புத்தகம் : ஹொவ் மார்க்கெட்ஸ் பெயில்
வருடம் : 2009
ஆசிரியர் : ஜான் காஸ்சிடி
தொடர்வெளியீடு : கூடுதல் புத்தகங்கள், எழுத்துப் பிழைகளைச் சரி செய்தல்
புத்தகச் சுருக்கம்:
2008 - 2009 வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட விபரீத நடப்புகளை, பொருளாதார வரலாற்றின் வெவ்வேறு கோட்பாடுகளின் மூலம் விவரித்திருக்கிறார். அமெரிக்காவில் கடைசி 80 வருடங்களில் காணாத பொருளாதார விளைவுகளுக்கு, சிலப் பொருளியலாளர்கள் நடைமுறை உண்மையை பொருட்படுத்தாது தங்களது சித்தாந்தத்திர்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்தது தான் காரணம் என்பதை நல்ல விளக்கங்களோடு எழுதியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க பொருளாதாரத்தின் அவல நிலைமைப் பற்றி சில பொருளியலாளர்கள் முன்னமே எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது எச்சரிக்கைகள் உயர் பதவியில் உள்ள பொருளியலாளர்களிடையே எடுபடவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாகச் சென்று கொண்டிருந்ததால், தாங்கள் செல்லும் பாதை தான் சரியானது என்ற முழு நம்பிக்கையுடன் அமெரிக்க பொருளாதாரத்தை வழி காட்டிச் சென்றனர். அமெரிக்கப் பொருளாதாரம் (தற்காலிகமாகத்) தடம் புரண்டப் பிறகு, அந்த நிலைமையை நேர்படுத்த முயன்ற, நடைமுறை உண்மையை எடுத்துரைக்கும் பொருளியலாளர்களின் யோசனைகளை, அதிகாரிகள் புறக்கணித்து நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டார்கள்.
அலசல் :
இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப் பிறகு எஞ்சிய நாடுகளில் அமெரிக்கா செழிப்புள்ள நாடாக வலம் வந்தது. அதன் போட்டி நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை இரண்டாம் உலகப் போரினால் சீர்குலைந்தும் பொருளாதாரம் அழிந்தும் இருந்தன. 1950 முதல் 1970 வரை அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. 1970 பிறகு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முன்னைப் போல் இல்லாமல் மெதுவடைந்தது. அதனை சரி செய்வதற்கு எடுக்கப்பட்ட எந்த செயல்பாடும் வளர்ச்சியை முடுக்கி விடாததால் அன்றையப் பொருளியலாளர்களின் செயற்திறன் மீதுள்ள நம்பிக்கை குறைந்தது. 1980 பிறகு 2006 வரை அமெரிக்கப் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் சென்றது. மக்களின் நலம் ஒவ்வொரு வருடமும் முன்னேறியதைக் கண்டு சிலப் பொருளியலாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் வருங்காலத்தில் நெடு நாள் வளர்ந்து கொண்டே போகும் என்று முன்கணிப்பு செய்தனர். இவர்களில் ஏற்படைவுச் சந்தை (efficient market ) என்று அழைக்கப்படும் தோராயக்கருத்தை தங்கள் வேதவாக்காகக் கொண்டச் சிலப் பொருளியலாளர்கள், அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குக் காரணம் அந்தத் தோராயக்கருத்து தான் என்று முடிவெடுத்தனர். அந்த தோராயக்கருத்தின் வடிவமைப்பு எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒத்து வரும் என்று அடித்துக் கூறினர்.
ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்து என்பது 1940 இலும் 1950 இலும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரெட்ரிக் ஹயெக் (Frederick Hayek ) என்னும் பொருளியலாளர்ஆல் பிரபலமாக்கப் பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு வர்த்தகமும் அது நடக்கும் சந்தையும் மிக முக்கியம் என்றும் அரசாங்கம் வர்த்தகத்தையும் சந்தையையும் ஒழுங்குபடுத்த முயல்வதன் மூலம் வர்த்தகம் முடங்கி விடும் என்றும் அது நாட்டின் பொருளாதரத்திற்கு நல்லதல்ல என்றும் எடுத்துரைத்தார். ஒரு சந்தை, அங்கு விற்கப்படும் பொருட்களும் அவற்றின் விலைகளின் மூலம், வர்த்தகர்களும் நாட்டு மக்களும், எந்த பொருட்கள் தேவையானவை என்றும் எந்த பொருட்கள் வேண்டப்படாதவை என்ற குறியீட்டினை அறிய முடியும் என்றும் கூறினார். அரசாங்கம் சந்தையிலும் வர்த்தகத்திலும் குறுக்கிடுவதன் மூலம், ஒரு சந்தையிலிருந்து வர்த்தகர்கள் அறியும் குறியீடு குழப்பத்தை விளைவிக்கும் என்றார். அவருடைய தோராயக்கருத்தில் அன்றைய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெரும்பான்மை பொருளியலாளர்களுக்கும் உடன்பாடில்லை.
ஜான் மய்னர்ட் கெய்ன்ஸ் (John Maynard Keynes ) என்ற ஆங்கிலேயப் பொருளியலாளர் எடுத்துரைத்த கோட்பாடை பெரும்பாலானோர் கடைப்பிடித்தனர். வர்த்தகமும் சந்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம் என்றாலும் ஒரு சில நேரங்களில் அவற்றின் செயற்பாடு மக்களுக்குச் சாதகமாக இல்லாதப் பட்சத்தில் அரசாங்கம் தனது (பணம் அச்சடிக்கும்) சக்தியை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொருளாதாரம் நிலைப்பட்டப் பின் அரசாங்கம் தனது பங்கைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். 1914 இலிருந்து 1918 வரை நடந்த முதலாம் உலகப் போரின் இறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் தோற்ற நாடான ஜெர்மனி மீது வெர்சாய் (Versailles ) ஒப்பந்தத்தின் மூலம் மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அந்த விதிகள் நியாயத்திற்கு மாறானவை என்று விவாதித்த கெய்ன்ஸ், அதன் விளைவுகள் ஜெர்மனியின் மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் அதனால் மற்றொரு போரில் ஜெர்மனி பங்கு கொண்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கூறினார். அவர் கூறியது போல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க ஜெர்மனி ஒரு காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின் கெய்ன்ஸ்இன் பெருமை எங்கும் பரவி அவரது பொருளாதார எண்ணங்கள் மிகப் பிரபலமாயின.
இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தின் ஆதரவாளர்களில் முக்கியமான பொருளியலாளரான மில்டன் பிரீட்மான் (Milton Friedman ) என்பவர் அதனை மக்களிடையே பரப்ப மிக்க முயற்சி செய்தார். அதே சமயத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அய்ன் ரண்ட் தனது அப்ஜெக்டிவிசம் (objectivism ) சித்தாந்தத்தை மக்களிடையேப் பரப்பிக் கொண்டிருந்தார். இந்த இருவர் முயர்ச்சியினால் ஏற்படைவுச் சந்தைத் தொராயக்கருத்தும் அப்ஜெக்டிவிசமும் கலந்து ஒரு புதிய சித்தாந்தமாக உருவானது. பொருளாதாரத்தில் அதற்கு சிகாகோ பள்ளியின் பொருளாதாரம் (Chicago School of Economics ) என்று அழைக்கப்பட்டது. அது பொருளாதாரம் மட்டுமல்லாமல், ஒரு அரசியல் சித்தாந்தமாக உருவெடுத்ததிற்கு அய்ன் ரண்டின் பங்கு மிக முக்கியமானது. இந்த அரசியல் சித்தாந்தத்தின் சீடர்களில் ஒருவராக இருந்தவர் அலன் க்ரீன்ச்பன் (Alan Greenspan ). தனது சொந்த வாழ்க்கையில் அய்ன் ரண்டின் சீடராகவும் பொருளாதார எண்ணங்களில் மில்டன் பிரீட்மான்இன் தொண்டராகவும் இருந்தார்.
1970 இல் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வேகக்குறைவைச் சரி செய்ய கெய்ன்ஸ் வரைப்படுத்திய கோட்பாடுகள் உடனடிப் பயனில்லாமல் போகவே மற்ற பொருளாதாரக் கோட்பாடுகள் அதற்கு பதிலாக பயன்படுத்தப் பட்டன. 1982 க்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரீசெர்வ் (Federal Reserve ) தலைவரான பால் வோல்க்கர் (Paul Volcker )செயல்படுத்திய வட்டிக் கொள்கைகளினால் அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ரோனல்ட் ரீகன் (Ronald Reagan ) ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தை வேத வாக்காகக் கொண்ட பொருளியலாளர்களை தனது ஆலோசகர்களாகக் கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், வர்த்தகத்திலும் சந்தையிலும் மக்களின் வாழ்விலும், அரசாங்கத்தின் பங்கு நிறையக் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதற்கேற்ப, பால் வோல்க்கர் பெடரல் ரீசெர்வ் இல் இருந்து ராஜினாமா செய்தவுடன், ரோனல்ட் ரீகன் , அலன் க்ரீன்ச்பன் ஐ தலைவராக நியமனம் செய்தார். அலன் க்ரீன்ச்பன் தலைவராக இருந்த போதும் அமெரிக்கப் பொருளியலாளர்களில் பெரும்பாலானோர் கெய்ன்ஸ் இன் பொருளாதார எண்ணங்களை மதித்து வந்தனர். 1970 க்கு முன் கெய்ன்ஸ் இன் எண்ணங்களை எதிர்க்க மிகவும் சிறிய கூட்டம் இருந்தது. 1980 களில் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கண்டும், 1987 இல் அமெரிக்கப் பங்குச் சந்தையான வால் ஸ்ட்ரீட் (Wall Street ) இல் பங்குகளின் சரிவை க்ரீன்ச்பன் நன்றாகக் கையாண்டதைக் கண்டும், க்ரீன்ச்பன் மீதுள்ள மதிப்பு கூடியது. நாள் போக்கில் க்ரீன்ச்பன் தனது தலைமைப் பதவி மூலம் அவர் முழுதாக நம்பிக்கை கொண்ட ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் கை ஓங்கியது. நடு நடுவில் ஒரு சில நெருக்கடிகள் நேர்ந்தாலும், பெரும்பாலும் க்ரீன்ச்பன் தலைமையில் பொருளாதாரம் 20 வருடங்களுக்கு மேல் நன்றாகச் சென்றது. இதனால், ரீகனுக்குப் பின் வந்த ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யு புஷ் ஆகியோர் க்ரீன்ச்பன் சொல்படி நடந்தனர்.
அமெரிக்காவில் ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்து பிரபலமாகுவதர்க்கு முன்னால் மில்டன் பிரீட்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் அண்டை நாடுகளில் தங்கள் சித்தாந்தத்தின் நடைமுறை வேலைப்பாடு பற்றி அறிய ஆவலாக இருந்தனர். அதன் விளைவாக, 1970 களில் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலே (Chile ) நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரிக் கட்சிகளின் அரசு அந்த நாட்டின் ராணுவத்தால் தூக்கி எறியப்பட்டவுடன் தங்களது பொருளாதார எண்ணங்களை அந்த நாட்டு புதியத் தலைவரான ஆகுஸ்டோ பினோஷே (Augusto Pinochet ) இன் முன்வைத்தனர். அவரும் தனது புதிய அரசின் முக்கிய பங்காக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்தார். அதில் முக்கிய பங்கு விதித்த பொருளியலாளர்கள் சிகாகோ பள்ளியைச் சார்ந்தவர்கள் தான். அதன் விளைவாக, சிலேஇன் பொருளாதாரம் சின்னாபின்னம் ஆகி மக்கள் அவதிப்பட்டனர். தங்கள் எண்ணங்கள் நன்றாகச் செயல்படுத்தப் படவில்லை என்று சொல்லி மில்டன் பிரீட்மான் மற்றும் சக பொருளியலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, ராணுவத்தின் பிடி தளர்த்தப்பட்டு, பினோசெட்இன் அரசு தூக்கி அறியப்பட்டவுடன் வந்த புதிய அரசு மக்களுக்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டு வந்தது. இன்று, சிலே mixed economy என்று சொல்லப்படும் கலப்பு பொருளாதாரம் என்ற பாதையை பின்பற்றுகிறது. அதன் மூலம், சில கொள்கைகள் கெய்ன்ஸ் இடம் இருந்தும் சில கொள்கைகள் மில்டன் பிரீட்மான் இடம் இருந்தும் கடன் வாங்கப்பட்டு, அந்த நாட்டுக்கு எது தேவையோ அதற்கேற்ப செயல்படுத்தப்படுகிறது.
2006 இல் முக்கியத்துவம் குறைந்த அடகுகள் (subprime mortgages ) உள்ள மக்கள் மாசத் தவணைகளை செலுத்த முடியாததால் பல நிதி வங்கிகள் தங்கள் கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் நஷ்டம் அடைந்தன. வீட்டின் விலை எப்பொழுதும் கூடிக் கொண்டே போகும் என்றும் தங்கள் வீட்டின் அடகை ஒவ்வொரு மாதமும் எல்லா அடகுதாரர்களும் கட்டுவார்கள் என்ற (மூட) நம்பிக்கையின் பேரில் வங்கிகள் நிறைய அடகுகளை கடன்பெறத்தகாத மக்களுக்கும் விற்றனர். சில வங்கிகள், இதனால் இக்கட்டான நிலைமையை வந்தால் அதன் விளைவுகளைக் குறைக்க புதிய விதமான நிதிக் கருவிகளை உருவாக்கினர். சாதாரணமாக, புதிய நிதிக் கருவிகளை ஒழுங்குபடுத்த வெவ்வேறு நிறுவனங்களை அமெரிக்க அரசியல் அமைப்பு அமைத்துள்ளது. இந்த நேரத்தில், சில அரசியல்வாதிகள், ஏழைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே வீட்டுரிமையை கூட்ட முற்பட்டனர். வீட்டுரிமையின் மூலம் ஏழைக்கோட்டின் கீழ் உள்ள மக்களும் சிறுபான்மை மக்களும் தங்களது சுற்று வட்டாரத்தின் வர்த்தகத்தையும் தங்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவர் என்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தின் அனுமானம் அமெரிக்காவில் வீட்டின் விலை எப்பொழுதும் ஏறிக் கொண்டே இருக்கும் என்பது தான். புதிதாக வீடு வாங்கும் பொழுது சாதாரணமான அடகுக் கருவிகள் ஒருவருக்கு சரி வராமல் இருந்தால், புதிய நிதிக் கருவிகள் மூலம் அவர்களுக்கு அடகு கொடுப்பது வழக்காகியது. இதனைக் கண்டு கவலைப்பட்டச் சில பொருளியலாளர்கள் புதிய நிதிக் கருவிகளையும் புதிய அடகுக் கருவிகளையும் ஒழுங்குபடுத்துவதற்கு க்ரீன்ச்பன் இடம் முறையிட்டனர். தனது பொருளாதாரச் சித்தானந்தத்தில் மிக்க நம்பிக்கைக் கொண்டிருந்த க்ரீன்ச்பன், புதிய நிதிக் கருவிகளை வர்த்தகர்களும் சந்தையும் ஒழுங்குபடுத்தும் என்றும் அரசாங்கம் அதில் தலையிட்டால் புதிய நிதிக் கருவிகளை வர்த்தகர்கள் உருவாக்க மாட்டார்கள் என்றும் அதன் பயனாக சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் மற்றும் அடகுக் கருவிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடும் என்றும் கூறினார். அய்ன் ரண்ட் மற்றும் மில்டன் பிரீட்மான் இன் பாதிப்பு க்ரீன்ச்பன் ஐ அதிதீவிரமாகவே தாக்கியிருந்தது . கெய்ன்ஸ் முன்னாளில் சொன்னது போல் "பொருளியலாளர்களின் எண்ணங்களும் அரசியல் தத்துவவாதிகளின் எண்ணங்களும், சரியாயிருந்தாலும் தவறாயிருந்தாலும், பொதுவாக அறியப்படுவதை விட மிகச் சக்தி வாய்ந்தது. நிஜத்தில், உலகம் அதைத் தவிர வேறு மிகச் சிறியவற்றினால் விதிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் மனிதர்கள், தாங்கள் எந்த வித அறிவியற்தனமான பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்று கருதினாலும், ஏதாவது மறந்து (அல்லது மறைந்து) போன பொருளியலாளர்இன் அடிமைகளாக இருப்பார்கள்"("The ideas of economists and political philosophers, both when they are right and when they are wrong, are more powerful than is commonly understood. Indeed the world is ruled by little else. Practical men, who believe themselves to be quite exempt from any intellectual influence, are usually the slaves of some defunct economist"). இது க்ரீன்ச்பன் அல்லாமல் கெய்ன்ஸ்க்கும் உண்மையாகப் படும்.
க்ரீன்ச்பன் இன் கொள்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்றுக் கூறிய கூட்டம் நாளடைவில் ரொம்பச் சிரியதானது. இவர்களில் நூரியல் ரூபினி, ராபர்ட் ஷில்லேர், நச்சிம் நிக்கோலஸ் தலேப், ரோஜர் லோவேன்ச்டீன் போன்றோர் அடங்குவர். ஆங்கிலத்தில் சொல்லப்படும் பழமொழியான 'வெற்றியை போல் வெற்றி பெறுவது ஒன்றுமில்லை' ('Nothing succeeds like success ') க்ரீன்ச்பன்இன் கொள்கைகள் மீதுள்ள எதிர்ப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனை எதிர்த்தவர்களின் தத்துவத் தந்தைகள் என்று கருதப்படுவவர்களில் முக்கியமானவர்கள் ஹைமன் மின்ச்கி (Hyman Minsky ) மற்றும் பெநொஇத் மண்டேல்ப்ரோட் (Benoit Mandelbrot) என்ற பொருளியலாளர்கள்.
மண்டேல்ப்ரோட், நிதிச் சந்தைகளில் நிதிக் கருவிகள் மற்றும் பொருட்களின் மாற்றம், ஏற்படைவுச் சந்தையின் அனுமானமான காஸ்சியன்(Gaussian ) பகிர்மானம் (distribution ) இல்லை என்று சுட்டிக் காட்டினார். ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தை வேத வாக்காகக் கொண்டவர்கள் காஸ்சியன் பகிர்மானத்தை அனுமானமாகக் கொண்டதனால் நிதிக் கருவிகளுக்கும் அடகுப் பொருட்களுக்கும் கணிப்பதற்கு சுலபமாக இருந்தது. நிதிக் கருவிகள் மற்றும் அடகுப் பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டிருந்த வரை இந்த அனுமானம் நிதி நிறுவங்களுக்கு நல்ல லாபத்தைக் கொண்டு வந்தது. வீடுகளின் விலை சரிய ஆரம்பித்தவுடன், இந்த அனுமானம் மூலம் சம்பாதித்த நிதி நிறுவனங்களின் லாபம், நஷ்டம் ஆகக் காரணமாகி விட்டது. மண்டேல்ப்ரோட்டின் எண்ணங்களை அறிந்தவர்கள் நிதி நிறுவனங்களின் பங்கு விலை இறங்க ஆரம்பிக்கும் என்று யூகித்து அந்த தகவலை பயன்படுத்தி அந்தப் பங்குகளை ஷார்ட் (short ) செய்தனர். இவ்வாறு, அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிகளில் மிகவும் பணம் செய்தவர்களில் நசீம் நிக்கோலஸ் தலேபும், ஜார்ஜ் சொரோசும் அடங்குவர்.
மின்ச்கியின் திடமில்லாத நிதித் திட்ட தோராயக்கருத்து (Financial Instability Hypothesis ) அமெரிக்கப் பொருளாதாரத்தின் இப்போதைய நிலைமையை விளக்க உதவியாக உள்ளது. அதன் முக்கியக் கருத்து, ஒரு நிதித் திட்டத்தின் திடமும் வெற்றியும் அதன் அழிவுக்கும் சரிவுக்கும் உள்ள விதையை விதைக்கும் என்பது தான். ஒரு நிதித் திட்டம் திடமாக இருக்கும் பொது வர்த்தகர்களும் சாதாரண மக்களும் அந்த நிதி திட்டத்தினால் பயன் பெறுவதுடன் அதனால் செல்வமும் பெறுவர். நாளடைவில், அந்த நிதித் திட்டத்தின் பலவீனங்களை மறந்து தங்களது திறமையினாலும் புத்திக் கூர்மையினாலும் தான் தங்கள் வெற்றி பெற்றதாகக் கருதுவர். அதே சமயத்தில், நிதித் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகளும் நிதித் திட்டம் நன்றாக வேலை செய்வதைக்கண்டு தங்களது கண்காணிப்பைக் குறைத்து விடுவர். இதனைக் கண்டு வர்த்தகர்களும் மக்களும் புதிய நிதித் திட்டம் என்றும் கவிழ்ந்து விடாது என்ற (மூட) நம்பிக்கையில் மேலும் மேலும் அபாயகரமான (நிதிச்) செயல்களில் ஈடுபடுவர். எல்லாம் நன்றாக செல்லும் பொழுது எல்லோரும் அவரவர் செல்வத்தை பெருக்கிச் சந்தோஷமாக வாழ்வார். சில அபாயகரமான செயல்களினால் ஏற்படும் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி கடைசியில் நிதித் திட்டத்தை அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். பொருளியலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் அபாயத்தைக் கண்டு அதற்கேற்ற மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிதித் திட்டம் மோசமான நிலைமைக்குச் சென்று விடும். 1980 இலிருந்து 2006 வரைக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாகச் செயல்பட்டதைத் தங்களின் செயல்திறன் என்று நம்பிய பொருளியலாளர்களும் அதிகாரிகளும், அபாயம் தெரிந்த பின்னும் முன் போல் சிறியதாக இருந்து விடும் என்று அசட்டாக இருந்து விட்டார்கள். நிலைமையின் தீவிரம் தெரிய வரும் பொழுது பொருளாதாரத்தின் செயல்பாடு தீவிரமாகப் பாதிக்கப்பட்டு விட்டது.
யாம் படித்த (அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையைப் பற்றிய) புத்தகங்களில் இது போன்ற புத்தகத்தை இனிதாவதெங்கும் காணோம்.
அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையைப் பற்றிய மற்றப் புத்தகங்கள் :
1 . டூ பிக் டு பெயில் (Too big to fail)
ஆண்ட்ரு ராஸ் சார்க்கின் எழுதிய இந்த புத்தகத்தில் 2007 முதல் 2009 வரை அமெரிக்காவின் பொருளியலாளர்களும் வர்த்தக தலைவர்களும் அரசியல் புள்ளிகளும் பொருளாதாரத்தின் சரிவை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றிப் படிக்கலாம். பொருளாதாரத் தத்துவம் அல்லாது அந்த இரண்டு வருடங்களில் நடந்த வெவ்வேறு நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
2 ஷாக் டாக்டரின் (Shock Doctrine )
நோமி க்ளீன் எழுதிய இந்த புத்தகத்தில் ஏற்படைவுச் சந்தை தொராயக்கருத்தைப் பின்பற்றிய பொருளியலாளர்கள் தங்களது எண்ணங்களை பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளில் செயல்படுத்தியதன் விளைவுகளை விரிவாகச் சித்தரித்திருக்கிறார்.
3 . தி மித் ஆப் தி ராஷனல் மார்க்கெட்(The Myth of the rational market )
ஜஸ்டின் பாக்ஸ் எழுதிய இந்த புத்தகத்தில் ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் அடிப்படையான பகுத்தரிவுடையச் சந்தை (rational market ) என்பதன் குறைகளையும் அதனை உண்மையென நம்பி செயல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்பைப் பற்றி கூறியிருக்கிறார்.
4 . இன் பெட் வி டிரஸ்ட் (In Fed We Trust )
டேவிட் வெசெல் எழுதிய இந்த புத்தகத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசெர்வின் பங்குப் பற்றி விவரித்திருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட பிரச்சனையைத் தீர்க்க அதன் தலைவராக அப்போது இருந்த பென் பெர்னான்கே (Ben Bernanke ) எடுத்த முடிவுகளையும் தான் தீவிரமாக நம்பிய ஏற்படைவுச் சந்தைத் தோராயக்கருத்தின் உதவியில்லாமையையும் இந்தப் புத்தகத்தில் நன்றாக விவரித்திருக்கிறார்.
5 . பூல்'ஸ் கோல்ட் (Fool 's Gold )
ஜில்லியன் டேட் எழுதிய இந்த புத்தகத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட (தற்காலிகச்) சரிவுக்குக் காரணமாக இருந்த நவீன நிதிக் கருவிகள் உருவானக் கதையை நன்றாக சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் பேர்போன முதலீடு வங்கியான ஜே பி மோர்கனில் ஆரம்பித்த அந்தக் கருவிகள் விரைவில் எல்லா நிதி நிறுவனங்களிடமும் சாதாரண மக்களிடையேயும் பிரபலமானதை விவரித்திருக்கிறார்.
6 . ஹவுஸ் ஆப் கார்ட்ஸ்(House of cards )
வில்லியம் கோகன் எழுதிய இந்த புத்தகத்தில் முதலீடு வங்கியான பியர் ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns ) புதிய நிதிக் கருவிகளை பயன்படுத்தி மிகுந்த லாபம் அடைந்ததையும் அதே நிதிக் கருவிகள் அதன் அழிவுக்குக் காரணமாக இருந்ததையும் மிகவும் பரபரப்பாக விவரித்திருக்கிறார்.
7 . தி ட்ரில்லியன் டாலர் மேல்ட்டோவ்ன் (The Trillion Dollar Meltdown )
சார்லஸ் மோர்ரிஸ் எழுதிய இந்த புத்தகத்தில் புதிய நிதிக் கருவிகள் எப்படி வேலை செய்யும் என்றும் அவை அமெரிக்கப் பொருளாதாரத்தை எப்படி கீழே கொண்டு வந்தன என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார். வெவ்வேறு நிதிக் கருவிகள் எவ்வாறு சில நிறுவனங்களுக்கு லாபம் வாங்கித் தந்தன என்பதையும் அதே நிதிக் கருவிகள் சில நிறுவனங்களை எப்படி அழித்தன என்றும் நன்றாகக் கூறியிருக்கிறார்.
8 . ப்றேடிக்டப்லி இர்ராஷனால் (Predictably Irrational )
டேன் அறிஎலி எழுதிய இந்த புத்தகத்தில் பகுத்தரிவுடையச் சந்தை என்ற அனுமானம் நடைமுறையில் ஏற்காது என்பதை நடத்தை உளவியல் (Behavioural Psychology ) மூலம் விவரித்திருக்கிறார். ஏற்படைவுச் சந்தை தோராயக்கருத்தின் முக்கிய அனுமானமான பொருட்களின் குறியீட்டின் தவறை இந்த புத்தகத்தில் உள்ள வெவ்வேறு பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
9 . இர்ராஷனால் எக்சுபெரன்ஸ் (Irrational exuberance )
ராபர்ட் ஷில்லேர் எழுதிய இந்த புத்தகத்தில் 2000 ஆண்டில் அமெரிக்காவில் இணையத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பல லாபம் பார்க்காமல் அழிந்து போன கதையையும் அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் தற்காலிகச் சரிவு அடைந்ததையும் நன்றாக விவரித்திருக்கிறார். இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் அமெரிக்காவின் வீடு மற்றும் நில விலைகளின் சரிவுப் பற்றி எழுதியிருக்கிறார்.
10 . வென் ஜீனியஸ் பெயில்ட் (When Genius Failed : The Rise and Fall of Long Term Capital Management )
ரோஜர் லோவன்ஸ்டீன் எழுதிய இந்த புத்தகம் அமெரிக்காவில் 2006 இலிருந்து 2009 வரை முதலீடு வங்கிகளின் அழிவை, 10 வருடங்களுக்கு முன் லாங் டெர்ம் காபிடல் மானேஜ்மென்ட் (LTCM ) என்ற நிதி நிறுவனத்தின் வளர்ச்சியிலும் அழிவிலும் சொல்லியிருக்கிறது. LTCM நிறுவனம் அழிந்தால் அதற்கு கடன் அளித்த மற்ற நிதி நிறுவனங்கள் (ஜே பி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மன் சாக்ஸ், சிடிக்ரூப், பியர் ஸ்டேர்ன்ஸ்) மிகுந்த நஷ்டம் அடைந்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் உயிர் நாடியான கடன் சுத்தமாக ஸ்தம்பித்து விடும் என்பதாலும் அந்த நிதி நிறுவனங்கள் அமெரிக்க மத்திய வங்கியின் உதவியோடு LTCM நிறுவனத்தை உயிர்ப்பிக்க முயற்சி செய்தன. அதில் அவை வெற்றியும் பெற்றன. ஆனால் LTCM நிறுவனம் அதற்குப் பின் மூடப்பட்டது. அதனைக் காப்பாற்ற முயன்ற நிதி நிறுவனங்களில் பியர் ஸ்டேர்ன்ஸ் ஒன்று மட்டும் தன் பங்குக்குரிய பணத்தைக் கொடுக்கவில்லை. அதனுடைய விளைவு 10 வருடங்களுக்குப் பின் 2008 இல் பியர் ஸ்டேர்ன்ஸ் தனது உயிருக்குப் போராடுகையில் மற்ற நிதி நிறுவனங்கள் அதற்கு உதவிச் செய்ய மிகவும் தயங்கின.
11 . தி ப்ளாக் ஸ்வான் (The Black Swan )
நசீம் நிக்கோலஸ் தலேப் எழுதிய இந்தப் புத்தகத்தில் பெரும்பாலான நிதி நிறுவனங்களின் பங்குத் தரகர்கள் சாத்தியமாகக் கூடிய நடப்புகளின் மூலம் லாபம் பார்ப்பதால் சாத்தியமில்லாத நிகழ்வுகள் வரும் பொழுது அவர்களுடைய பணயங்கள் மிகுந்த நஷ்டத்தை கொண்டு வரும் என்பதை விளக்கியிருக்கிறார். அந்த எண்ணத்தின் மூலம் 1987 இல் அமெரிக்கப் பங்குச் சந்தையின் சரிவில் நிறைய லாபம் செய்ததையும் தெரிவித்திருக்கிறார்.
12 . ஸ்மார்டேஸ்ட் கைஸ் இன் தி ரூம் (Smartest Guys In The Room )
பெதானி மக்லீன் எழுதிய இந்தப் புத்தகம் அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி முழுதாக இல்லை என்றாலும் அதில் புகழுள்ள மணியாகத் திகழ்ந்த என்றான் (Enron ) நிறுவனத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது. என்றான் இன் தலைமையில் உள்ளவர்களில் முக்கியமானவரான ஜெப்ப்ரி ச்கில்லிங் (Jeffrey Skilling ) என்றான்-ஐ நடத்திய விதம் அய்ன் ரண்ட்இன் அட்லஸ் ஷ்ரக்ட் கதையில் வரும் ஹான்க் ரியர்டேன் பாத்திரம் நிஜ வாழ்வில் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் தலைமையில் வந்தால் அதன் அழிவு எப்படி ஏற்படும் என்பதை நினைவூட்டுகிறது. சமீபத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் முதலீடு வங்கிகளின் நடத்தை புகழ் பெறுவதற்கு முன் என்றான்இன் நிதி உக்திகள் 10 வருடங்களுக்கு முன் வலம் வந்தன என்பதை நினைவூட்டுகிறது. என்றான் அழிந்த பின் அதனுடைய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சன் புகழின் உச்சியிலிருந்து சுவடு தெரியாமல் அழிந்து போனது போல் சமீப சம்பவங்களில் புகழ் பெற்ற முதலீடு வங்கிகளான லேஹ்மான் பிரதேர்ஸ் (Lehman Brothers ), பியர் ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns ), மெர்ரில் லின்ச் (Merrill Lynch ) புகழ் உச்சியிலிருந்து சுவடு தெரியாமல் அழிந்தன.
கெய்ன்ஸ்-உம் ஹயெக்-உம் தங்களது தோராயக்கருத்தை விவரிக்க ஒரு கானா நிகழ்படம்
Copyright © 2010 Kunthavaiyin Kaathalan
No comments:
Post a Comment