Monday, January 25, 2010

Movie of the week

படம் : அவதார்
வருடம் : 2010
இயக்குனர் : ஜேம்ஸ் கேமரன்

கதைச் சுருக்கம் :
எதிர்காலத்தில் ஒரு வர்த்தக நிறுவனம் (RDA) அனப்டேனியம் (unobtanium) எனும் விலை மதிப்புள்ள உலோகத்திற்காக ஆல்பா சென்டுரி (Alpha Centauri) நட்சத்திர அமைப்பைச் சார்ந்த பண்டோரா (Pandora ) எனும் உலகைக் குறி வைக்கிறார்கள். பண்டோராவில் வசிக்கும் ந'வி (Navi) மக்கள் வாழும் பூமிக்கடியில் அனப்டேனியம் குவிந்து கிடப்பதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு RDA திட்டமிடுகிறார்கள். ந'வி மக்களை அறிவதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் RDA  நிறுவனம் தனது ஊழியர்களை பயன்படுத்துகிறது. விஞ்ஞானம் முலம் ஊழியர்கள் ந'வி மக்கள் போல் வேடம் கொண்டு அவர்களுடன்  பழகுகிறார்கள்.  ஊழியன் ஒருவன் இறந்து போகவே அவனது தம்பி, ஜேக் சல்லியை மாற்றாக அனுப்புகிறார்கள். ஜேக் சல்லியின் திறமையும் ஆர்வத்தையும் கண்டு அவனை ந'வியிடம் வேவு போகச் சொல்கிறார்கள். ஜேக் சல்லியின் மேல் முதலில் சந்தேகம் இருந்தாலும் ந-'வி மக்களில் ஒரு இனத்தின் இளவரசியான நெய்திரி சொல்லுக்கு இணங்க அவனை தங்களுக்குள் ஒருவனாக ஏற்கின்றனர். ஜேக் சல்லி தன் மேல் ந'-வி மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி அந்த உலகின் ரகசியங்களை RDA  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பகிர்ந்து கொள்கிறான். காலப்போக்கில் நெய்திரிக்கும் ஜேக் சல்லிக்கும் வளரும் காதலினால் அவன் ந'வி மக்கள் பக்கத்தைப் புரிந்து கொள்ள வருகிறான். RDA நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி இதை அறிந்து பண்டோராவை அழிக்க திட்டமிடுகிறான். இந்த சண்டையின் எந்த பக்கம் வெற்றி பெறுகிறது என்பதை மீதிக் கதை சொல்கிறது.

அலசல் :
படம் நிறைய நேரம் (2 மணி நேரம் 45 நிமிடம்) ஓடுகிறது. படம் நன்றாக இருந்தால் இரண்டே முக்கால் மணி நேரம் ஒரு பொருட்டாகத் தெரியாது. தமிழ் படத்தில் உள்ளது போல் பாட்டு டான்ஸ் இல்லை என்பதால் தியேட்டரில் கொஞ்சம் தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
படத்தில் கதையை விட ஸ்பெஷல் எபக்ட்ஸ் பிரம்மாண்டமாக இருக்கிறது. 3D இல் பார்த்ததால் நன்றாகவே இருந்தது. வேறு எங்கோப் படித்தது போல் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும்.
ஜேம்ஸ் கேமரன் படம் என்றால் புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அவருடைய இயக்கம் ஒரு விதத்தில் கமலஹாசனின் நடிப்பைப் போல் ஆகி விட்டது.  புதுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் கொண்டு கதையை கோட்டை விட்டு விட்டார்கள்.
படத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் என்றால் RDA நிறுவனத்தின் மேல்நிலை அதிகாரியான பார்கர் செல்ப்றிச் (ஜியோவன்னி ரிபிசி) தான். இந்த உலகத்தின் மோசமான நிலைமைக்கு காரணமாகச் சுட்டிக் காட்டப்படும் பணப் பேராசை கொண்ட வியாபாரியின் உருவத்தை நன்றாகக் கண் முன் நிறுத்தி இருக்கிறார். கடைசியில் அந்த பாத்திரத்தையும் ஜேம்ஸ் கேமரன் சொதப்புவது இந்த படத்தின் இறுதிச் சித்திரவதையாக அமைகிறது.
 படத்தில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காதது ந'வி மக்களின் சித்திரம் தான். இயற்கையோடு ஒன்றி வாழும் குழந்தைகள் போல் காட்டப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஜுரம் வரும். சளி வரும். ந'வி மக்களிடையே வாழும் பொது யாருக்கும் எவருக்கும் எப்போதும் உடம்புக்கு வருவதில்லை. பூமியிலிருந்து சென்ற படை அவர்களது ஆரோக்கியத்தின் ரகசியத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு மருந்தாக தங்கள் மக்களிடம் விற்றிருந்தால் அனப்டேனியத்தை விட நிறைய பணம் பண்ணியிருக்கலாம். அந்த   பாத்திரப் படைப்பின் ஒரு தீவிர செயல்பாடாக ந'வி மக்கள் மரத்தின் இலைக்குள் தூங்குகிறார்கள். பூமியில் மரத்தின் இலையில் தூங்கினால் கொசு கடிக்கும். ந'வி மக்களிடையே கொசு என்பதே இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். ந'வி மக்களின் பிணி எல்லாம் பூமியிலிருந்து சென்ற படை செலுத்தும் நவீன ஆயுதங்களால் வருகிறது. இயற்கையை மதித்து வாழ்பவர்களாக சொல்லப்பட்ட அவர்களுடைய கதை நவீன விஞ்ஞானத்தின் முகத்தில் கரி பூசுவது போல் இருக்கிறது. பூமியிலிருந்து சென்ற ஊழியர்கள் எந்த விஞ்ஞானத்தின் உதவி கொண்டு ந'வி மக்களிடையே உலவுகிறார்களோ அதன் பயனை மறந்து ந'வி மக்களின் கடவுளான எய்வாவிற்கு புகழாரம் சூட்டுகிறார்கள். கடவுளுக்கு புகழாரம் சூட்டுவதற்கு பதில் அறிவியலின் பயனை  ந'வி மக்களிடையே போதித்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். நவீன ஆயுதங்கள் ந'வி மக்களை சின்னாபின்னபடுத்தும்போது அடிபட்டவர்களை குணப்படுத்த விஞ்ஞானம் பயன்படும். மேலும் அந்த நவீன ஆயுதங்களை எதிர்கொள்ள பண்டோராவுக்கு ஏற்ற நவீன ஆயுதங்களை தயார் செய்யப் பயன்படும்.  கடைசி யுத்தத்திற்கு ஜேக் சல்லியின் தலைமையை ஏற்பதாகக் காண்பிப்பதன் மூலம் ந'வியின் விஞ்ஞான அறிவின்மையின் முடிவைக் காட்டியிருக்கிறார்கள்.

 இந்த படத்தின் மூலம் பணத்தாசையும் நவீன ஆயுதங்களின் மோகமும் இயற்கையை எப்படி அழிக்க முடியும் என்பதை காட்ட முயன்றிருக்கிறார்கள். கடைசியில், அதே பணத்தாசையும் நவீன ஆயுதங்களும் சில சமயம் இயற்கையை காக்கவும் பயன்படும் என்பதை சொல்ல மறந்து விட்டார்கள். ஒரு படத்திற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் எவ்வளவு முக்கியமோ கதையும் அந்த அளவு முக்கியம் என்பதை மறந்து விட்டார்கள்.

மாற்றுக் கதை :
RDA  நிறுவனம் தனது ஊழியர்களை ந'வி மக்களின் வேடத்தில் அலைய விடுவது போல் மற்றொரு நாட்டில் உள்ள நிறுவனம் தனது ஊழியர்களை ந'வி மக்களின் வேடத்தில் ஏவி விடுகிறது. படத்தின் இறுதியில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல்கள் மெய்நிகர் நிதர்சனத்தில் (virtual reality ) நடக்கிறது. ஒரு சிறிய தவறினால் இந்த தாக்குதல்கள் இரு நாடுகளுக்கு இடையே போராக உருவெடுக்கிறது.

No comments: