Tuesday, February 23, 2010

Book of the week

புத்தகம் : பேட் சமரிடன்ஸ்
வருடம் : 2009
ஆசிரியர் : ஹா-ஜூன் சங்
தொடர்வெளியீடு : எழுத்துப் பிழைகளைச் சரி செய்தல்


சுருக்கம்  :
உலகப் பொருளாதாரத்தில், நாடுகள் அவரவர் நிலைமையை முன்னேற்றுவதற்காக வெவ்வேறு யுக்திகளை கையாள்கின்றன. இப்பொழுது, பல நாடுகளில், வெவ்வேறு அளவிற்கு சுதந்திர வர்த்தகம் (Free trade ) மற்றும் உலகமயமாக்குதல் (Globalization ) என்ற கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு தூண்களைக் கொண்ட புதிய தாராளவாதித்துவம் (Neo Liberalism )  என்ற கொள்கையை உலகத்தின் வளர்ந்த (பொருளாதார ரீதியில்) நாடுகள் மிகவும் உற்சாகமாக, ஒரு வளர்ச்சிப் பாதையாக, எஞ்சிய நாடுகளுக்கு போதிக்கின்றன (காண்க : தாமஸ் பிரீட்மான் (See : Thomas Friedman )). சுதந்திர வர்த்தகத்தின் மூலம் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் செழுமை அளவை அடைய முடியும் என்றும் அதற்கேற்ப வளரும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வளர்ந்த நாடுகளின் பொருளியலாளர்கள் தங்களிடையே நிலவும் உடன்பாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தப் புத்தகத்தில், சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்குதல் கோட்பாடுகள், வளர்ந்த நாடுகள் கூறுவது போல் இல்லை என்றும் அதனை வளர்ந்த நாடுகள் சொற்கேற்ப கடைபிடிப்பதன் மூலம் வளரும் நாடுகள் தங்களது வளர்ச்சியை முடக்கி விடும் என்றும் காட்டுகிறார்.
பைபிள்-இல் வரும் குட் சமரிடன் (Good Samaritan ) நடத்தைப் போல், வளர்ந்த நாடுகள் போதிக்கும் வர்த்தகக் கொள்கைகள் பின் உள்ள நோக்கம் வளரும் நாடுகளுக்கு உதவுவதாக இருந்தாலும், நடைமுறையில் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை இந்த புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அலசல் :

ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்தது போக எஞ்சி இருக்கும் பணத்தை வரிக்கும் சேமிப்பிற்கும் செலவிற்கும் முதலீட்டிற்கும் பயன்படுத்துகின்றனர்.
பணம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் பணம் வெவ்வேறு வழிகளின் மூலம் அந்த நாட்டு அரசிற்குக் கிடைக்கிறது.

வரி (Tax) :
நாட்டு மக்கள் தாங்கள்  சம்பாதித்த பணத்தை அல்லது மரபு வழியாக வந்த சொத்தை, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு பங்கை அரசிற்கு வரியாகக் கொடுக்கலாம். இந்த பணம் அரசிற்கு நிரந்தரமான வருவாயாக இருக்கும். இவ்வாறு கொடுப்பதற்கு முன், மக்கள் அரசிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதை அலசுகின்றனர். ஜனநாயக நாடுகளில், மக்கள் தங்கள் அரசை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதின் மூலம், அந்த அரசின் வளர்ச்சிக் கொள்கைகளையும் பணம் கையாளும் முறையையும் பற்றிய தங்கள் கருத்தைத்  தெரிவிக்கின்றனர். அரசு, ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும் சர்வாதிகாரம் உடைய நாடுகளிலும், மக்களின் சம்மதம் இல்லாமல் அவர்களுடைய பணத்தின் ஒரு பங்கை வரியாக நாட்டு வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்கிறது. பொதுவுடமை உடைய நாடுகளில் அந்த நாட்டின் பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழு (Politburo ) அந்தப் பங்கை நிர்ணயிக்கிறது. மக்களிடம் இருந்து வரும் வரிப்பணம் போரவில்லை என்றால், அரசு மற்ற வழிகளைக் கையாளலாம்.
கடன் (Debt ) :
சில திட்டங்களுக்கு, அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பான்ட் (Bond ) வெளியிடலாம். இந்த முறையில், மக்கள் அரசின் பான்ட்-ஐ வாங்கிக் கொண்டு அந்த பான்ட்-இன் மூலம் வரும் வட்டியை தங்கள் வரவாக ஏற்றுக் கொள்வார்கள். அரசு பான்ட்-ஐ வெளியிடும் போது, அந்த திட்டத்தின் வரவு செலவுக் கணக்கை விளக்குவதோடு, அந்த திட்டத்தினால் வரும் லாபத்தையும் அந்த லாபம் கைக்கு வரும் அட்டவணையையும் சுட்டிக் காட்டும். இதன் மூலம், அந்த பான்ட்-ஐ வாங்கியவர்கள் தங்களுடைய முடிவு  மேலும் வரவை அளிக்கிறதா என்றும் வரவு அளிக்கும் வழிகளில் எந்த வழி சிறந்தது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக செலவிடும் அரசு வளத்தை (Public expenses ), அந்த திட்டத்தில் லாபம் அடைந்த மக்களிடம் இருந்து வரியாக எடுத்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டுக் கடன் (Foreign Debt ) :
இவ்வழிகள் மூலம் பணம் சேரவில்லை என்றால், அரசு மற்ற நாடுகளில் உள்ள மக்களையையோ நிறுவனங்களையையோ குறி வைக்கலாம். வேற்று நாட்டு மக்களோ நிறுவனங்களோ தங்களுடைய முதலீட்டிற்கு ஏற்ற வரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தங்கள் பணத்தை முதலீடு செய்வார்கள். இதன் வீக்கம் என்னவென்றால், வேற்று நாட்டு மக்களோ நிறுவனங்களோ எந்த காரணத்தை கொண்டு அதிருப்தி அடைந்தால், தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுவிடுவார்கள். அந்த நாட்டு மக்கள் தங்களுடைய அரசு பணத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதை வரவு செலவுத்திட்டத்தின் (Budget ) மூலமும் நடைமுறையில் எவ்வாறு அது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பதையையும் அறிந்து கொள்ளலாம். வேற்று நாட்டு மக்கள் வரவு செலவுத்திட்டத்தைப் படித்து ஒரு நாட்டின் அரசு தன்னுடைய கையில் உள்ள பணத்தை எந்த திட்டங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நடைமுறையில் அவ்வாறு நடந்திருக்கிறதா என்பதை அறிவது கடினம். அந்த நாட்டில் உள்ள தகவல் நிறுவனங்கள் மூலம் அந்த விவரத்தை அறிய முடிந்தால் வேற்று நாட்டு மக்களுக்கு முடிவெடுக்க சுலபமாக இருக்கும். அந்தத் தகவல் கிடைக்கவில்லை என்றால் (அந்த நாட்டில் தகவல் நிறுவனங்கள் இல்லை என்பதனாலோ, அந்த தகவல் வேறு மொழியில் இருப்பதனாலோ, அந்த நாட்டின் அரசு தவறான தகவலை பரப்புவதாலோ) வேற்று நாட்டு மக்களுக்கு அந்த முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். வேற்று நாட்டு நிதி நிறுவனங்கள் இதில் கொஞ்சம் அதிக அனுபவம் இருந்தாலும், அவர்களுடைய நிலைமையும் கடினமானது தான்.
வெளிநாட்டு முதலீடு (Foreign Investment ) : 
சில நாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ள பண முதலீட்டோடு தொழில் நுட்ப அறிவையும் ஒரு பரிசாகக் கருதி, அந்த நிறுவனங்களைக் கவரக் கூடிய வகையில் பல விதிகளை இயற்றி அந்த நிறுவனங்களை தங்கள் நாட்டில் முதலீடு செய்ய முற்படுவர். இவ்வாறு செய்வதன் காரணம், அரசாங்கம்  தொழில் நுட்ப அறிவின் பயன் தங்கள் மக்களை சென்று சேரும் என்பது தான். காலப் போக்கில், அந்த தொழில் நுட்பத்தில் அந்த நாட்டு மக்கள் மிகவும் தேர்ந்தவர்களாக ஆகி, அதன் மூலம் நாட்டிற்கு பணம் சம்பாதித்து கொடுப்பார் (இது இரு விதத்தில் நடக்கும் - ஒன்று, அந்த தொழில் நுட்ப அறிவை அறிவதற்கும் செயல்படுத்துவதற்கும் தங்கள் நாட்டில் இருந்து பணத்தை வேறு நாட்டிற்கு அனுப்ப வேண்டாம், இரண்டு - அந்த தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு விற்று தங்கள் நாட்டு அந்நியச் செலாவணியையும் மக்களின் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம்). இது, பெரும்பாலும் கூட்டு முயற்சியாக (Joint Venture ) செயல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனம், மற்ற நாட்டின் மக்களிடையே தன்னுடைய பொருட்களுக்கு ஒரு சந்தையை உருவாக்குவதற்காக இதைச் செய்யலாம். மேலும், ஒரு நாட்டின் தொழிலாளர் செலவை (Labour cost ) தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த முறையை பின்பற்றும்.
இவற்றிற்கு அப்பாற்பட்டு, ஒரு அரசின் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாட்டு நிறுவனங்களும் ஒப்பந்தங்களும் உள்ளன. இவற்றில் முக்கியமானவை, பொருளாதார உலகின் மூன்று தெய்வங்கள் எனக் கருதப்படும் இன்டர்நேஷனல் மானிடரி பண்ட் (IMF - International Monetary Fund ), வோர்ல்ட் பேங்க் (World Bank ) மற்றும் காட் (GATT  - General Agreement on Tariffs and Trade ) ஆவோர். இந்த மூன்று தூண்களும் புதிய தாராளவாதித்துவம் (Neo Liberalism) எனும் எண்ணத்தைச் சார்ந்தவை.  
புதிய தாராளவாதிகள் (Neo Liberalists ) :
ஒரு நாட்டின் பொருளாதார சுகாதாரத்தின் நற்சான்றிதழை அளிப்பதற்கு IMF காரணமாக இருக்கிறது. ஒரு நாட்டிற்கு கடன் கொடுப்பதற்கு வோர்ல்ட் பேங்க் காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள், நிதித் தட்டுபாடுள்ள வளரும் நாடுகளுக்கும் பொருளாதார அனுபவமும் சொந்த நிறுவனங்களும் இல்லாத நாடுகளுக்கும்  நிதி உதவியும் பொருளாதார செயர்பாட்டுதவியும் அளிக்கின்றன.
சுதந்திர வர்த்தகம் என்பது உலகின் உள்ள நாட்டு எல்லைகளைப் பாராமல் வர்த்தகம் எங்கும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு நாட்டின் அரசிற்கு அதன் எல்லைக்குள் நடக்கும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதர்க்குரிய உரிமையை அந்த நாட்டு மக்கள் அளிக்கிறார்கள் (ஜனநாயகத்தில் அது தேர்தலின் மூலம் அளிக்கப் படுகிறது. சர்வாதிகாரத்தில் அந்த நாட்டின் தலைவர் (கள்) அந்த உரிமையை மக்கள் சார்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஜனநாயகம் அல்லாத பொதுவுடமை அரசமைப்பு உள்ள நாடுகளில் பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழு அந்த உரிமையை மக்கள் சார்பாக எடுத்துக் கொள்கிறது.). இதன் அடிப்படை ஒரு நாட்டின் அரசிற்கு தன்னுடைய ஆட்சிக்குள் உள்ள மக்களின் நலன் எதுவென்று தெரியும் என்பது தான். தன் ஆட்சிக்குட்பட்ட மக்கள் விருப்பப்பட்டால் பரிமாற்றம் செய்யப்படும் பொருட்களின் மீது நிறைய வரி செலுத்தி அரசாங்கம் தனது கஜானாவை பலப்படுத்தலாம். வெளி நாட்டு பொருட்களின் மீதுள்ள ஆர்வத்தினால் பணம் நாட்டை விட்டு வெளியே போகிறது என்றால் அதற்கேற்ப சுதந்திர வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தலாம். அதே நேரம், அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் மற்றும் சட்டவிரோதமான செயல்கள் மூலம் கஜானாவை காலி செய்தால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு அரசை அகற்றி விடலாம். நிறைய வரி கட்டினால் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலை முன்னேறவில்லை என்றால் அந்த வரி அளவை குறைக்க அரசாங்கத்தைக் கேட்டு கொள்ளலாம். அரசாங்கம் செவி சாய்த்து மக்களுக்கு தங்கள் நிலைமை மீது திருப்தி இருந்தால் அரசு நீண்ட நாள் ஆளும். மக்களுக்கு தங்கள் நிலைமை மீது திருப்தி இல்லை என்றால் அரசு அடுத்த தேர்தலில் வீழ்ந்து விடும். அரசின் கஜானாவில் பணம் குறைந்து விட்டால் மக்களுக்கு தேவையான பொதுச் சேவைகள் முடங்கி விடும். இதனால், மக்களின் அதிருப்தி அதிகமானால் அரசிடம் வரியைக் கூட்டச் சொல்லி முறையிடலாம். வரிக் கட்டுவதில் இஷ்டம் இல்லை என்றால் பொதுச் சேவைகளின் நிலையில் இறக்கத்தைக் காண வேண்டி வரும்.
அரசுக்கும் மக்களுக்கும் உள்ள இந்த பரிமாற்றத்தை மாற்றும் வண்ணம் சுதந்திர வர்த்தகத்தின் கொள்கை அமைந்துள்ளது. நாடுகளின் எல்லையைப் பாராமல் பொருட்களும் பணமும் கடந்து புழங்க வேண்டும் என்ற நம்பிக்கைக்கேற்ப ஒரு நாட்டின் முதலீட்டுக் கட்டுப்பாடுகளும் (Capital Controls ) வரி நிலவும் (Tax rate) எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும். இது ஒரு சில பொருளியலாளர்களிடையே பரவி இருக்கும் பகுத்தறிவுச் சந்தை தோராயக்கருத்தின் வெளிப்பாடாகும். IMF - உம் வோர்ல்ட் பேங்க்-உம் இதனைப் பின்பற்றி தாங்கள் உதவி செய்யும் நாடுகளின் முதலீட்டுக் கட்டுபாடும் வரி நிலவும் குறைந்தே இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதற்கு சம்மதித்தால், உதவிக் கேட்ட அரசிற்கு குறைய வட்டியில் தாராளமாகக் கடன் அளிக்கின்றனர். மேலும், இந்த இரு நிறுவனங்களும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் சுகாதாரத்தை அளவிட்டு அதனை வெளியிடுவதன் மூலம் வேற்று நாட்டு நிதி நிறுவனங்களும் மக்களும் மற்ற அரசுகளும் தங்கள் சொந்தப் பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வருகின்றனர்.
IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் நிர்பந்தங்களுக்கு இணங்க வரி நிலவைக் குறைக்கின்ற அரசு, தன்னுடைய வரி வருவாய் குறைந்த நிலைமையில், இந்த நிறுவனங்களின்  மீதும் வெளி நாட்டு மக்களின் மீதும் மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் மீதும் வெளி நாட்டு அரசுகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறது. இவ்வாறு, மக்களின் தீர்ப்பு, பணத் தட்டுப்பாட்டினால் IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் -இன் தீர்ப்பினால் மாற்றி எழுதப்படுகிறது. மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காக அரசுக்குக் கொடுத்த பணம் நேர்த்தியான முறையில் செலவுச் செய்யப்பட்டால் அதன் பலனை அனுபவித்து வாழ்வார்கள். மேலும், அரசின் செலவு தவறான முறையில் சென்றால் அதனை கண்டிக்கும் முறையில் நடவடிக்கை எடுப்பர். IMF  மற்றும் வோர்ல்ட் பேங்க் காட்டும் வழியைப் பின்பற்றுவதன் மூலம் தங்களுடைய வருங்கால விதியை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் வெளிநாட்டவரின் கட்டுப்பாட்டில் விட்டு விடுகின்றனர். 
புதிய தாராளவாதிகளின் கோட்ப்பாட்டில் பணமும் பொருட்களும் சேவைகளும் நாடுகளின் எல்லைகளைப் பாராமல் எல்லா நாடுகளுக்கும் பரவுவதன் மூலம் அவற்றின் உண்மையான விலைமதிப்பை அறிய முடிகிறது என்று நம்புகின்றனர். இந்தப் பார்வை, பகுத்தறிவுச் சந்தை தோராயக்கருத்தின் விளைவாக சில பொருளியலாளர்கள்இடம் ஒரு மதக்கருத்தின் உண்மை போல் ஒட்டிக்கொண்டுவிட்டது.  அந்த நாட்டு மக்களின் துயரத்தை அகற்றுவதற்காக அல்லது நாட்டு நலனுக்காக அரசு இந்த பரிமாற்றத்தில் தலையிட்டால் (பணப்புழக்கத்தை முடக்கியோ பொருள் அல்லது சேவை மீது வரியை கூட்டியோ)  அது சந்தையின் குறியீட்டைக் கலப்படமாக்கி விடுகிறது என்று இந்த பொருளியலாளர்கள் நம்புகின்றனர். 

 டேவிட் ரிக்கார்டோ (David Ricardo ) :

ஒரு நாட்டின் தொழில்நுட்பம் எளிமையான அளவில் கைக்கருவிகளை செய்யக் கூடிய அளவில் இருந்தால் அந்த செயல்திறனை அது மேலும் மேலும் மேம்படுத்துவதன் மூலம் அதன் உண்மையான மதிப்பை பெற முடிகிறது. அதே நாடு, அதிநவீன தொழில்நுட்ப அளவில் ஆற்றல் இருந்தாலும் மற்ற (எளிமையான) தொழில்நுட்ப அளவிற்கு இல்லை என்றால் அது அந்த அதிநவீன தொழில்நுட்பத்தைக் காட்டிலும் எளிமையான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையான ஒப்பீட்டுச் சாதகக் கோட்பாடு  (Comparative Advantage Theory )  என்பதாகும். புதிய தாராளவாதிகளின் குருவாகக் கருதப்படும் டேவிட் ரிக்கார்டோ (David Ricardo ) என்ற ஆங்கிலேயப் பொருளியலாளர் கூறியது. இந்த கோட்பாட்டைக் கடைப்பிடித்திருந்தால் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் 1940 மற்றும் 1950 களில் வேளாண்மைச் சமுதாயமாக இருந்து இருக்கும். ஒரு நாடு ஒரே தொழில்நுட்ப அளவில் தங்கி இருந்தால் இந்தக் கோட்பாடு பல நாடுகளுக்கு நடுவே நடக்கும் வர்த்தகத்தை நன்றாக விவரிக்கும். ஆனால், பல நாடுகள் எளிமையான தொழில்நுட்பத்தில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை அடைகின்றன. புதிய தாராளவாதிகள் இதை மறந்து வளரும் நாடுகளுக்கு, இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, சுதந்திர வர்த்தகத்தையும் உலகமயமாக்குதலையும் போதனையாகக் கூறுகின்றனர்.
 காட் (GATT ) :
புதிய தாராளவாதிகளின் எண்ணங்களில் மூன்றாவது காலாக இருக்கும் GATT என்ற ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் ,உலகமயமாக்குதலின் பயன்களை அனுபவிக்க , கையெழுத்து இட வேண்டிய அங்கமாக வகிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு பொருள் மற்றும் சேவையின் அறிவியர்தனமான சொத்தின் (Intellectual Property ) விதிகளை எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஒரு பொருள் மற்றும் சேவையின் வடிவமைப்பை ( Patent ) அந்தந்த பொருள் மற்றும் சேவையின் கண்டுபிடிப்பாளர் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவு அங்கீஹரிக்கப்பட்டப் பிறகு அவருக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு உரிமை அளிக்கப்படும். இந்த நேரத்தில் யாரேனும் அந்த பொருளையோ சேவையையோ பயன்படுத்தினால் கண்டுபிடிப்பாளருக்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வருடங்கள் கழிந்த பிறகு, யாவரும் அந்த பொருளையோ சேவையையோ பணம் கொடுக்காமல் பயன்படுத்தலாம். இதன் மூலம் கண்டுபிடிப்பாளர்களின் உரிமை காக்கப்படும். ஆனால், வளரும் நாடுகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயன்படுத்துவதற்குரிய பணமும் ஆற்றலும் சிறிய அளவில் தான் இருக்கும். மேலும், ஒப்பீட்டுச் சாதகக் கோட்பாட்டிற்கேற்ப ஒவ்வொரு நாடும்  அதன் ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிலைமையைப் பொறுத்து பொருள் மற்றும் செயலைப் படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயன்படுத்த எண்ணினால் அதற்குரிய பணத்தை கடனாகக் கொடுப்பதற்கு IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் தயங்கும்.  இன்று வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் பெரும்பான்மையான நாடுகள் தங்களது வளர்ச்சியின் போது மற்ற நாடுகளின் அறிவியர்தனமான சொத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி பணம் சம்பாதித்தன.
காட் இல் சில தொழில்கள் சில நாடுகளுக்கு விதிவிலக்காகக் கருதப்படுகின்றன. இவற்றிலும் வளரும் நாடுகளுக்கு எதிராக விதிமுறைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு அரச உதவி (State Subsidy  ) கிடைப்பதன் மூலம் அவர்களது உற்பத்தித்திறன் வளரும் நாடுகளை விட பன்மடங்கு அதிகமாய் இருக்கிறது. வளரும் நாடுகள் தொழில்நுட்ப எளிமை, அந்நாடுகளுக்கு தேவையான அந்நியச் செலாவணியை கொண்டு வருவதில்லை என்பதால், விவசாயம் மற்றும் சரக்கு (commodity ) வர்த்தகத் தொழில்களின் மூலம் அதைச் சேர்க்கின்றன. வளரும் நாடுகளிடம் அரசு உதவி ஏற்கனவே உள்ள தொழில்களுக்கு, அதனை குறைக்குமாறு IMF மற்றும் வோர்ல்ட் பேங்க் வலியுறுத்துகின்றன. அதே சமயம், வளரும் நாடுகளுடைய அந்நியச் செலாவணியை அதிகரிக்க விவசாயம் மற்றும் சரக்கு வர்த்தகத் தொழில்களில் மூலம் முயன்றால், வளர்ந்த நாடுகள், தங்கள் விவசாயிகளுக்கு அந்த தொழில்களில் அரச உதவி மூலம், வளரும் நாடுகளின் பலத்தைக் குறைத்து விடுகின்றன. மேலும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த அறிவியர்தனமான சொத்தை பயன்படுத்த பல தடைகளை GATT விதிக்கிறது. இதனால், வளரும் நாடுகளின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
சுதந்திர வர்த்தகம் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார விருப்பத் தேர்வைக் குறைத்து விடும். சில தொழில்களில் வெளிநாட்டு நிறுவனங்களை  வர விடாமல் தன்நாட்டு நிறுவனங்களை பாவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அரசு நிர்வாகத்தில் உள்ள சில நிறுவனங்கள் நன்றாக வளர்கின்றன. வெளிநாட்டவரிடம் இருந்து எண்ணங்களை 'திருடுவது' ஒரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சுதந்திர வர்த்தகமும் ஜனநாயகமும் இயற்கையில் பங்காளிகள் இல்லை(புதிய தாராளவாதிகள் சொல்வதற்கு மாறாக). சில நாடுகள் ஏழையாக இருப்பது அவர்கள் சோம்பேறியாக இருப்பதனால் அல்ல; அவர்கள் சோம்பேறியாக இருப்பது ஏழையாக இருப்பதனால் தான். குறைய அளவில் இருந்தால் பணவீக்கமும் அரசுப் பங்களிப்பும்  பொருளாதார வளர்ச்சியை முடக்கி விடும். சில நேரங்களில், நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடினாலும், நாளடைவில் அவை லாபத்தில் ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் மூலம், சுதந்திர வர்த்தகத்தையும் உலகமயமாக்குதலையும் ஒரு நாட்டின் தலையாய வளர்ச்சி பாதையாகக் கொண்டிருந்தால் அந்த நாட்டின் வளர்ச்சி குறைந்து விடும் என்று பல புள்ளி விவரங்கள் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

No comments: