் முதல் பிரதமரான ஜொமொ கென்யாட்டா கிக்குயு இனத்தைச் சேர்ந்தவர் - அவரது ஆட்சியில் கிக்குயு இனத்தினர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களதுப் பொருளாதாரச் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டனர்.
உலகமயமாக்கலின் அரசியல் விளைவுகள்:
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உலகின் இதர நாடுகளில், அரசியல் தாராளமயமாக்குதல், தேர்தல்கள் மற்றும் சமூக அமைப்புகளைப் பலப்படுத்துதல் போன்றச் செயல்களில் அதீதக் கவனம் செலுத்துகின்றனர். அரசியல் மற்றும் பொருளாதாரத் தாராளமயமாக்குதல் இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறுச் செய்கின்றனர். அந்த நம்பிக்கைப் பொய்யாகும் பட்சத்தில், அரசியல் தாராளமயமாக்குதலும் பொருளாதார தாராளமயமாக்குதலும் ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையாக ஆகின்றன. பொருளாதாரத் தாராளமயமாக்குதலால், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மையினரின் பொருளாதார ஆதிக்கம் மேலும் அதிகரிக்கிறது. ஆனால், அரசியல் தாராளமயமாக்குதலால், ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரம் கூடுகிறது. அரசியல் தலைவர்கள், தங்களுக்குத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதால், ஏழைப் பெரும்பான்மை இனத்தவரிடையே இனவெறியைக் கிளப்பி, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரின் வாழ்க்கையைக் கடினமாக்குகின்றனர். இந்தச் சண்டை, 3 விதங்களில் வெளிப்படுகிறது:
சுதந்திரச் சந்தைக் கொள்கை எதிர்ப்பு:
ராபர்ட் முகாபேயின் தலைமையில் ஸிம்பாப்வே நாட்டின் நிகழ்வுகள், அந்த நாட்டின் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர்களான வெள்ளையர்கள் மீது அரசியல் பெரும்பான்மை இனத்தவர்களான கருப்பர்களின் இன வெறிச் சார்ந்தச் செயல்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. 1990-களில், முகாபேயின் அரசியல் செல்வாக்குக் குறைவாகத் தோன்றியப் பொழுது, ஸிம்பாப்வே-யில் வாழும் வெள்ளையர்கள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சுதந்திரச் சந்தைக் கொள்கைகளை ஆதரிக்கும் ஜனநாயக மாறுதலுக்கான இயக்கத்திற்குத் (எம்.டி.ஸி) தங்கள் ஆதரவை பெருவாரியாக அளித்தனர். அதனை அடுத்து, ஸிம்பாப்வே-யின் கருப்பர்களின் வாக்குகளைக் கைப்பற்ற முகாபே, இனம் சார்ந்த அடையாளக் கொள்கையைப் பின்பற்றினார். 2000-ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில், நிலத்தை வெள்ளையர்களிடம் இருந்துக் கருப்பர்களுக்கு மறுப்பகிர்வுச் செய்வதாக அறிவித்து அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றார். அதன் பின், அவரதுத் தலைமையில், அவர் கட்சி, ஸாணு-பி.எஃப், வெள்ளையர்களிடம் இருந்த நிலங்களைக் கைப்பற்றிக் கருப்பர்களுக்கு அளிக்கத் தொடங்கியது. இதனால், ஸிம்பாப்வே-யின் பொருளாதாரம் நிலைக் குலைந்து, அதன் பண வீக்கம் பன்மடங்கு உயர்ந்தது.
சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தினரின் பொருளாதாரப் பலத்தைக் குறைக்க, அரசியல் தலைவர்கள், முக்கியத் தொழில்களைத் தேசியமயமாக்குகின்றனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கணிப்பில், தேசியமயமாக்கல், இறுதியாகக் கம்யூனிஸத்தில் கொண்டு விடும் பாதையில் ஒரு இடைநிலையாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஸோவியத் யூனியன் இடையே நடந்து முடிந்தப் பனிப் போரின் விளைவாக, இந்தக் கருத்து நிலவுகிறது. அதனால், இதர நாடுகளில் தேசியமயமாக்கல் செய்யப்படும் பொழுது, அமெரிக்கா-வும் மேற்கத்திய நாடுகளும் அதனைத் தவறாக எடைப் போடுகின்றனர்.  உண்மையில், ஒரு நாட்டின் அரசியல் பெரும்பான்மை இனத்தவரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்கத் தேசியமயமாக்கல் ஒருக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது(இந்தியா-வில், 1970-களில் இந்திரா காந்தி, வங்கிகளின் தேசியமயமாக்கல், சமயோசிதமான முறையில் தன் கையில் அரசியல் செல்வாக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஏழ்மையானப் பெரும்பான்மை இனத்தவருடைய அரசியல் ஆதரவையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. அது, இந்தியா கம்யூனிஸ்ட் நாடாக ஆவதன் முன்னோடியாக விளங்கவில்லை). 1950 மற்றும் 1960-களில் இருந்து இந்தோனேஷியா(ஸுகார்னோ அன்றையக் காலத்தில் செல்வச் செழிப்பு நிறைந்த டட்ச் இனத்தவரைக் குறி வைத்து(பின் காலத்தில், சீன இனத்தவரைக் குறி வைத்து)), வணிகம், சுரங்கங்கள் போன்ற முக்கியத் துறைகளைத் தேசியமயமாக்கினார்) , ஸ்ரீ லங்கா(ஸாலமன் மற்றும் சிரிமாவோ பண்டாரநாயக்கா, ஏழ்மையானப் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்களுக்கு நிலம் மற்றும் தொழில்களை மறுப்பகிர்வுச் செய்வதற்காக, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரானத் தமிழர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் செய்தத் துறைகளைத் தேசியமயமாக்கினார்கள் ), பர்மா(தேசியமயமாக்குதலின் மூலம், பிரிட்டிஷ், இந்திய மற்றும் சீன இனத்தவரின் பொருளாதாரப் பலத்தைப் பர்மாவின் சொந்த ஏழ்மையானப் பெரும்பான்மை மக்களுக்கு மறுப்பகிர்வுச் செய்தனர்), பாகிஸ்தான்(சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர்களான மொஹாஜிர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கணத் தொழில்களை ஏழ்மையானப் பெரும்பான்மை இனத்தவர்களான பஞ்சாபியர்கள், பாஷ்டூன்கள், பலூச்சிகள், சிந்திகள் போன்றவருக்கு மறுப்பகிர்வு, ஸுல்ஃபிக்கர் அலி புட்டோ செய்தார்) போன்ற நாடுகள் தேசியமயமாக்கலைப் பயன்படுத்தித் தங்கள் நாடுகளில் சந்தை ஆதிக்கம் செலுத்தும் (அரசியல் பலம் குறைவாக இருக்கும்) சிறுப்பான்மை இனத்தவரின் பொருளாதாரப் பலத்தைக் குறைத்து அரசியல் பலம் அதிகம் உள்ள (பொருளாதாரப் பலம் குறைந்த) ஏழைப் பெரும்பான்மை இனத்தவரின் நிலைமையை முன்னேற்ற முயன்றுள்ளனர். ரஷ்யா-வில், சுதந்திரச் சந்தையை எதிர்த்துக் கிளம்பும் கலவரங்கள், யூதர்களின் இனத்தை எதிர்க்கும் இயக்கங்களாக உருவெடுக்கின்றன. தெற்கு அமெரிக்கா-வில், வெனுஸுவேலா-வில், ஹ்யூகோ சாவெஸ் ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவரான இந்தியர்களின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றினார். அவரைப் பதவியில் இருந்து நீக்கி, தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் அரசை நிறுவியச் சிறுப்பான்மை இனத்தவர்களான ஐரோப்பியர்களும் மெஸ்டிஸோஸும் உடனடியாகச் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளைச் செயல்படுத்தினர். ஆனால், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சாவெஸ் மீண்டும் பதவிக்கு வந்தார். இவ்வாறு, இருக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றியதால், வெனுஸுவேலா-வின் பொருளாதாரம் மிகப் பெரியச் சரிவைக் கண்டது. அதிக அளவில் எரிவாயு வளங்கள் இருந்தாலும், சாவெஸிற்குப் பின் ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மடுரோ, ஐரோப்பியர்கள் மற்றும் மெஸ்டிஸோஸை எதிர்த்துச் செயல்படுவதினால், வெனுஸுவேல மக்களுக்கு அதிக அளவில் பொருளாதாரக் காயங்கள் உண்டாகியிருக்கின்றன.
ஜனநாயகக் கொள்கை எதிர்ப்பு:
ஆஃப்ரிக்கக் கண்டத்தில் உள்ள ஸியெர்ரா லியோன்(1961-இல் விடுதலை அடைந்தப் பிறகு, லெபனீஸ் இனத்தவர் இங்கு சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராக வளர்ந்தனர். ஜனாதிபதி ஸியாகா ஸ்டீவென்ஸ் உதவியுடன் தேசியமயமாக்கலை முடக்கினர். ஸ்டீவென்ஸ், லெபனீஸ் இனத்தவரை அரசியல் ரீதியில் உதவி அளித்ததிற்குக் கை மாறாக, ஸ்டீவென்ஸ்-க்கு லெபனீஸ் வணிகர்கள் தங்களது லாபத்தில் ஒருப் பங்கு லஞ்சமாகக் கொடுத்தனர். இந்த நிலைமை, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. ஆனால், ஸியெர்ரா லியோன்-இல் ஏழ்மைப் பெரும்பான்மை இனத்தவரானக் கருப்பர்களுக்கு இந்த நிலைப் பொறுக்காததால், அந்த மக்களுக்கு இலவச உணவும் கல்வியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்து, ஐக்கியப் புரட்சிப் படை (ஆர்.யு.எஃப்) என்ற அமைப்பு உருவாகியது. இதன் பின் வெடித்த உள்நாட்டுப் போரில் பல மக்கள் மாண்டனர். சிறுப்பான்மை இனத்தவரான லெபனீஸ் மக்கள், அங்கிருந்து உடனடியாக இடம் பெயர்ந்து மற்ற நாடுகளுக்குச் சென்றனர்), கென்யா (சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராக இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். கென்யா-வின் ஜனாதிபதிகள், இந்திய வணிகர்களை அரசியல் ரீதியாகப் பாதுகாத்ததிற்காக, இந்தியர்கள் அவர்களுக்குப் லஞ்சம் கொடுத்தனர். ஏழ்மையானப் பெரும்பான்மை இனத்தவரான கருப்பர்களுக்கு அரசியல் வாய்ப்புகள் கிடைக்காததால், இந்தியர்கள் மேல் இனம் சார்ந்த வெறுப்பு அதிக அளவில் இருக்கிறது.), ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தோனேஷியா(ஜனாதிபதியான ஸுஹார்டோ, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரான சீன மக்களுக்குத் தன்னுடையப் பாதுகாப்பை அளித்ததனால், சீன வணிகர்கள் தங்களது லாபத்தில் ஒருப் பகுதியை லஞ்சமாக ஸுஹார்டோக் குடும்பத்தினருக்கு அளித்தனர். ஸுஹார்டோ மற்றும் சீன இனத்தவரின் பால் இருந்த வெறி 1998-இல் இனவெறிக் கலவரமாக வெடித்தது), ஃபில்லிப்பின்ஸ் (விடுதலைக் கிட்டியவுடன், அமெரிக்கா-வின் செல்வாக்கினால், இங்கு சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. 1950-களில் ஜனாதிபதியாக இருந்த ரமோண் மக்ஸெஸெ, அந்நாட்டின் பொருளாதாரத்தை ஃபில்லிப்பினோ மக்களுக்குத் திரும்பித் தர வேண்டும் என்றுக் கூறி, பலத் துறைகளைத் தேசியமயமாக்கினார். ஆனால், அவருக்குப் பின் பதவியேற்ற ஃபெர்டினன்ட் மார்கோஸ், அந்த நாட்டின் சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரான சீன வணிகர்களின் செல்வச் செழிப்பை மேலும் கூட்டினார். அவரது இந்த நடவடிக்கைகளுக்கு, ஐ.எம்.எஃப்-உம் வோர்ல்ட் பேங்க்-உம் உடந்தையாக இருந்தன. அரசியல் உள்கட்டமைப்பில் எந்த ஒருச் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கும் மார்கோஸ் இணங்காததால், சீன வணிகர்களின் கை அதிக அளவில் ஒங்கியது. இறுதியில், ஃபில்லிப்பினோ மக்கள் மார்கோஸைப் பதவியிலிருந்து நீக்கினர்) போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை எதிர்த்து, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரின் உதவியுடன், ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்கள் ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவரை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி உள்ளனர்.
தெற்கு அமெரிக்கா-வில், ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சிகளை, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரான ஐரோப்பியர்களும் மெஸ்டிஸோஸும் இணைந்துச் செயல்படுத்தியுள்ளனர். இதனால், அங்குள்ள ஏழ்மைப் பெரும்பான்மை இனத்தவரான இந்தியர்கள் அரசியல் நடத்தைகளில் பங்குப் பெற முடியாமல் தவிக்கின்றனர். நிறவெறிக் கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருந்தக் காலத்தில், தெற்கு ஆஃப்ரிக்கா-வில் இவ்வாறு நடந்தது - தங்கள் கையில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரான் வெள்ளையர்கள், ஏழ்மைப் பெரும்பான்மை இனத்தவரானக் கருப்பர்களை அரசியல் நடப்புகளில் இருந்து புறக்கணித்தனர்.
இனப் படுகொலை:
1990-களில், ஆஃப்ரிக்கக் கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில், ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவர், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவரைக் இனவெறிக் காரணமாகக் கொன்றுக் குவித்தனர். மாடு மேய்ப்பவர்களாக் இருந்த டுட்ஸி இனத்தவர்கள், மக்கள் தொகையில் 14 சதவிகிதம் இருந்தனர். உழவர்களாக இருந்த ஹுட்டு இனத்தினர், மக்கள் தொகையில் 85 சத விகிதம் இருந்தனர். பண்டையக் காலத்தில், காங்கோ (அன்றைய ருவாண்டா) முடியாட்சியின் கீழ் இருந்தப் பொழுது, டுட்சி இனத்தவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, தங்களதுப் பொருளாதாரப் பலத்தை அதிகரித்துக் கொண்டனர். அந்தக் காலத்தில், இந்த இரு இனத்தினரிடையே மிகுந்த வேறுப்படுகள் இல்லாமல் இருந்தது - டுட்சிக்கள் ஹுட்டுக்களாகவும் ஹுட்டுக்கள் டுட்சிக்களாகவும் மாறுவதுச் சகஜமாக இருந்தது. ஐரோப்பிய ஏகாதிப்பத்தியம் பெல்ஜிய நாட்டின் மூலம் வந்தப் பின், ஹுட்டுக்களும் டுட்சிக்களும் இரு வேறு இனத்தவராக வரையறுக்கப்பட்டனர். மேலும், மற்ற ஐரோப்பிய ஆட்சியாளர்களைப் போல், ஒரு இனத்தைத் (டுட்சி) தூக்கியும் மற்றொரு இனத்தைத் (ஹுட்டு) தாழ்த்தியும் தங்கள் ஆட்சியை நடத்தினர். காங்கோ நாட்டை விட்டு, பெல்ஜியம் நாடு விலகியப் பின், ஹுட்டுக்கள் ஆட்சிக்கு வந்து உடனடியாக டுட்சிக்கள் மேல் இனவெறிக் கலகத்தைத் தொடுத்தனர். 1970-களில் இராணுவ ஆட்சி வந்ததனால், இனவெறிக் குறைந்தது. 1990-களில், இராணுவ ஆட்சிக் கவிழ்ந்தப் பின், ஜனநாயகம் மீண்டும் துளிர் விட்டப் பொழுது, இனக் கலவரம் மீண்டும் எழுந்தது. 100 நாட்களுக்குள் 800,0000 டுட்சிக்கள் கொன்றுக் குவிக்கப்பட்டனர்.
அதேப் போல், முன்னாள் நாடான யூகோஸ்லாவியா-வில் நடந்த இனப் படுக்கொலைகள், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளால் வீரியம் கூடியது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜோசஃப் டிடோ யூகோஸ்லாவியா-வின் தலைவரானார். இன வேறுப்பாட்டின் வீரியத்தை அறிந்திருந்ததனால், மக்கள் மீது இரும்பு பிடி வைத்திருந்தார். யூகோஸ்லாவியா இன்று, க்ரோயேஷியா, ஸ்லோவீனியா, போஸ்னியா, ஸெர்பியா மற்றும் மான்டினெக்ரோ ஆகிய நாடுகளாக உருமாறியுள்ளது.  க்ரோயேஷியா மற்றும் ஸ்லோவீனியா, ஐரோப்பாவில் உள்ள ஆஸ்ட்ரியா மற்றும் இத்தாலி நாடுகள் அண்டையில் இருந்ததால், அதிகச் செழிப்புடன் இருந்தன. இங்குள்ள மக்கள், ரோமன் எழுத்தைப் பயன்படுத்தி, கத்தோலிக்க மதத்தைக் கடைப்பிடித்தனர். யூகோஸ்லாவியா-வின் எஞ்சிய நாடுகள், அழிந்துப் போன ஆட்டமன் பேரரசின் கீழ் இருந்ததால், ஏழ்மையில் இருந்தது. இங்குள்ள மக்கள், ஸிரில்லிக் எழுத்தைப் பயன்படுத்தி கிழக்கு ஆச்சாரக் கிறிஸ்துவ மதத்தைக் கடைப்பிடித்தனர். அமெரிக்கா மற்றும் ஸோவியத் யூனினன் இடையே நடந்தப் பனிப் போர் முடிவுற்றுப் பெர்லின் சுவர் சிதறியவுடன், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் இந்நாடுகளுக்குள் ஒரே நேரத்தில் நுழைந்தன. க்ரோஏஷியா மற்றும் ஸ்லோவீனியா, ஐரோப்பாவின் அருகில் இருந்ததால், இந்த இருக் கொள்கைகளில் தேர்ச்சிப் பெற்றிருந்தன. அதன விளைவாகப் பொருளாதாரத்தில் மிகுந்த வளர்ச்சிக் கண்டன. ஜனநாயகமும் அதி வேகமாக மலர்ந்ததால், மக்களின் இன வெறியைத் தூண்டும், அரசியல் தலைவர்கள் தோன்றினர். இதனால், யூகோஸ்லாவியா-வின் நாடுகளில் உள்நாட்டுப் போர் வெடித்தது. இதன் விளைவாக, அமெரிக்கா மற்று நேடோ ஒருங்கிணைந்துப் போர் தொடுத்ததில், ஸெர்பியா-வின் தலைவரான ஸ்லோபோடான் மிலோஸெவிச் பதவி இழந்து, மனித நேயத்திற்கு எதிரானக் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். உலகில், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர் சுமூகமாக ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவருடன் வாழும் நிலை, தாய்லாந்து நாட்டில் நிலவுகிறது. அங்கு, தாய் அரசாங்கம், சீன இனத்தவரை, தாய்லாந்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றுமாறு வலுக்கட்டாயம் செய்ததால், அங்குள்ள சீன வணிகர்கள் அதற்கு இணங்கியுள்ளனர். ஆனால், இன்றையக் காலத்தில், சீனா நாட்டின் பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சிக்குப் பிறகு, தாய்லாந்தில் உள்ள சீன வணிகர்கள், தாய்லாந்து அரசாங்கத்தின் ஆணைகளுக்கு உடனடியாகச் செவிச் சாய்ப்பதற்குப் பதிலாக அவற்றைச் சிறிய அளவில் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். வரலாற்றைப் பார்க்கும் பொழுது, சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயக் கொள்கைகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தியதால், அவை இரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்தது, நாட்ஸி ஜெர்மனி-யில் நிகழ்ந்தது. இதனால், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராக இருந்த யூதர்களில் 60 லட்சம் பேர் இன வெறியால் கொல்லப்பட்டனர்.
தத்தம் நாடுகளைப் பொறுத்தவரை, மேற்கத்திய நாடுகளின் வரலாற்றில், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதில் மிகுந்தத் தயக்கம் காட்டியுள்ளனர். ஜனநாயகம் முதன்முதலில் மலர்ந்த பொழுது, அனைத்து மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்குப் பதில், ஒருச் சிலருக்கே வாக்குரிமையை அளித்தனர் - இது இன்று இதர நாடுகளுக்கு, மேற்கத்திய நாடுகள் ஜனநாயகம் பற்றி அளிக்கும் போதனைக்கு மாறாக உள்ளது. அமெரிக்கா-வில், வாக்குரிமை, நில உரிமையாளர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது. இதனால், அங்குள்ள, ஏழைகள், மகளிர் மற்றும் சிறுப்பான்மை இனத்தவர்கள் வாக்குரிமை இல்லாமல் தவித்தனர். ஐரோப்பா-விலும் ஜனநாயகத்தில் பங்குக் கொள்வதற்கு இதுப் போன்றத் தடைகள் நிறைய இருந்தன. சுதந்திரச் சந்தையின் கடும் விளைவுகளால் ஏற்படும் கலகங்களைத் தடுக்க, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தத்தம் நாடுகளில், செல்வச் செழிப்பை மறுப்பகிர்வுச் செய்யும் முறைகளை (முற்போக்கான வரித்திட்டங்கள், வேலையில்லாதவர்களுக்குக் காப்புத் திட்டங்கள், வயதானவர்களுக்கு ஊதியம், கம்பெனிகள் ஏகபோக ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்கானச் சட்டங்கள்) அதிக அளவில் செயல்படுத்தியுள்ளனர்(இன்று, அமெரிக்கா-வில், இந்தத் திட்டங்கள் அதிவேகமாக முடக்கப்படுகின்றன). அமெரிக்கா-வில் உள்ள கீழ் மற்றும் நடுத்தரத் தட்டு மக்கள், தங்களதுப் பொருளாதார நிலைமை மேம்படும் என்றக் கனவில் நம்பிக்கை இருப்பதால், அது சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் வெற்றிப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சித் தங்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையினால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் வெற்றிக்கு உதவும் வகையில் தங்களதுச் செயல்களை மாற்றிக் கொண்டுள்ளனர். தங்களது வாழ்க்கையில் ஏதேனும் பின்னடைவு நடந்தால், அதுத் தங்களுடையத் தேர்வுகளால் தான் நிகழ்ந்தது என்று நம்புகின்றனர். இது, அமெரிக்கா-வின் ஜனநாயகத்திற்குப் பயனுள்ளதாகவும், அவர்களதுச் சொந்த வாழ்க்கைக்குப் பயனற்றதாகவும் அமைகிறது. மேலும், அமெரிக்கா-வில் ஏழைத் தொழிலாளர்களின் மத்தியில், இன அடையாளத்தின் விளைவினால், ஏழ்மை நிறைந்த வெள்ளைத் தொழிலாளர்கள், மற்ற இனத் தொழிலாளர்களுடன் இணைந்துச் செயல்பட மறுக்கின்றனர். அவ்வாறுச் செயல்பட்டால், எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அதிக அளவில் நன்மைகள் கிட்டும்.
பிராந்திய அளவில், நடுக் கிழக்கில் உள்ள நாடுகளில், இஸ்ரேல் அதி நவீனச் சக்தியாக உருவாகியிருப்பது, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர் (யூதர்கள்), ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவரின் (அரபு இனத்தவர்) நடுவில் பொருளாதார ஆதிக்கத்தை அடைந்ததற்கு உதாரணமாக இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டைக்குப் பலக் காரணங்கள் இருந்தும், இவ்வாறு, இஸ்ரேல் நாட்டை சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராகக் கருதுவது ஒருப் புதியக் கோணத்தை அளிக்கிறது. பல அரபு நாடுகளுக்குள்ளேயே, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர், ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவரின் நடுவில் செல்வச் செழிப்பில் வாழ்வதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன - இராக் நாட்டில், ஸதாம் ஹுஸெய்ன் தலைமையில் சிறுப்பான்மை இனமான ஸுன்னி மதத்தினர், தங்களைச் சுற்றி இருந்த பெரும்பான்மை இனமான ஷியா மதத்தினரைக் காட்டிலும் அதிகச் செல்வச் செழிப்பில் இருந்தனர். ஸிரியா நாட்டில், ஏழ்மையான ஸுன்னிப் பெரும்பான்மை இனத்தவரை சந்தை ஆதிக்கம் செலுத்தும் அலவைட் சிறுப்பான்மை இனத்தவர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இஸ்ரேல் நாட்டிற்குள், யூதர்களில் சிறுப்பான்மை இனத்தவரான அஷ்கெனாட்ஸி யூதர்கள்(ஐரோப்பாவில் இருந்து இடம்பெயர்ந்த யூதர்கள்), ஏழ்மையில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவரான ஸெஃபர்டிம் யூதர்களைக்(அரபு நிலங்களில் பிறந்த யூதர்கள்) காட்டிலும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு உடையவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேல், யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடு என்பதால், இந்த இருக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் அரிதாகவே இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டின் மேல் அரபு நாடுகளுக்கு உள்ள வெறுப்பிற்குத், தங்களுடையப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைக் காட்டிலும் யூதர்களின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலோங்கி இருப்பதைப் பற்றியப் பொறாமையும் விரக்தியும் ஒருக் காரணம்.
உலக அளவில், ஒரே வல்லரசாகத் திகழும் அமெரிக்கா-வை சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராகக் கருதலாம். உலகின் மக்கள் தொகையில் 4 சதவிகிதம் மட்டுமே இருந்தாலும், இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் கோலோச்சுகிறது. அமெரிக்கா-வை எதிர்த்துக் கிளம்பும் குரல்கள் உள்ள நாடுகள், அதனைக் காட்டிலும் ஏழ்மையாக இருக்கின்றன என்பது ஒரு முக்கியக் காரணம். அந்த எதிர்ப்பின் உஷ்ணம், அந்தந்த நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது. ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நாடுகள் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து, கனடா), நட்புடன் சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளில் அமெரிக்கா-வைக் கண்டிக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள நாடுகள், சுதந்திரச் சந்தைக் கொள்கையைத் தாங்களும் கடைப்பிடிப்பதால், அமெரிக்கா-வை ஜனநாயகக் கொள்கைகளில் எதிர்க்கின்றனர். இதர நாடுகளில் இருந்துக் கிளம்பும் எதிர்ப்பு, சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவராக அமெரிக்கா-வைக் கருதித் தீவிரமாக எதிர்க்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் வெடிக்கும் எதிர்ப்புகள், அமெரிக்கா-வில் செப்டம்பர் 11 போன்றச் சோகமானச் சம்பவங்கள் நடந்தப் பின்பு, செல்வச் செழிப்பு மிகுந்தச் சிறுப்பானமை இனத்தவரை ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவர் வெற்றிகரமாகக் காயப்படுத்தியதைக் கொண்டாடும் வெளிப்பாடாக அமைகின்றன.
தீர்வுகள்:
சுதந்திரச் சந்தையும் ஜனநாயகமும் முட்டிக் கொள்வதைத் தடுக்க, ராபர்ட் காப்ளன் ஒருத் தீர்வைப் பரிந்துரைச் செய்திருக்கிறார் - இதர நாடுகள், வணிகம் மற்றும் சந்தைகளைத் திறப்பதில் முதலில் கவனம் காட்ட வேண்டும், அதனால் வசதியான நடுத்தர வர்க்கம் உருவாகியப் பின், ஜனநாயகத்திற்குச் செல்ல வேண்டும் - இதனைச் சிங்கப்பூர் அணுகுமுறை என்றும் கூறலாம். சிங்கப்பூர்-ஐ விடப் அதிகமாகப் பல்வேறு இனங்கள் வாழும் நாடுகளில், இந்த அணுகுமுறை மூலம், சந்தை ஆதிக்கம் செலுத்தும்  சிறுப்பான்மை இனத்தவர், பொருளாதாரத்தில் அதிகப் பங்கு வகிப்பது ஆணித்தரமாக வேரூன்றி விடும். இதனால், சந்தைக் கொள்கைகளின் நன்மைகள் அனைவருக்கும் கிடைக்காமல் சிறுப்பான்மை இனத்தவருக்கு மட்டும் கிடைக்கும். அந்த நாட்டில், இன வெறி அதிகம் இருந்தால், அது இனப் படுக்கொலையில் கொண்டு விடும். ஆசிரியர், சுதந்திரச் சந்தை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரிக்கிறார். ஆனால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படுத்துவதால் ஒரு நாட்டின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார். அவ்வாறுச் செயல்படுத்தப்படும் கொள்கைகள், மிகவும் தீவிரமானதாக இருந்தால் (ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை, சுதந்திரச் சந்தையில் கட்டுப்பாடு இல்லாதப் பொருளாதாரக் கொள்கைகள்) அது மேலும் இனவெறிக் கலவரம் வெடிப்பதற்கு வித்தாக அமைகிறது. அதைச் சரிக்கட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சிலப் பரிந்துரைகள் செய்கிறார்:
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான ஆடுக்களம் இருக்க வேண்டும்
குறைந்தப் பட்சம், கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். வருங்காலத்தில், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவருக்கும் ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவருக்கும் இடையே இன வெறிக் கலகம் மூண்டு விடாது என்று உத்திரவாதம் அளிக்க முடியாது என்றாலும், படிப்பின் விளைவுகளால் (குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு) ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவருக்கு முன்னை விட அதிக அளவில் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்.
சுதந்திரச் சந்தையில் ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தினருக்குப் பங்களிக்க வேண்டும்
சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர், பொருளாதாரத்தில் அதிக அளவுக் கட்டுப்பாடு வைத்திருப்பதனால், சந்தை மற்றும் வணிகத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள், அவர்களுக்கே முழுமையாகச் சென்று அடைகின்றன. இதனால், ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவர் கோபமும் விரக்தியும் அடைகின்றனர். ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவருக்குச் சந்தை மற்றும் வணிகத்தில் பங்களிப்பதன் மூலம், வணிகத்தின் பொருளாதாரப் பலன்கள் அவர்களுக்கும் சென்று அடையும். இதனை, மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மறுப்பகிர்வுக் கொள்கைகள் மூலம் பூர்த்தி செய்யலாம் (உதாரணத்திற்கு, முற்போக்கான வரி விதிப்பு, அடிப்படைச் சலுகை, வேலையில்லாதவர்களுக்கு காப்புத் திட்டம்). ஏழ்மைச் சிறுப்பான்மை இனத்தவர்களுக்குள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட விதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு, அந்த நிலத்தின் பட்டாவை வழங்கலாம். பங்குச் சந்தையில் ஏழை மக்களுக்கு ஒருப் பங்கு அளிக்கலாம் - அமெரிக்கா-வில் ஓய்வு ஊதியத் திட்டங்கள் பங்குச் சந்தையில் இருப்பதன் மூலம், அங்குள்ள நடுத்தர மக்கள் பங்குச் சந்தையின் நன்மைகளில் பகிர்ந்த்க் கொள்கின்றனர். இவ்வாறுச் செய்வதன் மூலம், இதர நாடுகளில் உள்ள ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவருக்கு, சந்தையின் நன்மைகள் தங்களுக்குக் கிட்டாது என்ற ஆதங்கத்தை விலக்கலாம்.
இனம் சார்ந்த செல்வக் குறைபாடுகளை சீர்திருத்தம் செய்வது
சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர், அரசியல் செல்வாக்கும் அதிகம் வைத்திருந்தால், இது நடக்காது
ஒவ்வொருப் பரிந்துரைக்கும் சிலக் குறைகள் உள்ளன - முற்போக்கு வரித் திட்டங்களுக்கு ஏற்ற வரித் தளம் அந்நாட்டில் இல்லாமல் இருக்கலாம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு அந்த நிலங்களின் பட்டாக்களைக் கொடுப்பதன் மூலம் நியாயமாக நிலப்பட்டா வாங்கிய மக்கள் விரக்தி அடைவார்கள், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர் பெரும்பாலும் குடும்பத்தின் உதவியோடு வணிகம் நடத்துவதால், நிறுவனங்களிலும், பங்குச் சந்தையிலும் ஏழை மக்களுக்குப் பங்களிப்பதுக் கடினமான எதிர்ப்பைக் கிளப்பும். ஜனநாயகத்தில் ஒரேயடியாக அனைவருக்கும் வாக்குரிமை என்றுக் கூறிச் செயல்படுத்துவதற்குப் பதிலாகச் சிறிது சிறிதாகச் செயல்படுத்துவதன் மூலம் நல்லப் பலனளிக்கும். ஜனநாயகம், பல்வேறு வேடங்களில் வருவதால், ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்றக் கொள்கையைச் செயல்படுத்துவதுச் சுலபமாகும். அதே சமயம், சந்தை ஆதிக்கம் செலுத்தும் சிறுப்பான்மை இனத்தவர், தங்கள் பங்கிற்கு, ஏழ்மை நிறைந்தப் பெரும்பான்மை இனத்தவர், இன வெறி மூலம் மட்டுமேப் பார்ப்பதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம். அதிக அளவில் வளங்கள் இருப்பதால், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அரசியல் தலைவர்களிடம் ஊழல் மூலம் தங்களுக்கு வேண்டியவற்றை அடையும் போக்கை மாற்றிக் கொள்ள முயற்சிச் செய்ய வேண்டும். ஏழ்மை நிறைந்தச் சிறுப்பான்மை இனத்தவருக்கு உதவும் பொழுது, அது அனைவருக்கும் வெளியில் தெரியும்படி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, கிழக்கு ஆஃப்ரிக்கா-வில் இந்திய வணிகர்கள் தங்களது கிழக்கு ஆஃப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு கல்வி, உடல் நலம் மற்றும் வீட்டு வசதி வாய்ப்புகள் அளித்திருப்பது, அவர்கள் மேல் உள்ள இன வெறியைக் குறைக்க உதவும்.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
ஒன் மார்க்கெட் அண்டர் காட்! எக்ஸ்ற்றீம் கெப்பிடலிஸம், மார்க்கெட் பாப்புலிஸன், ஆண்ட் தி எண்ட் ஆஃப் எக்கனாமிக் டிமாக்ரஸி - தாமஸ் ஃப்ராங்க்
தி ப்ராடெஸ்டண்ட் எதிக் ஆண்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கெப்பிடலிஸம் - மேக்ஸ் வெபெர்
ஸேல் ஆஃப் தி சென்சுரி: ரஷ்யாஸ் வைல்ட் ரைட் ஃப்ரம் கம்யூனிஸம் டு கெப்பிடலிஸம் - க்றிஸ்தியா ஃப்ரீலண்ட்

No comments: