Friday, January 29, 2010

Book of the Week

புத்தகம் : அட்லஸ் ஷ்ரக்ட்
வருடம் : 1957
ஆசிரியர் : அய்ன் ரண்ட்

கதைச் சுருக்கம் :
ஒரு காலத்தில் அமெரிக்காவில் முதலாளித்துவமும் பொதுவுடமையும் (capitalism and communism ) இரண்டு பொருளாதாரத் திட்டங்களாக எதிருக்கு எதிர் இருந்த பொழுது சொல்லபடுகின்ற கதை. முயற்சியும் திறமையும் கொண்ட தொழிலதிபர்கள் பலர் அரசாங்கத்தால் முடக்கப்பட்டு தங்களது வியாபாரத்தை விட்டு விட்டு மறைகின்றனர். இதைக் கண்டு அச்சுருகின்ற சில தொழிலதிபர்கள் அரசாங்கம்பால் சாய்கின்றனர். இவர்களில் ஜேம்ஸ் தாக்கர்ட், ஹொரேஸ் புச்பி மொவேன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மீதிய தொழிலதிபர்கள் (சிறிய கூட்டம்) அரசாங்கத்தை எதிர்த்து தங்களது திறமையையும் புத்தி கூர்மையையும்  மட்டும் நம்பி தங்கள் வியாபாரத்தை நடத்திச் செல்கின்றனர். இவர்களில் தக்னி தாக்கர்ட் (ஜேம்ஸ் தாக்கர்டின் தங்கை), ஹான்க் ரியர்டேன், பிரான்சிஸ்கோ அன்கோனியா குறிப்பிடத்தக்கவர்கள். அரசாங்கம் பொதுவுடமை  கொள்கைகளை பின்பற்றி மக்களின் தனிவுடமை உரிமைகளைப் பறித்து விடுகின்ற நேரத்தில் நாட்டின் நிலைமை மோசமாகிறது. அரசாங்கம் பக்கம் உள்ளவர்கள் செய்வதறியாது இருக்கையில் தொழிலதிபர்களின் தலைவனான ஜான் கல்ட் தனிவுடமையின் பெருமையையும் அதனால் மக்களுக்கு வரும் நன்மையையும் எடுத்துரைக்கிறான். தங்களைச் சுற்றி நடக்கின்ற அநியாயங்களை கண்டுக் கொதிப்படைகின்ற மக்கள் அரசாங்கத்தை வெறுத்து ஜான் கல்ட் தலைமையில் உள்ள தொழிலதிபர்களிடம் அதிகாரத்தை அளிக்கின்றனர்.

அலசல் :
அய்ன் ரண்ட் தனிவுடமைச் சிந்தனையின் தீவிர செயல்பாடான லிபர்டர்யநிசம் (libertarianism ) கடைபிடித்தவர். லிபர்டர்யநிசம் என்பது ஒரு பொருளாதாரத்தின் வெற்றிக்கு தனி மனிதப் பங்கே முழுதும் அவசியமானது என்றும் அரசாங்கத்தின் பங்கு அறவே இருக்கக் கூடாது என்பதும் ஆகும். அரசாங்கம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் சமுதாயத்தில் சட்ட ஒழுங்கு  நிலை நாட்டுவதற்கும் மட்டுமே வேண்டியது என்பதும் அதனுள் அடங்கும். தனி மனிதரின் புத்தியும் திறமையும் கடின உழைப்பும் பொருளாதாரத்தை வெற்றிப் பெறச் செய்யும் என்ற நம்பிக்கையும் அதனுள் அடங்கும்.
அய்ன் ரண்ட் அப்ஜெக்டிவிசம் (objectivism ) என்ற தத்துவத்தை உருவாக்கி அதனை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். அதன் பாதிப்பு இந்த கதை முழுதும் பரவி இருக்கிறது. அமெரிக்கப் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் டபிள்யு புஷ் 'நீங்கள் எங்களுக்குச் சகிதமாக இல்லையென்றால்  எங்களை எதிர்த்து நிற்கின்றீர்கள் (If you are not with us , you are against us )'  என்று சொன்னது அய்ன் ரண்டுக்குப் பிறகு 50 வருடம் கழித்து பின்பற்றுவதாக உள்ளது. 
இந்த கதையை கற்பனைச் சித்திரம் என்று சொல்வதற்குப் பதிலாக தனது சித்தாந்தத்தை   கதைப் பாத்திரங்களின் செயல்பாடுகளில் விவரித்திருகின்றார் என்று சொல்லலாம். இதனால் கதாப் பாத்திரங்கள் வாழ்க்கைப பற்றி படிப்பவர்களுக்கு நிறைய விவரம் அறியாமல் போகிறது. ஆனால், ஒவ்வொரு பாத்திரத்தின் பொருளாதார, தார்மீக, அறிவியல், பகுத்தறிவு மற்றும் மத நோக்கம் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியவருகிறது. அய்ன் ரண்டின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை இந்தக் கதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
'ஜான் கல்ட் என்பவன் யார்  ? (Who is John Galt ?)' என்ற கேள்வியின் மூலம் கதையின் பாத்திரங்கள் தங்களது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அப்ஜெக்டிவிசத்தின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரம் : தனிவுடமையையும் தனி மனித உரிமையும் போற்றினால் தான் மக்கள் வாழ்வு பயனுள்ளதாகவும் வாழத்தக்கதாகவும் இருக்கும். அரசாங்கமும் அதன் கொள்கைகளும் அதன் ஊழியர்களும் அதன்பாற் சாய்ந்த தொழிலதிபர்களும் விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் பதிப்பாசிரியர்களும் நீதிபதிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் மக்களின் பயனுள்ள பொருளாதார வாழ்கையை வீணடித்து நாசமாக்குகின்றனர். தனிவுடமையின் மூலம் ஒவ்வொரு குடிமகனு(ளு)ம் தனது மதிப்பை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வெளி உலகோடு பொருளாதாரம் செய்வார்கள். வியாபாரி தனது வியாபாரத்தில் புழங்கும் பொருட்களின் மதிப்பை அறிந்தவனா(ளா)ததால் அவனே (ளே) நாட்டு மக்களின் லட்சியம் ஆவான்(ள்).
தார்மீகம் : அவரவர் திறமைக்கும் புத்திகூர்மைக்கும் ஏற்ப அவர்களது வாழ்க்கை அமையும். திறமை குறைந்து உள்ளவன்(ள்) வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அவன்(ள்) சிறிய நேரத்தில் மேலும் திறமையும் புத்திகூர்மையும் உள்ளவனி (ளி)டம் தோற்றுப் போவான்(ள்). அரசாங்கம் திறமை அதிகம் இல்லாத மக்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவியும் பாதுகாப்பும் கொடுப்பதினால் அவர்கள் தங்கள் மதிப்பை அறியாமல் வாழ்கிறார்கள். தனது மதிப்பு அறிந்தும் அதனை மற்றவர் உதவியின்றியும் தயவு தாட்சிண்யம் இன்றியும் அடைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தனிவுடமைக் கொள்கைகளைத் தங்களது திறமையும் புத்திகூர்மையும் உழைப்பும் படைப்பாற்றலும் புதுமை படைக்கும் ஆற்றலும் மூலம் தார்மீக ரீதியில் நம்பி வாழ்கையை வாழ்கிறார்கள். அதனைக்  கடைபிடிக்காத மற்றவர்கள், வெற்றி பெற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் அட்டைகளாக கருதப்படுகிறார்கள்.
அறிவியல்/பகுத்தறிவு : கதையில் உள்ள பாத்திரங்கள் அறிவியலையும் பகுத்தறிவையும் வெவ்வேறு விதமாக அணுகுகிறார்கள். அரசாங்கம்பால் சார்ந்த விஞ்ஞானிகள் அறிவியலின்/பகுத்தறிவின் பயன் பொது மக்களைச் சாரும் என்றும் அவை இரண்டும் பொது மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர். தனிவுடமைப் போற்றும் விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் அறிவியலும் பகுத்தறிவும் தனி மனித உரிமைகள் என்றும் அவற்றின் மதிப்பு வியாபாரச் சந்தையில் என்ன விலை மெச்சுகிறதோ அதுவே உண்மையான விலை என்றும்  நம்புகின்றனர். இந்த கதையில் அப்ஜெக்டிவிசம் பின்பற்றுபவர்கள் அவை தான் தங்களது வாழ்கையின் வெற்றிக்குக் காரணம் என்று திடமாக நம்புகின்றனர். ஒரு பொருளோ எண்ணமோ திட்டமோ மக்களிடையே எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதன் மதிப்பு அறிவியலின் மூலமும் பகுத்தறிவின் மூலமும் அறிய முடியவில்லை என்றால் அது மதிப்பில்லாதது என்று நம்புகின்றனர். அறிவியலும் பகுத்தறிவும் மேல் உள்ள அதீத நம்பிக்கையினால் மதத்தை ஒரு தடைக்கல்லாகவும் மக்களின் வாழ்வை வீணடிக்கும் செயலாகவும் கருதுகின்றனர்.
மதம் : மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் மதம், மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாகக் கருதுகின்றனர். கதையின் பாத்திரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருப்பதால் கிருத்துவ மதத்தின் பலவீனங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான மதப் பிரிவுகள் பாலியல் உறவை, மகப்பேறு பெறுவதற்கன்றி, பாவமாகக் கருதுவதால் இந்தக் கதையில் அப்ஜெக்டிவிசம் கடைப்பிடிப்போர் மதத்தை வீணாகக் கருதுகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் உடம்பின் சக்தியையும் அழகையும் முழுமையாக அனுபவிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று நம்புகின்றனர். மேலும், அறிவியலையும் பகுத்தறிவையும் முடக்கும் சக்தியாகவும் பாலினப் பாரபட்சத்தை பரப்பும் சக்தியாகவும்  மதங்கள் செயல்படுவதால் அப்ஜெக்டிவிசம் பின்பற்றுவோர் அதனை தீய சக்தியாக பார்க்கின்றனர்.
அப்ஜெக்டிவிசத்தை கடைப்பிடிக்காதவர்கள் இந்த கதையில் வாழ்க்கையில் நோக்கமில்லாமல் வெற்றி பெறத் தெரியாமல் அரசியல் தலைவர்களுக்கும் தொழிர்ச் சங்கத் தலைவர்களுக்கும் கைக்கூலிகளாக வலம் வருகின்றனர்.
கதை, நேர்க்கோடு போல் சென்றாலும் அப்ஜெக்டிவிசம், அறிவியல், தனி மனித உரிமை மற்றும் பகுத்தறிவைப் போற்றியும் அரசாங்கம், ஊடகம், மதம் மற்றும் பொதுவுடமையை இழிவுபடுத்தியும் சொற்பொழிவுகள் நிறைய இருக்கின்றன. அதனால் படித்து முடிக்கும் பொது கதையின் முதலில் நிடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன.அமெரிக்காவில் நடக்கும் கதை என்றாலும் அதன் அரசியல் சாசனத்தைப் பற்றி அறியாமல் எழுதியது போல் தோன்றுகிறது. கதையில் வரும் நல்ல கதாபாத்திரங்கள் எல்லாம் சிரிக்காமல் வாழ்கையை மிகக் கறாறாக வாழ்கிறார்கள். மேலும், நல்லவர்கள் நிறைய பேர் தங்க நிற முடியும் நீல நிற கண்களும் (blond and blue eyed ) உடையவர்களாக இருக்கிறார்கள். கதை எழுதிய நேரத்தில் அமெரிக்காவின் குடிமக்கள் பெரும்பாலானோர் அவ்வாறு இருந்ததன் காரணமாக இருக்கலாம். ஆனால், கெட்டவர்களில் இவ்வாறு சொல்ல கூடியவர் எவரும் இல்லை.
பத்து வருடம் முன்னால் படித்து இருந்தால் இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கும். வியாபாரத்தையும் அறிவியலையும் பகுத்தறிவையும் போற்றி மதத்தையும் அரசாங்கத்தையும் சாடி எழுதப்பட்ட கதையை மிக்க ஆர்வத்துடன் படித்து அதனால் என் (அப்போதைய) நடத்தையை மாற்றி இருப்பேன். இப்போது படிக்கும் பொழுது கதையில் உள்ள பாத்திரங்கள் யதார்த்தத்துக்கு மாறாக நடப்பது போல் இருக்கின்றன. அதை உணர்ந்து அய்ன் ரண்ட் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மூலம் அந்த எண்ணத்தை விளக்கியிருக்கிறார். ஆனாலும் நல்லவர்கள் எல்லாம் எப்போதும் நல்லவர்களாகவும் கெட்டவர்கள் எல்லாம் எப்போதும் கெட்டவர்களாகவும் வருவது 1950 இலும் 1960 இலும் வந்த கருப்பு வெள்ளை தமிழ் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் போல இருக்கிறது. நேரம் இருந்தால் அட்லஸ் ஷ்ரக்ட் தமிழில் எடுக்கப்பட்டால் நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பது பற்றி எழுதலாம். அவரது பூர்விகமான ரஷ்யாவின் பொதுவுடைமை கொள்கைகளின் மேல் உள்ள வெறுப்பு இந்த கதையில் நன்றாகத் தெரிகிறது. நல்லவர்களின் நடுவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லாதது விசித்திரமாக இருக்கிறது. ஒரு நாட்டு மக்களின் தரத்தை அவர்களது அரசியல்வாதிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த காலத்தில் அமெரிக்காவில் அப்ஜெக்டிவிசத்தை ஒரு மதத்தின் முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் வலம் வரும் அரசியல்வாதிகளுக்கு அது ஏமாற்றமாக இருக்கும்.
அய்ன் ரண்ட் இந்தக் கதையில் அமெரிக்க மக்களின் பண்பையும் திறமையும் மிக மெலிவாக எடை போடுகிறார். அதுவும், கதை எழுதிய பொழுது அமெரிக்க உலகப் போரில் வெற்றிப் பெற்று உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நாட்டின் வெற்றிக்கு மக்களின் திறமையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை இந்த கதையில் இருந்து தெரிந்து கொள்ள இயலாது. பெரும்பாலான அமெரிக்க மக்களை முட்டாள்களாக பாவிக்கிறார். ஒரு சிறிய அமெரிக்கக் கூட்டம் திறமையும் புத்தி கூர்மையும் இருந்தாலும் எஞ்சிய குடிமக்களின் கையில் அவதிப்படுவதாகக் காண்பிப்பது கதையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்ஜெக்டிவிசத்திற்கு நல்ல விளம்பரமாக இல்லை.

No comments: